Saturday 28 April 2018

விரைவுணவு வேண்டாம் ( NO FASTFOOD)


 ஒட்சு  பீசா  பர்கரின்னும்
       உடலைக்  கெடுக்கும்  பரோட்டாவாம்;
ஒட்டும்  பசைபோல்  நூடுல்சாம்;
ஒளிரும்  மிளிரும்  வண்ணவண்ணக்
காட்சிக்  கினிய  பணடங்கள்;
        கடையில்  கிடைக்கும்;  உடல்நலமோ
        கன்னா  பின்னா  எனக்கெடுமே;
        காலன்  தன்னை  வலிந்தழைக்கும்;
மீட்சி  செய்ய  முடியாத
        நோய்கள்  எல்லாம்  அணுகிடுமே;
        விழித்துக்  கொள்வீர்  பெருமக்காள்!
        விலக்கு  வீரே  விரைவுணவை(fast food)
ஆட்சி  நடத்தும்  பெரியோரே!
அல்லல்  நிறைந்த  இதைப்பற்றி
அலசி  ஆய்ந்து  குறும்படமாய்
தமிழ்நா  டெல்லாம்  வெளியிடுவீர்.

விரைவுணவால்  கொழுப்புமிகும்;  சர்க்கரைநோய்  தலையெடுக்கும்;
       விரைந்து  கொல்லும்
இருதயநோய்  தோன்றிடுமே;நோயெதிர்ப்பு  சக்திகுன்றும்;
        இன்னும்  சொல்வேன்;
தரமான  தசைநாடி  நரம்பெல்லாம்  தளர்ந்திடுமே;
        சருமம்  வாடும்;
சிரம்முதலாய்  பாதம்வரை  உடலைநன்கு  பேணிடுவோம்;
       சிந்திப்  பீரே!

ஏனிந்த  உணவுகளை  வேண்டாவென்  றுரைக்கின்றீர்?
        என்று  கேட்டால்
தேனொத்த  சுவைநல்கும்;  அதிலுள்ள  வேதியியல்
        சேர்மா  னங்கள்
ஊனத்தைச்  செய்துவிடும்;  சுவைமணம்நல்  நிறம்,கெட்டுப்
        போகாத்  தன்மை
ஆனவெல்லாம்  உருவாகும்;  என்றாலும்  உடல்நலத்தை
        அழிக்கும்  உண்மை.

அவரவர்கள்  மரபுவழி  உணவுகளை  உண்டுவந்தால்
அல்லல்  இல்லை;
கவர்ச்சிகரத்  தோற்றமுடை  விரைவுணவை  உடல்மறுத்துக்
         கலகம்  செய்யும்;
சுவைஇட்லி, இடியாப்பம், தோசை,களி, உப்புமா,
         அடை,பிட்  டப்பம்
இவைகளையே  உண்டிடுவோம்; சிறுதான்யம்  சமைத்திடுவோம்;
          என்றும்  நன்மை.

நீராவி  தனில்வேக  வைத்தெடுக்கும்  இடியாப்பம்
           இட்லி  பிட்டு
சீரான  கொழுக்கட்டை  முதலான  உணவுகளைத்
            தினமும்  உண்டால்
யாராலும்  செரிமானம்  செயமுடியும்  கோளாறென்
             றெதுவும்  இல்லை;
நேரான  நம்உணவே  நம்உடலுக்  கொத்துவரும்;

             நினைவிற்  கொள்வீர்.

மணமூட்ட,  நிறமூட்ட,  கெடாதிருக்க, சுவைகூட்ட
            வணிக  நோக்கில்
உணவுகளில்  கெடுதிசெயும்  சேர்மானம்  தனைக்கலந்து
            விற்கின்  றாரே;
பணமொன்றே  குறிக்கோளாய்க்  கொண்டுபெரும்  நிறுவனங்கள்
            படைக்கும்  நல்ல
குணங்களற்ற  நாகரிக  உணவுகளை  விலக்கிடுவோம்
            குறித்துக்  கொள்வீர்.

சாமை,திணை,  கேழ்வரகு,  சோளம்,கம்பு,  வரகரிசி
            சத்து  மிக்க
காமர்சிறு  தானியங்கள்  இம்மண்ணில்  உள்ளனவே;
            கருத்தில்  கொண்டு
நாமவற்றைப்  பயன்படுத்தி நலம்பெறலாம்;  சர்க்கரையால்
            நலிய  வேண்டா;
பாமரரும்  படித்தோரும்  மரபுவழி  உணவைப்பின்
            பற்று  வோமே.










