Wednesday 26 December 2018

அகமா? புறமா? எது சிறந்தது?

அகமா?  புறமா?  எது  சிறந்தது?

அகமும்  புறமும்  தமிழ்ப்பண்பை
   அழகாய்  இயம்பும்  கூறுகளாம்;
நகமும்  தசையும்  போல்,ஆண்,பெண்
   நடத்தும் வாழ்க்கை  அகமாகும்;
வெகுண்டு  பகைவர்  தமையெதிர்த்து
   வீர மாகப்  பொருதல்,புறம்;
தகைமை  சான்ற  இப்பகுப்பே
   தமிழர்  புகழும்  இலக்கியமாம்.

வையம்  முழுதும்  வீரத்தை
  வணங்கிப்  புகழ்ந்த  காலமது;
நையும்  மேனி  துவண்டாலும்
  நமனே  எதிர்த்துப்  பொருதாலும்
செய்யும்  போரில்  பின்வாங்கார்;
  செத்தால்  நடுகல்  நிறுவி,மக்கள்
தெய்வம்  போலத்  தொழுதிடுவர்;
  சிறிதும்  தயக்கம்  காட்டாரே.

"போரில்  வீர  மரணமுற்றார்,
   புகுவர்  துறக்கம்,  நிச்சயமாய்;"
பாரில்  மக்கள்  இவ்வாறு
    பறைதல்  வழக்கம்;  ஆதலினால்
நேரில்  யானை  பிளிறிடினும்
    நெஞ்சை  நிமிர்த்தி  எதிர்த்திட்டார்;
ஊரில்  மக்கள்  புகழ்வரென
  ஒப்பில்  வீரம்  காட்டினரே.

சண்டை  தனிலே, போர்செய்யும்
  சமயம்  மார்பில்  புண்,காயம்
உண்டா  கும்;போர்க்  காயத்தை
  உயர்வாய்  மதிப்பர், பொதுமக்கள்;
அண்டும்  பகைவர்  தமைக்கண்டே
  அஞ்சி  யோடிப்  புறங்கொடுக்கின்
மண்டும்  வார்த்தை  யாற்சுடுவர்;
  மானம்  காற்றில்  பறந்திடுமே.

வீரம்  என்னும்  போதையினால்
  விளைந்த  சேதம்  ஏராளம்;
தாரம்  பல்லோர்  கணவர்களைச்
  சமரில்  இழந்து  விதவையெனும்
பேரைப்  பெற்றுச் சீரழிந்தார்;
  பிள்ளை, தமையன், பெற்றவனைப்
போரில்  இழந்து  பெண்டிர்பலர்
  புலம்பி  யழுது  புரண்டனரே.

உலகம் முழுதும்  இதேநிலைதான்;
  உரம்சேர்  வீரக்  களிவெறியால்
பலதே  சத்தின்  மாந்தர்களும்
 பகைத்துப்  போரில்  அழிந்தனரே;
அலகில்  அழிவைத்  தடுத்திடத்தான்
  அறிஞர்  காதல்  உணர்வுகளைத்
தலைமைப்  பண்பாய்  முன்மொழிந்தார்;
  சற்றே  வீரம்  சரிந்ததுவே.

இனிய  தமிழில்  புறப்பொருளை
  இரண்டே  நூல்கள்  எடுத்தியம்பும்;
கனிபோற்  புறநா னூறு, மற்றும்
  கவரும்  பதிற்றுப்  பத்துமவை.
நனிஇன்  பத்தை  நல்குகின்ற
  நற்றி  ணைபோல்  பலநூல்கள்
தனித்த  சுவைசேர்  அகப்பொருளைச்
  சாற்றும்  வகையில்  தோன்றினவே.

காதல்  வீரம்  இவையிரண்டில்
  காதல்  சற்றே  உயர்வுடைத்தாம்;
மோதல் , சண்டை, தவிர்த்திடலாம்;
 மூளும்  போரை  விலக்கிடலாம்;
தீதில்  அன்பைப்  பரப்பிடுவீர்;
  தேவை  யிலாத  போர்,தவிர்ப்பீர்;
ஆத  லாலே  காதலினால்
  அனைவர்  மனத்தைக்  கவர்வீரே.

தேவை  யின்றி  வீரத்தைச்
   சிறிதும்  காட்ட  எண்ணாதீர்;
சாவை  நல்கும்  போரினைத்தான்
   தவிர்க்க  வேண்டின்  மாந்தரெலாம்
பூவை  யொடுவாழ்  இல்லறத்தைப்
  பொலிவாய்  நடத்தி  உய்ந்திடுதல்
தீர்வை  யளிக்கும்; அகவாழ்வைச்
  சிறக்க  வாழ்வீர்  புவியோரே!

