Friday 31 December 2021

கொடி பறக்கிறது.

 கொடி பறக்கிறது..


அற்றைநாள் தொட்டு இற்றை நாள் வரையும் கொடியின்

பயன்பாட்டையும் பெருமையையும்  குறைத்துச் சொல்ல

இயலாது. ஆளும்  வேந்தரானாலும்(தற்காலத்தில் அமைச்சர்

முதலான அரசியல் தலைவரானாலும்)  சாதாரண எளிய குடிமகன்

ஆனாலும் கொடியின்  இன்றியமையாமையை அறியாதார் இலர்.

தேசியக் கொடிமுதல் தெருக்கோடியில் கடையிலோ, நிறுவனத்திலோ

பறக்கும்  கொடிவரை  அனைவர்க்கும் தெரிந்த செய்தியே. இத்தகைய

கொடியைப் பற்றி இலக்கியம் இயம்பும் செய்திகளையும்  நாட்டு

நடப்பு வாயிலாக அறியும் செய்திகளையும் நோக்குவோம்.


மதுரைக் காஞ்சி தெரிவிக்கும் செய்திகள்:

மதுரை நியமங்கள்(கடைத்தெருக்கள்/வீதிகள்) வரையப்பட்ட ஓவியம்

போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. விழாக் கொண்டாட்டத்தைக்  குறிக்கும்

பல்வேறு உருவம் பொறித்த கொடிகள் அந்த நியமங்களில் பறந்து கொண்டி

ருந்தன. முருகனுக்குச் சேவற்கொடி, பெருமாளுக்குக் கருடன் கொடி, சிவ

பெருமானுக்குக் காளைக்கொடி, பராசக்திக்குச் சிம்மக்கொடி என்று அந்தந்தக்

கோவில்களில் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.. வென்ற நாடுகளின்

அடையாளமாக அந்நாடுகளிலிருந்து கொண்டு வரப்படடு ஏற்றப்பட்ட கொடிகள்,

கள்ளுக்கடைகளில்  இங்கு கள் விற்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கும்

கொடிகள், பல்வேறு குடிமக்களின் வாழ்விடங்களை அடையாளம் காட்டும்

கொடிகள்  இன்னும் பலவிதமான கொடிகள் மலையினின்று விழுந்து குதித்

தாடும் அருவி போல ஆடிப் பறந்து கொண்டிருந்தன.

"ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச்

சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி

வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள

நாள்தோ றெடுத்த நலம்பெறு புனைகொடி

நீர்ஒலித் தன்ன நிலவுவேல் தானையொடு

புலவுப்படக் கொன்று மிடைதோ  லோட்டிப்

புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி

கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல

பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்

பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க"

(வரிகள் 365 முதல் 374 முடிய)


இனி, பட்டினப்பாலை கூறும் செய்திகளைக் காண்போம்:

தெய்வக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

"மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய

மலரணி வாயில் பலர்தொழு கொடியும்"(வரி 160).

அற-மறச் சாலைகளில் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

வெள்ளைவெளேரென்ற வெண்மை நிறத்தில் சோறு படைக்கும்

அறச்சாலை மாடத்தில் கொடி கட்டப்பட்டிருந்தது. கம்பத்தின்

ஓரத்தில் வேல் நடப்பட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது.

இங்கும் கொடி பறந்தது. இவை படைவீரர்களுக்கும்  காவல்

தொழில் புரிவோர்க்கும் சோறு வழங்கும் அறச்சாலை

என அடையாளம் காட்டும் கொடிகள்.

பட்டி மன்றக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

"பல்கேள்வித் துறைபோகிய

தொல்லாணை நல்லாசிரியர்

உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்(171ஆம் வரி)

காவிரிப்பூம் பட்டினம் கடற்பகுதியாதலால் அங்கே நிறுத்தப்

பட்டிருந்த நாவாய்களின் உச்சியில் கொடிகள் பறக்கவிடப்

பட்டிருந்தன. மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் என

அடையாளம் காட்டும் கொடிகளும் பறந்தன. இந்தக் கொடிகள்

மட்டுமன்றிப் பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில்

பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது.


