Thursday 28 June 2018

சீனா நட்பு நாடா? பகை நாடா?

 சீனா  நட்பு  நாடா? பகை  நாடா?
பாக்கிஸ்தான்  செஞ்சீனா  இவ்விரண்டு  நாடுகளும்
பகைவர் நாடே;
நோக்கிடிலோ  முதல்நாடு  வெளிப்படையாம்  பகைவரென
நொந்து  கொள்வோம்;
ஏய்க்கின்ற  நாடென்றே இரண்டாம்நாட்  டைச்சொல்வோம்;
        ஏனென்  றாலே
தீக்குணத்தை  மறைத்திடுமே;  வெளியினிலே நடித்திடுமே:
தெரிந்து  கொள்வோம்.

நன்னெறியைக்  கடைப்பிடிக்கும்  பாரத்த்தைப்  பாக்கிஸ்தான்
        வெற்றி  கொள்ள
என்னவழி  முயன்றாலும்  இயலாது;  பேருண்மை;
இரண்டாம்  நாடு
தன்னலமும் சூழ்ச்சிகளும்  தந்திரமும்  கொண்டிலங்கும்
தாழ்ந்த  நாடு;
என்னவிலை  கொடுத்தேனும்  எதிர்கொண்டு  முறியடிப்போம;
       எமக்கே  வெற்றி!

சிவகாசி  நகரினிலே  உருவாகும்  பட்டாசைத்
       தேசம்  எல்லாம்
நவமான  பொருளென்றே  வாங்கிமனம்  மகிழ்ந்தனவே;
       நயனில்  சீனம்
தவறாது  பட்டாசை  அதிகளவில்  தள்ளிவிட்டுச்
சந்தை  தன்னில்
எவராலும்  தரவியலா  விலைக்குறைப்பால்   நம்மவர்க்கே
       இழப்பை   நல்கும்.

மக்கள்  தொகையில்  வளங்களிலே
      மன்னும்  நமது  பாரதமும்
சிக்கல்   நல்கும்  சீனாவும்
     தேரின்  இரண்டும்  சம்ம்ஆகும;
அக்கம்  பக்கம்  நமைநாடி
    ஆத   ரிக்கும்  நாடில்லை;
தக்க  துணையாய்ச்  சீனத்தைத்
    தாங்கும்  நாடு  பலவுளவே.

ஆத  லாலே  நம்நாட்டில்
    அனைத்துப்  பாது  காப்பினையும்
தோது  படவே  மேற்கொள்வோம்;
    சுற்று  முற்றும்  கவனிப்போம;
யாது  வழியில்  படைவரினும்
   ஏற்ற  முறையில்  எதிர்கொள்வோம்;
தீது  சிறிதும்  அண்டாமல்
   தெய்வத்  திருநாட்  டைக்காப்போம்.

பார  தத்தைச்  சந்தையெனப்
    பயன்ப  டுத்த  நினைக்கின்ற
கார  ணத்தால்  படையெடுப்பைக்
    கபட  மாகத்  தவிர்த்திடுமே;
தீர  மிக்க  இந்தியரே!
   சீனப்  பொருளைப்  புறக்கணிப்போம்;
போரை  வெறுப்போம்;  வந்துவிட்டால்
    புயலைப்  போலப்  பாய்ந்திடுவோம்.

சீனத்தில்  உருவாக்கும்  பொருள்களைநாம்  மலிவென்றே
ஈனத்  தனமாய்  இறக்குமதி  செய்கின்றோம;
தேனொத்த  பொருளெனினும்  தீதெண்ணும்  சீனத்தை
மானமிகு  இந்தியர்கள்  வாழ்வித்தல்  முறையாமோ?

வல்லரசாய்  மாறியிந்த  மண்டலத்தில்  பவனிவர
எல்லையிலா  ஆசையுடன்  இறுமாந்து  நடக்கிறது;
தொல்லைதரும்  சீனத்தைச்  சூழ்ச்சிக்கோர்  உறைவிடத்தைச்
சொல்லொணாத்  தீமையினைத்  தோற்கடிக்க  முயல்வோமே!

வரவிருக்கும்  விழாக்களிலே  வழக்கம்போல்  சிவகாசித்
தரமிகுந்த  பட்டாசைத்  தடையின்றி  வாங்கிடுவோம;
அரசு,நம்மை  அச்சுறுத்தும்  அந்நாட்டுப்  பொருள்களையே
இரக்கமின்றித்  தடைசெய்க;  எம்மக்கள்  வாழ்கவே!

நன்னெறியிற்  செல்பவரே  நன்மை  அடைந்திடுவர்;
புன்னெறியிற்  செல்பவர்  பொன்றிடுவர்; --உன்னதமாம்
பாரத்த்தைத்  தாக்கவெண்ணும்  பாக்கிஸ்தான்  சீனமிவை
போரதனில்  வீழும்  புகல்.

வடகிழக்கு  மாநிலத்தில்  வாலாட்டும்  சீனம்
தடதடவென்  றுள்நுழைந்து  தாக்கும்--இடரிதனை
எப்பொழுதும்  சிந்தித் (து)  எதிர்நோக்கி  எச்சரிக்கை
தப்பாமல்  மேற்கொள்வோம்  சார்ந்து.

