Tuesday, 25 March 2025

புதுமைப்பெண்.

புதுமைப் பெண்  விதித்த நிபந்தனை


ஓர் அழகிய நகரத்தில்  ஓவியக் கண்

காட்சி நடைபெறுகின்றது.  அக்காட்சிக்கு

மனைவியை  அழைத்துச்  செல்ல  எண்ணு

கின்றார், அக்குடும்பத்தின் தலைவர். கணவன்

மனைவிக்கிடையே கீழ்க்கண்டவாறு

உரையாடல் நடைபெறுகின்றது.:

கணவர்: நகரில் நடைபெறும்  ஓவியக்

                 கண்காட்சிக்குச் சென்று

                 வருவோமா?

மனைவி: போய் வருவோம்; ஆனால்

                   ஒரு நிபந்தனை.

கண.: என்ன நிபந்தனை?

மனை:ஆண்கள் படங்களை நான்

              பார்க்கமாட்டேன்.

கண.: அப்படியா? ஏன் இந்தப் பழக்கம?

மனை: தமிழ்ப்பண்பாடு அது தானே!

கண.: அதுசரி; அதுசரி; நீ அப்படியே

             செய்துகொள்.

மனை: இன்னொரு நிபந்தனையும்

               உண்டு்.

கண.:இன்னொரு நிபந்தனை என்ன?

மனை:பெண்கள் படங்களை  நீங்கள்

              பார்வையிட்டால் நான் மனம்

              பொறுக்கமாட்டேன்.

இந்த விநோதமான நிபந்தனைகளை

ஏற்றுக் கொண்டால் கண்காட்சிக்குச்

சென்று பார்வையிடுவதால் எந்த

மகிழ்ச்சியும் ஏற்படாது. இதைத்தான்

கீழ்க்கண்ட கவிதை  மறைமுகமாக

எடுத்துரைக்கிறது.

பாடல்:

ஓவியர்நீள் சுவரெழுதும்  ஓவியத்தைக்

கண்ணுறுவான்

தேவியையான்  அழைத்திடஆண்

        சித்திரமேல்  நான்பாரேன்;

பாவையர்தம்  உருவெனில்நீர்  பார்க்க

மனம்  பொறேனென்றாள்;

காவிவிழி  மங்கையிவள்  கற்புவெற்பின்

        வற்புளதால்.

இந்தக்  கவிதையை  என் பள்ளிநாட்க

ளில்  படித்திருக்கிறேன்.  ஆசிரியர்

யாரென்று  நினைவுக்கு வரவில்லை.

அநேகமாக, இயற்றியவர்  பாரதிதாசன்

அவர்களாக  இருக்கலாம்.ஏனென்றால்,

"கற்பு  நிலையென்று சொல்லவந்தால்

இரு கட்சிக்கும் அஃதைப்  பொதுவில்

வைப்போம்" (ஆண்,பெண்  இருவருக்கும்

கற்பு  பொதுவானது) என்று  முழங்கிய

மகாகவி பாரதியாரின்  சீடர்  தானே

பாரதிதாசன்.  என் கருத்துப்படி விளை

யாட்டாகப்  பாடப்பட்ட  கவிதை போலத்

தோன்றினாலும், அதன் கருப்பொருளாக

ஆண்,பெண்  இருவரும்  கற்பு  உட்பட

அனைத்து  விடயங்களிலும்  சரிநிகர்

சமானம்  என்பது வலியுறுத்தப்  பட்டுள்

ளது.  இனி,  வேறு ஒரு  சுவையான கவிதையைப்

பார்ப்போம்:

இரண்டு தமிழ் அறிஞர்கள்  பலதரப்பட்ட

விடயங்கள்  குறித்துத்  தங்களுக்குள்

உரையாடிக்கொண்டிருக்கின்றனர்.  வெகு

நேரம்  கடந்த  காரணத்தால்  ஒருவர்  மற்ற

வரிடம்  விடைபெற்றுக்  கொண்டு  தமது

இல்லத்துக்கு  வந்து  சேர்கிறார்.  வீட்டுக்கு

வந்த போதும்  அவர்  மனம்  அன்று  நிகழ்ந்த

சந்திப்பு  குறித்தும்,  நடைபெற்ற  உரையாடல்

குறித்தும்  திரும்பத் திரும்ப  எண்ணி மகிழ்ந்

தது.  உடனே ஒரு  கவிதை  உருவாயிற்று.:

"சூர்வந்து  வணங்கும்  மேன்மைச்

     சுப்பிர  மணிய  தேவே!

