Tuesday 20 February 2024

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் நீயுரைத்தி வையை நதி.

 "தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்   நீ உரைத்தி வையை நதி".


நாடு செழிப்பாக இருப்பதற்குக் காரணம் மழையும் ஆறும் ஆகும்.

கடவுள் வாழ்த்தாகத் திங்களையும், ஞாயிறையும் போற்றிய

சிலப்பதிகாரம் அடுத்ததாக மாமழை போற்றுதும் என்று பகர்கிறது.

எனவே இவற்றைத் தெய்வமாகக் கருதித் தொழுதனர் பண்டைய

தமிழ்மக்கள். மாதம் மும்மாரி பொழிந்தால் அந்நாடு செழிப்படைதல்

திண்ணம். நல்ல மழைப்பொழிவு கிட்டினால் நல்ல ஆறும் நிச்சயம்

உருவாகும். தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை,

பொருநை(தாமிரவருணி) முதலிய ஆறுகள் இருந்தாலும் பரிபாடல்

இலக்கியத்தில் பேசப்படுவது வையை மட்டுமே. அதுவும் வையைநதிக்கு

அடைமொழி கொடுத்துத் 'தமிழ்வையை' என்று புகழப்பட்டுள்ளது.

பரிபாடலில் நமக்குக் கிடைத்த பாடல்கள் இருபத்திரண்டு மட்டுமே. அதில்,

திருமாலைப் பற்றி ஏழு, செவ்வேளைப் பற்றி எட்டு, வையையைப் பற்றி

எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருமால், செவ்வேள்(முருகன்) முதலிய

தெய்வங்களை வழிபட்டு அவர்களிடம் வரம் கேட்டது போலவே வையை

ஆற்றையும் வழிபட்டு வரம் கேட்டனர் என்று பரிபாடல் தெரிவிக்கிறது.


ஆறுகள்  உழவுக்கு இன்றியமையாதது போலவே புனலாடுதலுக்கும்

இன்றியமையாதது. பண்டைய தமிழ் மக்கள் ஆறு, குளம் போன்றவற்றில்

நீராடி மகிழ்ந்தனர் என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. (நூற்பா1138)

"யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப".

கன்னிப் பெண்கள் தைந்நீராடுதல் தவச் செயலாகக் கருதப்பட்டது.

'ஐங்குறுநூறு' என்ற சங்க இலக்கியத்தில் ' புனலாட்டுப் பத்து' என்ற தலைப்பில்

பத்துப் பாடல்கள் உள்ளன. இக்கட்டுரை வையைப் புனல் பற்றியும், தைந்நீராடல்

பற்றியும் எடுத்துரைக்கும்.


வையை ஆறு வருச நாட்டுப் பகுதியில் உருவாகிறது. சைய மலையில் பொழியும்

மழையின் மிகுதியே வையையாற்றின் வெள்ளப்பெருக்குக் காரணமாகும். மலையிலுள்ள

புன்னை மலர்களையும், கரையிலுள்ள சுரபுன்னை மலர்களையும், வண்டுகள் ஒலிக்கும்

செண்பக மலர்களையும், குளிர்ந்த இயல்புடைய தேற்றாமரப் பூக்களையும், கூவிளைப்

பூக்களையும், கிளைகளைக் கொண்ட வேங்கைமலர்களையும், செவ்வலரி, செங்காந்தள்,

தீயென மலரும் தழைத்த தோன்றிமலர், ஊதைக் காற்றால் கட்டவிழ்க்கப்பெற்ற இதழ்களை

உடைய நீல மலர் ஆகியவற்றையும் மூங்கில் அடர்ந்த சோலைக்கு அருவி அடித்திழுத்து

வந்தது. அலைகளையுடைய நீர் அம்மலர்களைத் தள்ளி வந்து மருதந்துறையில் சேர்த்தது.

அதனால் அத்துறையின் அழகை விவரித்தல் எளிதன்று. முதலில் வளர்பிறைபோல் நீர்ப்

பெருக்கு கூடிக் கொண்டு வந்தது. பின்னர் தேய்பிறை போல் நீர்ப் பெருக்கு சுருங்கத்

தொடங்கியது. ஆனால் முற்றிலும் வற்றியதில்லை.


