வருவது கொல்லோ......குன்றுகெழு நாடனொடு சென்ற என் நெஞசே.
நூல்: ஐங்குறுநூறு; திணை:குறிஞ்சி--மஞ்ஞைப்பத்து-பாடல் எண்:
295; புலவர்: கபிலர். துறை: இஃது தலைமகன் வரைவிடை வைத்துப்
பிரிந்து நீட்டித்துழி உடன் சென்ற நெஞ்சைத் தலைமகள் நினைந்து
கூறியது.
"வருவது கொல்லோ தானே வாராது
அவண்உறை மேவலின் அமைவது கொல்லோ
புனவர் கொள்ளியில் புகல்வரு மஞ்ஞை
இருவி இருந்த குருவி வருந்துறப்
பந்தாடு மகளிரில் படர்தரும்
குன்றுகெழு நாடனொடு சென்ற என்நெஞ்சே."
பொருள்:
"தினைக்கதிரை அறுத்தபின்னர் ஐவனநெல்
பயிரிடுவான் செப்பம் செய்ய
நினைத்துவயல் கொளுத்திட்டார் குன்றவர்கள்;
ஆங்கிருந்த நிகரில் மஞ்ஞை,
அனைத்துவிதத் தாளடியில் தங்கியுள்ள
குருவியெலாம் அஞ்சும் வண்ணம்
முனைந்துபந்து விளையாடும் மங்கையர்போல்
நடந்து,துள்ளி ஓடிச் செல்லும்.
இத்தகைய வளப்பமிகு மலைநாடன்,
வரைவிடையில் என்னை நீங்கி
மெத்தவுமே மனம்நோகப் பொருள்தேடிப்
பிரிந்தகன்றான்; வேகும் நெஞ்சம்;
அத்தனவன் சொன்னபடி திரும்பவில்லை;
சுணங்குவதால் அல்லல் செய்தான்;
பித்தியைப்போல் அவன்பின்னே சென்றநெஞ்சம்
திரும்பிடுமோ? பிழைசெய் யும்மோ?
(அத்தன்=தலைவன்; சுணங்குதல்= தாமதம் செய்தல்; பிச்சி=
பைத்தியக்காரி; பிழை செய்யுமோ=தவறு இழைக்குமோ அதாவது
திரும்பாமல் தங்கிவிடுமோ)
தெளிவுரை:
தினைக்கதிரை அறுவடை செய்த பின்னர் மலைவாழ் மக்கள் மேற்கொண்டு
ஐவன நெல்லைப் பயிர் செய்ய எண்ணி அவ்வயலைத் தீயிட்டுக் கொளுத்தும்
பொழுது, அங்கே அதுவரையில் தங்கியிருந்த மயில்கள் அவ்விடத்தை விட்டுப்
புறப்படத் தொடங்கின. தினைக்கதிரின் தாளடியில் வாழ்ந்துவந்த குருவிகள்
அஞ்சி நடுங்கும் வண்ணம் அம்மயில்கள் தம் தோகையை விரித்துப் பந்தாடு
கின்ற பெண்களைப் போலத் துள்ளியும் ஓடியும் நடந்து சென்றன. இத்தகைய
வளமுடைய மலைநாட்டுக்கு உரியவனான தலைவன் திருமணத்தை
முன்னிட்டுப் பொருள்தேடுவதற்காக என்னை விட்டுப் பிரிந்து சென்றான்.
கார்காலத்தில் திரும்பி விடுவதாகச் சூளுரைத்துக் சென்ற அவன் சொன்னபடி
இதுவரை வரவில்லை. பைத்தியக்காரியைப் போன்ற என் பேதை நெஞ்சம்
அவனைப் பின்தொடர்ந்து சென்றது. அது திரும்பி என்னிடம் வருமா? அவனோடு
தங்கிவிடுமா? புரியாமல் குழம்பித் தவிக்கின்றேன்.