வாணனைப் பழிவாங்கிய பாண்டியன்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருக்கோவிலூர் வட்டத்தில் ஆறகழூர்
என்ற ஊர் உண்டு. அது முற்காலத்தில் பெரிய நகராக, ஆறு அகழி
களையும் பெரிய கோட்டையையும் உடையதாக விளங்கியமையால்
ஆறகழூர் என் அழைக்கப்பட்டது. அதனை 'ஆறை' என இலக்கிய வழக்கில்
புலவர்கள் அழைப்பர். ஆறகழூரைத் தலைநகராகக் கொண்ட பகுதி மகத
மண்டலம் என்ற பெயர் பெற்றது. அப்பகுதியை ஆண்டவர்கள் வாணர்கள்
என்று அழைக்கப்பட்டனர். வாண அரசர்கள் தம்மை மகாபலிச் சக்கரவர்த்தி
யின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்வர். மகதேசன், மாகதர்கோன்
என்ற பெயர்களால் வாண அரசர்கள் புகழப்பட்டனர். (பொன்னியின் செல்வனில்
குறிப்பிடப்படும் வல்லவரையன் வந்தியத்தேவன் இந்த மரபைச் சேர்ந்தவரே).
"வாணன் புகழுரையா வாயுண்டோ? மாகதர்கோன்
வாணன் பெயரெழுதா மார்புண்டோ?---வாணன்
கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ? உண்டோ
அடிதாங்கி நில்லா அரசு?".
என்று புலவர்கள் பாடியுள்ளனர்.
இந்தக்கதை நிகழ்ந்த காலம் கி.பி. பதினைந்தாம் நூற்றாண்டாக இருக்கலாம்.
அந்தக் காலத்தில் இப்பகுதியை ஆண்ட மன்னன் பெருவீரன் வாணகோவரையன்
இராசராச தேவன் ஆவான். மூவேந்தர்களும் வலிமையிழந்து நலிவடைந்து ஆட்சி
புரிந்த காலம். ஒருமுறை ஆறை வாணனுக்கும் பாண்டியனுக்கும் இடையே நிகழ்ந்த
போரில் பாண்டியன் தோற்கடிக்கப்பட்டான். பாண்டிய நாடு வாணன் ஆதிக்கத்தின்
கீழ் வந்தது. ஆண்டு தோறும் திறை(கப்பம்) செலுத்தவேண்டிய இழிநிலைக்கு உள்ளானது.
காலச் சக்கரம் சுழன்றது. வாணகோவரையன் இராசராச தேவன் மறைந்தான்.
அவனுக்குப் பின் ஆட்சிக்கு வந்த அவன் மகன் தன் தந்தை போல் வீரமுடையவன்
அல்லன். அதேநேரத்தில் பாண்டியன் காலமான பிறகு பதவிக்கு வந்த அவன் மகன்
மிக்க வீரமுடையவனாகவும் படை திரட்டுவதில் வல்லவனாகவும் விளங்கினான்.
பாண்டியர்க்கு நேர்ந்த இழிவைத் துடைத்தெறியத் திட்டம் தீட்டினான். அந்தக் காலக்
கட்டத்தில் கொங்கு நாட்டின் பெரும்பகுதி பாண்டியனின் ஆட்சிக்கீழ் இருந்தது. கொங்கு
இளைஞர்கள் பலர் பாண்டியனின் படையில் பணியாற்றினர். ஒருநாள் பாண்டியன்
தன் படையில் பணிபுரியும் கொங்கு இளைஞர்களிடம் உரையாடிக் கொண்டிருக்கையில்
" உங்களில் யாருக்காவது வாண தேசத்து அரசனைப் பிடித்து வந்து என்முன் நிறுத்தும்
துணிவும் வீரமும் உள்ளதா?" என்று வினவினான். அப்பொழுது மோரூர் என்னும் ஊரைச்
சேர்ந்த சூரியன் என்ற வீரன் முன்வந்து " என்னால் வாணனைப் பிடித்து வர இயலும்" என்று
கூறினான். அவன் முகத்தைக் கூர்ந்து நோக்கிய பாண்டியன் "சரி; நீயே இப்பணியைச்
செய். மற்றவர்கள் இவன் கோரும் உதவிகளைச் செய்யுங்கள்" என்று ஆணையிட்டான்.
சூரியன் அடுத்து வந்த நாட்களில் மளமளவென்று பல செயல்களைச் செய்தான். ஆறகழூர்
கொங்கு நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. சூரியன் அந்த எல்லையில் பாண்டி
யனின் படைப்பிரிவு ஒன்றை நிலைநிறுத்த ஏற்பாடு செய்தான். சங்ககிரி என்ற ஊரில் ஒரு
மலையும் அதன்மேல் ஒரு கோட்டையும் இருந்தன. பாண்டியன் அங்கு வந்து தங்கியிருந்
தால் தான் வாணனைப் பிடித்து அக்கோட்டைக்குள் அழைத்து வரும் வாய்ப்பு மிக அதிகம்
என்ற கருத்தைப் பாண்டியனிடம் தெரிவித்தான். பாண்டியனும் அவ்வாறே சங்ககிரிக்
கோட்டைக்கு வந்து தங்கியிருந்தான்.
சூரியன் நம்பிக்கைக்குரிய நாலைந்து வீரர்களுடன் ஆறகழூர் ஊருக்குள் நுழைந்தான்.
தனக்கும் தன்னுடன் வந்துள்ள நண்பர்களுக்கும் ஏற்ற வேலை ஏதாவது கிடைக்குமா?