இனி சிலப்பதிகாரம் சுட்டும் ஒரு செய்தியைப் பார்ப்போம்:

கோவலனும் கண்ணகியும்  சிலம்புகளை விற்று அதனால்

கிடைக்கும் தொகையைக் கொண்டு வாணிகம் புரிய மதுரைக்

குள் நுழைகின்றனர். போர்வெற்றிக் கொடி பறக்கும் மதுரை

நகரின் நெடிய மதிற்சுவரில் பட்டொளி வீசிப் பறக்கும் நீண்ட

கொடிகள் காற்றில் அசைந்தாடின. இதனை இளங்கோவடிகள்

குறிப்பிடும் பொழுது தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டு

அக்கொடிகள் கோவலன் கண்ணகி இருவரையும் மதுரைக்கு

வராதீர்கள் என்று கைநீட்டித் தடுப்பது போல் அசைந்தாடின

என்று  குறித்துள்ளார்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"

(மதுரைக் காண்டம்--புறஞ்சேரி இறுத்த காதை--189&190).

ஒருவேளை, கோவலன் மதுரையில் களவுக் குற்றம் சாட்டப்

பட்டுக் கொலைசெய்யப்படுவான் என்றும். கண்ணகி கணவனைப்

பிரிந்து ஆறாத் துயருறுவாள் என்றும் அக்கொடிகள் அறிந்திருந்

தனவோ?


இதற்கு நேர்மாறான காட்சியைக் கம்பராமாயணத்தில் காண்கிறோம்.

விசுவாமித்திர முனிவரும் இராமனும் இலக்குவனும் நுழைந்தபொழுது மிதிலை நகரம் "யான் செய்த பெருந்தவத்தின்

விளைவாகத் தாயார் இலக்குமிதேவி இங்கு அவதரித்து உறைகின்றாள்.

அவளை மணம்புரிவதற்காகத் திருமால் வருகின்றார். அவரையும்

அவருடன் வருபவர்களையும் அழகிய மணிகள் கட்டப்பட்ட கொடிகளாகிய

கைகளை நீட்டி விரைவினில் வருக என்று வரவேற்று அழைப்பது சாலவும்

நன்று" என்று எண்ணிக் கொடிகளை அசைத்ததாகக் கம்பர் தற்குறிப்பேற்ற

அணியில் குறிப்பிடுகின்றார்.

"மையறு மலரின் நீங்கி, யான்செய்மா தவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநர் கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா!"


அந்நாளில் நம் மூவேந்தர்களும் அவரவர்க்குரிய கொடியையும் காவல்மரத்

தையும் முரசுகட்டிலையும் இன்னும் இவைபோன்ற பிற சின்னங்களையும்

பேணிப் பாதுகாத்தனர். ஏனெனில் அவைகளைத் தமது அடையாளங்களாகக்

கருதினர்.சிறப்பாக ஆளுதல் என்பதைக் குறிக்கக் கொடிகட்டி ஆளுதல் என்ற

சொற்றொடரைப் பயன்படுத்துகின்றோம். அதாவது அரசனது ஆட்சியில் எல்லாக்

குடிமக்களும் வளத்தோடும்  மகிழ்வோடும் பாதுகாப்போடும் வாழ்கிறார்கள்

என்னும் செய்தி வெளிப்படும். பாண்டியர்க்குரிய மீனக் கொடியும், சோழர்க்குரிய

புலிக்கொடியும், சேரர்க்குரிய விற்கொடியும் பட்டொளி வீசிப் பறந்தன. தற்பொழுது

இந்தியாவின் மூவர்ணக் கொடி(சிவப்பு, வெள்ளை, பச்சை நடுவில் அசோகச்

சக்கரம்) கம்பீரமாகப் பறக்கின்றது.


கொடிகளுக்கு இவ்வளவு சிறப்பும் கவனிப்பும் ஏன் கொடுக்கப்படுகின்றன?

