Wednesday, 31 December 2025

மயூரகிரிக் கோவை.

 மயூரகிரிக் கோவை.


மயூரகிரி என்னும் பெயர் மயில்மலையாகிய குன்றக்குடியைக்

குறிக்கும். இந்த நூலை இயற்றியவர் சாந்துப் புலவர் ஆவார்.

இவர் குழந்தைக் கவிராயர் என்றும் வாலகவீசுவரர் என்றும்

அழைக்கப்பட்டார். இவர் மருதுபாண்டியருக்குப் பிடித்தமான

புலவர். பெரிய மருதுபாண்டியருக்குக் கொடிய நோயான

இராஜப் பிளவை வந்து மிகுந்த தொல்லை கொடுத்தபொழுது

குன்றக்குடி முருகனைக் குலதெய்வமாக வழிபடும் மெய்யன்பர்

திருநீறிட்டுக் குணமாக்கியதால் முருகனைப் போற்ற  எண்ணிய

மருது பாண்டியர் கேட்டுக்கொணடதனால் சாந்துப் புலவர் இந்த

மயூரகிரிக் கோவை பாடியதாக வரலாறு பேசுகிறது.


இராமநாதபுரம் சமஸ்தானப் புலவராக விளங்கியவர் சிறுகம்பையூரில்

வாழ்ந்த சர்க்கரைப்பலவர். இவர் நெட்டிமாலைக் கவிராயர் என

அழைக்கப்பட்ட ஆதி சர்க்கரைப்புலவர் வழித்தோன்றல். இந்தப் புலவர்

வழியில் பலர் சர்க்கரைப்புலவர் என்ற பெயரைத் தாங்கி வாழ்ந்தனர்.

கி. பி. 1645இல் இராமநாதபுரத்தை ஆட்சிசெய்த இரகுநாத சேதுபதி

என்ற திருமலைச் சேதுபதி காலம் முதல் இராமநாதபுர சமஸ்தானத்தில்

அரசவைப்புலவர்களாகத் தொண்டு புரிந்துவந்துள்ளனர். 


சிறுகம்பையூர்ச் சர்க்கரைப்புலவர், மருதுபாண்டியர்கள் சேதுவுக்குச்

செல்லும் வழியிலமைந்துள்ள கலியநகரிக்குச் சில அறப்பணிகளுக்காக

வரப் போவதாக அறிந்து மரியாதை நிமித்தமாக அவர்களைச் சந்திக்க

எண்ணினார். பெரியவர்களைப் பார்க்கும் பொழுது அவர்களுக்குக்

கையுறை வழங்கி வணங்குவது மரபு. கையுறையாகச் சித்திரகவி

எழுதிய ஏட்டை வழங்க முடிவுசெய்து அதன்படியே அட்டநாகபந்தம்

என்ற அமைப்பில் ஒரு கவிதையை இயற்றி யதனை ஏட்டில் வரைந்து

ஆயத்தப்படுத்தினார். (சித்திர கவி என்பது ஒரு சித்திரம் வரைந்து

சிறுசிறு கட்டங்களை உருவாக்கி அக்கட்டங்களுக்குள் கவிதையை,

ஒரு கட்டத்துக்கு ஒரு எழுத்து என்ற முறையில் நிரப்புவதாகும். சித்திரம்

தேர், முரசு, வேல், நாகம், தேள், மயில் போன்ற ஏதாவது ஒரு வடிவத்தில்

எழுதப்படும். இதில் என்ன வியப்பு என்றால் கவிதை 70 எழுத்துகளைக்

கொண்டிருந்தால் சித்திரத்தில் நிரப்பப்படும் பொழுது 63 எழுத்துகளிலேயே

கவிதை முடிந்துவிடும். ஏனென்றால் ஒருவரியிலுள்ள எழுத்துகள் ஏற்கெனவே

வேறு வரிகளில் வருவதனால் அந்த வரி எழுத்துகள் மிச்சமாகும். இந்த

வகைக் கவிதை இயற்ற மிகவும் கடினமானது. சொல்லப்போனால் சித்திர

கவி இயற்றும் புலவர்கள் மிக மிகச் சிலரே. இடையில் சில நூற்றாணடுகள்

மிகவும் போற்றப்பட்ட சித்திரகவிதை தற்போது வழக்கிழந்து காணப்படுகிறது.)

சர்க்கரைப் புலவர் ஒரு ஏட்டில் அட்டநாகபந்தம் வரைந்து அக்கட்டங்களில் தமது

கவிதையை நிரப்பி அழகிய சித்திரகவிதையாக உருவாக்கிவிட்டுப் பூசை

அறையில் பாதுகாப்பாக வைத்துவிட்டுக் கிளம்ப ஆயத்தமானார். மருதுபாண்டியரைப்

பார்க்கச் செல்வதால் பட்டு வேட்டி, துண்டு முதலிய ஆடம்பரமான உடைகளை அணிந்து

கொண்டு கையில் கவிதை ஏட்டை எடுத்துக்கொண்டு மன்னர் தங்கியிருக்கும் இடத்துக்குப்

புறப்பட்டார்.


கலியநகரி ஊரையடைந்த புலவர் மருதுபாண்டியர் தங்கியுள்ள இடத்துக்குச் சென்று 

அவரை முறைப்படி வணங்கியபின்னர் தம் கையிலிருந்த சித்திரகவிதை ஏட்டை அவரிடம்

வழங்கினார். தம் கவிதையை மருதரசர் முன் பாடி அதன் பொருளை விளக்கினார்.

மருதுபாண்டியர் ஏட்டை வாங்கிக் கவிதையை வாசித்து மகிழ்ந்தார். அப்பொழுது அந்த

ஏட்டிற்குள் மற்றொரு ஏடு இருப்பதைக் கவனித்தார். அந்த ஏட்டிலும் அட்டநாகபந்தச்

சித்திரக்கவிதை எழுதப்பட்டிருந்தது. உடனே, மருதுபாண்டியர் புலவரை நோக்கி

"என்ன புலவரே, நீர் பாடிய கவிதை யல்லாத வேறொரு கவிதை தென்படுகிறதே,

பாம்புகள் குட்டி போட்டுவிட்டனவா?" என்று வினவினார். திகைத்துப் போன புலவர்

ஏட்டை வாங்கிப் பார்த்துவிட்டு"இது குழந்தையின் கவிதையாக இருக்கும்" என்றார்.

உடனே மருதரசர்"யார் குழந்தை? எங்கே இருக்கிறார்? " என்று வினவினார். புலவர்

உடனே"என் மகன்தான் அவன். வயது பதினாறு ஆகிறது. எனினும், குழந்தை என்று

அன்பால் அழைக்கிறோம்" என நவின்றார். மருதரசர்"நான் உடனடியாக அக்குழந்தையைப்

பார்க்கவேண்டும். சிவிகையைத் தங்கள் இல்லத்துக்கு அனுப்பிவைக்கட்டுமா? "

எனக் கூறினார். திகைப்படைந்த புலவர் மருதரசர் கோரிக்கையைப் புறந்தள்ள

இயலாமல் சம்மதம் தெரிவித்தார். சிவிகை அனுப்பப்பட, குழந்தைக் கவிராயர்

அரசர்முன் வந்து நின்றார். "இந்தச் சித்திரகவிதையை இயற்றியது யார்? நீரே இயற்றி

யிருப்பின் பொருள் கூறுக" என்று மருதரசர் இயம்பினார். "இந்தச் சித்திர கவிதையை

இயற்றியவன் யானே.," எனச்சொன்ன குழந்தைக் கவிராயர் அக்கவிதையின் பொருளை

விளக்கினார். அவரின் தமிழ்ப்புலமையை அறிந்த மருதரசர்"உம் புலமையை அறிந்து

பெருமகிழ்வடைகிறோம். நீர் இனிமேல் சாந்துப் புலவர் என அழைக்கப்படுவீர். " என

உரைத்தார். சர்க்கரைப் புலவரை நோக்கி"இனி உம் குழந்தைக் கவிராயர் இந்த

அரண்மனையிலேயே வளர்வார். நீரோ உமது மனைவியாரோ சாந்துப் புலவரைப்

பார்க்க விரும்பினால் சிவிகை ஏற்பாடு செய்யப்படும். அதில் வந்து பார்த்துச் செல்க.

மேற்கொண்டு இலக்கிய, இலக்கணம் கற்க விரும்பினால் வெண்பாப்புலிப்புலவர்,

முத்து மாரியப்பேந்திரக் கவிராயர், வால சரசுவதி முத்துவேலுக் கவிராசர் போன்ற

தமிழ்ப் புலவர்களிடம் கல்விகற்க ஏற்பாடு செய்வோம். நீவிர் யாதொரு கவலையும்

கொளளவேண்டா. " என்று மருதுபாண்டியர் இயம்பினார். மன்னர்

சொல்லை மறுத்துப் பேச முடியுமா? புலவர் குழந்தைக் கவிராயரை அங்கேயே

விட்டுச் சென்றர். அதுமுதல் குழந்தைக் கவிராயர் அரண்மனைக் கவிராயர் ஆனார்.

