Wednesday 26 December 2018

அகமா? புறமா? எது சிறந்தது?

அகமா?  புறமா?  எது  சிறந்தது?

அகமும்  புறமும்  தமிழ்ப்பண்பை
   அழகாய்  இயம்பும்  கூறுகளாம்;
நகமும்  தசையும்  போல்,ஆண்,பெண்
   நடத்தும் வாழ்க்கை  அகமாகும்;
வெகுண்டு  பகைவர்  தமையெதிர்த்து
   வீர மாகப்  பொருதல்,புறம்;
தகைமை  சான்ற  இப்பகுப்பே
   தமிழர்  புகழும்  இலக்கியமாம்.

வையம்  முழுதும்  வீரத்தை
  வணங்கிப்  புகழ்ந்த  காலமது;
நையும்  மேனி  துவண்டாலும்
  நமனே  எதிர்த்துப்  பொருதாலும்
செய்யும்  போரில்  பின்வாங்கார்;
  செத்தால்  நடுகல்  நிறுவி,மக்கள்
தெய்வம்  போலத்  தொழுதிடுவர்;
  சிறிதும்  தயக்கம்  காட்டாரே.

"போரில்  வீர  மரணமுற்றார்,
   புகுவர்  துறக்கம்,  நிச்சயமாய்;"
பாரில்  மக்கள்  இவ்வாறு
    பறைதல்  வழக்கம்;  ஆதலினால்
நேரில்  யானை  பிளிறிடினும்
    நெஞ்சை  நிமிர்த்தி  எதிர்த்திட்டார்;
ஊரில்  மக்கள்  புகழ்வரென
  ஒப்பில்  வீரம்  காட்டினரே.

சண்டை  தனிலே, போர்செய்யும்
  சமயம்  மார்பில்  புண்,காயம்
உண்டா  கும்;போர்க்  காயத்தை
  உயர்வாய்  மதிப்பர், பொதுமக்கள்;
அண்டும்  பகைவர்  தமைக்கண்டே
  அஞ்சி  யோடிப்  புறங்கொடுக்கின்
மண்டும்  வார்த்தை  யாற்சுடுவர்;
  மானம்  காற்றில்  பறந்திடுமே.

வீரம்  என்னும்  போதையினால்
  விளைந்த  சேதம்  ஏராளம்;
தாரம்  பல்லோர்  கணவர்களைச்
  சமரில்  இழந்து  விதவையெனும்
பேரைப்  பெற்றுச் சீரழிந்தார்;
  பிள்ளை, தமையன், பெற்றவனைப்
போரில்  இழந்து  பெண்டிர்பலர்
  புலம்பி  யழுது  புரண்டனரே.

உலகம் முழுதும்  இதேநிலைதான்;
  உரம்சேர்  வீரக்  களிவெறியால்
பலதே  சத்தின்  மாந்தர்களும்
 பகைத்துப்  போரில்  அழிந்தனரே;
அலகில்  அழிவைத்  தடுத்திடத்தான்
  அறிஞர்  காதல்  உணர்வுகளைத்
தலைமைப்  பண்பாய்  முன்மொழிந்தார்;
  சற்றே  வீரம்  சரிந்ததுவே.

இனிய  தமிழில்  புறப்பொருளை
  இரண்டே  நூல்கள்  எடுத்தியம்பும்;
கனிபோற்  புறநா னூறு, மற்றும்
  கவரும்  பதிற்றுப்  பத்துமவை.
நனிஇன்  பத்தை  நல்குகின்ற
  நற்றி  ணைபோல்  பலநூல்கள்
தனித்த  சுவைசேர்  அகப்பொருளைச்
  சாற்றும்  வகையில்  தோன்றினவே.

காதல்  வீரம்  இவையிரண்டில்
  காதல்  சற்றே  உயர்வுடைத்தாம்;
மோதல் , சண்டை, தவிர்த்திடலாம்;
 மூளும்  போரை  விலக்கிடலாம்;
தீதில்  அன்பைப்  பரப்பிடுவீர்;
  தேவை  யிலாத  போர்,தவிர்ப்பீர்;
ஆத  லாலே  காதலினால்
  அனைவர்  மனத்தைக்  கவர்வீரே.

தேவை  யின்றி  வீரத்தைச்
   சிறிதும்  காட்ட  எண்ணாதீர்;
சாவை  நல்கும்  போரினைத்தான்
   தவிர்க்க  வேண்டின்  மாந்தரெலாம்
பூவை  யொடுவாழ்  இல்லறத்தைப்
  பொலிவாய்  நடத்தி  உய்ந்திடுதல்
தீர்வை  யளிக்கும்; அகவாழ்வைச்
  சிறக்க  வாழ்வீர்  புவியோரே!

நமது  நாட்டைக்  காப்பதற்கு
  நயஞ்சேர்  வீரம்  அவசியம்தான்;
அமைதி  குலைந்து  போர்மூண்டால்
  அழிவும்  இழப்பும்  ஏராளம்;
சமுகம்  மக்கள் தொகையிழப்பால்
  சந்திக்  கின்ற  சிக்கல்பல;
கமழும்  காதல்  அகவாழ்வால்
  காணும்  நன்மை  பலப்பலவே.

மனைவி  யொடுவாழ்  அகவாழ்வால்
 மக்கள்  தொகையைப்  பெருக்கிடலாம்;
நினைக்கும்  அமைதி  நிலவிடுமே;
  நேர்மை  யில்லாப்  பிறநாட்டார்,
தினையின்  அளவும்  நம்நிலத்தைத்
  திருட்டுத்  தனமாய்  அபகரிக்க
வினைகள்  செய்தால், மும்மடங்கு
  வீரம்  காட்டி  முறியடிப்போம்.

அருஞ்சொற்  பொருள்:
பொருதல்--போர்புரிதல்; நமன்---யமன்;
துறக்கம்--சொர்க்கம்; அண்டும்--நெருங்கும்;
புறங்கொடுக்கின்--புறமுதுகு  காட்டினால்
சமர்--போர்; பூவை--பெண்டிர்
தகைமை--மேன்மை;








   

Wednesday 19 December 2018

நற்றிணை நானூறு.

      நற்றிணை  நானூறு

சங்க  இலக்கியங்கள் இரண்டு பெரும் பிரிவாகப்
பிரிக்கப்படும்.  அவையாவன: பதினெண் மேற்
கணக்கு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு என்பன
வாகும்.  பதினெண் மேற்கணக்கில் எட்டுத்தொகை
மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பகுப்பின்கீழ் முறையே
எட்டுத் தொகை நூல்களும்,  பத்துப்  பெரும் தனி
நூல்களும் அடங்கும்.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்
கள் அடியளவு குறைந்த அறநூல்கள் ஆகும். மேற்
கணக்கு நூல்கள் அடியளவு மிக்கவை.  கீழ்க்கணக்கு
நூல்கள் இரண்டு அடி முதல் நான்கடி உள்ளிட்ட பாடல்
களைக் கொண்டவை. மேற்கணக்கு நூல்கள்நான்கு
அடி முதல் எத்தனை  அடி முடிய வேண்டுமென்றாலும்
எழுத இடம் தருபவை.  பதினெண்மேற்கணக்கு நூல்
களில் நாம் பார்க்கவிருக்கும் நூல் எட்டுத்தொகைப்
பிரிவில்  அடங்கிய நற்றிணை நானூறு என்னும்
நூலாகும்.  எட்டுத்தொகை நூல்கள் எவை எவை?
"நற்றிணை  நல்ல  குறுந்தொகை  ஐங்குறுநூ(று)
ஒத்த  பதிற்றுப்பத்(து)  ஓங்கு  பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு)  அகம்,புறம்என்(று)
இத்திறத்த  எட்டுத்  தொகை."
அதாவது, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,
புறநானூறு என்னும் எட்டு நூல்களாகும்.  இவை ஒவ்
வொன்றும் தனித்தனிப் புலவரால் பாடப்பட்டதன்று.
பல புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாடிய
பாடல்களை அடி வரையறைப்படி பிரித்து ஒவ்வொரு
நூலையும் தொகுத்து உருவாக்கினார்கள். அதன்படி,
நற்றிணை என்பது ஒன்பது அடி முதலாகப் பன்னிரண்டு
அடி  முடிய உள்ள நானூறு பாடல்களைக் கொண்டதாக
உருவாக்கினார்கள். அகப்பொருள் குறித்த பாடல்களைக்
கொண்ட நூல். நற்றிணை நானூறு என்பதுதான் இந்
நூலின் பெயர் ஆகும்.  காலப்போக்கில் நற்றிணை
என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. நூல் முழுவதும்
அகவற் பாக்களால் பாடப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்த
புலவர் யாரெனத் தெரியவில்லை.  ஆனால் தொகுப்பித்
தோர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி ஆவார்.

இனி, ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாடல் வீதம் ஐந்து
திணைகளுக்கும் ஐந்து பாடல்களைப் பார்ப்போம்:
குறிஞ்சித் திணை: (புலவர்:கயமனார்)எண்:324
"அந்தோ! தானே  அளியள்  தாயே;
நொந்தழி  அவலமொடு  என்னாகு  வள்கொல்,
பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள்;
கோடுமுற்று  யானை  காடுடன்  நிறைதர,
நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை  வரைப்பின்,
ஆடுபந்து உருட்டுநள்  போல  ஓடி,
அம்சில்  ஓதி இவளுறும்
பஞ்சி  மெல்லடி  நடைபயிற்  றும்மே".
பொருள்:
காதலியின் நடை எழிலைக் கண்டு வியந்த காதலன்
தன் தோழனிடம் கூறியது:
"அந்தோ பரிதாபம்.  இவள் தாய் இரக்கப்பட வேண்டியவள்.
பொன் போன்ற மேனியை யுடைய தன் மகள் நலத்தை
விரும்பும் அத்தாயானவள் எவ்வளவு அவலம் அடைகின்
றாள்.  இவள் தந்தை  யானையின்  முற்றிய தந்தம் போல்
நெய் தடவப்பட்ட  வேலைக் கொண்டு  காக்கும் செல்வம்
உடையவன். அவன் வீடு அகன்று பரந்துள்ளது. அவ்வீட்டி
னுள் சில கூந்தல்முடி பறக்க ஓடும் பந்தைக் காலால்
உருட்டும் மகளுக்குக் கால் நோகுமே யென்று அன்னாள்
கூடவே ஓடும் தாய் இரக்கப்படவேண்டியவள் தான். மகளின்
பஞ்சு போன்ற பாதம் நோகுமே என்று தாய் வருந்த, மகளோ
தாய்க்கே நடை பயிற்றுவது போல முன்னால் ஓடுகின்றாள்.
உண்மையிலேயே தாய் பரிதாபத்துக்குரியவளதான்.
அந்நாட்களில் பெண்டிர் கால்பந்து விளையாடினர் என்னும்
செய்தி கவனத்துக்கு உரியது.

முல்லைத் திணை:(புலவர்:பெயர் தெரியவில்லை)எண்:169
"முன்னியது  முடித்தனம்  ஆயின், நன்னுதல்
வருவம்  என்னும்  பருவரல். தீர,
படும்கொல், வாழி, நெடும்சுவர்ப் பல்லி
பரல்தலை போகிய   சிரல்தலைக்  கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு  முல்லை
ஆடுதலைத்  துருவின்  தோடுதலைப்  பெயர்க்கும்
வன்கை  இடையன் எல்லிப்  பரீஇ,
வெண்போழ்  தைஇய  அலங்கல்அம்  தொடலை
மறுகுடன்  கமழும் மாலை,
சிறுகுடிப்  பாக்கத்தெம்  பெருநக  ரானே!"
பொருள்:
வினைமுற்றி  மறுத்தரா நின்ற தலைவன் தன்
நெஞ்சிற்குக்  கூறியது. ஒரு செயல் கருதி யாம்
பிரிந்து சென்ற பொழுது' என்று திரும்பி வருவீர்?'
என்று வருத்தத்துடன் வினவிய தலைவிக்கு
'யாம் எந்தச் செயலுக்காகச் செல்கின்றோமோ,
அச்செயல் முடிந்தவுடனே அன்றே திரும்பிடுவோம்
என உரைத்த பொழுது வருத்தமுற்றாள்.அந்தத் துயரைப்
போக்கும் விதமாக யாம்  திரும்பிக்கொண்டிருக்கின்றோம்.
எமது வருகையை எமது பெரிய மாளிகைச் சுவரில்
ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லி அறிகுறியாக அடித்துத்
தெரிவிக்குமா? எனத் தலைவன் தன் நெஞ்சுக்குச்
சொல்லுகின்றான்.. பல்லி எழுப்பும் ஒலிக்குப் பலன்
பார்க்கும் வழக்கம் முன்னரே நிலவியது போலும்.
வினை என்பது பொருள் ஈட்டுதலைக் குறித்தது.

நெய்தல் திணை:(புலவர்:பெயர் தெரியவில்லை)எண்:172
"விளையாடு  ஆயமொடு வெண்மணல்  அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,
'நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகுமென்று'
அன்னை கூறினள், புன்னையது  நலனே,
அம்ம| நாணுதும், நும்மொடு  நகையே;
விருந்தின்  பாணர்  விளரிசை  கடுப்ப,
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறை கெழு  கொண்க! நீநல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"
பொருள்:
சிறுவயதில் தோழியருடன் கிச்சுக்கிச்சுத்
தம்பலம் விளையாடும் போது புன்னங் கொட்
டையை மறைத்து விளையாடினோம். அதனை
எடுக்க மறந்துவிட்டோம். அப்புன்னை முளைத்து
மரமாக வளர்ந்து விட்டது. அப்புன்னை உனக்குத்
தங்கை என்று என் அன்னை கூறினள். அதனால்
நெய்பெய்த பாலை அதற்கு ஊற்றிவளர்த்து
வந்தேன். இப்போது பெரிய மரமாக வளர்ந்துளது.
இது என் நுவ்வை யானதால் இதனடியில் நின்று
நும்மோடு உரையாட எனக்குக் கூச்சமாக உள்ளது.
இப் புன்னையின்  உயர்ந்த நிழலில் ஏனைய உயிர்
இனங்களும் தங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது நீவிர் எனக்கு உம்மைக் கொடுத்தால்
அச்செய்கை எனக்குக் கூச்சத்தை உண்டாக்கும்.
தலைவி தலைவனிடம் இவ்வாறு கூறியது தமிழ்
இனத்தார் அனைத்து உயிர்களையும் நேசித்து
வாழ்ந்தமையைப் புலப்படுத்தும். மேலும் ஆண்--
பெண் இடையே நிகழ்பவற்றை  மற்றவர் முன்
வெளிப்படுத்தக் கூசினர் என்றும் அறிகிறோம்.

மருதத் திணை:(புலவர்:பரணர்)எண்:300
"சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென, அதனெதிர்
மடத்தகை ஆயம் கைதொழு  தாஅங்கு,
உறுகால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு  இறைஞ்சும்  தண்துறை  ஊரன்
சிறுவளை  விலையெனப் பெருந்தேர் பண்ணி,எம்
முன்கடை  நிறீஇச்  சென்றிசி  னோனே!
நீயும்  தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய்வார்ந்  தன்ன துய்யடங்கு  நரம்பின்
இரும்பாண் ஒக்கல் தலைவன்! பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சைசூழ் பெருங்களிறு போல,எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!"
தோழி தலைவியைப் பற்றித் தலைவனுக்குச்
சொல்லியது. "என் தலைவியை மணக்க விரும்
பியவன்  அவள் வளையல் செய்து அணிந்து
கொள்ளட்டும் என்று தனது பெரிய தேரை
ஓட்டிவந்து  எமது வீட்டு வாயில் முன் நிறுத்தி
விட்டுச் சென்றனன். உனக்கும் அவளை மணம்
செய்து கொள்ள ஆவல் இருந்தால் தேரோடு
வருக; திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடு.
பாணர்களின் தலைவன் அரசன் தழும்பன். அவன்
நகரம் ஊணூர். அந்த ஊரில் யானைகளைப்
பிச்சை யெடுக்கப் பழக்குவர் போலும். அது போலப்
பழக்கப்பட்ட ஆண்யானை போலத் தலைவியின்
இல்லத்துக்கு வந்து தலைவி வீட்டு அட்டிலில்
(சமையல் அறை) கிடைக்கும் கஞ்சியை வாங்கிக்
குடித்துக் கொண்டு தலைவியின் பெற்றோர்
அவளை மணம் முடித்துத் தரும்வரை காத்திருப்
பாய்."  தோழியின் இக்கூற்று வாயிலாக, அந்நாளில்
இக்காலம்போலப்  பரிசம் போட்டுப் பெண்களுக்குப்
 பொருள் கொடுக்கும் வழக்கமும், யானை
யைக் கடைவீதிக்கும் இல்லங்களுக்கும் இட்டுச்
சென்று அன்பளிப்புப் பெறும் வழக்கமும் நிலவின
என்று அறிகின்றோம்.

பாலைத் திணை:(புலவர்:போதனார்) எண்:110
"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்  தொருகை  யேந்தி
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
'உண்'என்று  ஒக்குபு  பிழைப்ப, தெண்ணீர்
முத்தரிப்  பொற்சிலம்பு  ஒலிப்பத் தத்துற்று,
அரிநரைக்  கூந்தற்  செம்முது  செவிலியர்
பரிமெலிந்(து) ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறுவிளை  யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்(டு) உணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ்சோ(று) உள்ளாள்,
ஒழுகுநீர் நுணங்கறல் போல,
பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே!"
பொருள்:
தேன்பெய்த தித்திக்கும் பாலை ஒளிர்கின்ற
தங்கக் கலத்தில் ஏந்திக்கொண்டு நரைமுடி
யுடைய செம்மைமிகு  வயதில் மூத்த செவிலித்
தாயர் 'உண்க' என்று அதட்டுகின்றனர். என்
மகளோ உண்ண மறுக்கின்றாள். அவர்கள்
தம் கையிலிருக்கும் சிறு கோலால் அடிப்பது
போல ஓங்குகின்றனர். என் மகள் தன் கால்
களில் பூட்டியுள்ள முத்துப்பரலைக் கொண்ட
சிலம்பு ஒலியெழுப்ப  வீட்டிலுள்ள  பந்தல்
முழுவதும் சுற்றிவந்து  செவிலித் தாயர் ஏவலை
மீறி நடக்கும் சிறு குறும்புகள் செய்யும் விளை
யாட்டுப் பிள்ளை யாகக் காட்டிக்கொள்கின்றாள்.
இவ்வளவு பொறுப்பற்ற, செல்வச் செழிப்பில்
மிதந்த குறும்புக்காரி திருமணத்துக்குப் பிறகு
தன் கணவன் குடும்பத்துக்குப் பெருமையைச்
சேர்க்கும் விதமாக நடந்து கொள்ள எங்கு கற்றுக்
கொண்டாள்.? அவள் கணவன் குடும்பம் சற்றே
வறுமையில் வாழும் குடும்பம்.  என்மகள் தன்
தந்தை அனுப்பி வைக்கும் உணவை உண்ண
மறுக்கிறாள். கணவன் வீட்டு நிலைமைக்கு ஏற்ப
ஒருவேளை பட்டினி கிடந்து மறுவேளை உண்ணு
கின்றாள். இவ்வளவு பாங்கையும் ஒழுகலாற்றையும்
எங்கு கற்றுக் கொண்டாள்?  என்மகளின் குடும்ப
ஒழுக்கம் வலிமையாயுள்ளது என்று கூறித் தாய்
வியக்கின்றாள்.

நற்றிணை நூலில் உள்ள நானூறு பாடல்களுமே
இலக்கியச்சுவை கொண்டவை.  மேலும் சங்க
காலத்தில்  நிலவிய  பழக்க வழக்கங்களை எடுத்துச்
சொல்வன. நற்றிணை நானூற்றைப் படித்து  மகிழ்
வோமே!










