ஐந்திணை ஐம்பது.
மாறன் பொறையனார் என்னும் புலவர் இந்நூலை இயற்றியுள்ளார்.
இது பதினெண்கீழ்க்கணக்கு என்ற பிரிவிலுள்ள பதினெட்டு நூல்களில்
ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் சங்க காலத்தில் இயற்றப்பட்டவை
யல்ல. சங்கம் மருவிய காலத்தில்(சங்ககாலம் முடிவடைந்த பிற்பாடு இயங்கிய
காலம்) இயற்றப்பட்டது என்று புலவர்கள் கருதுகின்றனர். இது அகப்பொருளைப்
பற்றிப் பாடும் நூல். முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்ற முறையில்
திணைக்குப் பத்துப் பாடல்கள் என்ற கணக்கில் மொத்தமாக ஐம்பது பாடல்களைக்
கொண்டு திகழ்கிறது. இதில் குறிஞ்சித்திணையில் காணப்படும் ஓரினிய
பாடலைக் காண்போம்::
"கொடுவரி வேங்கை பிழைத்துக்கோட் பட்டு
மடிசெவி வேழம் இரீஇ---அடியோசை
அஞ்சி யொதுங்கும் அதருள்ளி ஆரிருள்
துஞ்சா சுடர்த்தொடி கண்".
திணை: குறிஞ்சி; துறை: இரவுக்குறி வந்து திரும்பும் தலைவனைக் கண்ணுற்று
நின்ற தோழி வரைவு(திருமணம்) கடாயது(புரிந்து கொள்ளும்படி கோரியது).
இரவுக்குறி: காதலர்கள் இரவில் பிறர் அறியாமல் சந்தித்துக் கொள்ளும் இடம்.
பாடல் எண்16.
பொருள்:
வளைந்த வரிகளையுடைய வேங்கைப் புலியாலே பிடிக்கப்பட்டுப் பெரும்
போராட்டத்துக்குப் பின்னர் ஒருவாறு தப்பிப் பிழைத்த, மடிந்த முறம் போன்ற
காதுகளைக் கொண்ட யானையானது, அஞ்சிப் பின் வாங்கித் "தான் நடப்பதால்
கிளம்பும் ஒலி புலிக்குக் கேட்டுவிடக்கூடாது என்ற உதறலில் மெல்ல நடந்து
செல்லும் அச்சுறுத்தும் வழியையுடைய காடு அது. தலைவியுடன் கலந்துரையாடித்
திரும்பிச் செல்லும் போது ஏதாவது ஆபத்து நிகழ வாய்ப்புண்டு. இந்த எண்ணம்
உதித்ததால் ஒளியுடைய வளையலை அணிந்த தலைவிக்குத் தூக்கம் வரவேயில்லை.
இவ்வாறாக அவளை அச்சத்துக்கு ஆளாக்காமல் மகிழ்ச்சியுடன் வாழ வழிசெய்க.
அதற்காக, மேற்கொண்டு கால தாமதம் புரியாமல் வரைவு(திருமணம்) மேற்கொள்ளத்
தேவையான முயற்சிகளைச் செய்தல் சாலவும் நன்று. இவ்வாறாகத் தோழி
தலைவனிடம் வற்புறுத்திக் கூறினாள்.
காட்டில் திரியும் விலங்குகளின் இயல்பையும், நடந்துகொள்ளும் முறையையும்
மனிதர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள இயலவே இயலாது. யானை
பருத்த உடலையும், கூரிய கொம்புகளையும் கொண்டிருந்தாலும் புலி பாய்ந்து
தாக்கும்போது அஞ்சிப்பின்வாங்கும். புலிக்கு ஊக்கமும் மனவலிமையும்
யானையை விடவும் அதிக அளவில் உள்ளன. எனவே, உரமும் வலிமையும்
உடைய யானை தன்னை விடவும் வலிமை குறைந்த புலியால் கொல்லப்படும்
வாய்ப்புண்டு. களிறு என அழைக்கப்படும் ஆண் யானையே அஞ்சும் பொழுது
பிடி என அழைக்கப்படும் பெண் யானையைப் பற்றிப் பேசவே வாய்ப்பில்லை.
ஆனால் மதங்கொண்ட யானை புலியுடன் மூர்க்கமாகப் போராடி வெல்லும்.
சங்க இலக்கியத்தில் யானை--,புலி இவைகட்கிடையே நிகழ்ந்த சண்டைகளைப்
பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. சிலவற்றில் புலி யானையைக் கொன்ற
தாகவும், சிலவற்றில் யானை புலியைக் கொன்றதாகவும் குறித்துள்ளனர்.
"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்" (திருக்குறள் எண்: 599)
என்ற குறளில் யானையின் ஊக்கமின்மை எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.
(வெரூஉம்=அஞ்சி நடுங்கும்).
இனி, ஐந்திணை எழுபது என்னும் நூலில் காணப்படும் ஊக்கமுடைய யானை
யைப் பற்றிய பாடலைப் பார்ப்போம்:
இந்நூலை இயற்றியவர் மூவாதியார் என்னும் புலவர்.
துறை: பிரிவுணர்த்திய தோழிக்குத் தலைவி உடன்படாது உரைத்தது.
பாடல் எண்:37; திணை: பாலை.
"கொடுவரி பாயத் துணையிழந்(து) அஞ்சி
கடுவுணங்கு பாறைக் கடவு தெவுட்டும்;
நெடுவரை அத்தம் இரப்பர்கொல் கோண்மாப்
படுபகை பார்க்கும் சுரம்."
பொருள்:
தலைவி தோழியிடம் கூறியது:
"தோழியே! புலியானது பாய்ந்ததால் தன் துணையான பிடியைப்
பறிகொடுத்து அச்சமடைந்து அப்பால் போய் மாவிலங்குமரம்
வாடிநிற்கும் பாறைதளுக்கிடையில் உள்ள வழியில் நிற்கும்
களிறு(ஆண் யானை) தன் துணையான பெண் யானையைக்
கொன்ற புலியினது வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும்.
இத்தகைய பாலை நிலத்திலுள்ள நீண்ட மலைத்தொடர்களைக்
கொண்ட அரிய வழியில் நம்மைப் பிரிந்து தலைவன் கடந்து
போவாரோ?".
No comments:
Post a Comment