மருதுபாண்டியரின் கவசம் போல இருந்து அரசவைச் செயல்பாடுகளை நிர்வகித்து

வந்தார். அவர்புகழ் நாளும் வளர்ந்தது. இராஜ விசுவாசத்தை வெளிப்படுத்திய

சாந்துப் புலவர் மன்னராலும் மக்களாலும் மதிக்கப்பட்டார்.


இடையில், பெரிய மருதுபாண்டியருக்குக் கொடிய இராஜப்பிளவை நோய்வந்து

சொல்லொணாத் துயருற்றார். அப்பொழுது ஒரு முதியவர் "குன்றக்குடி முருகனைக்

குலதெய்வமாக வழிபடும் மெய்யன்பர் எவரேனும் திருநீறிட்டால் நோய் குணமாகும்"

என்றொரு ஆலோசனை கூறினார். அதன்படி, குனறக்குடி மதுரநாதரைக் குலதெய்வ

மாக வழிபடும் ஆத்தன்குடி நகரத்தார் மரபைச் சார்ந்த காடன்செட்டியார் திருநீறு

பூச நோய் தீர்ந்தது. அன்றிலிருந்து மருதுபாண்டியர் குன்றக்குடி முருகனுக்குத்

தீவிர மெய்யன்பர் ஆயினார். மருதுபாண்டியர் சாந்துப் புலவரிடம் குன்றக்குடி

முருகன்மீது நூல் ஏதேனும் பாடுக என்று பணித்தனர். அதன்படி சாந்துப் புலவர்

மயூரகிரிக் கோவை பாடினார். நூல் ஐந்நூற்று முப்பத்தாறு கட்டளைக் கலித்துறைப்

பாடல்களைக் கொண்டது. மயூரகிரிக் கோவையின் சிறப்புப் பாயிரச் செய்யுள் கூறியது:

"செந்திரு மார்பன் மருதுந ராதிபன் செப்புகென்ன

மைந்தர்செல் வத்தொடு மாஞானம் வேண்டி மயூரகிரிப்

பைந்தமிழ்க் கோவையைப் பாடினன் சர்க்கரைப் பாலனெங்கள்

இந்திரன் சாந்து மகிபாலன் வாலைக வீச்சுரனே".

இந்த நூலைப் பதிப்பித்தவர் அவர்வழிவந்த சர்க்கரை இராமசாமிப் புலவர் ஆவார்.

இந்நூலுக்குச் சன்மானமாக ஆடையும், பொன்னும், 'புலவன் மருதங்குடி' கிராமத்தையும்

வழங்கினார் மருதரசர். இப்படியெல்லாம் மருதுபாண்டியரோடு மிக நெருக்கமாகத்

தொண்டாற்றிய சாந்துப்புலவர் மனம் நொந்துபோகும்படி மருதுபாண்டியரும் வாரிசு

தாரர்களும் வெள்ளையரால் கொடுமைப் படுத்தப்பட்டபோதும், வீர மரணத்துக்கு

உள்ளாக்கப்பட்ட போதும்  சாந்துப்புலவர் சொல்லொணா மனத்துயருக்கு ஆளானார்.

சொந்த ஊரான சிறுகம்பையூருக்குச் சென்று வாழ்வை நடத்திய போதும் மனத்துயரம்

எல்லை மீறிப் போய் ஒரு வாரத்தில் உயிர்நீத்தார். சங்க காலத்தில் வாழ்ந்த கோப்பெருஞ்

சோழன்-பிசிராந்தையார், பாரி-கபிலர் நட்புப் போல மருதரசர்-சாந்துப்புலவர் நட்பு

விளங்கியது எனறால் மிகையில்லை.

பார்வை:

மயூரகிரிக் கோவை நூல்-பதிப்பாசிரியர் சர்க்கரை இராமசாமி.

Tuesday, 16 December 2025

குமரிக்குள் கன்னியாகுமரியல்லால் மற்றில்லைப் பெண் குமரி தானே!ரிறில்லை

 குமரிக்குள் கன்னியா குமரியல்லால் மற்றிலைப்பெண் குமரி தானே!


பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இராமநாதபுரம் பகுதிக்குச்

சேதுபதியாக இருந்தவர் முத்துராமலிங்க சேதுபதி. மந்திரியாக இருந்

தவர் முத்திருளப்ப பிள்ளை என்னும் மதியூகி.  ஒருமுறை  புலவர் ஒருவர்

முத்திருளப்பருக்குச் சீட்டுக்கவி ஒன்றை எழுதியனுப்பினார். அதில் ஓர்

உதவி கோரியிருந்தார். நாட்கள் கடந்தன, ஆனால் புலவரின் கோரிக்கை

நிறைவேறவில்லை. சீட்டுக்கவி கிடைத்ததா? அல்லவா? என்ற விவரமும்

அறிய இயலவில்லை. நினைவூட்டுக் கடிதம் எழுதலாம் என்ற எண்ணத்தில்

மீண்டும் ஒரு கவிதையை இயற்றி அனுப்பிவைத்தார்:

"உறுக்குமதி வேந்தருக்கும் கள்வருக்கும்

         நீதிதப்பி  ஒளிக்கின்  றோர்க்கும்

கிறுக்குவரச் செயுந்துரையே, பாவாணர்

         ஓலையினும்  கிறுக்குண்  டாமோ?

பொறுக்குமர சுரிமைமுத்து ராமலிங்க

          சேதுபதி  பூமி  யெல்லாம்

நிறுக்குமதி மந்திரிமுத் திருளப்பா,

           அருளப்பா  நிருபம் தானே!

பொருள்:

குடிமக்களை அச்சுறுத்தும் பகைவேந்தருக்கும் கள்வருக்கும் நீதிக்கு எதிராக

அறந்தவறிய செயல் செய்து ஓடி ஒளிபவர்க்கும் நியாயமான நடவடிக்கை

மூலமாகக் கிறுக்குவரச் செய்யும் அமைச்சர் அவர்களே! யான் அனுப்பியிருந்த

சீட்டுக்கவியில் கிறுக்குத்தனமாக ஏதாவது எழுதியிருந்தேனா? பாவணர்

எழுதியனுப்பும் சீட்டுக்கவியில் கிறுக்குவர வாய்ப்பில்லை. தப்பித் தவறி

ஏதாவது எழுதியிருப்பினும் பொறுத்துக்கொள்ளும் அரசர் முத்துராமலிங்க

சேதுபதி அவர்களும், இந்தப் பகுதியெல்லம் அவர் புகழை நிலைக்கச்செய்

யும் அமைச்சரும் இருக்கையில் கவலைப்பட ஏதுமில்லை. என் சீட்டுக்கவிக்கு பதில்கடிதம்

அனுப்புக(என் கோரிக்கையை நிறைவேற்றுக). நிருபம்=கடிதம்.


ஒருமுறை ஏழைப்பெண்கள் சிலர் அமைச்சரைச் சந்தித்து"ஐயா, நாங்கள் மிக்க

ஏழ்மைநிலையில் வாழ்கிறோம். எங்கள் பெண்களுக்குத் திருமணம் செய்வித்து

அவர்களை வாழவைக்க வழியின்றித் தவிக்கிறோம். அரசு இதுதொடர்பாக உதவி

செய்தல் வேண்டும்" என்று கோரினர். முத்திருளப்பர் சேதுபதி யவர்களோடு இது

தொடர்பாகக் கலந்து ஆலோசித்துத் தம் இராமநாதபுரப் பகுதியில் வாழ்ந்துவரும்

ஏழைப் பெண்களுக்குத் திருமணம் செய்விக்க முடிவெடுத்தனர். திருமணம் நல்ல

முறையில் நடைபெற்றதைக் கண்டு மகிழ்ந்த குடிமக்கள் அரசை வாழ்த்தினர்.

புலவர் ஒருவர் புகழ்மாலை சூட்டினார்:

"அமரிக்கை யாளன்முத்து ராமலிங்க

        சேதுபதி  அவனிக்  கெல்லாம்

சுமுகப்ர தாபனெங்கள் முத்திருளப்

        பேந்திரனார்  துலங்கும் நாளில்

சமருக்கென் றெதிர்மன்னர் தரையிலிலை,

         மதனொருவன் தவிர, மின்னார்

குமரிக்குள் கன்னியா குமரியல்லால்

          மற்றிலைப்பெண்  குமரி தானே!