நமது  நாட்டைக்  காப்பதற்கு
  நயஞ்சேர்  வீரம்  அவசியம்தான்;
அமைதி  குலைந்து  போர்மூண்டால்
  அழிவும்  இழப்பும்  ஏராளம்;
சமுகம்  மக்கள் தொகையிழப்பால்
  சந்திக்  கின்ற  சிக்கல்பல;
கமழும்  காதல்  அகவாழ்வால்
  காணும்  நன்மை  பலப்பலவே.

மனைவி  யொடுவாழ்  அகவாழ்வால்
 மக்கள்  தொகையைப்  பெருக்கிடலாம்;
நினைக்கும்  அமைதி  நிலவிடுமே;
  நேர்மை  யில்லாப்  பிறநாட்டார்,
தினையின்  அளவும்  நம்நிலத்தைத்
  திருட்டுத்  தனமாய்  அபகரிக்க
வினைகள்  செய்தால், மும்மடங்கு
  வீரம்  காட்டி  முறியடிப்போம்.

அருஞ்சொற்  பொருள்:
பொருதல்--போர்புரிதல்; நமன்---யமன்;
துறக்கம்--சொர்க்கம்; அண்டும்--நெருங்கும்;
புறங்கொடுக்கின்--புறமுதுகு  காட்டினால்
சமர்--போர்; பூவை--பெண்டிர்
தகைமை--மேன்மை;








   

Wednesday 19 December 2018

நற்றிணை நானூறு.

      நற்றிணை  நானூறு

சங்க  இலக்கியங்கள் இரண்டு பெரும் பிரிவாகப்
பிரிக்கப்படும்.  அவையாவன: பதினெண் மேற்
கணக்கு மற்றும் பதினெண் கீழ்க்கணக்கு என்பன
வாகும்.  பதினெண் மேற்கணக்கில் எட்டுத்தொகை
மற்றும் பத்துப்பாட்டு ஆகிய பகுப்பின்கீழ் முறையே
எட்டுத் தொகை நூல்களும்,  பத்துப்  பெரும் தனி
நூல்களும் அடங்கும்.  பதினெண் கீழ்க்கணக்கு நூல்
கள் அடியளவு குறைந்த அறநூல்கள் ஆகும். மேற்
கணக்கு நூல்கள் அடியளவு மிக்கவை.  கீழ்க்கணக்கு
நூல்கள் இரண்டு அடி முதல் நான்கடி உள்ளிட்ட பாடல்
களைக் கொண்டவை. மேற்கணக்கு நூல்கள்நான்கு
அடி முதல் எத்தனை  அடி முடிய வேண்டுமென்றாலும்
எழுத இடம் தருபவை.  பதினெண்மேற்கணக்கு நூல்
களில் நாம் பார்க்கவிருக்கும் நூல் எட்டுத்தொகைப்
பிரிவில்  அடங்கிய நற்றிணை நானூறு என்னும்
நூலாகும்.  எட்டுத்தொகை நூல்கள் எவை எவை?
"நற்றிணை  நல்ல  குறுந்தொகை  ஐங்குறுநூ(று)
ஒத்த  பதிற்றுப்பத்(து)  ஓங்கு  பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ(டு)  அகம்,புறம்என்(று)
இத்திறத்த  எட்டுத்  தொகை."
அதாவது, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு,
பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு,
புறநானூறு என்னும் எட்டு நூல்களாகும்.  இவை ஒவ்
வொன்றும் தனித்தனிப் புலவரால் பாடப்பட்டதன்று.
பல புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் பாடிய
பாடல்களை அடி வரையறைப்படி பிரித்து ஒவ்வொரு
நூலையும் தொகுத்து உருவாக்கினார்கள். அதன்படி,
நற்றிணை என்பது ஒன்பது அடி முதலாகப் பன்னிரண்டு
அடி  முடிய உள்ள நானூறு பாடல்களைக் கொண்டதாக
உருவாக்கினார்கள். அகப்பொருள் குறித்த பாடல்களைக்
கொண்ட நூல். நற்றிணை நானூறு என்பதுதான் இந்
நூலின் பெயர் ஆகும்.  காலப்போக்கில் நற்றிணை
என்று சுருக்கமாக அழைக்கப்பட்டது. நூல் முழுவதும்
அகவற் பாக்களால் பாடப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்த
புலவர் யாரெனத் தெரியவில்லை.  ஆனால் தொகுப்பித்
தோர் பன்னாடு தந்த பாண்டியன் மாறன்வழுதி ஆவார்.

