Thursday 31 May 2018

புறநானூற்றில் சில நெஞ்சைத் தொடும் காட்சிகள்

 புறநானூற்றில்  சில  நெஞ்சைத்   தொடும்  காட்சிகள்

தொடித்தலை   விழுத்தண்டினார்  என்னும்  புலவர்
ஒல்லையூர்  கிழான்  மகனான  பெருஞ்சாத்தனைப்
பார்க்கச்  சென்றபோது  அவன்  வேறு  சில   சான்றோ
ரோடு   பேசிக்கொண்டிருந்தான்.  அக்கூட்டத்தில்
இளமைக்காலச்  சிறப்பைப்  பற்றிய  உரையாடல்
நிகழ்ந்தது.  தற்காலத்தில்  பேசப்படும்  மலரும்  நினைவு
களைப்  போன்ற  உரையாடல்  நடைபெற்றது.  அக்கூட்டத்தில்
தொடித்தலை  விழுத்தண்டினார்  மிகவும்  முதுமையுற்றவர்.
அவர்  தமது  இளமைக் காலத்தில்  தாம்செய்த  குறும்புச்
செய்கைகளை  விவரித்தபொழுது  அனைவரும்  மிக்க
உவகையுடன் கேட்டு  இரசித்து  மகிழ்ந்தனர்.  பாடல்
பின்வருமாறு:
"இனிநினைந்  திரக்கம்  ஆகின்று;  திணிமணல்
செய்வுறு  பாவைக்குக்   கொய்பூத்  தைஇத்
தண்கயம்  ஆடும்  மகளிரொடு  கைபிணைந்து,
தழுவுவழித்  தழீஇத்,  தூங்குவழித்  தூங்கி
மறையெனல்  அறியா  மாயமில்  ஆயமொடு
உயர்சினை  மருதத்  துறையுறத்  தாழ்ந்து
நீர்நணிப்  படிகொ  டேறிச்  சீர்மிக
கரையவர்  மருளத்  திரையகம்  பிதிர
நெடுநீர்க்  குட்டத்துத்  துடுமெனப்  பாய்ந்து
குளித்துமணற்  கொண்ட  கல்லா  இளமை
அளிதோ  தானே!  யாண்டுண்டு  கொல்லோ?
தொடித்தலை  விழுத்தண்   டூன்றி  நடுக்குற்று
இருமிடை  மிடைந்த  சிலசொல்
பெருமூ  தாளரேம்  ஆகிய  எமக்கே!"

பொருள்:
இப்போது  நினைத்தாலும்  எம்  முதுமையை
எண்ணும்போது  பரிதாபமாக  உள்ளதே.  மணலிலே
வண்டல்  இழைத்து  வண்டல்  பாவைக்குப்  பூச்
சூட்டிக்  குளிர்ந்த. பொய்கையிலே  விளையாடும்
பெண்களோடு  கைகோர்த்து  ஆடினோமே!  அவர்
தழுவத்  தழுவி  அசைத்த  விடத்து  அசைத்து
விளையாடினோமே!  வஞ்சனையறியாத  எம்மொத்த
இளைஞருடன்  நீர்த்துறை அருகே  தாழ்ந்த  கிளை
யையுடைய  மருதமரத்தில்  ஏறி  மடுநீருட்  பாய்ந்து
மூழ்கி  அடியில்  இருந்த  மணலை  முகந்து  காட்டி
னோமே!  அவ்விளமை  இனிமேல்  திரும்புமோ?
அதனினும்  சிறந்த  பருவம்  எங்குள்ளது?  பூண்
போட்ட  தண்டினை ஊன்றி  இருமல்  இடையிடையே
தொல்லைதரச் சிலசில  வார்த்தைகளே  பேசி  வாடும்
எமக்கும்  அவ்விளமை  இனித்  திரும்புமா?

