Tuesday, 4 December 2018

நற்றமிழ் பேசாத நாவென்ன நாவே!

நற்றமிழ்  பேசாத  நாவென்ன  நாவே!

கொற்றவராம்  பாண்டியரும்  சோழர்களும்  சேரர்களும்
கற்றவர்தொல்  காப்பியரும்  கம்பரும்  வள்ளுவரும்
மற்றைப்  புலவர்களும்  வாழ்த்தி  வளர்த்தமொழி;
நற்றமிழ்  பேசாத  நாவென்ன  நாவே,
நயமாய்த்  தமிழ்பேசா  நாவென்ன  நாவே!

பன்னெடுங்  காலம்  பயன்பாட்டில்  உள்ளவற்றில்
தன்னெதிர்  இல்லாத்  தமிழ்நற்  சிறப்புடைத்து;
முன்னைப்  பழமையும்  பின்னைப்  புதுமையும்சேர்
கன்னித்  தமிழ்கல்லாக்  கண்ணென்ன  கண்ணே,
கவின்தமிழ்  கல்லாத  கண்ணென்ன  கண்ணே!

மாந்தர்கள்  பேசும்  வளஞ்சேர்  மொழிகளிலே
ஏந்துபுகழ்ச்  செம்மொழிகள்  ஏழினுள்  ஒன்றான
ஆய்ந்தறிஞர்  போற்றும்  அரிய  மொழியான
தீந்தமிழ்  கேளாச்  செவியென்  செவியே,
        செழுந்தமிழ்  கேளாச்  செவியென்  செவியே!
(செவியென்ன  என்னும் வார்த்தையில் 'ன' மறைந்தது
கடைக்குறை விகாரம்)

வெல்லும்  மீனக்  கொடிதாங்கி
        விரிந்து  பரந்த  குமரியெனும்
        மேன்மைக்  கண்டம்  தனையாண்ட
        வீரம்  மிக்க  பாண்டியர்கள்
அல்லும்  பகலும்  தமிழ்ப்பணிக்காய்
         அயரா(து)  உழைத்துத்  தமிழ்ச்சங்கம்
          அமைக்கப்,  புலவர்  அகத்தியரும்
           ஆன்றோர்  தொல்காப்  பியனாரும்
சொல்லும்  பொருளும்  வளம்பெறவே
           துருவி  ஆய்ந்து  பாடினரே;
           தொடர்ந்து  மற்றைப்  புலவர்களும்
           தூய   நெறிகள்  வகுத்தனரே;
கொல்லும்  கடலால்  தென்மதுரை
           கபாட  புரங்கள்  மூழ்கியதால்
           குமரி  யென்னும்  பெருங்கண்டம்
            கொள்ளை  போன(து) ஐயகோ!


குமரிக்  கண்டம்  மறைந்தாலும்
        .  குலையோம்,  தளரோம்;  நெஞ்சுறுதி
            கொண்டு  நம்தாய்  மொழியினையே
            கொலுவீற்  றிருக்கச்  செய்திடுவோம்;
இமயம்  போன்ற  பெருமுயற்சி
            இயற்றி  எல்லாத்  துறைகளிலும்
             எழிலார்  தமிழிற்  பலநூல்கள்
             எழுதிக்  குவித்தல்  அவசியமே;
நுமது  மொழியிற்  பேசிடுவீர்;
            நுமது  மொழியில்  எழுதிடுவீர்;
             நுமது  மொழியிற்  கற்றிடுவீர்;
             நுமது  மொழியிற்  கற்பிப்பீர்;
சமமாய்  ஏனை  மொழியோடு
            தமிழும்  போட்டி  போடும்வகை
            சகல  அறிவுத்  தளங்களிலும்
            தயக்க  மின்றி  வளர்ப்போமே!


வையத்(து)  இலங்கும்  மொழிகளிலே
           வளமும்  பொருளும்  சேர்ந்தமொழி;
           மக்கள்  நாவில்  நடமாடும்
       .   மனத்தை  மயக்கும்  இனியமொழி;
ஐயம்,  திரிபுக்(கு)  இடமின்றி
        .  ஆழ்ந்த  அர்த்தம்  கொண்டமொழி;
            ஆட்டிப்  படைக்கும்  இலக்கணநூல்
             அழகாய்  அமையப்  பெற்றமொழி;
தெய்வம்  தொழுதற்(கு)  ஏற்றமொழி;
             செவிகட்  கினிய  இசையின்மொழி;
              செழிப்பாய்  வேர்ச்சொல்  செறிந்தமொழி;
              சிறந்த  மேடைப்  பேச்சுமொழி;
உய்யும்  கலைகள்  அனைத்தையுமே
             உருவாக்  கிடும்நற்  செம்மொழியாம்;
             உலகம்  போற்றும் அரியமொழி;
              ஒளிரும்  தமிழே  வாழியவே!

   

2 comments:

  1. 'நற்றமிழ பேசாத நாவென்ன நாவே' - ஆழகு தமிழில், கவித்துவமும் கருத்தும் மிகுந்த நல்லதொரு பாடல். ஆசிாியாின் தமிழ்ப் பற்று வெளிப்படையாகத் தொிகின்றது.நல்ல தமிழ்ப்பேச்சு அருகி வரும் இந்நாட்களில் இப்பாடல் மிகவும் வரவேற்கத் தக்கது.பழந் தமிழ் மீண்டு(ம்) வருமா?

    ReplyDelete