Monday, 19 August 2024

தேரோட்டியைச் சீராட்டிய தலைவன்..

 தேரோட்டியைச் சீராட்டிய தலைவன்.


வீரம் செறிந்த ஒரு  தலைவன் தன் காதல் மனையாட்டியைப் பிரிந்து

தன் அரசனுக்குத் துணையாகப்  போர்க்களம்  செல்லவேண்டிய  சூழல்

ஏற்பட்டது.  அவனும் தன் இல்லாளைப் பிரிய மனமில்லாமல் நாட்டைக்

காக்கும் பணிக்காக மனத்தைத் தேற்றிக்கொண்டு  போர்க்களம்

சென்றுவிட்டான். போர்ச் சூழலில் தன் அன்பு மனையாளை முற்றாக

மறந்து முழுமனத்துடன்  தன் வீரம் முழுவதையும் வெளிப்படுத்திப்

போர் புரிந்தான். அவனைப் போலவே ஏனைய வீரர்களும் கடுமையாகப்

போர் செய்து எதிரி நாட்டு வீரர்களைப் பந்தாடினர். அரசனின் தலைமைப்

 பண்பாலும் போர் வீரர்களின் அயராத வீரத்தாலும் பகைவர்களை வெல்ல

முடிந்தது. ஒரு வழியாகப் போர் முடிந்து அமைதி தவழத் தொடங்கியது.


வெற்றிவாகை சூடிய வீரர்கள் ஒவ்வொருவராக அரசனிடம் வாழ்த்துப்

பெற்றுத் தத்தம் ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கினர். நம் தலைவனும்

முறையாக அரசனிடம் விடைபெற்றுத்  தன் ஊருக்குத் திரும்புவதற்காகப்

பெரிய தேர் ஒன்றில் ஏறிக் கொண்டான். தேரோட்டியிடம் தான் தன் மனைவி

யைப் பிரிந்து பல நாட்களாகப் போர்க் களத்தில் தங்க நேர்ந்ததைத்  தெரி

வித்து அவளைப் பார்க்க மிக்க ஏக்கத்துடன் இருக்கும் நிலைமையை வெளிப்

படுத்தினான். தேரோட்டி வீரனின் நிலைமையைப் புரிந்துகொண்டு தேரை

விரைவாகவும் கவனமாகவும் செலுத்தினான்.


தேரில் ஏறிய தலைவனின் நினைவு அவன் இல்லாளைப் பற்றியே சுற்றிச்

சுழன்றது. தானும் தன் மனைவியும் நடத்திய இனிய இல்லறம், அவள் தனக்குச்

செய்த பணிவிடை, இருவருக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்கள், தான்

அவளிடம் நிகழ்த்திய  குறும்புச் செயல்கள், தன்னிடம் அவள் வெளிக்காட்டிய

பலஊடல், ஊடலுக்குப்பின் நிகழ்ந்த கூடல், அதனால் விளைந்த கழிபேருவகை

போன்ற நிகழ்வுகள் அவன் சிந்தையில் அலைமோதின. போர்க்களத்துக்கும்

அவன் ஊருக்கும் இடையே உள்ள தொலைவு அதிகம்தான். ஆனாலும், தேரோட்டி

மிகத் திறமையாகவும் விரைவாகவும் ஓட்டிய காரணத்தால் அவன் ஊரை

நெருங்கினர். ஊருக்குள் தேரைச் செலுத்தித் தலைவன் இல்லின்முன் முன் தேரை

நிறுத்தினான் தேரோட்டி.