ஆடவர்க்கு மீசை அழகு

நான்  பள்ளி  இறுதி  வகுப்பில்   (பதினோராம்  வகுப்பு)
படித்துக்  கொண்டிருந்த  காலக்கட்டம்(1967).  தமிழில்
கவிதை  எழுதுவதற்குரிய  யாப்பிலக்கணத்தைக்  கற்றுக்☺
கொண்டிருந்த  காலம்.  என்  நெருக்கமான  நண்பர்  திரு
வடிவேல்  என்னிடம்  "நீ  தமிழாசிரியரின்  மகன்  அல்லவா?
என்  மீது  ஒரு  கவிதை  பாடிக்காட்டு"  என்றார்.  நான்
உடனே  ஒரு  குறள்  வெண்பாவை  அவர்மீது  பாடினேன்.
"தடியா  வடிவேலா  தக்கோர்  இகழும்
பொடியா  மடையா  புகல்"
அந்தக்  காலக்கட்டத்தில்  எனக்கிருந்த  தமிழ்ப்புலமை
யால்  ஒரு  குறள்  வெண்பாதான்  எழுத  முடிந்தது .
நண்பர்  என்  தந்தையாரிடம்   இந்தக். கவிதையைக்
காட்டி  இதில்  பிழை  ஏதும்  உள்ளதா?  என்று  வினவினார்.
என்  தந்தையார்  அதனைப்  படித்துப்  பார்த்துவிட்டு
பிழையில்லை  என்றார்.  இது  என்  தன்னம்பிக்கையை
வளர்த்தது.

.
இதன்பிற்பாடு  நான்  சில  யாப்பிலக்கண  நூல்கள்
வாயிலாக  என்  தமிழறிவை  மேம்படுத்திக்கொண்டேன்.
புரியாதவற்றை  என்  தந்தையாரிடம்  கேட்டு  விளங்கிக்
கொண்டேன்.  ஒருநாள்  இகழ்வது  போலவுள்ள  மேற்படி
கவிதையைப்  புகழ்வது  போல  எப்படி  மாற்றலாம்  என்று
யோசித்தேன்.  மேற்படி  கவிதையில்  எந்தச்  சொல்லையும்
மாற்றாமல்  சில  சொற்களைச்  சேர்த்துப்  பாடினேன்.
"தடியா   வடிவேலா  தக்கோர்  இகழும்
பொடியா  மடையா  புகல்இப்--படியாக
வண்டமிழ்  தேர்ந்த  வடிவேலைக்  கூறிடுவார்
மண்டையில்  இல்லை  மதி".
இகழ்ந்து  பாடியது  புகழும். பாடலாக  மாறிவிட்டது.

அந்தக்  காலத்தில்  கவிதை  எழுதத்  தெரியுமா?
என்பதைச்  சோதிக்க  ஈற்றடி  கொடுத்துப்  பாடச்
சொல்வது  மரபு.  அதுபோலவே  'ஆடவர்க்கு  மீசை
அழகு'  என்னும்  ஈற்றடியை  எனக்குக்  கொடுத்தார்கள்.
ஈற்றடி  என்பது  கடைசியாக  வரும்  அடியாகும்.
"மயிலுக்குத்  தோகையும்  மானுக்குக்  கொம்பும்
குயிலுக்குக்  கொண்ட  குரலும்--பயிலுகின்ற
பாடலுக்குப்  பண்ணும்  படிறில்  அழகதுபோல்
ஆடவர்க்கு  மீசை  யழகு".