Wednesday 12 December 2018

பெண்ணின் பெருமை

பல்வேறு  நிலைகளில் பெண்ணின்  பெருமை

காதலியாக:
இன்னமுதே! ஏந்திழையே!  என்றனுயிர்க்  காதல்
அன்னமுனைக் காணுகின்ற  ஆசையினால் வந்தேன்;
கன்னனிகர் பேச்சுடையாய்! காதலியே! பித்தன்
என்றனையுன் மூங்கைமொழி இன்னலுறச் செய்யும்.

காவிவிழிக் காரிகையே!  கண்ணசைவு காட்டாய்;
ஆவியினைப் போக்கினை,நீ; அஞ்சுகமே! பேசாய்;
ஓவியமே! பேரழகே! உள்ளமகிழ்  வெய்தத்
தேவதையே! வாய்திறந்து  சிற்சிலசொல் செப்பாய்.

பாலைநிலம், பூம்பொதும்பு  பார்க்குமிடந் தோறுங்
கோலமுகந்  தோன்றியதால் கூடிடுமே, யின்னல்;
மாலையினில் நேரில்வந்து வாஞ்சையுடன் சொல்வாய்;
சோலைதனில் பாடிடுவோம், துள்ளிவிளை  யாடி.

மனைவியாக:

தாய்க்குப்பின் தாரமெனச் சான்றோர்கள்
   மொழிந்திட்டார்; தக்க உண்மை;
நோய்நொடியில் நான்வீழ்ந்தால் அருகிருந்து
  துணைசெய்வாள்;  நொந்த போது
தாய்மடியில்  சாய்வதுபோல் அவள்மடியில்
  சாய்ந்திடுவேன்;  தளர்ச்சி  நீங்கும்;
தூய்மைமிகும்  அன்பாலே பிணைத்திடுவாள்;
   மீறமனம்  துணியா  தம்மா!

சிக்கல்வரும் போதெல்லாம் சிந்தித்துச்
   சீர்தூக்கிச்  சிறப்பு  மிக்க
தக்கதொரு  வழிசொல்வாள்; மதியமைச்சர்
  போல்நடப்பாள்;  தாயைப் போல
அக்கறையாய்ச்  சமைத்திடுவாள்; உடற்கின்னல்
  செய்யாத  அன்னம்  தோதாய்
எக்கணமும் நல்கிடுவாள்; பிள்ளைகளைப்
  பேணிடுவாள்;  எனையும்  தானே!

அன்னையையும்  மனைவியையும் ஒப்பிட்டுப்
   பார்க்கையிலே  அன்னார் சற்றும்
தன்னலத்தைப்  பேணாத  சால்புடையர்;
  அன்புடையர்;  தகைமை  சான்ற
தொன்மைமிகு  குடிப்பெருமை, குடும்பத்தின்
  மாண்புகளைக்  கொண்டு  செல்வர்;
முன்னவர்க்குப்  பின்வந்த  மற்றொருதாய்
  எனவேநான்  மொழிவேன்  மாதோ!

முதுமையில்  பாட்டியாக:

பாட்டியின்  பெருமை  தன்னைப்
   பகர்ந்திடல்  எளிய  தாமோ?
சேட்டைசெய்  பேரன்  பேத்தி
  சிந்தனை  செழிக்கும்  வண்ணம்
நாட்டினில்  வாழ்ந்த  வீரர்,
 நல்லவர்  கதையைச் சொல்லி
ஊட்டுவர்  உணவை,  மேலாம்
 உயர்ந்தநல்  நெறியும்  சேர்த்தே.

அன்னையோ,  தந்தை  யாரோ
  ஆத்திரம்  அடைந்து  பேரன்
தன்னையே திட்டும்  போதும்
  சற்றுக்கை  ஓங்கும்  போதும்
இன்னலை  நீக்கும்  பாட்டி
  இருப்பிடம் தேடி ஓட,
அன்னவன் அச்சம் போக்க
  ஆறுதல்  சொல்லு  வாரே!

கரும்பினைப்  போலும்  பேச்சால்
  கவர்ந்தநல்  காதல்  பெண்ணாய்,
உருகிடும்  அன்பால்  கொண்கன்
 உளம்கவர்  மனைவி  யாக,
பெருகிடும்  நேசம்  காட்டும்
  பேரன்புப்  பாட்டி  யாக
அரும்பெரும்  தொண்டு  செய்யும்
  அன்னையர்  குலமே  வாழ்க!

அருஞ்சொற் பொருள்:
மூங்கை---ஊமை; மூங்கைமொழி---மௌனமொழி;
காவி---குவளைமலர்; பொதும்பு---சோலை;
பிணைத்தல்---கட்டுதல்; கொண்கன்---கணவன்.
கன்னனிகர்--கன்னல்(கரும்பு)நிகர்




Tuesday 4 December 2018

நற்றமிழ் பேசாத நாவென்ன நாவே!

நற்றமிழ்  பேசாத  நாவென்ன  நாவே!

கொற்றவராம்  பாண்டியரும்  சோழர்களும்  சேரர்களும்
கற்றவர்தொல்  காப்பியரும்  கம்பரும்  வள்ளுவரும்
மற்றைப்  புலவர்களும்  வாழ்த்தி  வளர்த்தமொழி;
நற்றமிழ்  பேசாத  நாவென்ன  நாவே,
நயமாய்த்  தமிழ்பேசா  நாவென்ன  நாவே!

பன்னெடுங்  காலம்  பயன்பாட்டில்  உள்ளவற்றில்
தன்னெதிர்  இல்லாத்  தமிழ்நற்  சிறப்புடைத்து;
முன்னைப்  பழமையும்  பின்னைப்  புதுமையும்சேர்
கன்னித்  தமிழ்கல்லாக்  கண்ணென்ன  கண்ணே,
கவின்தமிழ்  கல்லாத  கண்ணென்ன  கண்ணே!

மாந்தர்கள்  பேசும்  வளஞ்சேர்  மொழிகளிலே
ஏந்துபுகழ்ச்  செம்மொழிகள்  ஏழினுள்  ஒன்றான
ஆய்ந்தறிஞர்  போற்றும்  அரிய  மொழியான
தீந்தமிழ்  கேளாச்  செவியென்  செவியே,
        செழுந்தமிழ்  கேளாச்  செவியென்  செவியே!
(செவியென்ன  என்னும் வார்த்தையில் 'ன' மறைந்தது
கடைக்குறை விகாரம்)

வெல்லும்  மீனக்  கொடிதாங்கி
        விரிந்து  பரந்த  குமரியெனும்
        மேன்மைக்  கண்டம்  தனையாண்ட
        வீரம்  மிக்க  பாண்டியர்கள்
அல்லும்  பகலும்  தமிழ்ப்பணிக்காய்
         அயரா(து)  உழைத்துத்  தமிழ்ச்சங்கம்
          அமைக்கப்,  புலவர்  அகத்தியரும்
           ஆன்றோர்  தொல்காப்  பியனாரும்
சொல்லும்  பொருளும்  வளம்பெறவே
           துருவி  ஆய்ந்து  பாடினரே;
           தொடர்ந்து  மற்றைப்  புலவர்களும்
           தூய   நெறிகள்  வகுத்தனரே;
கொல்லும்  கடலால்  தென்மதுரை
           கபாட  புரங்கள்  மூழ்கியதால்
           குமரி  யென்னும்  பெருங்கண்டம்
            கொள்ளை  போன(து) ஐயகோ!


குமரிக்  கண்டம்  மறைந்தாலும்
        .  குலையோம்,  தளரோம்;  நெஞ்சுறுதி
            கொண்டு  நம்தாய்  மொழியினையே
            கொலுவீற்  றிருக்கச்  செய்திடுவோம்;
இமயம்  போன்ற  பெருமுயற்சி
            இயற்றி  எல்லாத்  துறைகளிலும்
             எழிலார்  தமிழிற்  பலநூல்கள்
             எழுதிக்  குவித்தல்  அவசியமே;
நுமது  மொழியிற்  பேசிடுவீர்;
            நுமது  மொழியில்  எழுதிடுவீர்;
             நுமது  மொழியிற்  கற்றிடுவீர்;
             நுமது  மொழியிற்  கற்பிப்பீர்;
சமமாய்  ஏனை  மொழியோடு
            தமிழும்  போட்டி  போடும்வகை
            சகல  அறிவுத்  தளங்களிலும்
            தயக்க  மின்றி  வளர்ப்போமே!


வையத்(து)  இலங்கும்  மொழிகளிலே
           வளமும்  பொருளும்  சேர்ந்தமொழி;
           மக்கள்  நாவில்  நடமாடும்
       .   மனத்தை  மயக்கும்  இனியமொழி;
ஐயம்,  திரிபுக்(கு)  இடமின்றி
        .  ஆழ்ந்த  அர்த்தம்  கொண்டமொழி;
            ஆட்டிப்  படைக்கும்  இலக்கணநூல்
             அழகாய்  அமையப்  பெற்றமொழி;
தெய்வம்  தொழுதற்(கு)  ஏற்றமொழி;
             செவிகட்  கினிய  இசையின்மொழி;
              செழிப்பாய்  வேர்ச்சொல்  செறிந்தமொழி;
              சிறந்த  மேடைப்  பேச்சுமொழி;
உய்யும்  கலைகள்  அனைத்தையுமே
             உருவாக்  கிடும்நற்  செம்மொழியாம்;
             உலகம்  போற்றும் அரியமொழி;
              ஒளிரும்  தமிழே  வாழியவே!

   

தமிழ்த்தாய் தன்னிலை கூறல்.

அன்றொரு நாளென் வீட்டில்
   அயர்வுடன் உறங்கும் போது
    கன்றிய முகமும் முற்றும்
  கலங்கிய கண்ணும் கொண்ட
  கன்னியென் கனவில் வந்து
 கவலையாய்நின்றாள்;"அம்மா
என்றன்முன் தோன்றும் நீவிர்
யாரெனச் சொல்க"என்றேன்.


மூத்ததாம்  மொழிகள் தம்முள்
  முதன்மையாம் மொழியென்
   றென்னை
ஆர்த்தநல் அறிஞர் சொல்வர்;
 அருந்தமிழ் என்றன் பேராம்";
வார்த்தைகள் இவற்றைக்
கேட்டு்
வணங்கியே நின்று "தாயே!
சீர்த்திசேர் அன்னாய் போற்றி
செந்தமிழ்ச் செல்வி போற்றி!


வாடிய முகத்தி னோடு
 வந்ததன் கார ணத்தை
மூடியே மறைத்தி டாமல்
முற்றுமே சொல்க" என்றேன்.
"பாடியே புலவர் ,வேந்தர்,
பலதரப் பட்ட மக்கள்
கூடியே வளர்த்தார்,என்னை:
குதுகலம் கொண்டேன்"
என்றாள்.


இன்னமும் சொல்ல லானாள்;
"என்மக்கள் உண்மைப் பற்று
மின்னிடப் போற்று கின்றார்;
வேறுபல் நாட்டில் வாழ்வோர்
அன்னையென் புகழைப் பாடி
அகிலத்தில் பரப்பு கின்றார்;
பன்னரும் அமெரிக் காவில்
பணிசெய்யும் தமிழர் சேவை


சொல்லவே இயலா தப்பா!
தொல்புகழ் ஹார்வர்(டு)
என்னும்
நல்லதாம் கழகம் தன்னில்
நாட்டினர் தமிழி ருக்கை;
பல்வித நாட்டில் வாழும்
பற்றுளார் புகழ்சேர்க் கின்றார்
எல்லையில் பெருமை
கொண்டேன்;
இதயத்தில் இன்பம் உற்றேன்.


இமிழ்திரைக் கடல்சூழ் பாரில்
எங்கெங்கும் தமிழர் உள்ளார்;
இமைகண்ணைக் காத்தல்
போல
என்றென்றும் காப்பார் அப்பா!
தமிழ்மண்ணில் வாழ்வோர்
தாமும்
தாய்த்தமிழ்ப் பற்றோ டுள்ளார்
அமிழ்தொக்கும் மொழியென்
றென்னை
அருமையாய்ப் புகழு கின்றார்.


ஆயினும் எனக்கோர் ஏக்கம்
அகத்தினில் உண்டு பிள்ளாய்!
சேய்கட்குத் தமிழ்ப்பேர் சூட்டல்
சிறிதள வேனும்  இல்லை;
மாயையில் சிக்கி மக்கள்
வடமொழிப் பேர்வைக் கின்றார்;
தாய்மொழி தமிழில் வைத்தால்
தாழ்ச்சியென் றெண்ணு
கின்றார்.


இன்னுமோர் குறையைச்
சொல்வேன்;
இங்குள்ள கல்வித் திட்டம்
அன்னையாம் தமிழில் இல்லை;
ஆங்கில மோகம் மிக்குச்
சென்னியின் மீது வைத்துச்
சிறப்புறக் கற்கச் செய்வர்;
இந்நிலை தொடரின் தாயார்
என்னிலை என்ன வாகும்?


இருபெரும் குறையைப் போக்க
எவருமே முயன்றார் அல்லர்;
அருந்தமிழ் எழுத, பேச
அறிகிலேன் என்று சில்லோர்
பெருமையாய்ச் சொல்லல்
முற்றும்
பிழை;தமிழ் நாட்டில் அன்னார்
கருவத்தை அடக்கி இஃதைக்
கண்டித்தல் வேண்டும் அப்பா!



தாய்மொழி வழியிற் கற்போர்
தடைகளை அகற்றல் வேண்டும்;
ஓய்வின்றிப் படித்தல் வேண்டும்;
உறுபொருள் காணல் வேண்டும்;
ஆய்வினை விடாது செய்தே
அறிவினைப் பெருக்கல்
வேண்டும்;
வாய்ப்பினை அரசு நல்கிப்
பணிதரல் வேண்டும்"என்றாள்


செம்மொழித் தாயின் ஏக்கம்
சிந்தையில் உறுத்தல் வேண்டும்;
நம்அடை யாளம் இஃதே;
நாம்இதைத் தொலைத்து
விட்டால்
எம்முகம் காட்டி ஏனை
இனத்தினர் முன்னே நிற்போம?
இம்மொழி பேணிக் காத்தே
ஏறுபோல் நடப்போம் வாரீர்!


அமெரிக்க நாட்டில் வாழும்
அருந்தமிழ் அன்பர் கூடி
நமதரும்  நூலை யெல்லாம்
இணையத்தில் ஏற்றி யுள்ளார்;
இமைப்பொழு தளவில் நூலை
எளிதிலே பார்க்க ஒண்ணும்;
சமைக்கின்ற நூலை எல்லாம்
அவர்தமைப் போலச் செய்வோம்.









Wednesday 28 November 2018

தமிழகத்தில் 'கஜா'ப்புயலின் பேயாட்டம்

தமிழகத்தில் 'கஜா'ப் புயலின் பேயாட்டம்

ஆண்டவா!  அந்த  நாளில்
    அரும்பெரும்  குமரிக்  கண்டம்,
நீண்டநற்  புகழ்சேர்  செல்வப்
    பூம்புகார்ப்  பதியாம்,  மேலும்
பாண்டிய  நாட்டோர்  போற்றும்
    பதிதனுஷ்  கோடி  யெல்லாம்
மீண்டிடா  வகையில்  முந்நீர்
   விழுங்கிடச்  செய்தாய்; ஐயோ!

ஈண்டிது  நல்ல  தாமோ?
  இத்தகு  கொடுமை,  துன்பம்
வேண்டவே  வேண்டா;  தேவா!
  மேற்கொண்டு  தாள  மாட்டோம்;
ஆண்டுதோ  றும்இக்  காலம்
  அடைமழை  பெய்த  போதும்
சீண்டிய  தில்லை;  இன்று
  சிதைத்ததே  சூறைக்  காற்று.

ஆழ்கடல்  சூழும்  இந்த
  அவனியை  ஆளும்  அப்பா!
ஏழ்மைசேர்  எங்கள்  நாட்டுக்(கு)
   ஏற்பட்ட  பெருத்த  சேதம்
ஊழ்வினை  கொணர்ந்த  தா?உன்
   உறுசினம்  கொணர்ந்த  தா?சொல்;
பாழ்வெளி  யாயிற்(று)  ஐயா!
  பசுமைசேர்  டெல்டா  வெல்லாம்.

ஒப்பிலா  இறைவ!  உன்றன்
  உறுசினத்  தாலே  இங்கே
இப்பெரும்  சேதம்  வந்தால்
  இழைத்திட்ட  பிழைதான்  என்ன?
செப்பரும்  வளம்சேர்  டெல்டா
  சீரழி(வு)  அடைந்த  காட்சி
எப்பெரும்  கல்நெஞ்  சையும்
  இளகிடச்  செய்யும்; உண்மை.

பிள்ளைபோல்  வளர்த்த  தென்னை
  பெரும்எண்ணிக்  கையில்  வீழ
உள்ளமே  நொந்த(து)  ஐயா!
  உடன்பிற  மரமும்  வீழ்ந்து
சள்ளையைத்  தந்த(து)  அப்பா!
  தங்கிடும் குடிலும்  வீடும்
பள்ளிகள் தாமும் காற்றில்
  பறந்துபோய்  வீழக்  கண்டோம்.

கானடை(கால்நடை)  உயிர்கள் எல்லாம்
  காற்றினால்  அலைக்கப்  பட்டு
வானுல(கு)  அடையக்  கண்டு
  வருத்தமே  எய்தி  னோமே;
மீனவர்  பட(கு)இ  ழந்தார்;
  வீதியில்  மின்கம்  பங்கள்
கூனலாய்  வளைந்து  சாய்ந்து
  கும்மிருள்  சூழ்ந்த  தம்மா!

காவிரி  பாய்ந்த  டெல்டா
  கலக்கமுற்(று)  அழுது  நிற்கும்;
பூவிரி  பசுமைச்  சோலை
  பொட்டலாய்  மாறித்  தோன்றும்;
ஆவியை  நிகர்த்த  தென்னை
  ஆடு,மா(டு)  எல்லாம்  மாய்ந்து
பேய்விளை  யாடும்  பூமி
  பிறந்த(து)என்  றெண்ணத்  தோன்றும்.

இத்தனை  சேதம்  கண்டும்
  இறைவ!நீ  இரங்கா  விட்டால்
பித்தரைப்  போலே  நாங்கள்
  பிதற்றுதல்  இயல்பு  தானே.
செத்தவர்  குடும்பத்  திற்கும்
  செத்துக்கொண்(டு)  இருப்போ  ருக்கும்
மெத்தநல்  இழப்பீ  டைத்தான்
  மேன்மையாய்  நல்கச்  செய்வாய்.

மத்திய  அரசே!  உங்கள்
  மனத்தினுக்(கு)  இசைந்த  வாறே
ஒத்ததாம்  கருத்துக்  கொண்ட
 ஒண்தமிழ்  அரசைச்  சேர்த்தே
உத்தம  மாகச்  சிந்தித்(து)
  உடனடி  நிதியைத் தாரீர்!
எத்தனை  தடைவந்  தாலும்
  இப்பெரும்  துன்பம்  தீர்ப்பீர்.

ஆட்சிசெய்  வோரை  மட்டும்
   அண்டியே  இருத்தல்  வேண்டா;
மாட்சிமை  தாங்கும்  வள்ளல்,
    மற்றுளார், யாவ  ரும்மிவ்
மீட்சிசெய்  பணியில் பங்கு
    மேற்கொண்டு  டெல்டா  காப்பீர்.
காட்சிகள்  மாறும்  வண்ணம்
     காரியம்  ஆற்று  வீரே!

நடுவண  அரசே!  நாங்கள்
  நாடிய  நிதியை  நல்கி
கொடும்'கஜா'ப்  புயலால்  நேர்ந்த
  குறையெலாம்  உடனே தீர்ப்பீர்;
படுமந்த  மாக  நீவிர்
  பணம்தரத்  தாம  தித்தால்
ஒடுங்கிய  மக்கள்  தாமே
   உயிரற்ற  பிணமாய்  ஆவர்.

