Tuesday 17 August 2021

இரட்டுற மொழிதல்(சிலேடை)

 இரட்டுற மொழிதல்(சிலேடை)


சிலேடை என்ற சொல்லைச் சொன்னாலே  உடனடியாக நம் நினைவு

காளமேகப் புலவரைச் சுற்றிவரும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

ஆசுகவி வித்தகர். அவர் ஆசுகவியாகப் பாடிய பாடல்களில் சிலேடை,

கடவுள் துதி, நகைச்சுவை, வசை  போன்ற பலப்பல விதமான சுவைகளும்

மிளிர்ந்து  படிப்பவர் மனங்கவரும். அப்படிப் பாடியது தான் கீழ்க்கண்ட

சிலேடைப் பாடல்:

"வண்ணம்  கரியனென்றும்  வாய்வேத  நாறியென்றும்

கண்ணனிவன்  என்றும்  கருதாமல்----மண்ணை

அடிப்பதுமத்  தாலே அளந்தானை ஆய்ச்சி

அடிப்பதுமத் தாலே அழ".

வாமனனாக  வந்து தன் அடிப்பதுமத்தாலே(திருவடியாகிய தாமரையாலே)

உலகளந்தவனை வெண்ணெய் திருடியமைக்காக  யசோதை ஆய்ச்சி

அழ அடிப்பது (வெண்ணெய் கடையும்) மத்தாலே. (அந்தக் கடவுளைப் போற்றித்

தொழாமல் அழ அடித்தாளே அது அவள் அறியாமையைச் சுட்டும்).

அடிப்பதுமத்தால், அடிப்பது  மத்தால் என்று இரண்டு பொருள்பட வந்துள்ளது. 


இது போலவே பாரதியாரும் ஒரு சிலேடைப் பாடல்  பாடியுள்ளார்.  அவரின்

சிறு வயதுத் தோழர் காந்திமதி நாதன் என்பவர் விளையாட்டாக  அவரை

இழிவுபடுத்த நினைத்து  "பாரதி சின்னப் பயல்" என்ற ஈற்றடி கொடுத்து

வெண்பாப் பாடுமாறு கூறினார். பாரதியார் பின்வருமாறு பாடினார்:

"காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்".

பாரதி என்னும் சொல்லைப்  பார்+அதி என்று பிரித்துக் காந்திமதி நாதன்

அதி சின்னப் பயல் என்று பொருள்படுமாறு பாடிவிட்டார்.

காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல் என்று மிகத் திறமையாகப்

பாடியமை மெச்சத்தக்கது.


ஒருமுறை பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலரிடம்  ஒரு புலவர் தான் இயற்றிய

கவிதையைக் காட்டி அவரது பாராட்டைப் பெறலாம் என்ற அவாவுடன் அவரை

அணுகினார். கவிச்சிங்கம் அந்தப் புலவரிடம் "பாடலைப் படியுங்கள்" என்றார்.

"வீதிதொறும் மாடஞ் சிறக்க விளங்கிடுதென் புதுவை வாழும்

நாதியிலை எனவந் தார்க்கு நல்குபொன்னுச் சாமி வேந்தே!

சேதி யொன்று செப்பக் கேளும் செகத்தினிலே பலரைப் பாடிப்

பாதிவலி குன்றி னேற்குப் பரிசுமிக அருளு வாயே."

கவிச்சிங்கம் உடனே கூறினார்:"ஐயா முதலடியில் வரும் 'வீதிதொறும் மாடஞ்

சிறக்க' என்ற தொடர் 'வீதிதொறும் மாடு+அஞ்சு+இறக்க என்று பிரித்துப்

 படிக்க வாய்ப்புள்ளது; அப்படிப் பிரித்தால் 'வீதிதொறும் ஐந்து மாடுகள் இறக்கும்'

என்ற அமங்கலப் பொருள்வர வாய்ப்புள்ளது. எனவே, முதலடியை மங்கலப்

பொருள் வருமாறு திருத்தல் வேண்டும். '"வீதிதொறும் மாட கூடம் விளங்கிடுதென்

புதுவை வாழும்" என்று மாற்றிப் பாடினால் நல்லது" என்று அறிவுறுத்தினார்.

'மாடஞ் சிறக்க' என்னும் தொடர் 'மாடம் சிறக்க' என்றும் ' மாடு அஞ்சு இறக்க'

என்றும் சிலேடையாக வரும்.


சாதாரணமாகப் பேசும் பொழுது கூடச் சிலேடையாகப் பேசுவது சில புலவர்களின்

வழக்கம். கடிகைமுத்துப் புலவர் என்ற சான்றோர் வயது மூப்பின் காரணமாகப்

படுத்த படுக்கையாக இருந்த பொழுது அவர் மனைவியார் பாலில் துணியை முக்கி

நனைத்து அவர் வாயில் பிழிந்தார். ஏனென்றால் அவரால் பாலைக் கூட அருந்த

இயலவில்லை. துணியை வாயில் பிழியும் பொழுது புலவர் முகத்தைச் சுழித்தார்.