தலைவனிடம் "ஐயா! இல்லம் வந்து சேர்ந்துவிட்டோம்; நீவிர் கீழே இறங்குக" என்று

தேரோட்டி கூறினான். அதுகாறும், சுற்றுமுற்றும் என்ன நடக்கிறது என்பதையே 

அறியாமல், பழைய இனிய மலரும் நினைவுகளில் மூழ்கியிருந்த தலைவன், உறக்கத்

திலிருந்து விழித்தவன் போலத் தன் கண்களைச் சுழற்றிப் பார்த்துவிட்டுத் "தேரில்

ஏறியதை அறிவேன்; மற்றபடி, தேர் கடந்துவந்த பயணம் பற்றி ஏதும் அறியேன்;

பெருந்தேரில் ஏறியதிலிருந்து  முயற்குட்டிகள் அலையும் காட்டைத் தேர்கடந்துவந்த

பயணம் பற்றியோ வேறு நிகழ்வு பற்றியோ யாதொன்றும் அறியேன். வரகுக்கதிர்கள்

சிதறிக் கிடக்கும் எங்கள் இல்லத்தின் முன்பு தேரை நிறுத்தி இறங்கச் சொன்ன பொழுதில்

மருட்சிகொண்டேன். அவ்வளவு விரைவாகத் தேரை ஓட்டிவந்துள்ளாய். தேரோட்டியே!

வான்வழங்கிய காற்றைக் குதிரையாகப் பூட்டினாயோ? பின் மனத்தையே பரியாகப்

பூட்டினாயோ? இவ்வளவு விரைவாகத் தேரோட்டிவந்தது வியப்புக்குரியதே. இவ்வாறு

தேரோட்டி யைப் பாராட்டிய தலைவன் அவனைத் தன் அகன்ற மார்போடு அணைத்த

வாறே இல்லத்துக்குள் தேரோட்டியை அழைத்துச் சென்றான். அவன் இல்லாளுக்கு

நல்லதொரு விருந்தினரைப் பேணும் வாய்ப்புக் கிட்டியது. இனி தொடர்புடைய

பாடலைப் பார்ப்போம்:(அகநானூறு)

பாடல் எண்: 384--புலவர் ஒக்கூர் மாசாத்தியார்--திணை: முல்லை; துறை:வினை

முடித்த தலைமகன் வரவுகண்டு உழையர் (உடனிருந்தவர்) கூறியது.

"இருந்த  வேந்தன் அருந்தொழில்  முடித்தெனப்

புரிந்த  காதலொடு  பெருந்தேர்  யானும்

ஏறிய(து)  அறிந்தன்(று)  அல்லது வந்தவாறு

நனியறிந்(து) அன்றோ  இலனே; தாஅய்

முயற்பறழ் உகளும் முல்லையம் புறவில்

கவைக்கதிர்  வரகின்  சீறூர்  ஆங்கண்

மெல்லியல் அரிவை  இல்வயின் நிறீஇ

இழிமின் என்றநின்  மொழிமருண்  டிசினே;

வான்வழங்(கு) இயற்கை  வளிபூட் டினையோ?

மானுரு  வாகநின்  மனம்பூட்  டினையோ?

உரைமதி  வாழியோ வலவ! எனத்தன்

வரைமருள் மார்பின்  அளிப்பனன்  முயங்கி

மனைக்கொண்டு  புக்கனன் நெடுந்தகை;

விருந்(து)ஏர் பெற்றனள் திருந்திழை யோளே!"

குறிப்பு:

சங்க காலத்தில் மக்கள் பிறப்பாலோ, தொழிலாலோ, செல்வத்தாலோ 

உயர்வு, தாழ்வு கற்பித்துக் கொள்ளாமல் அனைவரும் சமம் என்ற உணர்வுடன்

வாழ்ந்தனர் என்பதைப் பாடல் வெளிப்படுத்துகின்றது. தலைவன் தேரோட்டி யைப்

பாராட்டிய நிகழ்வும், மார்போடு அணைத்துக்கொண்ட செய்கையும், தேரோட்டியை

விருந்தினர் போலப் பேணியமையும் சங்க காலத்தில் ஏற்றத் தாழ்வு நோக்காத

சமுதாயம் வாழந்ததைப் புலப்படுத்துகிறது.






 


Saturday, 3 August 2024

படுகிளி கடியும் கொடிச்சி புலத்து அழுதாள்.

 படுகிளி கடியும் கொடிச்சி புலந்து அழுதாள்.

