Thursday 21 February 2019

குறிஞ்சிப் பாட்டு(99 வகை மலர்களைப் பேசும் நூல்)

குறிஞ்சிப் பாட்டு(சங்க நூல்; புலவர் கபிலர் இயற்றியது)

முருகு  பொருநாறு  பாணிரண்டு  முல்லை
பெருகு  வளமதுரைக்  காஞ்சி---மருவினிய
கோலநெடு நல்வாடை  கோல்குறிஞ்சி  பட்டினப்
பாலை  கடாத்தொடும்  பத்து.
இச்செய்யுளில்  குறிப்பிட்டபடி, திருமுருகாற்றுப் படை,
பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப் படை, பெரும்
பாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக்காஞ்சி,
நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை,
மலைபடுகடாம் ஆகிய பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்று
குறிஞ்சிப் பாட்டாகும். இதனை இயற்றியவர் புலவர்
கபிலர் ஆவார். பிரகத்தன் என்ற ஆரிய மன்னனுக்குத்
தமிழர் பின்பற்றும் களவு ஒழுக்கத்தைப் பற்றிய தவறான
புரிதலை விலக்கிச் சரியான, செம்மையான விளக்கத்தைப்
புரியவைத்து, ஆரியர் திருமண நெறியை விடவும் தமிழர்
திருமண நெறி உயர்வானது என்பதை வலியுறுத்துவதற்
காகப் பாடியதாகச் சொல்வார்கள்.

நூற்பொருள்:அகப்பொருள்; திணை:குறிஞ்சித் திணை;
துறை:அறத்தொடு நிற்றல்; யாப்பு:ஆசிரியப்பா; அடிகள்:
261.  அகத்திணையில் களவொழுக்கம், கற்பொழுக்கம்
எனப்படும் இருபெரும் பிரிவுகள் உள. இவ்விரண்டையும்
இணைத்து நிற்பது அறத்தொடு நிற்றலாகும். தலைவி-
தலைவனின் களவொழுக்கத்தை வெளிப்படுத்துதல் அறத்
தொடு நிற்றல் ஆகும். தலைவி, தோழி, செவிலி, நற்றாய்
ஆகியோர் அறத்தொடு நிற்பது வழக்கம். இதன் விளைவு
தலைவியைத் தலைவனுடன் கற்பு  வாழ்க்கையில் இணைப்
பதாகும். அதாவது, தலைவியைத் தலைவனுக்குத் திருமணம்
செய்வித்தலாகும்.

இந்தப் பாடல் தோழி செவிலியிடம் கூறும் கூற்றாக அமைந்
துள்ளது."அன்னாய் வாழ்க! நான் சொல்வதைக் கேட்பாயாக;
தாயே! என் தோழி(தலைவி)  ஒளிரும் நெற்றியும்  செழித்து
வளர்ந்த மென்மையான கூந்தலும் உடையவள். அவள் மேனி
யிலுள்ள அணிகலன்கள் கழன்று விழுமாறு பண்ணிய, குணப்
படுத்த முடியாத கொடிய நோய் பற்றி அகன்ற ஊரிலுள்ளோரிடம்
வினவினாய். கடவுளரை வாயால் வாழ்த்தியும், வணங்கியும், பலவித
மலர்களைத் தூவியும், பல்வேறு தெய்வங்களை மனத்தில் எண்ணி,
நறுமணப் புகையும் சந்தனமும் படைத்தும் அவளின் நோய்பற்றி அறிய
முயன்றாய். அது முடியாமல் மனங்கலங்கிக் குறையாத மயக்கத்தால்
வருந்துகிறாய். அவளது நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள்
மெலியவும், வளையல்கள் கழலுதலைப் பிறர் அறியவும், தனிமைத்துயர்
தோன்றி வருத்தவும் அவள் படும் இன்னல்களைக் கண்டு எனது பேச்சு
சாமர்த்தியத்தால் அவளிடம் விசாரித்தேன். அவள் உடனே என்னிடம்
'"முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும்  நேர்த்தியாகச் செய்த
அணிகலன்கள் சீர்குலைந்து போனால் மீண்டும் சேர்த்துக் கட்ட முடியும்.
ஆனால், நற்குணங்களின் தன்மையும், உயர்நிலையும்,ஒழுக்கமும் சீர்
குலைந்தால், அக் கறையைக் கழுவி யகற்றிப் பழைய நிலையைக் கொண்டு
வருதல் எளிதன்று
 என அறிஞர் கூறுவர். என் பெற்றோரின் விருப்ப
மும் என் நாணமும் மடனும் ஒருசேர நீங்கிப் போக, என் தந்தையின் அரிய
காவலையும் மீறித் தலைவனும் நானும் புரிந்துகொண்ட களவுமணம்
(மன்றல்--இருவரும் கணவனும் மனைவியும் ஆக இணைந்தனர்)
பற்றிய தகவலைத் தெரிவித்தால் மனம் ஆறுதல் அடையும். பெற்றோர்
இசைவு தெரிவிக்காவிடில்  இறக்கும் வரை காத்திருந்து அடுத்த பிறவி
யில் மணம்  செய்விக்கட்டும் '"  என்று சொல்லிக் கண்ணீர் உகுத்தாள்.
தலைவியும் தலைவனும் புரிந்துகொண்டது பெற்றோரும் பிறரும்
அறியாவகையில் நிகழ்த்தப் பட்ட களவுமணம். பெற்றோரும் பிறரும்
அறிய வெளிப்படையாக நிகழ்த்தப்பட்டால் முறையான மணமாகும்.
தலைவியின் இப் புலம்பலையும் அழுகையையும் கேட்ட நான் பகைமை
கொண்ட இரு பெரு வேந்தர்களுக்கிடையில்  சமாதானம் செய்ய முயன்று
அறிவுரை கூறும் போது  அறிஞர்கள் எத்தகைய அச்சத்துடன் இருப்பார்களோ
அத்தகைய அச்சத்தை  உணர்ந்தேன். தலைவன் தனக்குச் சகல விதத்திலும்
(செல்வ நிலை, சுற்றத்தார், இனத்தார் போன்ற அனைத்து அம்சங்களும்)
 இணையானவனா? என்று ஆராயாமல் களவுமணத்தை இருவரும் விரும்பிச்
செய்து கொண்டது எப்படி என்று உன்னிடம் சொல்வேன். அதைக் கேட்டு
நீ   கொஞ்சமும் சினங்கொள்ள வேண்டா" என்றாள்.

