Sunday 15 November 2020

விழவு முதலாட்டி

 (குறுந்தொகைப் பாடலின் அடிப்படையில் புனையப்பட்ட சிறுகதை)

விழவு முதலாட்டி


கதிரவன் தன் வெள்ளிக் கம்பி போன்ற ஒளிக்கதிர்களைப் பரப்பிக் கொண்டு கிழக்குத் திசையில் எழுந்த நேரம்,

அக்கீற்றுக்கள் மேலே பட்டவுடன் இளஞ்சூட்டை உணர்ந்த இளங்கீரன் விடிந்துவிட்டதை அறிந்து படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான். காலையில் படைக்கலப் பயிற்சி மேற்கொண்டால் முல்லை நிலத்து ஆனிரைகளப் பாதுகாக்க இயலும், மேலும் போர்க்காலங்களில் படைக்கு ஆள் திரட்டும் போது படையிற் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்க இயலும், எனவே காலை நேரப் படைக்கலப் பயிற்சியைத் தவற விடுவதே யில்லை. துணைக்குத் தன் பாங்கன் இளங்கண்ணனை அழைத்துச் செல்வது வழக்கம். அன்றும் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு இளங்கண்ணன் இல்லத்துக்குச் சென்று அவனையும் எழுப்பி அழைத்துக்கொண்டு வழக்கமாகச் செல்லும் வனப்பகுதிக்குச் சென்றான். 

செண்பகத்தோப்பு என்னும் அவ்வனப்பகுதி மரங்கள் நெருங்கி வளர்ந்த அடர்த்தியான காட்டுப்பகுதி, சுள்ளி பொறுக்குபவர்களைத் தவிரப் பிறர் பெரும்பாலும் அங்கு வருவதில்லை. ஏனெனில் காட்டு விலங்குகளான யானை, புலி, கரடி, காட்டெருமை முதலானவை சில சமயங்களில் உலா வரும். கொன்றை, குருந்து, காயா, மா, ஆல் முதலிய மரங்கள் கிளைகளைப் பரப்பி நின்றன. இருவரும் ஒரு பெரிய ஆலமரத்தடியின் கீழ் படைக்கலங்களை வைத்துவிட்டுச் சிறிது நேரம் அமர்ந்தனர். அருகில் யானைச்சாணம் தெரிந்தது. அதை மிதித்துப் பார்த்த இளங்கீரன் “” இளங்கண்ணா ! யானைச் சாணம் சூடாக உள்ளது. அண்மையில்தான் யானை நடமாடிக் கொண்டிருக்கும்” என்றான்.

அவன் சொன்னதுதான் தாமதம் பெண்களின் அலறல் ஓசை அருகில் கேட்டது. ஓசை வந்த திக்கை நோக்கிச் சென்ற இருவரும் அருகிலுள்ள சிறிய பாறையிலிருந்து விழும் அருவியின் கீழ் இரு பெண்கள் நீராடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். அந்தப் பாறைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு காட்டுயானை நின்று கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய கேடு வரவுள்ளது என்றெண்ணிய இருவரும் விரைந்து ஓடிச்சென்று பெண்களைக் கைப்பிடித்து அண்டையில் உள்ள மிகப்பெரிய ஆலமரத்தடி நோக்கி அழைத்துச் சென்றனர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்ணைத் தூக்கி ஆலமரத்தில் ஏற்றிவிட்டு மளமளவெனத் தாங்களும் ஏறிக்கொண்டார்கள். இதனைக் கண்ணுற்ற ஒற்றை யானை பெருங்குரலெடுத்துப் பிளிறிய படியே அவர்களை நோக்கி ஓடி வந்தது. இளங்கீரனும், இளங்கண்ணனும் அப்பெண்களை மரத்தில் மேல்நோக்கி ஏறிச் செல்லுமாறு கூறித் தாங்களும் அவ்வாறே உயரே ஏறிச் சென்றனர். இதற்கிடையில் மரத்தடியை அடைந்த யானை சீற்றத்தோடு ஆலமரத்தை முட்டியது. தும்பிக்கைக்கு அகப்பட்ட கிளைகளை ஒடித்துப் போட்டது. உரமாக மரத்தை அசைத்துப் பார்த்தது. ஆலமரத்தின் அடிப்பகுதி பரந்து விரிந்திருந்தது. மேலும் நாட்பட்ட மரமாகும். எனவே யானையால் அதனை வீழ்த்த இயலவில்லை. நெடு நேரம் மோதிப்பார்த்த யானை களைப்படைந்து ஒதுங்கிச்சென்றது. கண்ணிலிருந்து முற்றிலுமாக யானை மறைந்த பிறகு நால்வரும் மரத்திலிருந்து இறங்கத் தொடங்கினர். இளங்கீரன் ஒருத்தியை இறக்கிவிட்டான். இளங்கண்ணன் மற்றொருத்தியை இறக்கிவிட்டான்.