அறுபத்  திரண்டில்  அறமல்லாப்  போரில்
சிறுமைத்  தனம்செய்து  சீனம்--பெருநிலத்தைக்
கைப்பற்றிக்  கொண்டு  களியாட்டம்  போட்டதிதை
எப்பொழுது  மீட்போம்  இனி?












Monday 25 June 2018

நினைவாற்றல் மகிமை

மாம்பழக்  கவிச்சிங்க  நாவலர்
என்னும்  தமிழறிஞர்  பத்தொன்ப
தாம்  நூற்றாண்டில்  வாழ்ந்து
வந்தார்.  இறைவன்  அவர்க்கு
அநீதி  இழைத்துவிட்டான்.
அவர்க்கு  மூன்று வயதில் வைசூரி
நோய் ஏற்பட்டது. பிழைத்தாலும் பார்
வையை இழந்தார். ஆயினும்  அவர்
பெற்றோர் தமிழ்க் கல்வி கற்க ஏற்பாடு
செய்தனர். அவர் கற்றத் தேர்ந்துவிட்டார்.
மேலும் ஏக சந்தக் கிராகியம் என்னும்
திறமை உடையவராய்விளங்கினார். நம்  புலவர் ஒருமுறை கேட்டதை அப்படியே
பிழையில்லாமல் திரும்பச் சொல்
வதில்  தேர்ந்தவர்.

ஒருமுறை  இராமநாதபுரம்
சேதுபதி  அவர்களைப்  பார்த்து  உரையாடிவிட்டு  வர
லாம்  என்ற  எண்ணத்தில்
அங்குச்  சென்றிருந்தார்.  அவையில்  புலவர்கள்  குழுமி
யிருந்தனர்.  புலவர் ஒருவர்
தன்  நூலை  அரங்கேற்றிப்
பரிசில்  பெற  வந்திருந்தார்.
அப்புலவர்  நம்  கவிச்சிங்கத்
தைப்  பார்த்துவிட்டு  "இது
என்ன  அமங்கலமாகப்  பார்
வையற்றவர்  அவையில்  உள்
ளாரே?"  என்று  எண்ணியவர்
சேதுபதியவர்களை  நோக்கி
"அவை  அமங்கலமாக  உள்ளதே"  என்று குறிப்பிட்டார்
அவர் மறைமுகமாகச்  சொன்
னதைச்  சேதுபதி  புரிந்து
கொள்ளவில்லை.  "அவை
மங்கலமாகத்தான்  உள்ளது;
நூலைப்படியுங்கள்" என்றார்.
வேறுவழியின்றிப்  புலவர்
நூலைப்  படித்து  முடித்தார்.

உடனே  நம்கவிச்சிங்கம்  எழுந்
து  நின்று"இது  எனது  நூல்;
இந்தப்  புலவர்  எப்படியோ
நகல்எடுத்துத்  தனது  நூல்
என்கின்றார்"  என்றுரைத்தார்
புதுப்புலவர்க்கு  உடலெல்லாம்
நடுங்கியது."எனது  நூலைத்
தனது  நூல்  என்கின்றாரே;
சேதுபதி  நம்பிவிட்டால்  தண்
டனை  கிடைக்கும்"  என்று
பயந்து  நடுங்கினார்.  பிறகு
சமாளித்துக்  கொண்டு" இது
என் நூல்தான். சத்தியம்"  என்
று  நாத்தழுதழுக்கச்  சொன்
னார்..  சேதுபதி  நம்  கவிச்
சிங்கத்தைப்  பார்த்து"இது என்ன  குழப்பம்" என  வினவ
நம்  கவிச்சிங்கம்  உடனே  நூல்  முழுவதையும்  சொல்லி
அதற்குப்  பொருளும்  உரைத்
தார்.  தடாலடியாகப்  புதுப்
புலவர்  கவிச்சிங்கம்  காலில்
விழுந்து"ஐயா! தாங்கள் இருப்பது அமங்கலம்  என்று
கூறியதற்கு  மன்னியுங்கள்;
என்னைச்  சோதிக்க  வேண்டா
என்று  கெஞ்சினார்.  உடனே
நம்  கவிச்சிங்கம்  தனது நினைவாற்றல்  திறமையைப்
பற்றி  எடுத்துரைத்துப்  புதுப்
புலவர்  தாம் அவையில்  இருப்
பதை  அமங்கலமாக  எண்ணி
யதற்குப்  பாடம் புகட்ட விரும்பி
இந்த  நாடகத்தை  நடத்தியதா
கத்  தெரிவித்தார்.  புதுப்புலவ
ர்  நிம்மதிப்  பெருமூச்சு  விட்
டார். சேதுபதி  அவர்க்குப் பரிசு
கொடுத்து  அனுப்பினார். விழித்திறன்  குறைந்தவர்கள்
அட்டாவதானி,தசாவதானி,
சதாவதானி ஆவதற்கு  மிக
கடுமையான பயிற்சி  மேற்
கொள்வார்கள்.  அதாவது, ஒரே  நேரத்தில்  எட்டு நபர்கள்,
பத்து நபர்கள், நூறு  நபர்கள்
வினவும்  வினாக்களைக் காதி
ல்  வாங்கி  முறையாகப்  பதில்
அளிப்பார்கள்.  கவனக  கலை
என்று  அழைப்பார்கள்.