இனி  வேறு  ஒரு  காட்சியைப்  பார்ப்போம்:
மாறோக்கத்து நப்பசலையார்  ஒருசமயம்
போர்முடிவில்  ஒரு  தலைவன்  மனைக்குச்
சென்றார்.  அவன்  பகைவரோடு  போர்  புரிந்து  பெரும்
அளவில்  விழுப்புண்பட்டு  இறுதியெய்தும்  நிலையில்
இருந்தான்.இதனை  அவன்  மனைவி  உணர்ந்து
கொண்டாள்.  அவள்  வீரம்  செறிந்த  மறக்குலப்பெண்
ஆதலால்  மனத்தைத்  தேற்றிக்கொண்டு  தன்  கணவனை
நம்பி  வாழ்ந்துவரும்  துடியன்  பாணன், விறலி  முத
லானோரைப்  பார்த்துப்  பேசினாள்:" என்  கணவன்
உடம்பில்  உண்டான  புண்கள்  பெரியனவாயும்,
தும்பிகள்  மொய்க்கும்  நிலையிலும்  உள்ளன.  ஏற்றிய
விளக்கும்  அவிந்துபோகிறது.  சிலநாட்களாகச்  சரி
யாகத்  தூங்காத  காரணத்தால்  உறக்கம்வருகிறது.
கூகை  குழறுகிறது.  விரிச்சி  ஓர்க்கும்   செம்முது
பெண்டிரின்  சொற்கள்  பலிக்கவில்லை.  என்
கணவர்  இறப்பது  உறுதி.  நீங்கள்  இங்கு  தொடர்ந்து
வாழ்வது  இயலாது.  ஏனென்றால்  என்  கணவர்
மறைவுக்குப்  பிறகு  நான் உயிர்  வாழேன்.  கைம்மை
நோன்பு  நோற்று(அதாவது  மொட்டையடித்து  வெறும்
தரையில்  தூங்கி அல்லியரிசி  உணவுண்டு) உயிர்
வாழ்தல் இயலாது.  என்  கணவர் இறந்தவுடன்
யானும்  இறப்பேன்."  இவ்வாறு  அம்மறக்குல
மகள்  சொல்லக்கேட்ட  புலவர்  மனம்நொந்து
இப்பாடலைப்  பாடியுள்ளார்.  அக்காலத்தில்
கணவரை  இழந்த  பெண்கள்  உடன்கட்டை
ஏறவேண்டும்  அல்லது  கடுமையான  கைம்மை
நோன்பு  நோற்று வாழ்தல்  வேண்டும்.  இப்
பெண்ணின்  நெஞ்சுரம்  பாராட்டத்  தக்கது.

இனி  மற்றுமொரு  காட்சியைப். பார்ப்போம்:
வீரப்போர்  புரிந்த  ஒரு  தலைமகன்  புண்பட்டு  மாண்டான்.
அவன்  மனைவி  அவன்  இறந்துபட்ட  இடத்துக்குச்  சென்று
அவன்  உடலைத்தழுவிக்  கண்ணீர்  சிந்தினாள்.  "ஐயோ
என்று  வாய்விட்டுக்  கதறி  அழுதால்  புலி்வந்து இவன்
உடலைத்  தூக்கிச்  செல்லும்.  நானே  இவனைத்  தூக்கிச்
செல்லலாம்  என்றால்  அகன்ற  மார்புடைய
இவனைத்  தூக்குதல்  என்னால்  இயலாது.
ஒரு  குற்றமும்  புரியாத  என்னைத்  துன்
புறுத்தும்  கூற்றே!  நீயும்  என்னைப்  போலத்
துன்பம்  அடைக.  என்  கணவனே!  வளையல்
அணிந்த  என்  முன்கை  பற்றி  மெல்ல
மெல்ல  நடந்து  அந்த  மலைநிழலைச்
சென்று  சேர்வோம்"  என்று  இயம்பினாள்.
பாடலைப்  பார்ப்போம்:
"ஐயோ  எனின்யான்  புலிஅஞ்  சுவலே;
அணைத்தனன் கொளினே  அகன்மார்பு  எடுக்கல்லேன்;
என்போல்  பெருவிதிர்ப்பு  உறுக,  நின்னை
இன்னாது  உற்ற  அறனில்  கூற்றே!
நிரைவளை  முன்கை  பற்றி
வரைநிழல்  சேர்கம்  நடந்திசின்  சிறிதே!
சோகத்தின்  உச்சக்  காட்சியிது.