ஏனெனில் பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு மனிதக்குழுவும் தத்தம் அடை

யாளத்தைப் பறைசாற்றவும், தக்கவைக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது.

அடையாளச் சின்னங்கள் எத்தனையோ உலவுகின்ற போதிலும் கொடியே முதன்மை

இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தில்

பாண்டிய மன்னனுக்குக் குளியல் சுண்ணம்(நறுமணப் பொடி) இடிக்கும் அந்தப்புர

மகளிர் அவனது கொடிபற்றியும், தேர்பற்றியும், மணிமுடி பற்றியும், முத்தாரம் பற்றியும்

போற்றிப் பாடிக் கொண்டே உலக்கையால் சுண்ணம் இடித்ததாக ஒரு பாடல் இயம்புகிறது.

"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்

முடிபாடி  முத்தாரம்  பாடித்----தொடிஉலக்கை

கைம்மனையில் ஓச்சப் பெறுவேனோ? யானுமோர்

அம்மனைக் காவல் உளேன்."

இதில் கொடிதான் முதன்மையாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

Thursday 23 December 2021

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!

 நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!


கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பற்றிய  கதைகள் தமிழ்நாட்டில்

ஏராளமாக உலாவருகின்றன. எது உண்மை? எது கற்பனை?

என்று பிரித்தறிய இயலாதவண்ணம்  உண்மையும் கற்பனையும்

விரவிக் கிடக்கின்றன. இது தொடர்பான பாடல்கள் தனிப்பாடல்

திரட்டு நூல்களில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கு ஆதாரம்

ஏதுமில்லை; கல்வெட்டுச் சான்றோ இலக்கியச் சான்றோ வேறு

வரலாற்றுச் சான்றோ இல்லாமல்  மக்களிடையே உலவும் இக்

கதைகளை அவர்கள் இரசிக்கத்தான் செய்கின்றனர். மாபெரும்

புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், இடைக்

கால ஔவையார் முதலான புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில்

வாழ்ந்தவர்கள் என்று வரலாற்றுத்துறை அறிஞர்கள் கருத்துச்

சொன்னாலும் பொதுமக்கள், நால்வரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாகக்

கருதியே இக்கதைகளை இரசித்தனர். இக்கட்டுரையில் வரும் ஒரு

நிகழ்வும்  பொதுமக்களால் விரும்பி இரசிக்கப்பட்ட கதையே.


கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும் குலோத்துங்க சோழச் சக்கர

வர்த்திக்கும் ஏதோ ஒரு காரணம் பற்றி மனவருத்தம் உண்டானது.

குலோத்துங்கன் கம்பரைச் சோழநாட்டைவிட்டு வெளியேறுமாறு

பணித்ததாகக் கதை உலவுகிறது. உடனே கம்பர் கீழ்க்கண்ட பாடலைப்

பாடிவிட்டு வெளியேறியதாய்ச் சொல்லப்படுகிறது:

"மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோ,தமிழை ஓதினேன்---என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ,"

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?"

"நீ கொடுத்த சிறப்புகள் அனைத்தையும் துறந்துவிட்டு

உன் நாட்டிலிருந்து வெளியேறும் நான் திரும்பிவரும்

பொழுது பல சிறப்புகளோடு உன்போன்ற மன்னன்

அடைப்பைக் காரனாக(வெற்றிலை மடித்துக்கொடுக்கும்

ஊழியனாக) உடன்வர உன் நாட்டுக்குள் நுழைவேன்"

என்று சூளுரைத்துச் சென்றார். சோழநாட்டைவிட்டு

வெளியேறிய கம்பர் பல இடங்களுக்கும் அலைந்து

திரிந்து  ஒரு நகரத்தை அடைந்தார். அந்நகரத்தை

ஆட்சி செய்தவர் அண்மையில் இறந்த காரணத்தால்

அவரின் மனைவி வேலி என்பவள் ஆட்சியைக் கவனித்தாள்.

ஏனென்றால் பிள்ளைகள் உரிய வயதை அடையவில்லை.



