Monday 15 March 2021

அரவைத் தலைவிட்டு அடிவால்

 அரவைத் தலைவிட்டு அடிவால் பிடித்ததனை ஒக்குமே!

(பாம்பின் தலையைப் பிடிக்காமல் அடிவாலைப் பிடித்தல் ஆபத்து)


பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாம்பைப்

பிடித்து மனித உயிர்களைக் காப்பாற்றும் வீரமிக்க தொண்டர்களும்

உலகத்தில் இருக்கின்றனர். பாம்பைப்பிடிப்பதற்குப் பற்பல நடை

முறைகளையும் தந்திரங்களையும் உத்திகளையும் கையாள்வது

அவசியமாகும். பாம்பினைப் பிடிக்கும் போது முதலில் வாலைப் பிடித்து

இழுத்தாலும், கூடிய விரைவில் அதன் வாயோடு சேர்த்துத் தலையைப்

பிடித்து அமுக்கிச் சாக்குப் பையிலோ,  பாதுகாப்பான நெகிழிக் கொள்கலனிலோ

அடைத்திடுதல் நலம் பயக்கும். அவ்வாறு செய்யாமல் அடிவாலைப்

பிடித்துக் கையாள்வது மிக மிக ஆபத்தான செயலாகும். ஏனென்றால்

வாலைப் பிடித்துத் தூக்கும் பொழுது பாம்பு  எழுச்சி பெற்றுப் பிடித்திருக்கும்

மனிதனைக் கொத்துவதற்கு வாய்ப்பு அதிகம். தலையைப் பிடித்திருந்தால்

கொத்த வாய்ப்பே யில்லை. பம்புவதால்(சீறி  எழுவதால்) பாம்பு என்ற பெயர்

உண்டாயிற்று. ஊர்ந்து வரும் உயிரினம் சுமார் மூன்றடி அல்லது நாலடி எழுந்து

நின்றால் நம் நாடியெலாம் ஒடுங்கிவிடும்.


பாம்பைப் பற்றிய ஆராய்ச்சி ஏன் வந்தது?  களவியல் காதலில் திளைக்கும்

தலைவன் தலைவி இருவரும் வழக்கம்போல் சந்தித்துக் கொள்கின்றனர். இரு

வரும் காதல் உரையாடலை நிகழ்த்துகின்றனர்.  இடையிடையே காதலன்

காதலியை ஓரக்கண்ணால் பார்த்துப் பரவசப் படுகின்றான். காதலன் தன்னை

ஓரக்கண்ணால் கவனிப்பதைக் கண்ணுற்ற காதலி  நாணிக் கண்களைப் புதைத்துக்

கொள்கின்றாள்(கண்களை மூடிக் கொள்கின்றாள்).இதனை நாணிக் கண் புதைத்தல்

என்பர். நாணிக் கண் புதைத்த செயல் எதிர்பாரா விளைவை உருவாக்கியது. அதுவரை

காதலியின் திருமுகத்திலுள்ள கண்களைப் பார்த்துப்  பேருவகை அடைந்த காதலன்

அவள் கண்களைப் புதைத்தவுடன் கண்களுக்குக் கீழேயுள்ள பேரழகை உற்றுநோக்கத்

தொடங்கினான். சிலைபோல் ஆனான். விழியாகிய அம்புகள் அவனுக்குத் தொல்லை

கொடுத்தமை மெய்தான். தற்பொழுது அவற்றைக்காட்டிலும் ஆபத்தைத் தரும் அவள் முன்

அழகு அவனை மிரட்டிக்கொண்டிருந்தது. அப்பொழுது அவன் பாடிய பாடலில் "பாம்பைப்

பிடிப்பவன் அதன் தலையைப் பிடிக்காமல் அடிவாலைப் பிடித்தால் என்ன நேருமோ

அது தனக்கு நேர்ந்துவிட்டதோ? என்று புலம்புகின்றான். பாம்பின் தலையைப் பிடித்தால்

கடிபடாமல் தப்பலாம். அடிவாலைப் பிடித்தால் கொத்துப்பட வாய்ப்புண்டு. அதுபோலப்

பாவையின் முன்னழகை நன்கு மறைத்திருந்தால் தான் கிறங்காமல் தெளிவாகக்

காதலியை ஏறிட்டுப் பார்த்திருக்க இயலும். தற்பொழுது அவள் நாணிக் கண் புதைத்த தால்

விழியம்பைவிடவும் ஆபத்தான பேரழகை எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அதாவது,

விழியம்பினால் நேரும் காதல்துயரைவிட அவள் முன்னழகால் நேரிட்டுள்ள துயரே

மிக அதிகம் என்ற கருத்து புலனாகின்றது. இந்தச் செய்தியைக் கூறும் தனிப்பாடல்

பின்வருமாறு::

"வரகைப் பதிபள்ளி கொண்டான் மழவன் மணிவரை மேல்

திருகிச் செருகும் குழல்மட வீர்!பொற் சிகரகிரி

பொருவுற்ற கொங்கை புதையாமல் வேற்கண் புதைத்ததெலாம்

அரவைத் தலைவிட்(டு) அடிவால் பிடித்த தனையொக்குமே!"

பொருள்:

வரகூர்(வரகை) என்னும் பதிக்குச் சொந்தக்காரனான பள்ளிகொண்டான்

மழவன் என்னும் குறுநிலமன்னனது மலையின் கண் வாழ்கின்ற தலைவியே!

நீவிர் மலரைச் சூடுதல் இயல்பே; அம்மலரோடு என் ஆருயிரையும் சுருட்டிக்

கூந்தலில் செருகிக்கொண்டுள்ளீர்; பொன்மயமான சிகரத்தை யுடைய

மேருமலையை ஒத்த முன் அழகுகளை நன்கு மறைக்காமல் உமது வேல் போலும்

கண்களை மறைக்கின்றீர். இது எவ்வாறு இருக்கிறது என்றால், நல்ல பாம்பைப்

பிடிப்பவன் அதன் தலையைப் பிடிக்காமல் வாலைச் பிடித்துத் தூக்குவதற்குச்

சமமாகும். ஏனென்றால் வாலைப் பிடித்துத் தூக்கும்போது நாகம் சீறி எழுந்து

கொத்தும் ஆபத்து உண்டு. தலையைப் பிடித்துத் தூக்கினால் நாகம் கொத்த

வாய்ப்பேயில்லை. அதுபோல உமது வேற்கண்களை மறைக்காமல், அதிக

ஆபத்தை நல்கும் உமது முன் அழகுகளை மறைத்தல் நல்லது. ஏனெனில்

உமது முன் அழகுகள் கண்ணைக் காட்டிலும் என்னை வருத்துகின்றன.


இந்தத் தனிப்பாடலில் உள்ள சிறப்பு என்னவென்றால், இதனை இயற்றிய

புலவர் எடுத்தாண்ட உவமை ஆகும். பாடலை இரசித்து மகிழ்வோம்.