கண்ணீத்தம்(கண்ணீர் வெள்ளம்) துடைக்கும் மருந்து.
முத்தொள்ளாயிரம் என்னும் சங்கம் மருவிய கால இலக்கியத்தில்
காணப்படும் நெஞ்சை யுருக்கும் காட்சி. பாண்டிய நாட்டின் மீது
பகைவர் படையெடுத்து வந்துள்ளனர். நாட்டைக் காப்பதற்கு ஒவ்
வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்மகன் போர்க்களத்துக்கு வருதல்
வேண்டுமெனப் பாண்டிய வேந்தன் முரசறைந்து செய்தி தெரிவிக்க
ஆணையிட்டுள்ளான். வீட்டுக்கு ஒருவர் போர்க்களம் நோக்கிச் செல்
கின்றனர். ஒரு வீட்டில் கணவனை யிழந்த ஒரு தாய் தன் பாலகனோடு
வாழந்து வருகிறாள். அவன் பாலகன் ஆதலால் தன்வயது ஒத்த சிறுவர்
களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கின்றான். அந்தத் தாய் தன்
பாலகனை யழைத்துப் போர் ஆடை உடுத்திவிட்டுக் கையில் வேலைத்
திணித்து மகனுடன் போர்க்களம் நோக்கி நடக்கின்றாள்.
போர்க்களம் வந்தடைந்த அத்தாய் தன் பாலகனை முன்னிறுத்தித் தான்
பின்னால் நின்றுகொண்டு மகனுக்கு வேலைக் கையாளக் கற்றுக்கொடுக்
கின்றாள். ஒரு நாழிகை தடுமாறிய பாலகன் ஏனைய வீரர்கள் வீறுகாட்டிப்
போர்செய்வதனைப் பார்த்து வீரமும் வெறியும் கொண்டு வேலைக் கையாளக்
கற்றுக்கொள்கின்றான். தாய் பின்னாலிருந்து "பாண்டிய நாட்டை எப்பாடுபட்டேனும்
காப்போம்" என்றும் "வெற்றிவேல், வீரவேல்" என்றும் முழக்கமிட்டாள். அதனால்
பாலகன் ஓரளவு நன்றாகவே சமர்புரிந்தான். ஆனாலும் அவன் பாலகன் தானே!
நேரம் கழியக் கழிய அவனது கைகள் தளர்ச்சிடையத் தொடங்கின. அந்தோ, பரிதாபம்
அவனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பகைவீரன் ஒருவன் எறிந்த
வேல் பாலகனின் மார்பைப் பிளந்து அவன் உயிரைக் குடித்தது. மேலும் சில நாழிகை
நேரம் போர் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் பாண்டிய வீரர்கள் பகைவரைத்
துரத்தியடித்து வெற்றிவாகை சூடினர்.
பாண்டிய வேந்தன் வெற்றியடைந்த பின்னர் சில மருத்துவர்கள் புடைசூழப் போர்க்
களத்தைச் சுற்றிவந்து வீரமரணம் அடைந்தவர்களை முறைப்படி அடக்கம் செய்யவும்
காயம் அடைந்தவர்களுக்கு முறைப்படி மருத்துவம் பார்க்கவும் ஏற்பாடு செய்தான்.
அப்பொழுது ஒருதாய் உயிரிழந்த தன் பாலகனின் உடலைத் தன் மடிமீது கிடத்திக்
கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அவள் அருகில் சென்று நடந்தது என்ன?
என்று வினவ, அத்தாய் நடந்த நிதழ்ச்சிகளை விம்மலுடன் சொல்லி முடித்தாள். அவள்
கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது. செய்தியைக்
கேட்ட பாண்டிய வேந்தன் நெக்குருகிப் போனான். தடாலென்று கீழே குனிந்து அத்தாயின்
கால்களைத் தொட்டு வணங்கி "அம்மையே! உம் போன்ற வீரப் பெண்டிர்களால் இந்த
வெற்றி கிட்டியது. இந்த நாட்டை உமக்குத் தருகிறேன். பெற்றுக் கொள்க" என்றான்.
அத்தாய் உடனே "தாய்நாட்டைக் காப்பது எம் கடமை. அதைத்தான் யாம் செய்தோம்.
பரிசையோ வெகுமதியையோ எதிர்பார்க்கவில்லை" என்று இயம்பினாள். இச்
செய்தியைக் கூறும் பாடல் பின்வருமாறு:
"தொழில்தேற்றாப் பாலகனை முன்னிறீஇப் பின்னின்
அழலிலைவேல். காய்த்தினார் பெண்டிர்---கழலடைந்து
மண்ணீத்தல் என்ப வயங்குதார் மாமாறன்
கண்ணீத்தம் தீர்க்கும் மருந்து".
அருஞ்சொற் பொருள்:
தொழில்தேற்றா--போர்த்தொழில் பயில்விக்கப் படாத;
முன்னிறீஇ--முன் நிறுத்தி.
அழலிலைவேல்--வெம்மைமிகு இலைவடிவ வேல்;
காய்த்தினார்--சினங் கொண்டார்;
மண்ணீத்தல்--நாட்டைக் கொடுத்தல்;
வயங்குதார்--ஒளிமிகுந்த மாலை;
மாமாறன்--பாண்டியன்
கண்ணீத்தம்--கண்ணீர் வெள்ளம். பாடலைப் படித்து இன்புறுவோம்.
யானையிடம் கெஞ்சிய மடந்தை.
