Sunday 18 December 2022

என்று திரும்பி வருவீர்?

 என்று திரும்பி வருவீர்?


ஒரு தலைவனும் தலைவியும் வெகுநேரமாகத் தமக்குள்

உரையாடிக் கொண்டிருக்கின்றனர். அண்மைக் காலத்தில்தான்

இருவருக்கும் வரைவு நடந்து முடிந்தது. தலைவன் குடும்பத்தைச்

சிறப்பாக நடத்தப் பொருள் தேடச் செல்ல எண்ணித் தன் மனக்

கிடக்கையைத் தலைவியிடம் தெரிவிக்கின்றான். தலைவி பிரிவுத்

துயரை யெண்ணிப் பயணத்தைத் தடுக்க நினைக்கின்றாள். ஆனால்,

தலைவன் தன் முடிவிலிருந்து பின்வாங்க மறுக்கின்றான். அப்படி

யானால் தானும் உடன்வருவதாகத் தலைவி வற்புறுத்துகின்றாள்.

பயணம் மேற்கொள்ளவிருக்கும் வழியில் ஆறலை கள்வர்களாலும்

(வழிப்பறிக் கொள்ளையர்களாலும்) யானை, புலி, கரடி போன்ற

கொடிய விலங்குகளாலும், நச்சு உயிரினங்களாலும், ஓநாய், செந்நாய்

போன்ற பிற விலங்கினங்களாலும் உடலுக்கும் உயிருக்கும் தீங்கு

நேரிட வாய்ப்பு உள்ளதைச் சுட்டிக்காட்டிய தலைவன் வழிநெடுகிலும்

மேடு, பள்ளம், பரற் கற்கள் நிரம்பிய பாதைகளால் தொல்லை ஏற்பட

வாய்ப்பு உள்ளதையும்,  அருந்துவதற்குக் குடிநீரும் உண்பதற்கு

உணவும்  கிடைப்பதில் சிக்கல் உள்ளதையும் விரிவாக விளக்கி

ஒருவழியாகத் தலைவியைத் தன் முடிவைக் கைவிடச் செய்கின்றான்.


இவ்வளவு  வாதம், எதிர்வாதம் நிகழ்ந்து தலைவனும் தலைவியும் கருத்து

ஒருமித்துத்  தலைவன் மட்டும் பொருள் தேடச் செல்லலாம் என்ற முடிவுக்கு

வர நள்ளிரவு ஆகிவிட்டது. அதன்பின் இருவரும் பலநாட்கள் பிரிந்திருக்க

வேண்டுமே என்ற மனக் கிலேசத்தில் காதல் களியாட்டத்தில் ஈடுபட்டனர்.

உலக வாழ்வு நிலையில்லாதது;  மேனி இருக்கும் பொழுதே வாழ்க்கை

முழுவதையும் துய்த்துவிட வேண்டும் என நினைத்தவர்கள் போல் எல்லையற்ற

இன்பம் துய்த்தனர். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் குறிப்பிட்டதுபோல்

"தொலையாத இன்பமெல்லாம் துன்னினார் மண்மேல்

நிலையாமை கண்டவர் போல் நின்று". எல்லாம் முடிந்து, உறங்குவதற்கு ஒரு

சாம நேரமே மிச்சம் உள்ள  பொழுதில் உறங்கத் தலைப்படுகின்றனர்.

விடிந்ததும் தலைவன் பயணத்தைத் தொடங்கிவிடத் திட்டம் போடுகின்றனர்.


ஒருவாறு விடிகின்றது. தலைவிக்கு முன்பே தலைவன் விழித்தெழுந்து காலைக்

கடன்களை முடித்துப் பயணப்பட ஆயத்தம் ஆகின்றான். தலைவியை எழுப்புகின்றான்.

தலைவி விழித்தெழுந்து தனது கார்மேகக் கூந்தலை ஒரு கையால் ஒதுக்கிக் கொண்டே

"என்று திரும்பி வருவீர்?" என்று வருத்தம் தோய்ந்த குரலில் மெல்ல வினவுகின்றாள்

தலைவனுக்கும் அளவற்ற வருத்தம் பீறிடுகின்றது. ஒன்றும் பேசத் தோன்றவில்லை.