காகிதம்,  எழுதுகோல்இல்லாத
காலத்தில்  நினைவாற்றல்
இன்றியமையாததாக  கருதப்
பட்டது்.  பழங்காலத்தில்  அக
ராதி  இல்லை. நிகண்டு  தான்
பழக்கத்தில்  இருந்த்து.  அதை
மனனம்  செய்து  நினைவில்
வைத்திருப்பார்கள்.  எதையும்
நினைவில்  இருத்திக்கொள்ள
பாடலாகப் பாடி வைத்திருந்
தார்கள்.பாடல்கள்  எதுகை,
மோனை,ஓசைநயம்பொருந்தி
யிருப்பதால்  மனனம்  செய்
வதும்  நினைவில்  இருத்துவ
தும்  எளிதாகும்.  சிலவற்றை
இங்கே  பார்ப்போம்.

பதினாறும் பெற்றுப்  பெரு
வாழ்வு  வாழ்க  என்று  வாழ்த்துவதை  அறிவோம்.
அவை  யாவை?
"துதிவாணி  வீரம் விசயம்சந்
      தானம்  துணிவுதனம்
அதிதானி  யம்சவு  பாக்கியம்
        போகம்  அறிவழகு
புதிதாம்  பெருமை யறம்குலம்
         நோயின்மை பூண்வயது
பதினாறு  பேறும் தருவாய்
          மதுரைப்  பராபரனே!.

பசிவந்திடப்  பத்தும்  பறந்து
போம்  என்னும்  முதுமொழி
கேட்டிருப்போம்.  பத்து யாவை?
மானம்  குலம்கல்வி  வண்மை
            அறிவுடைமை
தானம்  தவம்முயற்சி தாளாண்
             மை__தேனின்
கசிவந்த சொல்லியர்மேற்
             காமுறுதல்  பத்தும்
பசிவந்  திடப்பறந்து  போம்.

சங்க  நூல்களான  பத்துப்
பாட்டும்,எட்டுத் தொகையும்
எவை  எவை?
பத்துப் பாட்டு:
முருகு  பொருநாறு பாணிரண்
    டு  முல்லை
பெருகு  வளமதுரைக் காஞ்சி
     மருவினிய
கோலநெடு  நல்வாடை  கோல்
      குறிஞ்சி  பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.
1.திருமுருகாற்றுப்படை
2.பெரும்பாணாற்றுப்படை
3.சிறுபாணாற்றுப்படை
4.முல்லைப்பாட்டு
5.மதுரைக்காஞ்சி
6.நெடுநல்வாடை
7.குறிஞ்சிப்பாட்டு
8.பட.டினப்பாலை
9.மலைபடுகடாம்
10.பொருநர்ஆற்றுப்படை

எட்டுத்தொகை:
நற்றிணைநல்லகுறுந்தொகை
     ஐங்குறுநூ(று)
ஒத்த  பதிற்றுப்பத்(து)  ஓங்கு
       பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும்  கலியோ
        டகம்புறமென்
றித்திறத்த எட்டுத் தொகை.

1.நற்றிணை
2.குறுந்தொகை
3.ஐங்குறுநூறு
4.பதிற்றுப்பத்து
5.பரிபாடல்
6.கலித்தொகை
7.அகநானூறு
8.பறநானூறு

பத்துப்பாட்டும்  எட்டுத்தொகை
யும்  மேற்கணக்கு  வகையைச்
சேர்ந்தவை.  நாலடிக்கு மேல்
வரும்  பாடல்கள்  மேற்கணக்கு
என்னும்  பிரிவில்  சேர்க்கப்
பட்டன.  இரண்டு அடி முதல்
நான்கு  அடி வரை உள்ள பாடல்கள் கீழ்க்கணக்கு  வகை
யில் சேர்க்கப்பட்டன.  கீழ்க்
கணக்கு  நூல்களும்  பதினெட்
டாகும்.  அவை  யாவை?

நாலடி நான்மணி நானாற்ப(து
      ஐந்திணைமுப்
பால்கடுகம்கோவைபழமொழி
       மாமூலம்
இன்னிலைகாஞ்சியுடன்ஏலா
        தி  என்பவை
கைந்நிலையுமாங்கீழ்க்கணக்கு.
1நாலடியார்2நான்மணிக்கடி
கை3இன்னாநாற்பது4இனிய
வை நாற்பது5கார்நாற்பது
6களவழி நாற்பது7ஐந்திணை
ஐம்பது8ஐந்திணை எழுபது
9திணைமாலை நூற்றைம்பது
10திருக்குறள்11திரிகடுகம்
12ஆசாரக்கோவை13பழமொழி நானூறு14சிறுபஞ்சமூலம்
15இன்னிலை16முதுமொழிக்
காஞ்சி17ஏலாதி18கைந்நிலை

சேர,சோழ,பாண்டிய  மற்றும்
தொண்டை(பல்லவ)நாடுகளுக்  குரிய  சிறப்புக்கள் யாவை?
வேழ  முடைத்து மலைநாடு
       மேதக்க
சோழவள நாடு சோறுடைத்து
       பூழியர்கோன்
தென்னாடு முத்துடைத்து
   தெண்ணீர்வயல்தொண்டை
நன்னாடு சான்றோர்
    உடைத்து.
சேரநாட்டில்  யானைகளும்,
பாண்டிய நாட்டில் முத்துக்
களும்,சோழ நாட்டில் நெல்லும்
சிறந்து விளங்குபவை. பல்லவ
நாட்டில் (தொண்டை நாடு)
சான்றோர்  சிறந்து விளங்கி
னர்.