உலகெலாம்  வாழும்  எங்கள்
  ஒண்தமிழ்  மக்காள்!  நீவிர்
தொலைவினில்  வாழு  கின்றீர்;
  சோழநன்  னாடு  வீழத்,
தலைவிதி  என்று  நொந்து
  சாம்பிட  வேண்டா; இந்த
நிலைதனை  மாற்ற  ஏலும்
  நிதியினை  நல்கு  வீரே!

தண்தமிழ்  நாட்டில்  வாழும்
  சால்புடை  மக்காள்  நீவிர்
பண்டைய  சிறப்பை  டெல்டா
  பகுதியில்  காக்க  வேண்டித்
தொண்டுகள்  செய்தும்  உம்மால்
  இயன்றிடும்  நிதியைத்  தந்தும்
அண்டைமா  நிலத்தார்  போற்ற
  அனைத்தையும்  மீட்க  வாரீர்!

அருஞ்சொற் பொருள்:
முந்நீர்---கடல்;   அவனி---உலகம்
சள்ளை---துன்பம்;  மாட்சிமை---பெருமை
சாம்புதல்--வருந்துதல்;  சால்பு---மேன்மை




Sunday 25 November 2018

சங்க காலத் தமிழ்ச் சான்றோர் கபிலர்.

சங்க  காலப்  புலவர் கபிலர்

கபிலரின் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பக்
காலமாகும். இவர் தன்னை அந்தணர் குலத்தைச் சேர்ந்தவர்
என்று கூறுகிறார். 'புலன் அழுக்கற்ற அந்தணாளன்' என
மாறோக்கத்து நப்பசலையார் என்னும் சமகாலப் புலவர்
தெரிவிக்கிறார். இதுவரை நமக்குக் கிடைத்துள்ள சங்கப்
பாடல்கள் 2381.  இதில் பத்தில் ஒருபங்குப் பாடல்கள் கபிலர்
பாடியவைதாம். சங்க இலக்கியங்களில் அதிகப் பாடல்கள்
பாடியவர் கபிலர்.  இவர் பாடல்களிலேயே மிகச் சிறப்பானது
பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும்.  இதில் குறிஞ்சி
நிலத்தில்  பூத்துக் கிடந்த 99 பூக்களைப் பற்றியும் 12 ஆண்டுக்கு
ஒருமுறை பூக்கும் குறிஞ்சிப் பூவைப் பற்றியும் கூறியுளார்.
கபிலர் பாடிய மொத்தப் பாடல்கள் 235.  அவற்றைப் பற்றிக்
கீழே  காண்போம்:
புறப்பொருள் பற்றியவை:
புறநானூறு --- 28                 
பதிற்றுப்பத்து10                 
மொத்தம்.         38

அகப்போருள் பற்றியவை:
அகநானூறு----18
குறுந்தொகை 29
நற்றிணை        20
கலித்தொகை  29
ஐங்குறுநூறு   100
குறிஞ்சிப்பாட்டு 1
மொத்தம்           197       
                                           
                                             
                                         
                                                 
ஆக மொத்தமாக 235 பாடல்கள் கபிலர் பாடியுளார்.
பெயர் தெரிந்த சங்கப் புலவர்கள் 475 பேரில் கபிலர்
அதிகப் பாடல்கள் பாடியவராக முன்னிற்கிறார்.

கபிலரால் பாடப்பட்ட பெருமக்கள்:
அகுதை, இருங்கோவேள், செல்வக் கடுங்கோ வாழியாதன்,
சேரமான் மாந்தரஞ்  சேரல்  இரும்பொறை, ஓரி, நள்ளி,
மலையமான்  திருமுடிக்காரி, மலையன், விச்சிக்கோன்,
வையாவிக் கோப்பெரும் பேகன், வேள்பாரி. இவர்களில்
செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பதிற்றுப் பத்தில்
புகழ்ந்து பாடி நூறாயிரம் காணமும், நன்றா என்னும்
மலையில் நின்று கண்ணுக்கெட்டிய நிலத்தையும் பரிசு
ஆகப் பெற்றார். வேள் பாரியுடன் மிகமிக நெருக்கமான
நட்புப் பாராட்டியவர். புறநானூற்றில் உள்ள இவர்தம்
பாடல்கள் 28இல் பெரும்பான்மையான பாடல்கள் பாரி
யைப் பற்றிப் பாடியவைதாம். கபிலர் குறிஞ்சித்திணை
பற்றிப் பாடுவதில் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்தார்.

குறிஞ்சிப் பாட்டு:
சங்க காலத்தில் நிலவிய களவு ஒழுக்கம் பற்றி ஆரிய
அரசன் பிரகத்தன் என்பவனுக்குச் சரியான புரிதல்
இல்லாமையால் களவு ஒழுக்க நெறியைக் குறை
கூறினன்.  அவனுக்கு விளக்கும் பொருட்டு இந்தப்
பாட்டைக் கபிலர் இயற்றி இந்நூலில் களவு ஒழுக்கம்
வெகு விரைவில் கற்பொழுக்கமாக மாறும் என்றும்
இதற்கிடையே காதலர்க்குள் இயற்கைப் புணர்ச்சி
நிகழ்ந்தாலும் நெறி முறைகளுக்கு உட்பட்டே நடக்
கும் என்றும் தெளிவித்தார். களவு ஒழுக்கம் வடக்கே
நிலவிய காந்தர்வ மணத்துக்குச் சமம் என்பதைச்
சுட்டி விளக்கினார். இந்தக் குறிஞ்சிப் பாட்டில் தலைவி
தன் தோழிமாருடன் கூடித் தொண்ணூற்றொன்பது
வகையான பூக்களைச் சேகரித்து அவற்றை மழை
பொழிந்து கழுவிய பாறைமீது குவித்து விளையாடிய
தாகச்சொல்லப்பட்டுள்ளது..  99 வகைப் பூக்களின்
பெயர்களும் அழகுறத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காதலர் தாமே கூடிப் பின் மணந்து கொள்ளும் தமிழ்
நெறியைக் குறைத்துப் பேசிய ஆரிய அரசனுக்குத்தமிழ்
நெறி மிகவும் சிறந்தது என்பதைத் தெள்ளத் தெளிவாக
உணர்த்தவே இந்தப் பாட்டு இயற்றப்பட்டது.  களவு
ஒழுக்கத்தை எவ்வளவு விரைவில் கற்பு ஒழுக்கமாக
மாற்றமுடியும் என்பதில் தோழி, தாய்மார்(பெற்ற தாய்
மற்றும் செவிலித் தாய்) தீவிரமாகச் சிந்திப்பார்கள்.
இல்லாவிட்டால் ஊரார் அலர்(பழிச்சொல்) தூற்றத்
தொடங்கிடுவர். அதனால் தோழி தலைவியைச் சந்திக்க
வரும் தலைவனிடம் வரைவு கடாதல் பற்றி வலியுறுத்து
வாள். வரைவு கடாதல் என்பது திருமணம் பேசி முடிப்பது.
இப்பாட்டில் 99 வகைப் பூக்களின் பெயர்களைத் தெரிவித்
துக் கபிலர் வியப்பில் ஆழ்த்திவிட்டார்.  இதனால் தான்
குறிஞ்சிப் பாட்டு மிகமிகச் சிறப்புப் பெற்றது. மற்றபடி
ஏனைய அகத்திணைப் பாடல்களைப் போலவே தலைவன்,
தலைவி செயல்பாடுகளை விவரித்துச் சொல்லும்.

பதிற்றுப் பத்தில் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும்
சேர வேந்தனைப்  பாடிப் பரிசு வென்றார். ஒருமுறை சேர
வேந்தன் கபிலரின் கை மென்மையாக உள்ளதைச் சுட்டி
வியந்தனன். உடனே கபிலர் "போர்க்களத்தில்யானையை
முன்னே செலுத்திப் பின்னர் தோட்டி(அங்குசத்தால்) யால்
அதனை நிறுத்தி வைப்பதும், குதிரையைச் செலுத்தி  அது
அகழியில் விழுந்துவிடாமல் அதன் சேணத்தை யிழுத்து
நிறுத்தி வைப்பதும், வில்லின் நாணை இழுத்துப் பகைவர்
மேல் அம்பு தொடுப்பதும், புலவர், பாணர், விறலியர்
முதலானோர்க்குப் பரிசு வழங்குவதும் ஆகிய செயல்களைச்
செய்வதனால் உமது  கை கரடு முரடாக வன்மையாக
உள்ளது; புலவனாகிய நான் ஊன்துவை கறிச்சோறுண்டு
வேறு யாதொரு பணியும் செய்யாமல் இருத்தலால் எமது
கை மென்மையாகவுள்ளது" என்று விடையிறுத்தார்.
"வலிய ஆகும்நின் தாள்தோய் தடக்கை;
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற்றத்த புகைகொளீஇ; ஊன்துவை
கறிச்சோ றுண்டு வருந்துதொழில்  அல்லது
பிறிதுதொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும தாமே! நல்லவர்க்கு
ஆரணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இருநிலத்து அன்ன நோன்மை
செருமிகு சேஎய்நின் பாடுநர் கையே!"
புறம்:14.

வேள்பாரியுடன் கபிலர் கொண்டிருந்த நட்பு மிகமிக
நெருக்கமானது.  புறநானூற்றில் 105ஆம் பாடல்
முதல் 120 ஆம் பாடல் முடிய 16 பாடல்கள் பாரியைப்
பற்றியும் அவனது பறம்பு பலையைப் பற்றியும்
பாடியுள்ளார்.
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே".(புறம்:107)
செந்நாப் புலவர் பாரி பாரி என்று ஒருவனையே
புகழ்கின்றனர்.  வழங்குவது பாரி மட்டும் தானா?
உலகம் காப்பதற்கு மாரி(மழை)யும் இங்கே உள்ளது
அல்லவா? இதுபோலப் பாரியின் கொடைத்தன்மை
பற்றியும் அவனது பறம்பு மலையின் வளம்பற்றி
யும் புகழ்ந்து பாடியுள்ளார். பாரியின் வீரத்தையும்
அவன் படைவீரர்களின் நெஞ்சுறுதியையும்
விசுவாசத்தையும் பாராட்டியுள்ளார். மூவேந்தராலும்
போரிட்டு வெல்ல முடியாது. இரவலர் போலவந்து
இரந்து கேட்டால் பறம்பு மலையை அடையலாம்
என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார்.

ஆனால் மூவேந்தர்கள் அவனை வெல்லச் சமயம்
பார்த்திருந்தனர். ஏற்கெனவே பாரி தன் மகளிரை
மகட்கொடை(பெண்கொடுக்க மறுப்பது) மறுத்த
அவமானத்தால் நொந்திருந்த மூவேந்தர்கள் சதி
வேலை புரிந்து பாரியைக் கொன்றுவிட்டனர்.
புறம் 113:
"பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும்; வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே."
ஐயகோ!இப்பொழுது பாரி இறந்து விட்டான்.
அவன் பெண்மக்களுக்கு உரிய கணவரைத்
தேடி நான் எங்கோ செல்கின்றேன். பெருமை
பெற்ற பறம்பு மலையே! கலங்கிச் செயல்
இழந்தவனாகக் கண்ணீர் மல்க உன்னைத்
தொழுது வாழ்த்திச் செல்கின்றேன்.

பறம்பில் வாழ்ந்த மக்களும் பாரியின் மறைவுக்
குப்பின் வெளியேறிவிட்டனர்.  பாரியின் பெண்
மக்களோடு கபிலர் விச்சிக்கோன் என்ற மன்னன்
ஊருக்குச் சென்று அவனிடம் பாரி மகளிரை
மணம் செய்துகொள்ளுமாறு கோரினார். ஆனால்
மூவேந்தரின் பகைவருமோ என்ற அச்சத்தில்
அவன் மறுத்துவிட்டான்.(புறம்:200).  பிற்பாடு
இருங்கோவேள் என்ற அரசனை நாடிச் சென்றார்.
அவ்வரசனும் மணம்புரிய மறுத்துவிட்டான்.
புறம்:201, 202.

இந்நிகழ்வுகளால் கபிலர் நொந்துபோனார்.
மேலும் பாரியின் பிரிவையும் அவரால் தாங்க
இயலவில்லை.தக்கவர்களிடம் பாதுகாப்பாகப்
பாரிமகளிரை அடைக்கலமாக ஒப்படைத்து
விட்டபிறகு வடக்கிருந்து உயிர்துறக்க முடிவு
செய்தார்.(புறம்:236)
"பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒவ்வாது
ஒருங்குவரல் விடாது ஒழிக எனக்கூறி
இனயை ஆதலின் நினக்கு மற்றியான்
மேயினேன் அன்மை யானே; ஆயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னோடு
உடன்உறைவு ஆக்குக உயர்ந்த பாலே!"
"பெருமை தங்கிய சிறந்த நட்பிற்கு ஒவ்வாமல்,
நீ இறந்த போது நின்னுடன் என்னையும் வர
விடாது இங்கேயே தவிர்க எனச் சொல்லிச்
சென்றுவிட்டாய். உனக்கு நான் பொருத்தமான
நண்பன் இல்லையா? இருப்பினும் இங்கிருந்தது
போலவே அங்கும் இடைவிடாது உன்னுடன்
இருந்து உன்னைக் கண்டு வாழும் நிலையை,
இனியாகிலும் எனக்குத் தருவாயாக." என்று
புலம்பி வடக்கிருந்து உயிர்நீத்தார். உயர்ந்த
நட்புக்குக் கபிலர்--பாரி எடுத்துக்காட்டாக
வாழ்ந்து மடிந்தனர் என்றால் மிகையன்று.









Sunday 18 November 2018

புறநானூற்றில் சொல்லப்பட்ட மகட்பாற் காஞ்சி

 புறநானூற்றில்  சொல்லப்பட்ட மகட்பாற் காஞ்சி

மகட்பாற் காஞ்சியாவது, நின் மகளைத் தருக  எனக்
கோரும் அரசனோடு மாறுபட்டு நிற்றலாகும்.  இற்றை
நாளிலும்  இந்த வீம்பு மிக்க பழக்கம் நிலவி வருகிறது.
அத்தை மகள் அம்மான்(மாமன்) மகன்  என்ற நெருங்கிய
உறவினர்க்குள்ளும் பெண் கொடுத்தல் அல்லது பெண்
எடுத்தல் நிகழாமல் சில தலைமுறைகள் கடந்துள்ளன.
காரணம், அவர்களுக்குள் மனக்கசப்பு, சொத்துத் தகராறு
நிகழ்ந்திருக்கலாம். இதன் விளைவாக யாதொரு தொடர்
பும் இன்றி ஆண்டுகள் கடந்திருக்கலாம். சாதாரண, சுமுக
மான பேச்சு வார்த்தையே நடைபெறாத பொழுது, பெண்
கொடுத்தல் அல்லது பெண் எடுத்தல் நிகழ வாய்ப்பேயில்லை.
தப்பித் தவறி ஏதாவது ஒரு குடும்பம் பெண் எடுக்க முயன்று
அதற்காகச் சில நடுநிலை உறவினர் மற்றும் நண்பரைத் தூது
அனுப்பி னால் பெண்ணின் தந்தை சினத்தை வெளிப் படுத்திப்
பெண்கேட்டு வந்தவர்களை இழிவுசெய்தும், தமது குடும்ப
நிலையை உயர்வாகப் பேசியும் பெண்கொடுக்க மறுப்பைத்
தெரிவிப்பார். இது இன்று நேற்று உதித்த பழக்கம் அன்று.
சங்க இலக்கியமாம் புறநானூற்றில் விரிவாகச் சொல்லப்
பட்டுள்ள மிகப் பழைய பழக்கம்.  மகட்பாற் காஞ்சி என்னும்
துறையில் அற்றை நாளில் மக்கள்/மன்னர்கள் நடந்துகொண்ட
முறையை எடுத்தியம்பியுள்ளனர்.

புறநானூற்றில் பரணர் பாடிய பாடலைப் பார்ப்போம்.(புறம்:
336) பெண்கேட்டு வந்த  வேந்தனும் மிகுந்த சினத்தையுடை
யவன்; இப் பெண்ணின் தநதையோ காலாகாலத்தில் செய்ய
வேண்டியதைச் செய்யாது செயல்மறந்து  தற்சமயம் சினத்தைக்
காட்டி நின்றனன். களிறுகள் கடிமரத்திலே அமையாது சீறி
நின்றன. மறவரும் சினந்து இதழ் மடித்தனர். இவ்வாறு இவள்
தந்தையும் இவளைப் பெண் கேட்டுவந்த அவனும் போருக்கு
எழுந்தனர். தன்மகளை வளர்த்துப் பருவம் ஆக்கியது மட்டும்
அல்லாமல் கூடவே பகையையும் வளர்த்த தாயானவள் பண்பும்
அறனும் இல்லாதவளாவாள்.(பெண்ணின் பேரழகே இத்தனை
சிக்கலுக்கும் காரணமாகும் என்ற கருத்தை உள்ளடக்கியது). இனி.
பாடலைப் பார்ப்போம்.:
"வேட்ட வேந்தனும்  வெஞ்சினத்  தனனே;
கடவன கழிப்பிவள் தந்தையும் செய்யான்;
ஒளிறுமுகத் தேந்திய  வீங்குதொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே;
இயவரும்  அறியாப் பல்லியம் கறங்க,
அன்னோ, பெரும்பே துற்றன்றிவ் வருங்கடிமூதூர்;
அறனிலள் மன்ற தானே விறன்மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
முகைவனப் பேந்திய முற்றா இளமுலைத்
தகவளர்த் தெடுத்த நகையொடு,
பகைவளர்த் திருந்தவிப் பண்பில் தாயே!".
மகட்பாற் காஞ்சியாவது, நின்மகளைத் தருக
என்னும் அரசனோடு மாறுபட்டு நிற்றலாகும்.
பிற்காலத்தில் கலம்பகம் என்னும் சிற்றிலக்கிய
நூல்களில்  மகட்பாற் காஞ்சி "மறம்" என்னும் ஒரு
உறுப்பாகச் சேர்க்கப்பட்டு வளமான கற்பனை நயங்
களையும் சொல் ஓவியங்களையும் வளர்த்தெடுத்தது.

புறம் 337. பாடியவர் கபிலர். பறம்பு நாட்டின் மன்னன்
பாரியும் தன்னிடம்  பெண்கேட்டு வந்த சோழ அரசனிடம்
 மறுப்புத் தெரிவித்து அவனைத் திருப்பி அனுப்பினன்.
பாரியின்நண்பரான கபிலர் "யாராகுவர்கொல் இப்
பெண்டிரை மணப்பவர்?" என்று புலம்பிப் பாடினார்.
"வருத  லானார் வேந்தர்; தன்னையர்
பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்றிவர் மறனும் இற்றால்; தெற்றென
யாரா  குவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல்சுணங் கணிந்த
மருப்பிள வனமுலை ஞெமுக்கு வோரே?"
சோழ வேந்தனிடம் பெண்கொடுக்க மறுத்துச்
செய்தி சொல்லித் திருப்பி அனுப்பியபின்
அவன் தன்நாட்டுக்குத் திரும்பாமல் பாரியின்
பறம்பு மலையிலேயே தங்கித் தன்  போர்யானை
களைக் கவளம் ஊட்டிப் பேண ஆரம்பித்தனன்.
போருக்கு ஆயத்தம் செய்ததால் மீண்டும் பெண்
கேட்டு வந்திலன்.  பெண்ணுக்குத் தமையன்
மாரோ பொருசமம் பலகடந்த வெற்றி வேலைத்
தாங்கிப் பகைவரின் குருதி தோய்ந்த தலைகளைக்
கையிலே நாளும் கொண்டவராயினர். என்னே
இவர் வீரம் இருந்தவாறு!  இவ்வாறு பெண்கேட்டு
வருபவரோடெல்லாம் மறுத்துப் போர்செய்தால்  இப்
பெண்ணை அணைந்து  வாழவரும் மணவாளர்தாம்
யாவரோ? தெளிவாகக் கூறுக எனக் கபிலர் புலம்பினார்.