மனைவியார் புலவரிடம் கேட்டார்" பால் சுவையாக இல்லாமல் கசக்கிறதோ?" என்றார்.

அந்த நிலையிலும் புலவர் சிலேடையாகப் " பாலும் கசக்கவில்லை; துணியும்

கசக்கவில்லை" என்று விடையிறுத்தார். துணியைச் சரிவரக் கசக்கித் துவைக்காமல்

அதனைப் பாலில் முக்கி நனைத்ததால் பாலின் சுவையை அறிய இயலாமல் போயிற்று

என்பது கருத்து.


பரிதிமாற் கலைஞர்(சூரிய நாராயண சாஸ்திரியார்) என்ற தமிழறிஞர்(தமிழைச்

செம்மொழி என்று அறிவிக்க முதன் முதலில் கோரிக்கை எழுப்பியவர்) சென்னைக்

கிறித்தவக் கல்லூரியில்  இலக்கண வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பொழுது

" தமிழ்ப் பெண்ணுக்கு எழுத்து, அசை, சீர், தளை,அடி,தொடை முதலான உறுப்புகள்

உள்ளன." என்று கூறிப் பாடத்தைத் தொடர்ந்தார். வம்புக்கார மாணவன் ஒருவன்

"ஐயா! எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலானவற்றைச் சொன்னீர்கள்.

தொடைக்குப் பிறகு என்ன  வரும்?" என்று ஏளனக் குரலில் வினவினான்.

புலவர் உடனே "நீர் மாலையில் எம் அறைக்கு வம்மின்; யாம் உமக்கு விளக்குமாற்றால்

விளக்குதும்" என்றார். மேற்கொண்டு ஏதும் பேசாமல் அந்த வம்பன் அமர்ந்துவிட்டான்.

விளக்குமாறு என்னும் சொல் குப்பை கூட்டும் கருவியைக் குறிக்கும். விளக்கும்+ ஆறு

என்று பிரித்தால் விளக்கும் வழி(முறை) என்று பொருள்படும்.  


சோழவந்தானூர்ப் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் ஒரு மாநாட்டிற்காகச் சென்னை

சென்றிருந்தபொழுது அவர் அருகில் அமர்ந்திருந்தவர்"ஐயா! தங்கள் ஊர் எது?" என்று

வினவினார். உடனே சண்முகனார் "யாமதுரையோம்"  என்று  பதிலிறுத்தார். 

"யாமதுரையோம்" என்பது  "யாம் மதுரைக்காரர்" என்ற பொருள்படும். ஆனால் கேட்டுக்

கொண்டிருந்த  புலவர் "யாம் அது உரையோம்", அதாவது, "யாம் அதைச் சொல்லமாட்டோம்"

என்ற  தவறான பொருளாக விளங்கிக் கொண்டு "ஏன் ஐயா! ஊரைச் சொன்னால்

குறைந்தா போவீர்?" என்று உரைத்தார். பிறகு சண்முகனார் தமது  விடையை விளக்கிச்

சொன்னார். கேட்டுக் கொண்டிருந்தவர் "சிலேடை மிகவும் அருமை" என்று மெச்சினார்.


வேம்பத்தூர் என்னும் ஊரில் தமிழ்ப் புலவர்கள் பலர் இருந்தனர். ஒரு சமயம் வயதில்

மூத்த புலவர் ஒருவர் சிறு மூட்டையைத் தன் தோளில் சுமந்து சென்று கொண்டிருந்தார்.

எதிரில் வந்த மற்றொரு புலவர் "ஐயா! இந்த வெயிலில் ஏன் இந்த மூட்டையைச்

சுமக்கமாட்டாமல் சுமந்து செல்கின்றீர்?" என்று வினவினார். உடனே முதியவர் "எல்லாம்

தலைவிதி வசம்" என்று விடையிறுத்தார்.  கேட்டுக் கொண்டிருந்த புலவர்க்கு ஒன்றும்

விளங்கவில்லை. முதியவரே பேசினார்" என் மனைவி இறந்த திதி இன்று. வேண்டிய

பொருட்களைக் கடையில் வாங்கியுள்ளேன். ஆனால் சுமந்து செல்ல மகன், மகள் யாரும்

இவ்வூரில் இல்லை. பணிநிமித்தம் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆகவே

நானே சுமந்து செல்கின்றேன். அதனால்தான் தலைவிதிவசம் என்று கூறினேன்.

இன்று என் தலைவி திவசம்; உதவி செய்ய ஆள் இல்லாதது என் தலைவிதிவசம்" என்று

முடித்தார்.


இன்னும் இதுபோல் ஏராளமான சிலேடைகள் உள்ளன. வாரியார் சுவாமிகள், கி.வா.ஜ.

போன்றோர் பேசிய சிலேடைகள் பலப்பல. அவற்றையெல்லாம் படித்துச் சுவைப்போம்.

.