இதைப்போலவே  சோகமான  பிறிதொரு  பாடலைப்
பார்ப்போம்:
காதற்கொழுநனுடன்  சுரத்திடை  ஒருத்தி
வந்து  கொண்டிருந்த  போது  நிகழ்ந்த
போரில்  அவள்  காதற்கொழுநன்  புண்பட்டு
இறந்து  போனான். அவனைக்  கவித்தற்கு
ஒரு  ஈமத்தாழி  தேவைப்பட்டது.  அவனோடு
வந்த  அவள் அவனில்லாமல்  வாழப்போவ
தில்லை.  எனவே  அவ்வூர்க்  குயவனிடம்
" சக்கரத்தின்  ஆரத்தில்  பொருந்திய  பல்லி
போல  இவ்வீரனோடு  சுற்றி வந்தேன்.
இவன்  இறந்ததனால்இவனைக்கவிக்க
ஒரு  ஈமத்தாழி  தேவைப்  படுகிறது.  நீயோ
ஒருவர்க்குரிய  அகலத்தில்  தாழி  செய்து
வைத்திருப்பாய்.  இவனோடு  என்னையும்
சேர்த்துக்  கவிக்கத்  தேவையான  அகலத்தில்
ஈமத்தாழி  செய்வாயாக!"  என்று  கூறினாள்.
பாடல்  பின்வருமாறு:
"கலம்செய்  கோவே!  கலம்செய்  கோவே!
அச்சுடைச்  சாகாட்டு  ஆரம்  பொருந்திய
சிறுவெண்  பல்லி  போலத்  தன்னொடு
சுரம்பல  வந்த  எமக்கும்  அருளி
வியன்மலர்  அகன்பொழில்  ஈமத்  தாழி
அகலிது  ஆக  வனைமோ.
நனந்தலை  மூதூர்க்  கலம்செய்  கோவே!"

பூதப்பாண்டியன்  என்னும்  மன்னன்  இறந்த
பொழுது  அவன்   மனைவி  கோப்பெரும்பெண்டு
"பெருங்கோட்டுப்  பண்ணிய  கருங்கோட்டு  ஈமம்
நுமக்கரி  தாகுக  தில்ல  எமக்கெம்
பெருந்தோள்  கணவன்  மாய்ந்தென  அரும்பற
வள்ளிதழ்  அவிழ்ந்த  தாமரை
நள்ளிரும்  பொய்கையும்  தீயம்  ஓரற்றே!
எனவுரைத்து  உடன்கட்டை  ஏறி  மாய்ந்தாள்.
அந்தக்  காலத்தில்  நிலவிய  கைம்மை  வாழ்க்கை
மிக மிக  கடுமையாகவும்   கொடுமையாகவும்
இருந்த்து  போலும்.  கூந்தலை  மழித்து  அல்லது
குறைத்து  பரற்கற்கள்  பதித்த  தரையில்  பாயின்றிப்
படுத்து  வெள்ளரிவிதை  போன்ற  நெய்யற்ற
நீர்ச்சோறு  எள்ளுத்துவை  வேளையிலை  உணவுகளை
உண்டு  உயிர்வாழ்தல்  பலபெண்களுக்குப்  பிடிக்காமற்
போயிருக்கும்.  அதனால்  சர்வ  சாதாரணமாக  உடன்
கட்டை ஏறி  உயிர்துறந்தனர்.  மேலும்  உடன்கட்டை
ஏறி  உயிர்துறந்த  பெண்கள்  தங்கள்கணவன்மாருடன்
சொர்க்கத்தில்  வாழலாம்  என்ற  நம்பிக்கையும்  நிலவி
யிருக்கும்.  இந்த  நாளிலும்  சதி  என்ற  பெயரில்  வட
மாநிலங்களில்  உடன்கட்டை  ஏறும்  வழக்கம்  அவ்வப்
பொழுது  நிகழத்தான்  செய்கிறது.  தமிழ்நாட்டில்
இக்கொடிய  வழக்கம்  ஒழிந்துவிட்டது.
மனைவி  இறந்த  பின்னர்  அவளை  நினைந்து
மனம்  நொந்து  அவளோடு  தானும்  உயிர்விட
வில்லையே  என்று  சேரமான்  கோட்டம்பலத்துத்
துஞ்சிய  மாக்கோதை  கசிந்து  உருகியதாகப்
புறநானூறு  தெரிவிக்கிறது.  பாடல்  பின்வருமாறு:
" யாங்குப்  பெரிதாயினும்  நோயளவு  எனைத்தே
உயிர்செகுக்  கல்லா  மதுகைத்  தண்மையின்?