புறம் 338ஆம் பாடலில்  குன்றூர் கிழார் மகனார் தம் பாட
லில் ஓரெயில் மன்னன்தன்  ஒருமடமகளை மணம் கேட்டு
வந்த பலரும் சம்மதம் பெறாது வீணே திரும்பியதை விவ
ரிக்கின்றார். மூவேந்தரே பெண்கேட்டு வரினும், தன் தகுதிக்
கேற்ப  வணங்கிக் கேட்டாலன்றித் தன் மகளை யார்க்கும்
தரமாட்டேன் என்று முழங்கினான். மூவேந்தர்க்கே பெண்ணைக்
கொடுக்க மறுப்பவன் சாதாரண அரசனுக்குப் பெண் கொடுப்
பானா என்ன?

புறம்339ஆம் பாடலும் ஒரு பெண்ணைப் பலரும் விரும்பிப்
பெண்கேட்டு நிறைவேறாது வறிதே திரும்பிய செய்தியை
எடுத்துரைக்கினாறது. புறம் 340ஆம் பாடலில் ஒரு பெண்ணை
ஒரு மன்னனுக்கு வரைவு(நிச்சயம்) செய்தும் அவளுக்கு மணம்
முடியாதிருக்கும் செய்தியைச் சொல்கிறது.

புறம் 341ஆம் பாடலில் ஓர்அரசன் பெண்கேட்டு வந்ததாகவும்,
பெண்ணின் தந்தை பெண்கொடுக்க மறுத்துப் போர்க்கு எழச்
சொன்னதாகவும் மறுநாள் நிகழவிருக்கும் போரில் என்ன
நடக்கும் என்று தெரியாது என்று பெண்கேட்டவன் சொன்னதாகவும்
இயற்றப்பட்டுள்ளது. புறம் 342ஆம் பாடலில் ஓர்அரச கன்னியை
வரும்பிய இளைஞனிடம் அப்பெண் ஆபத்தானவள் என்றும்
அவளை விழைவதைத் தவிர்ப்பதே நல்லதென்றும் இயற்றிய
புலவர் கூறியதாகப் பாடல் இயம்புகிறது.

புறம் 343 ஆம் பாடலில் பெண்ணின் தந்தை மகட்கொடை மறுத்
ததைத் தொடர்ந்து பெண்கேட்டு வந்தவன் ஊரை முற்றுகையிட
ஏணிகளைச் சார்த்தி வைத்ததாகச் சொல்லப்பட்டுள்ளது. புறம்
344 ஆம் பாடலில் மிகுந்த செல்வத்தைப்பெண்ணின் தந்தை
யிடம் அளித்துப் பணிவாகப் பெண்தருமாறு கேட்பது அல்லது
பகைத்துப் போர்புரிவது என்னும் இரண்டில் எது நல்லதோ
அதைச் சிந்தித்துச் செயல்படுத்துமாறு கூறப்பட்டுள்ளது.

புறம் 345ஆம் பாடலில் நிரல் அல்லார்க்குத் தரல் இல்லை
எனப் பெண்ணின் தந்தை கூறியதால் இரு தரப்பினர்க்கும்
போர் மூண்டால் என்ன நேருமோ? என்று அஞ்சுவதாகப்
புலவர் தெரிவித்துள்ளார். புறம் 346 ஆம் பாடலில் ஊரில்
உள்ளார் அனைவரது அழிவுக்கும் இப்பெண்ணின் எழில்
காரணமாகிவிடுமோ? என்று புலவர் அச்சம் தெரிவிக்கி
றார்.

புறம் 347ஆம் பாடலில் இப்பெண்ணின் அழகை விரும்பி
வேந்தர் பலர் பெண்கேட்க, அப் பெண்ணின் தந்தை மறுத்
ததைத் தொடர்ந்து வேந்தர்கள் அவ்வூரிலேயே தங்கிப்
பாடி எடுத்தனர்(போருக்கான சகல ஆயத்தமும் செய்தனர்)
யானைகளை மரங்களில் பிணித்ததால் மரங்களின் வேர்
கள் வெளிக் கிளம்பின. ஊர் என்னாகுமோ? என்று புலவர்
கிலேசம் அடைந்தார். புறம் 348ஆம் பாடலில் இப் பெண்
பிறவாமல் இருந்திருக்கலாம் என்றும் இவளால் ஊர்க்கு
ஏகப்பட்ட இடர்கள் நேர்ந்துவிட்டன என்றும் புலவர் புலம்
பினார். புறம் 349ஆம் பாடலில் இப்பெண் இவ்வூர்க்கு
அணங்கு(வருத்தும் மோகினி) ஆயினள் எனப் புலவர்
வருந்தினார். புறம் 350 ஆம் பாடலில் ஏற்கெனவே போருக்
கான ஆயத்தம் செய்ததில் அகழி. தூர்ந்து விட்டது. மதிற்
சுவரில் சேதம் ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நிகழுமோ?
எனப் புலவர் கவலைப் பட்டார். புறம் 351ஆம் பாடலில்
வளமிக்க மருத நிலம் இந்தப் போரால் என்னாகுமோ?
என்று கவலையுற்றார். புறம் 352 ஆம் பாடலில் இவளை
யார்தாம் மணப்பரோ? என்று புலவர் வினவினார். புறம்
353 மற்றும் 354ஆம் பாடல்களில் இவள் அழகால் இந்த
ஊருக்கு என்ன ஆபத்து நேருமோ? என்று கவலையுற்
றார். ஆக இந்த விடயத்தில் இரு தரப்பினரும் வீம்பு
காட்டியும் வறட்டு கௌரவம் காட்டியும் ஊரிலுள்ள மக்களை
அச்சத்தில் ஆழ்த்தினார்கள் என்றால் மிகையன்று.

சங்க காலத்தில் நிலவிய இப்பழக்கம் இன்றுவரை வேரூன்
றிவிட்டது. இடைக்காலத்தில் சிற்றிலக்கியத்தில் நுழைந்து
ஆழமாகக் கால் பதித்து விட்டது. சிற்றிலக்கியங்களில்
மறம் என்ற உறுப்பாகப் புகுந்துவிட்டது. கலம்பகம் என்னும்
சிற்றிலக்கியங்களில் புலவர் பெருமக்கள்  அவரவர் கற்பனைத்
திறனுக்கேற்பச் சுவையான பாடல்களை இயற்றியுள்ளனர்.
எடுத்துக் காட்டாக மூத்த கலம்பகமான நந்திக்கலம்பகத்தில்
"அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல் நான்கிழவன்
அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார்
மன்னர் தூதர்;
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம்
        சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும் நெடுவளையும்
குனிந்து பாரே!
எனும் பாடல் பயின்று வருகிறது.
பொருள்:
பெண்ணின் தந்தை தூதுவனிடம் கூறியது:
மன்னன் அனுப்பிய தூதனே! என்வில் ஒடிந்துள்ளது.
அதன் பூட்டுக் கயிறு அறுந்துள்ளது. நான் மூப்பு
எய்திவிட்டேன் என்று எண்ணியா உன் மன்னன்
உன்னை இங்கு அனுப்பினான்? நறுமணம் மிக்க
கூந்தலையுடையவள் என் மகள். இவளைப் பெண்
கேட்டு உன்னை அனுப்பியுள்ளான் உன் மன்னன்.
என் இந்தச் சின்னஞ் சிறிய குடிலைப் பார். இதில்
சிறிய தூண்களும் நீண்ட வளைச்சட்டங்களும்
உள்ளன. அவை எவற்றால் ஆனவை என்று தெரி
யுமா? நந்திவர்மனாகிய என் வேந்தன் தெள்ளாற்
றுப் போரில் பகை அரசர்களின் யானைப் படையை
அழித்தான். அந்த யானைகளின் கொம்புகளே
இந்தத் தூண்கள்; நெடிய வளைச் சட்டங்கள். ஐயம்
இருந்தால் நீ இக்குடிசையில் குனிந்து பார்.

இன்னும் கச்சிக் கலம்பகம், கதிர்காமக் கலம்பகம், புள்ளிருக்கு
வேளூர்க் கலம்பகம், கண்ணப்பர் கலம்பகம், அழகர் கலம்பகம்,
திருப் பேரூர்க் கலம்பகம், மதுரைக் கலம்பகம், திருவரங்கக்
கலம்பகம், திருவருணைக் கலம்பகம் என எண்ணிலடங்காக்
கலம்பக நூல்கள் உள்ளன. புலவர் பெருமக்கள் தம் புலமை
யை வெளிப் படுத்தும் விதமாக எத்தனையோ சுவையான
பாடல்களை 'மறம்' என்னும் துறையில் இயற்றியுள்ளனர்.
அவை படித்து இன்புறத் தக்கவை.



.












Sunday 11 November 2018

நந்திக் கலம்பகத்தின் நயம் பாராட்டல்

நந்திக் கலம்பகத்தின் நயம் பாராட்டல்

நந்திக் கலம்பகம் தமிழில் உருவான முதல்  கலம்பக நூல் ஆகும்.
பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் மீது
பாடப்பட்டதாகும். அவரின் ஆட்சிக் காலம் கி.பி.825---850.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் யாரென்று தெரியவில்லை.
ஆனால், வழக்கம்போல  அப்புலவரைப் பற்றிய கதைகள்
ஏராளமாக உலா வருகின்றன.  திறமையான புலவர்கள் அனை
வர்க்கும் ஒருவிதமான சாபக் கேடு உண்டு. வள்ளுவப் பெருந்
தகை, ஔவைப் பிராட்டியார், நந்திக்கலம்பக  ஆசிரியர்,
கவிச் சக்கரவர்த்தி கம்பர், கவிராட்சசன் ஒட்டக்கூத்தர், காள
மேகப்புலவர், அருணகிரிநாதர்  இன்னும் இவர்போன்ற எண்
ணற்ற புலவர்களின் வரலாறு நம்பும் படியாக இல்லை. இல்லாத
தையும் பொல்லாததையும் சொல்லி அப்புலவர் பெருமக்களைச்
சிறுமைப் படுத்தி விட்டார்கள். இதில் கொடுமை என்னவென்
றால் சுமாராகக் கவிபாடும் புலவர்கள் தம் கற்பனைக் கதைக்கு
ஆதாரமாகச் சில பல தனிப்பாடல்கள் பாடி ஒப்பற்ற காவியங்
களின் ஊடே இடைச் செருகல் செய்து சேர்த்து விடுவார்கள்.
பெரும் புலவர்கள் இடைச்செருகலைக் கண்டுபிடித்து விடுவார்
கள்.  ஏனையோர் கண்டுபிடிக்க இயலாமல் திணறிடுவர்.

இம்மாதிரியே நந்திக்கலம்பகம் பாடிய புலவர் மங்கலமற்ற
சொற்களை இடையிடையே சேர்த்து நந்திவர்மன் மரணம்
அடையுமாறு செய்தார் என்ற நம்ப முடியாத கட்டுக் கதையைப்
பரப்பி விட்டுள்ளனர். எவ்வளவு பெரிய புலவரானாலும்
சொற்களால் மரணத்தை வரவழைக்க முடியும் என்பது  இயற்
கையை மீறிய செயலாகும். இதனைத்தான் "அறம்பாடுதல்"
என்று இலக்கியத்தில் கூறுவர். அதிகபட்சம், மனிதர்கள்
தவறு செய்பவர்களச் சபிக்கலாம்.  அச்சாபம் காலப் போக்கில்
பலிக்கலாம். ஆனால் உடனடியாக யாரும் யார்க்கும்  அறம்
பாடிக் கெடுதி விளைவித்து விட இயலாது.

எனவே, இந்நூலைப் பற்றியும் இதன் ஆசிரியரைப்  பற்றியும்
உலாவரும் கதைகளைத் தூக்கி யெறிந்துவிட்டு இந்நூலின்
நயங்களை மட்டுமே நாம் பார்க்கவுள்ளோம். இந்நூல் தமிழில்
இயற்றப்பட்ட முதல் கலம்பக நூல். நூல் இயற்றப்பட்ட காலக் கட்டத்தில்
வருணாஸ்ரம தருமத்தின்படி கீழ்க்கண்ட பாக்களின் வரையறை
வகுக்கப் பட்டது.
கடவுளர்க்கு --100; முனிவர்க்கு-- 95; அரசர்க்கு--90;
அமைச்சர்க்கு-/70;  வணிகர்க்கு--50;வேளாளர்க்கு--30
என்ற வரையறை சொல்லப்பட்டது.  ஆனால் எந்தப் புலவரும்
இந்த வரையறைக்குள் இயற்றவில்லை. இந்த நியதியை
உருவாக்கியவர்கள் யாரென்று தெரியவில்லை. ஆனால்
இந்த நியதியை எந்தப் புலவரும் பின்பற்றியதாகத் தெரிய
வில்லை. நந்திக் கலம்பகத்தைப்பொருத்து, சில சுவடிகளில்
144 பாடல்களும், சிலவற்றில் 110 அல்லது 113பாடல்களும்
காணப்படுகின்றன.

கலம்பகம் என்னும் சொல்லைப் பிரித்தால்  கலம்+பகம் என
வரும். கலம் என்றால் பன்னிரண்டு உறுப்புகளையும், பகம்
என்றால் அதிற் பாதி ஆறு உறுப்புகளையும் சுட்டும்.  ஆக,
கலம்பகம் நூல் பதினெட்டு உறுப்புகளைக் கொண்டதாக
விளங்கும். தோள், வகுப்பு, மதங்கு, அம்மானை, காலம்,
சம்பிரதம், கார், தூது, தவம், மடக்கு, மறம், பாண்,  களி,
சித்து, இரங்கல், கைக்கிளை, ஊர், வண்டு,தழை, ஊசல்
முதலிய உறுப்புகளோடு பிற்காலத்தில் பிச்சியார்,
கொற்றியார்,இடைச்சியார், வலைச்சியார் முதலிய. உறுப்
புகளும் விரவி வருமாறு நூல் பாடப்படும்.  ஆனால், முதல்
கலம்பக நூலாகிய நந்திக் கலம்பகத்தில் புயவகுப்பு, தூது,
இரங்கல்,மறம், பாண், மடல், ஊசல், காலம், மடக்கு, வெறி
விலக்கு, சம்பிரதம், கையுறை, மதங்கியார் முதலான 13
உறுப்புகள்தாம் உள்ளன. பிற்காலங்களில் மேலும் பல
விதமான உறுப்புகள் சேர்ந்திருக்கலாம்.

கலம்பகத்தைக் கலப்பு + அகம் எனப் பிரித்துப்  பலவகைக்
கருத்துக்களும் (அகம், புறம் என்ற பிரிவுகள்) பலவகைப்
பாக்களும் பாவினங்களும்  கலந்து அந்தாதித் தொடையால்
பாட வழிவகுத்தனர். பெரும்பாணாற்றுப் படைஎன்னும்
சங்க நூலில் "பல்பூ மிடைந்த படலைக் கண்ணி" என்னும்
சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. பல பூக்களினால்
தொடுக்கப் பட்ட கதம்ப மாலையையே  குறிக்கும்.  கதம்பகம்
என்ற சொல்லே கலம்பகம் என மருவியிருக்க வாய்ப்புண்டு.

இந்நூல் மூன்றாம் நந்திவர்மனின் தெள்ளாறு, கொற்றவாயில்
முற்றம், வெறியலூர், வெள்ளாறு போன்ற போர்க்கள நிகழ்வு
களை ஆங்காங்கே சுட்டிச் செல்வதோடு அகப்பொருள் சிந்த
னைகளையும் இடையிடையே இயம்புகிறது.  சொல் நயமும்,
பொருள் நயமும், கற்பனை நயமும்  கொண்டு விளங்குவ
தோடு சிறந்த நம்பகமான வரலாற்றையும் எடுத்து இயம்
புகிறது. அக்காலக் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்
காணப்படும் செய்திகள் இந்நூலின் பாடல்கள் கூறும்
செய்திகளோடு ஒத்துள்ளன.  நந்திக் கலம்பகம் வளமான
இலக்கியம் மட்டுமன்று; நம்பகமான வரலாற்று நூலும்
ஆகும். இனி, இந்நூலிற் பயின்றுவரும் சில நயமான பாடல்
களைப் பார்ப்போம்.

"வாடை நோக வீசு மால மாரன் வாளி தூவுமா
லாட லோத மார்க்கு மாலே னாவி காக்க வல்லனோ?
வேடு லாவு மாலை சேதி ராசன் மல்லை நந்திதோள்
கூடி னால லர்வ ராது கொங்கு விம்மு கோதையே."
பொருள்: நந்திவர்மன் மீது ஒருதலையாய்க் காதல்
கொண்ட பெண்" வாடைக்காற்று வீசும் மாலை நேரத்
தில் மன்மதன் அம்பு எய்து துன்புறுத்துகின்றான்.
நந்தியின் தோளைக் கூடினால் பழிச்சொல் வாராது
என்று கூறுகின்றாள்."!

"பதிதொரு புயல்பொழி தருமணி பணைதரு பருமணி
பகராநெற்
கதிர்தொகு வருபுனல் கரைபொரு திழிதரு காவிரி
        வளநாடா
நிதிதரு கவிகையு நிலமகள் உரிமையு மிவையிவை
        யுடைநந்தி
மதியிலி யரசன்நின் மலரடி பணிகிலர்; வானகம்
        ஆள்வாரே."
நிதிதரு விருப்பமும் நிலமகள் உரிமையும் உடைய
நந்திவர்மன் மலரடியைப் பணிந்து திறை
செலுத்தத் தவறிய அரசர்கள் போர்க்களத்
தில்கொல்லப்பட்டு வானகத்தை யாள்வர்.

"வீர தீரநல் விறலவிர் கஞ்சுகன் வெறியலூர்ச்
   செருவென்றோன்
ஆர்வ மாவுள நின்றவர் அன்றிமற் றவன்பெருங்
   கடைநின்ற
சேர சோழருந் தென்னரும் வடபுலத் தரசருந்
  திறைதந்த
வீர மாமதக் கரியிவை பரியிவை இரவலர்
  கவர்வாரே."
வெறியலூர்ப் போரில்வென்றவனாகிய
நந்திவர்மன், தன் குறுநில மன்னர்கள் மட்டும்
அன்றித் தன் பகைவராகிய சேரர், சோழர், பாண்டியர்
மற்றும் வடபுலத்தை யரசாள்பவர்கள் எல்லோரும்
தன் வாசற் கதவருகில் நின்று கப்பமாகச் செலுத்திய
யானை, குதிரை போன்றவற்றைத் தன்னிடம் யாசகம்
வாங்க வந்தவர்கள் எடுத்துக் கொள்ள அனுமதித்தான்.

"ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்;
    உத்தரியப் பட்டாட ஆடாமோ ஊசல்;
ஆடகப்பூண் மின்னாட ஆடாமோ ஊசல்;
     அம்மென்மலர்க் குழல்சரிய ஆடாமோ ஊசல்;
கூடலர்க்குத் தெள்ளாற்றில் விண்ணருளிச் செய்த
     கோமுற்றப் படைநந்தி குவலயமார்த் தாண்டன்
காடவற்கு முன்தோன்றல் கைவேலைப் பாடிக்
  காஞ்சிபுர மும்பாடி ஆடாமோ ஊசல்."
"பகைவர்களுக்குத் தெள்ளாற்றுப் போரில்
மரணத்தைப் பரிசளித்த நந்திவர்மன், மார்த்
தாண்டன், காடவர்க்கு முன்தோன்றியவன்
கையில் தவழும் வேலைப்பாடிக் காஞ்சி
நகரின் பெருமையையும் பாடி ஊஞ்சல்
ஆடுவோம்" என்று மங்ககையர் மகிழ்ந்து
கூறினர்.

