Tuesday, 15 July 2025

எலியும் பூனையும் போல் விளங்கியவர் இரதி-மன்மதன் போல மாறியது எப்படி?து

 எலியும் பூனையும் போல விளங்கியவர் இரதியும் மன்மதனும் போல

மாறியதற்குக் காரணம் என்ன?


இவளோ வாலைப்பெண்(பன்னிரு வயதுப் பெண்.) பக்கத்து வீட்டில்

வாழும் இவனோ பதினான்கு வயதுச் சிறுவன்.;முரடன்.;இருவரும்

எப்பொழுதும் மோதல் போக்கை மேற்கொண்டனர்.இவன் இவளின்

கூந்தலைப் பிடித்திழுத்துத் துன்பம் தருவதும், இவள் பதிலடியாக இவனின்

தலைமுடியைப் பிடித்து ஆட்டிவிட்டு ஓடுவதும் அன்புடைய செவிலித்தாய்

இவர்களின் செயல்களைத் தடுப்பதும் வழக்கமாக நிகழ்வதுதான். ஏனென்

றால் இவர்கள் இருவரும் எப்பொழுதும் எலியும் பூனையும் போல நடந்து

கொள்வர். அடிக்கடி சிறு சிறு சண்டைகள் போட்டுக் கொள்வர்.


ஆனால் இவர்கள் வளரந்து பெரியவர்கள் ஆன பிறகு(பருவ வயது அடைந்த

பிறகு) ஊழின் வலிமையால் இவர்கள் சண்டைக்குணம் மாறி ஒருவர் மற்றவர்

பால் ஈர்ப்பும் அன்பும் காட்டி நாளடைவில் காதலர்களாக மாறிவிட்டனர். எனினும்

இவர்கள் காதல் விவகாரம் மற்றவர்களுக்குத் தெரியாமல்தான் இருந்தது. இருப்

பினும் காதல்வயப்பட்ட இவள் நடத்தையில் ஐயம் கொண்ட இவள் அன்னை

இவளை  இற்செறிப்புச் செய்துவிட்டாள்.(இவள் வெளியேறிச் செல்லாவாறு வீட்

டிலேயே சிறைவைத்துவிட்டாள்). இருந்த போதிலும் இவள் கட்டுக் காவலை மீறிக்

காதலனுடன் உடன்போக்கு மேற்கொண்டாள். 


பாலைநிலத்தில் இவள் தன் காதலனோடு சென்ற பொழுது  இவர்களைப் பார்த்த

வர்கள் மிகுந்த வியப்புக்கு உள்ளானார்கள். எலியும் பூனையும் போலச் சதா சர்வ

காலமும் சண்டையிட்டுக் கொண்ட இவர்கள்  இரதியும் மன்மதனும் போலக் காத

லால் கட்டுண்டு  கணவன் மனைவி ஆனமை ஊழின் வலிமையால் ஏற்பட்டதுதான்

என்று  தமக்குள் கூறிக்கொண்டனர்.


இது தொடர்பான குறுந்தொகைப் பாடலைப் பார்ப்போம்:

குறுந்தொகைப் பாடல் எண்: 229; புலவர்: மோதாசனார்.

பாலைநிலத்தில் இவர்களைக் கண்டோர் தமக்குள் கூறிக்

கொண்டது.

"இவன்இவள்  ஐம்பால்  பற்றவும்  இவள்இவன்

புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்

காதல் செவிலியர்  தவிர்ப்பவும் தவிரா(து)

ஏதில் சிறுசெரு  வுறுப மன்னோ.

நல்லைமன்(று) அம்ம! பாலே மெல்லியல்

துணைமலர்ப் பிணையல் அன்னவிவர்

மணமகிழ் இயற்கை  காட்டி  யோயே!"

அருஞ்சொற் பொருள்:

ஐம்பால்--ஐந்து விதமாகப் பகுக்கப்பட்ட  கூந்தல்.

ஓரி--ஆணின் தலைமுடி; பரியவும்--ஓடவும்.

ஏதில்-- ஏது இல்--காரணம் இன்றி; சிறு செரு--சிறு சண்டை

பாலே--விதியே.

ஏதில் சிறுசெரு உறுப--காரணமின்றிச் சிறு சண்டை செய்வர்.

மலர்த் துணைப் பிணையல் அன்ன இவர்--மலரைப் பிணைத்த

இரட்டை மாலையைப் போன்ற இவர்கள்.

மணம் மகிழ் இயற்கை காட்டியோய்--மணம் புரியும் இயல்பை

உருவாக்கினாய்.; பாலே--விதியே!

மன்ற நல்லை--நீ நிச்சயமாக நன்மையை  உடையாய்.

இச் செய்தியைத் தெரிவிக்கும் என் பாடல்கள்:

முன்னாளில் மீசைஇனும் அரும்பாத 

             இளவயது முரட்டுப்  பையன்

வன்னமுறும் அண்டையில்லச் சிறுமியுடன் 

     பலமுறையும் வம்பு செய்தான்;

அன்னவன்அச்  சிறுமியுடைக் கூந்தலினை 

             இழுத்தாட்டி  அல்லல்  தந்தான்;

பன்னரிய  சிறுமிபதி  லடியாக 

             அவன்முடியைப்  பற்றி   நைத்தாள்.


விதியின்விளை  யாட்டாலே  வளர்ந்தவுடன் 

             அவர்களுக்குள்  மெல்லக்  காதல்

உதித்திடவே பேரன்பைப் பரிமாறிப்  

              பழகினரே,  உண்மைக்  காதல்

அதிகரித்த  வேளையிலே  அன்னையவள்

              தடைசெய்ய அதனை மீறிப்

பதியகன்றே உடன்போக்கை மேற்கொண்டு 

              கொடுமைமிகு பாலை  வந்தார்.


பாலைதனைக்  கடக்கின்ற  வேளைதனில்

              அன்னவரைப்  பார்த்த  மாந்தர்

கோலமிகும் காதலர்கள் அந்நாளில் 

              சண்டையிட்ட. குறும்பை  எண்ணிக்

காலமவர் மனந்தனைநல் மாற்றமுறச் 

              செய்ததற்குக்  கார  ணம்என்?

சாலவுமே நல்லதொரு செயல்செய்தாய்

               விதியே! உன்  தகைமை  நன்றே!