Tuesday 25 May 2021

வருந்தாதோ திருமேனி?

 வருந்தாதோ திருமேனி? இடை நோகாதோ? மணிச் சிலம்பு புலம்பாதோ?

                                   வளை ஏங்காதோ?


ஒரு மலைநாட்டில் காதலனும் காதலியும்  இரவு நேரத்தில் சந்தித்துக்

கொள்ளத் திட்டம் வகுத்து அதன்படி முன்கூட்டியே காதலன் வந்து தன்

காதலிக்காகக் காத்திருக்கின்றான். ஒரு நொடி ஒரு யுகம் போலக் கழி

கின்றது. ஒருவாறு நள்ளிரவு நேரம் நெருங்கிவிட்டது. மெதுவாகக்

காதலி நடந்துவரும் அரவம் கேட்கிறது. காதலி வருவாளோ? வரமாட்டாளோ?

என்ற ஏக்கத்தில் காத்திருந்த காதலனுக்குத் தெம்பும் மனவெழுச்சியும்

பீறிடுகின்றன. தன் காதலியை நோக்கி மெல்லிய குரலில் பாடத் தொடங்கு

கின்றான். " கொள்பவர் உள்ளம் நிறையும் வண்ணம் பொருளைச் சொரிந்து

நல்கும் வள்ளல் இராமராசத் துன்முகிராசனுக்கு உரித்தான இம்மலையில்

வாழ்ந்துவரும்  மயில் போன்றவளே! நின்னைக் கண்ணை இமைகாப்பதுபோல்

காத்துப்  புரந்துவரும் நற்றாயும் செவிலித்தாயும் அறியாவண்ணம் இந்த

நள்ளிரவு வேளையில் நினது தாமரை போன்ற இல்லக் கதவைத் திறந்து

தன்னந் தனியாக வந்துள்ளாய். உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்

கொண்டிருந்தேன் என்பது மெய்தான். ஆனால் ஊரெல்லாம் உறங்குகின்ற

இவ்வேளையில் துயில் துறந்து வந்த நின் திருமேனி வருத்தம் அடையாதோ?

உன் சிற்றிடை நோவு கொள்ளாதோ? மாணிக்கப் பரல்கள் பதிக்கப்பட்ட

காற்சிலம்புகள் ஒலியெழுப்பாவோ? கைவளையல்கள் ஓசைசெய்யாவோ?

மழைபோலும் நின் கருங்கூந்தலிற் சூடியுள்ள மணம்பரப்பும்  முல்லை

மலர்கள் கீழே சிந்தாவோ? ஏனென்றால்,  இவையெல்லாம் நீ இங்கு வந்த

தையும் நாம் சந்தித்துக் கொண்டதையும்  காட்டிக் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நின் தாமரைப் பாதங்கள்  பரற்கற்கள் நிரம்பிய

பாதையில் நடந்துவந்தமையால் கன்றிப் போயுள்ளனவா? என் மனம் நிலை

கொள்ளாமல் தவிக்கின்றது. இச் செய்தியை நவிலும் பாட்டைப் பார்ப்போம்:

சங்கப் பாடல் அன்று; பிற்காலப் பாடல்; திணை: குறிஞ்சி;

துறை: இரவுக்குறிச் சந்திப்பு.

காதலன் கூற்று:

"சொரிந்தாரப் பொருள்வழங்கும்  இராம ராசத்

துன்முகிரா சன்வரையில் தோகை யன்னீர்!

தருந்தாயர்  அறியாமல் பாதி நேரம்

         தாமரைக்கோ யிலைத்திறந்து தனியே வந்தீர்;

வருந்தாதோ திருமேனி? இடைநோ காதோ?

         மணிச்சிலம்பு புலம்பாதோ? வளையேங் காதோ?

கருந்தாரை அளகநறு மலர்சிந் தாதோ?

          கன்றாதோ நும்பாத கமலந் தாமே?"

அருஞ்சொற் பொருள்:

சொரிதல்=கொடை கொடுத்தல்;

இராசராசத் துன்முகிராசன்=ஒரு சிற்றரசன்.