நான்  கல்லூரியில்   பி.காம்.பட்டப்  படிப்பு  படித்துக்
கொண்டிருந்த  காலக்கட்டம்(1971 ஆம்  ஆண்டு  என்று
நினைக்கின்றேன்).  எங்களுக்கு  வருமானவரி  மற்றும்
ஆடிட்டிங்  பாடங்களுக்கு  வகுப்பு  நடத்தும்  உயர்திரு
மணியன்  என்னும்  பகுதிநேர  விரிவுரையாளர்  திருமண
நிகழ்ச்சியில்  வாழ்த்துப்பா  பாடினேன்.
"அணிகுலவித்  திகழ்கின்ற  மாமதுரைக்  கல்லூரி
             யதனில்  நன்கு
பணிபுரிந்து  வருமான  வரிக்கலையைச்  சிறப்பாகப்
             பயிற்றும்   ஆசான்
மணியனெனும்  தோன்றலிவர்  துணைவியொடு  பெருவாழ்வு
             வாழ்க  என்று
வணிகவியல்  மாணாக்கர்  நாங்களெலாம்  மனதார
            வாழ்த்து  வோமே."
பிற்பாடு  1972ஆம்  ஆண்டில்   விடைபெறு  விழாவின்
போது  ஒரு  கவிதையை  எழுதினேன்.
"ஆடினோம்;  பாடினோம்;  ஆனந்த   மாய்நாளும்
கூடினோம்;  பேசிக்  குலவினோம்;--வாடிநாம்
இப்பொழுது  நெஞ்சமெலாம்  ஏங்கப்  பிரிகின்றோம்;
எப்பொழுது  காண்போம்  இனி."
 
பிற்பாடு1974ஆம்  ஆண்டு  வங்கிப்  பணியிற்  சேர்ந்து
பற்பல  ஊர்களில்  பணிசெய்ய  நேர்ந்தது.  எனவே
பணிப்பளுவுக்  கிடையே  கவிபாடுவதில்  நேரத்தைச்
செலவிட  இயலாமற்  போயிற்று.  2012ஆம்  ஆண்டு
பணியிலிருந்து  ஓய்வுபெற்றேன்.  தற்பொழுது  கவிதைப்
பக்கம்  கவனத்தைத்  திருப்பியுள்ளேன்.

என்  தந்தையார்  பல  பாடல்களைப்  பற்றி  விளக்கிக்
கவிதை  இயற்றும்  முறைபற்றிக்  கற்றுக்  கொடுத்துள்ளார்.
அப்பொழுது  கவிதையிலேயே   ஒரு  விடுகதை  சொல்லி
அதற்கு  விடை  கண்டுபிடிக்குமாறு  கூறியுள்ளார்.
"ஐந்தெழுத்தால்  ஆயதொரு  பொருளின்  பேராம்;
         ஆதியொடு  கடைசேர்க்கச்  சிரமென்  றாகும்;
பைந்தொடியே  முதல்நீக்கிற்  குறியென்  றாகும்;
         பகருமிரண்  டாமெழுத்தை  ஒழித்துப்  பார்க்கின்
மைந்துமிகும்  பருந்தாகும்;  முதலி  ரண்டை
வகுத்துரைக்கின்  ஒருயுகமா  வந்து  தோன்றும்;
செந்தமிழ்நன்  னாட்டுமக்காள்  சிந்திப்  பீரே!
சிறந்தவொரு  விடைகண்டால் மெச்சு  வேனே!"
விடை:: கலிங்கம்(துணி,  உடை)
ஆதியொடு  கடைசேர்த்தல்:  க+ம்=கம்(சிரம்)
முதல்நீக்கிற்  குறியாகும்: லிங்கம்(குறி)
2ஆம்  எழுத்தை  நீக்கில்:கங்கம் = பருந்து
1,2ஆம்  எழுத்தைத்  தவிர  பிறவற்றை  நீக்கில்:கலி=கலியுகம்
இந்த  மாதிரி  எத்தனையோ  கவிதைகள்  உள்ளன.
படித்து  இன்புறுவீராக!




Sunday 22 April 2018

யாமாமாநீ யாமாமா யாழீகாமா .......