இவற்றைப் போல எத்தனை
யோ பாடல்கள்  உள்ளன. மனப்பாடம் செய்வதும் நினை
வில்  இருத்திக்கொள்வதும்
இன்றியமையாதவை எனக்
கருதப்பட்டன.  எனவேதான்
இச்செய்திகள் எல்லாம் பாடல்
களாக இயற்றப்பட்டன. மொழி
யியல் அறிஞர்கள்  சொற்கள்
பிறந்து வெகுகாலம்  கழிந்த
பின்னரே  வரிவடிவம்(எழுத்து)
கண்டுபிடிக்கப்பட்டதாக  தெரி
விக்கின்றனர். தொடக்க கால
த்தில்  இலக்கியங்கள்  மக்கள்
நினைவில்  இருத்தப்பட்டுப்
பிற்பாடு  வரிவடிவில்  எழுதப்
பட்டன.  ஆகவேநினைவுத்
திறன்  வலியுறுத்தப்பட்டது.







.





Wednesday 20 June 2018

காதலின் பெருமை


"சாதலே  வந்த  போதும்
        தந்தைதாய்  எதிர்த்த  போதும்
காதலி  உன்னை  நானே
        கைவிடேன்"  என்று  சொன்னார்;
ஆதலின்   அதனை  நம்பி
ஆனந்தக்  கடலில்  ஆழ்ந்தேன்;
பாதகர்  என்னைப்  பார்த்துப்
         பதுங்குவ(து)  ஏனோ?  சொல்லீர்!

வீரமும்  காதல்  தானும்
         விழியெனக்  கருதும்  நாட்டில்
யார்எவர்  கொளினும்  காதல்
         இதயத்தில்  உதித்த  தாக
நேர்மையாய்  உண்மை  யாக
         நிலைத்திவண்  இருத்தல்  வேண்டும்;
ஊரவர்  போற்றும்  சாதி
         மத தடை  தகர்த்தல்  வேண்டும்.
 

ஒருதலைக்  காதல்  வேண்டா;
        ஒழுக்கமில்  காதல்  வேண்டா;
இருநிலத்(து)  இந்த  நாட்டில்
        இருபது  நூற்றாண்  டாக
மருவிடும்  நெறிபின்  பற்றி
மக்களே!  காதல்  செய்வீர்!
உருக்கமாய்க்  காதல்  செய்தால்
        உள்ளன்பு  வெற்றி  சேர்க்கும்!

விருப்பொடு  பெண்ணும்  ஆணும்
        மனம்விட்டுக்  கலந்து  பேசித்
தருவது  பெறுவ(து)  இன்றி
        தட்சணை  தங்கம்  இன்றி
ஒருவனுக்  கொருத்தி  என்னும்
        உயர்பண்பு  நெறியைப்  பற்றி
அரும்பெரும்  குடும்ப  வாழ்வை
அமைத்திட  வாரீர்!  வாரீர்!

ஏறினைத்  தழுவி  வென்ற
        இளைஞர்க்குப்  பெண்ணைத்  தந்தார்;
மாறிய(து)  இந்த  வீர
        வழக்கமே;  நல்ல  வேளை;
சீறிடும்  விலையேற்  றத்தால்
        திகைக்கின்ற  குடும்ப  வாழ்வு;
மீறியே  வாழ்ந்து  வென்றால்
காளையை  அடக்கல்  போலாம்.

Thursday 14 June 2018

நெகிழி (பிளாஸ்டிக்) என்னும் அரக்கன்

நெகிழி  (பிளாஸ்டிக்)  என்னும்  அரக்கன்
நெஞ்சுதனை  நிமிர்த்திடலாம்  நெகிழியினைப்  படைத்ததற்கு;
விஞ்சுகின்ற  சிறப்புண்டு;  விலைமலிவு ;  திடத்தன்மை;

பலவகையாம்  வடிவத்தில்  பாங்காக  உருவாக்கல்;
உலகெங்கும்  வாழ்வோர்கள்  உபயோகிக்  கும்பொருளாம்;

இன்னுமின்னும்சொல்லிடலாம்   இருந்தாலும்  தீமைமிகு
தன்மைகளும்  உள்ளனவே;  தயக்கமின்றி  ஆராய்வோம்.

உற்பத்தி  செயும்நேரம்  உயிருக்கும். உடலுக்கும்
சுற்றியுள்ள  சூழலுக்கும் தொல்லை நச்சுப் பொருள்பரவிக்

காற்றுவெளி  நிலத்தடிநீர்  கழனிவயல்  பாழாகும்;
தேற்றுதற்கு  வழியில்லை;  தீமைபல  இன்னுமுள;

பெயர்தெரியாப்  புதுநோய்கள்  பெரியோரைச்  சிறியோரை
அயர்வுறவே  செய்துவிடும்;  ஆஸ்துமா   தொல்லைவரும்;

மற்றும்பல்  நோய்நொடிகள்  வரிசைகட்டி. வந்துநிற்கும்;
புற்றுநோய்க்  காரணிகள்  புயலெனவே  தோன்றிவிடும்;

விளைச்சல்  நிலமெல்லாம்  வீணாகி  மனத்தளவில்
உளைச்சல்  உருவாகும்;  உய்திபெற  வழியுண்டோ?

