"காய்ச்சிய பாலைக் குடி, போ" என்றேன்; உடன்போக்கில் சென்றனளே.
இடைக்காலப் புலவர் ஒருவர் தனிப்பாடல் ஒன்று இயற்றியுள்ளார்.
அதில் ஒரு நாடகத்தை அரங்கேற்றுகின்றார். ஒரு குடும்பத்தில் ஓர்
அன்னையும் அவள் மகளும் வாழ்ந்து வருகின்றனர். மகள் வயது
பதினான்கு அல்லது பதினாறு இருக்கலாம். பருவச் செழிப்போடு
மகள் திகழ்கின்றாள். அன்னை தன் மகளை மிகவும் வாஞ்சையுடன்
பேணிப்பேணி வளர்த்துவருகின்றாள். அவள் தந்தையார் பொருளீட்ட
வெளியூர் சென்றிருக்கின்றார். எனவே, கூடுதல் அக்கறையோடும்
கவனத்தோடும் அன்னை மகளைப் பாதுகாப்புடன் வளர்த்து வருகிறாள்.
அன்றாடம் காலையும் மாலையும் மகளுக்குப் பாலைக் காய்ச்சிக்
குடிக்கக் கொடுப்பது அன்னையின் வழக்கம்.
அண்மைக் காலமாக மகளுடைய நடவடிக்கைகளில் சிற்சில மாற்றங்கள்
தெரிகின்றன. வேளாவேளைக்கு உண்பதில் நாட்டமில்லை. அடிக்கடி
தட்டொளி(உலோகக் கண்ணாடி)யில் முகத்தைப் பார்த்துத் திருத்திக்கொள்
கின்றாள். தோழியுடன் நெடுநேரம் எதைப்பற்றியோ உரையாடல் நிகழ்த்து
கின்றாள். பாவைகளை வைத்து விளையாடும் நேரம் சுருங்கிவிட்டது.
அன்னை இம்மாற்றங்களைக் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள். ஆனாலும்
மகள் மீது யாதொரு ஐயமும் ஏற்படவேயில்லை. நியாயமாக மகள் உரிய பருவம்
எய்தியதும் அன்னையின் கவனமும் கண்காணிப்பும் அதிகரித்திருத்தல் வேண்டும்.
ஆனால் மகளை இன்னும் சிறுமியாகவே அன்னை நோக்கினாள்; வளர்ந்துவரும்
பருவக் குமரி என்பதனை மறந்து விட்டாள்.
விளைவு என்னவென்றால், மகள் ஒரு தலைவனைக் கண்டு அவன்பால் மனத்தைப்
பறிகொடுத்துவிட்டாள். களவியல் காதல் என்பதனால் அன்னைக்கோ, அருகிருக்கும்
ஏனையோருக்கோ தெரிய வாய்ப்பில்லாமல் போயிற்று. தோழிக்குத் தெரிந்திருக்கும்.
ஆனால், தலைவியோ அவளின் தோழியோ அறத்தொடு நின்று(களவுக் காதலை வெளிப்பட
உரைத்தல்) வெளிப்பட உரைத்தால் மட்டுமே மற்றவர்களுக்குத் தெரியவரும். கடந்த ஓரிரு
நாட்களாகத் தலைவியும் தோழியும் அடிக்கடி சந்தித்து உரையாடிவந்தனர். அரவம்(சத்தம்)
வெளியே கேட்காத வகையினில் கமுக்கமாகப் பேசிக் கொண்டனர். அன்னை யாதொன்றும்
அறியாமல் தன் இயல்புப் படி வீட்டுப் பணிகளைச் செய்துவந்தாள். வழக்கம்போல, மகளிடம்
காலை மாலை பாலைக் காய்ச்சிக் குடிக்கக் கொடுத்துவந்தாள். குறிப்பிட்ட நாளும் வந்தது.
அன்று முழுவதுமே தலைவியும் தோழியும் ஒருவிதப் பதற்றத்துடன் காணப்பட்டனர். அன்று
மாலை(முன் இரவு) அன்னை மகளிடம் "காய்ச்சிய பாலைக் குடி போ" என்று கூறினாள்.
காய்ச்சிய பாலை ஒரு கலத்தில் வைத்துள்ளேன். அங்குபோய் அதனைக் குடி" என்னும்
பொருள்படக் கூறினாள். சிறிது நேரம் நகர்ந்தது. அனைவரும் உறங்கத் தொடங்கிவிட்டனர்.