பொருள்: 

அமைதியை விரும்பும் முத்துராமலிங்க சேதுபதி மன்னரும் அமைச்சர் முத்திருளப்பரும்

போரை விலக்கி அமைதி நிலவச் செய்கின்றனர். அதனால் போர்புரிய நினைப்பவர்

எவரும் இல்லை. மன்மதன் மட்டும் கரும்பு வில்லில் பூங்கணைகளைத் தொடுததுப்

போர்புரிகின்றான்(இது இயற்கை நிகழ்ச்சிதான்). இந்த இராமநாதபுரப் பகுதியில்

குமரிகளே யாரும் இல்லை. அனைத்துக் குமரிகளுக்கும் திருமணம் நடைபெற்று

மணமக்கள் மன்மதனுடன் போர்புரிகின்றனர். அருகில் ஒரே ஒரு குமரிதான் இருக்

கின்றாள். அவள் அகிலத்தை ஆளும் கன்னியாகுமரி. அவளுக்குத் திருமணம்

செய்விக்க மனிதர்கள் எவராலும் இயலவே இயலாது.


இராமேசுவர ஆலயத்தில் உலகப் புகழ்பெற்ற மூன்றாம் பிராகாரம் உள்ளது.

1740ஆம் ஆண்டில் தொடங்கிய அந்தப்பணி இருபது ஆண்டுகள் கடந்த பிறகு

முடிவுற்றது. நூல் பிடித்தாற்போல நேர்த்தியான வரிசையில் தூண்கள் கட்டப்

பட்டு மிளிர்கின்றன. அந்தப் பிராகாரத் தூண்களில் அமைச்சர் முத்திருளப்ப

பிள்ளையின் திருவுருவமும் அவருக்கு உதவியாக இருந்த சின்னப் பிரதானி

கிருட்டிண ஐயங்காரின் திருவுருவமும் அமைக்கப்படடுள்ளன.


பார்வை:'முந்நீர்விழா' நூலாசிரியர் வாகீச கலாநிதி கி. வா.ஜகந்நாதன்.

Monday, 1 December 2025

சர்க்கரை தொண்டை மட்டும் சவ்வாது கண்டமட்டும்.

 சர்க்கரை தொண்டைமட்டும்;  சவ்வாது கண்ட மட்டும்.


இராமநாதபுரத்தைப்   பொதுயுகம்(கி.பி.) 1645 முதல் 1670 வரை அரசாட்சி

செய்துவந்த ரகுநாத சேதுபதி என்ற  திருமலைச் சேதுபதி அரசவையில்

சர்க்கரைப் புலவர், அமுதகவிராயர், சவ்வாதுப் புலவர் என்ற மூன்று பெரும்

புலவர்கள் வீற்றிருந்து தமிழ்ப்பணி புரிந்து வந்தனர். அமுத கவிராயர்

ரகுநாத சேதுபதி மீது 'நாணிக்கண் புதைத்தல்' என்ற துறையில் நானூறு

பாடல்களால் ஒரு சிற்றிலக்கியத்தை இயற்றினார்.அமுத கவிராயருக்குத்

தக்க சன்மானம் வழங்கப்பட்டது. சர்க்கரைப் புலவர் திருவாவடுதுறை ஆதீனத்தின்

சின்னப் பட்டத்தில்  மிகுந்த தமிழ்ப் புலமையுடன் தொண்டாற்றி வந்த சிவக்

கொழுந்து தேசிகரிடம் முறையாக இலக்கிய, இலக்கணங்களைக் கற்று மிகுந்த

தேர்ச்சி பெற்றவராக விளங்கினார். கம்பராமாயணத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு

கம்பராமாயணச் சொற்பொழிவாற்றுவதில் நிபுணராகத் திகழ்ந்தார். இஸ்லாமியரான

சவ்வாதுப் புலவரும் பெரும் புலவரே.


சர்க்கரைப் புலவர் இராமநாதபுர அரண்மனையில்  நாடோறும் கம்பராமாயணத்தை

ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும்  விரித்துரைப்பது வழக்கம். அவர் நிகழ்த்தும்

சொற்பொழிவைச்  சேதுபதி மன்னர்  மிகவும் இரசித்துக் கேட்டு மகிழ்ந்தார். இடையிடையே

சேதுபதி மீது பாடல்கள் புனைந்து பாடிக் காட்டும் வழக்கத்தையும் கைக்கொண்டிருந்தார்.

அதனால் சேதுபதி மன்னர் சர்க்கரைப் புலவரிடம் " உங்கள் சொற்பொழிவும் பாடல்களும்

சர்க்கரையைப் போல இனிக்கின்றன" என்று பாராட்டுவது அன்றாடம் நடைபெறும்

நிகழ்வு. உடனிருக்கும் சவ்வாதுப் புலவருக்கு எரிச்சல் ஏற்படும். ஒருநாள் வழக்கம்போல

இராமாயணச் சொற்பொழிவு முடிந்த பிற்பாடு வழக்கம்போலவே மன்னர் சர்க்கரைப்

புலவரிடம் "உங்கள்  பேச்சுத்திறன் சர்க்கரை போல் இனித்தது" என்றார். உடனே,

அருகிலிருந்த சவ்வாதுப்  புலவர் அடக்க மாட்டாத பொறாமை வெளிப்பட" சர்க்கரை 

தொண்டை மட்டும்" என்று  கூறினார். அவரது பொறாமை உணர்வை அறிந்துகொண்ட

சர்க்கரைப் புலவர் சற்றும் தாமதிக்காமல்" சவ்வாதோ?" என்று முழங்கினார். உடனே,

சவ்வாதுப் புலவர்"சர்க்கரை தொண்டை மட்டும்; சவ்வாது கண்ட மட்டும்" என்று

விடையளித்தார். அதாவது சர்க்கரை மென்று சுவைக்கும் வரை இனிக்கும்; சர்க்கரையை

விழுங்கிய பிறகு இனிப்புச் சுவை  மறைந்துவிடும். அதாவது, நெடுநேரம் இரசிப்பதற்கு

அதில் வாய்ப்பில்லை. சொற்ப நேர சுகமே கிட்டும். ஆனால், சவ்வாதோ, கண்பார்வையில்

படும் போதெல்லாம் மனத்துக்கு இனிமை தரும். நீண்ட நேர சுகம் கிட்டும். இவ்வாறு,

அழுக்காறு(பொறாமை) கொண்ட சவ்வாதுப் புலவரின் கூற்றுக்குச் சர்க்கரைப் புலவர்

சரியான பதிலடி கொடுத்தார். "கண்ட மட்டும்" என்ற சொற்றொடரைக்"கண்டம் மட்டும்"

என்று பிரிக்கலாம். அவ்வாறு பிரித்துப்  பொருள்கொண்டால்,  அதுவும்"தொண்டை மட்டும்"

என்ற பொருளையே தரும். எனவே, சர்க்கரையும் சவ்வாதும் சமமே என்று முடித்தார்.

அவர்களின் விவாதத்தைத் கேட்டுக் கொண்டிருந்த சேதுபதி மன்னர்"சர்க்கரைப் புலவரும்

சவ்வாதுப் புலவரும் சம அளவில் புலமையும், திறமையும் உடையவர்கள்" என்று தீர்ப்புக்

கூறினார்.கண்டம்=கழுத்து(வடமொழிச் சொல்).


அன்றாடம் நிகழ்ந்து வந்த இராமாயணச் சொற்பொழிவில்  அன்று 'அனுமன் கடல்தாவு

படலம்' விவரிக்கப்படல்  வேண்டும். சர்க்கரைப் புலவர் தமது திறமையை யெல்லாம்

ஒருங்கிணைத்துக் கடல்தாவு படலத்தை வருணித்துக் கொண்டிருந்தார். அவர் பேச்சுத்

திறமையால் சேதுபதி மன்னர் இராமாயணக் கதையோடு ஒன்றிப் போனார்."அனுமன்

எவ்வாறு  கடலைத் தாவினார்?" என்று வினவினார். ஏற்கெனவே கதையோடு ஒன்றிப்

போயிருந்த சர்க்கரைப் புலவர் தம் இருக்கையிலிருந்து  ஒரே தாவாகத் தாவி மன்னர்

வீற்றிருந்த இருக்கையில்  வந்தமர்ந்தார். தாவும் பொழுதே" இதோ இப்படித்தான் அனுமன்

தாவினார்" என்று கூறினார். சர்க்கரைப் புலவர் உணர்ச்சிக் கொந்தளிப்பில் தாவியதைப்

பார்த்த சேதுபதி மன்னர் தம் இருக்கையிலிருந்து எழுந்து வேறொரு இருக்கையில்

அமர்ந்துகொண்டார். சொற்பொழிவு நிகழ்ந்த அரங்கம் நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்தது.