கள்ளி  போகிய  களரியம்  பறந்தலை
வெள்ளிடைப்  பொத்திய  விளைவிறகு  ஈமத்து
ஒள்ளழற்  பள்ளிப்  பாயல்  சேர்த்தி
ஞாங்கர்  மாய்ந்தனள்  மடந்தை
இன்னும்  வாழ்வல்  என்னிதன்  பண்பே!
என்  மனைவி  மாய்ந்த  பின்னரும்  நான்  உயிர்
வாழ்கிறேனே  என்று  சேரமன்னன்  மனம்நொந்து
பாடியுள்ளார்.

புறநானூற்றைப்  படிக்குந்  தோறும்  தமிழ்நாட்டில்
அக்காலத்தில்  நிலவிய  உயர்ந்த  நெறிகள்,  பழக்க
வழக்கங்கள்,  வீர  உணர்வு,  மான  உணர்ச்சி,
செய்ந்நன்றி  யறிதல்,  கற்பொழுக்கம்  பேணுதல்,
மனைவி  கணவன்  மீதும்  கணவன்  மனைவி  மீதும்
அன்பு  பூண்டுஒழுகுதல்  முதலான  எத்தனையோ
செய்திகள்  உள்ளன.  இக்காலத்துக்கு  ஏற்றபடி
அவற்றைப்  பின்பற்றி  உயர்வடைவோம்.











Thursday 24 May 2018

சிலப்பதிகாரம் ஒரு முத்தமிழ்க்காவியம்

சிலப்பதிகாரம்  வெறும்  துன்பவியல்  காவியம்
மட்டும்  அன்று.  துன்பக்  காட்சிகளும்  அவைகட்
கிணையாக  இலக்கியச்  சுவையும்,  இசையின்
பமும்  நாடகக்  கூறுகளும்  கலந்து  உருவாக்கப்
பட்ட  முத்தமிழ்க்  காவியம்.

சிலப்பதிகாரம்  துன்பக்  காட்சிகள்  நிறைந்தது
என்பதில்  எள்ளளவும்  ஐயமில்லை.  ஏனெனில்
காவியத்தலைவன்  கோவலன்  கொலையுண்
டான்.  தலைவி கண்ணகி  சில  நாட்களுக்குப்
பிறகு  அவனைச்சேர்ந்து  அவனுடன்  வானுலகம்
புகுகின்றாள்.  ஏனைய  கதை மாந்தர்களான
பாண்டியன்  நெடுஞ்செழியன், அவன்மனைவி
கோப்பெருந்தேவி, கோவலனின்  தாய்,  கண்ணகியின்
தாய், அடைக்கலம்  கொடுத்த  இடைக்குலப்  பெண்
மாதரி  என  அனைவரும்  இறந்தனர்.  கோவலனின்
தந்தை  மாசாத்துவான்  புத்த  விகாரத்தில்  சேர்ந்து
விட்டார்.  அதற்குமுன்  தான  தருமங்கள்  செய்து
சொத்துக்கள்  அனைத்தையும்  கரைத்துவிட்டார்.
கண்ணகியின்  தந்தை  மாநாய்கன்  ஆசீவகத்தில்
இணைந்து துறவியானார்.  மாதவியும்துறவு
பூண்டாள்.  கோவலன் மாதவி  இவர்களின்  மகள்
மணிமேகலையும்  புத்த சமயத்தில்  இணைந்து
துறவியானாள்.  கண்ணகி மதுரையை விட்டு
நீங்குமுன்  அதனை எரியூட்டினாள்.  பாண்டியன்
நெடுஞ்செழியனுக்குப்பின்  அரியணை  ஏறிய
கொற்கை  இளவரசன்  வெற்றிவேற்செழியன்
கண்ணகி  தேவியின்  சினத்தைத்தணிக்கும்
பொருட்டுப்  பொற்கொல்லர்  ஆயிரவரை  உயிர்ப்
பலி கொடுத்ததாக ச்  சிலப்பதிகாரம்  பேசுகிறது.
கவுந்தியடிகள்  உண்ணாநோன்பு  மேற்கொண்டு
உயிர்  துறந்தார். எத்தனையோ  சோக  காட்சிகள்.
ஆனால்  இத்தகைய  துன்பவியல்  காவியத்தை
இளங்கோவடிகள்  துணிவுடன்  கையிலெடுத்து
வரிப்பாட்டுகள்,  குரவை  முதலான  கூத்துகள்,
நாட்டியம்  முதலானவற்றை  இடையிடையே
மிளிரும்  வண்ணம்  இணைத்துப்  பாட்டுடைச்
செய்யுளாக  இயற்றினார்.  அதனால்  சுவை  குன்றாத
முத்தமிழ்க்  காவியமாக த்  திகழ்கின்றது.