இனி, ஒவ்வொரு திணைக்கும் ஒரு பாடல் வீதம் ஐந்து
திணைகளுக்கும் ஐந்து பாடல்களைப் பார்ப்போம்:
குறிஞ்சித் திணை: (புலவர்:கயமனார்)எண்:324
"அந்தோ! தானே  அளியள்  தாயே;
நொந்தழி  அவலமொடு  என்னாகு  வள்கொல்,
பொன்போல் மேனித் தன்மகள் நயந்தோள்;
கோடுமுற்று  யானை  காடுடன்  நிறைதர,
நெய்பட் டன்ன நோன்காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை  வரைப்பின்,
ஆடுபந்து உருட்டுநள்  போல  ஓடி,
அம்சில்  ஓதி இவளுறும்
பஞ்சி  மெல்லடி  நடைபயிற்  றும்மே".
பொருள்:
காதலியின் நடை எழிலைக் கண்டு வியந்த காதலன்
தன் தோழனிடம் கூறியது:
"அந்தோ பரிதாபம்.  இவள் தாய் இரக்கப்பட வேண்டியவள்.
பொன் போன்ற மேனியை யுடைய தன் மகள் நலத்தை
விரும்பும் அத்தாயானவள் எவ்வளவு அவலம் அடைகின்
றாள்.  இவள் தந்தை  யானையின்  முற்றிய தந்தம் போல்
நெய் தடவப்பட்ட  வேலைக் கொண்டு  காக்கும் செல்வம்
உடையவன். அவன் வீடு அகன்று பரந்துள்ளது. அவ்வீட்டி
னுள் சில கூந்தல்முடி பறக்க ஓடும் பந்தைக் காலால்
உருட்டும் மகளுக்குக் கால் நோகுமே யென்று அன்னாள்
கூடவே ஓடும் தாய் இரக்கப்படவேண்டியவள் தான். மகளின்
பஞ்சு போன்ற பாதம் நோகுமே என்று தாய் வருந்த, மகளோ
தாய்க்கே நடை பயிற்றுவது போல முன்னால் ஓடுகின்றாள்.
உண்மையிலேயே தாய் பரிதாபத்துக்குரியவளதான்.
அந்நாட்களில் பெண்டிர் கால்பந்து விளையாடினர் என்னும்
செய்தி கவனத்துக்கு உரியது.

முல்லைத் திணை:(புலவர்:பெயர் தெரியவில்லை)எண்:169
"முன்னியது  முடித்தனம்  ஆயின், நன்னுதல்
வருவம்  என்னும்  பருவரல். தீர,
படும்கொல், வாழி, நெடும்சுவர்ப் பல்லி
பரல்தலை போகிய   சிரல்தலைக்  கள்ளி
மீமிசைக் கலித்த வீநறு  முல்லை
ஆடுதலைத்  துருவின்  தோடுதலைப்  பெயர்க்கும்
வன்கை  இடையன் எல்லிப்  பரீஇ,
வெண்போழ்  தைஇய  அலங்கல்அம்  தொடலை
மறுகுடன்  கமழும் மாலை,
சிறுகுடிப்  பாக்கத்தெம்  பெருநக  ரானே!"
பொருள்:
வினைமுற்றி  மறுத்தரா நின்ற தலைவன் தன்
நெஞ்சிற்குக்  கூறியது. ஒரு செயல் கருதி யாம்
பிரிந்து சென்ற பொழுது' என்று திரும்பி வருவீர்?'
என்று வருத்தத்துடன் வினவிய தலைவிக்கு
'யாம் எந்தச் செயலுக்காகச் செல்கின்றோமோ,
அச்செயல் முடிந்தவுடனே அன்றே திரும்பிடுவோம்
என உரைத்த பொழுது வருத்தமுற்றாள்.அந்தத் துயரைப்
போக்கும் விதமாக யாம்  திரும்பிக்கொண்டிருக்கின்றோம்.
எமது வருகையை எமது பெரிய மாளிகைச் சுவரில்
ஒட்டிக்கொண்டிருக்கும் பல்லி அறிகுறியாக அடித்துத்
தெரிவிக்குமா? எனத் தலைவன் தன் நெஞ்சுக்குச்
சொல்லுகின்றான்.. பல்லி எழுப்பும் ஒலிக்குப் பலன்
பார்க்கும் வழக்கம் முன்னரே நிலவியது போலும்.
வினை என்பது பொருள் ஈட்டுதலைக் குறித்தது.