வையையாற்றில் மக்கள் நீர் விளையாட்டு விளையாடுவர். ஆற்றிலே அணியாக நின்று

நெட்டியாலான வாளைச் சுழற்றுவார் சிலர். குந்தம்(வேல்) ஏந்துவார் சிலர். மகளிர் தேர்க்கு

மகளிரும் மைந்தர் தேர்க்குப்பாகரும் கோல் கொள்ளக் கொடிகட்டி வலிய தேரில்

ஏறுவார் சிலர். பறவை போல் பறக்கும் குதிரை மீதும் பொன்னால் ஆன  நெற்றிப் பட்டத்தை

அணிந்த யானை மீதும் ஏறி,  ஆற்றின் ஆழமான பகுதியில் அவற்றைச் செலுத்தித் திரிவார்

சிலர். மூங்கிற் குழாயால் நீரைப் பீய்ச்சுவார் சிலர். மணமிக்க மாலையைச் சுழற்றிஎறிவார்

சிலர். கொம்பென்னும் கருவியால் நீரை வீசுவார் சிலர். பெண்கள் நீராடுதற்கேற்ற அணி

களையும் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலைகளையும் அணிந்திருந்தனர். அழகிய

நகைகளோடு நுண்ணிய வேலைப்பாடமைந்த பிற அணிகளையும் பொன்னரி மாலை

யினையும் மகளிர் பூண்டிருந்தனர். வையை நீர் கார்காலத்தில் கலங்கி வேனிற் காலத்தில்

தெளிந்து வருதலால் எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.


கார்காலம் நீங்கியது. குளிர் மிகுந்த பின் பனிக்காலம் தொடங்கியது. கன்னிப் பெண்கள்

தம் தாயர் அருகே நின்று நீராடுதலால் தைந்நீராடல் அம்பாவாடல் எனவும் பெயர் பெற்றது.

"வெம்பா தாக, வியன்நில வரைப்பென

அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்

முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்

பனிப்புலர் பாடிப் பருமணல் அருவியின்

ஊதை ஊர்தர"............ (இந்நில உலகம் வெயிற் கொடுமையால் வெம்பாது  மழையால் 

குளிர்வதாகுக என வாழ்த்தி உடலை நடுங்கச் செய்யும்  பனியில் மனந்துணிந்து

தைந்நீராடினர். அப்போது சடங்குகள் அறிந்த முதுபெண்டிர், நோற்கும் முறையினைச்

சொல்லிக் கொடுத்தனர். பனியோடு கூடிய விடியற் காலத்தில் பெருமணலை அரித்தோ

டும் நீரில் மூழ்கி எழுவர். அப்போது வாடைக் காற்று வீசி நடுங்க வைக்கும்.

தைந்நீராடல் பெண்களால் தைமாதத்தில் விடியற் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது தவச்செயல் எனவும் கருதப்பட்டது. எனவேதான் 90,91,92ஆம் வரிகளில்

"தீயெரிப் பாலும் செறிதவமுன் பற்றியோ?

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்

நீயுரைத்தி வையை நதி"

என்று பாடப்பட்டுள்ளது. தைந்நீராடல் பிற்காலத்தில் சமயச் சார்புடையதாக

மாறி மார்கழி நீராடல்--பாவை நோன்பு எனப் பெயர் பெற்றது. நாட்டு நலன்

கருதி மழைவேண்டியும் நல்ல கணவன்மார் வேண்டியும் கன்னியர்

தைந்நீராடியதைப் பரிபாடல் கூறுகிறது. ஆனால், திருப்பாவை, திருவெம்பாவை

ஆண், பெண் இரு பாலாரும் வீடுபேறு(,மோட்சம்) கருதிச் சமயச் சார்புடன்

வழிபடுவதைக் கூறும்.


"தைந்நீரே! நீ நிறம் தெளிந்திருத்தலால் யாம் புனலாடுவதற்கேற்ற தகுதி

உடையாய்! எம் கழுத்தில் போட்ட கைகளை எடுக்காமல் காதலர் எம்மைத்

தழுவ, யாம் சிறந்த பேற்றினைப் பெறுவோமாக என வேண்டுவோம் என

மகளிர் வையையிடம் வரங்கேட்டு மொழிந்தனர். சிலர் எம்மால் விரும்பப்

படும் தலைவர் எம்மை விட்டுப் பிரிந்து செல்லாமல் எம்முடன் இருத்தல்

வேண்டும் என்று வரம் கேட்டனர். வேறு சிலர் எம் கணவரும் யாமும் 

பேரிளம்பெண் பருவம் அடையும்வரை இளமையுடன் இருந்து நிறைந்த

செல்வமும் கேளிரும் பொருந்த வாழ்வோமாக என வரங்கேட்டனர்..