காகிதம்,  தாவரத்தின்  கழிவுகள்போல்   நெகிழியிங்கு
சீக்கிரத்தில்  மட்காது;  தேயாது;  மறையாது;

வீதிகளில்  குவிகின்ற  வீணான  குப்பைகளில்
தீதுமிகும்  நெகிழிப்பை சிதைந்திருக்கும்  துண்டு,துகள்

போல்வன  சேர்ந்திங்கே  புழங்குவதால்  கால்நடைகள்
தீவனமாய்த்  தின்று  திணறிச் சா கின்றனவே;

நிலபுலங்கள்   ஆறுகுளம்  நெடுங்கடல்  இங்கெல்லாம்
வலம்வரும்தீதான  மட்காத  நெகிழியினால்

கடல்வாழும்  உயிரினங்கள்  கயல்நண்டு  கடலாமை
உடல்பருத்த  திமிங்கிலங்கள்  உணராமல்  தின்றுவிட்டுச்

செரித்திடவே  இயலாமல்  செத்துமடி  கின்றனவே;
வருத்தமிகும்  செய்தியிஃது;  வழியென்ன?  சரிசெய்ய.

மட்கிவிடும்  தன்மையே  வாய்க்காத  நெகிழியினைக்
கட்டுக்குள்  வைத்திருக்கக்  கச்சிதமாய்த்  திட்டம்நல்கீர்;

நெகிழியினைப்  பயன்படுத்தல்  நிச்சயமாய்க்  குறைந்துவிட்டால்
வெகுவிரைவில்  உற்பத்தி  மிகமிகவே  அருகிவிடும்.

நெகிழியினால்  உருவாகும்  நீர்க்குவளை,  பை,தட்டு
தகுதியினால்  காகிதம்,நற்  பாக்குமட்டை  போன்றவற்றால்

உண்டாக்கல்  சாத்தியமே;  ஒருசிறிதும்  ஐயமிலை;
கொண்டாடி  மகிழ்வோமே;  குறைத்திடுவீர்  நெகிழியினை;

நெகிழிக்  கழிவுகளை  மறுபயன்  பாட்டினுக்கே
உகந்தவை  அல்லாத  வையென்று  பிரித்தெடுப்பீர்;

மறுபயன்பாட்  டுக்குகந்த  கழிவுகளால்  நாற்காலி
சிறு,பெரிய  பீடம்போல்  செய்திடலாம்  உலகத்தீர்!

எஞ்சியுள்ள  கழிவுகளை  எக்கார  ணம்கொண்டும்
கொஞ்சமுமே  தீவைத்துக்  கொளுத்துதல்  செய்யாதீர்;

ஏனென்றால்  நச்சுவளி  உருவாகிச்  சுற்றியுள்ள
வானத்தைப்  பூமிதனை  மாசு  படுத்திவிடும்;

நானிலத்தில்  நெகிழிமட்க  நானூறாண்  டாகிடுமாம்;
மாநிலத்து  மனிதர்களே!  வகைவகையாய்ச்  சிந்திப்பீர;

அரக்கர்களை  வதம்செய்ய  அவதரித்த  ஆண்டவனே!
வரம்தந்(து)இந்  நெகிழியினை  வதம்செய்ய   வழிசொல்க.

தக்க  வழிகண்டு  சாதிப்போம்   பூவுலகில்
ஒக்க  உழைத்தால்  உயர்வு.




Saturday 9 June 2018

தாத்தாவும் பேரப் பிள்ளைகளும்

வம்பிழுக்கும்  ஆற்றல்மிகு  மூத்த  பேரன்
   வாஞ்சையுடன்  என்னருகே  வந்து  நின்று
"தம்பியவன்  செயும்குறும்பைச்  செவிம  டுப்பாய்;
   தான்விரும்பும்  தொலைக்காட்சி  நிகழ்ச்சி  யெல்லாம்
வெம்பிமனம்  வெறுப்படையப்  பார்க்கின்  றானே;
   விரும்பிநான்  தொலைஇயக்கி  தன்னைக்  கேட்டால்
தும்பியெனப்  பறந்திடுவான்; கேலி  செய்வான்;
   தொல்லைதரும்  அவனையடி  தாத்தா"  என்றான்.
 (தொலைஇயக்கி= ரிமோட்கண்ட்ரோல்  சுவிட்ச்)

சின்னவனை  யானழைத்துன் "அண்ண  னையேன்
  சினமடையச்  செய்கின்றாய்;  கருவி  தன்னை
அன்னவனின்  மனம்குளிர  உடனே  தாராய்;
  ஆசையுடன்  நிகழ்ச்சியெலாம்  பார்க்கச்  செய்வாய்;
என்னவனே  இளம்பேரா!"  எனநான்  சொன்னேன்.
  "ஏன்தாத்தா!  அண்ணனையே  எந்தப்  போதும்
மன்னவனைப்  போல்நீயும்  கொஞ்சு  கின்றாய்;
  மாறாத  அன்பெனக்கும்  நல்காய்"  என்றான்.

