சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்
மூதேவி ஏன்பிறந்தாள் முன்?
அந்தகக்கவி வீரராகவ முதலியார் செங்கல்பட்டுக்கு அருகிலுள்ள
பூதூர் என்ற சிற்றூரில் பிறந்தார். பிறவியிலேயே கண்பார்வை
யற்றவராக உதித்த போதும் "ஏடாயிரங்கோடி எழுதாது தன்மனத்து
எழுதிப் படித்த விரகர்" ஆனார். பூதூரில் பிறந்தாலும் வாழ்ந்த ஊர்
பொன் விளைந்த களத்தூராகும். பல வள்ளல்களாலும் ஈழத்து மன்னர்
பரராச சிங்கம் என்பவராலும் ஆதரிக்கப் பெற்றவர். பல சிற்றிலக்கியங்களையும்
தனிப்பாடல்களையும் இயற்றியவர்.
ஒருமுறை திருவேங்கடம் என்னும் வள்ளலிடம் பாடிப் பரிசில் பெற எண்ணிச்
சென்றிருந்தார். திருவேங்கடம் புலவர்களைப் பேணுபவர். தாராளமாகப்
பரிசில்கள் வழங்குபவர். ஆனால் அவருக்கு ஒரு தமையன் இருந்தார் அவர்
தமிழ்ப் பற்றோ, புலவர்களைப் பாராட்டும் எண்ணமோ இல்லாதவர். புலவர்
களுக்குப் பரிசில் கொடுப்பதைத் தடுக்க முயல்பவர். புலவர் பாடி முடித்தவுடன்
தன் இளவல் திருவேங்கடத்திடம் "சிறிய அளவில் பரிசிலைக் கொடுத்தனுப்பு;
பெரிதாக எதுவும் கொடுத்துவிடாதே" என்று புலவரின் காதுபடவே கூறினார்.
வள்ளலின் தமையன் பெயர் கண்ணுக்கினியான். ஆனால் அவர் யாருக்கும்
இனியவராக நடந்துகொண்டதே இல்லை. தமையனின் சொற்களைப் பொருட்
படுத்தாத வள்ளல் திருவேங்கடம் புலவருக்குத் தம் வழக்கப்படியே தாராளமாகப்
பரிசில் கொடுத்துச் சிறப்புச் செய்து அனுப்பிவைத்தார். திரும்பும் பொழுது
புலவர் ஒரு பாடலைத் தமக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தார்:
"தேன்பொழிந்த வாயான் திருவேங் கடத்துடனே
ஏன்பிறந்தான் கண்ணுக் கினியானே--வான்சிறந்த
சீதேவி யாருடனே செய்யதிருப் பாற்கடலில்
மூதேவி ஏன்பிறந்தாள் முன்?"
செம்மையான திருப்பாற்கடலில் மிகவும் சிறப்புடைய சீதேவிக்கு முன்னதாக
மூதேவி பிறந்ததைப் போல, கனிவு மிக்க வள்ளல் திருவேங்கடத்தாருக்கு
முன்னவனாகக் கண்ணுக்கினியான் பிறந்துள்ளான்.
ஒருமுறை புலவர் வழக்கமாகத் துணைக்கு வரும் சிறுவனோடு வெளியூர்
செல்ல நேர்ந்தது. பயணத்தில் களைப்பும் சோர்வும் ஏற்படின் புசித்துப்
பசியாறக் கைவசம் கட்டுச் சோற்று மூட்டையையும் சிறுவனிடம் கொடுத்துக்
கொண்டுவரப் பணித்திருந்தார். வெய்யில் கடுமையாகக் கொளுத்தியதால்
ஒரு பெரிய ஆலமரநிழலில் ஓய்வெடுத்துச் செல்லலாம் என்று நினைத்து
இருவரும் மரத்தடியில் அமர்ந்தனர். அப்பொழுது இதமான தென்றல் வீசியதால்
இருவரும் சற்றே கண்ணயர்ந்து விட்டனர். ஒரு நாழிகை கடந்த பின்னர்
தூக்கம் கலைந்து எழுந்த புலவர் சிறுவனையும் எழுப்பி விட்டுக் "கட்டுச் சோற்று
மூட்டையைப் பிரி; உணவுண்போம் என்றார்". துயிலெழுந்து உட்கார்ந்த சிறுவன்
"ஐயா! கட்டுச் சோற்றை நாய் உண்டுகொண்டிருக்கிறது" என்று அலறினான்.
புலவருக்கும் மிகுந்த மனவேதனை வாட்டியது. தன் வேதனையை ஒரு பாடலில்
கொட்டித் தீர்த்தார்:
"சீராடை யற்ற வைரவன் வாகனம் சேரவந்து
பாராரும் நான்முகன் வாகனம் தன்னைமுன் பற்றிக்கௌவி
நாரா யணனுயர் வாகன மாயிற்று; நம்மைமுகம்
பாரான்மை வாகனன் வந்தே வயிற்றில் பற்றினனே".
பொருள்:
சீராடையற்ற வைரவன் வாகனம்=கீளைத் தவிர(கோவணம்) வேறு நல்ல ஆடையை உடுத்தியிராத பைரவரின் வாகனம் நாயாகும்.
சேரவந்து =நெருங்கி வந்து.
நான்முகன் வாகனம் =அன்னம்(உணவு--இங்கே கட்டுச் சோறு)
நாராயணன் உயர் வாகனம். =பருந்து.
மை வாகனன் -மை=ஆடு; ஆட்டை வாகனமாகக் கொண்ட =நெருப்புக் கடவுள்(அக்னி).
தெளிவுரை:
தாமும் உதவிக்கு வந்த சிறுவனும் கண் அயர்ந்திருந்த நேரத்தில்
பைரவரின் வாகனமான நாய் ஒன்று நெருங்கி வந்து, பிரம்மாவின்
வாகனமான அன்னத்தை(அன்னப் பறவையன்று--உணவு-கட்டுச்சோறு)ப்
பற்றிக் கௌவி நாராயணனின் வாகனமான பருந்தைப் போல விரைவாக
ஓடி மறைந்துவிட்டது. ஆட்டை வாகனமாகக் கொண்ட தீக்கடவுள்
(அக்னி) எம் இருவர் வயிற்றைப் பற்றிக் கொண்டனன். பசி வயிற்றைப்
பிராண்டியது.
No comments:
Post a Comment