ஏற்கெனவே இதுகுறித்து விவாதிக்கும் பொழுது கார்காலத் தொடக்கத்தில் திரும்பி

வருவதாகச் சொல்லியிருந்தான். அது நினைவுக்கு வரவே, தலைவி மேலும் பேசாமல்

விறுவிறுவென்று குளியல் முதலான அன்றாடக் கடன்களை முடித்து நல்லுடை உடுத்தி

முருகனையெண்ணி வெண்ணீறு தருகின்றாள். தலைவனை ஆரத் தழுவிக்கொள்

கின்றாள். தனது கண்ணாலேயே "நீவிர்சென்று வருக" என்று விடை கொடுக்கின்றாள்.

தலைவன் பொருள் தேடிச் செல்லும் வழியில் இந்த நிகழ்வுகளைத் திரும்பத் திரும்ப

எண்ணிக்கொண்டே " இதனை நினைத்தல்லவோ இன்றென் நெஞ்சம் உருகுகிறது"

என்று சொல்லிக்கொள்கிறான். இந்தக் காட்சிகளைப் புலவர் அம்பிகாபதி தமது

'அம்பிகாபதிக் கோவை என்ற பெரிய பல துறைக் காரிகை'யில் கீழ்க்கண்டவாறு

விவரித்துள்ளார்:

"என்று திரும்பி வருவீர் எனத்துயில் ஏந்திழையாள்

நின்று குழலொரு கையால் ஒதுக்கிவெண் ணீறுதந்து

குன்று நிகர் கொங்கை மீதே யணைத்துக் கொடுத்தவிடை

ஒன்று நினைத்தல்ல வோஇன்றென் நெஞ்சம் உருகுவதே".


"திரைகடலோடியும் திரவியம் தேடு" என்று ஔவைப்பிராட்டி முதலான ஆன்றோர்கள்

எளிதாகச் சொல்லிவிட்டார்கள்.  ஆனால் அதனைச் செயற்படுத்துவதில் ஏற்படும்

சிக்கலும் தொல்லையும் சொல்லி மாளாதவை. தலைவன் மட்டும் பொருள் தேடச்

சென்றால், தலைவன் தலைவியை நினைந்து நினைந்து உருகுவதும், இல்லத்தில்

தலைவி தலைவனை நினைத்து மறுகுவதும் தவிர்க்க இயலாத  தொல்லைகள்.

தலைவியையும் உடன் அழைத்துக்கொண்டு பொருள் தேடச் செல்வது இயலவே இயலாது.

பொருள் தேடச் செல்லுதல் மிகவும் தொல்லையும் மனக் கிலேசமும் தரக்கூடியதே.

காரணம், பிரிவுத் துயர் ஏற்படுத்தும் மனவுளைச்சல் எளிதில் குணப்படுத்தக் கூடியது

அன்று.


இடையூறு வாராமல்  ஏகு.


காதலனும் காதலியும் திருமணம் புரிந்துகொண்டு கற்பியல்

வாழ்வைத் தொடங்கிவிட்டனர். செழிப்பாக வாழ்வதற்குக்

கைவசம் உள்ள செல்வம்(பொருள்) போதாது. எனவே,

தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்குக் கணவன் வேற்று

நாடு செல்லல் வேண்டும். திருமணம் முடிந்த ஒருசில நாட்

களிலேயே மனைவியைப் பிரிய மனமில்லாமல் கணவன்

தவிக்கின்றான். மனைவி நிலையோ சொல்ல முடியாதது.