மூத்தவனும்  சின்னவனும்   போட்டி போட்டு
  மோதுவதைத்  திகைப்போடு  பார்த்து  நின்றேன்;
பேத்தியவள்  சிணுங்கியவா(று)  அருகில்  வந்தாள்;
  "பெரியவனும்  சின்னவனும்  விரும்பும்  வண்ணம்
பார்த்திடுவர்  தொலைக்காட்சி  நிகழ்ச்சி  யெல்லாம்;
  பாவைநான்  யாதொன்றும்  பார்க்க  வில்லை;
தாத்தாநீ  தக்கதொரு  நீதி  நல்கித்
 தண்டித்துத்  திருத்(து)அவரை " என்று  சொன்னாள்.

இம்மட்டோ  இவர்கள்சண்டை?  இன்னும்  போகும்.
   இவர்களில்லா  விடிலெவர்க்கும்  பொழுதே  போகா(து);
அம்மட்டும்  ஆறுதலாய்  ஒருநற்  செய்தி;
  அலைபேசி  தனிலுள்ள  நல்ல  அம்சம்
 எம்மட்டும்  முயன்றாலும்  மூத்தோர்  கற்க
   இயலாதிப்  பிள்ளைகளால்  இயலும்  எல்லாம்;
அம்புட்டு   வசதியையும்  அலசி  ஆய்ந்து
  ஆசிரியர்  போலெனக்குச்  சொல்லித்  தந்தார்.

ஆனாலும்  நமக்கொருபேர்  அச்சம்  உண்டு;
  அறிவியலின்   கருவிகளால்  தீங்கும்  உண்டு;
வானாரப்  புகழும்அலை   பேசி  தன்னால்
நீலத்தி  மிங்கிலம்போல்  நிகழ்ச்சி  தோன்றும்;
தேனாகப்  பிள்ளைகட்குத்  தெரியும்  காட்சி
தீங்கான  நிகழ்ச்சியென  நமக்குத்  தோன்றும்;
தானாகப்  பகுத்தறியும்  ஆற்றல்  பெற்றால்
  தரமாக  வளர்ந்திடுவர்  பிள்ளை  யெல்லாம்.
(நீலத்  திமிங்கிலம்--புளூ  வேல்)

ஆண்டவனே!  உன்னிடத்தில்  ஒருவிண்  ணப்பம்;
   அறிவியலின்  துணையாலே தோற்று விக்கும்
வேண்டியநற்  கருவிகளால்  பிள்ளை   கட்குத்
   தீங்கொன்றும்  நேராமற்  காப்பாய்;  மக்கள்
ஆண்டாண்டுக்  கணக்காக  விவேகம்,  வீரம்
   அமைந்திங்கு  வாழ்ந்திடவே  அருள்செய்  வாயே!
வேண்டாவே  பிள்ளைகட்குத்  தரம்இல்  கல்வி;
   மேதினியில்  என்றென்றும்  அறிவே  வெல்க!





Tuesday 5 June 2018

சில சுவையான தனிப்பாடல்கள்

         தனிப்பாடல்  என்பது  குறிப்பிட்ட  காவியத்திலோ
கவிதைத்   தொகுப்பிலோ  சேராத  பாடல்கள  ஆகும்.
இந்தச்  சூழ்நிலையில்  இந்தக்  கவிஞரால்   இன்னார்
மீது  பாடப்பட்டவை   என  உறுதியாகச்   சொல்ல   முடியா
விட்டாலும்  காலங்காலமாகச்  செவிவழியாக  வரும்  செய்தி
களைக்கொண்டு  இன்னாரால்  இந்தச்  சூழ்நலையில்
இன்னார்மீது  பாடப்பட்டவை  என்று  சொல்லிவருகிறோம்.
தனிப்பாடல்கள்  பாடியவர்களில்  காளமேகப்புலவர்,
இரட்டைப்புலவர்கள்,  படிக்காசுப்பலவர்  முதலானவர்கள்
குறிப்பிடத்தக்கவர்கள்.  காவியம்  பாடிய  பெரும்  புலவர்களா
கிய  கம்பர்,  ஒட்டக்கூத்தர்,  புகழேந்திப்புலவர்  முதலியோர்
பெயர்களிலும்  சிலபல  பாடல்கள்  உலவுகின்றன.  இவை
அறிஞர்  பெருமக்களால்  முழுஅளவில்  ஏற்றுக்கொள்ளப்
படவில்லை.

"காசுக்குக்  கம்பன்  கருணைக்கு  அருணகிரி
ஆசுக்குக்  காளமுகில்  ஆவனே--காசினியில்
ஊழுக்குக்  கூத்தன்  உவக்கப்  புகழேந்தி
கூழுக்கிங்(கு)  ஔவையெனக்  கூறு."
இந்தப்   பாடலில்  கூறப்பட்டது  போல  ஆசுகவி  பாடுவதில்
காளமேகப்புலவர்  மிக  மிகச்  சிறப்புப்  பெற்றவர்.  அவர்
பாடல்களில்  சிலவற்றைப்  பார்ப்போம்.:
ஒருமுறை  அதிமதுரகவிராயர்  என்னும்  புலவர்  காள
மேகத்தைப்  போட்டிக்கு  அழைத்து  தாமும்  தமது  சீடர்களும்
கொடுக்கும்  குறிப்புக்களுக்கு  ஏற்றவாறு  ஆசுகவி  பாட
வேண்டும்  என்று  நிபந்தனை  விதித்தார்.  காளமேகம்
சம்மதித்தார்.  "குடத்திலே  கங்கையடங்  கும்"  என்று
ஈற்றடி  வருமாறு  வெண்பா  பாடுமாறு  கூறினர்.
"விண்ணுக்  கடங்காமல்  வெற்புக்  கடங்காமல்
மண்ணுக்  கடங்காமல்  வந்தாலும்--பெண்ணை
இடத்திலே  வைத்த  இறைவர்  சடாம
குடத்திலே  கங்கையடங்  கும்".
எதற்கும்  அடங்காமல்   பாய்ந்துவந்த  கங்கை  சிவபெரு
மான்  சடாமகுடத்திலே  அடங்கும்  என்பது  பொருளாகும்.