"இந்தப் புவியில் இரவலருண் டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே யல்லவோ?---நந்தி
தடங்கைப்பூ பாலன்மேல் தண்கோவை பாடி
யடங்கப்பூ பாலரா னார்."
இந்த உலகில் இரவலர் என்று சொன்னால் அந்த
அல்லிதான் அல்லவா? ஏனென்றால் அது தான்
இரவில் அலருகின்றது.(இரவு +அலர்= இரவலர்)
மற்றைப் பகைவர்கள் நந்திவர்மன் மீது கோவை
(அகப் பொருளில் ஒரு பிரிவு--துறை) பாடிப் புவி
யரசராக விளங்குகின்றனர்.


ஈட்டு புகழ்நந்தி பாணநீ யெங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும்---காட்டிலழும்
பேயென்றாள் அன்னை; பிறர்நரியென்
றார்தோழி
நாயென்றாள்; நீயென்றேன் நான்.

நந்திவர்மன் நாட்டில் பரத்தையிடம் சென்று வந்த தலைவன் ஒருவன் தலைவியிடம் பாணன் ஒருவனைத்
 தூதாக அனுப்பினான். ஆனால் தலைவி
அந்தப்பாணனை வெறுத்தாள்.அன்றி
ரவில் பெண்ணின் வீட்டில்  பாணன் பாடிய பாட்டைக் கேட்டு அப்
பெண்ணின் தாய் பேயழுகின்றதென்றாள்; பிறர்
நரி ஊளையிடுகின்றதென்றனர்; தோழி நாய்
குரைக்கின்றதென்றாள். அப்பெண்ணோ
பாணன்தான் குரல் எழுப்புகின்றான் எனச்
சொன்னாள்.

"செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென் றாரோ தடவினார்--பைந்தமிழை
ஆய்கின்ற கோன்நந்தி ஆகந் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்."
பைந்தமிழை ஆராய்ச்சி செய்து போற்றும்
நந்திவர்மன் மார்பைத் தழுவாமல் என் மேனி
தீப்பிழம்பைச் சாறுபிழிந்து சந்தனம் என்று
சொல்லித் தடவியது போல்  வெந்து
எரிகின்றது. ஒருதலைக் காதல்கொண்ட பெண்
இவ்வாறு கூறினாள்.

"ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வெறுங்
கூடு வருகுதென்று கூறுங்கள்--நாடியே
நந்திச்சீ ராமனுடை நன்னகரில் நன்னுதலைச்
சந்திச்சீ ராமாகில் தான்."
"ஓடும் மேகங்களே! ஓடாத (விரைவாகச் செல்லாத)தேரில் உயிரற்ற என்
உடல்(கூடு) வருகின்றதென்று நந்திவர்மனின்
நன்னகராகிய காஞ்சிபுரத்தில் எனைப்பற்றியே எண்ணி
உருகும்  எனைப்பிரிந்திருக்கும் காதலியைச் சந்தித்தீர்
என்றால்  சொல்லுங்கள்."  காதலியைப்
பிரிந்து சென்ற காதலன் ஊருக்குத் திரும்பும் போது மேகங்களைத் தூது
அனுப்பிச் சொன்னதாகப் பாடியது.


"மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலா மாலைத் தமிழ்நந்தி நன்னாட்டிற்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலா வேயிந்த வேகமுனக் காகாதே."
ஒருதலைக் காதல் கொண்ட பெண் புலம்புகின்
றாள்:
இந்தப் பூமி உய்திபெற மழை உதவுவது போல
மக்களுக்கு வழங்கும் கரத்தையுடைய தமிழ்
மீது தணியாத பற்றுக் கொண்ட நந்திவர்மனின்
நல்ல நாட்டில் பெண்ணே இல்லாத ஊரில்
தான் மட்டுமே பெண் என்பது போல இந்த
வெண்ணிலா வேக வேகமாக ஏன் வந்தது?
ஒருதலைக் காதலர்க்கு வெண்ணிலவைக்
கண்டால் துயரம் கூடுவது இயல்பு தானே!

நந்திக் கலம்பகத்திலுள்ள பாடல்கள் அத்தனை
யும் தேனில் ஊறவைத்த பலாச்சுளை போலத்
தித்திக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


Sunday 4 November 2018

சங்க இலக்கியம் குறிப்பிடும் வலசை போதல்

சங்க இலக்கியம் குறிப்பிடும்  வலசைபோதல்

பறவைகளின்  இடப்பெயர்ச்சியே  வலசைபோதல் எனச்
சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுங்குளிர்
மாதங்களான அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, பிப்ர
வரி, மார்ச்சு ஆகிய காலங்களில் துருவப்பகுதியான
சைபீரியா ,ஐரோப்பா, ஆஸ்திரேலியா, மங்கோலியா, சீனா
முதலான பகுதிகளில் பனி உறைந்து  உயிரினங்களின்
இயக்கம்  முடக்கப்பட்டுவிடும். மனிதர்கள் எப்படியோ
சமாளித்து விடுவார்கள். ஏனென்றால் பாதுகாப்பான
உணவு, உறைவிடம் மற்றும் உடுக்கை முதலிய தேவை
களை நாமே உருவாக்கிக் கொள்வோம். ஆனால் மற்ற
உயிரினங்கள் இந்தக் காலங்களில்  தொல்லைகளுக்கு
ஆளாகின்றன. எனவே அவை கடுங்குளிர்ப்  பகுதிகளி
லிருந்து பாதுகாப்பான வெப்பமான இடங்களை  நோக்கி
நகர்கின்றன. உணவுத் தேவையும் ஒரு முக்கியமான
காரணமாகும்.  சில உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்
காகவும் இடப்பெயர்ச்சி செய்கின்றன. பறவைகள் புரியும்
இடப்பெயர்ச்சியை  வலசை போதல் என்று  தமிழ்இலக்
கியத்தில் குறிப்பிட்டனர்.  அதிலும், சங்க காலப் புலவர்
பெருமக்கள் இயற்கையை மிகவும் நேசித்து அதனுடன்
ஒன்றியே வாழ்க்கை நடத்தினர். இயற்கையை இரசித்து
ஊன்றிக் கவனித்தனர். அதனால் தான் பறவைகளின்
வலசைபோதலைப் பற்றிக் குறிப்பிட முடிந்தது. பறவை
களின் சிற்றினங்களுக்குள் ஏற்படும்  உணவு, எல்லை,
கூடுகட்டுமிடம் முதலியவற்றை முன்னிட்டு ஏற்படும்
போட்டி,சூழல் மாற்றம், காற்றின் திசைமாற்றம் ஆகிய
வைகளும் வலசைபோதலுக்கான காரணங்களாகும்.

சங்கப் புலவர்களில் ஒருவரான பிசிராந்தையார் தமது
காலத்தில் வலசைபோன அன்னச்சேவலைப்பார்த்துப்
பாடியதாகச் சொல்லப்படும்(புறம் 67ஆம் பாடல்)பாடலில்
தென்திசைக் குமரிக்கடலில் அயிரைமீனை யுண்டு
வடதிசை நோக்கி வலசை போனதாகத் தெரிவித்துள்ளார்.
"குமரியம்  பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழநன் னாட்டுப் படினே, கோழி
உயர்நிலை மாடத்துக்  குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கெம்
பெருங்கோக் கிள்ளி கேட்க இரும்பிசிர்
ஆந்தை  அடியுறை எனினே மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே."
தென்திசைக் குமரியிலிருந்து வடதிசை மலையை
நோக்கிப் பயணம் சென்று கொண்டிருந்த அன்னச்  சேவலை
இடையில் உறையூரில் இறங்கிக் கோப்பெருஞ் சோழ
வேந்தனைச் சந்தித்துத் தன்பெயரைச் சொன்னால்  பரிசு
கிடைக்கும் என்று சொன்னதாகப் பாடியுள்ளார்.

இது போலவே சத்திமுத்தம் என்னும் ஊரைச் சார்ந்த புலவர்
"நாராய்! நாராய்! செங்கால் நாராய்!
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!
நீயும்நின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீர் ஆயின் எம்மூர்ச்
சத்திமுத்தம் வாவியுள் தங்கி......."
என்று பாடியுள்ளார். இந்தப் பாடலில் புலவர் வலசை
போன பறவையை மட்டுமன்றித் தமது வறுமையைப்
பற்றியும் பாடியுள்ளார்.
"கையது கொண்டு மெய்யது போர்த்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை  யாளனைக் கண்டனம் எனுமே"
என்று தாம் வறுமையால் படும் துன்பத்தை உருக்க
மாக விவரித்துள்ளார்.

நற்றிணை 70ஆம் பாடலில் வெள்ளிவீதியார்
"சிறுவெள்ளாங் குருகே! சிறுவெள்ளாங் குருகே!
துறைபோகு அறுவைத் தூமடி யன்ன
நிறம்கிளர் தூவிச் சிறுவெள்ளாங்  குருகே!
எம்மூர் வந்தெம் உண்துறைத்  துழைஇ
சினைக்கெளிற் றார்கையை அவர்ஊர்ப் பெயர்தி
அனைய அன்பினையோ பெருமறவி யையோ
ஆங்கண் தீம்புனல், ஈங்கண் பரக்கும்
கழனி நல்லூர் மகிழ்நர்க்கென்
இழைநெகிழ் பருவரல் செப்பா தோயே!"
என்று வலசை போய்க் கொண்டிருக்கும் சிறுவெள்
ளாங் குருகை அழைத்துத் தலைவி தன் தலைவனி
டம் தனது துன்பத்தைச் சொல்லக் கூறியதாக
எழுதப்பட்டுள்ளது.

நற்றிணை 356ஆம் பாடலில் புலவர் பரணர்
"நிலம்தாழ் மருங்கின் தெண்கடல் மேய்ந்த
விலங்கு மென்தூவிச் செங்கால் அன்னம்
பொன்படு நெடுங்கோட் டிமயத்  துச்சி
வான்அர மகளிர்க்கு மேவல் ஆகும்;
வளராப் பார்ப்பிற்(கு) அல்குஇரை ஒய்யும்;
அசைவில் நோன்பறை போலச் செலவர
வருந்தினை  வாழிஎன் னுள்ளம்  ஒருநாள்
காதலி உழைய ளாகக்
குணக்குத் தோன்று வெள்ளியின் எமக்குமார்
வருமே".
இப்பாடலில் மெல்லிய சிறகுடைய செங்கால்
அன்னம் தென்திசைக் கடலில் தன் இரையை
மேய்ந்துவிட்டு இமயத்தின் உச்சியை நோக்கி
வலசைபோவதாகப் பாடியுள்ளார்.

அகநானூறு 208 ஆம் பாடலில் பரணர் வெளியன்
வேண்மான் ஆஅய் எயினன் பாழிப் பறந்தலை
என்னும் இடத்தில் கோசர் குடியைச் சேர்ந்த மிஞிலி
என்பவனோடு புரிந்த போரில் நண்பகல்வேளையில்
கடுமையான காயமடைந்து மரணத்தை நெருங்கிக்
கொண்டிருந்த பொழுது பறவைகளின் வலசை
நிகழ்ந்ததாகவும் பறவைகள் கூட்டமாகச் சிறகுகளை
விரித்துப்பறந்த விதம் ஆஅய் எயினனுக்கு நிழல்
தருவது போல இருந்ததாகவும் பாடியுள்ளார்.
"வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கி ஞாயிற்று
ஒண்கதிர் தெறிமை சிறகரிற் கோலி
நிழல்செய்து....."
பறவைகள் இயல்பாக வலசை செல்கையில்
கூட்டமாகப் பறந்ததனால் நிழல் உண்டாயிற்றா,
ஆஅய்எயினன் பறவைகளிடம் நட்பு பாராட்டிய
தால் அவை நிழல் கொடுத்தனவா என்பது நமக்கு
விளங்கவில்லை. ஆனால் புலவர் பரணர் அகநா
னூறு 148 மற்றும் 181ஆம் பாடல்களில் பறவைகள்
நிழல்கொடுத்ததாகவே பாடியுள்ளார்.

அகம். 273 ஆம் பாடலில் புலவர் ஔவையார்
"விசும்பு விசைத்தெறிந்த கூதளங் கோதையிற்
பசுங்கால் வெண்குருகு வரப்பறை வளைஇ
ஆர்கலி வளவயின் போதொடு பரப்ப"
வெள்ளாங்குருகு வலசை போனதைப் பற்றிப்
பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் என்னும் புலவர் புறம்.
20ஆம் பாடலில்
"புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்"
என்று பாடியுள்ளார்.

கல்லாடனார் அகம்.113உம் பாடலில்
"அலங்கல் அம்சினைக் குடம்பைப் புல்லெனப்
புலம்பெயர் மருங்கில் புள்ளெழுந் தாங்கு"
என்று பறவைகள் புலம்பெயர்தலைப் பாடி
யுள்ளார்.

மேலும் அகம் 100ஆம் பாடலில்
"வம்ப நாரை இனைஒலித் தன்ன" என்றும்
"வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு" என்றும்
(அகம்180), "வம்ப நாரை இரிய"(அகம் 189)
என்றும் இலக்கியங்களில் பாடப்பட்டுளது.
பழைய பறவை வலசை போவதும் புதிய
பறவை வலசை வருவதும் இயல்பாகவே
நடந்துள்ளன. இடப்பெயர்ச்சி செய்யாத,
அதாவது, வலசைபோகாத பறவைகளும்
இருந்துள்ளன. அவற்றை வதிகுரு என்று
அழைத்தனர். குறுந்தொகை 5ஆம்பாடலில்
"வதிகுரு குறங்கும் இன்னிழற் புன்னை"
என்று கூறப்பட்டுள்ளது.

இதுகாறும் பார்த்தவற்றால் பல்வேறு காரணங்
களை முன்னிட்டுப் பறவைகள் வலசை போவதையும்,
சில பறவையினஙகள் வலசை போவதில்லையென்
றும் அறிகிறோம். பறவைகளால் பல நன்மைகள்
மனித இனத்துக்குக் கிடைக்கின்றன. பறவைகள்
மூலம் தாவர வர்க்கம் பல்கிப்பெருகுகிறது. கொசு
போன்ற சிறிய பூச்சிகளை உணவாகக் கொள்வதனால்
சுற்றுச் சூழல் மேன்மையடைகிறது. பறவைகளின்
கழிவுகளால் இயற்கை உரங்கள் கிடைக்கின்றன.

எனவேதான் பறவைகளுக்கான சரணாலயங்கள்
தமிழ்நாட்டில் 13 இடங்களில் உள்ளன. உதாரணமாக,
வேடந்தாங்கல், கோடியக்கரை, கூத்தன்குளம் முத
லான இடங்களில் அமைக்கப் பட்டவை. நாம் இந்த
இடங்களில் மாசில்லாத சுற்றுச் சூழலை உருவாக்
கல் வேண்டும். பட்டாசு முதலானவை இவ்விடங்
களில் கொளுத்தத் தடைவிதித்தல் வேண்டும்.

"பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை."(குறள்)
இந்தப் பரந்த உலகம் மனிதர்களுக்கு மட்டும்
சொந்தமன்று.மனிதரல்லாத ஏனைய உயிர்
களுக்கும் சொந்தமானதுதான். எல்லா உயிரி
னங்களையும் இயன்றவரை பேணிப் பாது
காத்திடுவோம்.










Monday 29 October 2018

தீபவொளி(தீபாவளி)ப் பண்டிகைக் கொண்டாட்டம்

விலைவாசி ஏற்றத்தால் மக்கள் எல்லாம்
விழிபிதுங்கி நிற்கையிலே பண்டி கையைக்
குலையாத மகிழ்ச்சியுடன் குதுக லித்துக்
கொண்டாட வழியில்லை;இருந்த போதும்
சிலைபோல நில்லாமல் கட்டுச் செட்டாய்
தீபவொளி கொண்டாட முடிவு செய்து
மலைபோலத் துணைபுரியும் மனைவி
யோடு
வரவுசெல வுத்திட்டம் தீட்ட லானேன்.


புத்தாடை, பட்டாசு வாங்கல் வேண்டும்;
புசித்திடத்தின் பண்டங்கள் சமைத்தல்
வேண்டும்;
முத்தான பேரர்களும் பேத்தி மாரும்
முற்றாகக் குதுகலிக்கப் பரிசுப் பண்டம்,
வித்தார அணிகலன்கள் கடையில் வாங்கி
மேனியிலே சூட்டியெழில் பார்த்தல்
வேண்டும்;
எத்தாலும் இவைவாங்கச் செலவே யாகும்;
இதையெல்லாம் சிந்தித்துத் திட்டம்
போட்டோம்.


கேசரி,மை சூர்ப்பா(கு)இ லட்டு பூந்தி
கிறங்கச்செய் குளோப்ஜாமுன், பாது
ஷாவாம்
வாசமிகு அல்வா,சோன் பப்டி யின்னும்
வகைவகையாய் வடை,முறுக்கு, பஜ்ஜி,
சொஜ்ஜி
ஆசையுடன் உண்பதற்காம் பண்டம்
எல்லாம்
அருமையாய்ச் சமைத்திடுவோம்;அகத்தி
லேயே;
பூசனைகள் முடிந்தபின்பு வயிறு முட்டப்
புசித்திடுவோம்;களிகொள்வோம்; உண்மை தானே!


கேடறுதீப் பெட்டி,கம்பி மத்தாப்பு,சாட்டை
கிளர்ந்தெழுந்து பூப்பூவாய் உதிரும்பூ
வாணம்,
நாடுமெழில் சக்கரம்போல் சுழலும்மத்
தாப்பு,
நயமாகப் பிள்ளையெலாம் விரும்பும்துப்
பாக்கி,
நீடுபுகழ் ஆயிரமாம் எண்ணிக்கை
கொண்ட
நெடியசர வெடிவகைகள் ஏவுகணை
போன்ற
பீடுறவே பாய்கின்ற வேட்டுகளைப்
போட்டுப்
பெரிதாக மகிழ்ந்திடுவோம் துயரெதுவும்
உண்டோ?


பட்டாலே உருவான பாவாடை, பெண்டிர்
பாங்காக அணிகின்ற தாவணிகள்
வேண்டார்;
கட்டாயம் நாகரிகச் சுரிதார்,துப் பட்டா
கவுன்,சல்வார் போன்றவற்றை
விரும்பிடுவர்; வாங்கித்
தட்டாமல் உடுத்திடுவர்; குற்றமிலை;
நன்றே;
தையலர்க்கு ஜீன்(சு)அன்ன உடலிறுக்
கும் ஆடை
கட்டாயம் தேவையிலை;உடற்(கு)இன்
னல் நல்கும்;
கண்டிப்பாய்ப் பின்பற்றி நலம்பேணு
வீரே!


ஆடவர்கள் வேட்டி,துண்டு விரும்பிடுதல்
இல்லை;
அணிகின்ற பேண்ட்சட்டை குற்றமிலை;
நன்றே;
நாடதனில் புகழ்பெற்ற ஜீன்ஸ்முதலாம்
ஆடை
நன்றன்று; உடல்தன்னை இறுக்குவ
தால் கேடாம்;
தேடரிய பெருஞ்செல்வம் உடல்நலமே
யாகும்;
சிந்தித்துச் சிறப்பான ஆடையினை
வாங்கி
ஈடிணையே இல்லாத தீபவொளி நாளில்
எல்லையிலா மகிழ்வோடு கொண்டாடு
வீரே!


மாவுயர் நீதி மன்றம்
     வகுத்திடும் வழிபின் பற்றித்
தீவிபத்(து) ஏற்ப டாமல்
      செம்மையாய் வாணம் மத்தாப்(பு)
ஏவியே மகிழ்வீர்; எந்த
       இன்னலும் மக்க ளுக்கு
நேர்வதைத் தடுத்தல் வேண்டும்;
        நினைவினிற் கொள்வீர் மாதோ!