தருந்தாயர் =பெற்ற தாய் மற்றும் செவலித் தாய்.

பாதி நேரம்=நள்ளிரவு நேரம்; தாரை=மழை;அளகம்=கூந்தல்;


இப்பாடல் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடான தனிப்பாடல் திரட்டு(முதற்

பாகம்) நூலில் உள்ளது. இயற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.



நாணிக் கவிழ்ந்து நகைத்தநகை நானோ மறக்க வல்லேனே!


களவியலில் பழகிவரும் தலைவனும் தலைவியும் திருமணம்

புரிந்து கற்பியல் வாழ்வைத் தொடங்க முடிவு செய்கின்றனர்.

திருமணத்துக்கு வேண்டிய பொருளீட்டுவதற்காகத் தலைவன்

தலைவியைப் பிரிய நேரிடுகிறது. இதனை 'வரைவிடை வைத்துப்

பொருள்வயின் பிரிதல்' என்று அகப்பொருள் இலக்கணம்

இயம்பும். இப்பிரிவு இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது

என்பது அகப்பொருள் மரபு.


தலைவன் பொருளீட்டுவதற்காக வேற்றூர் செல்லக் கிளம்புகின்றான்.

அப்பொழுது தோழி தலைவனை நோக்கி "நீர் எம் தலைவியை மறவேல்"

என்று நவிலுகின்றாள்.  உடனே தலைவன் விடையிறுக்கின்றான்:

"பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடைய சிவபெருமான் தன் சடைமுடியை

விரித்தாடும் புலியூர் போன்ற வளத்தையுடைய எழில் மங்கையரே!

(மரியாதை நிமித்தமாகப் பெண்ணைப் பன்மை விளியில் அழைப்பது

சங்ககால மரபு.) உம்  தலைவி இயற்கைப் புணர்ச்சிக்கண் நாணத்தால் கண்

புதைத்த பொழுது அவரின் நகையணிந்த மார்புகளும் வில்போன்று வளைந்து

தோன்றிய புருவங்களும் என்னைக் கிறங்கடித்தன. அவைகளை யான்

மறவேன். ஒருவேளை அவைகளை மறக்க நேரிட்டாலும், எங்கள் களியாட்டத்

தின் போது குலைந்திருந்த ஆணிப்பொன் பொதிந்த மெல்லிய எழில்மிக்க

ஆடையினை நெகிழ்த்து மீண்டும் சரியாக உடுத்த முனையும் வேளையில்

அவர் நாணத்தினால்  தலையைக் கவிழ்த்து நகைத்த முறுவலை மறக்க

வல்லேன் அல்லேன்.(என்னதான் யான் அவரை மணக்கவிருக்கும் தலைவன்

என்றாலும் ஆடையை நெகிழ்த்தி மீண்டும் உடுத்துதல்  அவர்க்குக் கூச்சத்தை

உருவாக்குதல் இயல்பு தானே.) இந்தச் செய்தி பயின்று வரும் தனிப்பாடல்

பின்வருமாறு:

"வேணிப்  பவளம்  விரித்தாடும் விமலர் புலிசைத் திருவனையீர்!

பூணிற் சிறந்த வண்முலையும் புருவச் சிலையும் மறந்தாலும்

ஆணிக் கனகம் அழுந்தியபூ ஆடை நெகிழ்க்கும் வேளைதனில்

நாணிக் கவிழ்ந்து நகைத்தநகை நானோ மறக்க வல்லேனே!"

அருஞ்சொற் போருள்:

வேணி=சடைமுடி; விமலர்=சிவபெருமான்; புலிசை=புலியூர்;

புருவச் சிலை=புருவமாகிய வில்; ஆணிக் கனகம்=ஆணிப்பொன்;


இத்தருணத்தில் கம்பராமாயணத்தில் பயின்று வரும் பாடலை

நினைவுகூர்தல் தகும்.