"தினைப்புனம் காத்து மாலையில் இல்லம் திரும்புக" என்று கூறி எங்களை
அனுப்பி வைத்தாய். விளைந்திருக்கும் தினைக்கதிர் யானையின் துதிக்கை
போல  வளைந்திருக்கும். விளைந்த கதிருக்குமேலாக  இரண்டு தினையிலைத்
தோகைகள் நிமிர்ந்திருப்பது யானையின் தந்தங்கள் போல் இருக்கும். துதிக்
கைகளில் உள்ள மடிப்பு வளைவுகள் போலத் தினைக்கதிர் திட்டுத் திட்டாகக்
காணப்படும். நீ சொன்னபடி தழல், தட்டை, குளிர் எனப்படும் கருவிகளில் இசை
எழுப்பிக்கொண்டு தினைப்புனம் காத்துக் கொண்டிருக்கும் வேளையிலே
அள்ள அள்ளக் குறையாத கடலில் இருந்து மேகமானது நீரை முகர்ந்துகொண்டு
காற்றால் உந்தப்பட்டு வானில் மிதந்து அல்லாடிக் கொண்டிருந்தது. ஏராளமாகச்
சென்ற மேகங்கள் ஒன்றோடொன்று மோதும்போது முரசு முழக்கத்துடன் செல்லும்
முருகனின் வேல் மின்னுவது போல மின்னல்கள் தோன்றின. அவை மலைமேல்
மழையாகப் பொழிந்தன. மழைநீர் உச்சிமலையிலிருந்து இறங்கி அருவியாக
விழ அந்த அருவியில் நீங்காத ஆவலுடன் கட்டுப்பாடில்லாமல் நீராடிக் கொண்டிருந்
தோம். பளிங்கு போன்ற அச்சுனையில் மூழ்கு நீச்சல் போட்டுக்கொண்டிருந்தோம்.
கொட்டும் அருவியிலும், சுனையிலும் நீராடினோம். ஈரம் கோத்துக் கொண்டு பின்
னிக் கிடந்த  எங்களது கூந்தலில் நீர்த்திவலைகள் சொட்டிப் பின் எங்களது கூந்த
லில் இருந்து தோள் பக்கமாக விழ, அவற்றைப் பிழிந்து உலர்த்தினோம். அருகில்
பூக்கள் பூத்துக் கிடந்தன. அவை பின்வருமாறு:
"ஒண்செங் காந்தள், ஆம்பல், அனிச்சம்,
தண்கயக் குவளை, குறிஞ்சி, வெட்சி,
செங்கொடு வேரி, தேமா , மணிச்சிகை,
உரிது நாறவிழ் தொத்துந்தூழ், கூவிளம்,
எரிபுரை எறுழம், சுள்ளி, கூவிரம்,
வடவனம், வாகை, வான்பூங் குடசம்,
எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை,
பயினி, வானி, பல்லிணர்க்  குரவம்,
பசும்பிடி, வகுளம், பல்லிணர்க் காயா,
விரிமலர் ஆவிரை, வேரல், சூரல்,
குரீஇப் பூளை, குறுநறுங்  கண்ணி,
குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம்,
போங்கம், திலகம், தேங்கமழ் பாதிரி,
செருந்தி, ஆதிரல், பெருந்தண் சண்பகம்,
கரந்தை, குளவி, கடிகமழ் கலிமா,
தில்லை, பாலை, கல்லிவர் முல்லை,
குல்லை, பிடவம், சிறுமா ரோடம்,
வாழை, வள்ளி, நீள்நறு நெய்தல்,
தாழை, தளவம், முள்தாள்  தாமரை,
ஞாழல், மௌவல், நறுந்தண்  கொகுடி,
சேடல், செம்மல், சிறுசெங் குரலி,
கோடல், கைதை, கொங்குமுதிர் நறுவழை,
காஞ்சி, மணிக்குலைக் கள்கமழ் நெய்தல்,
பாங்கர், மராஅம், பல்பூந் தணக்கம்,
ஈங்கை, இலவம், தூங்கிணர்க் கொன்றை,
அடும்பு, அமராத்தி, நெடுங்கொடி அவரை,
பகன்றை, பலாசம், பல்பூம் பிண்டி,
வஞ்சி, பித்திகம், சிந்து  வாரம்,
தும்பை, துழாஅய், சுடர்ப்பூந்  தோன்றி,
நந்தி, நறவம், நறும்புன் னாகம்,
பாரம், பீரம், பைங்குருக் கத்தி,
ஆரம், காழ்வை, கடியிரும் புன்னை,
நரந்தம், நாகம், நள்ளிருள்  நாறி,
மாஇருங் குருந்தும், வேங்கையும், பிறவும்,
அரக்கு விரித்தன்ன பருவேரம் புழகுடன்,"