பல வண்ண நெட்டிமாலைகள் தொங்கவிடப்பட்டிருந்தன. சர்க்கரைப் புலவர் தாவிய

வேகத்தில்  நெட்டி மாலை அறுந்து அவர் கழுத்தில் விழுந்தது. அதனைக் கவனித்த

சேதுபதி மன்னர்" அனுமன் உமக்கு அளித்த பரிசாகும் இது" என்று கூறினார். இதனால்

சர்க்கரைப் புலவர் 'நெட்டிமாலைக் கவிராயர்' என்றும், 'நெட்டிமாலைச் சர்க்கரைப் புலவர்

என்றும் அழைக்கப்பட்டார். சர்க்கரைப் புலவருக்கும் ' நெட்டிமாலைக் கவிராயர்,' என்னும்

பட்டம் மிகவும் பிடித்துப் போயிற்று. தாம் விடுக்கும் சீட்டுக் கவிகளில் இதனைக் குறிப்பிடு

வது வழக்கமாயிற்று:

"வந்த ஜய பாரத  இராமாயணத்திலே  வாடாத நெட்டிமாலை

   மருவிட்ட திருவிட்டு வழுவாது நழுவாது வாசாம கோசரமதாய்ச்

சிந்தைமிக வேசற்றும் மலையாது சபையிலே செய்யும்பிர சங்க நிபுணன்

   சேதுபதி சித்தமகிழ் சர்க்கரைக் கவிராச  சிங்கம்யாம் எழுதும் நிருபம்".


பார்வை: "முந்நீர் விழா" -நூலாசிரியர்  வாகீச .கலாநிதி கி. வா. ஜகந்நாதன்.

Wednesday, 12 November 2025

ஆறுமகத்தாபிள்ளையும் உ.வே.சா.ஐயரும்.

 ஆறுமுகத்தா பிள்ளையும் உ.வே.சாமிநாதையரும்.


தமிழ் இலக்கிய, இலக்கணம் கற்றுக் கொள்வதற்காக உ.வே.சாமிநாதையர்

திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் மாணாக்கராகச்

சேர்ந்திருந்த காலக்கட்டம் அது. பாடவகுப்பு  தொடங்கப்பட்டுச் சிறிது காலமே கழிந்

திருத்தது. பிள்ளையவர்கள் திரிசிரபுரம் மகாவித்துவான் என்று அழைக்கப்பட்டாலும்

அவர் திருவாவடுதுறை ஊரையொட்டிய கும்பகோணம், மயிலாடுதுறை, பட்டீச்சுரம்

முதலான பல ஊர்களிலும் தங்கியிருந்து பாடம் நடத்துவது வழக்கம். பிற்காலக்

கம்பர் என்று புகழப்பட்ட பிள்ளையவர்கள் அந்தக் காலக்கட்டத்தில் மிகச் சிறந்த

கல்விமானாகத் திகழ்ந்தார். கற்றோர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு என்ற

கூற்றுக்கு அவர் வாழ்க்கை சிறந்த எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தது. மீனாட்சி

சுந்தரனாரை அறியாதவர்கள் அந்த வட்டாரத்தில் யாரும் இல்லை; ஏன், தமிழகத்திலேயே

யாரும் இல்லை என்று துணிந்து கூறிவிடலாம். அவர் திருவாவடுதுறை ஆதீனப்

புலவராக இருந்தபோதிலும் தமிழ்நாட்டிலுள்ள  சைவமடத்துத் தலைவர்கள் அனைவராலும்

கொண்டாடப்பட்டார். மடத்துத் தலைவர்களைத் தவிர தனிப்பட்ட செல்வர்கள், ஜமீன்தார்கள்

போன்றவர்களாலும் பாராட்டப்பட்டவர்.


இதுபோன்ற ஒரு செல்வர் தான் பட்டீச்சுரம் பகுதியில் வாழ்ந்துவந்த ஆறுமகத்தாபிள்ளை.

ஏராளமான நிலபுலன்கள் அவருக்குச் சொந்தமானதாக இருந்தன. ஆட்கள் பழக்கமும் 

மிகுதியாக இருந்தது. பட்டீச்சுரம் ஜமீன்தார் போலவே அவர் வாழ்ந்தார். கும்பகோணம்,

மயிலாடுதுறை முதலான ஊர்களையொட்டிப் பட்டீச்சுரம் இருந்தமையால்  சாமிதரிசனத்

லுக்கு வருகைதரும் ஆன்மிக பக்தர்கள் ஆறுமுகத்தாபிள்ளை வீட்டில் தங்கி உணவுண்டு,

சிறிது நேரம் ஓய்வெடுத்துப் பிற்பாடு தத்தம் பயணத்தைத் தொடர்வது வழக்கம். வருகின்ற

ஆன்மிக பக்தர்களுக்குப் பயணக் களைப்புத் தோன்றாத வண்ணம் புகலிடமாக அவர் வீடு

விளங்கியது. மேலும், மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடமும், திருவாவடுதுறை, திருப்பனந்தாள்

போன்ற சைவ மடங்களிலும் கல்வி பயிலும் மாணாக்கர்களுக்கும் அவர் ஆதரவாகத் திகழ்ந்தார். ஆனால், ஆறுமகத்தாபிள்ளை மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களைத் தவிர

ஏனையோரை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை. சிடுசிடுவென்று பேசுவது வழக்கம்.

உ.வே.சாமிநாதையரைச் சீண்டிக்கொண்டே யிருப்பார். பிள்ளையவர்களிடம் கல்வியைத்

தொடங்கிய காலம். கவிதை எழுதச் சொல்வது, சிலேடை இயற்றச் சொல்வது, சித்திரகவி

வரையச் சொல்வது போன்ற இடர்களைச் செய்துவந்தார். ஒருமுறை உ.வே.சா.வின் 

புத்தகக் கட்டை ஒளித்து வைத்துவிட்டார். வீட்டு உரிமையாளர் என்ற முறையில் அவரிடம்

புத்தகக் கட்டைக் கண்டுபிடித்துச் தருமாறு கோரிய பொழுது உடனடியாகக் கவிதை ஒன்றை

இயற்றிக் காட்டினால் புத்தகத்தைக் கண்டுபிடிக்கலாம் என்று வெடுக்கெனப் பதில்

கூறினார். இதனைக் கவனித்த மீனாட்சி சுந்தரனார் சில குறிப்புகள் கொடுத்துப் பாடலை

உருவாக்க வழிவகுத்தார். பாடல் பின்வருமாறு:

"ஆறுமுக பூபாலா! அன்பிலார் போலென்பால்

மாறுமுகங் கொண்டால் மதிப்பவரார்- கூறுதமிழ்

வாசிக்க வந்தஎன்மேல் வன்மமென்ன? யாவருமே

நேசிக்கும் மாதயைசெய் நீ".

'ஆறுமுக பூபாலா!' என்று பாடலில் குறிப்பிடப்பட்டதால், ஆறுமுகத்தாபிள்ளை மனம்

குளிர்ந்து புத்தகக் கட்டைக் கண்டுபிடித்துக் கொடுத்தார்(ஒளித்து வைத்ததே அவர்தானே).

பூபாலன்= அரசனுக்கு நிகரானவன்.


பின்னொரு நாளில் உ.வே.சா.வின் எழுத்தாணியை ஆறுமகத்தாபிள்ளை ஒளித்து

வைத்துவிட்டார். பல இடங்களில் தேடியும் காணாத உ.வே.சா. மகாவித்துவானிடம்

கூற அவர்"தம்பிதான் ஒளித்து வைத்திருப்பார்" என்று இயம்பினார். அந்த வழியாக

வந்த ஆறுமுகத்தாபிள்ளையிடம்" தம்பி, இவர் எழுத்தாணியைக் காணவில்லையாம்;

கண்டுபிடிக்க உதவுக" என்று கோரிக்கை வைத்தார். ஆறுமுகத்தாபிள்ளை" உ.வே.சா.

உடனடியாக ஒரூ பாடலை இயற்றினால் எழுத்தாணியைக் கண்டுபிடித்துத் தருவேன்;

பழையது அகப்படாவிட்டால் புதிதாக ஒன்றை வாங்கித் தருவேன்" என்றார். அவர்

தோட்டத்துப் பக்கம் சென்ற பொழுது மீனாட்சிசுந்தரனார் சிற்சில சொற்களைக் கூறிப்

பாடலை முடிக்கச் செய்தார். பாடல் பின்வருமாறு:

"தழுவுபுகழ் ஆறுமுகத் தாளாளா! என்றும்

வழுவில் புராணம் வரைய-மெழுகில்

அழுத்தாணிப் பொன்னால் அமைந்தவுரு விற்றாம்;

எழுத்தாணி ஒன்றெனக்கின்(று) ஈ".

