மதலையர்தம் மார்பகலம் கண்டு மகிழ்வர்.
தற்காலத்தில் குடியரசு ஆட்சி நிலவுகிறது. நூற்று நாற்பது
கோடி மக்களும் ஆட்சி நிர்வாகத்தில் பங்கு பெறுதல் நடைமுறைக்கு
ஒவ்வாதது. ஆகவே மக்கள் தம் சார்பாக ஆட்சி நிர்வாகம் புரிய
உறுப்பினர்களைத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம்.
அவர்கள் பிரதமரைத் தேர்ந்தெடுக்கின்றனர். பழங்காலத்தில்
மன்னரை ஆட்சியில் அமர்த்தினர்.. மன்னர் நாட்டு மக்களின்
உயிருக்கும் உடைமைக்கும் நாட்டு வளங்களுக்கும் பாதுகாவலர்
என்ற நிலையில் மன்னருக்கு முதன்மை உரிமையும் அதிகாரமும்
தரப்பட்டது. புறநானூறு 186ஆம் பாடலில் மோசிகீரனார் என்ற
புலவர் நெல்லும் உயிராகாது; நீரும் உயிராகாது. விரிந்த இந்த
நாடு ஆள்பவனை(மன்னனை) உயிராகக் கொண்டது. அதனால்
"மன்னனே நாட்டின் உயிர்" என்பதை அறிந்து கொள்ளுதல் வெல்லும்
படையுடைய ஆள்வோரது(மன்னர்) கடமையாகும் என்று பாடியுள்ளார்.
பாடல் பின்வருமாறு:
"நெல்லும் உயிரன்றே; நீரும் உயிரன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யானுயிர் என்பது அறிகை
வேல் மிகு தானை வேந்தற்குக் கடனே".
(உயிர்த்து=உயிரை உடையது; மலர் தலை= விரிந்த இடம்).
செவ்விய ஆட்சி செய்யும் மன்னரைத் தெய்வத்துக்கு அடுத்த
நிலையில் உயர்வாக மக்கள் கருதினர். சங்க இலக்கியங்களில்
மன்னர் புகழ் ஆங்காங்கே பேசப்படுகிறது. சாதாரணமாகப்
பாடும் பொழுதிலும் மன்னரைப் போற்றிவிட்டுத்தான் மேற்கொண்டு
பாடுவதை மரபாகக் கொண்டனர். சிலம்பி என்னும் பெண் தன்னைப்
பற்றிப் பாடுமாறு புலவர் பெருமான் கம்பரைக் கேட்டுக் கொண்டதாகவும்
அவர் ஆயிரம்பணம் கேட்டதாகவும் அப்பெண் ஐந்நூறு பணம் தந்ததாகவும்
கம்பர் பாதிப் பட்டே பாடியதாகவும் உலவும் ஒரு கதை வழக்கிலுண்டு.(இது வெறும்
கதைதான். உண்மையாக நிகழ்ந்தது என்று கூற யாதொரு ஆதாரமும் இல்லை).
அந்தப் பாதிப் பாடலிலும் காவிரியையும், சோழமன்னரையும், சோழ நாட்டையும்
குறிப்பிட்டாரே யன்றிப் பணம் கொடுத்த சிலம்பியைப் பற்றிக் குறிப்பிடவில்லை.
மீதிப்பணம் வந்தபிறகு மீதிப்பாடலைப் பாடலாம்; அப்போது சிலம்பியைக் குறிப்பிட்டு
வாழ்த்தலாம் என்று எண்ணியிருந்தார். நல்லவேளையாக அப்பாதிப் பாடலை
அவ்வீட்டுச் சுவரில் எழுதி விட்டுச் சென்றிருந்தார். சில நாட்கள் கழிந்தபின்னர்
அவ்வூருக்கு வந்த ஔவையார் நடந்தவற்றை அறிந்து மீதிப்பாடலைப் பாடி
நிறைவு செய்தார் என்பது கதை.(...............................................பெண்ணாவாள்
அம்பொன் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
செம்பொன் சிலம்பே சிலம்பு). (அரவிந்தம்=தாமரை). இதுதான் மீதிப் பாடல். இதற்கு
அன்பளிப்பாக அவர் குடிப்பதற்குக் கூழைப் பெற்றுக்கொண்டதாகக் கதை.