(பூக்களைப் பறித்து வந்து குவித்து விளையாடுவது சங்ககால விளை
யாட்டுகளில் ஓன்று. குவித்த பூக்களைத் தலையில் சூடி ஒப்பனை
செய்து கொள்ளுதல், மாலையாகக் கட்டி அணிந்து கொள்ளுதல்,
தழையோடு கூடிய பூக்களைக் கொண்டு தழையாடை செய்து உடுத்திக்
கொள்ளுதல் முதலானவையும் பூவிளையாட்டில் அடங்கும்) .மழை
பெய்து கழுவிய பாறையின்மேல்  நாங்கள் பூக்களைக் குவித்துப் பூ
விளையாட்டை விளையாடினோம். அங்கே அசோகமரம் எரியும் தீயைப்
போலப் பூத்திருந்தது. அப்பூக்கள் உதிர்ந்து சிவப்புக் கம்பளம் விரிந்தது
போல இருந்த அதன் மரத்தடியில் நிழலுக்காகத் தங்கியிருந்தோம்.

அப்பொழுது எண்ணெய் தடவிப் பளபளப்பாக இருந்த சுருள்முடி
கொண்ட ஒருவன் அங்கு வந்தான். மழையில் நனைந்திருந்த
தன் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.தகரக் கட்டை
யிலிருந்து வடித்த வாசனைத் திரவியத்தைப்  பூசியவனாகத்,
தன் தலையில் பலவண்ணப் பூக்களைச் சூடியவனாக வந்தான்.
தன் மார்பில் வைரமாலையுடன் பூக்களால் ஆன மாலையையும்
அணிந்திருந்தான். காதோரம் அசோகப் பூவைச் செருகிக் கொண்
டிருந்தான். மார்பில் சந்தனத்தைப் பூசியிருந்தான்.இடுப்பில் கச்சை
யணிந்திருந்தான். நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு வந்தான்.தடக்
கைகளில் வில்லை ஏந்தியவாறு வேட்டை நாய்கள் புடைசூழ எம்மை
நோக்கி வந்தான். அவனையும் அவனுடன் வரும் நாய்களையும்
கண்டு அஞ்சி எம் கால்கள் தள்ளாட வேறொரு இடத்தை நோக்கி
நகர்ந்தோம். அவன் மேன்மேலும் எம்மைப் பின் தொடர்ந்துவந்து
"என் வேட்டை விலங்கு தப்பிவிட்டது. இந்தப்பக்கம் வந்ததா? " என
வினவ, நாங்கள் அச்சத்தால் விடை கூறாமல் இருக்க, அவன்" எம்
வேட்டை விலங்கைக் கண்டுபிடித்துத் தராவிட்டாலும், எம்முடன் ஒரு
வார்த்தையாவது உரையாடக் கூடாதா?" என்றான்.

