Sunday 25 June 2023

கண்ணீரின் வலிமை.

 கண்ணீரின் வலிமை.


மனிதர்கள் இயல்பே பிறர் கண்ணீர் உகுக்கும் பொழுது மனம்

இளகுவதும் இரக்கம் காட்டுவதும் ஆகும்.  பெண்கள் கண்ணீர்

சிந்தினால் எப்படிப்பட்ட கல் நெஞ்சமும் கரைந்துவிடும். அதிலும்,

அழகும் அன்பும் ஒருங்கியைந்த காதல் தலைவி கண்ணீர் வடித்தால்

தலைவனால் தாங்க இயலுமோ? இப்படியொரு காட்சிதான் குறுந்தொகையில்

தீட்டப்பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்.


தலைவனுக்கும் தலைவிக்கும் அண்மையில்தான் வரைவு(திருமணம்)

நடந்து முடிந்தது. குடும்பத்தைச் செவ்வனே நடத்தத் தேவையான பொருள்

தேடிவர வேற்றூருக்குச் செல்ல முடிவுசெய்து தன் தலைவியிடம்

உரையாடத் தொடங்குகின்றான்."பூங்குழையை அணிந்தவளே! நீலமணி

ஒழுகினாற் போன்ற கரிய நிற அறுகம்புல்லின் பிடிப்பு நீங்கிய மெல்லிய

தண்டைப் பிணையோடும் இணைந்து வயிறு நிரம்ப உண்ட ஆண்மான்

துள்ளி விளையாடும் காட்டைக் கடந்து நான் வேற்றூர்சென்று குடும்பத்துக்குத்

தேவையான பொருள் தேடிக்கொண்டு மீண்டுவர எண்ணியுள்ளேன். அதுவரையில்

உன்னால் பொறுத்திருத்தல் இயலுமோ?" என்று சொல்லி முடிக்குமுன்

அவள் கண்கள் கலங்கி முத்து முத்தாகக் கண்ணீர் சிந்தத் தொடங்கின.

அவள் கண்ணீரைக் கண்டதும் அவன் உடல் முழுவதும் பதற அவளைத்

தேற்றத் தொடங்கினான். 'நீர் விலங்கு அழுதல்' எனக் குறுந்தொகையில்

குறிப்பிடப் பட்டுள்ளது. நீர் கண்ணில்உள்ள பாவையை மறைக்கின்ற

அழுதல் எனக் கொள்ளலாம். காதல் மனையாள் கதறி அழுத பின்னர்

அவனால் அவளைப் பிரிந்து பயணம் மேற்கொள்ளுதல் இயலுமோ?

இதே போல ஒரு காட்சி அகநானூறு 5ஆம் பாடலிலும் காட்டப்பட்டுள்ளது.

"பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொடு"(21ஆம் வரி) என்று குறிப்பிடப்

பட்டுள்ளது. கண்ணிலுள்ள பாவையை மறைக்கும் நடுக்கத்தைத் தரும்

கண்ணீர் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர். அன்பிற்கினிய

தலைவி கண்ணீர் சொரிந்தால் அவன் நடுங்கமாட்டானா?  சிலப்பதிகாரத்தில்

இளங்கோவடிகள் "காவி உகுநீரும் கையில் தனிச்சிலம்பும் கண்டு"

"கூடலான் கூடாயினான்" என்று கண்ணகியைக் கண்ணீருடன் பார்த்த அளவிலேயே

பாண்டியன் நெடுஞ்செழியன் பாதிஉயிர் துறந்ததாக விவரித்தார். எனவே,

கண்ணீரை எளிதாக மதிப்பிட்டு விட முடியாது.


