தேரோடும் வீதியெலாம் செங்கயலும் சங்கினமும்-நீரோ டுலாவிவரும்
நெல்லை.
மதுரைக்குக் கிழக்கே ஏறத்தாழ முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில்
அமைந்துள்ள சிற்றூர் வேம்பற்றூர்(வேம்பத்தூர்--மக்கள் வழக்கு). சங்க
காலம் முதல் அண்மைக் காலம்வரை தமிழ்ப் புலவர்கள்/கவிஞர்கள்
வாழந்துவந்த சீரூர். வேம்பற்றூர்க் குமரன் என்னும் சங்கப் புலவர்
இவ்வூரைச் சேர்ந்தவர் எனத் தமிழறிஞர்கள் கருதுகின்றனர். சிலேடைப்
புலி என்ற அடைமொழிக்குரிய பிச்சுவையர், வேம்பு ஐயர் முதலான
பிராமண குலத் தமிழறிஞர்கள் வாழ்ந்த ஊர். முறையாகத் தமிழ் இலக்கிய,
இலக்கணங்களைக் கற்றுப் புலமை யடைந்து தமிழ்நாட்டிலுள்ள
வள்ளல்கள், பெருநிலக்கிழார்கள், சமீன்தார்கள், மருது சகோதரர்கள்,
இராமநாதபுரம் சேதுபதிகள் முதலான பிரபுக்களின் முன்பு புலமையையும்
திறமையையும் வெளிப்படுத்திப் பரிசில், நிலக்கொடை போன்றவற்றைப்
பெற்றவர்கள். இவ்வூரைச் சேர்ந்த பெருமாளையர் என்ற தமிழறிஞர்
திருநெல்வேலிக்குச் சென்று அங்குள்ள பெருநிலக்கிழார்களின் ஆதரவைப்
பெற்று நிரந்தரமாகத் தங்கிவிட்டார்.
திருநெல்வேலிப் பிரபுக்கள் தூண்டுதலால் வருக்கக்கோவை என்னும் சிற்றிலக்கியம்
இயற்ற முடிவுசெய்தார். உயிரெழுத்துக்கள், மொழிக்கு முதலாக வரத்தகுதியுள்ள
உயிரமெய்யெழுத்துக்கள் இவைகளில் ஒவ்வொன்றை எடுத்துப் பாடலின் முதலில்
வருமாறு அகப்பொருள் துறைப் பாடலைப் பாடுவது வருக்கக் கோவையாகும்.
எடுத்துக்காட்டாக, மாறன் வருக்கக்கோவை, பாம்பலங்காரர் வருக்கக்கோவை முதலானவை.
நூலை இயற்றி முடித்தவுடன் பெருமாளையர் இதனை அரங்கேற்றம் செய்யத் திட்ட
மிட்டார்.
அதன்படி, திருநெல்வேலியிலுள்ள ஸ்ரீசாலிவாடீசுவரப் பெருமான் சந்நிதியில்
அரங்கேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழன்பர்கள் குழுமியிருந்தனர்.
பெருமாளையரின் மாணவர்களில் ஒருவர் நூலின் முதற் பாடலான காப்புச்
செய்யுளைப் படித்து முடித்தார். பாடல் பின்வருமாறு:
"தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும்
நீரோ(டு) உலாவிவரும் நெல்லையே!---காரோடும்
கந்தரத்தர் அந்தரத்தர்; கந்தரத்தர் அந்தரத்தர்;
கந்தரத்தர் அந்தரத்தர் காப்பு".
மாணவர் படித்தவுடன் கூட்டத்திலிருந்த அரைகுறைத் தமிழறிவு கொண்ட ஒருவர்
எழுந்து "தேரோடும் வீதியிலே செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும்
நெல்லை எனப் பாடப்பட்டுள்ளது. தேரோடும் வீதியில் அவ்வாறு நடைபெறுகிறதா?"
என்று ஐயம் எழுப்பினார். மாணவர் அருகில் அமர்ந்திருந்த நூலாசிரியர் பெருமாளையர்
திகைத்துப் போனார். தமது பாடலில் குறை காணும் தகுதியுள்ள புலவர் திருநெல்வேலியில்
இல்லை என்று நம்பினவர் மனக்கிலேசத்துடன் மௌனமாய் அமர்ந்திருந்தார்.
மேடையில் வீற்றிருந்த அறிஞர்கள் யாரும் எதுவும் சொல்லத் தோன்றாமல்
அமைதியாய் இருந்தனர். உரைநடை வேறு; கவிதை வேறு. உரைநடையில்
சொல்லப்பட்ட செய்திகளுக்கு நேரடியாகச் சொல்லப்பட்ட வரிசை முறையிலேயே
பொருள் கூறிடலாம். ஆனால் கவிதை அப்படிப்பட்டது அன்று. அதற்கு, எதுகை,மோனை,
சீர், தளை, அடி, தொடை, அணி முதலான கூறுகள் உண்டு. அவைகளுக்கும் கட்டுப்பட்டே
கவிதையை இயற்ற முடியும். பொருள் கொள்ளும் முறைக்கும் இலக்கணம் உண்டு.
தொல்காப்பியம் நான்கு விதமான பொருள் கொள்ளும் முறைகளை விவரிக்கிறது.