மரத்திலிருந்து நால்வரும் இறங்கிய பிறகு இளங்கீரன் அப்பெண்களை உற்று நோக்கினான். இருவரில் ஒருத்தி மாநிறம் கொண்டவளாக இருந்தாலும் பேரழகியாகத் தோன்றினாள். கருமையான செறிந்த கூந்தல், கயல் போன்ற கண்கள், எடுப்பான நாசி, மாம்பழக் கன்னம், முத்துப்பற்கள், செவ்விய இதழ்கள், கண்ணை உறுத்தும் முன்னழகு, ஆலிலை போல் வயிறு, சிறுத்த இடை, சங்குக் கழுத்து இன்னும் பிற அழகுகளோடு வானத்திலிருந்து வந்த தேவதையைப் போல் தோன்றினாள். இளங்கீரன் அவளைப்பார்த்துத் திகைத்துப் போனான். மற்றொருத்தியும் பேரழகியாக இல்லாவிட்டாலும் களையான தோற்றம் காட்டி நின்றாள்.

இளங்கீரன் அப்பெண்களை நோக்கி “நீவிர் யாவர்?, இவ்வளவு தீங்கு மிகுந்த இடத்துக்கு வரக் காரணம் என்ன?” என்று வினவினான். பேரழகி யாதொன்றும் பேசவில்லை. உடன் வந்தவள் பேசினாள். “ ஐயா, நாங்கள் அருகிலுள்ள ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள தீங்குகளைப் பற்றி அறியாமல் அருவியில் நீராட வந்தோம். என் பெயர் நச்செள்ளை ; இவள் பெயர் நன்முல்லை. இவள் தந்தை ஆயர்பாடித் தலைவர். இவளுக்கு நான் பாங்கி. தாங்கள் செய்த பேருதவிக்கு மிக்க நன்றி. வருகிறோம்” என்று கூறிக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் சென்ற பிறகும் இளங்கீரன் திகைப்பிலிருந்து நீங்காமல் நின்றான். நன்முல்லையின் பேரழகு அவனை நிலைகுலையச் செய்தது. இப்படிப்பட்ட பேரழகியின் கையைப் பிடிக்க என்ன தவம் செய்தேனோ? என்று எண்ணிக்கொண்டான். தன் குடியிருப்பான ஆயர்பாடியைச் சேர்ந்தவள் என்ற போதிலும் இவள் இதுகாறும் என் கண்ணில் படவில்லையே? என்று நினைத்துக் கொண்டான். அப்பொழுதுதான் அவனுக்குச் சில செய்திகள் நினைவுக்கு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக அவன் மதுரையிலுள்ள ஆசீவகப் பள்ளியில் தங்கிக் கல்வி கற்றதை நினைவு கூர்ந்தான். அவளை மறுபடியும் பார்க்க ஆவல் கொண்டான்.