ஆகவே, பெண்களின் கண்ணீருக்கு மிக்க வலிமையுண்டு எனப் புலவர்கள்

இயம்புவது முற்றிலும் மெய்யே. நம் தலைவனும் பணிந்து பயணத்திலிருந்து

பின்வாங்கியதில் வியப்பேதும் இல்லை. தலைவியின் கண்ணீரோட்டம்

தலைவனின் கவின்தேரோட்டத்தைத் தடைசெய்தது. பாடல் பின்வருமாறு:

"மணிவார்ந் தன்ன மாக்கொடி யறுகை

பிணிகான் மென்கொம்பு பிணையொடு  மார்ந்த

மானே(று) உகளும் கானம் பிற்பட

வினைநலம் படீஇ வருதும் அவ்வரைத்

தாங்க வொல்லுமோ பூங்குழை யோயெனச்

சொல்லா முன்னம் நில்லா வாகி

நீர்விலங்(கு) அழுதல் ஆனா

தேர்விலங் கினவால் தெரிவை கண்ணே.

குறுந்தொகை பாடல் எண்:256;

புலவர் பெயர்: தெரியவில்லை.

அரும்பொருள்:

மணி=நீலமணி; பிணி=அறுகம் புல்லின் இலை இளையதாக உள்ள நிலை.

மானேறு= ஆண்மான்; உகளும்= துள்ளிக்குதிக்கும்;

வினைநலம் படுதல்=பொருள் முயற்சி முற்றுப் பெறுதல்

நீர்விலங்கு அழுதல்=நீர் கண்ணிலுள்ள பாவையை மறக்கச் செய்யும்

அழுகை; தேர்விலங்கியது=தேரோட்டத்தைத் தடைசெய்தது.

தெரிவை=பெண்(இங்கு தலைவி)


பார்வை:

குறுந்தொகை மூலமும் உரையும்: தமிழ்த் தாத்தா உ. வே.சாமிநாத ஐயர்.

Thursday 8 June 2023

சமணர் கழுவேற்றம்.

 சமணர் கழுவேற்றம்.


ஏழாம் நூற்றாண்டுக் காலம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

பாண்டிய நாட்டில், குறிப்பாக மதுரையில், பொதுமக்களை

ஒருவிதப் பதற்றம் ஆட்கொண்டிருந்தது. அன்று வரை சமணம்

கோலோச்சிக் கொண்டிருந்தது. ஆனால், இந்த நிலை தொடருமா?

என்ற ஐயம் சமணர்களிடம் கிளம்பியிருந்தது. ஏனெனில்

தொண்டை மண்டலத்தை ஆண்டுவந்த மகேந்திரவர்ம பல்லவன்

சமணத்தை விட்டு விலகிச் சைவ சமயத்தைத் தழுவிய செய்தியால்

மனம் தளர்ந்து சோர்ந்து போயினர். ஏனெனில் அரசர்கள் ஆதரவு

இருந்தால்தான் தங்கள் சமயத்தைத் தடையின்றிப் பரப்ப இயலும்.

தொண்டை மண்டலம் போலப் பாண்டிய மண்டலமும் மதம் மாறிவிட்டால்

தங்கள் நிலை என்னவாகும்? என்ற மனக்கிலேசம் அடைந்தனர்.

பாண்டிய நாட்டில் வேந்தனும் குடிமக்களும் சமணத்தைப் பின்பற்றி

வாழ்ந்துவந்தனர். பட்டத்தரசி மானி(பின்னாளில் மங்கையர்க்கரசி

என்று போற்றப்படுவார்) யும் அமைச்சர் குலச்சிறையாரும் சைவ

சமயத்தைப் பின்பற்றினர். ஆனால், வெளிப்படையாகத் திருநீறு

அணியாமலும் சிவத்திருப்பெயரை உச்சரிக்காமலும் மறைவாக

வழிபாடு செய்துகொண்டனர். ஏனென்றால் திருநீற்றைப் பார்த்தால்

வேந்தனுக்குக் "கண்டு முட்டு"(கண்டால் தீட்டு) ஏற்படும். சிவப்பெயரைக்

கேட்டால் "கேட்டு முட்டு"(கேட்ட தீட்டு) ஏற்படும்.