கணவனைப் பிரிந்த ஏக்கத்திலேயே அவள் உயிர் பிரிந்தாலும்

பிரியலாம்.. அல்லது அந்தப் பிரிவுத் துன்பம் ஏற்படுத்தும்

மன அழுத்தத்தின் விளைவாக மனைவி தானே தன்னுயிரை

மாய்த்துக்கொள்ளலாம். கீழ்க்கண்ட பாடலில் குறிப்பிடப்படும்

தலைவி தன் தலைவனிடம் முன் எச்சரிக்கை விடுக்கின்றாள்:

"மிகுதியாகிய தேன் ஊறுகின்ற பூமாலையினையும், அணி

செய்யப்பட்ட கழலினையும் உடைய தலைவரே! பொருள்

தேடுவது குடும்பத்துக்குத் தேவையான செயலே; ஆயின்

இப்பொழுது(திருமணம் முடிந்த கையோடு) பொருள்வயின்

பிரிவது  நமக்கு எல்லையற்ற துன்பத்தை(குறிப்பாக எனக்கு)

நல்கும். பிரிவுத் துயரம் நேருமே என்ற அச்சத்தால் என்னுயிர்

பிரியும்; நான் இறக்க நேர்ந்தால் என் உற்றார், உறவினர் அழுது

ஓலமிடுவர். பொருளீட்டப் போவதில் உறுதியாக நீவிர் இருப்பின்

உடனடியாகச் சென்றுவிடும். சுணக்கம் ஏற்படின் நீவிர் செல்வதற்கு

இடையூறு(என் இறப்பால்) நேரிடலாம்" என்று தெரிவித்தாள். பாடலைப்

பார்ப்போம்:

"விளைபொருள்மேல் அண்ணல் விரும்பினையேல்  ஈண்டெம்

கிளையழுகை கேட்பதற்கு முன்னே---விளைதேன்

புடையூறு பூந்தார் புனைகழலாய்! போக்கிற்(கு)

இடையூறு வாராமல் ஏகு".

இவ்வளவு கடுமையான முன் எச்சரிக்கை விடுத்தபிறகு கணவன்

பொருள் தேடச் சென்றிருக்க வாய்ப்பில்லை.


இவ்வளவு கடுமையாக எச்சரித்தபிறகும் தலைவன் பொருள் தேடச்

செல்வதில் உறுதியாக இருந்ததால் தலைவி மூலம் செய்தியறிந்து

தோழி தன் பங்குக்குக் கடுமையாக வார்த்தைகளைக் கொட்டுகிறாள்:

"ஊசல் தொழிலிழக்கும்;; ஒப்பு மயிலிழக்கும்;

வாசம் சுனையிழக்கும்; வள்ளலே!---தேசு

பொழிலிழக்கும்; நாளையெம் பூங்குழலி நீங்க

எழிலிழக்கும் அந்தோ, இவண்".

வள்ளலே! நீவிர் பொருளீட்டச் சென்றால் பிரிவு காரணமாக அணிசெய்யப்பட்ட

கூந்தலையுடைய  எம் தோழியாகிய இவள் உயிரிழப்பது மட்டுமல்லாமல்,

நாளை குறுக்கும் நெடுக்கும் அசைந்தாடும் ஊஞ்சல்களும்  அவ்வாட்டத் தொழிலை

இழக்கும், மயில் உவமையை இழக்கும், சுனைகள் நறுமணத்தை இழக்கும்,

சோலைகள் ஒளியை இழக்கும், இவ்விடமும் அழகை இழக்கும். இத்தனை

இழப்புகளும் நிகழும்  எனவே, தலைவனே! உனக்குக் தோன்றியதைச் செய்".

ஆழ்ந்து சிந்தித்துப் பொருள் தேடச் செல்வதைத் தவிர்ப்பான் என்று தோழியும்

தலைவியும் நம்புகின்றனர். அப்படித்தான் நிகழ்ந்திருக்கும். ஏனெனில் இவ்வளவு

கடுமையாகத் தலைவியும் தோழியும் எச்சரித்தபின்  தலைவன் பொருள் தேடச்

செல்லத் துணியான்.


பார்வை:

தண்டியலங்காரம் நூல்(மேற்கோள் பாடல்கள்).







Saturday 3 December 2022

விடுகதை புகலும் பக்திநெறி..

 புதிர் புகலும் அறநெறி.