அடுத்த  குறிப்பு  என்னவென்றால்  ஓ,கா,மா,வீ,தோ  என்னும்
ஐந்து  எழுத்துக்களையும்  டு,டு,டு,டு,டு  என்ற  ஐந்து  எழுத்துக்
களோடு  பொருத்தி. ஓடு,காடு,மாடு,வீடு,தோடு  முதலிய
சொற்கள்  வருமாறு  வாக்கியம்   அமைத்து  வெண்பா
இயற்றல்  வேண்டும்  எனக்கூறினர்.  உடனடியாக
உதித்தது  பாடல்:
" ஓகாமா  வீதோநேர்  ஒக்க  டுடுடுடுடு
நாகார்   குடந்தை  நகர்க்கிறைவர்--வாகாய்
எடுப்பர்  நடமிடுவர்  ஏறுவர்  அன்பர்க்குக்
கொடுப்பர்  அணிவர்  குழை."
நாகார்  குடந்தை  நகர்க்கு  இறைவராகிய
சிவபெருமான்,
வாகாய்  எடுப்பர்--பிட்சாடனர்  ஆகத்  திரு
ஓடு  எடுப்பர்
நடமிடுவர்--சுடுகாட்டில்  நடமிடுவர்
ஏறுவர்--மாடு(நந்தி) மீது  ஏறுவர்
அனபர்க்குக்  கொடுப்பர்--பக்தர்களுக்கு  வீடு
(முக்தி) கொடுப்பர்
அணிவர்  குழை--காதில்  குழை(தோடு)அணிவர்

பிறிதொரு  குறிப்பு  தரப்பட்டது.  அது  என்ன
வென்றால்  "செருப்பு"  எனத்  தொடங்கி  "விளக்கு
மாறு"  என  முடிக்கும்  வகையில்  வெண்பாப்
பாடுமாறு  கூறினர்.  உடனே  பாடல்  பிறந்தது:
"செருப்புக்கு  வீர்ர்களைச்  சென்றுழக்கும்  வேலன்
பொருப்புக்கு  நாயகனைப்  புல்ல--மருப்புக்குத்
தண்டேன்  பொழிந்ததிருத்  தாமரைமேல்  வீற்றிருக்கும்
வண்டே  விளக்குமா  றே"
நாயகன்  நாயகி  தோரணையில்  பாடிய  பாடல்:
போர்க்களத்திற்  புகுந்துபோய்  (செருப்புக்கு)
வீர்ர்களைச்  சிதறக்  கலக்குகின்ற  வேலனாகிய
குறிஞ்சித்  தலைவனை  நான்  தழுவுவதற்கு
(பொருப்புக்கு  நாயகனைப்புல்ல) குளிர்ச்சியாகிய
தேனைப்  பொழிந்த  அழகிய  தாமரை  மலர்  மீது
வீற்றிருக்கும்  வண்டே  அவனிருக்கும்  இடத்துக்
குப்  போகும்  வழியை  விளங்க  காட்டும்
(விளக்கும்  ஆறே).

காளமேகப்   புலவர்க்குச்  சமகாலத்தவர்களாக
எண்ணப்படும்  இரட்டைப்  புலவர்களும்
ஆசுகவி  பாடுவதில்  தேர்ந்தவர்கள்.  ஒருவர்
முடவர்;  மற்றவர் குருடர்.  குருடர்  தோள்  மீது
முடவர்  ஏறிக்கொள்ள  இருவரும்  ஊர்ஊராகச்
சென்றுவந்தனர்.  போகும்  வழியில்  கவனத்தை
ஈர்க்கும்  காட்சியைக் கண்டவுடன்  முடவர்  முதல்
இரண்டடிகளைத்  தொடங்கிப்  பாடுவது  வழக்கம்.
குருடர்  அதிலுள்ள  செய்தியைப்  புரிந்துகொண்டு
மீதமுள்ள  இரண்டடிகளைப்  பாடிமுடிப்பது  வழக்கம்.