வையையே! இத்தைந்நீராடலை முற்பிறப்பில் செய்த தவத்தால் இப்பிறப்பில்

பெற்றோம். யாவரும் விரும்பத்தக்க நிறைந்த நீர்(வெள்ளம்,) உன்னிடம்

வரும்போது மறுபிறப்பிலும் இத்தைந்நீராடல் எமக்கு வாய்ப்பதாகுக!

பரிபாடல் பதினொன்றாம் பாடல்--புலவர் நல்லந்துவனார்.


பார்வை: பரிபாடல்--வர்த்தமானன் பதிப்பக வெளியீடு.

உரையாசிரியர்: முனைவர் இரா.சாரங்கபாணி.

Monday 5 February 2024

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

 இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.


கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காண்போம்:

தோழி கூற்று: (செவிலித் தாயிடம் உரைத்தது).

அன்னையே!  ஆற்று வெள்ள அழகால் கவரப்பட்ட தலைவி எங்களுடன்

நீராடினாள். எதிர்பாராமல் உடல் தளர்ந்து தனது தாமரை போன்ற

கண்களை மூடிக்கொண்டு  நீந்தாமல் கைசோர்ந்து நின்றவளை ஆற்று

வெள்ளம் அடித்துச் சென்றது. தீடீரென்று அவ்விடத்துக்கு வந்த ஒருவன்

தான் சூடி யிருந்த சுரபுன்னை மாலை அசைய அவ்வெள்ளத்தில் பாய்ந்து

நகையணிந்த தலைவியை மார்போடு அணைத்துக் கரைசேர்த்தான்.

கரையில் குழுமியிருந்தவர் "அவன் அவளைத் தழுவினான்" என்று அலர்

(பழி) தூற்றினர். இதில் யாரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. தேவைப்

பட்டால் தன் கற்பின் திண்மையை அவள் மழையை வரவழைப்பதன் மூலம்

நிரூபிக்க இயலும். (கற்புடைப் பெண்டிர் பெய்யென்று சொன்னால் மழை

பெய்யும் என்பது மக்களிடையே நிலவிய நம்பிக்கை. "தெய்வம் தொழாள்,

கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை--திருக்குறள்)


அவளைக் காப்பாற்றிய தலைவன் அந்த மலைநாட்டுக்குத் தலைவன்.

தினைப்புனத்தைக் காவல்காப்போர் எழுப்பும் அகிற் புகையினால் நிலவு

மறைக்கப்பட்டுத் தேன்கூடு போலத் தோன்றும். அதிலிருக்கும் தேனை

எடுப்பதற்கு ஏணி அமைப்பர். ( புலவரின் மிகையான கற்பனை). அத்தகைய

வளமான குறிஞ்சி மலைக்குத் தலைவனவன். சிறுகுடியில் வாழும் மக்களே!

அவள் உயிரைக் காத்த தலைவனுக்குத் தலைவியைப் பெண்கொடுக்காமல்

அயலானுக்குக் கொடுக்க எண்ணுதல் தவறு அன்றோ?  இம்மலையில்

உள்ளோர் இத்தகைய அறம் இல்லாத செயல் செய்தால் இனி நிலத்தில்

வள்ளிக்கிழங்கு விளையாது; மலைச்சாரலில் தேன்கூடு கட்டப்படாது; புனத்தில்

தினைப்பயிர் கதிர்விடாது.


காந்தள் மலர் மணம் வீசும் இந்த மலையில், மூங்கில் போன்ற தோள்களை

உடைய குன்றவர் மகளிர் நாளும் தவறாமல் தம் கணவரைத் தொழுது

எழுவதால் அந்த ஆடவர்கள் அம்பு எய்தால் அது குறிதப்புவதில்லை. தற்போது

தலைவியைப் பற்றி அலர் தூற்றினால் விளைச்சல் பொய்க்கும்; வேட்டைக்குச்

செல்வோர் எய்யும் அம்பு குறிதவறும்.(,அக்காலத்தில் நிலவிய நம்பிக்கை)."


