தோழி செறிப்பறிவுறீஇ(தலைவி வீட்டில் அடைபடும் வாய்ப்பைத்
தெரிவித்து) வரைவு கடாயது(திருமணம் செய்துகொள்ள அறிவுறுத்தியது).
தினைப்புனம் காவல்காக்கத் தலைவி வந்திருந்தாள். வழக்கம் போலப்
பகற்குறியில் சந்தித்துப் பேசிப் பழகும் தலைவனும் வந்திருந்தான். அவனிடம்
தோழி கூறியது:" தினைக்கதிர் முற்றிவிட்டது. இனி அறுவடை செய்ய வேண்டியதுதான்.
அதனால் இனிமேல் தலைவி வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்க வேண்டியதுதான்.
வெளியேவர வாய்ப்பில்லை. எனவே, விரைந்து வரைவு(திருமணம்) மேற்கொள்ள
ஏற்பாடு செய்க". நற்றிணை பாடல் எண்:57; குறிஞ்சித் திணை; புலவர் பொதும்பில்
கிழார். பாடல் பின்வருமாறு:
"தடங்கோட்(டு) ஆமான் தடங்கல் மாநிரைக்
குன்ற வேங்கைக் கன்றொடு வதிந்தெனத்
துஞ்சுபதம் பெற்ற துய்த்தலை மந்தி
கல்லென் சுற்றம் கைகவியாக் குறுகி
வீங்குசுரை ஞெமுங்க வாங்கித் தீம்பால்
கல்லா வன்பறழ்க் கைந்நிறை பிழியும்
மாமலை நாட! மருட்கை யுடைத்தே
செங்கோல் கொடுங்குரல் சிறுதினை வியன்புனம்
கொய்பதம் குறுகும் காலையும்
மையீர் ஓதி மாணலந் தொலைவே".
பொருள்:
சிங்கம் முதலிய கொடிய விலங்குகள் தலைவனுடைய மலையில் காணப்படும்.
அத்தகைய மலையின் வேங்கை மரத்தடியில் வளைந்த கொம்பையுடைய
காட்டுப்பசு தனது கன்றுடன் துயிலும்.; அதனைக் கண்ட பஞ்சு போன்ற தலையை
யுடைய மந்தி(பெண்குரங்கு) தன் சுற்றத்தினைப் பார்த்து ஓசை எழுப்பாமல் கையால்
சைகை காட்டி அந்தக் காட்டுப் பசுவின் மடியிலிருந்து பால் கறந்து தன் குட்டிக்கு
ஊட்டும். இக்காட்சியை யுடைய மலைநாடனே! தினைக்கதிர் முற்றிவிட்டது. தலைவி
காவல் காக்கத் தேவையில்லை. தினைக்கதிரை அறுவடை செய்யும் பதமும் வந்துவிட்டது.
இனி, தலைவி தினைப் புனத்துக்கு வரமாட்டாள். வீட்டினுள் அடைபட்டுக் கிடைப்பாள்.
வெளியே வர வாய்ப்பில்லாததால் அவளை நீ இனிக் காண இயலாது. நிலைமை
இவ்வாறிருக்க, எது சரி என்று உன் மனத்துக்குத் தோன்றுகிறதோ அதன்படி செயல்படுக.
விரைந்து வரைவு(திருமணம்) மேற்கொண்டால் அவளை மறுபடியும் பார்க்கும் வாய்ப்புக்
கிட்டும் என்று குறிப்பாகத் தெரிவித்தாள்.
சிறப்புச் செய்தி:
தலைவனுடைய மலைநாட்டில் வாழும் மந்தி காட்டுப் பசுவுக்கு அஞ்சாமல் அது துயிலும்
வேளை பார்த்து அதன் பாலைக் கறந்து தனது குட்டிக்கு ஊட்டிக் காப்பாற்றுவதைப்போலத்
தலைவனும் வரைவு மேற்கொள்ளக் கொடிய பாலை வழியே வேறு நாட்டுக்குச்
சென்று பொருள் ஈட்டிக் கொண்டுவந்து தலைவியைத் திருமணம்செய்துகொண்டு அவளைக்
காப்பாற்றல் வேண்டும் என்பது பாடலில் பொதிந்திருக்கும் செய்தி. அநேகமாக இப்படியே
தலைவன் நடந்து கொண்டிருப்பான் என்று எண்ணத் தோன்றுகின்றது.
அருஞ்சொற்பொருள்:
ஆமான்= காட்டுப்பசு; மடங்கல்=சிங்கம்; துய்த்தலை=பஞ்சு போன்ற தலை; ஞெமுங்குதல்=
அமுக்குதல்; பறழ்= குட்டி.
பார்வை:
சங்க இலக்கியம்(நற்றிணை)--வர்த்தமானன் பதிப்பக வெளியீடு.
உரையாசிரியர்: முனைவர் கதிர்.மகாதேவன்.