நெய்தல் திணை:(புலவர்:பெயர் தெரியவில்லை)எண்:172
"விளையாடு  ஆயமொடு வெண்மணல்  அழுத்தி
மறந்தனம் துறந்த காழ்முளை அகைய,
'நெய்பெய் தீம்பால் பெய்தினிது வளர்த்தது;
நும்மினும் சிறந்தது; நுவ்வை ஆகுமென்று'
அன்னை கூறினள், புன்னையது  நலனே,
அம்ம| நாணுதும், நும்மொடு  நகையே;
விருந்தின்  பாணர்  விளரிசை  கடுப்ப,
வலம்புரி வான்கோடு நரலும் இலங்குநீர்த்
துறை கெழு  கொண்க! நீநல்கின்
இறைபடு நீழல் பிறவுமார் உளவே"
பொருள்:
சிறுவயதில் தோழியருடன் கிச்சுக்கிச்சுத்
தம்பலம் விளையாடும் போது புன்னங் கொட்
டையை மறைத்து விளையாடினோம். அதனை
எடுக்க மறந்துவிட்டோம். அப்புன்னை முளைத்து
மரமாக வளர்ந்து விட்டது. அப்புன்னை உனக்குத்
தங்கை என்று என் அன்னை கூறினள். அதனால்
நெய்பெய்த பாலை அதற்கு ஊற்றிவளர்த்து
வந்தேன். இப்போது பெரிய மரமாக வளர்ந்துளது.
இது என் நுவ்வை யானதால் இதனடியில் நின்று
நும்மோடு உரையாட எனக்குக் கூச்சமாக உள்ளது.
இப் புன்னையின்  உயர்ந்த நிழலில் ஏனைய உயிர்
இனங்களும் தங்கிப் பார்த்துக்கொண்டிருக்கும்
பொழுது நீவிர் எனக்கு உம்மைக் கொடுத்தால்
அச்செய்கை எனக்குக் கூச்சத்தை உண்டாக்கும்.
தலைவி தலைவனிடம் இவ்வாறு கூறியது தமிழ்
இனத்தார் அனைத்து உயிர்களையும் நேசித்து
வாழ்ந்தமையைப் புலப்படுத்தும். மேலும் ஆண்--
பெண் இடையே நிகழ்பவற்றை  மற்றவர் முன்
வெளிப்படுத்தக் கூசினர் என்றும் அறிகிறோம்.

மருதத் திணை:(புலவர்:பரணர்)எண்:300
"சுடர்த்தொடிக் கோமகள் சினந்தென, அதனெதிர்
மடத்தகை ஆயம் கைதொழு  தாஅங்கு,
உறுகால் ஒற்ற ஒல்கி, ஆம்பல்
தாமரைக்கு  இறைஞ்சும்  தண்துறை  ஊரன்
சிறுவளை  விலையெனப் பெருந்தேர் பண்ணி,எம்
முன்கடை  நிறீஇச்  சென்றிசி  னோனே!
நீயும்  தேரொடு வந்து பேர்தல் செல்லாது
நெய்வார்ந்  தன்ன துய்யடங்கு  நரம்பின்
இரும்பாண் ஒக்கல் தலைவன்! பெரும்புண்
ஏஎர் தழும்பன் ஊணூர் ஆங்கண்,
பிச்சைசூழ் பெருங்களிறு போல,எம்
அட்டில் ஓலை தொட்டனை நின்மே!"
தோழி தலைவியைப் பற்றித் தலைவனுக்குச்
சொல்லியது. "என் தலைவியை மணக்க விரும்
பியவன்  அவள் வளையல் செய்து அணிந்து
கொள்ளட்டும் என்று தனது பெரிய தேரை
ஓட்டிவந்து  எமது வீட்டு வாயில் முன் நிறுத்தி
விட்டுச் சென்றனன். உனக்கும் அவளை மணம்
செய்து கொள்ள ஆவல் இருந்தால் தேரோடு
வருக; திரும்பிச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடு.
பாணர்களின் தலைவன் அரசன் தழும்பன். அவன்
நகரம் ஊணூர். அந்த ஊரில் யானைகளைப்
பிச்சை யெடுக்கப் பழக்குவர் போலும். அது போலப்
பழக்கப்பட்ட ஆண்யானை போலத் தலைவியின்
இல்லத்துக்கு வந்து தலைவி வீட்டு அட்டிலில்
(சமையல் அறை) கிடைக்கும் கஞ்சியை வாங்கிக்
குடித்துக் கொண்டு தலைவியின் பெற்றோர்
அவளை மணம் முடித்துத் தரும்வரை காத்திருப்
பாய்."  தோழியின் இக்கூற்று வாயிலாக, அந்நாளில்
இக்காலம்போலப்  பரிசம் போட்டுப் பெண்களுக்குப்
 பொருள் கொடுக்கும் வழக்கமும், யானை
யைக் கடைவீதிக்கும் இல்லங்களுக்கும் இட்டுச்
சென்று அன்பளிப்புப் பெறும் வழக்கமும் நிலவின
என்று அறிகின்றோம்.