 தமிழ்க்கவிதை இலக்கணத்தில் ஆசுகவி,வித்தாரகவி,மதுரகவி மற்றும் சித்திரகவி என்னும் நான்கு வகைகள் கூறப்பட்டுள்ளன. ஆசுகவி என்பது எவ்வித முன்னேற்பாடும் இன்றி நினைத்தவுடன் பாடப்படுவதாகும். வித்தாரகவி என்பது பெரும் எண்ணிக்கையில் பாடல்களைப்பாடி இலக்கியம், இதிகாசம் படைப்பதாகும். மதுரகவி என்பது இயற்றப்படும் பாடல்களைப் பிறர் கேட்டு இன்புறும் வண்ணம் இனிமையாகப் படைப்பதாகும். சித்திரகவி என்பது வித்தியாசமான முறையில் பாடல்களை இயற்றுவது அல்லது நாகம், தேள், இரதம், மத்தளம் முதலான சித்திரங்களை எழுதி அவற்றில் எழுத்துக்களை அமைத்துக் கவிபாடுவதாகும். இதில் சித்திரகவியைப்பற்றிக் காண்போம்.
         மாலை மாற்று, உதடு ஒட்டாமல் பாடுதல்(நிரோட்டகம்), ஒரே சொல் மடக்கி மடக்கி வந்து வெவ்வேறு பொருளைத்தருவது (யமகம்), திரிபு, நாகபந்தம், விருச்சிக பந்தம், இரத பந்தம், மத்தள பந்தம், எழுகூற்றிருக்கை, வருக்க எழுத்துக்கவிதை முதலான எத்தனையோ வகைகள் உள்ளன.
மாலைமாற்று:-
         ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தமூர்த்தி பாடியதாகும். மாலைமாற்று என்பது இடமிருந்து வலமாகப் படிப்பதுபோல வலமிருந்து இடமாகப் படித்தாலும் பாட்டின் வடிவம் மாறாமல் ஒரே பொருளைக் குறிப்பதாகும்.
"யாமாமாநீ யாமாமா! யாழீகாமா! காணாகா!
 காணாகாமா! காழீயா! மாமாயாநீ! மாமாயா!".
         இந்தப்பாடலை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் எப்படிப் படித்தாலும் வடிவம் மாறாமல் பொருள் மாறாமல் உள்ளது.
இதன் பொருள்:-
        "யாம் ஆமா?" - ஆன்மாக்கள் கடவுளென்றால் அது பொருந்தாது; "நீ ஆம் ஆம்" - சிவபெருமானே! நீயே ஒப்பில்லாத கடவுளென்றால் அது பொருத்தமானதாகும்; "மாயாழீ" - பேரியாழ் என்னும் இசைக்கருவியை வாசிப்பவனே! "காமா!" - யாவரும் விரும்பும் கட்டழகுத் தோற்றமுடையவனே! "காண்நாகா!" - பக்தர்கள் காணும் வண்ணம் பாம்பை அணிந்தவனே!; "காணா காமா" - இரதியைத்தவிர மற்ற எவர்கண்ணுக்கும் தோன்றாவண்ணம் காமனை அருவமாகச் செய்தவனே! "காழீயா" - சீகாழி ஊரில் வீற்றிருப்பவனே! "மாமாயா" - இலக்குமியின் கணவனான திருமாலாகவும் வருபவனே! "நீமாமாயா" - மாயை முதலிய குற்றங்களிலிருந்து எம்மை விடுவிப்பாயாக!




திருச்செந்தூர் நிரோட்டக யமக அந்தாதி:-
         சிவப்பிரகாச சுவாமிகள் என்னும் பெருந்தமிழறிஞர்க்கும் உள்ளூர்த் தமிழ்ப்புலவர் ஒருவர்க்கும் இடையே நிகழ்ந்த அறிவுப்போட்டி. இதன்படி திருச்செந்தூர்க் கோவிலின் வெளிப்பிரகாரத்தை மூன்றுமுறை சுற்றிவருவதற்குள் உதடு ஒட்டாமலும், ஒரே சொல் மடக்கி மடக்கி வருமாறும் ஈற்றடி அசையோ, சீரோ அடுத்தபாட்டின் முதலசையாகவோ சீராகவோ வருமாறும் முப்பது பாடல்கள் பாடுதல் வேண்டும் என்பதாகும். சிவப்பிரகாச சுவாமிகள் தான் வெற்றி பெற்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?
கந்தரங் கானந் தனிற்சென் றடங்கிலென் காசிக்கனே
கந்தரங் கானந்த நண்ணிலென்? கன்னியர் கட்டளக
கந்தரங் கானந்த நின்றா டெழிற்செந்தில் கண்டிறைஞ்சிக்
கந்தரங் கானந்த நல்கச் சனனங் கடந்திலரே!