அப்பொழுது அருகேயுள்ள குடிசையில் வாழும் ஒரு பெண் தன்
கணவனுக்குத் தேன்கலந்த கள்ளைப் பருகக் கொடுக்க, அவன்
அதனைக் குடித்தபின் தினைப்புனக் காவலைச் சிறிது நேரம்
நிறுத்திவிட்டு ஓய்வெடுக்க, அங்குவந்த யானையொன்று தினைக்
கதிரை உண்டு பெரும்பகுதியை அழித்துவிட்டது. அதனால் சின
மடைந்த அக் கணவன் வில்லை வளைத்து அம்பெய்தும் வேறு
வகைகளிலும் யானையை விரட்டினான். அதனால் சீற்றமடைந்த
யானை எமக்கெதிரே வந்ததனால், ஒன்றும் செய்ய அறியாதவராய்
நாங்கள் நடுக்கமுற்று நாணத்தையிழந்து தலைவனருகே சென்று
நடுங்கிக் கொண்டு நின்றோம். அவன் உடனே தன் வில்லை வளைத்து
அந்த யானையின் முகத்தில் அம்பெய்தான். அதனால் யானைக்கு
நெற்றியில் புண் உண்டாகிக் குருதி வடியலாயிற்று. புண்பட்ட
யானை பின்வாங்கி ஓடிவிட  அந்த இடம் முருகக் கடவுள் தீண்டிய
மகளிர் சாமியாடிய இடம் போல இருந்தது. நாங்கள் கடம்ப மரத்தின்
அடிப் பகுதியைக் கைகளால் சுற்றிக்கொண்டு இன்னும் நடுக்கம்
தீராமல் நின்றிருந்தோம். அதனை நோக்கிய தலைவன் எங்களை
நெருங்கிவந்து தலைவியின் நெற்றியை நீவி அவள் மார்பு தன்
மார்புடன் பொருந்துமாறு தழுவிக்கொண்டான். தலைவியும் அவனை
விலக்கவில்லை. தலைவன் என்னை விலகிக் கொள்ளுமாறு பார்வை
யால் கூற நான் விலகிக்கொண்டேன். அவளிடம் "பலர் அறிய உன்னை
உறுதியாகச் சில நாட்களில் மணப்பேன்" என்று சூளுரைத்தான். மேலும்
"பெரிய கலத்தில் சமைத்து, நெய்யும் கொழுப்பும் கலந்த சோற்றைப்
பலருக்கும் கொடுத்தபிறகு  எஞ்சியதை உன்னோடு சேர்ந்து உண்பேன்"
என்றும் கூறினான். அவன் வளமிக்க மலைக்குத் தலைவன். தலைவி
அவன் பேச்சை நம்பிப் பகற்பொழுதை அவனுடன் கழித்தாள். மாலை
கதிரவன் மறைந்தவுடன் அவன் தலைவியின் முன்கை பற்றி  எமது
பழைய ஊரின் நீர்பருகும் துறையருகே எங்களைப் பாதுகாப்பாக விட்டுச்
சென்றான்.

அன்றிலிருந்து ஒவ்வொரு நாள் இரவிலும் தலைவியைத் தேடி வருதலை
வழக்கமாக்கிக் கொண்டான். ஊர்க் காவல் கடுமையாக நடைபெற்
றாலும் சீற்றத்தோடு நாய்கள் குரைத்தாலும்  நீ துயில் நீங்கி எழுந்
தாலும் நிலவொளி மிக்க வெளிச்சத்தையுண்டாக்கினாலும் தலைவி
யின் தீண்டல் கிடைக்காமற் போனாலும் மனந்தளராமல்  ஒவ்வோர்
இரவிலும் வருகின்றான். எத்தகைய இடர்களை எதிர்நோக்க நேர்ந்
தாலும்  (வழியிலே சந்திக்க நேரும் புலிகள், யாளிகள், கரடிகள், ஆமான்
ஏறுகள், யானைகள் முதலான விலங்குகள் மற்றும் நள்ளிரவில் சுற்றித்
திரியும் பாம்புகள், பேய்கள், நீர்நிலைகளில் வாழும் முதலைகள், இடங்கர்
கள், கராம் இன முதலைகள் போன்றவை) ஆறலை கள்வரால் இன்னல்
நிகழ்ந்தாலும்  வழுக்குப் பாதை மற்றும் முட்டுப் பாதை போன்றவை
தடைசெய்தாலும் வராமல் இரான்" என்றாள் தோழி.  தலைவன் இத்தனை  இடர்களை எதிர்கொண்டு வருவது மிகவும் ஆபத்து என்று எண்ணியும் தலைவனின் பாதுகாப்பு குறித்து அஞ்சியும் தலைவி அழுகின்றாள். ஊரார் பேசும் அலருக்கும் அஞ்சுகின் றாள். திருமணம் செய்து கொண்டால்
இத்தகைய சிக்கல்கள் நீங்கும் என்று
 நம்பினாள். களவு ஒழுக்கத்தைத்
தோழி வெளிப்படுத்தியதால் அடுத்தடுத்து நல்லவை நிகழ்ந்திருக்கும்.
இவ்வாறான நெறியும் நியதியும் மிக்க தமிழர் அகவாழ்க்கையை ஆரிய
மன்னன் பிரகத்தனுக்குக் கபிலர் விளக்கியுள்ளார். தமிழரின் களவு மணம்
ஆரியரின் காந்தர்வ விவாகத்துக்குச் சமமானது என்று தமிழறிஞர் கருது
கின்றனர். ஆரியரின் எட்டு திருமணவகைகளில் ஒன்றான காந்தர்வ விவா
கத்தில் சிற்றின்பமே முக்கிய நோக்கமாக இருப்பதாகவும், தமிழர் திருமண
நிகழ்வு ஆண் பெண் ஒருவர்க்கொருவர் அன்பு செலுத்துதல், மக்களைப்
பெற்று நல்ல குடி மக்களாக வளர்த்தல் முதலான நோக்கங்களைக் கொண்டு
திகழ்வதாகவும் புலவர்கள் கருதுகின்றனர்.. இவ்விவரங்களை ஆரிய அரசன்
பிரகத்தனுக்குக் கபிலர் விரிவாகவும் விளக்கமாகவும் எடுத்துக் கூறியதாக
அறிஞர் பெருமக்கள் கருதுகின்றனர். எனவே, கபிலரின் குறிஞ்சிப்பாட்டை
இரசித்துப் படித்து இன்புறுவோமாக!