பாலைத் திணை:(புலவர்:போதனார்) எண்:110
"பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத்  தொருகை  யேந்தி
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
'உண்'என்று  ஒக்குபு  பிழைப்ப, தெண்ணீர்
முத்தரிப்  பொற்சிலம்பு  ஒலிப்பத் தத்துற்று,
அரிநரைக்  கூந்தற்  செம்முது  செவிலியர்
பரிமெலிந்(து) ஒழிய, பந்தர் ஓடி,
ஏவல் மறுக்கும் சிறுவிளை  யாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்(டு) உணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவறன் உற்றென,
கொடுத்த தந்தை கொழுஞ்சோ(று) உள்ளாள்,
ஒழுகுநீர் நுணங்கறல் போல,
பொழுதுமறுத் துண்ணும் சிறுமது கையளே!"
பொருள்:
தேன்பெய்த தித்திக்கும் பாலை ஒளிர்கின்ற
தங்கக் கலத்தில் ஏந்திக்கொண்டு நரைமுடி
யுடைய செம்மைமிகு  வயதில் மூத்த செவிலித்
தாயர் 'உண்க' என்று அதட்டுகின்றனர். என்
மகளோ உண்ண மறுக்கின்றாள். அவர்கள்
தம் கையிலிருக்கும் சிறு கோலால் அடிப்பது
போல ஓங்குகின்றனர். என் மகள் தன் கால்
களில் பூட்டியுள்ள முத்துப்பரலைக் கொண்ட
சிலம்பு ஒலியெழுப்ப  வீட்டிலுள்ள  பந்தல்
முழுவதும் சுற்றிவந்து  செவிலித் தாயர் ஏவலை
மீறி நடக்கும் சிறு குறும்புகள் செய்யும் விளை
யாட்டுப் பிள்ளை யாகக் காட்டிக்கொள்கின்றாள்.
இவ்வளவு பொறுப்பற்ற, செல்வச் செழிப்பில்
மிதந்த குறும்புக்காரி திருமணத்துக்குப் பிறகு
தன் கணவன் குடும்பத்துக்குப் பெருமையைச்
சேர்க்கும் விதமாக நடந்து கொள்ள எங்கு கற்றுக்
கொண்டாள்.? அவள் கணவன் குடும்பம் சற்றே
வறுமையில் வாழும் குடும்பம்.  என்மகள் தன்
தந்தை அனுப்பி வைக்கும் உணவை உண்ண
மறுக்கிறாள். கணவன் வீட்டு நிலைமைக்கு ஏற்ப
ஒருவேளை பட்டினி கிடந்து மறுவேளை உண்ணு
கின்றாள். இவ்வளவு பாங்கையும் ஒழுகலாற்றையும்
எங்கு கற்றுக் கொண்டாள்?  என்மகளின் குடும்ப
ஒழுக்கம் வலிமையாயுள்ளது என்று கூறித் தாய்
வியக்கின்றாள்.

நற்றிணை நூலில் உள்ள நானூறு பாடல்களுமே
இலக்கியச்சுவை கொண்டவை.  மேலும் சங்க
காலத்தில்  நிலவிய  பழக்க வழக்கங்களை எடுத்துச்
சொல்வன. நற்றிணை நானூற்றைப் படித்து  மகிழ்
வோமே!










Wednesday 12 December 2018

பெண்ணின் பெருமை

பல்வேறு  நிலைகளில் பெண்ணின்  பெருமை

காதலியாக:
இன்னமுதே! ஏந்திழையே!  என்றனுயிர்க்  காதல்
அன்னமுனைக் காணுகின்ற  ஆசையினால் வந்தேன்;
கன்னனிகர் பேச்சுடையாய்! காதலியே! பித்தன்
என்றனையுன் மூங்கைமொழி இன்னலுறச் செய்யும்.

காவிவிழிக் காரிகையே!  கண்ணசைவு காட்டாய்;
ஆவியினைப் போக்கினை,நீ; அஞ்சுகமே! பேசாய்;
ஓவியமே! பேரழகே! உள்ளமகிழ்  வெய்தத்
தேவதையே! வாய்திறந்து  சிற்சிலசொல் செப்பாய்.

பாலைநிலம், பூம்பொதும்பு  பார்க்குமிடந் தோறுங்
கோலமுகந்  தோன்றியதால் கூடிடுமே, யின்னல்;
மாலையினில் நேரில்வந்து வாஞ்சையுடன் சொல்வாய்;
சோலைதனில் பாடிடுவோம், துள்ளிவிளை  யாடி.