நேர்வந்து  நின்னைக்  கண்டு

    நேற்றிராத்  திரியே  மீண்டேன்;

ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

   உளம்வந்து  சேரக்  காணேன்;

ஆர்வந்து  சொலினும்  கேளேன்;

  அதனையிங்(கு)  அனுப்பு  வாயே!'

என்ன  அருமையான  கவிதை!

" ஊர்வந்து  சேர்ந்தேன்; என்றன்

     உளம்வந்து  சேரக்  காணேன்;"

சொற்கட்டு, ஓசைநயம், கருத்துச்  செறிவு

மிக  மிக  நேர்த்தியாக  அமைந்துள்ளன.

கவிதையைப்  பாடியவர்  மாயூரம்(தற்போது

மயிலாடுதுறை) முன்சீஃப்  வேதநாயகம்பிள்ளை

அவர்கள்.  பாடப்பட்டவர்: திருவாவடுதுறை

ஆதீனகர்த்தர்  அவர்கள்.  இருபெரும்  தமிழ்

அறிஞர்களும்  மறைந்துவிட்டனர்.  ஆனால்

இந்தக்  கவிதை  என்றென்றும்  நினைவில்

நிற்கும்.

   




Tuesday, 4 March 2025

சித்திர கவி.

 சித்திர கவி.


"கோமூத் திரியே கூட சதுக்கம்

மாலை மாற்றே யெழுத்து வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால"

என்பது தண்டியலங்காரச் சூத்திரம் ஆகும். அக்கரச் சுதகமும்

என உம்மையில் முடிந்திருப்பதால் வேறு சிலவும் வழக்கத்தில்

உள்ளன என உணரலாம். அவையாவன: நிரோட்டம், ஒற்றுப்

பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை வருத்தனை,

முரச பந்தம், திரிபாகி, திரிபங்கி, இரத பந்தம், பிறிதுபடு

பாட்டு போன்றவை. இவை வியக்கவைக்கும் கவிகள். இவற்றை

இயற்றுவதும் கடினம்; புரிந்து கொள்வதும் கடினம். இவற்றை

மிறைக்கவிகள் என்றும் அழைப்பர். தற்காலத்தில் இவ்வகைக்

கவிகளைப் படைத்தல் மிக மிக அரிதாகிவிட்டது.  சித்திர கவியில்,

மாத்திரைச் சுருக்கம் மற்றும் மாத்திரை வருத்தனை வகைகளைப்

பார்ப்போம்.


மாத்திரைச் சுருக்கம் என்பது ஒரு குறிப்பிட்ட பொருளைத்தரும்

சொல்லானது, ஒரு மாத்திரையைக் குறைத்தால் வேறொரு பொருளை

வெளிப்படுத்தும் சொல்லாக மாறும் நிலை. மாத்திரை என்பது எழுத்தை

ஒலிக்கும் கால அளவு. எடுத்துக்காட்டாக,  நெட்டெழுத்தை இரண்டு மாத்திரை

அளவு ஒலிக்கின்றோம். அதன் மாத்திரையைக் குறைத்து விட்டால், அதாவது,

குற்றெழுத்தாக மாற்றிவிட்டால் அச்சொல் வேறு ஒரு பொருளைத் தரும்.

"நேரிழையார் கூந்தலினோர் புள்ளிபெற நீண்மரமாம்;

நீர்நிலையோர் புள்ளி பெற,நெருப்பாம்---சீரளவும்

காட்டொன்(று) ஒழிப்ப இசையாம் அதனளவில்

மீட்டொன்(று) ஒழிப்ப மிடறு".

நேரிழையார்--பெண்கள்; இவர்களின் கூந்தல் ஓதி என இலக்கியம்

இயம்பும். ஓதி என்ற சொல்லில் ஒரு மாத்திரையைக் குறைத்தால் ஒதி என

ஆகும்.. ஒதி என்னும் சொல் ஒதிய மரத்தைக் குறிக்கும்,; நீர்நிலை--ஏரி. இதில்

ஒரு மாத்திரையைக் குறைக்க எரி என்று வரும். எரி என்பது நெருப்பைக்

குறிக்கும்; காட்டைக் குறிக்கும் சொல் காந்தாரம். இதில் ஒரு மாத்திரையைக்

குறைத்தால் கந்தாரம் என்று வரும். இது ஒரு இராகத்தை(பண்)க் குறிக்கும்.