Tuesday 12 February 2019

ஐங்குறுநூறு காட்டும் அழகுறு காட்சிகள்.

ஐங்குறுநூறு காட்டும் அழகுறு காட்சிகள்.

சங்க கால நூல்களான எட்டுத்தொகை நூல்களுள்
ஐங்குறுநூறும் ஒன்று. சங்க நூல்களிற் பெரும்பா
லானவை அகப்பொருள் குறித்துப் பாடப்பட்டவை.
ஐங்குறுநூறும் அத்தகைய அகப்பொருள் நூலே.
3அடிச் சிற்றெல்லையும் 6அடிப்  பேரெல்லையும்
கொண்ட அகவற்பாவால் பாடப்பட்ட 500 பாடல்களைக்
கொண்ட நூல். திணை  ஒன்றுக்கு 100 பாடல்கள் வீதம்
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய
ஐந்திணைகளுக்கும் சேர்த்து 500 பாடல்கள் கொண்டு
உருவாக்கப்பட்ட நூல். ஒவ்வொரு திணைக்குரிய 100
பாடல்களை ஒவ்வொரு புலவர் இயற்றினார். அவர்கள்
விவரம் வருமாறு:
மருதம்--ஓரம் போகியார்; நெய்தல்--அம்மூவனார்;
குறிஞ்சி--கபிலர்; பாலை--ஓதல் ஆந்தையார்;
முல்லை--பேயனார்.
இனி, ஒவ்வொரு திணையிலிருந்தும் ஓவ்வொரு பாடலைத்
தேர்வு செய்து, அப்பாடல் காட்டும் அழகுறு காட்சியைக்
 காண்போம்:

திணை: மருதம்; கிழத்தி கூற்றுப் பத்து, பாடல் எண:70
"பழனப் பல்மீன்  அருந்த  நாரை
கழனி  மருதின்  சென்னிச்  சேக்கும்
மாநீர்ப்  பொய்கை  யாணர்  ஊர!
தூயர்; நறியர்;நின்  பெண்டிர்;
பேஎய் அனையம்; யாம்,சேய் பயந்தனமே!"
பொருளுரை:
வயலில் துள்ளிக் குதிக்கும் மீன்களை உண்
பதற்காக நாரை வயலோரம் நின்றிருக்கும்
மருதமர உச்சியில் அமர்ந்து உற்றுப்பார்த்துக்
கொண்டிருக்கும் வளமான வயலும் அதற்கு நீர்
தரும் பொய்கையும் கொண்ட வளப்பமான ஊரை
உடையவனாகிய தலைவனே! நீ வைத்துக்கொண்
டிருக்கும் காதற் பரத்தையர் தூய்மையானவர்கள்;
நல்லவர்களும் ஆவர். உன் மனைவியாகிய நான்
பேய் போன்றவள். உன் மகனைப் பெற்றெடுத்த
பேய் ஆவேன். இவ்வாறு மனைவி தன் தலைவனிடம்
சொல்லி ஊடுகின்றாள். மருதத் திணைக்குரிய உரிப்
பொருள் ஊடுதலும் ஊடுதல் நிமித்தமும் ஆகும். எனவே
இப்பாடலில் ஊடல் முன்னிறுத்தப் படுகிறது. அந்தக்
காலக் கட்டத்தில் உலகெங்கிலும் பரத்தமைத் தொழில்
உச்சத்தில் இருந்தது.  குடும்பத்தில் உள்ள ஆடவர் பரத்தை
யரிடம் செல்வது இயல்பாக  நடைபெற்றுள்ளது. சான்றோ
ரும் ஆன்றோரும் பெரிய அளவில் இதனை எதிர்க்கவில்லை
என்றே தோன்றுகின்றது.  முதன்முதலில் பரத்தமைத்
தொழிலை முனைப்புடன் கடிந்தவர் திருவள்ளுவர் ஆவார்.
அவரைத் தொடர்ந்து நாலடியார் மற்றும் ஏனைய நல்லற
நூல்களைப் பாடியோரும் கடிந்தனர். இதில் குறிப்பிட்டுச்
சொல்லப்பட வேண்டியவர் திருவள்ளுவர் மட்டுமே. ஏனென்
றால்ஏனைய புலவர் பெருமக்கள் ஊடலுக்கு முதன்மைக்  கா
ரணமாகப் பரத்தையிடம் செல்வதை ஏற்றுக்கொண்டு நூல்
படைத்த பொழுது திருவள்ளுவர் பரத்தையிடம் செல்வதை
ஏற்றுக் கொள்ளாமல் வேறு பிற காரணங்களைக் காட்டி
ஊடலை விவரித்துள்ளார்.  ஆக, இந்த மருதத் திணைப் பாடலில்  தலைவி தலைவனிடம் ஊடுகின்ற காட்சியைப்
புலவர் விவரித்துள்ளார்.. "உன்னோடு நெறிபட வாழ்ந்து உனக்கு மகனைப்  பெற்றுக் கொடுத்த நான் பேய்; உன்
னிடம்  மட்டுமல்லாமல் பிற பலரிடமும் உறவுகொள்ளும்
பரத்தையர் தூய்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் "என
இகழ்ச்சிக் குறிப்புத் தோன்ற பரத்தையரை உயர்த்திப் பேசி
னாள். போரும் சண்டையும் அடிக்கடி நடைபெற்று  அதனால்
 ஆண்கள் பெருமளவில் மரணமடைந்தனர்; ஆண்களை விட
வும் பெண்களின் எண்ணிக்கை  அதிகரித்ததும் பரத்தையர்
உருவாக வழிவகுத்தது. உலகம் முழுவதிலும் இந்தத் துயரம்
நிலவியது. எனவே, அந்தக் காலத்தில் உருவான  நூல்கள்
பரத்தமைத் தொழிலைப் பெரிய அளவில் கடியவில்லை.