இவ்வாறெல்லாம் கூறித் தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றாள். அவள்

தோழியின் கருத்தை உணர்ந்துகொண்டு நற்றாய்க்கு(தலைவியைப் பெற்ற

தாய்க்கு) அறத்தொடு நின்றாள். நற்றாய், தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும்

அவர்கள் உண்மையை உணரும் வகையிலும் சினம் கொள்ளாத வகையிலும் கூறி

அறத்தொடு நின்றாள். (அறத்தொடு நிற்பது என்பது தலைவிக்கும்  தோழிக்கும் மட்டும்

தெரிந்த உண்மையை/களவுக்காதலை வெளிப்படுத்துவது). இதனைக் கேட்ட தலைவியின்

தந்தையும் தமையனும் சினமடைந்து அம்பையும் வில்லையும் கையிலெடுத்து வெளியே

கிளம்ப எழுவதும் பின்னர்ச் சினமடங்கி அமர்வதுமாக நிலைகொள்ளாமல் தவித்தனர்.

இவ்வாறு அன்றைய பகற்பொழுது முழுவதும் புரியாத மனநிலையில் இருந்தனர்.

மனம் குழம்பிச் சுழன்று கொதித்த அவர்கள் ஒருவாறு முற்றாகச் சினமடங்கி "இருவர் மீதும்

யாதொரு தவறும் இல்லை" என்று கூறிச் சமாதானம் அடைந்தனர்.  "தெருமந்து தலைசாய்த்

தார்" என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தலையைச் சாய்த்துத் திருமணத்துக்கு

ஒப்புதல் தெரிவித்ததாகக் கொள்ளலாம். தொடர்புடைய பாடற்பகுதி பின்வருமாறு:

"அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட

என்னையர்க்(கு) உய்த்துரைத்தாள் யாய். 

அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து

ஒரு பகல் எல்லாம் உருத்தெழுந்(து) ஆறி

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

தெருமந்து சாய்த்தார் தலை".

தெருமரல்=மனச் சுழற்சி; சந்தேகப்படுதல்.

முதலில் மனங்குழம்பிப் பின்னர்த் தெளிவடைந்து திருமணத்துக்கு உடன்பட்டனர்.

(பாடல் நெடியது--51அடிகளையுடையது).பாடல் எண்: 39; திணை: குறிஞ்சி;புலவர்: கபிலர்.)


தோழி தலைவியிடம் கூறியது:" உனக்கும் தலைவனுக்கும்  இனிதே திருமணம்

நடக்கும் பொருட்டு மலைத்தெய்வம்(முருகன்) மனம் மகிழ நாம் குரவை ஆடுவோம்.

கொண்டு நிலைப் பாடலைப் பாடு(,ஒருவகைப் பாட்டு)".

தலைவி: "தினைப் புனத்தின் அருகில், இங்குள்ள வேங்கைப் பூவின் மகரந்தப்

பொடி உதிர்ந்து பொன்னால் இழைக்கப்பட்ட மணவறையாகப் பொலியும் பாறையில்

அனைவரும் காண மணமக்களாக நாங்கள் ஒன்றாக அமர்வோமன்றோ? உடனே

தலைவனுடன் இணைவதாகக் கனவு காண்பதை விட்டுவிடுவேன்(நனவாகப்

போவதால் கனவு தேவையில்லை).

தலைவியும் தோழியும் உவகையுடன் மென்மேலும் உரையாடி மகிழ்ந்தனர். பின்னர்த்

தலைவன் திருமணச் சடங்கைப் பற்றி நன்கு தெரிந்த அறிவனை(நல்ல நேரம்

கணிப்போன்) முதலில் அனுப்பி வாழ்வின் தகுதிமிக்க பொதுக் குறிக்கோளையும்

அதனை அடையும் வகையில் வாழும் முறையையும் அறிந்த இல்லறம் சான்றோர்

புடைசூழத் திருமணம் புரிந்துகொள்ள வருகின்றான். இப்பொழுது மையுண்ட

பூப்போன்ற உன்கண் பொலிவு பெறுவதாகுக!


பார்வை:சங்க இலக்கியம்(கலித்தொகை)--வர்த்தமானன் பதிப்பகம்; உரையாசிரியர்:

பெருந்தமிழறிஞர் சுப.அண்ணாமலை.