Sunday, 29 June 2025

வியப்பூட்டும் பாடல்கள்.

 வியப்பூட்டும் பாடல்கள்.

"முக்கண்ணன் என்றரனை முன்னோர் மொழிந்திடுவார்;

அக்கண்ணற்(கு) உள்ள(து) அரைக்கண்ணே;---மிக்க

உமையாள்கண் ஒன்றரை;மற்  றூன்வேடன் கண்,ஒன்(று)

அமையுமித னாலென்(று) அறி".

பொருள்:

சிவபெருமான் முக்கண்களை யுடையவரென்று  நம் மூதாதையர்

கூறியுள்ளனர். உண்மை என்னவெனில், அக்கு(எலும்பு) அணிந்த

அப் பெருமானுக்கு அரைக்கண்ணே சொந்தம். எவ்வாறெனில்,

சிவபெருமான் தம் உடலில் சரிபாதியைத் தம் மனைவிக்குக்

கொடுத்துவிட்டதாகப் புராணம் கூறும். ஆக, உமையவளுக்கு

ஒன்றரைக் கண் சொந்தம். மேலும், வேடராகிய கண்ணப்ப

நாயனாரைச் சோதிக்கத் தம் கண்ணிலிருந்து  இரத்தத்தை

வழியவிட,, அதைப்பார்த்த கண்ணப்பர் அந்தக்கண்ணை அகற்றி

அந்த இடத்தில் தமது கண்ணைத் தோண்டி யப்பினதாகப் பெரிய

புராணம் கூறும். எனவே, ஒன்றரையும் ஒன்றும் சேர்ந்து  இரண்டரைக்

கண்கள் சிவபெருமானுக்குச் சொந்தமில்லாமற் போயின. ஆக,

அவருக்கு மிச்சம் இருப்பது அரைக்கண்ணே! அதைத்தான் பாடல்

கூறுகிறது. புலவர் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.அவர் கற்பனை

வியப்பூட்டுவதாகவுள்ளது.


வேறொரு வியப்பூட்டும் பாடலைப் பார்ப்போம்:

"கைத்தலம் தன்னில் பசும்பொன் வளையல் கலகலெனச்

சத்தம் ஒலித்திட நூபுரம் பாதச் சதங்கைகொஞ்சத்

தத்திமி யென்று நடம்செய்சம் பீசர்தம் சந்நிதிப்பெண்

செத்த குரங்கைத் தலைமேல் சுமந்து திரிந்தனளே!"

பொருள்:

கைகளில் அணிந்துள்ள புதிய தங்க வளையல்கள் கலகலவென்று

ஓசை செய்யவும், கால்களில் அணிந்துள்ள சிலம்பும் கிண்கிணியும்

மெதுவாய் ஓசையெழுப்பவும், தத்திமியென்று தாளத்தோடு நடனமாடு

கின்ற சம்புகேசப் பெருமானது சந்நிதிப் பெண் சாமந்திப் பூவைத்

(சா+மந்தி= செத்த குரங்கு) தலையில் சூடிக்கொண்டு திரிந்தனளே!

இந்தப் புலவரின் வார்த்தை விளையாட்டு வியப்பூட்டுகிறது.(புலவர்

பெயர் தெரியவில்லை).


அந்தகக்கவி வீரராகவ முதலியார் தானன் என்னும் வள்ளல் தமக்கு

யானையைப் பரிசாக வழங்கினதைப் போற்றிப் பாடியது:

இல்லையெனும்  சொல்லறியாச் சீகையில்வாழ்

தானனனைப்போய்  யாழ்ப்பா  ணன்யான்

பல்லைவிரித் திரந்தக்கால் வெண்சோறும்

        பழந்தூசும். பாலி யாமல்

கொல்லநினைந் தேதனது நால்வாயைப்

பரிசென்று  கொடுத்தான்; பார்க்குள்

தொல்லையென தொருவாய்க்கும் நால்வாய்க்கும்

இரையெங்கே  துரப்பு வேனே!

பொருள்:

ஈயென இரந்து வருவோர்க்கு "இல்லை" என்று சொல்லத் தெரியாத

சீகை என்னும் பதியில் வாழந்துவரும் தானன் என்னும் பெயருடைய

வள்ளலிடம் போய் எனது வறுமை நிலைமையைப் பற்றிச் சொல்லி

எனக்குத் தேவையானதை நயந்து கேட்டால், தூய்மையான வெள்ளைச்

சோறும் பழைய துணியும் தராமல், என் உயிர்போக்க எண்ணி

நால்வாயாகிய தனது யானையைப் பரிசாக அளித்தான். உலகத்தில்

பசியால் துன்புறுகின்ற எனது ஒரு வாயோடு இன்னும் நால்வாய்க்கும்

உணவை எங்கே கண்டு நிரப்புவேன்?

(நால்வாய்--நாலும் வாய்--தொங்குகின்ற வாயையுடைய யானையைக்

குறிக்கும். யானைப் பரிசில் என்பது வெறும் யானையை மட்டும்  பரிசாகக்

கொடுப்பதன்று;; யானையையும் அந்த யானைக்குத் தீனி போடுவதற்கான

செலவைச் சமாளிக்கத் தேவையான  பணத்தையும் பரிசாகக் கொடுப்பது

வழக்கம்.)


பார்வை:

தனிப் பாடல் திரட்டு(1&2ஆம் பாகங்கள்)--சாரதா பதிப்பகம்.

உரையாசிரியர்: கா சுப்பிரமணிய பிள்ளை.







No comments:

Post a Comment