வேலி தன் மனையைச் சுற்றி நாற்புறமும் பாதுகாப்புச்

சுவர் எழுப்ப ஏற்பாடு செய்தாள். எல்லாப் பக்கமும் சுவர்

எழுப்பும் பணி நன்கு நிறைவேறியது. ஒரு பக்கச்சுவர்

மட்டும் பணி முழுமை பெறாமல்  குறையாகத் தென்பட்டது.

கட்டிடப் பணியாளர்களை அழைத்து அந்தக் குறிப்பிட்ட

பக்கச்சுவர் முற்றுப் பெறாமல்  குறையாகக் காட்சியளிக்கும்

காரணம் குறித்து வினவினாள்.  "அம்மையே அச்சுவரின்

மூலையில் பத்தடி அளவுச் சுவரை எத்தனைமுறை கட்டினாலும்

நிற்காமல் இடிந்து விழுந்து விடுகிறது. என்ன காரணம் எனத்

தெரியவில்லை" என்றனர். வேலி, உடனடியாகக் கொத்து

வேலையிற் சிறந்த விற்பன்னரை அழைத்து இதுகுறித்து

விசாரித்தாள். அவரும் சுவர் முழுவதும் ஆய்வுசெய்துவிட்டு

அந்த மூலையில் ஏதேனும் பிரம்ம ராட்சசு இருக்கலாம்.

அது அந்தப் பகுதியைக் கட்டவிடாமல் தடுத்திருக்கலாம்"

என்று கருத்துத் தெரிவித்தார்.(அகால மரணமடைந்த

பிராமண அறிஞர் ஆன்மா பிரம்ம ராட்சசு எனக் கருதப்

பட்டது. அது கோவில் உட்பட ஏதாவது ஓரிடத்தை ஆக்கிர

மித்துத் தங்கிவிடும். அது யாருக்கும் கட்டுப்படாது. அதனை

வெளியேற்றுவது எளிதன்று என்பது மக்களிடையே நிலவும்

நம்பிக்கை).


வேலியும்  பல கொத்து வேலை செய்பவரை  அழைத்துவந்து

குறைச் சுவரைக் கட்டி யெழுப்பப் பலப்பல முயற்சி எடுத்தாள். எல்லா

முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. சுவரைக் கட்டி முடித்தால்

குறுணி நெல் தருவதாக அறிவிப்பும் வெளியிட்டனள்.. ஆனால்

விளைவு ஏதும் நிகழவில்லை. சுவரைக் கட்டி முடித்துக் கூலி

வாங்கும் முன் சுவர் இடிந்து விழுந்துவிடும். வேலி சோர்ந்து

போனாள்.


இந்நிலைமையில் கம்பர் அந்நகருள் நுழைந்து வேலை ஏதாவது

கிடைக்குமா என்று மக்களிடம் விசாரித்தார். மக்கள் வேலியின்

அறிவிப்பைப் பற்றி எடுத்துரைத்தார்கள். குறுணிநெல் கிடைக்கும்;

உணவுப் பிரச்சினையைச் சமாளித்து விடலாம் என்றெண்ணிய

கம்பர் வேலியின் வீட்டையடைந்தார். வேலியும் அனைத்து நிகழ்வைப்

பற்றியும்  எடுத்துரைத்தாள். கம்பர் கொத்து வேலையைத் தொடங்கி

முடித்தார். கட்டி முடிக்கப்பட்ட சுவர் ஆடுவது போலத் தோன்றியது.

கம்பர் உடனே சரசுவதி தேவியை வணங்கிப் பாடத் தொடங்கினார்:

"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட்(டு) இங்கு வந்தேன்;

சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே;

விற்கொண்ட பிறைநுதலாள் வேலி தருங்கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!"

பாடலைக் கேட்ட பிரம்மராட்சசு "பாடியவர் நம்மைவிடப் பெரிய

அறிஞர் போல் தோன்றுகின்றது என்று அஞ்சி அவ்விடத்தை விட்டு

நீங்கியது. சுவர் இடிந்து விழாமல் நிலைத்து நின்றது. வேலியும்

குறுணி நெல்லை யளந்து கம்பருக்குக் கொடுத்தாள்.