பொருள்: புகழ்மிக்க ஆறுமுக வள்ளலே! குற்றமற்ற

புராணம் ஒன்றை ஏட்டில் எழுத எழுத்தாணி ஒன்று

தேவை. மெழுகில் ஒற்றி அச்செடுத்த ஆணிப்பொன்

போன்று மின்னும் எழுத்தாணி ஒன்று எனக்குத் தருக.


மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரைச் சுற்றியிருப்பவர்கள்

அனைவருமே மாணாக்கர்கள் அல்லர். பெரும்பகுதி கல்விகற்கும்

மாணாக்கர்கள். வேறு சிலர் ஐயாவை அறிந்தவர்கள்; ஐயா, பலராலும்

மதிக்கப்படுபவர் ஆதலால் சைவ மடத்துத் தலைவர்களிடமோ,

அரசு அதிகாரிகளிடமோ, பெரிய செல்வர்களிடமோ, ஜமீன்தார்களிடமோ

ஏதாவது காரியம் ஆக வேண்டுமென நினைப்பவர்கள், தமிழ்ஆர்வலர்கள்

போன்ற பலதரப்பினரும் சுற்றிச் சூழ்ந்திருப்பர். மகாவித்துவான் யாரையும்

கடிந்து கொள்ளாமல் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது வழக்கம்.

அப்படிப்பட்டவர்களில் ஒருவர் சுப்பையா என்பவர். இவர் ஆறுமுகத்தாபிள்ளைக்கு

மைத்துனர். திருவிடை மருதூரைச் சேர்ந்தவர். தமிழில் சிறிய அளவில் பயிற்சி

பெற்றவர். மற்றபடி மகாவித்துவான் மாணாக்கர் அல்லர். அவரிடம் கல்விகற்கும்

எண்ணமேதும் இல்லாதவர். ஆனாலும் அவரைச் சுற்றி எப்பொழுதும் இருப்பார்.


சுப்பையா அவர்கள் பிழைப்புக்காகப் பெரும் செல்வர்கள், ஜமீன்தார்கள் முதலிவர்களைத்

தேடிச் சென்று தாம் அறிந்து வைத்திருக்கும் அண்மைக்கால இலக்கியப் படைப்புகளிலுள்ள

பாடல்கள் போன்றவற்றைத் தாம் சந்திக்கும் மனிதர்களுக்கேற்பப் பெயர்மாற்றி/வார்த்தைகளை மாற்றிச் சொல்லி அவர்களை மகிழ்வித்து அவர்களிடம்

பரிசில், கொடை பெற்று வாழ்வை நடத்திக் கொண்டிருந்தார். பேச்சுத் திறமையும்

நல்ல தோற்றப் பொலிவும் கொண்டவர் என்பதால் அவர் எந்த இக்கட்டிலும் அகப்பட்டுக்

கொள்ளாமல் பிழைப்பை நடத்திக் கொண்டிருந்தார்.


ஒருநாள், ஆறுமகத்தாபிள்ளை தம் மைத்துனர் சுப்பையாவிடம்"ஏனையா,  நீர்தாம் பல

செல்வர்கள்/ஜமீன்தார்களை அடிக்கடி சந்தித்து அவர்களிடம் இதமாக உரையாடிப்

பரிசில் பெற்று வருவதாகச் சொல்கின்றீர். மகாவித்துவான் தலைமை மாணாக்கர்

தியாகராசச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் பணிசெய்கின்றார். அவரைச்

சந்தித்துப் பேசி அவர் மனத்துக்கு இதமாக நடந்து பரிசிலாக மாமபழங்கள் பெற்றுக்

கொண்டுவந்து ஐயாவுக்குக் கொடும். உம் திறமையை நான் மனமாரப் பாராட்டுவேன்"

என்றார். இதைக் கவனித்த மகாவித்துவான் சரியென்று சம்மதிக்குமாறு சாடை

காட்டினார். உடனே தாமே ஒரு பாடலை இயற்றி மாணாக்கர் ஒருவன் மூலமாக எழுதச்

செய்து சுப்பையா அவர்களிடம் கொடுத்தார். அந்த மாணாக்கர் அந்தச் செய்யுளுக்குரிய

பொருளை விளக்கமாக எடுத்துரைத்தார்.


சுப்பையா அவர்கள் உடனை கும்பகோணத்துக்குப் பயணப்பட்டார். அந்த நகரத்தை

அடைந்தவுடன் கும்பகோணத்தில் தியாகராசர் செட்டியார் வசித்துவரும் வீட்டு முகவரியைத்

தேடி யலைந்து அங்குச் சென்று வீட்டுத் திண்ணையில் கம்பீரமாக அமர்ந்துகொண்டார்.

தியாகராசர் மாலை கல்லூரி வேலைநேரம் முடிந்து வீடுவந்து சேர்ந்தார். சுப்பையாவைப்

பார்த்தவுடன் பதறி ஓடிவந்து"பிள்ளையவர்கள் வந்திருக்கிறாரா?" என்று வினவினார்.

"இல்லை; நான் மட்டும்தான் வந்துள்ளேன்" என்று சுப்பையா கூறினார். " அப்படியா?

இங்கேயே இரும். நான் கைகால் முகம் அலம்பி வருகிறேன்" என்று கூறி வீட்டினுள்

சென்றார்.


தியாகராசர் சாவகாசமாகத் திரும்ப வந்தார். "என்ன செய்தி? கூறும்" என்றார்.

உங்கள் மேல் கவிதை பாடி வந்துள்ளேன். தாங்கள் கேட்டுச் சுவைத்தருளல்

வேண்டும்." எனக் கூறினார்."எங்கே, கவிதையைப் படியும்" என்றார் தியாக

யாசர். பாடல் பின்வருமாறு:

"புண்ணியமெல் லாந்திரண்ட வடிவென்கோ?

         குறுமுனிவன்   பொதியம் நீத்திங்(கு)

அண்ணியதோர் வடிவென்கோ? தமிழிலுள்ள

          பலகலைகள்  அனைத்தும் கூடி

நண்ணியதோர் வடிவென்கோ? பின்னுமெந்த

         வடிவமென  நாட்டு கோயான்?

மண்ணியமா மணியனைய தியாகரா

         சப்புலவன்  வடிவம் தானே!"

தியாகராசச் செட்டியார் பாடலைக் கேட்டுவிட்டு "பாடல் அருமையாக

உள்ளது. நீர்தாம் இப் பாடலை எழுதினீரா? நீர் ஐயாவிடம் ஒருநாள் கூடப்

பாடம் கேட்டதே இல்லை. அப்படியிருக்க, நீர் தாம் இப்பாடலை இயற்றியவர்

என்று கூறினால் நம்ப முடியுமா? சொல்லும்" என்றார். மேலும்" நான்தான்

இப்பாடலை இயற்றினேன்" என்று சத்தியம் செய்யும் என்று சுப்பையாவைக்

கேட்டுக் கொண்டார். சுப்பையா துண்டைத் தரையில் விரித்துத் தாண்டுவதற்கு

முன்வந்தார். செட்டியார் பதறிப் போனார். "அதெல்லாம் வேண்டாம். பாடலுக்குப்

பொருள் கூறும்" என்றார். சுப்பையா பொருள் கூறினார். உடனே, செட்டியார்

"என்கோ என்னும் சொல்லுக்குப் பொருள் என்ன?" என்று வினவ "என்பேனா?"

என்பது பொருள்" என்று சுப்பையா கூற, "இந்தச் சொல் வேறெந்த இலக்கியங்களில்

கையாளப்பட்டுள்ளது?" என்று செட்டியார் கேட்டார். விடை கூற முடியாத சுப்பையா

உடனே நடந்த நிகழ்வு அனைத்தையும் சொல்லி முடித்தார். செட்டியார் சுப்பையாவை

அழைத்துக்கொண்டு கடைத் தெருவுக்குச்  சென்று ஐம்பது மாம்பழங்களை வாங்கிக்

கொடுத்தனுப்பினார். பட்டீச்சுரத்துக்குத் திரும்பிய சுப்பையா மகாவித்துவானிடம்

"ஐயா, என் தகுதிக்கேற்ற கவிதையை எழுதியிருக்கக் கூடாதா?" என்றுரைத்தார்.

பார்வை:"என் சரித்திரம்"-நூலாசிரியர் டாக்டர் உ.வே.சா.அவர்கள்.

Wednesday, 22 October 2025

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் சாய்வு நாற்காலிப் பாட்டு.

 மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சாய்வு நாற்காலிப் பாட்டு.


பிற்காலக் கம்பர் என்று புகழப்பட்ட மகாவித்துவான் மீனாட்சி

சுந்தரம் பிள்ளையவர்கள்  இயற்றிய கவிதைகள் எண்ணிலடங்

காதவை. கம்பர் இயற்றிய பாடல்கள் பத்தாயிரத்துச் சொச்சம்.