பாடல் எண்:181-நெய்தற் பத்து; திணை: நெய்தல் திணை
"நெய்தல்  உண்கண்  நேர்இறைப்  பணைத்தோள்
பொய்தல்  ஆடிய  பொய்யா  மகளிர்
குப்பை வெண்மணல் குரவை நிறூஉம்
துறைகெழு கொண்கன்  நல்கின்
உறைவினிது அம்ம,இவ்  அழுங்கல் ஊரே!"
தலைவனும் தலைவியும் பிறர் அறியாமல் சந்தித்துப்
பழகிக் கொண்டிருக்கின்றனர்.  இக்களவு ஒழுக்கம்
நீடித்தால் ஊரார் பழிதூற்றுவரே என்று தலைவி அஞ்சிப்
புலம்பிக் கொணாடிருக்கும் பொழுது தோழியானவள்
தலைவன் வரைவுக்கு(திருமணத்துக்கு)ச் சம்மதித்து
விட்டான் என்று தெரிவித்தாள்.  இதனைக் கேட்ட தலைவி
"நெய்தல் மலரை ஒத்த கண்களையும், நேராக வளைந்து
பருத்திருக்கும் தோள்களையும் கொண்ட மகளிர் 'பொய்தல்'
என்னும் ஒருவகை விளையாட்டை விளையாடிய பிறகு,
குவிந்து கிடக்கும் வெண்மணலில் குரவையாட்டம் ஆடும்
அத்தகைய செழிப்பான மற்றும் நல்ல துறையையுடையவன்
என் தலைவன். அவன் என்னை மணம் செய்து கொண்டு
வாழ்வான் ஆயின், எனக்கும் பழிதூற்றும் இந்த ஊருக்கும்
நல்லது. அன்றைய வழக்கப்படி, களவு ஒழுக்கம் மிகக்
குறுகிய காலமே பெரியோரால் அனுமதிக்கப்பட்டது.
கூடிய விரைவில் வரைவு நிகழ்தல் வேண்டும். வரைவுக்குப்
பின்னர் கற்பு ஒழுக்கம் தொடங்கிவிடும். காதலர் அஞ்சி
ஒளிந்து வாழ வேண்டியதில்லை. ஊர்மக்களும் பழிதூற்ற
மாட்டார்கள்.

பாடல் எண்: 236; தெய்யோப் பத்து; திணை: குறிஞ்சித்திணை
"அன்னையும் அறிந்தனள்; அலரும் ஆயின்று;
நன்மனை நெடுநகர் புலம்புகொள உறுதரும்
இன்னா  வாடையும் மலையும்
நும் ஊர்ச்  செல்கம்; எழுகமோ? தெய்யோ!"
தலைவி சொல்வதாகத் தோழி தலைவனிடம் சொல்கிறாள்:
நீவிர் பின்பற்றும் களவு ஒழுக்கம் தாய்க்கும் தெரிந்து
விட்டது. ஊராரும் பழிதூற்றத் தொடங்கிவிட்டனர். வீட்டில்
உள்ள எல்லோரும் புலம்பித் துன்புறுகின்றனர். துயரம் தரும்
வாடைக் காற்றும் அடிக்கிறது. உம்  ஊருக்குச் செல்லலாமா?
புறப்படலாமா? உடன் போக்கு மேற்கொள்ளத் தூண்டியது
போலத் தெரிந்தாலும், சமுதாயத்தில் நிலவும் கட்டுப்
பாட்டைக் காரணமாகக் காட்டி நெருக்கடியை உருவாக்கி
வரைவு(திருமணம்)க்குச் சம்மதிக்க வைக்கும் நோக்கத்
தோடு தோழி தலைவி சார்பாகப் பேசுகின்றாள். 'ஐயோ'
என்பது துயரத்தைக் குறிக்கும் ஒலிக் குறிப்பு; அதுபோல,
'தெய்யோ' மகிழ்ச்சியைக் குறிக்கும் ஒலிக் குறிப்பு.