பட்டத்தரசி மானி வழக்கம்போல் கோவிலில் நீர் தெளிப்பது, கோலம்

போடுவது போன்ற திருப்பணி புரிந்து கொண்டிருந்த வேளையில்

சிவிகை ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து பதினான்கு வயதுடைய

இளவட்டச் சிறுவன் இறங்கினான். அவர் திருஞானசம்பந்தர்.

பட்டத்தரசி மனம் படபடத்தது. இந்தச் சிறுவனா சமணரை எதிர்த்து

வாதம் நிகழ்த்துவான்? இவனால் சமணருக்கு ஈடுகொடுக்க

முடியுமா? என்றெண்ணி நொந்துபோனாள். அவள் எண்ண

ஓட்டத்தைப் புரிந்துகொண்ட சம்பந்தர் பின்வருமாறு பாடினார்:

"மானி னேர்விழி மாதராய்! வழுதிக்கு மாபெரும் தேவிகேள்;

பானல் வாயொரு பால னீங்கிவன் என்றுநீ பரிவெய்திடேல்;

ஆனை மாமலை ஆதி யாய இடங்களிற் பல அல்லல் சேர்

ஈனர்கட்(கு) எளியே னலேன்திரு ஆலவாயரன் முன்னிற்கவே".

பொருள்: மான்போன்ற கண்கொண்ட பாண்டிமா தேவி! கேட்டுக்

கொள்ளுங்கள். என்னைச் சிறுவன் என்று பரிவோடு நோக்கல்

வேண்டா; என்முன் ஆலவாய் ஈசன் நிற்கின்றார். நான் அந்தச்

சமணர்களுக்கு எளியவன் அல்லன்; அவர்களைவிட வலியவன்.


அன்று இரவு திருஞான சம்பந்தர் சைவமடத்தில் தங்கினார்.

அரணமனையிலிருந்த பாண்டிமாதேவியைப் பெருத்த கவலை

வாட்டியது. சமணர்கள் திருஞானசம்பந்தருக்குக் கேடேதும்

விளைவிப்பார்களோ என்று கவலை கொண்டிருந்தார். அவர்

நினைத்தது போலவே நடந்தது என்று சம்பந்தர் பாடலின் மூலம்

தெரிகிறது. சம்பந்தர் பாடல் பின்வருமாறு:

"செய்யனே! திருஆலவாய் மேவிய

ஐயனே! அஞ்சல் என்றருள் செய்எனைப்

பொய்யர் ஆம் அமணர் கொளுவும் சுடர்

பையவே சென்று பாண்டியற்(கு) ஆகவே."

அரண்மனையிலிருந்த பாண்டிய வேந்தருக்குத் திடீரென்று

வெப்பு நோய் ஏற்பட்டுத் துடிதுடித்தார்.. அருகிலிருந்த மங்கையர்க்

கரசியார் சம்பந்தரை அழைத்துவர அமைச்சரை அனுப்பினார்.

சம்பந்தர் அரண்மனைக்கு விரைந்தார். சம்பந்தரைக் கண்டவுடன்

சமணர்கள் அவரை வாதுக்கு அழைத்தனர். மங்கையர்க்கரசியார்

"வேந்தே! வாதம் செய்வதைப் பிறகு பார்த்துக்கொள்ளலாம். முதலில்

வெப்பு நோயைக் குணப்படுத்தக் கட்டளையிடுக"  என்றார். வேந்தரும்

சமணரிடம் "வெப்பு நோயை விரைந்து குணப்படுத்துக" என்று

ஆணையிட்டதாகவும் அவர்களால் இயலாமல் போகவே, சம்பந்தரிடம்

கேட்டுக் கொண்டதாகவும் அவர் "மந்திரமாவது நீறு; வானவர் மேலது

நீறு" என்னும் திருநீற்றுப் பதிகம் பாடித் திருநீற்றைப் பூசிவிட்டதாகவும்

வெப்பு நோய் உடனடியாக நீங்கியதாகவும் சைவர்கள் கூறுகின்றனர்.