பிள்ளையவர்கள் இயற்றியவை  பல பத்தாயிரத்தைத் தாண்டும்.

பிள்ளையவர்கள் திருவாவடுதுறை ஆதீனப் புலவராகப் பணி

புரியும் காலத்தில் அடிக்கடி மயிலாடுதுறைக்குச் சென்று சில

நாட்கள் தங்கியிருந்து விட்டுத் திரும்புவது வழக்கம். ஒருமுறை

அவ்வாறு சென்ற பொழுது இவருக்குக் காய்ச்சல்நோய்  கண்டது.

காய்ச்சலால் அவர் உடல் தளர்ச்சியடைந்தது. முன் போலத் தொடர்ந்து

அமர்ந்திருக்கவும், படுத்திருக்கவும் இயலவில்லை. மருத்துவர்கள்

அவர் ஒரு சாய்வு நாற்காலியைப் பயன்படுத்திக் கொண்டால் நலமாக

இருக்கும் என்று  கருத்துரைத்தனர். அந்தக் காலக் கட்டத்தில், தரங்கம்பாடி

நீதிமன்றத்தில் பணிபுரிந்து வரும் வேதநாயகம் பிள்ளையின் தம்பி

ஞானப்பிரகாசம் பிள்ளைக்குக் கடிதம் எழுதி அனுப்பினார். அதில்  தமக்கு

ஏற்பட்ட உடல்நலக் குறைவைச்  சொல்லி  வருந்தினார். சாய்வு நாற்காலி

யைப் பயன்படுத்துமாறு மருத்துவர்கள் கூறியதையும் தெரிவித்துக்கொண்டார்.

சாய்வு நாற்காலி  பயன்படுத்தச் சொன்ன மருத்துவ அறிவுரையைக்

காரணமாகக் காட்டிச் சாய்வு நாற்காலி ஒன்றை வாங்கி அனுப்புமாறு

வேண்டுகோள் விடுத்தார்.


தரங்கம்பாடி நெய்தல்நிலப்பகுதியாகும்(கடல் சார்ந்த பகுதியாகும்). அங்கே

படகு கட்டும் மரத்தச்சர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்வது இயல்பு. மேலும்

படகு கட்டத் தேவையான உறுதியான மரங்களும் அதிக அளவில் கிடைக்கும்.

நல்ல உறுதியான சாய்வு நாற்காலி ஒன்றை உருவாக்குதல் எளிதாகும். இதனைக்

கருத்தில்கொண்டு வேதநாயகம் பிள்ளை இளவலிடம்(தம்பியிடம்) இப்பணியை

ஒப்படைக்க எண்ணிக் கடிதம் வாயிலாகத் தெரிவித்தார். கடிதம் கவிதை வடிவில்

இருந்தது. அது பின்வருமாறு:

1)குறள் வெண்பா:

" பேராளா! ஞானப் பிரகாச வள்ளலெனும்

சீராளா! இக்கடிதம் தேர்".

2&3 விருத்தம்:

"உறுவலியின் இடங்கொண்டு வனப்பமைந்த

      நாற்காலி ஒன்று வேண்டும்;

மறுவறுநாற் காலியெனல் யானையன்று;

      குதிரையன்று;  வல்லே(று) அன்று;

கறுவகல்பாற் பசுவன்றால்; இவையெல்லாம்

      இயங்குதல்செய்  கடன்மேற் கொள்ளும்;

பெறுபவர்பால் இயங்காது வைத்தவிடத்

       தேயிருக்கப்  பெற்ற  தாமே.


அத்தகைய தொன்றனுப்பின் அதிலமர்ந்து

          மிக்கசுகம்  அடைவேன் யானும்;

உத்தமநற் குணத்திலுயர் நீயுமிகு

          சீர்த்தியடைந்(து) ஒளிரா நிற்பை;

வித்தக!மற் றஃதவ்வா(று) இருப்பதற்கும்

           இடங்கொடுத்தல்  வேண்டும்; ஏய

சுத்தமிகும் அதனைவரு பவன்பாலே

           யனுப்பிடுதல் தூய தாமே.

பொருள்:

உறுதியும் வனப்பும்(அழகும்) அமைந்த நாற்காலி ஒன்று வேண்டும்;

நாற்காலி என்றால் விலங்கு எதனையும் குறிக்காது. யானையும்

இல்லை; குதிரையும் இல்லை; எருதும் இல்லை; கறவைப் பாற்பசு

வும் இல்லை. இவையெல்லாம் நடமாடி இயங்குபவை. இயங்காமல்

வைத்தவிடத்தே அலுங்காமல் நிலைத்திருக்கும் தன்மையுடைய

நாற்காலி ஒன்று வேண்டும். அத்தகைய ஒன்றை நீ அனுப்பிவைத்தால்

அதில் அமர்ந்து மிக்க சுகம் அடைவேன்; நீயும் எனக்கிந்த உதவி

செய்வதனால் சிறப்படைந்து ஒளிருவாய். அதனால் நன்கு உருவாக்கப்

பட்ட சாய்வு நாற்காலியை அனுப்பி வைத்தல் நலம் பயக்கும்.

மேற்படி மூன்று பாடல்களையும் எழுதி ஒரு பணியாள் வாயிலாகக்

கொடுத்தனுப்பினார். பிள்ளையவர்கள் கேட்டது கிடைக்காமல் போகுமா?

ஞானப் பிரகாசம் அவர் கோரிய படியே சாய்வு நாற்காலியை அனுப்பி

வைத்தார். அந்த நாற்காலி பிள்ளையவர்கள் வாழ்நாள் முழுவதும் அவர்

பயன்பாட்டில் இருந்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?


பார்வை:

மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை

சரித்திரம்(முதற் பாகம்)--எழுதியவர்

டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள்.

Wednesday, 1 October 2025

வரைவிடைவைத்துப் பொருள்வயின் பிரிதல்--,சுழியிடுதல்.

 பிரிந்த தலைவன் வருகைக்காகக் கூடல் இழைத்தும் கோடு எண்ணியும்

வருத்திக் கொண்ட தலைவி--கை சிவந்தது--காரியம் கைகூடவில்லை.


களவியல் காதல் நிகழ்த்திய ஒரு தலைவனும் தலைவியும் அறத்தொடு நின்று

(காதலை வெளிப்படுத்தி) வரைவுக்கு(திருமணத்துக்கு)ச் சம்மதம் தெரிவித்துப்

பெற்றோர் மற்றும் உற்றார் முன்னிலையில் திருமணத்தை உறுதிசெய்து கொண்டனர்.

பரியமாக(பெண்ணுக்குரிய பரிசமாக) ஆறு வளையல்கள், மெட்டி(மிஞ்சி) போன்ற

பொன்நகைகள்  தலைவிக்கு அணிவித்தல் வேண்டும் என்று பேசி முடிக்கப்பட்டது.

(சங்க காலத்தில் வரதட்சணை கொடுக்கும் வழக்கமில்லை. பெண்ணுக்குத்தான்

பரியம் கொடுப்பது வழக்கம்). அக்கால வழக்கப்படி பொன்நகைகளுக்கான பணத்தைத்

தேடிப் பெறுவதற்காக வெளியூர்க்குச் சென்றுவிட்டான்.(இதைத்தான் வரைவிடை

வைத்துப் பொருள் வயின் பிரிதல் என்று  அந்நாளில் கூறினர்).


தலைவன் பிரிந்து சென்ற நாள் தொடங்கித் தலைவி சரியாக உண்ணாமலும், உறங்கா

மலும் நிறம் மாறியும் பொலிவு குன்றியும் நடைப்பிணம்போல் திரிந்தாள். வீட்டுக்கு 

வெளியே மணலைக் குவித்து அதில் வட்டமாகக் கோட்டை இழைக்க முயற்சிசெய்தாள்.