(நம்புகிறோமோ இல்லையோ, பல கோவில்களில் பிரம்ம ராட்சசு

வுக்குத் தனியிடமோ, சந்நிதியோ உள்ளது). பிரம்மராட்சசுவை

நம்பத் தயங்குபவர்கள் ஏதோ காரணத்தால் சுவர் இடிந்து விழுந்தது;

கம்பர் கைராசியால் சுவர் இடியாமல் நிலைத்துநின்றது என்று

எண்ணிக் கொள்ளலாம்.


பிற்பாடு கம்பர் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து ஓரங்கல்

(ஆந்திரர்கள் வாரங்கல் என அழைக்கின்றனர்) நாட்டை அடைந்து

காகதீய வமிசத்தைச் சேர்ந்த முதலாம்   பிரதாபருத்திரன் நட்பைப்

பெற்றதாகவும், அவ்வேந்தன் கம்பர் புலமையை மதித்து அடைப்பைக்

காரனாகக் கம்பருடன் சோழன் அரண்மனைக்குள் வந்ததாகவும் சிலர்

கூறுகின்றனர். எந்த அளவுக்கு உண்மை? என்பது தெரியவில்லை.


கம்பர் வரலாறும் புகழேந்திப் புலவர் வரலாறும்  ஒட்டக்கூத்தர் வரலாற்

றைப் போன்று ஆதாரத்துடன் அமையவில்லை. இவர்கள் பெரும்

புலவர்கள் என்பதைத்தவிர மற்ற விவரங்கள் ஆதாரங்களின்றிக்

கதைகளாகவே உள்ளன. இதற்குக் காரணம் தனிப்பாடல் திரட்டு

நூல்களில் காணப்படும்  ஏராளமான கவிதைகள். சுமாராகக் கவிதை

புனைவோரும் தங்கள் பாடல்களை இந்நூல்களில் இடம்பெறச் செய்து

விடுகின்றனர். "தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு" என்னும்

பழமொழிக்கேற்பத்  தம்  பாடல்களைப் பெரும் புலவர்கள் பாடல்களோடு

உலவ விட்டுவிடுகின்றனர். இவ்விதப் பாடல்களும் சுவைபட அமைந்திருப்பதால்

படிப்பவர்களால் எவை பெரும்புலவர் இயற்றியவை எவை அவர்கள் இயற்றாதவை

எனக் கண்டுபிடிக்க இயலாமல் போகிறது. தனிப்பாடல் திரட்டு நூல்களில்

காணப்படும் பாடல்களைப் படித்து இரசிக்கலாம் என்பதைத் தவிர அவற்றில்

சொல்லப்படும் செய்திகள் வரலாற்றுத் தொடர்பு கொண்டவை என்று  உறுதியாக

நம்ப இயலாது. ஏனென்றால் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும், பெரும்

இலக்கியமான கம்பராமாயணத்திலும் இடைச் செருகல்கள் நுழைந்துள்ளதாகப்

பேரறிஞர்கள் தெரிவிக்கும் பொழுது, தனிப்பாடல் திரட்டு நூல்களைப் பற்றி

என்ன சொல்வது?


பார்வை: விநோத ரச மஞ்சரி - தொகுத்தோர் தமிழறிஞர் வீராசாமிச் செட்டியார்.













Friday 10 December 2021

சிலைத் திருட்டைத் தெரிவித்த கிளிகள்.

 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.


தமிழ் இலக்கியத்தில் மனிதர்களைப்பற்றி மட்டும்

அல்லாமல் விலங்குகள், பறவைகள், தாவரங்கள்

போன்றவற்றைப் பற்றியும் பாடல்கள் பாடப்பட்டு

வருகின்றன. பறவைகளில் கிளிகள் சிறப்பாகப் 

போற்றப்படுகின்றன. அழகாலும், ஏறத்தாழ மனிதரைப்

போன்ற பேச்சுத்திறத்தாலும், நேர்த்தியான நடத்தை

யாலும் கிளிகள் நம் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன.


சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பேசும் காதற்

பாடல்களில் கிளிகள் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளன.

தலைவி கிளிகளைத் தூது அனுப்புவதும், தலைவன்

பிரிய நேர்ந்தால் கிளிகளிடம் புலம்புவதும் குறிப்பிடப்

பட்டுள்ளன. ஐங்குறுநூறு என்னும் இலக்கியத்தில்

குறிஞ்சித்திணைப் பாடல்களில் 'கிள்ளைப் பத்து'

என்னும் தலைப்பில் பத்துப் பாடல்களைக் கபிலர் பாடி

யுள்ளார். 'அழகர் கிள்ளை விடு தூது' என்னும் நூலைப்

பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் இருநூற்றைம்பது

ஆண்டுகட்கு முன்னர் இயற்றினார். அதில் திருமாலிருஞ்

சோலை அழகர் பெருமான் மீது ஒருதலைக் காதல் கொண்ட

பெண்ணொருத்தி கிளியொன்றை அவர்பால் தூதனுப்பியதாக

இயற்றியுள்ளார்.


மனிதர்களுக்குக் கிளிகள் பால் ஈர்ப்பு ஏற்படக் காரணம்

என்ன? கிளிகளை நன்கு பழக்கினால் கிட்டத்தட்ட மனிதரைப்

போன்றே தெளிவாகப் பேசும் திறமை கிளிகளுக்கு உள்ளது.

அதனால்தான் 'சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' என்ற

முதுமொழி பழக்கத்தில் உள்ளது.


கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்தில் 'கடை திறப்பு'

என்னும் தலைப்பில் செயங்கொண்டார் பாடிய கண்ணி(67)

பின்வருமாறு:

"நேயக் கலவி  மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப

வாயைப் புதைக்கு மடநல்லீர்! மணிப்பொற் கபாடம் திறமினோ".

பொருள்: கலிங்கப் போர் முடிந்த பிறகு சோழநாட்டுக்குத் திரும்பும்

வீரன் ஒருவன் தன் வீட்டுக் கதவைத் தட்டும் போது முன்னொரு

நாளில் தானும் தன் மனைவியும் பிறர் அறியாமல் காதல் உரை

யாடல் நிகழ்த்திய பொழுது தான் உளறியவற்றைக் கூர்ந்து கவனித்துக்

கேட்ட வீட்டுக் கிளி அப்படியே எழுத்துப் பிசகாமல் பேசியதையும்

உடனே தன் மனைவி பதறிப்போய் அதன் வாயை மூடியதையும்

நினைத்துக் கொண்டு "பெண்ணே! கதவைத் திற" என நவின்றான்.

கிளிகளை நன்கு பழக்கினால் அவை ஏறத்தாழ நம்மைப் போன்றே

பேசும் என்பதை எடுத்துக் காட்டும் மற்றொரு நிகழ்ச்சி பின்வருமாறு:


பதினாறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விசயநகர

ஆட்சி நடந்த பொழுது திருவாரூர்ச் சிவன் கோவிலில் 

நாகராச நம்பி என்பவர் சிறீகாரியம் பார்த்துவந்தார்.

ஒருநாள் பணத்தாசைகொண்டு அறுபத்து மூன்று நாயன்

மார் ஐம்பொன் சிலைகளிலே இரண்டை ஒரு கன்னாருக்கு

விற்று விட்டார். எவ்வளவோ கமுக்கமாக நடைபெற்ற போதி

லும் ஏனைய கோவில் ஊழியர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்து

விட்டது. அவர்கள் மூலமாக ஊரார்க்கும் இவ்விடயம் தெரிய வர,

எல்லாரும் கூடி ஆலோசனை செய்தனர். இந்தச் செய்தியை

நாடாளும் கிருட்டிண தேவராயருக்குத் தெரிவித்து விடத் தீர்மா

னித்தனர்.