மனைவியாக:

தாய்க்குப்பின் தாரமெனச் சான்றோர்கள்
   மொழிந்திட்டார்; தக்க உண்மை;
நோய்நொடியில் நான்வீழ்ந்தால் அருகிருந்து
  துணைசெய்வாள்;  நொந்த போது
தாய்மடியில்  சாய்வதுபோல் அவள்மடியில்
  சாய்ந்திடுவேன்;  தளர்ச்சி  நீங்கும்;
தூய்மைமிகும்  அன்பாலே பிணைத்திடுவாள்;
   மீறமனம்  துணியா  தம்மா!

சிக்கல்வரும் போதெல்லாம் சிந்தித்துச்
   சீர்தூக்கிச்  சிறப்பு  மிக்க
தக்கதொரு  வழிசொல்வாள்; மதியமைச்சர்
  போல்நடப்பாள்;  தாயைப் போல
அக்கறையாய்ச்  சமைத்திடுவாள்; உடற்கின்னல்
  செய்யாத  அன்னம்  தோதாய்
எக்கணமும் நல்கிடுவாள்; பிள்ளைகளைப்
  பேணிடுவாள்;  எனையும்  தானே!

அன்னையையும்  மனைவியையும் ஒப்பிட்டுப்
   பார்க்கையிலே  அன்னார் சற்றும்
தன்னலத்தைப்  பேணாத  சால்புடையர்;
  அன்புடையர்;  தகைமை  சான்ற
தொன்மைமிகு  குடிப்பெருமை, குடும்பத்தின்
  மாண்புகளைக்  கொண்டு  செல்வர்;
முன்னவர்க்குப்  பின்வந்த  மற்றொருதாய்
  எனவேநான்  மொழிவேன்  மாதோ!

முதுமையில்  பாட்டியாக:

பாட்டியின்  பெருமை  தன்னைப்
   பகர்ந்திடல்  எளிய  தாமோ?
சேட்டைசெய்  பேரன்  பேத்தி
  சிந்தனை  செழிக்கும்  வண்ணம்
நாட்டினில்  வாழ்ந்த  வீரர்,
 நல்லவர்  கதையைச் சொல்லி
ஊட்டுவர்  உணவை,  மேலாம்
 உயர்ந்தநல்  நெறியும்  சேர்த்தே.

அன்னையோ,  தந்தை  யாரோ
  ஆத்திரம்  அடைந்து  பேரன்
தன்னையே திட்டும்  போதும்
  சற்றுக்கை  ஓங்கும்  போதும்
இன்னலை  நீக்கும்  பாட்டி
  இருப்பிடம் தேடி ஓட,
அன்னவன் அச்சம் போக்க
  ஆறுதல்  சொல்லு  வாரே!

கரும்பினைப்  போலும்  பேச்சால்
  கவர்ந்தநல்  காதல்  பெண்ணாய்,
உருகிடும்  அன்பால்  கொண்கன்
 உளம்கவர்  மனைவி  யாக,
பெருகிடும்  நேசம்  காட்டும்
  பேரன்புப்  பாட்டி  யாக
அரும்பெரும்  தொண்டு  செய்யும்
  அன்னையர்  குலமே  வாழ்க!

அருஞ்சொற் பொருள்:
மூங்கை---ஊமை; மூங்கைமொழி---மௌனமொழி;
காவி---குவளைமலர்; பொதும்பு---சோலை;
பிணைத்தல்---கட்டுதல்; கொண்கன்---கணவன்.
கன்னனிகர்--கன்னல்(கரும்பு)நிகர்




Tuesday 4 December 2018

நற்றமிழ் பேசாத நாவென்ன நாவே!

நற்றமிழ்  பேசாத  நாவென்ன  நாவே!

கொற்றவராம்  பாண்டியரும்  சோழர்களும்  சேரர்களும்
கற்றவர்தொல்  காப்பியரும்  கம்பரும்  வள்ளுவரும்
மற்றைப்  புலவர்களும்  வாழ்த்தி  வளர்த்தமொழி;
நற்றமிழ்  பேசாத  நாவென்ன  நாவே,
நயமாய்த்  தமிழ்பேசா  நாவென்ன  நாவே!

பன்னெடுங்  காலம்  பயன்பாட்டில்  உள்ளவற்றில்
தன்னெதிர்  இல்லாத்  தமிழ்நற்  சிறப்புடைத்து;
முன்னைப்  பழமையும்  பின்னைப்  புதுமையும்சேர்
கன்னித்  தமிழ்கல்லாக்  கண்ணென்ன  கண்ணே,
கவின்தமிழ்  கல்லாத  கண்ணென்ன  கண்ணே!