"இந்திர  நீலமொத்(து) இருண்ட குஞ்சியும்

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்

சுந்தர மணிவரைத்  தோளு மேயல

முந்தியென் உயிரையம் முறுவல் உண்டதே!"

என்று சீதைப் பிராட்டி இராமனைப் புகழ்ந்து கூறியது நினைக்கற்

பாலது. இராமனின் மற்ற அழகுக் கூறுகளை விடவும் அவன் முறுவல்

தன்னைக் கிறங்கடித்ததாகச் சீதைப் பிராட்டி நவில்கின்றாள்.


சரசுவதி மகால் வெளியீடான தனிப்பாடல் திரட்டு(முதல் பாகம்) நூலில்

இந்தத் தனிப்பாடல் உள்ளது.

Sunday 9 May 2021

கலிங்கத்துப் பரணி

 வருவார் கொழுநர் எனத்திறந்தும், வாரார் கொழுநர் என அடைத்தும்...‌‌

                                      (கலிங்கத்துப் பரணி)


பரணி ஒரு விண்மீன்(நட்சத்திரம்). பரணி விண்மீன் போர்க்கடவுளான

கொற்றவைக்குரியது. பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு

(இரத்தமும் தசையும் கலந்த உணவு) சமைத்து உண்டு மகிழ்ந்து ஆடிப்

பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரது புகழைக் காளிக்குக் கூளிகள்

கூறுவதாக இலக்கியம் படைப்பது பரணி இலக்கியம் என அழைக்கப்படும்.

ஏதோ ஒரு காரணத்தால் போரில் தோற்ற நாட்டின் பெயரைத் தாங்கிப்

பரணி இலக்கியம் படைக்கப் படுவது மரபாகும்.


பரணி இலக்கியம் போரைப் பற்றிப் பாடுவதால் படிப்பவர்க்கு ஒருவித அச்ச

உணர்வும் அருவருப்பும் தோன்றுவது இயல்பே. ஆனால் அதையெல்லாம் மீறி

இலக்கியத்தில் மிளிரும் சந்தநயம், கற்பனை, காதல் காட்சிகள், வீரத்தைப்

பற்றிய விவரிப்பு, பேய்களைப் பற்றிய நகைச்சுவை இழையோடும் காட்சிகள்,

வரலாற்றுச் செய்திகள் எல்லாம் படிப்பவர் மனத்தை ஈர்த்து விடும் என்பது

மறுக்கமுடியாத உண்மை.


சாதாரண அரசர்கள் மீது பரணி இலக்கியம் படைக்கப் படுவதில்லை.

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவ னுக்கு வகுப்பது பரணி"  (இலக்கண விளக்கம்)

என்ற இலக்கணப்படி மிகப் பெரிய பேரரசர் மீது பரணி பாடப்படுவது மரபு. இது

போலவே ,எல்லாப்  புலவர்களாலேயும்  பரணிபாட முடியாது. மிகப் பெரும்  புலவர்

களாலேயே இந்தஇலக்கியத்தைப் படைக்கமுடியும்.  கம்பருக்குச் சமமான தமிழ்ஆளுமை

கொண்ட செயங்கொண்டார் என்னும் புலவர் ஈரடித்  தாழிசை என்னும் யாப்பில் 54 விதமான

சந்த வேறுபாடுகளோடு 599  கண்ணிகள் பயின்று வருமாறு  இக் 'கலிங்கத்துப்

பரணி' என்னும் நூலை வடிவமைத்தார்.


முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் அனந்தவர்மன்

என்னும் வடகலிங்க மன்னன்(இந்நாளைய ஒடிசாவின் பெரும்பகுதி

யும் ஆந்திராவின் சிறு பகுதியும் இணைந்தது கலிங்கம்) முறையாகக்

கப்பம் கட்டாததால் குலோத்துங்கன் தன் படைத்தலைவனும் அமைச்சனும்

ஆன  பல்லவர் வழிவந்த கருணாகரத் தொண்டைமான் என்பவனை

ஏவி வடகலிங்கத்தை அடிமைப்படுத்தினான் என்பது வரலாறு‌. இப் படை

யெடுப்பு 1112 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. இப்பரணி

நூலில் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனின் பெருமையும் பாட்டுடைத்

தலைவன் கருணாகரத் தொண்டைமானின் பெருமையும் பேசப்படுகிறது.