என்று ஊர் மக்களிடம் விசாரித்தான். "உங்கள் ஊரில் வேலை கிடைக்கவில்லையா?"
என்று மக்கள் கேட்க" நாங்கள் பெரிய செல்வந்தரிடம் பல்லக்குத் தூக்கியாகப் பணி
புரிந்தோம். அண்மையில் அவர் காலமாகிவிட்டார். எனவே பிழைப்புக்காக இந்த ஊருக்கு
வந்துள்ளோம். பல்லக்குத் தூக்குவதைத் தவிர வேறு வேலை எங்களுக்குத் தெரியாது.
உங்கள் மன்னரின் அரண்மனையில் எங்களுக்கு வேலை கிட்டுமா?" என்று வினவினர்.
இந்தச் செய்தி வாணன் காதுகளுக்கு எட்டியது. அண்மையில் ஒரு புதிய பல்லக்கை
உருவாக்கி அதனைச் சுமக்க வலிமை கொண்ட ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தான்.
எனவே, அரண்மனை ஊழியர்களை அனுப்பிச் சூரியனையும் அவன் பணியாட்களை
யும் அழைத்து வரச் செய்து பல்லக்கை அவர்கள் பொறுப்பில் ஒப்படைத்தான். ஒரு
வாரம் சூரியனும் அவன் ஆட்களும் வாணன் திருப்தியடையும் வண்ணம் பணி செய்தனர்.
அரண்மனைப் பெண்டிரைப் பாதுகாப்பாக அழைத்துச்சென்று அரண்மனைக்குத்
திரும்பினர். வாணனுக்கு அவர்கள்மேல் நம்பிக்கை அதிகரித்தது.
ஒருநாள் நள்ளிரவு வரை ஆடல் பாடல் நிகழ்ச்சியைக் கண்டு களித்த வாணன் மிகச்
சோர்வடைந்தான். அரண்மனை அந்தப்புரத்தில் எழிலான கட்டிலில் தூங்கிவிட்டான.
காலையில் அருகிலுள்ள ஒரு ஊருக்குச் செல்லவேண்டிய கட்டாயம் இருந்தது.
மன்னர்கள் எங்கு சென்றாலும் குதிரையேறிச் செல்வதுதான் வழக்கம். ஆனால்
முதல்நாள் சரியாக உறங்காததால் அலுப்பும் களைப்பும் ஆட்கொண்டன. எனவே,
வழக்கத்துக்கு மாறாகப் பல்லக்கில் பயணம் மேற்கொள்ள முடிவெடுத்தான். அதன்படி
பல்லக்கில் ஏறிப் படுத்துவிட்டான். உடனேயே ஆழ்ந்த உறக்கம் அவனை ஆட்கொண்டது.
இந்த நல்வாய்ப்புக்காகக் காத்திருந்த சூரியன் தன் ஆட்களுடன் பல்லக்கைச்
சுமந்துகொண்டு ஆறகழூரைக்
கடந்து சங்ககிரிக் கோட்டைக்குள் நுழைந்து பாண்டியன் அரண்மனையில் நிறுத்தினான்.
உடனே, ஆயுதம் தாங்கிய பாண்டிய வீரர்கள் பல்லக்கைச் சூழ்ந்துகொண்டனர். உறக்கம்
கலைந்து எழுந்த வாணன் தான் இக்கட்டில் மாட்டியிருப்பதை யறிந்து நிலைகுலைந்து
போனான். சிறிது நேரத்தில் பாண்டியன் அரண்மனை முற்றத்துக்கு வந்து "வாணரே!
நீர் எம்வசம் சிக்கியுள்ளீர். ஆண்டுதோறும் திறை செலுத்தி எம் ஆட்சிக்கீழ் அரசு நடத்த
ஒப்புக் கொண்டால் உம்மை விடுவிக்கலாம்" என்றான். " பாண்டியரே! இச்செயல் அறமன்று;
வேறுவழியென்ன? திறை செலுத்த ஒப்புக் கொள்கிறேன்" என்றான் வாணன்.
பாண்டியன் சூரியனுக்குப் பல பரிசில்கள் நல்கினான். ஆகவராமன் என்ற பட்டத்தை
அளித்தான். சூரியன் என்ற பெயரை மாற்றிச் சூரிய காங்கேயன் என்று அழைக்கச்
செய்தான். வேளாளர்களைக் கங்காபுத்திரர்கள் என அழைப்பது வழக்கம். சூரியன்
வேளாளர் தலைவனாதலின் அவனைக் காங்கேயன் என்றழைக்கச் செய்தான்.
எழுகரைநாடு என்ற பகுதியை அரசாளுமாறு வழங்கினான்.
"மிண்டாறை வாணனைமுன் வெட்டாமல் பாண்டியன்நேர்
கொண்டுவந்து நிற்கவிட்ட கொற்றவனும் நீயலையோ?
தெண்டிரைசேர் மோரூரில் தென்னன்மகு டாசலனே!
மண்டலிகர் தேர்ந்துமெச்ச வாழ்சூர்ய காங்கெயனே!"
(,மிண்டு=செருக்குற்று நின்ற; தென்னன் மகுடாசலனே=
பாண்டியன் சூட்டிய மகுடத்தை உடைய தளராத உறுதி
யுள்ளவனே; மண்டலிகர்=மணடலங்களுக்கு நாயகராகிய
அரசர்கள்)
ஆதாரம்: நல்ல சேனாபதி நூல்; ஆசிரியர்: கி.வா.ஜ.அவர்கள்.