விவேக சிந்தாமணி என்றொரு நூல் உள்ளது. நல்ல நீதி

நெறிமுறைகள், வாழ்வியல் நெறிகள், காதல், ஆடவர்

இயல்பு, ஆடவர் கடமைகள், மகளிர் இயல்பு, மகளிர் கடமைகள்,

போன்ற பல செய்திகளை உள்ளடக்கிய நூலாகும். படைக்கப்

பட்ட காலம் இதுவெனக் குறிப்பிட இயலவில்லை. 15 அல்லது

16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் படைக்கப்பட்டிருக்கலாம்.

ஏனெனில் நிறைய வடமொழிக் கலப்பு உள்ளது. இயற்றிய

ஆசிரியரையும் இன்னாரெனக் குறிப்பிட்டுச் சொல்ல இயலவில்லை.

சில பாடல்கள் மிக அருமையாக உள்ளன. சில பாடல்கள் சுமாராக

உள்ளன. பாடல் எண்ணிக்கையிலும் வேறுபாடுகள் நிலவுகின்றன.

சில பதிப்புகளில் 135 பாடல்களும் வேறு சிலவற்றில் அந்த எண்ணிக்

கையை விடக் கூடக் குறையவும் உள்ளன. பெரும்பகுதிப்  பாடல்கள்

பஞ்ச தந்திரக் கதைகளைப் போல் உள்ளன. சரி, விவேக சிந்தாமணிப்

பாடல் கூறும் ஒரு புதிர் கலந்த அறநெறியைப் பற்றிப் பார்ப்போம்.


கீழ்வரும் பாடல் மதுரைச் சொக்கநாதப் பெருமானுக்குத்  தொண்டு

செய்ய அறிவுறுத்துகிறது. புதிர்(விடுகதை) கலந்த பாடல் இது:

"பண்புளருக்(கு) ஓர் பறவை;  பாவத்திற்(கு)  ஓர் இலக்கம்;

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி---திண்புவியை

ஆள்வார் மதுரை  அழகியசொக்  கர்க்(கு)அரவம்

நீள்வா  கனம்நன்  னிலம்".

பண்புளருக்கு ஓர்பறவை---ஈ: ஈதலைக் குறிப்பிடுகிறது.

பாவத்திற்கு ஓர் இலக்கம்--5: அஞ்சுதலைக் குறிக்கிறது.

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி: நாற்காலி நான்கு

கால்களையுடைய விலங்கைக் குறிக்கிறது.

திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்(கு) அரவம்:பாம்பு--பாம்புக்குப்

பணியெனவும் பெயர் உள்ளது.

நீள்வாகனம்: இடபம்(ரிஷபம்)--விடை எனத் தூய தமிழில் சொல்வர்.(மாடு)

நன்னிலம்: நிலம்--செய்(நன்செய்/புன்செய்)

இனி பாடலில் கூறப்படும் செய்தியைப் பார்ப்போம்:

பண்புளருக்கு ஓர் பறவை= பண்புளவர்க்குக் கொடு.

பாவத்திற்கு ஓரிலக்கம்     = பாவம் புரிய அஞ்சு.

நண்பிலரைக் கண்டக்கால் நாற்காலி=நல்லவர் அல்லாதாரை விட்டு விலங்கு=நீங்கு.

திண்புவியை ஆள்வார் மதுரை அழகிய சொக்கர்க்கு

அரவம்     நீள்வாகனம்     நன்னிலம்= பணி    விடை     செய்.

விளக்கவுரை:

பண்புள்ளவர்க்குக்  கொடு;  பாவம் புரிய அஞ்சு; நல்லவர் அல்லாதாரை விட்டு

நீங்கு;  உலகத்தை ஆளும்  மதுரை அழகிய சொக்கர்க்குப் பணிவிடை செய்.


பார்வை:

விவேக சிந்தாமணி, வர்த்தமானன் பதிப்பகம்

உரையெழுதியவர்  தேவார உரைமாமணி திரு வ.த.இராமசுப்பிரமணியம்,  M.A.