ஆனால், இந்தத் திட்டத்தை எப்படிச் செயல் படுத்துவது? யார்

இராயரிடம் தெரிவிப்பது? என்று சிந்தித்துக் குழம்பிக்கொண்

டிருந்தனர். அவர்களுடைய நல்லகாலம், கிருட்டிண தேவராயர்

திருவாரூர்ச் சிவபெருமானை வணங்க வர இருப்பதாகத் தக

வல் வந்தது. இச் செய்தியைக் கேள்வியுற்ற ஊர்மக்கள் பெரும்

மகிழ்வுற்றனர். யார் அரசரைச் சந்தித்து இந்த விடயத்தைப்

பற்றி அவரிடம் எடுத்துரைப்பது? என விவாதித்தனர். நெடுநேர

ஆலோசனைக்குப்பின் யாரும் அரசரைச் சந்தித்து இது தொடர்

பாகப் பேசவேண்டியதில்லை என்று முடிவுசெய்தனர். மாறாக,

இரண்டு கிளிப்பிள்ளைகளைப் பழக்கி அவை வாயிலாகச் சிலைத்

திருட்டை இராயருக்குத் தெரிவித்துவிடலாம் என்று முடிவுசெய்தனர்.

அதன்படி கீழ்க்கண்ட பாடல் இயற்றப்பட்டது:

"முன்னாள் அறுபத்து மூவரிருந் தாரவரில்

இந்நாள் இரண்டுபேர் ஏகினார்--கன்னான்

நறுக்கின்றான், விற்றுவிட்ட நாகரச நம்பி

இருக்கின்றான்  கிட்டினரா  யா".

பொருள்:

இதற்கு முன்பு அறுபத்து மூன்று நாயன்மார் பஞ்சலோகச் சிலைகளாக

இருந்தனர். அச்சிலைகளில் இரண்டு நாயன்மார் சிலைகள் வெளியே

போய்விட்டன. அதாலது இரண்டு பஞ்ச லோகச் சிலைகளும் விற்கப்பட்டு

விட்டன. வாங்கிய கன்னான் சிலைகளைத் துண்டுதுண்டாக நறுக்கி உரு

மாற்றம் செய்கின்றான். சிலைகளைத் திருடி விற்ற சிறீகாரியம் பார்க்கும்

நாகராச நம்பி என்பவன் இன்னும் அதே பணியில் இருக்கின்றான். விசய

நகர வேந்தராம் கிருட்டிண தேவராயரே! (இதனை யறிந்து தக்க முறையில்

விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்த நாகராச நம்பிக்குத் தகுந்த தண்

டனை வழங்கிடுதல் வேண்டும் என்பது உட்பொருள்).


குறிப்பிட்ட நாளும் வந்தது.  திட்டமிட்டபடியே கிருட்டிணதேவராயர் தமிழகச்

சுற்றுப் பயணம் மேற்கொண்டு திருவாரூர்ச் சிவபெருமானை வணங்கக்

கோவிலுக்குள் நுழைந்து தியாகராசர் சந்நிதிக்கு வந்தார். அப்பொழுது

இரண்டு கிளிகள் பறந்துவந்து இராயரின் தோள்களில் அமர்ந்து மேலே

குறிப்பிடப்பட்ட பாடலைச் சொல்லின. நல்ல பயிற்சி கொடுத்த காரணத்

தால் ஏறத்தாழ மனிதனைப் போலவே பாடலைக் கூறின. பெரும்பகுதி

இராயருக்குப் புரிந்தது.  உடனடியாக அறுபத்து மூவர் சிலைகளை எண்ண

ஆணையிட்டார். எண்ணிக்கையில் இரண்டு குறைந்தன. வாங்கிய கன்

னானை வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். நாகராச நம்பியின்

திருட்டுத்தனம் வெளிப்பட்டது. உரிய தண்டனையை வழங்கிவிட்டுத் தன்

சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார். சிலைத் திருட்டை வெளிக்கொணர்ந்த

கிளிப்பிள்ளைகள் பாராட்டுக்கு உரியன என்பதில் ஐயமில்லை.


பார்வை: தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்:

ஆசிரியர்: பேராசிரியர்/தமிழ் ஆராய்ச்சியாளர்

ஔவை சு.துரைசாமி பிள்ளை.