மாந்தர்கள்  பேசும்  வளஞ்சேர்  மொழிகளிலே
ஏந்துபுகழ்ச்  செம்மொழிகள்  ஏழினுள்  ஒன்றான
ஆய்ந்தறிஞர்  போற்றும்  அரிய  மொழியான
தீந்தமிழ்  கேளாச்  செவியென்  செவியே,
        செழுந்தமிழ்  கேளாச்  செவியென்  செவியே!
(செவியென்ன  என்னும் வார்த்தையில் 'ன' மறைந்தது
கடைக்குறை விகாரம்)

வெல்லும்  மீனக்  கொடிதாங்கி
        விரிந்து  பரந்த  குமரியெனும்
        மேன்மைக்  கண்டம்  தனையாண்ட
        வீரம்  மிக்க  பாண்டியர்கள்
அல்லும்  பகலும்  தமிழ்ப்பணிக்காய்
         அயரா(து)  உழைத்துத்  தமிழ்ச்சங்கம்
          அமைக்கப்,  புலவர்  அகத்தியரும்
           ஆன்றோர்  தொல்காப்  பியனாரும்
சொல்லும்  பொருளும்  வளம்பெறவே
           துருவி  ஆய்ந்து  பாடினரே;
           தொடர்ந்து  மற்றைப்  புலவர்களும்
           தூய   நெறிகள்  வகுத்தனரே;
கொல்லும்  கடலால்  தென்மதுரை
           கபாட  புரங்கள்  மூழ்கியதால்
           குமரி  யென்னும்  பெருங்கண்டம்
            கொள்ளை  போன(து) ஐயகோ!


குமரிக்  கண்டம்  மறைந்தாலும்
        .  குலையோம்,  தளரோம்;  நெஞ்சுறுதி
            கொண்டு  நம்தாய்  மொழியினையே
            கொலுவீற்  றிருக்கச்  செய்திடுவோம்;
இமயம்  போன்ற  பெருமுயற்சி
            இயற்றி  எல்லாத்  துறைகளிலும்
             எழிலார்  தமிழிற்  பலநூல்கள்
             எழுதிக்  குவித்தல்  அவசியமே;
நுமது  மொழியிற்  பேசிடுவீர்;
            நுமது  மொழியில்  எழுதிடுவீர்;
             நுமது  மொழியிற்  கற்றிடுவீர்;
             நுமது  மொழியிற்  கற்பிப்பீர்;
சமமாய்  ஏனை  மொழியோடு
            தமிழும்  போட்டி  போடும்வகை
            சகல  அறிவுத்  தளங்களிலும்
            தயக்க  மின்றி  வளர்ப்போமே!


வையத்(து)  இலங்கும்  மொழிகளிலே
           வளமும்  பொருளும்  சேர்ந்தமொழி;
           மக்கள்  நாவில்  நடமாடும்
       .   மனத்தை  மயக்கும்  இனியமொழி;
ஐயம்,  திரிபுக்(கு)  இடமின்றி
        .  ஆழ்ந்த  அர்த்தம்  கொண்டமொழி;
            ஆட்டிப்  படைக்கும்  இலக்கணநூல்
             அழகாய்  அமையப்  பெற்றமொழி;
தெய்வம்  தொழுதற்(கு)  ஏற்றமொழி;
             செவிகட்  கினிய  இசையின்மொழி;
              செழிப்பாய்  வேர்ச்சொல்  செறிந்தமொழி;
              சிறந்த  மேடைப்  பேச்சுமொழி;
உய்யும்  கலைகள்  அனைத்தையுமே
             உருவாக்  கிடும்நற்  செம்மொழியாம்;
             உலகம்  போற்றும் அரியமொழி;
              ஒளிரும்  தமிழே  வாழியவே!

   

தமிழ்த்தாய் தன்னிலை கூறல்.

அன்றொரு நாளென் வீட்டில்
   அயர்வுடன் உறங்கும் போது
    கன்றிய முகமும் முற்றும்
  கலங்கிய கண்ணும் கொண்ட
  கன்னியென் கனவில் வந்து
 கவலையாய்நின்றாள்;"அம்மா
என்றன்முன் தோன்றும் நீவிர்
யாரெனச் சொல்க"என்றேன்.


மூத்ததாம்  மொழிகள் தம்முள்
  முதன்மையாம் மொழியென்
   றென்னை
ஆர்த்தநல் அறிஞர் சொல்வர்;
 அருந்தமிழ் என்றன் பேராம்";
வார்த்தைகள் இவற்றைக்
கேட்டு்
வணங்கியே நின்று "தாயே!
சீர்த்திசேர் அன்னாய் போற்றி
செந்தமிழ்ச் செல்வி போற்றி!