நன்னூல் எட்டுவிதமான முறைகளைக் கூறுகிறது. " சுரை ஆழ, அம்மி மிதப்ப" என்ற
சொற்றொடரில் அப்படியே படித்துப் பொருள்கொண்டால் மிகத் தவறாகும். மிதக்கும்
தன்மையையுடைய சுரையை நீரில் மூழ்கும் என்று பொருள்கொள்வது நகைப்புக்கிடமாகும்.
அதுபோலவே, அம்மி மிதப்ப என்ற சொற்றொடரும் தவறாக மாறும். நாம் இந்தச்
சொற்களை மாற்றியமைத்துக் கொண்டு பொருள் கொள்ளவேண்டும். அதாவது,
"சுரை மிதப்ப, அம்மி ஆழ" என்று மாற்றிப் பொருள் கொள்ளவேண்டும். இதுபோன்ற
விதிவிலக்குகள், சலுகைகள் கவிதை படைப்பவர்களுக்கு உள்ளன.. மேலே கண்ட
காப்புச் செய்யுளிலும் "தேரோடும் வீதியெலாம்" என்பதோடு நிறுத்திப் பொருள்
கொள்ளல் வேண்டும். "செங்கயலும் சங்கினமும் நீரோடு உலாவிவரும் நெல்லை"
என்று படித்துப் பொருள் கொள்ளவேண்டும். அதாவது, வீதியெல்லாம் தேரோடுகிறது;
தாமிரபரணி ஆற்று நீரிலே செங்கயலும் சங்கினமும் உலாவி வருகின்றன. இப்படியாகத்
தனித்தனியாகப் படித்துப் பார்த்தால் எப் பிழையும் வர வாய்ப்பில்லை. ஐயம்
எழுப்பியவர் தமிழிலக்கணம் முழுமையாகப் படித்திருந்தால் இந்த ஐயம் தோன்றியிராது.
அவர் கிளப்பிய ஐயத்தால் மனமுடைந்து போன நூலாசிரியர் பெருமாளையர்
அரங்கேற்ற நிகழ்வைத் தள்ளி வைத்துவிட்டார். நூல் அரங்கேற்றம் செய்யப்படவில்லை.
ஆண்டுகள் உருண்டோடின. பெருமாளையருக்கு ஒரு தவப்புதல்வன் பிறந்தான் அவன்
தகப்பனாரைப்போலவே தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்து பெரும்
புலமையடைந்தான். ஒருநாள் தகப்பனார் எழுதிய வருக்கக் கோவை நூலைப் பரணிலே
கண்டு தன் தாயாரிடத்திலே நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் கேட்டறிந்தான்.
தானே இந்நூலை அரங்கேற்றம் செய்து தகப்பனார்க்கு நேர்ந்த இழி சொல்லைத்
துடைத்தெறிய முடிவெடுத்தான். அதன்படி ஸ்ரீஅனவரத நாயகர் சந்நிதியில் அரங்கேற்றம்
ஏற்பாடு செய்யப்பட்டது. காப்புச் செய்யுளை ஒரு மாணவர் மூலமாகப் படிக்கச்செய்து
முதல் இரண்டு அடிகளில் யாதொரு பிழையும் இல்லை என்று நிறுவினான். பின்
இரண்டு அடிகளில் பயின்று வரும் மடக்கு(யமகம்)எனப்படும் சொல் அலங்காரத்தை
விளக்கலானான்:
காரோடும்=கருநிறம் பரவிய(அமுதம் பெறக் கடலைக் கடைந்த பொழுது எழுந்த ஆலகால
நஞ்சை உண்டதால் கழுத்தில் கருநிறம் பரவியது).
கந்தரத்தர்=கந்தரம்=கழுத்து(நீல கண்டர்)-கறுத்த கழுத்தையுடையவர்.
அந்தரத்தர்=அந்தரம்= ஆகாயம்; ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவர்.
கந்து+அரத்தர்=கந்து=பற்றுக் கோடு=பற்றுக்கோடாகிய செம்மைநிறமுடையவர்.
அந்தரத்தர்= அம்+தரத்தர்=அம்=நீர்= திருமுடியில் நீரைத் தாங்கியவர்(நீர்=கங்கை);
கந்தரத்தர்=கந்தர்+அத்தர்=முருகக் கடவுளின் தந்தையானவர்.
அந்தரத்தர்=அம்+தரத்தர்= அழகிய தகுதியை உடையவர்.
முழுப் பாடலின் பொருள்:
நெல்லையில் வீதியெலாம் தேரோடும்; தாமிரவருணி யாற்று நீரினிலே செங்கயலும்
சங்கினமும் உலாவிவரும். அந்த நெல்லைப் பதியில் கருநிறம் பரவிய கழுத்தை
உடையவரும், ஞான ஆகாயத்தையே மேனியாக உடையவரும், பற்றுக் கோடாகிய
செம்மை நிறமுடையவரும், திருமுடியில் கங்கையைத் தாங்கியவரும், முருகக்
கடவுளின் தந்தையானவரும், அழகிய தகுதியை உடையவருமான சிவபெருமான்
காவல் புரிந்து வீற்றிருக்கின்றார். அவர் நமக்குக் காப்பாக விளங்குகிறார்.
பார்வை: "நான் கண்டதும் கேட்டதும்"
நூலாசிரியர்: டாக்டர் உ.வே.சா.
No comments:
Post a Comment