இந்நூலில் கடைதிறப்பு, காடு பாடியது, களம் பாடியது, இந்திரசாலம், குலமுறை

கிளத்துதல், வாழ்த்து முதலிய பல பிரிவுகள் இயற்றப்பட்டிருந்தாலும் 'கடை திறப்பு'

என்னும் பகுதிதான் சுவையான பகுதியாகும். போருக்குச் சென்ற படைவீரர்கள்

தாய்நாட்டுக்குத் திரும்ப வெகு நாட்கள் ஆனமையால் அவ்வீரர்களின் மனைவிமார்கள்

தம் கணவர் வருவர் எனக் கடை(கதவு) திறந்து வைத்தும், வாரார் என எண்ணி மனம்

சோர்வுற்றுக் கடையடைத்தும் நிலைகொள்ளாமல் தவித்ததை அழகாகப் பாடியுள்ளார்.

"வருவார் கொழுநர் எனத்திறந்தும்

வாரார் கொழுநர் எனவடைத்தும்

திருகும் குடுமி விடியளவுந்

          தேயுங் கபாடந் திறமினோ!"

(குடுமி=கதவிலுள்ள குமிழ்; கபாடம்=கதவு) கண்ணி 69.


ஒரு குறும்புக்கார வீரன் முன்னொருநாளில் தானும் தன் மனைவியும் இணைந்திருந்த

காலத்தில் தான் உளறிய மொழிகளை வீட்டுக்கிளி பேசிக்காட்டியதையும் உடனே மனைவி

கிளியின் வாயைப் பொத்தியதையும் தன் மனைவிக்கு நினைவுறுத்திக்

கதவைத் திறக்க வேண்டினான்.

"நேயக் கலவி மயக்கத்தே

நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப

வாயைப் புதைக்கு மடநல்லீர்!

         மணிப்பொற் கபாடந் திறமினோ!'"  (கண்ணி 67.)


காஞ்சி என்பது பெண்கள் இடையில் அணியும் அணிகலன். கலிங்கம் என்பது அவர்கள்

 உடுத்திக் கொள்ளும் ஆடையாகும்.  கணவன் மனைவி இணையும் நேரங்களில் காஞ்சி

யைக் கழற்றாமல் கலிங்கத்தை(ஆடையை)மட்டும் நெகிழ்த்திவிட்டு நலந்துய்ப்பர். இதனை

எடுத்தாண்டுள்ள புலவர், குலோத்துங்கன் காஞ்சி அரண்மனையில் அலுங்காதிருக்க,

அவன் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமானால் கலிங்க நாடு சீர்குலைந்தது

என்று திறமையாகப் பாடியுள்ளார்.

"காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த

      கலவி மடவீர்!  கழற்சென்னி

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த

      களப்போர் பாடத் திறமினோ!"  (கண்ணி எண்63)


"செக்கச் சிவந்த கழுநீரும்

       செகத்தில் இளைஞர் ஆருயிரும்

ஒக்கச் செருகும் குழல்மடவீர்!

        உம்பொன் கபாடந் திறமினோ!"  (கண்ணி எண்74)


போர்க்களக் காட்சியைக் காட்டும் ஒரு பாடல்:

"பொருதடக்கை வாளெங்கே?  மணிமார் பெங்கே?

        போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத

பருவயிரத் தோளெங்கே? எங்கே யென்று

பயிரவியைக் கேட்பாளைக் காண்மின், காண்மின்!"


"கொற்றக் குடையினைப் பாடீரே!

குலோத்துங்க சோழனைப் பாடீரே!". (கண்ணி 533)


"பண்டை மயிலையைப் பாடீரே!

பல்லவர் தோன்றலைப் பாடீரே!"  (கண்ணி 534)


கலிங்கத்துப் பரணியைப்  படித்தின்புறுவோம்.