வாடிய முகத்தி னோடு
 வந்ததன் கார ணத்தை
மூடியே மறைத்தி டாமல்
முற்றுமே சொல்க" என்றேன்.
"பாடியே புலவர் ,வேந்தர்,
பலதரப் பட்ட மக்கள்
கூடியே வளர்த்தார்,என்னை:
குதுகலம் கொண்டேன்"
என்றாள்.


இன்னமும் சொல்ல லானாள்;
"என்மக்கள் உண்மைப் பற்று
மின்னிடப் போற்று கின்றார்;
வேறுபல் நாட்டில் வாழ்வோர்
அன்னையென் புகழைப் பாடி
அகிலத்தில் பரப்பு கின்றார்;
பன்னரும் அமெரிக் காவில்
பணிசெய்யும் தமிழர் சேவை


சொல்லவே இயலா தப்பா!
தொல்புகழ் ஹார்வர்(டு)
என்னும்
நல்லதாம் கழகம் தன்னில்
நாட்டினர் தமிழி ருக்கை;
பல்வித நாட்டில் வாழும்
பற்றுளார் புகழ்சேர்க் கின்றார்
எல்லையில் பெருமை
கொண்டேன்;
இதயத்தில் இன்பம் உற்றேன்.


இமிழ்திரைக் கடல்சூழ் பாரில்
எங்கெங்கும் தமிழர் உள்ளார்;
இமைகண்ணைக் காத்தல்
போல
என்றென்றும் காப்பார் அப்பா!
தமிழ்மண்ணில் வாழ்வோர்
தாமும்
தாய்த்தமிழ்ப் பற்றோ டுள்ளார்
அமிழ்தொக்கும் மொழியென்
றென்னை
அருமையாய்ப் புகழு கின்றார்.


ஆயினும் எனக்கோர் ஏக்கம்
அகத்தினில் உண்டு பிள்ளாய்!
சேய்கட்குத் தமிழ்ப்பேர் சூட்டல்
சிறிதள வேனும்  இல்லை;
மாயையில் சிக்கி மக்கள்
வடமொழிப் பேர்வைக் கின்றார்;
தாய்மொழி தமிழில் வைத்தால்
தாழ்ச்சியென் றெண்ணு
கின்றார்.


இன்னுமோர் குறையைச்
சொல்வேன்;
இங்குள்ள கல்வித் திட்டம்
அன்னையாம் தமிழில் இல்லை;
ஆங்கில மோகம் மிக்குச்
சென்னியின் மீது வைத்துச்
சிறப்புறக் கற்கச் செய்வர்;
இந்நிலை தொடரின் தாயார்
என்னிலை என்ன வாகும்?


இருபெரும் குறையைப் போக்க
எவருமே முயன்றார் அல்லர்;
அருந்தமிழ் எழுத, பேச
அறிகிலேன் என்று சில்லோர்
பெருமையாய்ச் சொல்லல்
முற்றும்
பிழை;தமிழ் நாட்டில் அன்னார்
கருவத்தை அடக்கி இஃதைக்
கண்டித்தல் வேண்டும் அப்பா!



தாய்மொழி வழியிற் கற்போர்
தடைகளை அகற்றல் வேண்டும்;
ஓய்வின்றிப் படித்தல் வேண்டும்;
உறுபொருள் காணல் வேண்டும்;
ஆய்வினை விடாது செய்தே
அறிவினைப் பெருக்கல்
வேண்டும்;
வாய்ப்பினை அரசு நல்கிப்
பணிதரல் வேண்டும்"என்றாள்


செம்மொழித் தாயின் ஏக்கம்
சிந்தையில் உறுத்தல் வேண்டும்;
நம்அடை யாளம் இஃதே;
நாம்இதைத் தொலைத்து
விட்டால்
எம்முகம் காட்டி ஏனை
இனத்தினர் முன்னே நிற்போம?
இம்மொழி பேணிக் காத்தே
ஏறுபோல் நடப்போம் வாரீர்!


அமெரிக்க நாட்டில் வாழும்
அருந்தமிழ் அன்பர் கூடி
நமதரும்  நூலை யெல்லாம்
இணையத்தில் ஏற்றி யுள்ளார்;
இமைப்பொழு தளவில் நூலை
எளிதிலே பார்க்க ஒண்ணும்;
சமைக்கின்ற நூலை எல்லாம்
அவர்தமைப் போலச் செய்வோம்.