இதில் மீண்டும் ஒரு மாத்திரையைக் குறைத்தால் கந்தரம் என்று வரும். இது

மிடறு என இலக்கியம் சொல்லும் கழுத்தைக் குறிக்கும்.(பழங்காலத்தில் எழுத்து

வரிவடிவம் முழு வளர்ச்சியுற்ற  நிலை பெறாமல் இருந்தது. நெட்டெழுத்து,

குற்றெழுத்து வேறுபாட்டை உணர்த்த எ, ஒ போன்ற உயிரெழுத்து மேலேயும்

புள்ளிவைத்தல் கடைப்பிடிக்கப்பட்டது. அந்தக் காலத்தில் உருவான நூல் இது.

எனவே நேரிழையார் கூந்தலினோர் புள்ளி பெற நீண்மரமெனவும், 

நீர்நிலையோர் புள்ளி பெற நெருப்பாம் எனவும் குறிக்கப்பட்டுள்ளது.

அந்தக் காலத்து 'ஒ' என்ற நெட்டெழுத்தையும் 'எ' என்ற நெட்டெழுத்தையும்

குற்றெழுத்தாக்க அவற்றின் மேல் புள்ளிவைத்தல் என்னும் அன்றைய

வழக்கத்தைப் பாடல் தெரிவிக்கிறது.)


இனி, மாத்திரை வருத்தனை என்ன எனப் பார்ப்போம். மாத்திரை வருத்தனை,

மாத்திரைச் சுருக்கத்துக்கு நேர் எதிரானது. ஒரு குறிப்பிட்ட பொருள்தரும் ஒரு

சொல்லின் மாத்திரையை அதிகரித்தால் வேறு பொருளைத் தரும் சொல்லாக

மாறிவிடும். 

"அள(பு)ஒன்(று) ஏறிய வண்டதின் ஆர்ப்பினால்

அள(பு)ஒன்(று) ஏறிய மண்அதிர்ந்(து) உக்குமால்;

அள(பு)ஒன்(று) ஏறிய பாடல் அருஞ்சுனை

அள(பு)ஒன்(று) ஏறழ(கு) ஊடலைந்(து) ஆடுமால்".

அளி என்னும் சொல் வண்டு என்னும் பொருள்தரும். அளபு ஏறிய வண்டு அதாவது

மாத்திரை அதிகரித்த அளி ஆளிஎன்ற சொல்லாகும். தரை என்னும் சொல் மண்ணைக்

குறிக்கும். அளபேறிய மண் அதாவது மாத்திரை அதிகரித்த தரை தாரை என்ற சொல்லாகும். பாடல் என்ற சொல் கவியைக் குறிக்கும். அளபேறிய கவி காவி என்ற சொல்லாகும்.

வனப்பு என்ற சொல் அழகு என்ற பொருளைத் தரும். அளபேறிய 

அழகு அதாவது மாத்திரை அதிகரித்த வனப்பு வானப்பு என்ற சொல்லாகும். இந்தப் பாடல்

களவுக் காதலில் நற்றாயிரங்கல் துறையில் அமைந்துள்ளது. தலைவி ஒருத்தி தலைவனு

டன் உடன் போக்கு சென்றதையடுத்துப் பெற்ற தாய் புலம்புவதைச் சொல்வது. "என் மகள்

காட்டு வழியில் செல்லும் பொழுது ஆளி(யாளி என்னும் விலங்கு) ஆர்ப்பரிப்பதால் மண்

அதிர்ந்து அச்சுறுத்தும். அதனால் தலைவியின் காவி(குவளை) மலர் போன்ற கண்கள்

கண்ணீர்ச் சுனையில் மூழ்கியது போலத் தோற்றம்தரும். அதாவது யாளியால் ஏற்பட்ட

அச்சத்தால் கண்ணீர்த் தாரைகள் மார்பின்மேல் சொரியும்.

(வானப்பு=வான்+அப்பு=வானத்துக் கங்கை)


பார்வை:'தண்டி யலங்காரம்' -- திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த

நூற்பதிப்புக் கழக வெளியீடு.