இதன் பொருள்:-
         "கன்னியர் கட்டளக கந்தரம் கான் நந்த நின்று ஆடு எழிற்செந்தில் கண்டிறைஞ்சிக்" - கன்னியர் கட்டிமுடிந்து வைத்துள்ள கூந்தல் மணம் வீசும்படியாக ஆடுகின்ற அழகான செந்திலம்பதியில் கந்தனைக் கண்டு தொழுது வணங்கி; "கந்தர் அங்கு ஆனந்தம் நல்கச் சனனம் கடந்திலர்" - கந்தர் வணங்கிய பக்தருக்கு ஆனந்தம் அருள்பாலித்து அதன்பயனாக இந்தப் பிறவியைக் கடவாதவர்கள்; "கந்தரம் கானம் தனிற்சென்று அடங்கில்என்?" - மலைக்குகை, காடு போன்ற இடங்களிற் சென்று புலன்களை ஒடுக்கி வாழ்ந்தால் என்ன? "காசிக்கு அனேகந்தரம் கால் நந்த நண்ணில் என்?" - காசிக்கு அநேக முறை கால்கள் வருந்தும்படியாக நடந்து திருச்செந்தூரை நெருங்கினால் என்ன?

         தற்காலத்தில் சித்திரகவிபாடும் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது. இல்லையென்றே சொல்லலாம்.

கருகிய மொட்டுக்கள்

 பன்னிரண்டு  வயதுநிறை  யாதசின்னஞ்  சிறுமி
பலபேர்கள்  அண்மையிலே  கொலையுண்டு  மாண்டார்;
பாலியல்வன்  புணர்வாலே  நடந்ததிந்தக்  குற்றம்;
பாமரரும்  படித்தோரும்  குமுறினார்;  கொதித்தார்;

என்னவழி  மேற்கொண்டு  சமுகத்தில்   இதனை
       இரும்புக்கை  கொண்டடக்க  முயன்றிடலாம்  என்றே
இந்நாட்டை  ஆள்வோரும்  சான்றோரும்   இன்னும்
இளைஞர்களும்  முதியோரும்   மாதர்களும்   எண்ணி

உன்னதமாய்  ஒருவழியைக்  கண்டறிந்து  சொன்னார்;
உச்சபட்சத்  தண்டனையைச்  சட்டத்தில்  சேர்த்தால்
ஒடுக்கிடலாம்  இத்தகைய  பாதகமாம்  செயலை;
உறுதியுடன்  மையத்தை   ஆள்வோர்கள்  இயங்கி

சொன்னவண்ணம்  சட்டத்தை  இயற்றினரே;  நமது
        குடியரசுத்  தலைவருமே  ஒப்புதலை   அளித்தார்;
        சூழ்ச்சியால்  சட்டத்தை. வளைக்கநினைப்  போரே!
        தோற்றிடுவீர்;  எச்சரிக்கை;  திருந்திடுவீர்  உடனே!


எத்தனையோ  சட்டங்கள்  இந்நாட்டில்  உள்ளனவே;
      இருந்தபோதும்
நித்தநித்தம்  குற்றங்கள்  அரங்கேறு  கின்றனவே;
       நெஞ்சைத்  தொட்டுத்
தத்தமது  மனச்சாட்சிப்  படிநடந்தால்  மட்டுமிதைத்
           தடுத்தல்  ஒண்ணும்;
உத்தமமாய்  அவரவர்கள்  ஒழுக்கநெறி   மேற்கொண்டால்
       வெற்றி   திண்ணம்.



   








அலைபேசி தரும் அல்லல்கள்

இருபத்  தொன்றாம்  நூற்றாண்டின்
       ஈடில்   கண்டு   பிடிப்பாக
        இலங்கும்  கருவி  அலைபேசி;
         இதனால்  கிடைக்கும்  பலநன்மை;
உருவத்  தாலே  சிறிதாகும்;
          உள்ளங்  கையில்  அடக்கிடலாம்;
           உலகம்   இதிலே  ஒடுங்கிவிடும்;
            ஒருவர்க்  கொருவர்  தொடர்புகொள்வர்;
அருமை  மிக்க  அலைபேசி
             அல்லல்  தனையும்  கொணர்ந்திடுமே;
              அதிலும்  குறிப்பாய்ப்  பெண்களிதில்
               அதிகக்  கவனம்  செலுத்தல்நன்று;
ஒருபோ  தும்நீர்  யாரிடமும்
               உங்கள்  எண்ணைச்  சொல்லாதீர்;_💐
               உயர்ந்த  கவனம்  விழிப்புணர்வு
               தேவை   தேவை  மிகத்தேவை!

தெரியாத  நபர்களிடம்  அலைபேசி  எண்தன்னைத்
               தெரிவித்  தாலே
புரியாத  சிக்கலெலாம்  புறப்படுமே;  குறிப்பாகப்
                பூவை  யர்க்கே;
எரிபோல  நள்ளிரவில்  அழைப்புவரும்;  ஏதேதோ
                உளறிக்  கொட்டிப்
பெரிதான  துயர்செய்வார்;  பெண்குலத்தீர்!  அதிகவனம்
                பேணு  வீரே!