பாடல் எண்:380; மகட்போக்கிய வழித் தாய் இரங்கு பத்து; திணை:பாலைத் திணை.
"அத்த நீளிடை. அவனொடு  போகிய
முத்தேர் வெண்பல் முகிழ்நகை  மடவரல்
தாயர் என்னும் பெயரே வல்லா(று)
எடுத்தேன்  மன்ற  யானே;
கொடுத்தோர் மன்ற அவள்ஆயத் தோரே!"
தலைவி தலைவனோடு உடன்போக்குச் சென்று விட்டாள். இதையறிந்த நற்றாய் புலம்புகின்றாள்:
"என்மகள் காட்டு வழியில் அவனோடு சென்று விட்டாள்.
வெண்முத்தை  நிகர்த்து  அரும்பும் புன்முறுவலைக் காட்டிக்
கொண்டு  தன் தலைவனோடு போய்விட்டாள். நான் அவள்
தாய்  என்னும் பெயரைத் தாங்கியபடி வலம் வருகின்றேன்.
இது ஒன்றுதான் அவளைப் பெற்றமைக்கு எனக்குக் கிடைத்
த வலிமை.  அவளை மணந்து கொண்டவரின் ஆயத்தோர்
(உற்றார், உறவினர்கள்) கொடுத்துவைத்தவர்கள். பாக்கியம்
படைத்தவர்கள்.

பாடல் எண்:428; விரவுப் பத்து; திணை:முல்லைத் திணை
"தேர்செல(வு)  அழுங்க, திருவில்  கோலி,
ஆர்கலி, எழிலி சோர்தொடங்  கின்றே;
வேந்துவிடு. விழுத்தொழில்  ஒழிய
யான்தொடங் கினனால்  நிற்புரந்  தரவே!"
தலைவன் தலைவியிடம்  உரைத்தது:
"தேர்ப்படை  செல்வது  நின்றுவிட்டது. வானவில் தோன்று
கிறது.  மேகம்  பொழியத்  தொடங்கியுள்ளது. வேந்தனின்
போர்த்தொழில்  நின்றுவிட்டது. இனிமேல் என்பணி உன்
னைக் கண்ணும் கருத்தும் ஆகப் பாதுகாப்பது மட்டுமே.
இவ்வாறு தலைவியின் உள்ளங் குளிர  உறுதிபடச் சூள்
உரைத்தான் தலைவன்.

ஐங்குறுநூற்றில் உள்ள அத்தனை பாடல்களும்  சுவைபட
இயற்றப்பட்டவை.  படித்து மகிழ்வோமாக.














Tuesday 5 February 2019

பேரறிஞர் அண்ணாவை நினைவு கூர்வோம்.

அறிவுலக மேதை அறிஞர் அண்ணாவின் நினைவு நாள்
பிப்ரவரி 3ஆம்நாள். அன்னாரின் அறிவையும், ஆற்றலை
யும், சாதனைகளையும் நினைவு கூரும் விதமாகப் பாடலை
இயற்றியுள்ளேன்.

சீரமரும் காஞ்சிநகர்  நடராசன்  பங்காரு
செய்த  வத்தால்
பாரகமெல்  லாமகிழப்  பைந்தமிழ்த்தாய்  நடம்புரியப்
பாங்காய்த்  தோன்றி
ஏரமருந்  தமிழகத்தின்  முதலமைச்சாய் அரசோச்சி,
       எண்ணில்  தொண்டர்
பேரறிஞர் அண்ணாவென்(று) அழைத்திடவே  வாழ்ந்த,அவர்
       பெருமை  வாழ்க!

நடிகரெலாம்  வியப்படைய  நாடகத்தில் திறம்படவே
       நடித்த  நல்லோர்;
குடிகெடுக்கும்  மதுவரக்கன்  கொட்டத்தை  ஒடுக்கிடும்நல்
      குறிக்கோள்  கொண்டோர்;
படியரிசித்  திட்டத்தைப்  பரப்புவதில்  பேரார்வம்
      படைத்த  செம்மல்;
விடிவேள்ளி; தமிழகத்தின்  முடிசூடா  மன்னரென
     விளம்பத்  தக்கார்.