நன்முல்லையும் ஏறத்தாழ இதே நிலையில் தான் இருந்தாள். கருமையான சுருண்ட முடியோடும், செருக்கான் மீசையோடும், வீறு கொண்ட தோற்றத்தோடும், நீண்ட கைகளோடும், விம்மிப்புடைத்த தோள்களோடும் ஆண்மையே ஓருருவம் கொண்டு வந்தது போலத் தோன்றினான். அவன் கையால் தன் கையைப் பற்றி இழுத்துச் சென்றது, மரத்தில் தன்னைத் தொட்டு ஏற்றிவிட்டது மரத்திலிருந்து தன்னை இறக்கியது என்று அன்றைய நாளில் நிகழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தாள். மறுமுறையும் அவனைச் சந்திக்க மிக்க ஆவல் கொண்டிருந்தாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. படுக்கையிலிருந்து எழுந்த இளங்கீரன் மளமளவென்று குளித்துவிட்டுத் தன் பாங்கன் இளங்கண்ணனைச் சந்திக்க எண்ணி அவன் இல்லம் நோக்கி நடந்து சென்றான். இதற்கிடையில் நன்முல்லையும், நற்செள்ளையும் பால், மோர், தயிர், வெண்ணெய் முதலியவற்றை மண் கலயங்களில் ஊற்றி அவற்றை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு மருதநிலப் பகுதியில் அவற்றை விற்று நெல், காய்கறிகள், கரும்பு முதலானவற்றை வாங்கிவரக் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் இளங்கீரன் அவர்களை எதிர்கொண்டான். நன்முல்லை அவனைக் கண்டவுடன் மேற்கொண்டு நடவாமல் நின்றுவிட்டாள். அவ்விருவரின் செய்கைகளைக் கண்ட பாங்கி ஏதோ உணர்ந்தவளாக விறுவிறு என்று முன்னோக்கி நடந்து ஒரு மரத்தடியில் நின்று கொண்டாள்.

நச்செள்ளை ஒதுங்கிக் கொண்டதால் இளங்கீரனும், நன்முல்லையும் தனித்து விடப்பட்டனர். சிறிது நேரம் யாதொன்றும் பேசாமல் அமைதி காத்தனர். முதலில் இளங்கீரன் பேச்சைத் தொடங்கினான். “நன்முல்லை ! கண்டதும் காதல் என்பது உண்மைதான், உன்னைப் பார்த்த முதல் நொடியிலிருந்தே என் நெஞ்சை உன்பால் ஈர்த்துவிட்டாய் இனிமேல் உன்னை என்றும் பிரியேன். பிரிந்தால் உயிர் தரியேன்” என்றான். நன்முல்லை நாணத்தால் தலை கவிழ்ந்து கால் விரல்களால் தரையைக் கீறிக்கொண்டிருந்தாள். பின்னர் அவனை ஏறிட்டுப்பார்த்து என் நிலைமையும் அதுவே. நீர் என் கையைப் பற்றி இழுத்துச் சென்றது, என் மேனியைத் தொட்டு மரத்தில் ஏற்றிவிட்டது, பிற்பாடு இறக்கி விட்டது போன்ற நிகழ்வுகளால் யான் என்னை இழந்துவிட்டேன். எப்போதும் உம் அருகிலேயே இருத்தல் வேண்டும் என்று விரும்பினேன்” என்றாள். அவன் அவள் கைகளைப் பற்றி மென்மையாகத் தடவினான். அவளைத் தழுவ எண்ணி அருகில் நெருங்கிய பொழுது நச்செள்ளை பெருங்குரலில் நன்முல்லையை அழைத்தாள். உடனே கைகளை உதறிவிட்டு நன்முல்லை ஓடிவிட்டாள்.

அடுத்தடுத்து இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சிலசமயம் பகலில் நன்முல்லை வரத்தவறிய பொழுது இரவில் சந்தித்துப் பேசினார்கள். ஊரார் சிலர்  இவர்களின் களவியலைப் பார்த்துத் தங்களுக்குள் கமுக்கமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைக் கேள்விப்பட்ட பாங்கி இருவரையும் நோக்கிப் "பெரிய அளவில் ஊர்மக்கள் பழிச்சொல் கிளப்புமுன்(அலர்,கௌவை) அறத்தொடு நின்று(களவியலை வெளிப்படுத்தி) வதுவை செய்து கொள்வது சாலச் சிறந்தது" என்றாள்.எனவே இளங்கீரன் நன்முல்லையின் தந்தையைச் சந்தித்து மகட்கொடை கேட்டல் வேண்டும் என நினைத்தான்.