Saturday 14 April 2018

காவிரியை மீட்டெடுக்கப் போராட்டம்

புலியினைக்  கண்டும்   அஞ்சேன்;
         பூதத்தைக்   கண்டும்   அஞ்சேன்;
வலிமைகொள்  கரடிக்  கஞ்சேன்;
         வாரணம்  கண்டும்  அஞ்சேன்;
நலிவுறும்  வயலைக்  காக்க
         நம்பொன்னி  யாற்றை  வேண்டிச்
சிலபல  முயற்சி  செய்தால்
        சிரிப்பவர்க்  கஞ்சு  வேனே.

சிங்கத்தைக்  கண்டும்  அஞ்சேன்;
        சிறுத்தையைக்   கண்டும்  அஞ்சேன்;
பங்கத்தைச்   செய்யும்   நல்ல
        பாம்பினைக்   கண்டும்   அஞ்சேன்;
தங்கத்தை  நிகர்க்கும்  பொன்னி
         யாற்றினை  வேண்டிச்  செய்யும்
எங்கள்தம்  போராட்  டத்தை
         இகழுவார்க்  கஞ்சு  வேனே.

கயவர்கள்  தமக்கும்  அஞ்சேன்;
        கருணையில்  லார்க்கும்  அஞ்சேன்;
பயமிலாக்  கொலைஞர்க்  கஞ்சேன்;
       பண்பிலா  தவர்க்கும்  அஞ்சேன்;
வயல்களை  வளமை  யாக்க
       காவிரித்  தண்ணீர்  வேண்டி
முயற்சிகள்  செய்தால்  தூற்றும்
        மூடர்கட்  கஞ்சு வேனே.
எத்தனையோ   நூற்றாண்டாய்   எங்கள்தமிழ்நாட்டினுள்ளே
       எழிலாய்ப்    பாய்ந்து
நத்தைநண்டு  மீனினங்கள்   செழித்திடவும நெல்கரும்பு
       நன்கு  பல்கி
வித்தகமாய்   விளைந்திடவும்  பணிசெய்த  காவிரியே !
      மிக்க  நன்றி;
நித்தமுனைத்  தொழுதிடுவோம்   தடைதகர்த்து   மீட்டெடுப்போம்;
     நிரம்பி   வாராய்.

காவிரியை   மீட்டெடுக்கத்  தமிழரெல்லாம்  பலமுயற்சி
     களத்தில்  செய்தார்;
பாவலன்நான்  அன்னவர்கள்  பணிதன்னைப்  பாராட்டிப்
     பகர்வேன்   நன்றி;
ஆவலுடன்  வேடிக்கை   பார்த்தவரும்  பலருள்ளார்
     அவர்க்கும் நன்றி;
கேவலமாய்க்   கேலிகிண்டல்  செய்தோரை   எச்சரிப்பேன்;
     திருந்து  வீரே.

Monday 9 April 2018

வட்டமுகம் தோன்றி மிக வாட்டுதடி

பொட்டல்வெளி  யானாலும்   பூம்பொழிலே   யானாலும்
கட்டழகுக்  கண்மணிநான்   காணுமிடம்   எல்லாம்நின்
மொட்டழகு   வாய்திறந்து   முத்துநகை   சிந்துகின்ற
வட்டமுகம்   தோன்றிமிக   வாட்டுதடி   காதலியே!

பேரழகுப்   பெட்டகமே!   பித்தனைப்போல்   ஆகிவிட்டேன்;
காரணத்தை   நீயறிந்தும்   கண்டுகொள்ள   வேயில்லை;
மாரனம்பு   பாய்வதனால்  வாட்டமுற்று   நோகின்றேன்;
ஓரவிழிப்   பார்வையினால்    உற்சாகம்   சேர்த்திடுவாய்

கீழ்க்காணும்   கவிதைகளும்   காதல்   பாட்டுகளே.   ஆனால்
நிரோட்டகம்  என்று சொல்லப்படும்   உதடு  ஒட்டாமற்பாடப்படும்
ஒருவித வகையைச் சேர்ந்தவை.   மெய்எழுத்துக்களில்
ப், ம், வ்   என்ற  மூன்றையும்   உயிர் எழுத்துக்களில் உ, ஊ,
ஒ, ஓ, ஔ  என்ற   ஐந்தையும்  இவற்றின் அடியாகப் பிறக்கும்
உயிர்மெய் எழுத்துக்களையும் விலக்கிப் பாடுதல் வேண்டும்.