செவி,விழி பாதிக் காத
        சிறந்தநற் பட்டா சைத்தான்
கவனமாய்த் தயார்செய் வீரே;
        காற்றுமண் டலத்தில் மாசு
தவறியும் கூடி டாமல்
        தயார்செயும் நிறுவ னங்கள்
அவசியம் நோக்கல் வேண்டும்;
        ஆயத்தம் செய்தல் வேண்டும்.


சுற்றுச் சூழல் தூய்மைமிக்குத்
   துலங்கல் வேண்டும்; உயிர்க்காற்று
சற்றும் நஞ்சே யில்லாது
   தவழ்தல் வேண்டும்; புத்துணர்ச்சி
பெற்றுப் பொலிந்து சுறுசுறுப்பாய்ப்
   பிறங்கல் வேண்டும்; ஞாலத்தில்
வெற்று முழக்கம் தேவையிலை;
   மேன்மைச் செய்கை வேண்டுவமே!


நெருப்புப் பட்டு விபத்தெதுவும்
   நேர்ந்தி டாமல் கவனமொடு
கருத்தாய் வெடியைக் கையாள்வீர்;
   கண்ணைக் காதைக் காத்திடுவீர்;
விருப்பத் தோடு வெடிவகையை
   விரலில் பிடித்துக் கொளுத்தாதீர்;
அருமை உயிரை, உடல்தன்னை
    அக்க றையாய்ப் பேணுகவே!


இந்திய நாட்டிலுள்ள எல்லாப் பகுதியிலும்
சிந்தைகளி கூரவைக்கும் தீபவொளிப்
பண்டிகையைத்
தந்தம் நிலைக்கேற்பச் சால்புடன்கொண்
டாடுகின்றார்;
விந்தையிந்த ஒற்றுமையை விள்ளத்தான் கூடுமோ?


ஏழை, பணக்காரன் என்றவொரு பேதமிலை;
மாழை யுடையோரும் வறியோரும்
ஒன்றாவர்;
வாழையடி வாழையென மக்கள்நன்கு
போற்றுகின்ற
பீழையிலாத் தீபவொளி பெட்புடன்கொண் டாடுகவே!

அருஞ்சொற் பொருள்:
பீடு--பெருமை; தையல்--பெண்;
மாவுயர் நீதி மன்றம்---உச்சநீதிமன்றம்
துலங்கல்--விளங்கிடுதல்
பிறங்கு--விளங்கு; ஞாலம்---பூமி
தந்தம்--தம்தம்;சால்பு---பெருமை
விள்ளுதல்---சொல்லுதல்
மாழை---பொன்;பீழை---துன்பம்
பெட்பு---சிறப்பு



Monday 22 October 2018

மடலூர்தல் அல்லது மடலேறுதல்

மடலேற்றம்  அல்லது மடலூர்தல் என்பது
பழந்தமிழகத்தில் நிலவிய ஒரு விந்தை
யான பழக்கம் ஆகும்.  பெண் ஒருத்தி
யை விரும்பிய தலைவன் அப்பெண் தனக்குக் கிடைக்காவிடில் பனைமடலாற்
குதிரை போன்ற உருவம் அமைத்துத் தன் படத்தையும் தன் தலைவியின் படத்
தையும் ஓவியமாக எழுதிக் கிழியினைக்
(ஓவியம் வரையப்பட்ட துணி) கையில்
வைத்துக் கொண்டு வீதியின் இடையே
ஊர்ந்து வருதலாகும்.

பனைமரத்தின் கிளை பனைமட்டை யெனப் படும். இது இரண்டு பக்கங்களி
லும் கூரிய முள் போன்ற பாகங்களைக்
கொண்டிருக்கும். இந்தப் பனைமரத்தின்
கிளையால் குதிரை போன்ற உருவத்தை
உருவாக்கி இதன்மேல் தலைவன் அமர்ந்
திருப்பான். இதன்கீழ் உருளை பொருத்
தப் பட்டிருக்கும். இதில் கயிற்றைக் கட்டி
ஊரார்,குறிப்பாகச், சிறுவர் இழுத்துச்
செல்வர். இதுவே மடல் என்பதாகும்.

காமம் முற்றிய தலைவன் மடலேறுங் கா
லத்தில் எருக்கங் கண்ணியைச் சூடிக்
கொள்வான். வெண்மையான எலும்பு
களை அணிந்து கொள்வான்.மடல் குதி
ரைக்கு மயில்தோகை, பூளைப்பூ, ஆவி
ரம்பூ, எருக்கம்பூ ஆகியவற்றால் தொடுக்
கப் பட்ட  மாலையை அணிவிப்பான்.
உடல் முழுவதும் சாம்பலைப் பூசியிருப்
பான். தான் கையில் பிடித்திருக்கும்
கிழி(ஓவியம் வரையப்பட்ட துணி)யை
யே பார்த்துக் கொண்டிருப்பான். வேறு
எந்தவிதமான உணர்வையும் காட்ட
மாட்டான். மழை, காற்று, வெயில்,தீ
போன்ற எதைப் பற்றியும் பொருட்படுத்த
மாட்டான்.

நாணத்தை முற்றிலுமாகக் கைவிட்டு
"இன்னாள் செய்தது இது" என்று வெளி
ப் படையாகக் கூறுவான். சங்க இலக்கி
யங்களில் மடலேறுதலைப் பற்றிப் பல
பாடல்கள் உள்ளன. திருக்குறளில்
"காமம் உழந்து வருந்தினார்க்(கு) ஏமம்
மடலல்ல(து) இல்லை வலி".(தி.கு.1131)
குறுந்தொகையில்(பாடல் 14)
"அமிழ்து பொதி செந்நா அஞ்சவந்த
வார்ந்திலங்கு வையெயிற்றுச் சின்மொ
    ழி அரிவையைப்
பெருகதில் அம்ம யானே பெற்றாங்கு
அறிகதில் அம்ம, இவ்வூரே, மறுகில்
நல்லோள் கணவன் இவனெனப்
பல்லோர் கூற யாஅம் நாணுகம் சிறிதே".


மடலூர்ந்து வரும் தலைவன் நாணத்
தைத் துறந்து எவ்வித உணர்வையும்
காட்டாது வீதியில் சுற்றி வருவான்.
அப்பொழுது தலைவன்"இந்தப் பெண்
எனக்குக் கிடைத்து விட்டால் மகிழ்வேன்.
இந்த நல்ல பெண்ணுக்குக் கணவன்
இவன் என ஊரார் கூறும்போது நான்
சிறிது நாணமடைவேன்" எனக் கூறிக்
கொள்வான். குறுந்தொகை 17ஆம்
பாடலில்  மடலேறுவதைப் பற்றியும்
எருக்கங்கண்ணி சூடுவதைப் பற்றியும்
"மாவென மடலும் ஊர்ப; பூவெனக்
குவிமுகிழ் எருக்கங் கண்ணியும் சூடுப
மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப காமங்காழ்க் கொளினே"
என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் தலைவியைச் சுட்டி இன்னாள்
தான் இதற்குக் காரணம் என்பதைக்
குறுந்தொகையில் 173 ஆம் பாடலில்
"பொன்னேர் ஆவிரைப் புதுமலர்
      மிடைந்த
பன்னூல் மாலைப் பனைபடு கலிமாப்
பூண்மணி கறங்க ஏறி நாணட்(டு)
அழிபடர் உள்நோய் வழிவழி சிறப்ப
இன்னாள் செய்த(து) இதுவென
   முன்னின்(று)
அவன்பழி நுவலும் இவ்வூர்"
என்றவாறு கூறப்படடுள்ளது. மடலை
ஊரார், குறிப்பாகச், சிறுவர் இழுத்துச்
சென்ற செய்தி நற்றிணை 220 ஆம்
பாடலில் கூறப்பட்டுள்ளது.
"சிறுமணி தொடர்ந்து பெருங்கச்சு
      நிறீஇக்
குறுமுகிழ் எருக்கங் கண்ணி சூடி
உண்ணா நன்மாப் பண்ணி எம்முடன்
மறுகுடன் திரிதருஞ் சிறுகுறு மாக்கள்".


வெள்ளென்பு அணிவதையும், நாணத்
தைத் துறந்து மடலூர்வதையும் குறுந்
தொகை 182ஆம் பாடலில் காணலாம்.
"விழுத்தலைப் பெண்ணை வினையன்
       மாமடல்
மணியணி பெருந்தார் மரபிற் பூட்டி
வெள்ளென்(பு) அணிந்துபிறர் எள்ளத்
    தோன்றி
ஒருநாண் மருங்கிற் பெருநாண் நீக்கித்
தெருவில் நியலவுந் தருவது கொல்லோ
கவிழ்ந்தவிர் அசைநடைப் பேதை
மெலிந்தில னாம்விடற் கமைந்த தூதே".


இதையெல்லாம் கண்ட சான்றோர் பெரு
மக்கள் இத்தலைவனுக்குத் தலைவியை
மணம் முடித்துவைக்கும் முயற்சிகளை
மேற்கொள்வர். இந்த முயற்சி வெற்றி
பெற்றால் தலைவன்  மகிழ்ச்சியுறுவான்.
இம்முறையில் வெற்றி பெற்ற தலைவன்
ஒருவன் தான் மடலேறியதையும், அதன்
விளைவாகத் தலைவியை அடைந்ததை
யும் தன் பாங்கனிடம்(தோழனிடம்) கூறு
வதாகக் கலித் தொகை 138 ஆம் பாடல்
இயம்புகிறது.
"எழில்மருப்பு எழில்வேழம் இகுதரு
     கடாத்தால்
தொழில்மாறித் தலைவைத்த தோட்டிகை
     நிமிர்ந்தாங்கு
அறிவும், நம்அறி(வு) ஆய்ந்த அடக்கமும்,
     நாணொடு
வறிதாகப் பிறர்என்னை நகுபவும்
     நகுபுடன்
மின்அவிர் நுடக்கமும் கனவும்போல்,
     மெய்காட்டி
என்நெஞ்சம் என்னோடு நில்லாமை
      நனிவௌவி
தன்னலம் கரந்தாளைத் தலைப்படும்
      ஆ(று)எவன்கொலோ?
மணிப்பீலி சூட்டிய நூலொடு மற்றை
அணிப்பூளை, ஆவிரை, எருக்கொடு
        பிணித்தியாத்து
மல்லல்ஊர் மறுகின்கண் இவட்பாடும்,
        இஃதொத்தன்
எல்லீரும் கேட்டீமின் என்று.............."
இவ்வாறாகப் பாடல் பகர்கிறது.


"மங்கையர்தம் கண்ணான் மயங்கினார்;
    வெள்ளெலும்பும்
துங்க எருக்கும்  தொடுத்தணிந்து--
     அங்கமெலாம்
வெந்தாறு சாம்பல் மிகவணிந்து
      வீதிதொறும்
வந்தேறி  யூர்வர்  மடல்."
மடலேறும் நிகழ்வை ஒருவெண்பாவில்
சுருக்கமாகவும் அழகாகவும்  குறுந்தொகை  மூலமும் உரையும் என்ற
நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கலித்தொகை, நற்றிணை,குறுந்தொகை
முதலான சங்க நூல்களில் ஆங்காங்கே
இதைப் பற்றிய பாடல்கள் பரவிக் கிடக்
கினாறன.


மடலேறுதல் வெற்றிபெறாவிட்டால் அடு
த்து என்ன நிகழும்? மடலேறிய பின்ன
ரும் தலைவியோ, அவளைப் பெற்றவர்
களோ திருமணத்துக்குச் சம்மதம் தெரி
விக்காவிட்டால் தலைவன் தன்வாழ்வை
முடித்துக் கொள்வான். மலையிலிருந்து
வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொள்வான்.
இந்நிகழ்வை 'வரைபாய்தல்'  என்று
இலக்கியங்கள் இயம்புகின்றன.
குறுந்தொகையில்(பாடல் 17)
"மறுகின் ஆர்க்கவும் படுப;
பிறிதும் ஆகுப  காமங்காழ்க் கொளினே"
மடலேறுதல் வெற்றி பெறாவிட்டால்,
தலைவனுக்குத் தலைவியின் பாலுள்ள
காமம் அதிகமானால் வரைபாய்தல் மூல
மாகத் தலைவன் உயிரைத் துறப்பான்
(பிறிதும் ஆகுப) என்று கூறப்பட்டுள்ளது.


மடலேறும் நிகழ்ச்சி , தன்னை விரும்பாத
பெண்பொருட்டு நிகழ்ந்தால் அது கைக்
கிளை ஒழுக்கம் எனப்படும்.(ஒரு தலைக்
காதல்). சிலசமயங்களில் தலைவனும்
தலைவியும் ஒருவரையொருவர் விரும்
பிய போதிலும் பெற்றோர் மறுப்புகாரண
மாகவும் நிகழக்கூடும். அப்பொழுது
இயற்கையான ஐந்திணை ஒழுக்கத்தில்
அடங்கும்.

மடல் கூறல், மடல்விலக்கு என்ற இரு
நிலைகளும் உள்ளன. தலைவன் தலை
வியை அடைய மடலேறுவேன் என்று
சொல்வது மடல்கூறல் ஆகும். மடலேற
வேண்டாவெனத் தடுப்பது மடல் விலக்கு
எனப்படும்.


பெண்கள் மடலேறுதல் தமிழர் மரபில்
இல்லை என்று தொல்காப்பியம் பேசு
கிறது. திருக்குறளும் இக்கருத்தை
வலியுறுத்துகின்றது. (தி.கு.1137)
"கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணிற் பெருந்தக்க தில்."
ஆனால் வடநூலார் மரபைப் பின்பற்றித்
திருமங்கை ஆழ்வார், நாயகி பாவத்தில்
பெருமாளுக்காக மடலேறுதல் போன்று
சிறிய மடல், பெரியமடல் பாடியுள்ளார்.


மடலேறுதல் சங்க காலத்தில் நிலவிய
ஏனைய சில பழக்கங்களைப் போலவே,
(அதாவது உடன்கட்டை ஏறுதல், வடக்கி
ருத்தல் போன்றவற்றைப் போலவே)
காலப்போக்கில் மறைந்து போயிற்று.
இது குறித்து நாம் வருந்தத்தேவை
யில்லை.  ஏனென்றால் மடலேறுதல்
நிகழ்வு  தற்காலத்தில் நிலவுகின்ற
ஒருதலைக்காதலை ஒத்திருக்கிறது.
தற்காலத்தில் ஒருதலைக் காதலால்
மகளிர் கடும் அவதிப்படுவதைக்
காண்கின்றோம். அமில வீச்சு, கொலை
வெறி, கொடூரக்கொலை இவற்றைக்
கண்ணுறும்போது, மடலேறுதல் என்னும்
பழக்கம் மறைந்து போனது குறித்து
வருத்தப்படத் தேவையில்லை.தற்காலத்
துக்குச் சற்றும் பொருந்தாது; தேவையும்
இல்லை.

Monday 15 October 2018

முருகன் கோவிலில் கலம் தொடா மகளிர்...

முருகன் கோவிலில் கலம் தொடா மகளிர்...

பொன்முடியார் என்னும் பெண்பாற் புலவர் சங்க காலத்
தைச் சேர்ந்தவர். ஆண்பாற் புலவர்களுக்குச் சமமான
புலமையும்  கவிபுனையும் ஆற்றலும் உடையவர்.அன்
றைய சமுதாயத்தில் நிகழ்ந்த பழக்க வழக்கஙகள்,  நெறி
முறைகளைக் கூர்ந்து கவனித்தவர். இவர் சேரமான்
பெருஞ்சேரல் இரும்பொறையின் காலத்தவர். இவர்
இயற்றியதாகப் புறநானூற்றில் மூன்று பாடல்களும்
தகடூர் யாத்திரை என்னும் நூலில் சில செய்யுட்களும்
உள்ளன.

புறநானூற்றில் 299 ஆம் பாடலில் பெண்கள் 'அந்த' மூன்று
நாட்களில் முருகன் கோவிலில் பூசைப் பாத்திரங்களைத்
தொடாமல் ஒதுங்கி நிற்கும் வழக்கத்தை எடுத்துரைக்கின்
றார்.  ஒரு குறுநில மன்னனின் குதிரைப்படை வீரத்தை
வர்ணிக்கும்போது" பருத்தி வேலி சூழ்ந்த சிறந்த  ஊருக்
குரிய மன்னனின் குதிரைப்படைக் குதிரைகள் உழுந்து
உமியைத் தின்று கொழுத்த நடையுடையனவாக  விளங்கு
கின்றன; கடலைக் கிழித்துச் செல்லும்  தோணியைப் போலப்
பகைவர் படைமுகத்தைக் கிழித்துச் செல்கின்றன.; ஆனால்
பகைவர் குதிரைப்படைக் குதிரைகளோ, நெய் கலந்த கவளம்
உண்ட போதிலும்  முனைப்போடு  முன்செல்லாமல், முருகன்
கோவிலில் பெண்கள் 'அந்த' மூன்று நாட்களில் ஒதுங்கி
நிற்பது போலப் படைமுகத்தில்ஒதுங்கி நிற்கின்றன  என்று
விவரிக்கின்றார். பாடலைப் பார்ப்போம்:
"பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உடுத்ததர்  உண்ட ஓய்நடைப்  புரவி,
கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ,
நெய்ம்மிதி அருந்திய, கொய்சுவல் எருத்தின்
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலந்தொடா மகளிரின் இகழ்ந்நுநின் றவ்வே".
(திணை: நொச்சி; துறை: குதிரைமறம்)

புறம் 310 ஆம் பாடலில் ஒரு மறக்குலப் பெண்ணின்
வீரத்தை விவரிக்கின்றார் பொன்முடியார். அந்த மறக்
குலப் பெண்ணின் கணவன் பெரும்போரிட்டு மடிந்
தனன். அத்தகைய மாவீரனின் மகன் சிறுவயதில்
பால் உண்ண மறுத்து அடம்பிடிக்கும் போது ஒரு சிறு
கோலால் அவனை மிரட்டிக் குடிக்க வைத்தனள்.
ஆனால் பெரியவன் ஆனபிறகு மறைந்த தன் தந்தை
யைப் போல வீரத்துடன் போரிட்டுக் களிறுகளைக்
கொன்றும் அமையாது தொடர்ந்து போரிட்டு  மார்பிலே
அம்பு பாய்ந்து கேடயத்தின்மேல் வீழ்ந்து கிடந்தான்.
அம் மறக்குலப் பெண் அவனைத் தூக்கித் தன்மடியில்
கிடத்தி ஐயோ, மார்பில் அம்பு தைத்துவிட்டதே என்று
புலம்பினாள். ஆனால் அவனோ, அப்படியா? எனக்குத்
தெரியாதே என்று சர்வ சாதாரணமாகப் பதில்  கூறி
னான். மாபெரும் வீரன் மகன் அல்லவா?, அவன்.
பாடலைப் பார்ப்போம்:
"பால்கொண்டு மடுப்பவும்  உண்ணான் ஆகலின்
செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சி
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர்நிறங் கொண்ட களிறட்(டு)ஆனான்;
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே!
உன்னிலன் என்னும் புண்ஒன்(று)அம்பு
மான்உளை அன்ன குடுமித்
தோல்மிசைக் கிடந்த புல்லண லோனே!".