முடியுடை மூவேந்தராயினும், குறுநில அரசர்களாயினும் தத்தம் தலை
நகரத்தில் அடிக்கடி வீதியுலா வருவது வழக்கம். அப்பொழுதுதான் பொது
மக்களைச் சந்திக்கவும், அவர்களின் நலத்தைப் பற்றிக் கேட்டறியவும்,
அரசாட்சியில் ஏதாவது குறைகள் உள்ளனவா? என்பது பற்றித் தெரிந்து
கொள்ளவும் வாய்ப்புக் கிட்டும். வழக்கம் போலப் பாண்டிய வேந்தர் தம்
பிடி (பெண்யானை) மீதேறிக் கம்பீரமாக வீற்றிருந்து யானையை நடத்திவருகிறார்.
பாதுகாப்புக்குப் படைவீரர்கள் இருபுறமும் அணிவகுத்து உலா வருகின்றனர்.
வீதியின் இருபுறமும் பொதுமக்கள் வேந்தரைக் காணும் ஆர்வத்துடன்
நின்று கைகளை அசைத்து வரவேற்கின்றனர். பருவப் பெண்கள் பலகணி (சன்னல்)
வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில அன்னையர் தம் பெண்கள்
உலாவைக் காண இயலாதபடி வாயிற் கதவையும் சாளரத்தையும் அடைத்து
விட்டுத் தாம் வெளியே நின்று உலாவைப் பார்க்கின்றனர். வேந்தரின் கம்பீரத்
தையும் அழகையும் கண்டு பருவப் பெண்கள் தேவையில்லாத ஆசையை
மனத்தில் வளர்த்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடனேயே அன்னை
யர் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் இந்தக் கண்டிப்பையும் மீறி
மடந்தையர் அன்னையர் அறியாமல் சாளரத்தைத் திறந்தோ கதவைத் திறந்தோ
உலாவரும் வேந்தரையும் உடன்வருபவரையும் பார்க்கத்தான் செய்கின்றனர்.
அப்படி ஒரு மடந்தை வேந்தரைப் பார்த்துத் திகைக்கின்றாள். வேந்தரின் பெருமிதத்
தையும் அழகையும் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்கிறாள். பிடியானை
யின் தோற்றமும் அவளை வெகுவாகக் கவர்கின்றது. உடுக்கை போன்ற நான்கு
கால்களும், கேடயம் போன்ற தோற்செவிகளும், அசைகின்ற தும்பிக்கையும்
தொங்குகின்ற வாயும் கொண்டு செம்மாந்து நடந்துவரும் அப் பிடியின் தோற்றம்
அவள் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோலப் பதிகின்றது. உலா முடிந்து அனைவரும்
அரண்மனைக்குச் சென்றுவிட்டனர்.
அந்த மடந்தைக்கு வேந்தரையும் அவரது பிடியையும் மீண்டும் ஒருமுறை பார்க்கும்
ஆவல் எழுந்தது. இந்த நினைவுடனே சில நாட்களைக் கழித்தாள். ஒருநாள் வேந்தர்
நீராட அவர் பாதுகாவலர்கள் புடைசூழ ஆற்றை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
ஆற்றுக்கு அருகில் அவளது சேரி இருந்தது. அவளது சேரி வழியாக அனைவரும்
வந்தனர். வேந்தர் தனது பிடியானையின்மேல் வீற்றிருந்தார். அப்போழுது அந்தப்பெண்
பிடியிடம் கெஞ்சிச் சொன்னாள்:" பிடியே! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
வேந்தர் ஆற்றில் நீராடிய பிறகு மார்பில் சந்தனத்தைப் பூசிக் கொண்டு அரண்மனைக்குத்
திரும்பும் பொழுது என் சிற்றிலின் சாளரம் வழியாக நடந்து செல்" என்றாள். இந்தச்
சொல் ஓவியத்தை முத்தொள்ளாயிரம் அழகாகக் காட்டுகின்றது. அது பின்வருமாறு:
"துடியடி; தோற்செவி; தூங்குகை; நால்வாய்ப்
பிடியே!யான் நின்னை இரப்பன்--கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம்
சாலேகம் சார நட."
(துடி=உடுக்கை; தோற் செவி=தோற் கேடயம் போன்ற செவி; தூங்குகை=அசைகின்ற
தும்பிக்கை; நாலு வாய்= தொங்குகின்ற வாய்; கடி=மிக்க; கமழ்தார்=மணக்கும் மாலை;
சேலேகம்= சந்தனம்; சாலேகம்=சாளரம், சன்னல், பலகணி, காலதர்).
நீராட்டம் முடிந்து வேந்தர் உட்பட அனைவரும் அரண்மனைக்குப் புறப்பட்டனர்.
இயல்பாகவே அந்தப் பிடி அவள் சிற்றிலின் சன்னல் வழியாகச் சென்றது. அவள் தனது
எண்ணப்படியே வேந்தரைக் கண்ணாரக் கண்டு உவகையடைந்தாள்.
கடுமையான நெறிமுறைகள் சமுதாயத்தில் நிலவிய போதிலும், அன்னையர் இற்செறிப்பு,
கடிகாவல் முதலிய ஏற்பாடுகளைச் செய்தாலும் பருவ வயதுப் பெண்களிற் சிலர் அந்த
வயதுக்குரிய குறும்புகளோடு நடந்துகொள்ளுதலைத் தவிர்த்தல் இயலாது போலும். முத்
தொள்ளாயிரம் காட்டும் இந்தச் சொல் ஓவியம் சுவைத்தின்புறத் தக்கது.
.
ReplyDelete