கண்ணே!   கனியே! தீங்  கன்னலே!  கற்கண்டே!
என்னே  எழிலார்ந்தாய்;  ஏந்திழையே!   தண்டேனே!
கிட்டத்தில் நில்லென்றேன்; கேளாத காதினளாய்
எட்டிநீ செல்கின்றாய் ஏன்?

கண்ணாளா!   சீராளா! காளையே!  காதலரே!
எண்ணாத சிந்தனைகள் எண்ணாதீர் கண்ணாலஞ்
செய்யாத நேரத்தில் தீண்டற்க;தள்ளி
நிற்க;
நைகின்ற  இன்னல் இலை..

Sunday 8 April 2018

பாரதி கண்ட கனவு நனவாகியதா?

பாரதியார்  கனவுகண்ட  புதுமைப்பெண்   தோன்றினளோ?
         பாரோர்   சொல்வீர்
பகட்டாக   உடுத்திடவோ  தமிழ்ப்பண்பை    மறந்திடவோ
         பகர்ந்தார்   அல்லர்;
நேர்மையாய்  நடந்திடவும்    கற்புநெறி   நல்லொழுக்கம்
        நியாயம்    தர்மம்
 நிகழ்த்திடவும்  எடுத்துரைத்தார்; ஆண்கள்பெண்கள்   சமமென்றார்;
        நிலைத்த  உண்மை
தீரமிக்க  பெண்கள்பலர்  தொடர்வண்டி  விமானங்கள்
        செலுத்து   கின்றார்;
திகைத்திடவே   விண்வெளியில்   சாகசமாய்  வலம்வந்து
        சிறக்கின்   றாரே;
வீரமிக  இராணுவத்தில்  பணிபுரிந்து  பகைவர்களை
        வெல்கின்   றாரே;
 மீசையினைப்   பாரதியார்  முறுக்கிடுவார்;  புகழ்ந்திடுவார்
         மீண்டும்   வந்தால்.

Sunday 1 April 2018

அண்ணல் நோக்கினான் அவள்......

ஈராயி  ரம்வருடம்  வீரமும்நற்  காதலும்நம்
இரண்டு   கண்ணாய்
இலக்கியங்கள்  இயம்பினவே     ஆனாலும்   தற்காலம்
இதிலோர்  சிக்கல்
ஆராத  ஒருதலையாம்  காதலினால்  ஆடவர்கள்
          அமிலம்  தன்னை
அணுவளவும்  விரும்பாத  மாதர்கள்மேல்  வீசிடுதல்
           அறமோ ?  சொல்லீர்.
ஓராது  சிலவேளை  அன்னவரைத்   துன்புறுத்தி
             உயிரும்   போக்கும்
உன்மத்தச்   செயல்நன்றோ?   நெறியன்று   நேர்மையுமன்று
             ஒழுக்கக்  கேடே!
தேராத  காளையரே!   கிடைக்காத  பொருள்தன்னைச்
              சிந்திக்   காது
தேறிமனம்   ஒத்துவரும்   பெண்களையே  காதலிப்பீர்
               சேரும்   வெற்றி.

எங்கள்   வீட்டுத்  திருமகளே!
       என்று   போற்றிச்   செல்லமிக
       இயன்ற   வகையில்   அரசியைப்போல்
எழிலாய்   வளர்த்த  தங்கமகள்

கண்கள்   கண்ணீர்  சிந்திடவே
          கயவர்  கிண்டல்  கேலிசெய்தால்
          கனன்று   நெஞ்சம்  குமுறிடுமே;
         கடிய   துன்பம்   இன்னுமுள
மங்கை   யிவளை  ஒருதலையாய்
         மறுகி  மறுகிக் காதலித்து
        மறுத்தால்   அமிலம்    தனைவீசி
         வருத்தம்   அடையச் செய்திடுவார்

சங்கை   யறுத்துக்  கொல்வதற்கும்
          தயங்கார்   நெஞ்சம்  கலங்காரே
           சான்றோர்   சமூகம்   காவலர்கள்
           தக்க  விதத்தில்  தடுத்திடுக!