கோடு இழைக்கும் பொழுது கண்ணை மூடிக் கொள்ளல் வேண்டும். இது முக்கியமான

நிபந்தனை. இதனைக் கூடல் இழைத்தல் என்ற பெயரால் அழைத்தனர். கூடல்

இயைதல், கோடியைதல், சுழியிடுதல், மணற்சுழிச் சோதிடம், அதிசயச் சுழி என்ற

மாற்றுப் பெயர்களும்  வழங்கின. கண்ணை மூடிக் கொண்டு கோட்டை இழைக்கையில்

கோட்டின் இரு முனைகளும் ஒன்றாகப் பொருந்தல் வேண்டும். பொருந்தினால்

தலைவன் தலைவி விரைவில் கூடுவர் என்பது அக்கால நம்பிக்கை. தலைவியின்

போதாத நேரம் கோட்டின் இருமுனைகளும் பொருந்தவே பொருந்தாமல் அவள்

மனத்துயரை மிகுதியாக்கியது. அவள் கோட்டை அழித்துப் புதிதாக இழைத்தாலும்

இருமுனைகளும் கூடாமல் அவள் பொறுமையைச் சோதித்தன. அழித்து அழித்துப்

புதிதாகக் கோடு இழைத்து இழைத்து அவள் கை சிவந்து விட்டது. கோட்டின் இருமுனை

களும் பொருந்தவேயில்லை.மேலும் ஒரு கொடுமை என்னவென்றால் தலைவன்

பிரிந்து சென்ற நாள் தொட்டு ஒவ்வொரு நாளும் சுவரில் சிறிய கோடு வரைந்து

அவைகளை நாடோறும் தடவித் தடவி எண்ணிவந்தாள். இதனால் அவளது

 மற்றொருகை அதைவிட அதிகமாகச் சிவந்து விட்டது. கைசிவந்ததுதான் மிச்சம். அவள்

எண்ணம் ஈடேறவில்லை. அவள் என்னதான் செய்வாள்? பாடல் பின்வருமாறு:

"புழைத்த கைச்சி றுத்த கட்பெ ருத்த மத்த முகபடாம்

      புகர்மு கக்க பால போக போத கத்தின் விரைதரும்

மழைத்த டக்கை மான மீளி கொங்கர் பூபன் வக்கைசூழ்

      மலைய வெற்ப கன்று போய்ம றக்க வல்லா தான்வர

விழிக்க டற்கொ ழித்த முத்தம் வடகு நாட்டின் மூழ்கவே

      மெய்ப சந்து மையல் தந்து வீதி வாய்ம ணற்சுழித்(து)

அழித்த ழித்த றச்சி வந்த தொருகை மற்ற தொருகையும்

      அகன்ற நாள்தொ டங்கி யெண்ணி அதனி னுஞ்சி வந்ததே".

(இது சந்த விருத்தம் ஆதலால் சீர்பிரித்து  எழுத வாய்ப்பில்லை.

ஏனென்றால் சீர்பிரித்து எழுதினால் ஓசைநயம் கெட்டுவிடும்).

பொருள்:

துளையை யுடைய கையும், சிறிய கண்ணும், பெரிய மத்தகமும்,

முகபடாமும், புள்ளிகளை யுடைய முகமும், கபாலமும் உடைய

இனிய யானைகளைத் தொகுதியாக வழங்கும், மழைபோலும்

பெரிய கைகளையுடைய  கொங்கர் தலைவனாகிய பூபன் என்னும்

வள்ளலின் வக்கை நாட்டைச் சூழ்ந்துள்ள மலைய வெற்பைக்

கடந்து சென்று என்னை மறக்க வல்லவனாகிய தலைவன் தான்வரும்

வரவை எண்ணி விழியாகிய கடல்கொழித்த கண்ணீர் முத்துக்கள்

வடமலையின் உச்சியும் மூழ்குமாறு பெருக, உடம்பு பசலை பூத்து

எனக்கு மயக்கத்தைத் தருவதால், தெருவில் மணலைப் பரப்பி வட்ட

மாகச் சுழி வரைந்து, அச்சுழியின் இருமுனையும் கூடாமையால்

அழித்து அழித்து மீண்டும் சுழித்தலால், ஒருகை சிவந்து விட்டது. மற்றொரு

கையானது தலைவன் பிரிந்த நாள்தொட்டு ஒவ்வொரு நாளையும்

கோடிட்டு எண்ணியெண்ணிச் சிவந்து விட்டது. இனி என்ன செய்வேன்?


இனி, வேறொரு காட்சியைப் பார்ப்போம்:

"வழுதி பதியை மணலில் எழுதி

எழுதி யழித்தோமென்(று) ஏங்கிப்-புழுதிதனை

ஆலிங் கனம்பண்ணி அந்திபட நிற்குமே

காலிங்கன் கப்பற் கரும்பு".

பொருள்:

காலிங்க மன்னனுடைய கப்பலென்னும் நாட்டிற் பிறந்த கரும்பனைய

இத்தலைவி, தன்பதியாகிய வழுதி வந்து கூடுவான் என்று மணலிற்

கூடல் வளைத்துப் பல்கால் அழித்தெழுதியும் கூடல் வாய்க்கப் பெறாமையால்

'ஓம்' என்று அழுது ஏங்கி அம்மணற் புழுதியைக் கட்டியணைத்து, அந்திப்

பொழுது ஆனபின்னும் வருந்திநிற்பாள். இதற்கு என் செய்வது?


பார்வை:

தனிப்பாடல் திரட்டு(முதற்பாகம்)--சரசுவதிமகால் நூலகம் வெளியீடு--உரை

எழுதியவர்: வித்துவான் ச.பாலசுந்தரம், பேராசிரியர், கரந்தைத் தமிழ்க் கல்லூரி,

தஞ்சாவூர்.

Wednesday, 10 September 2025

பயறணீச்சுரம் என்ற உடையார் பாளையம்..

 பயறணீச்சுரமென்ற உடையார் பாளையம்.


தமிழ்நாட்டிலுள்ள பழைய ஜமீன்களுள் உடையார் பாளையம்

ஒன்று. வீரத்துக்கும் தியாகத்துக்கும் கல்விக்கும் பெயர்பெற்ற

பல ஜமீன்தார்கள் இதனை யாண்டு இங்கு புகழை நாட்டியிருக்

கிறார்கள். இவ்வூருக்குப் பயறணீச்சுரமென்னும் பெயர் முன்பு

வழக்கிலிருந்தது. மலைநாட்டின்கண் திவாகரபுரமென்னும்

ஊரிலிருந்த வணிகர் ஒருவர் அங்கிருந்து மிளகுப் பொதிகளை

மாடுகளின்மேல் ஏற்றிக் கொணர்ந்து சமவெளியிலிருந்த சோழ

நாட்டிலும் அருகிலிருந்த பிற நாடுகளிலும் வணிகம் புரிந்து வந்தார்.

ஒருசமயம் இவ்வூர் வழியாக விருத்தாசலத்துக்குப் போனார். அந்நாளில்

விருத்தாசலத்தில் ஒரு சுங்கச்சாவடி யிருந்தது. மிளகுப் பொதிக்கு

அதிக வரி விதிக்கப்படுவது வழக்கம். வரியைக் குறைக்க, மிளகுப்

பொதிகளைப் பயறு மூட்டைகள் என்று பொய் சொல்லிச் சாவடியைக்

கடந்து சென்றார். விருத்தாசலத்தை அடைந்த அவர் அங்கு மூட்டைகளை

அவிழ்த்துப் பார்த்தால் மிளகே காணப்படவில்லை. பதிலாக, பயறு தான்

எல்லா மூட்டைகளிலும் இருந்தது. தாம் பொய் சொன்ன காரணத்தால்

பழமலைநாதர் தண்டித்து விட்டாரோ? என்று பதறித் துடித்தார். அப்பொழுது

"கெட்ட இடத்திலே போய்த் தேடு" என்றொரு அசரீரி கேட்டதாகவும் அதன்படி

பயறணீச்சுரத்துக்குவந்து பயறணிநாதரிடம்  மனமுருகி வேண்டிக்கொண்டதாகவும்

அதன்பின்னர் தெய்வத்தின் திருவருளால் பயறெல்லாம் பழையபடி மிளகாக

உருமாறியதாகவும் தலபுராணம் கூறுகிறது.


இந்த ஊரையாண்ட ஜமீன்தார்கள் கச்சியென்னும் அடைமொழியையுடைய

பெயரையும், காலாட்கள் தோழ  உடையார் என்னும் பட்டப் பெயரையும்

உடையவர்கள். தங்கள் படைகளுடன் இங்கு தங்கிய காரணத்தால் இந்த

ஊர் உடையார் பாளையம் என்று அழைக்கப்படலாயிற்று. இவர்களுடைய

முன்னோர்கள் காஞ்சிபுரத்தில் பாளையக்காரர்களாக இருந்த காரணத்தால்

கச்சி என்னும் அடைமொழி பெயர்களுக்கு முன் சேர்த்து வழங்கப்படுகிறது.

பல வீரர்களுக்குத் தலைவர்களாகிய விசயநகர அரசர்களுக்கும் மற்றவர்களுக்கும்

போரில் உதவி புரிந்தவர்கள் ஆதலால் " காலாட்கள் தோழ உடையார்" என்ற பட்டப்

பெயர் இணைந்து கொண்டது.