இனி, புறநானூறு 312 ஆம் பாடலைப் பார்ப்போம்:
ஒரு வீரத்தாய் கூறுவதாகப் பொன்முடியார் பாடு
கின்றார். அந்த வீரத்தாயானவள் நாட்டில் ஒவ்வொரு
வரது கடமையையும் எடுத்தோதுகின்றாள். பெற்றுப்
பாலூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்துவிடுவது  எனது
கடமையாகும். அவனை வீரப் புதல்வனாகப் போர்க்
கலைகளையும் ஆயுதங்களைக் கையாள்வதைப்
பற்றியும் கற்பித்துச் சான்றோன், அதாவது, நாட்டைக்
காப்பாற்றும் வீரம் செறிந்த போர் வீரனாக்குவது
தந்தையின் கடமையாகும். இவனுக்கும் இவனைப்
போன்ற போர்வீரர்களுக்கும் உரிய ஆயுதங்களைச்
செம்மையாகவும், கூர்மையாகவும் வடித்துக் கொடுத்
தல் கொல்லர்களுடைய கடமையாகும். இவன் வீரத்
தைக் கவனித்து, உறசாகமூட்டி, ஊக்குவித்துப் போர்
முனையில் திறமை காட்ட வைத்தல் அரசனது கடமை
யாகும். அது மட்டும் அன்று; இவன் வீரத்தை மெச்சிப்
பாராட்டிப் பரிசு நல்குதலும் அரசனது கடமைதான்.
போர்க்களத்தில்  ஒளிவிடுகின்ற வாளால் சிறக்கச்
சண்டை செய்து பகைவரை வீழ்த்துதலும், யானை
களை வெட்டி வீழ்த்தி வெற்றி வாகை சூடித் திரும்பு
தலும் காளை போன்ற வீரர்களது கடமையாகும்.
"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களி(று) எறிந்து  பெயர்தல் காளைக்குக் கடனே".
அருஞ்சொற் பொருள்:
ஈன்று புறந்தருதல்--பெற்றுப் பாதுகாத்தல்
சான்றோன் ஆக்குதல் --ஆயுதப் பயிற்சியில்
  தேர்ந்தவனாக ஆக்குதல்.
நன்னடை நல்கல்--நல்ல வீரச்செயலுக்கு
   மகிழ்ந்து பரிசளித்தல்.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி--ஒளிவிடுகின்ற
வாட்போரில் பகைவரை அழித்து
களிறு எறிந்து பெயர்தல்--ஆண் யானைகளை
  வெட்டி வீழ்த்தி வெற்றியுடன் திரும்புதல்.
பொன்முடியாரின் புறநானூற்றுப் பாடல்கள்
மூன்றுமே படித்து இன்புறத் தக்கன.


Monday 8 October 2018

அருமையாய் நமைவளர்த்த அன்னைக்கோர் கலிவெண்பா

வையத்தில் பெற்றெடுத்த மாதாவைக்
    கண்கண்ட
தெய்வத்துக் கீடாகச் சிந்தித்தே---
     உய்கின்றோம்;

பற்றற்ற ஞானியரும் பாங்காக
     அன்னையரை
உற்ற முறையில் உயர்வுசெய்வர்---
      சற்றேனும்

ஓய்வே இலாதுழைக்கும் உத்தமத்
      தாய்மார்கள்
தூய்மைமனத் தோடு துலங்கிடுவர்---
      வாய்மையே;

இத்தகைய சீர்த்தியனைக்(கு)  எப்படி
      வாய்த்ததெனச்
சித்தத்தில் ஓர்ந்தால் தெளிவுறுவோம்---
       இத்தரையில்

உண்டான நாள்முதலாய் ஓம்பத்
       தொடங்கிடுவர்;
கண்டதெலாம் உண்பதனைக் கண்டிப்பாய்த்---துண்டிப்பர்;

பக்குவமாய்த் தேர்ந்துண்டு பத்தியங்கள்
       பேணிடுவர்;
தக்கபடி பிள்ளை தழைத்திடவும்---
       சிக்கலின்றி

நன்கு  வளர்ந்திடவும் நாளும்
       பணிசெய்வர்;
அன்பு மிகுந்தே அடிவயிற்றை---
        மென்மையாய்

நீவித்  தடவிடுவர்; நிம்மதி யில்லாமல்
ஆவி தளர்ந்திடுவர்; அச்சத்தால்---
         கூவிடுவர்;

மெய்யெலாம் வாடிட மேனி மெலிவுறத்
துய்க்கும் உணவு சுவையின்றிக்---
         கைக்குமே;

வேண்டாத தெய்வமெலாம் வேண்டிப்பல்
         நோன்பிருந்து
நீண்டபத்து மாதம் நிறைவயிற்றால்---
          மூண்டதுயர்

கொஞ்சநஞசம் அன்று; குழந்தைக்காய்த்
           தாங்கிடுவர்;
பிஞ்சு மகவினைப் பெற்றெடுத்துக்---
            கொஞ்சும்

விழைவால் பொறுத்திடுவர்; வேளைவரும்  போதில்
அழைப்பர் கடவுளை; ஆர்த்தே---உழல்வர்;

ஒருவாறு பெற்றபின்னர் ஒண்முகம்
           நோக்கிப்
பெருமைமிகப் பல்விதமாய்ப் பேசிச்---
            சிரித்திடுவர்;

பிள்ளைப்பே  றென்பது  பெண்டிர்தம்
             இன்னுயிரைக்
கொள்ளை யடிக்கும் கொடியதாம்---
              சள்ளைவிதி;

தப்பிப்  பிழைத்தால் தனக்கு மறுபிறவிக்
கொப்பான வாழ்வென்பர்; உண்மையிது--- தப்பில்லை;

பெற்றெடுத்த பின்னரும் பெண்டிர்பா(டு)
              ஓய்ந்திலது;
பற்றுடனே தம்குருதி  பாலாக்கி---
              உற்றவன்பால்

ஊட்டி  மகிழ்ந்திடுவர்; ஊட்டம்
              அளித்திடுவர்;
வீட்டு மருத்துவத்தால் வேதனை,நோய்---
               ஓட்டிடுவர்;

நோவு பெரிதென்றால் நோய்நீக்கும்
               வைத்தியர்பால்
ஆவலுடன் காட்டிடுவர்;ஆதரவாய்க்---
                காவல்செய்வர்;

கண்ணயர்தல் இன்றிக் கவனமாய்ப்
                பேணிடுவர்;
உண்ணவும் தூங்கவும் ஓர்ந்திடார்---
                 கண்ணனைய

பிள்ளைக்காய் வாழ்ந்திடுவர்; பேசப்
                  பழக்கிடுவர்;
'கள்ளம்  கபடு களை'யென்பர்;---
                  விள்ளரிய

நீதிக் கதைசொல்லி நேர்மை
                  யுறவளர்ப்பர்;
சாதி,மதம் போன்றவற்றைத்
    தக்கதல்ல---தீதென்பர்;

முன்னர்நமைப் பெற்றெடுக்க முந்நூறு
                  நாள்சுமந்த
அன்னையரின் தாள்பணிவோம் ஆர்த்து.

அரும்சொற் பொருள்:
உய்கின்றோம்--வாழ்கின்றோம்
துலங்கிடுவர்--விளங்கிடுவர்
சீர்த்தியனைக்கு--சிறப்பு அன்னைக்கு;
அன்னை, அனை யானது இடைக்குறை.
ஓர்ந்தால்--நினைத்தால்
உண்டான நாள்---கருத்தரித்த நாள்
கைக்கும்--கசக்கும்
மகவு--குழந்தை
விழைவு--ஆவல்
ஆர்த்து--ஒலி எழுப்பி
ஒண்முகம்--ஒளி பொருந்திய முகம்
சள்ளை விதி--தொந்தரவு தரும் விதி
கண்ணனைய--கண் போன்ற
விள்ளரிய--சொல்ல அரிதான
ஓம்புதல்--பேணுதல்
உற்றவன்பால்--உற்ற அன்பால்
         
 
       





     


Tuesday 2 October 2018

வாராது வந்த மாமணியே! வாழ்கவே!

வாராது வந்த மாமணியே வாழ்கவே!

அணிதிகழ் குசராத் நாட்டில்
அவதரித் திட்டார்; தாயார்
மணிநிகர்  பொறுமை, வாய்மை
மகிமையைக்  கற்றுத்  தந்தார்;
பணிபுரி  வதிலே என்றும்
பரந்தபே  ரின்பங்  கண்டார்;
துணிவுடைக் காந்தி வெள்ளைத்
       துரைகளை விரட்டி  னாரே!

குடியினாற்  கெட்ட மக்கள்
குடிகளை உயர்த்தல்  வேண்டிப்
படிமிசை  மதுவி  லக்கைப்
        பரப்பிய  பண்பின்  மிக்கார்;
தடியொரு  கையில்  ஊன்றித்
        தளர்நடை  நடந்த  போதும்
மடியொரு  சிறிதும்  இன்றி
        மாண்புறத்  தொண்டு  செய்தார்.

வெள்ளையர்  ஆட்சி  யென்னும்
        விலங்கினைத்  தகர்த்தெ றிந்தே
ஒள்ளிய  பார  தத்தாய்
        உற்றிடு  சிறையை  மீட்ட
தெள்ளியர்;  சேவை  மூலம்
சிறந்தவிந்  தியர்கள்  நெஞ்சை
அள்ளிய  புனிதர்; காந்தி
       அடிகளை  நிகர்ப்பார்  யாரே!

நல்லபாம்  பென்ன  வந்த
நாதுராம்  விநாயக்  கோட்சே
மெல்லென  அருகில்  வந்து
விசைபடச் சுட்ட  காலை
ஒல்லென  அரேராம்  என்ற
உரையுடன்  மண்ம  டந்தை
புல்லநீர் வீழ்ந்த  காட்சி
புகலுதற்  கெளிய  தாமோ?

அண்ணலே!  பிறருக்  காக
அனைத்தையும்  துறத்கும்  நல்ல
எண்ணமிக்  குடையோய்!  யார்க்கும்
இன்மொழி  புகட்டு  கின்ற
புண்ணிய!  குண்டு  தைத்த
புண்ணொடும் உமது  மேனி
மண்ணிடை  வீழ்ந்த  காட்சி
       மறக்கலாம்  காட்சி  யாமோ?

மதவெறி  கூடா  தென்று
மாநில  மாந்தர்க்  கெல்லாம்
இதமுறப்  புகட்டி  வந்த
எந்தையே!  உமது  மேனி
மதவெறிக்  கிலக்கே  யாகி
       மடிந்ததை  யெண்ணும்  போழ்தில்
இதயமே  நின்று  போகும்;
எனிற்பிற உரைப்ப  தென்னே!

ஆயுதம்  ஏந்த  வில்லை;
அடிதடி  நிகழ்த்த  வில்லை;
ஓயுதல்  இல்லா  வண்ணம்
உண்மையாய் உழைத்தார், காந்தி;
தீயதாம்  அடிமை  நீக்கிச்
       செயல்களில்  வெற்றி  பெற்றார்;
தேயுதல்  நேரா  வண்ணம்
தேசத்தைக்  காப்போம்  வாரீர்!

அழுதோம்; புரண்டோம்; அலறித் துடித்தோம்;
எழுந்தோம்; புலம்பினோம்; ஏங்கி---விழுந்தோம்நாம்;
தப்பறவே வாழ்ந்திட்ட  சால்புமிகு  காந்தியை
எப்பொழுது  காண்போம்  இனி?

அண்ணல்  மகாத்மா  அருமைத்தாய்  நாட்டினில்தம்
எண்ணரிய  ஆவி  இழந்தாலும் ---கண்ணைநிகர்
இந்தியநன்  னாட்டுமக்கள்  ஏற்றமுடன் வாழ்ந்திடவே
வந்தா  தரிப்பார்  மறைந்து.

வாழி!  மகாத்மாவே,  வாழி!யிந்தப்  பாரதமே,
வாழி!  அவர்பேர்  வழுத்துபவர்---வாழியரோ!
அன்னாரைப்  போற்றுபவர்; அண்ணல்  வழிநடப்போர்
எந்நாளும்  வாழ்க !  இனிது.

அரும் சொற் பொருள்: படிமிசை--உலகத்தில்;  மடி--சோம்பல்;
நிகர்ப்பார்-ஒப்பாவார்;  விசைபட---வேகமாக;  சுட்டகாலை--
சுட்ட பொழுது;  மண்மடந்தை--பூமிப்பெண்; புல்லுதல்--தழுவு
தல்; சால்பு--பண்பு;  வந்து ஆதரிப்பார் மறைந்து--தோன்றாத்
துணையாய் வந்து ஆதரிப்பார்;  வழுத்துபவர்--சொல்பவர்.

Thursday 27 September 2018

சங்க இலக்கியத்தில் பறவைகள்

சங்க இலக்கியத்தில் பறவைகள்

சங்க இலக்கியத்தில் இயற்கையோடு  இயைந்த  வாழ்வு
விவரிக்கப் பட்டுள்ளது. இந்தப் பூவுலகில் மனிதர்களாகிய
நாம் மட்டும் வாழவில்லை. நம்மைச் சுற்றிப் பறவைகள்,
நாய், பசு, எருது, பூனை முதலான வீட்டு விலங்குகள், கோவில்
களில் வளர்க்கப்படும் யானை, இன்னும் சுவர்களில் ஊர்ந்து
செல்லும் பல்லி இவைபோன்ற எண்ணிலடங்காத உயிரினங்கள்
வாழ்ந்து  வருகின்றன. இவைகளால் ஏற்படும்
சில  நிகழ்வுகளை நாம் எதிர்காலத்தைப் பற்றிய முன்னறிவிப்
பாகக் கருதுகின்றோம். ஆதிகாலந் தொட்டே மனிதர்கள் இம்
மாதிரியான நம்பிக்கைகளைக் கைக்கொண்டு வாழ்ந்து வரு
வது கண்கூடு. நம் நாட்டில் மட்டுமன்று; உவகெங்கும் வெவ்வேறு
வகையான நம்பிக்கைகள் நிலவின; தற்பொழுதும் நிலவி வரு
கின்றன. அறிவியல் அறிஞர்கள் இவற்றை மூடநம்பிக்கைகள்
என்று இழிவாகப் பேசினாலும் இம்மாதிரியான நம்பிக்கைகளை
ஒழிக்க முடியவில்லை. சங்க காலத்தில் நிலவிய பறவைகள்
தொடர்பான சில செய்திகளைப் பார்ப்போம்.

காக்கை கரைந்தால் வீட்டுக்கு விருந்தினர் வருவர் என்னும்
நம்பிக்கை இன்றும் நிலவி வருகின்றது. சங்ககாலத்திலும்
இந்நம்பிக்கை நிலவியது. குறுந்தொகை 210ஆம் பாடலில்
காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண்பாற்
புலவர் காக்கை கரைந்ததைப் பற்றியும் அதனால் விளைந்த
பயனைப்பற்றியும்  வியந்து பாடியுள்ளார். அது பின்வருமாறு:

ஏதோ ஒரு காரணத்தை முன்னிட்டுத் தலைவியைப் பிரிந்து
சென்ற தலைவன் திரும்பி வந்துவிட்டான். அவன் தோழியி
டம் உரையாடுகின்றான்: "நான் பிரிந்திருந்த காலத்தில்
தலைவி துன்பம் அடையாமல் அவளை நன்முறையில்
தேற்றியுள்ளாய்." என்று புகழ்ந்துரைக்க அவள் பதில் கூறு
கின்றாள்:"இதில் என்செயல் ஏதும் இல்லை. காக்கை செய்த
புண்ணியம்; அது கரைந்த(கத்திய) காரணத்தால் நீவிர்
இன்று திரும்பி விடுவீர் என்ற நல்ல நிமித்தம்(சகுனம்)
மனத்தில் தோன்றியது. இந்நம்பிக்கையைத் தலைவிக்குக்
கூறி அவளை ஆற்றுவித்தேன்(தேற்றினேன்)."என்றுரைத்
தாள். இது தொடர்பான பாடலைப் பார்ப்போம்:
"திண்தேர் நள்ளி கானத்(து) அண்டர்
பல்லா பயந்த நெய்யில் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ(று)
எழுகலத்(து) ஏந்தினும் சிறிதென் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த; செல்லற்கு
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே!"
பொருள்:திண்ணிய தேரையுடைய நள்ளியென்
னும் ஊர்த்தலைவனுடைய காட்டில் வாழும்
இடையர்களுக்குரிய பலபசுக்கள் உண்டாக்கிய
நெய்யோடு தொண்டியென்னும் ஊரிலுள்ள
வயல்களில் விளைந்த வெண்ணெல் அரிசியால்
சமைக்கப்பட்ட  சுடுசோற்றை ஏழு பாத்திரங்
களில் ஏந்திக் கொடுத்தாலும்  என் தோழியாகிய
தலைவியின் பெரிய தோளை நெகிழச் செய்த
துன்பத்தை நீக்கும் விதத்தில்  கரைந்து நல்ல
நிமித்தத்தைத் தெரிவித்த காக்கையின்
செய்கையை ஒப்பிடும்போது அதற்குப்
படைக்கப்பட்ட நெய்ச்சோறு சிறிய அளவின
தேயாகும்.  ஏனெனில் தலைவி, துன்பத்தில்(பிரிவுத்
துன்பம்) ஆழ்ந்திருந்த பொழுது அவளைத் தேற்றும்
விதத்தில் காக்கை கரைந்து நல்ல நிமித்தத்தை
உணர்த்தி அவளை உய்வித்ததால் காக்கையின்
இயல்பான செய்கை வியந்து  பாராட்டப்பட்டது.
அதற்குப் படைக்கப்பட்ட பலி(உணவு; காக்கைக்கு
இடும் உணவைப் பலி எனறு கூறுதல் அக்கால
மரபு)  சிறிதளவேயாகும். இவ்வாறு காக்கையின்
இயல்பான, இயற்கையான செய்கையை மிகவும்
வியந்து பாராட்டியதால் நச்செள்ளையார் என்ற
இயற்பெயர் கொண்ட இப்பெண்பாற் புலவர்
காக்கைபாடினியார் என்னும் சிறப்புப் பெயர்
பெற்றார்.