ஒருமுறை  ஒரு  ஆற்றில்  குருடர்  குளித்துக்
கொண்டிருந்தார்.  முடவர்  ஏற்கெனவே  குளித்து
முடித்து  உயரமான  இடத்தில்  அமர்ந்திருந்தார்.
குருடர்  குளிக்கும்  போது  ஆடையைத்  துவைத்துக்
கொண்டிருந்தார்.  அப்போது  நீரின்  வேகம்
ஆடையை  அடித்துக்கொண்டு  போய்விட்டது.
இதனைக்கண்ட முடவர்  பாடத்தொடங்கினார்.
"அப்பிலே  தோய்த்திட்டு  அடித்தடித்து  நாமதனைத்
தப்பினால்  நம்மையது  தப்பாதோ--செப்பக்கேள்
ஆனாலும்  கந்தை ;அதிலுமோர்  ஆயிரங்கண்;
போனால்  மயிர்போச்சே  போ."
நீரிலே  தோய்த்து  அடித்தடித்து நாம்துவைத்தால்
நம்மை   அந்த  ஆடை(வேட்டி)  நீங்காதோ?  என்று
முடவர்  பாடக்  குருடர்  அந்த வேட்டி கந்தைதான்.
அதிலும் ஆயிரம்  ஓட்டைகள்.  போனால்  நமக்குக்
கேடில்லை  எனப்பதில்  அளித்தார்.
உடனே  முடவர்
"கண்ணா  யிரமுடைய  கந்தையே  ஆனாலும்.
தண்ணார்  குளிரைஉடன்  தாங்காதோ?--அண்ணாகேள்
இக்கலிங்கம்  போனாலென்?ஏகலிங்க  மாமதுரைச்
சொக்கலிங்கம்   உண்டே  துணை."
ஆயிரம்   ஓட்டைகள்  உள்ள  ஆடையானாலும்
குளிரைத் தாங்கப்  பயன்படுமே  என்று  முடவர்
கூற  உடனே  குருடர்  இந்த  ஆடை  போனாலென்ன?
(இக்கலிங்கம்)  மாமதுரைச்  சொக்கலிங்கம்
துணையாயிருப்பார்  என்று  பாடி  முடித்தார்.

படிக்காசுப்   புலவர்என்ற  புலவர்  பெயரைச்  சொன்னாலே
காயல்பட்டினத்து   வள்ளல்   சீதக்காதி  நினைவு  வந்துவிடும்.
அந்த  அளவுக்குப்  படிக்காசுப்   புலவர்  சீதக்காதி  வள்ளலிடம்
கொடைகள்  பெற்று  அனுபவித்தவர்வள்ளலைப்  பற்றிப்
பின்வரும்   பாடலைப்  பாடியுள்ளார்:
"ஈயாத  புல்லர்  இருந்தென்ன?  போயென்ன? எட்டிமரம்
காயா  திருந்தென்ன?  காய்த்துப்  பலனென்ன?  கைவிரித்துப்
போயா  சகமென்  றுரைப்போர்க்குச்  செம்பொன்  பிடிப்பிடியாய்
ஓயாமல்  ஈபவன்  வேள்சீதக்  காதி  ஒருவனுமே!"
ஈயாத  கஞ்சர்கள்இருந்தால்  என்ன?  போனால்  என்ன?  எட்டிமரம்
காய்த்தாலும்  காய்க்காவிட்டாலும்  ஒரு  பயனுமில்லை.  கைந்நீட்டி
யாசகம்  என்று  கேட்பவர்க்குப்  பிடிப்பிடியாய்  செம்பொன்னைக்
கொடுப்பவர்  வள்ளல்  சீதக்காதி.  இதில்  அவர்  ஒப்பற்றவர்.

ஒருமுறை  படிக்காசுப்புலவர்  வள்ளலைத்தேடிக்  காயல்பட்டினத்
துக்கு வந்த  பொழுது  அவர்  இறந்துவிட்டதாகத்  தகவல்
தெரிவித்தனர்.  அப்பொழுது  மனம்  நொந்து  பாடியது:
"தேட்டாளன்  காயல்  துரைசீதக்  காதி  சிறந்தவச்ர
நாட்டான்புகழ்க்கம்பம்  நாட்டிவைத்  தான்தமிழ்  நாவலரை
ஓட்டாண்டி  யாக்கி  அவர்கள்தம்  வாயில்  ஒருபிடிமண்
போட்டான்  அவனும்  ஒளித்தான்சமாதிக்  குழிபுகுந்தே!
தமிழ்  நாவலரை  ஓட்டாண்டி  யாக்கி  அவர்கள்  வாயில்
ஒருபிடி  மண்ணைப்  போட்டுவிட்டு  அவனும்  சமாதிக்
குழிபுகுந்து  மறைந்துவிட்டான்  எனப்  புலம்பிப்
பாடினார்.

வள்ளல்  சீதக்காதி  மறைந்தபோது  நமச்சிவாயப்
புலவர்  பாடியது:
" பூமா  திருந்தென்?  புவிமா  திருந்தென்ன?  பூதலத்தில்
நாமா  திருந்தென்ன?  நாமிருந்  தென்னநன்  னாவலர்க்குக்
கோமான்  அழகமர்  மால்சீதக்  காதி  கொடைமிகுந்த
சீமான் இறந்திட்ட  போதே  புலமையுஞ்  செத்ததுவே!"
வள்ளல்  சீதக்காதி  மறைவோடு  புலமையுஞ்
செத்துவிட்டதாக  மனம  நொந்து  பாடினார்.

இன்னும்  எத்தனையோ  தனிப்பாடல்கள்  உள்ளன.
அவைகளின்  சொற்சுவை,  பொருட்சுவை  நயமாகவே
உள்ளன.  மேலும்  அவை  பாடப்பட்ட  காலத்துச்
செய்திகளையும்  தெரிவிக்கின்றன.





"








.