சர்க்கரை தொண்டைமட்டும்; சவ்வாது கண்ட மட்டும்.
இராமநாதபுரத்தைப் பொதுயுகம்(கி.பி.) 1645 முதல் 1670 வரை அரசாட்சி
செய்துவந்த ரகுநாத சேதுபதி என்ற திருமலைச் சேதுபதி அரசவையில்
சர்க்கரைப் புலவர், அமுதகவிராயர், சவ்வாதுப் புலவர் என்ற மூன்று பெரும்
புலவர்கள் வீற்றிருந்து தமிழ்ப்பணி புரிந்து வந்தனர். அமுத கவிராயர்
ரகுநாத சேதுபதி மீது 'நாணிக்கண் புதைத்தல்' என்ற துறையில் நானூறு
பாடல்களால் ஒரு சிற்றிலக்கியத்தை இயற்றினார்.அமுத கவிராயருக்குத்
தக்க சன்மானம் வழங்கப்பட்டது. சர்க்கரைப் புலவர் திருவாவடுதுறை ஆதீனத்தின்
சின்னப் பட்டத்தில் மிகுந்த தமிழ்ப் புலமையுடன் தொண்டாற்றி வந்த சிவக்
கொழுந்து தேசிகரிடம் முறையாக இலக்கிய, இலக்கணங்களைக் கற்று மிகுந்த
தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு
கம்பராமாயணச் சொற்பொழிவாற்றுவதில் நிபுணராகத் திகழ்ந்தார். இஸ்லாமியரான
சவ்வாதுப் புலவரும் பெரும் புலவரே.
சர்க்கரைப் புலவர் இராமநாதபுர அரண்மனையில் நாடோறும் கம்பராமாயணத்தை
ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் விரித்துரைப்பது வழக்கம். அவர் நிகழ்த்தும்
சொற்பொழிவைச் சேதுபதி மன்னர் மிகவும் இரசித்துக் கேட்டு மகிழ்ந்தார். இடையிடையே
சேதுபதி மீது பாடல்கள் புனைந்து பாடிக் காட்டும் வழக்கத்தையும் கைக்கொண்டிருந்தார்.
அதனால் சேதுபதி மன்னர் சர்க்கரைப் புலவரிடம் " உங்கள் சொற்பொழிவும் பாடல்களும்
சர்க்கரையைப் போல இனிக்கின்றன" என்று பாராட்டுவது அன்றாடம் நடைபெறும்
நிகழ்வு. உடனிருக்கும் சவ்வாதுப் புலவருக்கு எரிச்சல் ஏற்படும். ஒருநாள் வழக்கம்போல
இராமாயணச் சொற்பொழிவு முடிந்த பிற்பாடு வழக்கம்போலவே மன்னர் சர்க்கரைப்
புலவரிடம் "உங்கள் பேச்சுத்திறன் சர்க்கரை போல் இனித்தது" என்றார். உடனே,
அருகிலிருந்த சவ்வாதுப் புலவர் அடக்க மாட்டாத பொறாமை வெளிப்பட" சர்க்கரை
தொண்டை மட்டும்" என்று கூறினார். அவரது பொறாமை உணர்வை அறிந்துகொண்ட
சர்க்கரைப் புலவர் சற்றும் தாமதிக்காமல்" சவ்வாதோ?" என்று முழங்கினார். உடனே,
சவ்வாதுப் புலவர்"சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்" என்று
விடையளித்தார். அதாவது சர்க்கரை மென்று சுவைக்கும் வரை இனிக்கும்; சர்க்கரையை
விழுங்கிய பிறகு இனிப்புச் சுவை மறைந்துவிடும். அதாவது, நெடுநேரம் இரசிப்பதற்கு
அதில் வாய்ப்பில்லை. சொற்ப நேர சுகமே கிட்டும். ஆனால், சவ்வாதோ, கண்பார்வையில்
படும் போதெல்லாம் மனத்துக்கு இனிமை தரும். நீண்ட நேர சுகம் கிட்டும். இவ்வாறு,
அழுக்காறு(பொறாமை) கொண்ட சவ்வாதுப் புலவரின் கூற்றுக்குச் சர்க்கரைப் புலவர்
சரியான பதிலடி கொடுத்தார். "கண்ட மட்டும்" என்ற சொற்றொடரைக்"கண்டம் மட்டும்"
என்று பிரிக்கலாம். அவ்வாறு பிரித்துப் பொருள்கொண்டால், அதுவும்"தொண்டை மட்டும்"
என்ற பொருளையே தரும். எனவே, சர்க்கரையும் சவ்வாதும் சமமே என்று முடித்தார்.