ஆய் எயினன் என்பான் வேளிர்குடி வீரன். நன்னன்
என்பான் வேளிர்குடி  அரசன்.யாது காரணத்தாலோ
மிஞிலி என்னும் கோசர்குடி வீரனை ஆய்எயினனுடன்
போர்தொடுக்கத் தூண்டிவிட்டான்., நன்னன். பாழிப்
பறந்தலை என்ற இடத்தில் கடும்போர் நிகழ்ந்தது.
பிழைக்க முடியாத அளவுக்கு ஆய்எயினனை வெட்டிப்
புண்ணாக்கினான், மிஞிலி. போர்க் களத்தில் ஆய்
எயினன் குற்றுயிரும் குலை உயிருமாகப் புண்
களால் இன்னல் பட்டுக் கொண்டிருந்த போது,
வானில் பறவைகள் சிறகுகளை விரித்துக் கூட்ட
மாகப் பறந்து கொண்டிருந்தன. அது நண்பகல்
வேளை. இடமோ வெட்டவெளிப் போர்க்களம்.
ஆய்எயினன் பறவைகளின் நண்பன். பாது
காவலனும் கூட. அதனால் சூரியனின் உச்சி
வேளைக் கதிர்கள் மிக்க வெம்மையோடு
தகித்துக் கொண்டிருந்தன. அந்த வெப்பக்
கதிர்கள் ஆய் எயினனைத் துன்புறுத்தாமல்
இருக்கவே பறவைகள் சிறகுகளை விரித்துக்
கூட்டமாகப் பறந்தன என்று பரணராகிய
புலவர் விவரிக்கின்றார். இது தற்செயல்
நிகழ்வா? புலவர் கூறியது போல,  பறவைகள்
வேண்டுமென்றே உள்ளன்போடு பறந்தனவா?
ஆனால் ஆய் எயினன், மக்களுக்கு மட்டுமன்று,
பறவைகளுக்கும் நண்பனாகவும், பாதுகாவல
னாகவும் விளங்கியமை அக்காலத்தில் வாழ்ந்த
அனைவருக்குமே தெரியும். எனவேதான் பரணர்
இந்த நிகழ்ச்சியைத் தான் பாடிய மூன்று பாடல்
களிலும் குறிப்பிட்டுள்ளார். அவை பின்வருமாறு:
"கடும்பரிக் குதிரை ஆஅய் எயினன்
நெடுந்தேர் மிஞிலி யொடு பொருது களம்பட்டெனக்
காணிய செல்லாக் கூகை நாணிக்
கடும்பகல் வழங்கா தாஅங்கு......."
புண்பட்ட ஆய்எயினனைப் பாராதிருந்தவர்கள்
நன்னன் என்ற வேளிர்குடி அரசனும் ஆந்தை
களும் தாம். நன்னன் ஏன் பார்க்கவில்லை
யென்றால் அவன்தான் இந்தப் போரைத்
தூண்டியவன். ஆந்தைகள் பகலில் பறப்ப
தில்லை. மேலும், காக்கை போன்ற பறவை
களுக்கு ஆந்தைகளைப் பிடிக்காது.(அகம்:
148). இனி, அடுத்த பாடல்:
"ஓம்பரண் கடந்த வீங்குபெருந் தானை
அடுபோர் மிஞிலி செருவேல்கடைஇ
முருகுறழ்  முன்பொடு பொருதுகளம் சிவப்ப
ஆஅய் எயினன் வீழ்ந்தென, ஞாயிற்று
ஒண்கதிர் உருப்பம். புதைய  ஓராங்கு
வம்பப் புள்ளின் கம்பலைப் பெருந்தோடு
விசும்பிடைத் தூர ஆடி......"
பொருள்: ஆய் எயினன் மிஞிலியொடு
நடத்திய போரில் கடுமையாகப் போரிட்டு
முடிவில் தானும் தோற்று மடிந்தான். சூரி
யனின் உச்சிவேளைக் கதிர்களின் வெம்மை
அவன் மேனிமேல் படாது மறையுமாறு புதிய
பறவைகளின் ஆரவாரம் பொருந்திய
பெருந்திரளானது வானத்திடையே வட்ட
மிட்டு உயரே நிழலிட்டுப் பறந்தன.(அகம்:
181). இனி அடுத்த பாடலைப் பார்ப்போம்:
"யாம இரவின் நெடுங்கடை நின்று
தேமுதிர் சிமையக் குன்றம் பாடும்
நுண்கோல் அகவுநர் வேண்டின் வெண்கோட்
டண்ணல் யானை ஈயும் வண்மகிழ்
வெளியன் வேண்மான் ஆஅய் எயினன்
அளிஇயல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழையணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ஒருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமை சிறகரிற் கோலி
நிழல்செய்து உழறல் காணேன் யானெனப்
படுகளம் காண்டல் செல்லான்,சினம்சிறந்து
உருவினை நன்னன் அருளான் கரப்ப".(அகம்:
208).
பொருள்: வெளியன் வேண்மான் ஆய்எயினன்
சிறந்த வள்ளல். அவனைப் புகழ்ந்து பாடும்
அகவுநர்கள் விரும்பினால் யானையைக்
கூடப் பரிசாகக் கொடுப்பான். அத்துடன் பறவை
போன்ற அனைத்து உயிர்களிடத்தும் அன்பு
பூண்டவன். அவன் மிஞிலியோடு நிகழ்த்திய
போரில் மரணக் காயமடைந்து போர்க்களத்தில்
வீழ்ந்து கிடக்கும் போது நண்பகல் சூரியக்
கதிர்கள் அவனை வருத்தாமல் இருக்கப்
பறவைகள் எல்லாம் ஒன்றாகக் கூடித்தம்
சிறகுகளால் பந்தலிட்டு நிழல்செய்து காத்தன.
இதனை என் கண்களால் காணமாட்டேன்
என்று கொடுங்கோலன் நன்னன் ஓடி ஒளிந்து
கொண்டான். இந்த நிகழ்ச்சியை மூன்று
பாடல்களில் புலவர் பரணர் விவரிப்பதில்
ஏதோ பொருளிருக்கும்.

சங்க காலத்தில் நிகழ்ந்த இந்த இரு நிகழ்வு
களும் நம் உள்ளத்தைத் தொடுகின்றன
என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.







Wednesday 19 September 2018

ஏறு தழுவுதல்(தமிழர் தம் வீர விளையாட்டு)

ஏறு தழுவுதல்(தமிழர்தம் வீர விளையாட்டு)

ஏறு தழுவுதல் சங்க காலத்தில் நிலவிய  வீர விளை
யாட்டு. யானையை ஒத்த வலிமையும் மறமும் கொண்ட
காளையை அடக்குவார்க்கே பெண்டிர் மாலை சூட்டும்
வீர வழக்கம் பின்பற்றப்பட்டு வந்தது. ஏறு தழுவதலைப்
பற்றிச் சங்க இலக்கியமான கலித்தொகையில் உள்ள
முல்லைக்கலியில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.
கலித்தொகை முல்லைக்கலியில் 17 பாடல்கள் உள்ளன.
பாடல் 101 முதல் 107 முடியவுள்ள 7 பாடல்களும் ஏறு
தழுவும் நிகழ்ச்சிகளை விவரிக்கின்றன. மீதம் உள்ள
10 பாடல்களும் முல்லை நிலத்தார் பின்பற்றிய வாழ்க்கை
முறை, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை விவரிக்
கின்றன. கலித்தொகை அகப்பொருளைப் பாடும் நூல்
தானே. நல்லுருத்திரன் என்னும் புலவர் முல்லைக்கலி
யைப் பாடினார். சிலப்பதிகாரம் மதுரைக் காண்டத்தி
லும் ஏறு தழுவுதலைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்
ளது.

ஏறுதழுவக் காரணம் என்ன? முல்லைநிலத்து மக்கள்
கால்நடைகளை வளர்த்துப் பேணி அவைகளால் கிடைக்
கும் பால், மோர், தயிர், வெண்ணெய், நெய் முதலான
வற்றை விற்று வாழ்க்கை நடத்தியவர்கள். ஆடு, மாடு
முதலான வீட்டில் வளர்க்கப்படும் விலங்கினங்கள்
செல்வமாகக் கருதப்பட்டன. திருக்குறளில் வரும்
"கேடில் விழுச்செல்வம் கல்வி; ஒருவற்கு
மாடல்ல மற்றை யவை" என்ற குறளில் மாடு
என்ற சொல் செல்வத்தைக் குறிக்கும் சொல்
லாகவே கையாளப் பட்டுள்ளது. அந்தக் காலத்
தில் போர் தொடங்கும் பொழுது முதலில் பகை
வரது நாட்டுக்குப் படையெடுத்துச் சென்று
ஆநிரை(பசுக் கூட்டம்) யைக் கவர்ந்து வரு
வார்கள். ஆநிரையை இழந்தவர்கள் போராடி
மீட்க முயலுவர். இப்படியாகப் போர் தொடங்கி
நடைபெறும். எனவே, முல்லை நிலத்தார் வீரம்
மிக்கவராக இருத்தல் மிக மிக அவசியம். வீர
உணர்வை ஊட்டுவதற்காகவும், முல்லைநிலப்
பெண்கள் வீரமிக்க கணவரைத் தேர்வு செய்
வதற்காகவும் இந்த வீரவிளையாட்டு நிகழ்த்
தப் பட்டது. இனி ஏறுதழுவுதல் எங்ஙனம் நடை
பெற்றது எனக்கவனிப்போம்.

ஏறுதழுவுதல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதை முதல்
நாள் மாலையிலேயே ஆயர் குழல் ஊதித்
தெரிவித்து விடுவார்கள். மறுநாள் காலையில்
காளைகள் தொழுவத்தில் அணியாக நிறுத்தப்
படும். சிவபெருமானின் கணிச்சிப் படை(ஆயுதம்)
போலக் கூர்மையாகக் கொம்பு சீவப்பட்டு எதிர்
வரும் மாடுபிடி வீரர்கள் பிடிப்பதற்கு முயன்றால்
தாக்குவதற்கு வசதியாகக் காளைகள் பழக்கப்படுத்தப்
பட்டு நிறுத்தப்பட்டருக்கும். அவ்விடத்தில் இடி
யோசை போலப் பறைகள் முழக்கப்படும். ஏறத்
தாழப் போர்க்களம் போலத் தோற்றமளிக்கும்.
காளைகளை வளர்த்த மகளிர் மணக்கும்
வாசனைப் பொடிகளையும், நறுமணப் புகை
களையும் ஏந்தியவாறு அணிவகுத்து நிற்பர்.

முல்லைக்கலி முதற் பாடலில் தோழியானவள்
தலைவிக்கு ஏறுதழுவுதலைச் சுட்டிக் காட்டு
கின்றாள். அவள் வாயிலாக நிகழ்ச்சியைப்
புலவர் விவரிக்கின்றார். "மாடுபிடி வீர்கள் பிடவம்,
கோடல், காயா மற்றும் சில பூக்களைக் கண்ணி
யாகக் கட்டித் தலையில் அணிந்துகொண்டு
தொழுவத்துக்குள் நுழைந்தனர். நீர்த்துறையில்
வீற்றிருந்த தெய்வத்தையும் ஆலமரத்தையும்
மராமரத்தையும் போற்றி வணங்கிக் கொண்டு
களத்துள் புகுந்தனர்." மேலும் விவரிக்கிறாள்.
"ஒரு காளை தன்னை அடக்கப் பாய்ந்த பொது
வனை(ஆயனை/இடையனை)ச் சாகும் அளவுக்
குக் குத்தித் தன் கொம்பில் வைத்துக் கொண்டு
சுழற்றுவதைப் பாராய்! பாஞ்சாலியின் கூந்தலைப்
பிடித்திழுத்த துச்சாதனன் நெஞ்சைப் பிளப்பேன்
என்று வஞ்சினம்(சபதம்) கூறிய பீமனின் செயல்
போல இருந்தது.

மற்றொரு காரிக் காளை விடரிப்பூ அணிந்து வந்த
பொதுவனைச் சாய்த்து அவன் குடல் சரியும்படி
அவனைக் குலைப்பதைப் பாராய்! இக் காட்சி
சிவபெருமான் தன்னை இடரிய எருமைக்
கடாவின் நெஞ்சைப் பிளந்து தன் கூளிப்
பேய்களுக்கு உணவாகத் தந்ததை ஒத்துள்
ளது. வேறொரு வெள்ளைநிறக் காளை
தன் மீது தாவி ஏற முயன்ற பொதுவனைத்
தாக்கித் தன் கூர்மையா ன கொம்பால் அவ
னைச் சீரழிப்பதைப் பாராய்! இரவு வேளை
யில் வந்து தன் தந்தையைக் கொன்றவனின்
தோளைத் திருகி எறிந்தவன் செய்கையைப்
போன்றது இது."

இக் காட்சிகளைக் கண்ட தலைவி அச்சம் கொண்
டாள். அவள் அச்சத்தைப் போக்கத் தோழி நல்ல
நிமித்தம் பார்த்துக்  கூறுகின்றாள்." தன் கழுத்தில்
மாலை அணிவிக்கக் கூடிய கணவனைத் தேர்ந்
தெடுப்பதற்காக இந்த ஏறுதழுவும் நிகழ்ச்சி நடை
பெற்றது.  இதனை அறிவிக்க ஆயர் முதல்நாள்
மாலையிலேயே குழல் ஊதினர். கூட்டத்தில்
ஒரு பெண்'ஆண் யானையை விடவும் வீரமிகு
அஞ்சாத கண்கொண்ட இந்தக் காளையை நீ
விடாமல் தொடர்ந்து சென்றால் இந்த ஆயமகள்
உனக்குத் தன் தோளை உரிமையுடையதாக
ஆக்குவாள்.' என்று சொல்வதைக் கேள். மற்றொரு
பெண் 'பகல் போல ஒளிவீசும் கண்ணியைச்
சூடிக் கொண்டும் கையில் கோல் வைத்துக்
கொண்டும் கொல்லும் காளையைப் போராடி வென்ற
வனுக்கு என் கூந்தலை மெத்தையாக்கு
வேன்' என்று இயம்புவதைக் கேளாய். வேறொரு
பெண்'காளையைப் பிடிப்பதில் எனக்கு நிகரான
வர் யாருமிலர் எனச்சொல்லித் தன் வீரத்தை
வெளிப் படுத்துபவனுக்கு நான் உறவுக்காரி
ஆகாமல் விடமாட்டேன். அவனைக் காண்பதற்
காக என் காளையுடன் என் கண்பூக்கக் காத்துக்
கொண்டிருக்கிறேன்.' என்று சொல்லிப் புலம்பு
வதைக் கேட்டிடுக!

இவ்வண்ணம் நிகழ்ந்த ஏறுதழுவும் நிகழ்ச்சியில்
காளைகளும் மிகவும் வருந்தின. பொதுவர்களும்
புண்பட்டனர். நறுமணம் கமழும் கூந்தலுடன்
பொதுவர் மகளிர் முல்லை பூத்த காட்டுப் பூங்கா
வுக்கு வந்தனர். பொதுவர்குல ஆடவரோடு வாழ்க்
கை  நடத்தக் குறிகாட்டினர்." இவ்வாறு விவரித்த
தோழி தலைவியிடம்" உன் தலைவனும் ஒரு நாள்
காளையை அடக்கி உன் கைப்பற்றிடுவான்" என்று
ஆற்றுவித்தனள்.

இப்படியாக ஏறு தழுவும் நிகழ்ச்சி தொடர்ந்து சில
நாட்கள் நடைபெற்றது. சில பொதுவர் புண்பட்டனர்.
சில பொதுவர் காளைகளை அடக்கி ஆண்டு அவை
களின் மேல் ஏறிவந்தனர். தாம் வளர்த்த காளை
களை வென்ற பொதுவரை மணந்து கொள்ள அந்த
அந்த ஆயர்குலப் பெண் சம்மதித்தாள். நிகழ்ச்சி
முடிந்தவுடன் பொதுவர் குல ஆடவரும் மகளிரும்
காளைகளைத் தொழுவத்துக்குக் கொண்டு
சென்று நிறுத்தினர். பின்னர் அனைவரும் ஆநிரைச்
சாணம் மண்டிய ஊர்மன்றத்தில் ஒருவரை யொருவர்
தழுவிக் கொண்டு தழூஉ ஆட்டம் ஆடிக் களித்தனர்.

முல்லைக்கலி பாடல்:103
"கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்."
பொருள்: கொல்லும் காளையின் கொம்புக்கு
அஞ்சுபவனை ஆயர்குலப் பெண் இந்தப் பிறவி
யில் மட்டும் அன்று; அடுத்த பிறவியிலும்
அணைக்க மாட்டாள்.
"அஞ்சார் கொலைஏறு கொள்பவர் அல்லதை,
நெஞ்சிலார் தோய்தற்(கு) அரிய---உயிர்துறந்து
நைவாரா ஆயமகள் தோள்."
பொருள்: கொல்லும் காளையை அஞ்சாமல்
பிடித்தாள்பவர் அல்லாதவரை வலிய நெஞ்சுறுதி
கொண்ட ஆயர்குலப் பெண் தழுவ மாட்டாள்;
தழுவ நேர்ந்தால் மனம் நொந்து உயிர் துறப்பாள்.
"வளியா அறியா உயிர், காவல்கொண்டு,
நளிவாய் மருப்பஞ்சும் நெஞ்சினார் தோய்தற்கு
எளியவோ, ஆயமகள் தோள்?
பொருள்: அறியாது காற்றில் பறக்கும் உயிரைக்
காப்பாற்றிக் கொண்டு காளையின் கூரான
கொம்புக்கு அஞ்சுபவர் ஆயர் குலமகளின்
தோளை அணைப்பது எளிதோ?
"விலைவேண்டார் எம்மினத்(து) ஆயர்மகளிர்
கொலேயேற்றுக் கோட்டிடை,தாம் வீழ்வார்
     மார்பின்
முலையிடைப் போல, புகின்."
பொருள்: தம்மை விரும்புபவர் கொல்லும்
காளையின் கொம்புகளுக் கிடையில் பாய்ந்து
அடக்குவாராயின் எம் ஆயர்குலப் பெண்கள்
தம்மை மணக்கத் தடை சொல்வதில்லை.
"குரவை தழீஇ, யாம், மரபுளி பாடி
தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்--
மாசில்வான் முந்நீர்ப் பரந்த தொல்நிலம்
ஆளும் கிழமையொடு புணர்ந்த
எம்கோ வாழியர், இம்மலர் தலைஉலகே!"
பொருள்: இந்த ஏறு தழுவல் நிகழ்ச்சியை மர
பாகக் கொண்ட ஆயர் குலத்தினர் நாம். பாடிக்
கொண்டே குரவை தழுவி ஆடுவோம். பாடும்
போது குறையாத பெரும்புகழுடைய தெய்வத்
தைப் போற்றுவோம். ஆழிசூழும் இந்த நிலப்
பரப்பை ஆளும் உரிமைபெற்ற மன்னரை
வாழ்த்துவோம். இந்த உலகையும் வாழ்த்து
வோம்.

இனி, ஏறு தழுவுதல் குறித்துச் சிலப்பதிகாரத்தில்
என்ன சொல்லப் பட்டுள்ளது என்று பார்ப்போம்.

கோவலன் சிலம்பு விற்க மதுரை நகருக்குள்
சென்றுள்ளான். மதுரைப் புறநகரில் கண்ணகி
ஆயர்குலப் பெண்ணான மாதரி வீட்டில்  தங்கி
யுள்ளாள். அப்போது சில தீநிமித்தங்கள் தோன்
றின. அதனால் மாதரி குரவைக் கூத்து நடத்திக்
கண்ணன், பலராமன் முதலான தெய்வங்களைப்
போற்றித் துதித்தால்  தீங்கு எதுவும் வாராது என
நம்பி ஆய்ச்சியர் குரவைக்கு ஆயத்தம் செய்தாள்.

"காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரிமலர்க் கோதையாள் சுட்டு."
பொருள்:கரிய எருதின் சீற்றப் பாய்ச்சலைக்
கண்டு அஞ்சாமல் அதன்மேல் பாய்ந்து அதனை
அடக்கியவனை, தேன்நிறைந்த மலர்மாலை
அணிந்த இப்பெண் விரும்பி ஏற்பாள்.
காளையை அடக்கியவனுக்கே காரிகை.
"நெற்றிச் செகிலை அடர்த்தாற்(கு) உரியவிப்
பொற்றொடி மாதரால் தோள்."
"மல்லல் மழவிடை ஊர்ந்தாற்(கு) உரியளிம்
முல்லையம் பூங்குழல் தான்."
"நுண்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகுமிப்
பெண்கொடி மாதர்தன் தோள்."
"பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகுமிந்
நற்கொடி மென்முலை தான்."
"வென்றி மழவிடை ஊர்ந்தாற்(கு) உரியளிக்
கொன்றையம் பூங்குழ லாள்."
"தூநிற வெள்ளை அடர்த்தாற்(கு) உரியளிப்
பூவை புதுமல ராள்".
அரும் சொற் பொருள்:
செகில்--சிவப்பு;  அடர்த்தல்--அடக்குதல்
மல்லல்--வலிமை; மழவிடை--சிறந்த காளை
பொறி--புள்ளி
மற்ற நிகழ்ச்சிகள் கலித்தொகையில் குறிப்
பிடப் பட்டவாறே சிலப்பதிகாரத்திலும் கூறப்
பட்டுள்ளன. ஆய்ச்சியர் குரவை யாடித் தெய்
வத்தை(கண்ணன், பலராமன், நப்பின்னை
முதலானோரை)த் தொழுது, நாட்டையாளும்
மன்னவனை வாழ்த்தி இறுதியில் உலகத்தை
வாழ்த்தி முடித்தனர்.

இவ்வாறு ஏறு தழுவுதலைப் பற்றிக் கலித்
தொகையிலும், சிலப்பதிகாரத்திலும் விரி
வாக விவரிக்கப் பட்டுள்ளது.