விசயநகரத்தில் அரசாட்சி செய்த வீர நரசிம்மராயர் என்னும் அரசருடைய ஆட்சிக்

காலத்தில் காஞ்சிபுரத்தில் பள்ளிகொண்ட ரங்கப்ப உடையார் என்பவர் பாளையக்

காரராக ஆண்டுவந்தார். அவருக்குப் பின் அவர் மூத்த மகன் பெரிய நல்லப்ப

உடையாரும், அவருக்குப் பின் அவர் தம்பி சின்ன நல்லப்ப உடையாரும்  பாளையக்

காரர்களாக ஆட்சி செய்தனர். சின்ன நல்லப்ப உடையார் சிதம்பரம் நடராசப் பெருமான்

மீது பக்தி கொண்டவர். தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தவர். அவர்

காலத்தில் சிதம்பரத்தில் இருந்த குரு நமச்சிவாயர் என்னும் பெரியவரிடம்  உபதேசம்

பெற்றவர். ஒருமுறை தீர்த்த யாத்திரை செல்ல எண்ணிய நல்லப்ப உடையார்

சிதம்பரத்துக்குச் சென்று நடராசரைக் கண்டு வணங்கிய பின் தம் குரு நமச்சிவாயர்

ஆசியும் பெற்று வேதாரண்யம் நோக்கிப் பயணப்பட்டார். அன்று வழியில் ஒரு

சிவாலயத்தையும், அதனருகே அமைந்துள்ள தடாகத்தையும் கண்டு அவ்விடத்திலேயே

தங்கினார். நல்ல தூக்கத்தில் அவர் கனவில் சிவபெருமான் தோன்றியதாகவும் அவ்

வூரையே தலைநகரமாக மாற்றிக்கொள்ளுமாறு கூறியதாகவும சொல்லப்படுகிறது.

அதன்படியே அவ்வூரில் அரண்மனையை எழுப்பித் தம் படை, பரிவாரங்களை வரவழைத்து

அவ்வூரில் நிலையாகத் தங்கச்செய்தார். அவ்வூரே உடையார்பாளையம் என் அழைக்கப்

படுகிறது. நல்லப்ப உடையார் பல அரசர்களுக்கு அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்தார்.

முஸ்லீம் படையெடுப்புக் காலத்தில் காஞ்சிபுரத்திலிருந்து காமாட்சியம்மன் சிலை, வரத

ராசர் சிலை இங்கே கொண்டுவரப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன. உடையார் பாளையத்துக்குச்

சென்றால் அச்சமின்றி இருக்கலாம் என்ற நம்பிக்கை யாவருக்கும் இருந்துவந்தது. புலவர்கள் நல்லப்ப உடையாரைப் பாராட்டிப் பாடல்கள் இயற்றினர்.


அவர் காலத்துக்குப் பின் பல ஜமீன்தார்கள் பட்டத்துக்கு வந்தனர்.

அவர்கள் காட்டைத் திருத்தி நாடாக்கினர். அதனால் உடையார்

பாளையத்துக்கு வருவாய் குவிந்தது. ஜமீன்தார்கள் பற்பல அறச்

செயல்கள் செய்தனர். ரங்கப்ப உடையார் என்னும் ஜமீன்தார்

தமிழ், வட மொழிகளில் புலமை மிக்கவராகத்  திகழ்ந்த போதிலும்

ஞானியைப் போல் பற்றற்ற மனநிலையில் ஆட்சி நடத்தினார்.

துறவுகொள்ள விரும்பித் தம் மகன் யுவரங்க உடையாரிடம் ஆட்சிப்

பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் தவம்புரியலானார்.


உடையார் பாளையத்தில் ஆட்சிபுரிந்த ஜமீன்தார்களிலேயே யுவரங்க

உடையார் புகழ் மற்றவர்களை விஞ்சி நிற்கிறது. அவர் தமிழில் நிகரற்ற

புலமையுடன் திகழ்ந்தார். வடமொழியிலும், இசையிலும் மிகச்சிறந்த

பயிற்சி பெற்றிருந்தார். தமிழ்ப் புலவர்களாயினும், வடமொழி விற்பன்னர்க

ளாயினும், இசை மேதைகள் ஆயினும் , யுவரங்க உடையாரிடம் தம் திறனை

வெளிப்படுத்திப் பரிசில் பெறுவதையே இலக்காகக் கொண்டிருந்தனர்.

யுவரங்க உடையார் பயறணீச்சுரத்து அம்மன் மீது நறுமலர்ப் பூங்குழல்

நாயகி மாலை என்னும் சிற்றிலக்கியம் இயற்றியுள்ளார். அதில் ஒரு பாடல்:

"தனந்தரு வாய்கல்வி கற்கும் அறிவொடு சாந்தமிகு

மனந்தரு வாய்நின்னைப் போற்றும் தகைக்குவண் சாதுசங்க

இனந்தரு வாய்நின் திருநோக்கம் வைக்க இலங்குறும்ஆ

னனந்தரு வாய்நல் நறுமலர்ப் பூங்குழல் நாயகியே!"

(இலங்குறும் ஆனனம்=விளங்கும் முகம்; ஆனனம்=முகம்).

ஒரு புலவர் திருவரங்கருக்கு இணையாக யுவரங்கரை ஒப்பிட்டுப்

பாடியுள்ளார். பிடல் பின்வருமாறு:

"கச்சி யுவரங்கன், காவேரி அந்தரங்கன்,

இச்சகத்தில் என்றும் இரண்டரங்கர்--மெச்சுறவே

இந்தரங்கன் யாவரையும் ரட்சிப்பான் என்றெண்ணி

அந்தரங்கன் கண்ணுறங்கி னான்."


இதைவிடவும் ஒரு புலவர் யுவரங்கர் மட்டுமே முழுத் தாதா

(வள்ளல், கொடையாளி) ஏனையோர் வீசம், அரைக்கால், கால்,

அரை மற்றும் முக்கால் அளவுக்கு வள்ளல்/கொடையாளி ஆவர்

என்று உரத்துப் பாடியுள்ளார். பாடல் பின்வருமாறு:

" சந்திரன்வீ  சம்குமணர் அரைக்கால் தாதா;

   சவிதாவின் கான்முளையே  கால்தா தாவாம் 

இந்தெனும்வாள் நுதலாள்தன் பாகத்(து) 

   எம்மான்

     ஈசனையே அரைத்தாதா என்ன லாகும்;

வந்(து)இரக்கும் முகுந்தனுக்(கு)ஈ  முக்கால்  

     தாதா

மாவலியே எனப்பெரியோர் வழங்கு வார்கள்;

இந்திரனாம் கச்சியுவ ரங்க மன்னன்

    என்றுமுழுத் தாதாவென்(று) இயம்ப லாமே.

(குறிப்பு: தாதா என்னும் சொல் தந்தை, தாத்தா, பெரியோன்,

கொடையாளி, பிரமன் முதலான பொருளைத் தரும். தற்காலத்தில்

அச்சொல் லுக்கு வேறுவிதமான அர்த்தம் கொள்கின்றனர்).

பாடலின் பொருள்:

பதினாறு கலைகளையுடைய நிலவு ஒவ்வொரு நாளும் ஒரு கலையே

சூரியனுக்குத் தருவதால் வீசம் அளவு கொடையாளி. தம் தலையையே புலவருக்குத்

தானமாகக் கொடுக்க முன்வந்த குமணர் அரைக்கால் அளவுக்கு வள்ளல்;

ஏனெனில் உடலில் எட்டில் ஒரு பங்கு தலையாகும். அதாவது அரைக்கால் அளவே

கொடை தர முன்வந்தார். அதனால் அரைக்கால் கொடையாளி யாவார்.

சவிதாவின் கான்முளை--சூரியனின் மகனான கர்ணன் ஒரு நாளில் 15

நாழிகை மட்டுமே கொடை கொடுப்பார். அதனால் கால் அளவு கொடையாளி.

பிறை நிலவு போன்ற நெற்றியையுடைய பார்வதியை இடப்பாகத்தில்

கொண்ட சிவபெருமான் அரைக் கொடையாளி. மகாபலி சக்கரவர்த்தியிடம்

வாமன உருவத்தில் வந்து யாசித்து மூன்றடி மண்ணைக் கொடையாகப்

பெற்றார் விஷ்ணு. மகாபலியின்கொடை முக்கால் கொடையாகும். ஆனால்,

இந்திரனைப் போன்ற பாளையக்காரரான யுவரங்கர் முழுக் கொடையாளி

என்று உறுதியாகச் சொல்லலாமே.


உடையார் பாளையத்தில் யுவரங்க உடையாருக்குப் பின் பற்பல ஜமீன்தார்கள்

ஆண்டனர். பிற்பாடு ஜமீன்தாரி முறையை ஒழித்து விட்டார்கள். உடையார்

பாளையம் சரித்திரத்தில் யுவரங்க உடையார் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.


பார்வை:

'நல்லுரைக் கோவை'(இரண்டாம் பாகம்)--நூலாசிரியர் டாக்டர் உ. வே.சாமிநாதையர்.