(தினையைக் கொத்தவரும் கிளியை விரட்டும் குறிஞ்சி நிலத்தவள்

அம்முயற்சி கைகூடாமையால் வருந்தி அழுதாள்)


தலைவன் பாங்கனுக்குக்(தோழனுக்குக்) கூறியது:

"சுடுபுன மருங்கிற் கலித்த ஏனல்

படுகிளி கடியும் கொடிச்சிகைக் குளிரே

இசையின் இசையாய் இன்பா  ணித்தே

கிளியவள் விளியென எழல்ஒல் லாவே;

அதுபுலந்(து) அழுத கண்ணே சாரல்

குண்டு நீர்ப் பைஞ்சுனைப் பூத்த குவளை

வண்டு பயில் பல்லிதழ் கலைஇத்

தண்துளிக் தேற்ற மலர்போன் றனவே!"

திணை: குறிஞ்சி; பாடல் எண்: 291; புலவர்:கபிலர்.

(ஏனல்=தினை; குளிர்=கிளி விரட்ட ஓசையெழுப்பும்

கருவி; புலந்து=வருந்தி; இன் பாணி= இனிய தாளம்)


பொருள்:

விளைந்ததினைக் கதிருண்ணவருங்கிளியை 

   அச்சுறுத்தி விரட்ட வேண்டிக்

களந்தனிலே குளிர்என்னும் கருவியினால்

    ஒலியெழுப்பும்  கன்னி சோர்ந்து

தளர்ந்தழுதாள், தன்கருவி கிளிகளைஅச்

    சுறுத்தாமல்,  தயவாய் உண்ண

விளிப்பதுபோல் ஒலித்ததனால், நீங்காது

   தினைக்கதிரை மேயும் கூடி.

(விளிப்பதுபோல்=அழைப்பது போல்)


கருத்துடனே தினைப்பயிரைக் காவல்செயின்

    அன்னையரின். கனிவு மிக்க

பரிவினையும் பற்றினையும் பெற்றிட லாம்

    என நினைத்த  பாவை நோகக்

கருவியினால் கிளிகடியும் முயற்சியது

    வீணாகிக்  கதிரைக் கொத்தும்

தருணமதில் மங்கையிவள் மனங்கலங்கி

    யழுதனளே,  தோழா!  காண்க.

(அன்னையர்=நல் தாய் மற்றும் செவிலித்தாய்)


தெளிவுரை:

தோழனே! தினைப்புனத்தில் காவல் செய்யும்(விளைந்த தினைக்

கதிரைக் கிளிகள் கொத்தாமல் பாதுகாப்பது) தலைவி கிளிகளை

விரட்டுவதற்காகக் கையில் வைத்திருக்கும் 'குளிர்' எனப்படும் கருவி

கிளிகளை அச்சுறுத்தும் ஓசையை எழுப்பாமல்  இனிய தாளத்தோடு

கூடிய ஓசையை எழுப்புவதால், கிளிகள் அவ்வோசையைக் கேட்டு

மிரண்டு ஓடாமல், தினைக்கதிரை விட்டு அகலாமல், கொத்தும்

பணியையும் நீக்காமல் உள்ளன. அவ்வோசை தம்மைத் தலைவி

அழைப்பது போல்(தினைக் கதிரைக் கொத்தியுண்ண அழைப்பது போல்)

மயங்கச் செய்தது போலும்! " நான் எந்தப் பணிக்கு  வந்தேனோ, அது

நிறைவேறவில்லை" என்று மனம் வருந்தித்  தலைவி அழுதாள். அவள்

அழுதது மனத்துக்கு நோவளிப்பதாக இருந்த போதும் அவள் செய்கை

நகைப்பையும்(சிரிப்பு) வரவழைக்கிறது. அழுத அவள் கண்கள் மலையருகே

யுள்ள ஆழமான சுனையில் பூத்த குவளை மலர்களைப் போல் விளங்கும்.

பார்வை:

குறுந்தொகை மூலமும் உரையும்: டாக்டர் உ.வே.சா.அவர்கள்.