அவர்களின் விவாதத்தைத் கேட்டுக் கொண்டிருந்த சேதுபதி மன்னர்"சர்க்கரைப் புலவரும்
சவ்வாதுப் புலவரும் சம அளவில் புலமையும், திறமையும் உடையவர்கள்" என்று தீர்ப்புக்
கூறினார்.கண்டம்=கழுத்து(வடமொழிச் சொல்).
அன்றாடம் நிகழ்ந்து வந்த இராமாயணச் சொற்பொழிவில் அன்று 'அனுமன் கடல்தாவு
படலம்' விவரிக்கப்படல் வேண்டும். சர்க்கரைப் புலவர் தமது திறமையை யெல்லாம்
ஒருங்கிணைத்துக் கடல்தாவு படலத்தை வருணித்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சுத்
திறமையால் சேதுபதி மன்னர் இராமாயணக் கதையோடு ஒன்றிப் போனார்."அனுமன்
எவ்வாறு கடலைத் தாவினார்?" என்று வினவினார். ஏற்கெனவே கதையோடு ஒன்றிப்
போயிருந்த சர்க்கரைப் புலவர் தம் இருக்கையிலிருந்து ஒரே தாவாகத் தாவி மன்னர்
வீற்றிருந்த இருக்கையில் வந்தமர்ந்தார். தாவும் பொழுதே" இதோ இப்படித்தான் அனுமன்
தாவினார்" என்று கூறினார். சர்க்கரைப் புலவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தாவியதைப்
பார்த்த சேதுபதி மன்னர் தம் இருக்கையிலிருந்து எழுந்து வேறொரு இருக்கையில்
அமர்ந்துகொண்டார். சொற்பொழிவு நிகழ்ந்த அரங்கம் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பல வண்ண நெட்டிமாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சர்க்கரைப் புலவர் தாவிய
வேகத்தில் நெட்டி மாலை அறுந்து அவர் கழுத்தில் விழுந்தது. அதனைக் கவனித்த
சேதுபதி மன்னர்" அனுமன் உமக்கு அளித்த பரிசாகும் இது" என்று கூறினார். இதனால்
சர்க்கரைப் புலவர் 'நெட்டிமாலைக் கவிராயர்' என்றும், 'நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர்
என்றும் அழைக்கப்பட்டார். சர்க்கரைப் புலவருக்கும் ' நெட்டிமாலைக் கவிராயர்,' என்னும்
பட்டம் மிகவும் பிடித்துப் போயிற்று. தாம் விடுக்கும் சீட்டுக் கவிகளில் இதனைக் குறிப்பிடு
வது வழக்கமாயிற்று:
"வந்த ஜய பாரத இராமாயணத்திலே வாடாத நெட்டிமாலை
மருவிட்ட திருவிட்டு வழுவாது நழுவாது வாசாம கோசரமதாய்ச்
சிந்தைமிக வேசற்றும் மலையாது சபையிலே செய்யும்பிர சங்க நிபுணன்
சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக் கவிராச சிங்கம்யாம் எழுதும் நிருபம்".
பார்வை: "முந்நீர் விழா" -நூலாசிரியர் வாகீச .கலாநிதி கி. வா. ஜகந்நாதன்.
No comments:
Post a Comment