அடுத்த நாளே இளங்கீரன் நன்முல்லையின் இல்லத்திற்கு வந்து அவள் தந்தையிடம் பெண் கேட்டான். அவர் அவனிடம் “நீர் உம் பெற்றோருடனும் சுற்றத்தாருடனும் வாரும் பேசிமுடிப்போம் என்றார்.  அதன்படி இளங்கீரன் தன் பெற்றோருடனும் சுற்றத்தாருடனும் மறுநாள் வந்தான். நன்முல்லையின் தந்தையும் அவர் சுற்றத்தாருடன் அமர்ந்திருந்தார். அனைவரும் கலந்து பேசி அன்றிலிருந்து ஏழாம் நாள் வதுவை(திருமணம்) நடைபெறும் என்று அறிவித்தனர். பெண்ணுக்குப் பரியமாக (மணப்பரிசு) ஆறு பொன் வளையல்கள் தரப்படும் என்றான் இளங்கீரன். நன்முல்லையின் இல்லத்தின் முன்பு பெரிய பந்தல் போடப்பட்டு ஆங்காங்கே தோரணங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டன. தரையில் புதுமணல் பரப்பப்பட்டது. வீட்டுச்சுவரில் செம்மண் பூசப்பட்டது. ஏழாம் நாள் அனைவரும் குழுமினர். மணப்பறை முழங்கியது. பெண் எருமைக்கொம்பு வீட்டின் நடுவில் நட்டுவைக்கப்பட்டது. நன்முல்லையின் சிலம்புகள் அகற்றப்பட்டன (சிலம்புகழி நோன்பு). பெரியோர்கள் வாழ்த்தத் திருமணம் நிறைவேறியது. அன்று இரவு இளங்கீரனுக்கும் நன்முல்லைக்கும் முதல் இரவுச் சடங்கு நடந்தது. வெகுநேரம் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் விளக்கை அணைத்தனர். இளங்கீரன் நன்முல்லையை அணைத்தான். இருவரும் காமக்கடலில் நீந்திக் கழிபேருவகை எய்தினர்.