செந்தமிழின்  இனிமையினைத்  திகழுமிலக்  கியநயத்தைச்,
     சிறந்த  பண்பை,
முந்துமதன்  பழமையினை, வரலாற்றை  வெளிநாட்டார்
    முழுதும்  கண்டு
விந்தையுறும்  படியுலகத்  தமிழ்மகா  நாட்டினை,நல்
    விறுவி  றுப்பாய்ச்
சந்தமிகு  சென்னைநகர் நடத்திக்காட்  டியதிறமை
    சார்ந்த  வீரர்.

சீர்திருத்தத்  திருமணமும்  செல்லுமென  அறிவித்துத்
   தேவை  யான
பார்புகழும்  சட்டத்தைப்   பேரவையில் நிறைவேற்றப்
    பணிகள்  செய்தார்;
சீர்மைமிகு  அமெரிக்க  யேலென்னும்  பல்கலையில்
    சிறப்பாய்ப்  பேசிப்
பேர்,புகழைப் பெற்றனரே, ஆங்கிலத்தில் தடையின்றிப்
   பேசும்  அண்ணா.

மிடுக்கான  தமிழ்மொழியில் சொல்வளமும் பொருள்வளமும்
   மிடைந்து  துள்ள
அடுக்குமொழி  படப்பேசி அனைவரையும் மயக்குகின்ற
   ஆற்றல்  சான்றோர்;
தொடக்கமுதல்  இறுதிவரை  சுவைசிறிதும் குன்றாது
   தொடர்ந்து  செல்ல
எடுப்பான  தமிழ்நடையில்  எண்ணிறந்த உரைநூல்கள்
   எழுதும்  ஏந்தல்.

வாழவழி  யில்லாத  ஏழைகளின்  துயர்துடைத்த
   வள்ளல், தீயால்
பாழடைந்த  குடிசைகளை  நன்முறையில்  புதுப்பித்த
    பண்பு  மிக்கோர்;
ஆழமாம்  புலமையினை  ஆங்கிலத்தில், செந்தமிழில்
    அடைந்த  செல்வர்;
ஊழலையும்  கண்மூடிப்  பழக்கவழக்  கங்களையும்
    ஒழித்த  தோன்றல்.

தெள்ளுதமிழ்க் குறட்பாவில் அறங்களெலாம் விரித்துரைத்த
    சீர்சால் தெய்வ
வள்ளுவனார்  அடிச்சுவட்டைப் பின்பற்றி  நடக்கின்ற
   வாய்மை  யாளர்;
கள்ளமிலா வுள்ளத்தார்; கனிந்தமொழி நவின்றிடுவார்;
  கருணை  யுள்ளார்;
எள்ளளவும்  பிறருக்குத் தீங்குசெய  எண்ணாத
  இயல்பு  கொண்டோர்.

தூயதமிழ் நாட்டினுக்குத் தொடர்பின்றி ஆங்கிலத்தில்
  சொல்லி வந்த
தீயபெயர்  தனைநீக்கிச் சீர்த்த'தமிழ் நா(டு)'எனும்பேர்
  திகழச்  செய்தோர்;
தாயகத்தின் வளர்ச்சிதனில்  பேரார்வம்  கொண்டுழைத்த
  தலைவர்; சற்றே
வாயசைத்தால்  நாடசையும்  எனப்புவியோர் புகலும்செல்
  வாக்குப்  பெற்றோர்.

முற்றுமுணர்  பேரறிஞர், மாநிலங்கள் அவையினிலே
 மொழிந்த  பேச்சால்
கற்றுணர்ந்த  கல்விவல்லார் நேருவெனும்  பிரதமரின்
  கவனந்  தன்னைப்
பற்றிமிகத்  தம்பாலே  கவர்ந்திழுத்த  பேச்சாளர்;
  பாழாய்ப்  போன
புற்(று)எனுந்தீப்  பிணியாலே மடிந்தனரே; மக்களெலாம்
  புலம்பி  நொந்தார்.

இத்தகைய  புகழுரைகட்(கு) இருப்பிடமாய்க்  குணக்குன்றாய்
   இருந்த  எங்கள்
உத்தமராம்  அறிஞரண்ணா உயிர்துறந்த அதிர்ச்சியினால்
   உளமு  டைந்து
மெத்தவுங்கண்  ணீர்வடித்து மக்களெலாம் அடைந்ததுயர்
   விளம்பற்  பாற்றோ?
எத்தனைநாள்  அழுதாலும் மாண்டவர்கள் மீண்டுவரல்
   என்றும்  இல்லை.

எத்தனையோ சாதனைகள் நிகழ்த்திவிட்ட  பேரறிஞர்
   இறந்த  போதில்
இத்தரையோர் வியந்திடவே  இறுதிஊர்  வலந்தன்னில்
   இணைந்து  கொண்டோர்
மொத்தமொன்ற ரைக்கோடிப் பேராவார், அன்னவர்கள்
   மூண்ட  அன்பால்
பித்தரைப்போல் பிதற்றினரே உடல்குலுங்கி அழுதனரே,
    பெரிதும்  நைந்தே.