இனி  சிலப்பதிகாரத்தில்  உள்ள  பாடல்கள்,  வரிப்
பாடல்கள்,  கூத்துப்  பாடல்கள்  முதலானவற்றில்
சிலவற்றைப்  பார்ப்போம்.:
"மாசறு  பொன்னே!  வலம்புரி  முத்தே!
காசறு  விரையே!  கரும்பே!  தேனே!
அரும்பெறல்  பாவாய்! ஆருயிர்  மருந்தே!
பெருங்குடி  வணிகன்  பெருமட  மகளே!
மலையிடைப்  பிறவா  மணியே  என்கோ?
அலையிடைப்  பிறவா  அமிழ்தே என்கோ?
யாழிடைப்  பிறவா  இசையே  என்கோ?
தாழிருங்  கூந்தல்  தையால்!  நின்னை."
இந்த  இயற்றமிழ்ப்  பாட்டை  அறியாதார்உளரோ?
மாதவி நடனம்  ஆடியதை  விவரிக்கும்  அடிகள்
"எண்ணும்  எழுத்தும்  இயலைந்தும்  பண்நான்கும்
பண்ணின்ற  கூத்துப்  பதினொன்றும்--மண்ணின்மேல்
போக்கினாள்  பூம்புகார்ப்  பொற்றொடி மாதவிதன்
வாக்கினா ல்ஆடரங்கில்  வந்து".
என்று  நடனக்கலை  வல்லுநர்  போல  மிகத்  தெளி
வாகவும்  சிறு  பிழை கூட நேராமலும்  பாடியுள்ளார்.

அடிகள்  சேரநாட்டு  இளவரசர்.  நிமித்திகன்  ஒருவன்
தன்  அண்ணன்  செங்குட்டுவன்  பட்டத்துக்கு  வரமாட்
டார்  என்றும்  தனக்கே  அவ்வாய்ப்பு  கிட்டும்என்றும்
கூறியதால்  அண்ணனின்  அச்சத்தைப்போக்கும்
விதமாக  சகலத்தையும்  துறந்து  குணவாயிற்  கோட்
டத்தில்  வாழ்ந்துவந்தார்.  அவர்  சமணத்துறவியானா
லும்சிறிதும்நடுவுநிலை பிறழாமல்எல்லாத்தெய்வங்
களையும்  சரிசமமாகப்போற்றிப்பாடியுள்ளார்.  இவ்
வாறே  இக் காவிய நிகழ்வுகள்சேர,  சோழ. மற்றும்
பாண்டிய  நாடுகளில்நடைபெற்றபொழுதும்  மூன்று
நாடுகளையும்மூன்று  வேந்தர்களையும்சரிசமமாகப்
போற்றிப்  பாடியுள்ளார்.