மறுநாள் விடிந்ததும் நன்முல்லை குளித்துமுடித்துக் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். இளங்கீரனும் படுக்கையிலிருந்து எழுந்து குளித்துமுடித்துப் புத்தாடை அணிந்து கொண்டான். அவன் தந்தை அவனுக்காகச் சிற்றில் கட்டிக் கொடுத்திருந்தார். புதுமணமக்கள் சிற்றிலில் குடிபுகுந்தனர். இள்ங்கீரனின் தாய் காலைச் சிற்றுண்டியைச் சமைத்தாள். அதை உண்டு முடித்த இளங்கீரன் ஒரு பணியின் நிமித்தம் வெளியே சென்றுவிட்டான். நன்முல்லையைச் சிற்றிலில் விட்டுவிட்டு அனைவரும் கிளம்பிச் சென்றனர். நண்பகல் உணவை நன்முல்லைதான் சமைத்தல் வேண்டும். தன் கணவனுக்குப் பிடித்த உணவைச் சமைத்து அவன் மனத்தைக் கொள்ளையடிக்க விரும்பினாள். என்ன உணவைச் சமைப்பது? என்று சிந்தித்தாள். பிற்பாடு தீம்புளிப்பாகர் எனப்படும் மோர்க்குழம்பைச் சமைக்க முடிவு செய்தாள். நன்முல்லை அவள் பெற்றோர்க்குச் செல்லப்பெண். தாய்க்கு உதவியிருக்கிறாளே தவிர அவள் மட்டும் பொறுப்பெடுத்துச் சமைத்ததில்லை. மோர்க்குழம்பு சமைக்க மிகவும் புளிப்பேறிய தயிரைப் பிசைந்தாள். உடுத்தியிருந்த பட்டாடை நழுவியது. கைவிரல்களைக் கழுவாமலே பட்டாடையில் துடைத்து அதனைக் களையாமல் உடுத்திக்கொண்டு அடுப்பைப் பற்றவைத்தாள். தாளிதம் செய்வதற்குரிய எண்ணெய் மற்றும் இதர சேர்மானங்களை ஆயத்தம் செய்தாள். எரிந்து கொண்டிருந்த அடுப்பின்மேல் இருப்புச்சட்டியை வைத்து அதனைச் சூடுபடுத்தினாள். பின்னர் எண்ணெய்யைக் கொட்டி அதனையும் சூடுபடுத்தினாள். பின்னர் அதில் பிசைந்த தயிரையும் இதர சேர்மானங்களையும் சேர்த்துக் கொதிக்கவிட்டாள். சமையல் வேலையில் அதிகப் பழக்கம் இல்லாததால் தாளிதம் செய்யும் பொழுது கிளம்பிய புகை குவளைமலர் போன்ற கண்களைக் கரித்தது. ஒருவாறு தீம்புளிப்பாகர் சமைத்தாகிவிட்டது. பின்னர் மட்பாண்டத்தில் சோற்றைப் பொங்கி இறக்கி வைத்தாள். தன் ஆசைக்கணவனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். உச்சி வெயிலில் இளங்கீரன் வந்து சேர்ந்தான். முகம், கை, கால், அலம்பிய பிறகு உணவுண்ண அமர்ந்தான். நன்முல்லை சோற்றைப் பரிமாறி மோர்க்குழம்பை ஊற்றினாள். சோற்றைப் பிசைந்த அவன் ஒரு கவளத்தை வாயிலிட்டுக்கொண்டான். தன்மனைவி சமையலால் அவன் முகம் மலர்ந்தது. கணவனின் மகிழ்ச்சியைக் கண்ட நன்முல்லையின் ஒளிபொருந்திய நெற்றியையுடைய முகமும் மலர்ந்தது. அப்பொழுது நன்முல்லையைக் காணவந்த செவிலித்தாயும் இக்காட்சியைக் கண்டு உவகையுற்றாள். நன்முல்லையின் பெற்றதாயிடம் தெரிவித்தாள். நன்முல்லையும் இளங்கீரனும் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். நன்முல்லை சமையலை நன்கு கற்றுத் தெளிந்து வகைவகையாகக் கணவனுக்குச் சமைத்துக் கொடுத்தாள். இரவில் இருவரும் இன்பக்கடலில் நீந்தித்  திளைத்தார்கள்.

இப்படியாக ஆறு திங்கட்காலம் கடந்து விட்டது.நன்முல்லையின் உடலில் சிலமாற்றங்கள் தெரியத் தொடங்கின. உணவு சுவைக்கவில்லை. உண்ட உணவு கக்கல் மூலம் வெளி வந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட செவிலித்தாயும் நற்றாயும் வந்தனர். மருத்துவச்சியும் வந்து நாடிபிடித்துப் பார்த்து நன்முல்லை கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தாள். இச்செய்தியறிந்த இளங்கீரனின் தாய், தந்தையும் வந்து நன்முல்லையை வாழ்த்தினர். இளங்கீரன் குழந்தைச் செல்வம் உட்பட எல்லாச் செல்வமும் பெற்று மகிழ்ந்து குலாவுவதற்குக் காரணமான நன்முல்லையை விழவு முதலாட்டி என்று பாராட்டினர்.



ஆதாரப் பாடல்

வரிசை எண் 12 குறுந்தொகைப் பாடல் எண் : 167

புலவர் : கூடலூர்க் கிழார்.


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்

குவளை உண்கண் குய்ப்புகை கமழத்

தாந்துழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.