இத்தோடு சமணர்கள் விட்டுவிடவில்லை. சம்பந்தரை அனல்வாதம்

மற்றும் புனல் வாதம் புரிய அறைகூவல் விடுத்ததாகச் சைவர்கள்

கூறுகின்றனர். அதன்படி, சமணர்கள் தங்கள் மத மந்திர ஓலைகளை

நெருப்பிலிட அவை கருதிப் போனதாகவும் சம்பந்தர் பச்சைப் பதிகம்

என்னும் திருநள்ளாற்றுப் பதிகத்தை நெருப்பிலிட அது வெந்து கருகாமல்

இருந்ததாகவும் கூறுகின்றனர். பின்னர், சமணர்கள் தமது மந்திர ஓலைகளை

வைகை ஆற்றிலிட அவை அடித்துச்செல்லப்பட்டதாகவும், சம்பந்தர்

" வாழ்க அந்தணர்" என்ற பதிகத்தை வைகையில் இட அது நீரோட்டத்தை

எதிர்த்துப் பயணம் செய்து திருவேடகம் என்ற ஊரில் தங்கியதாகவும்

சைவர்கள் தெரிவிக்கின்றனர். அத்தோடு மட்டுமல்லாமல், "வாழ்க அந்தணர்"

பதிகத்தில் "வீழ்க தண்புனல், வேந்தனும் ஓங்குக" என்று பாடியதால்

பாண்டியனுக்கு இருந்த கூன் முதுகு சரியாகி " நின்ற சீர் நெடுமாறன்" ஆக

ஆனதாகவும்  சைவர்கள் தெரிவிக்கின்றனர். பிற்பாடு, அனல்வாதம்,

புனல் வாதம் போட்டிகளில் தோற்றதால் சமணர்களைப் பாண்டியன்

கழுவேற்றியதாகப் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் போன்ற

இலக்கியங்கள் பேசுகின்றன. சாமநத்தம் என்ற ஊரில் கழுவேற்றக் காட்சிகள்

செதுக்கப்பட்டுள்ளன. ஆனால் இம்மாதிரி நிகழ்வு எதுவும் நடைபெறவில்லை

என்று சமணர்கள் கூறுகின்றனர். அவர்கள் இலக்கியங்களிலும் இதைப் பற்றிய

யாதொரு குறிப்பும் இல்லை. சம்பந்தர் பாடல்களிலும் சமணர்கழுவேற்றத்தைப்

பற்றி எந்தச் செய்தியும் இல்லை. உண்மையில் ஏழாம் நூற்றாண்டில் உருவாக்கப்

பட்ட சமகால இலக்கியம் எதிலும் சமணர் கழுவேற்றம் குறிப்பிடப்படவில்லை.

ஒவ்வொரு நிகழ்வையும் பாடும் சம்பந்தரும் கழுவேற்றம் பற்றிப் பாடவேயில்லை.

கழுவேற்றம் முடிந்து நானூறு, ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெரிய

புராணம் முதலிய இலக்கியங்கள் இதைப் பாடுகின்றன. 


வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களுமான எஸ்.வையுபரிப் பிள்ளை, கே.ஏ.நீலகண்ட

சாஸ்திரியார், இரா.இராகவையங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, க.கைலாசபதி, தெ. பொ.

மீனாட்சிசுந்தரனார், திரு.வி.க. ஆகியவர்கள் இதுபோன்ற நிகழ்வு நடைபெற்றிருக்க

வாய்ப்பேயில்லை என்று தெரிவிக்கின்றனர். சமணர்கள் தரப்பில் அவர்களின் தென்னகத்

தலைமையிடமான சிரவணபெல்குளாவிலோ, தமிழகத் தலைமையிடமான மேல்சித்தாமூர்

என்ற இடத்திலோ இதுகுறித்த ஆவணம் எதுவும் இல்லை. இத்தனைக்கும் சமணர்கள்

ஆவணங்களைப் பேணிப் பாதுகாப்பதில் வல்லுநர்கள். ஆனால் இது போன்ற நிகழ்வு

நடைபெற்ற சான்றோ, ஆவணமோ தம்மிடம் இல்லை என்கின்றனர். மேல்சித்தாமூர்ப்

பட்டாரகரும், தமிழ்ச் சமண அறிஞர் திரு டி.எஸ்.சிறீபால் அவர்களும் இம்மாதிரி

யாதொரு நிகழ்வும் தமிழகத்தில் நடைபெற்ற தில்லை என மொழிகின்றனர்.