இங்கு குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், பழங்காலத்தில் ஒரு காவியமோ,
பாடலோ படைக்கும் முன்னர் அந்நாட்டையும் மன்னனையும் வேறு சிறப்பு இருப்பின்
அதனையும் பாடிய பிறகே தாம் படைக்க நினைத்த நூலைப் புலவர் தொடங்குவர்.
இது புலவர்கள் பின்பற்றிய மரபு. புலவரல்லாத ஏனையோர் தமது மார்பிலோ
தம் குழந்தைகள் மார்பிலோ மன்னரது பெயர்களை எழுதிக் கொள்வர். இந்த
வழக்கத்தைக் கீழ்க்கண்ட பாடல் விவரிக்கிறது.
அந்நாளில் அரசகுலத்துப் பெண்டிர் தமக்குக் குழந்தைகள்
பிறக்கும் காலத்தில் அக்குழந்தை ஆண்குழந்தை என்றால்
பெருமகிழ்ச்சி அடைவது இயல்பு. ஏனென்றால் அரசாட்சி
புரியத் தேவையான அடுத்த தலைமுறை உருவானதால்
ஏற்பட்ட பேருவகை காரணமாகும். மேலும் அக்குழந்தையின்
மார்பு அகன்று விரிந்து பரந்து தென்பட்டால் களிக்கடலில்
மூழ்கித் திளைத்திடுவர். ஏனென்றால் விரிந்து பரந்த அகன்ற
மார்பு வீரத் தோற்றத்தை வெளிக்காட்டும். ஆனால் கம்பர்
பெருமான் வேறொரு காரணத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.
இந்நாளில் மக்கள் தமக்கு மிகவும் பிடித்தமான தலைவர்,
நடிகர் முதலானோர் படங்களை மார்பிலும் தோளிலும் பச்சை
குத்திக் கொள்வதைப் பார்க்கின்றோம். முன்னாளிலும் இது
போல மக்கள் தம் மன்னரின் பெயர், பட்டப் பெயர் முதலான
வற்றை மார்பில் எழுதிக் கொள்வர். ஒவ்வொரு மன்னருக்கும்
இயற்பெயர், விருதுப் பெயர் எல்லாம் சேர்த்தால், எண்ணிக்கை
ஏழெட்டு தேறும். அவையனைத்தையும் தத்தம் குழந்தைகளின்
மார்பில் எழுதிக் கொள்ளத் தோதாக மார்பகலம் இருப்பதைக்
கண்டு பெற்ற தாய்மார் மகிழ்ந்து போவதாகக் கம்பர் பாடியுள்
ளார்.அரசகுலத்தில் பிறவாத மக்களே தம் குழந்தைதளின்
மார்பகலம் கண்டு மகிழும் போது, அரச குலத்துப் பெண்டிர்
இவ்வாறு மகிழ்வது இயல்புதானே! இனி, பாடலைப் பார்ப்போம்:
"பேரரசர் தேவிமார் பெற்ற மதலையர்தம்
மார்பகலங் கண்டு மகிழ்வரே---போர்புரிய
வல்லான் அகளங்கன் வாணன் திருநாமம்
எல்லாம் எழுதலாம் என்று."
அருஞ்சொற் பொருள்:
மதலை-மகன், குழந்தை; அகளங்கன்= அ+களங்கன்=களங்கம்
இல்லாதவன். வாணன்- ஒரு குறுநில மன்னன்.
மேலும் பொதுமக்கள் தாம் செய்யும் ஒவ்வொரு செயலின்போதும்
தம் மன்னரின் கொடியைப் பற்றியும் தேரைப் பற்றியும் இதர சிறப்பைப்
பற்றியும் பாடிக்கொண்டே அச் செயலைச் செய்வர். முத்தொள்ளாயிரம்
என்னும் சங்கம் மருவிய காலத்து நூல் அரண்மனைப் பெண்டிர்
பாண்டியமன்னனுக்குரிய குளியலுக்கான சுண்ணப்பொடி(நறுமணப்
பொடி) இடிக்கும் பொழுது பாண்டியனின் கொடி முதலானவற்றைப்
பாடிக்கொண்டே இடித்ததாகக் குறிப்பிடுகிறது. பாடல் பின்வருமாறு:
"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்
முடிபாடி முத்தாரம் பாடி"ச் சுண்ணம் இடித்தனர்.
இவ்வாறு பழங்கால மக்களின் வாழ்க்கையில் மன்னரைப் பற்றிய
உயர்வான சிந்தனை, அவர் நலத்தைப் பற்றிய கரிசனம் ஒன்றிக்
கலந்திருந்ததை அறியலாம்.