மறுநாள் பொழுது புலர்ந்தது. அன்னை தன் அருகில் படுத்திருந்த மகளைக் காணாமல்
துடித்துப் போய்விட்டாள். எங்கே போயிருப்பாள்? என்ன நேர்ந்தது? என்று அறியாமல்
குழம்பினாள். தோழியின் வீட்டுக்குச் சென்று அவளிடம் தன்மகளைப்பற்றிய விவரம்
கேட்டாள். தோழி மென்று விழுங்கினாள். பின் தனக்குத் தெரிந்த தகவல் அனைத்தையும்
வெளிப்படுத்தி விட்டாள். அன்னைக்கு மகள் தன் தலைவனுடன் உடன்போக்கு
மேற்கொண்டு சென்றுவிட்டாள் என்னும் உண்மை புரிந்தது. " காய்ச்சிய பாலைக் குடி போ"
என்று அவள் உடல் நலத்தைப் பேணும் வழி சொன்னேன். அவள் வேறு விதமாகப் பொருள்
கொண்டுவிட்டாள். "பாலை நிலத்துக்கு உடன்போக்கில் தலைவனுடன் குடி போ" என்று
தவறான அர்த்தம் கொண்டு அதற்கேற்ற நடவடிக்கை மேற்கொண்டுவிட்டாள்" என்று
புலம்பினாள். அவள் புலம்பிய பாடல் வருமாறு:
"பூச்சிலைக் கன்னல்கைச் சேடா சலேந்த்ரன் பொருப்பிடத்தே
காய்ச்சிய பாலைக் குடிபோவென் றேனந்தக் காரிகையும்
பேச்சிலெத் துக்கள்ளி பின்கைகை ராமற்கு முன்சொன்னதா
வாய்ச்சுதென் றேநடந் தாள்பாலை யான வனந்தனிலே!".
பொருள்:
கரும்பாகிய வில்லையும் கை நிறைந்த பூவையுமுடைய மன்மதன் போன்ற
சேடாசலேந்திரனுடைய(சேஷாசலேந்திரனுடைய) மலையிடத்தே, காய்ச்சிய
பாலைக் குடிக்கும்படி போகச் சொன்னேன்; அந்தப் பெண்ணாகிய என்மகளும்,
சொல்லுகின்ற சொல்லுக்குப் பொருள் வேறு கொண்டு ஏமாற்றுகின்ற திருட்டுக்
குணமுடையவளாதலால், கைகேசி இராமனுக்குக் காட்டுக்குப் போகும்படி
சொன்னதுபோலத் தனக்கும் என் பேச்சு பொருத்தமானது என்றெண்ணிப் பாலை யான
வனந்தனிலே தலைவன் பின் சென்றுவிட்டாள்.
சங்ககாலத்தில் உடன்போக்கு செல்வது காதலில் நடைபெறும் சாதாரண நிகழ்ச்சி.
சமுகம் இதனைக் காதலில் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டது. தொல்காப்பியர்
இதனைக் "கொண்டுதலைக் கழிதல்" என்ற பெயரில் குறிப்பிடுகின்றார். தலைவன்
தலைவியை அவளது பெற்றோர் அவனுக்கு மணம் செய்துதர மறுக்கும் பொழுது
தோழியின் உதவியால் தலைவியை மணந்துகொள்வதற்காகத் தன்னூருக்குக்
கொண்டு செல்லல். இதில் தலைக் கழிவு என்பது தலைமையாகிய செலவு எனப்
பொருள்படும். சுருங்கக் கூறின், கொண்டுதலைக் கழிதலாவது, உடன் கொண்டு
பெயர்தலாகும். தற்காலத்தில், உடன்போக்கு சமுக அங்கீகாரத்தை இழந்துவிட்டதோ?
என்று எண்ணத் தூண்டுகிறது. ஒருவித வெறுப்புடன் கொச்சையாக. "ஓடிப் போனவள்/
ஓடி வந்தவள் என்ற கொச்சையான பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.
தொல்காப்பியர்க்கும் முன்பே பெரியோர்களால் கட்டமைக்கப்பட்ட இந்த நிகழ்வு இன்று
சிறப்பிழந்து நோக்கப்படுகிறது.
பார்வை: தனிப்பாடல் திரட்டு 2 ஆம் பாகம்-- உரையாசிரியர் கா.சு.பிள்ளை,
வர்த்தமானன் பதிப்பகம்.