"அசுணம் கொல்பவர் கைபோல் நன்றும் இன்பமும் துன்பமும் உடைத்தே".
அசுணம் என்பது சங்க இலக்கியங்களில் பரவலாகச் சொல்லப்பட்ட ஓர்
உயிரினம். அது விலங்கா பறவையா என ஐயத்திற்கிடமின்றி விவரிக்கப்
படவில்லை. மேலும் அது உண்மையில் வாழ்ந்த உயிரினமா கற்பனையில்
வாழ்ந்த உயிரினமா என்றும் தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால், சங்க
இலக்கிய நூல்களில் சொல்லப்பட்ட ஓர் உயிரினம். நாம் அதனை ஒரு
விலங்கு என்று கருதிக் கொள்வோம். அது வலிமை மிக்க விலங்கு; அதனை
வேட்டையாடுதல் எளிதன்று. ஆனால் அது ஒரு இசையறி விலங்கு என்று
கருதப்பட்டது. நல்ல மனங்கவர் இசையைக் கேட்டால் மயங்கி அருகில் வரும்.
அப்பொழுது அதனைப் பிடித்து அடக்கித் தம் வசப்படுத்திக் கொள்வர்/கொல்வர்.
கடுமையான பறையொலி போன்ற ஓசை கேட்கநேர்ந்தால் அவ்விலங்கு பாறையி
லிருந்து வீழ்ந்து உயிர்துறக்கும் என்பது சங்க இலக்கியத்தில் சொல்லப்பட்டுள்ளது.
பிற்காலக் கம்பராமாயணம் போன்ற இலக்கியங்களும் இவ்விலங்கைப் பற்றிப்
பேசியுள்ளன. நற்றிணையில் ஒரு பாடலைப் பார்ப்போம்.
பல நாட்களாகத் தலைவன் ஒருவன் தலைவியைச் சந்தித்து அளவளாவிவிட்டுப்
பிரிந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளான். இரவுக் குறியில்(சந்திக்கும் இடம்)
அவன் பல இன்னல்களை எதிர்கொண்டு சமாளித்து வருவதால் தலைவி அச்சமயங்களில்
பதற்றத்தோடு மன உளைச்சலுக்கு ஆளாகின்றாள். மேலும் அவன் அடிக்கடி வந்து
போகிறானே தவிர வரைவு(திருமணம்) செய்து கொள்வதைப் பற்றி யாதொரு வார்த்தை
யும் சொல்லாமல் தவிர்க்கின்றான். இதனால் தலைவி மனம்நோகின்றாள். ஒருநாள்
தலைவன் வழக்கம்போல் வந்து சிறைப்புறமாக நிற்கின்றான்(இல்லத்து வேலியருகில்
மறைவாக நிற்கின்றான்). அவன் வந்ததையறிந்த தலைவி தோழியிடம் வன்புறை
எதிர் மொழிகின்றாள்(வற்புறுத்தி/வலியுறுத்திப் பேசுகின்றாள்)."தோழி தினைக்கதிர்
களைத் தின்ற கிளிகள் அங்குள்ள பாறைகளின் மீது அமர்ந்துகொண்டு ஒலியெழுப்பும்;
ஒன்றையொன்று கூவியழைக்கும். அத்தகைய மலையைஉடைய நாட்டில் வாழ்பவன் நம்
தலைவன். அவன் என்னருகிலிருந்து பழகும் பொழுது நல் அழகு என் உடலில் மிளிரும்.
அவன் என்னைவிட்டு நீங்கினால் என் மேனி பொலிவு இழக்கும். அதனால் நம் தலைவனது
மார்பானது அசுணமாவைக் கொல்பவர் கைபோல் உள்ளது. முதலில் இனிய இசையை
எழுப்பி அசுணமாவை வரவழைத்துப் பின்னர் காதுக்குக் கொடுமையான ஓசையால்
அதனை மிரட்டிச் சாகடித்தல் போலாகும். அஃதாவது, கிளிகள் தினைக்கதிர்களைச் சுற்றத்
துடன் கூடித் தின்ற பின்னர் தம் துணையோடு இணைந்து குலவுதல்போல் தலைவன்
தன் சுற்றத்தாருடன் தலைவி இல்லத்துக்கு வந்து வரைவு(திருமணம்) முடித்து அவளொடு
கூடிக் குலவி மகிழ்தலை எதிர்பார்க்கும் செய்தியை வற்புறுத்தி/வலியுறுத்திச் சொன்னாள்.
தொடர்புடைய பாடல் பின்வருமாறு:
நற்றிணை பாடல் எண்:304; திணை: குறிஞ்சி; புலவர்: மாறோக்கத்து நப்பசலையார்.
"வாரல் மென்தினைப் புலவுக் குரல்மாந்தி
சாரல் வரைய கிளையுடன் குழீஇ
வளியெறி வயிரின் கிளிவிளி பயிற்றும்
நளியிரும் சிலம்பின் நல்மலை நாடன்
புணரின், புணருமார் எழிலே; பிரியின்
மணிமிடைப் பொன்னின் மாமை சாய,என்
அணிநலம் சிதைக்குமார் பசலை; அதனால்
அசுணம் கொல்பவர் கைபோல், நன்றும்
இன்பமும் துன்பமும் உடைத்தே
தண்கமழ் நறுந்தார் விறலோன் மார்பே.
அருஞ்சொற் பொருள்:
புலவு=வயல்; குரல்=கதிர்; வயிர்=ஊதுகொம்பு;
விளிபயிற்றல்=ஒன்றையொன்று கூப்பிடுதல்.
பார்வை:நற்றிணை--வர்த்தமானன் பதிப்பகம்;
உரையாசிரியர்=முனைவர் கதிர் மகாதேவன்.