கோ.செங்குட்டுவன் என்ற ஆராய்ச்சியாளர் எழுதிய " சமணர் கழுவேற்றம் ஒரு

வரலாற்றுத் தேடல் என்ற நூலில் கழுவேற்றத்துக்குப் பெரிய புராணம், திருவிளை

யாடற் புராணம் போன்ற இலக்கியங்களைத் தவிர வேறு இலக்கியங்களில்

யாதொரு சான்றும் இல்லை. இந்த இலக்கியங்கள் கழுவேற்றம் நடைபெற்றதாகச்

சொல்லப்படும் ஏழாம் நூற்றாண்டுக்கு மிகவும் பிற்பட்ட காலத்தைச் சேர்ந்தவை.

பெரிய புராணத்துக்கு ஆதாரமான இலக்கியங்கள் எட்டாம் நூற்றாண்டைச்

சேர்ந்த சுந்தரமூர்த்தியார் பாடிய 'திருத்தொண்டத் தொகை'. இதில் கழுவேற்றம்

பற்றி குறிப்பு எதுவும் இல்லை. இதனை அடிப்படையாகக் கொண்டு நம்பியாண்டார்

நம்பி(12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்) 'திருத்தொண்டர் திருவந்தாதி' என்ற நூலை

இயற்றினார். அதில் அவர் சைவப் பெருமையை நிலைநாட்டச் சம்பந்தர் சமணர்களைக்

கழுவேற்ற நடவடிக்கை எடுத்தார் என்று பாடியுள்ளார். இந்நூலை ஆதாரமாகக் கொண்ட

சேக்கிழார் மிக விரிவாகக் கழுவேற்றம் பற்றிப் பாடியுள்ளார். பெரிய புராணத்தில்

உள்ளது மிகைக் கூற்றுப் புராணங்கள் போன்ற மதத் தொன்மக் கதை மட்டுமே

என்று கோ.செங்குட்டுவன் கூறுகின்றார்.


மதுரைச் சாமநத்தம் என்ற ஊரில் உள்ள சுவர்ச் சித்திரங்கள்/செதுக்கல்கள் கழுவேற்றப்

பட்டவர்கள் சடை, தாடி, மீசையுடன் இருப்பதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். இது மிகத்

தவறான விடயமாகும். சமணத்துறவிகள் முடியை முற்றிலும் நீக்குவது மதச் சட்டமாகும்.

இல்லறத்தினர்  முடியை மழித்துக் கொள்வர். மீசை வைத்துக் கொள்வதில்லை. இம்மாதிரி

ஓவியங்கள்/செதுக்கல்கள் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. கழுவேற்றப் பட்டவர்கள்

சமணர்கள்தாமா? 


எண்ணாயிரம் சமணர் என்ற தொடர் எண்ணிக்கையைக் குறிக்கவில்லை. அது விழுப்புரம்

அருகில் உள்ள ஊர் என்று சிலபல அறிஞர்களும், அது ஒரு குழுப்பெயர் என்று சிலரும்,

மதுரையைச் சுற்றியுள்ள எட்டுக் குன்றங்களில் வாழ்ந்தவர்கள் என்று சிலரும் கருதுகின்

றனர். ஒரு சில சமணர்கள் தகாத செயல்களுக்காக அரசால் தண்டிக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சைவத்துக்கு மதம் மாறாததற்காக எண்ணாயிரம் பேர் கழுவேற்றப்பட்டனர் என்பது

ஆதாரம் இல்லாத புனைந்துரை என்று பல அறிஞர்கள் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.