இனி  கானல்வரிப்  பாடல்களைப்பார்ப்போம்:
ஒரு  நாள்  மாலை  நேரத்தில்புகார்நகரக்கடற்
கரையில்  கோவலனும்  மாதவியும்  ஏவலர்  புடை
சூழ  அமர்ந்துள்ளனர்.  மாதவி யாழைச்சிறப்பாக
மீட்டிப் பின்னர்கோவலனை  மீட்டுமாறு கோருகிறாள்.
"திங்கள்  மாலை  வெண்குடையான்
      சென்னி செங்கோல்  அதுவோச்சிக்
கங்கை தன்னைப்புணர்ந்தாலும்
புலவாய்வாழி காவேரி!
கங்கை  தன்னைப். புணர்ந்தாலும்
        புலவா  தொழிதல்கயற்கண்ணாய்!
மங்கை  மாதர்  பெருங்கற்பென்
        றறிந்தேன்   வாழி!  காவேரி!
சோழ  மன்னன்  படையெடுத்துக்   கங்கைக்  கரைவரை
சென்று  அப்பகுதியைத்  தன்  ஆட்சிக்கீழ்  கொண்டு
வந்தான்.  அப்படி. கங்கையைச்  சேர்ந்தாலும்  காவிரி
மீதுள்ள   உரிமை   நீங்காது.(  கங்கையும் காவிரியும்
பெண்ணாக உருவகப்படுத்தப்பட்டன.)  இதுவே   கற்
புடைப்  பெண்டிரின்  குணமாகும்.  இதைப்புரிய
வைத்த காவிரியே நீ வாழ்க.  மேலும்ஒரு பாடல்:
" எறிவளைகள்  ஆர்ப்ப இருமருங்கும்   ஓடும்
   கறைகெழுவேல்  கண்ணொடு  கடும்கூற்றம்  காணீர்
   கடும்கூற்றம்காணீர்  கடல்வாழ்நர் சீறூர்க்கே.
   மடங்கெழு மென்சாயல்  மகள்  ஆயதுவே!"
வளைகளின்ஒலிகேட்டுப்  பயந்து இரண்டு  பக்கமும்
அலைபாயும்  குருதிக்கறை படிந்த வேல்போலும்
இவள்இருகண்களும்  கொல்லும்எமனோ? பாரீர்.
கடல்வளம் நிறைந்த இந்தச் சிற்றூரிலே  வாழும்
அழகிய  இவள்  பெண்ணா?  இல்லை;  கொல்லும்
எமனென்று  அறிக.  மற்றும்ஒருஅழகிய பாடல்:
"திரைவிரி  தருதுறையே!  திருமணல்விரிஇடமே!
விரைவிரி  நறுமலரே  மிடைதரு  பொழிலிடமே
மருவிரி  புரிகுழலே  மதிபுரை திருமுகமே
இருகயல்  இணைவிழியே  எனையிடர்  செய்தவையே."
மணம்நிறைந்து  வீசும்சுருண்ட  கருங்கூந்தலும்
நிலாப்போன்ற அழகுமுகமும்,  இருமீன்போன்ற
கருவிழிகளுமே  எனக்குத்துயரம்தருகின்றன.

இவ்வாறுகோவலன்பாடக்கேட்ட மாதவி இவர்
வேறு ஒரு கருத்துடையர்என்றுஎண்ணித்தானும்
வேறு  ஒரு கருத்துடையவள்போலக்காட்டிக்கொள்ள
எண்ணிப்பின்வரும்  பாடல்களைப்பாடினாள்:
"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
    மணிப்பூ ஆடை  அதுபோர்த்துக்
கருங்க  யற்கண்  விழித்தொல்கி
    நடந்தாய் .வாழி காவேரி!
கருங்கயற்கண்விழித்தொல்கி
   நடந்தவெல்லாம்நின்கணவன்
திருந்து செங்கோல்  வளையாமை
   அறிந்தேன். வாழி காவேரி!'
காவிரியே!  நீ  இப்படி விழித்த விழி திறந்தபடி
அசைந்து  ஆடிப்  பாய்வதற்குச்  சோழமன்னனின்
செங்கோல்ஆட்சிதான்காரணம்.

மாதவி பாடிய  ஏட்டிக்குப்  போட்டி  பாட்டால்கோவலன்
மாதவி மேல்சந்தேகப்பட்டு அவளைப்பிரிந்து
கண்ணகியை  வந்தடைந்தான்.  இருவரும்  கலந்து
ஆலோசித்து   மதுரைக்குச்  செல்லலாம்என்றும்
அங்கே கண்ணகியின்காற்சிலம்பை விற்றுத்
தொழில்புரியலாம்  என்றும்  முடிவெடுத்தனர்.
மதுரைக்குச்  சென்ற அவர்கள்  மாதரி என்னும்
இடையர்  குலப்பெண் வீட்டில்தங்கினர்.  சிலம்பு
விற்கச்  சென்ற  கோவலன்  கொலையுண்டான்.
 ஆயர்பாடியில்சில தீநிமித்தங்கள் தோன்றின.
மாதரி உடனடியாக ஆய்ச்சியர்  குரவைக்கூத்தை
நடத்த  முடிவெடுத்தாள்.  பாடல்கள்  பின்வருமாறு:
" காரி  கதன்அஞ்சான்  பாய்ந்தானைக்காமுறுமிவ்
வேரி மலர்க்  கோதையாள்சுட்டு."
காளையை அடக்கியவனுக்கே  காரிகை.
நெற்றிச்  செகிலை  அடர்த்தாற்குரியவிப்
பொற்றொடி  மாதரால்  தோள்.
மல்லல்மழவிடை  ஊர்ந்தாற்குரியளிம்
முல்லையம்பூங்குழல்தான்.
நுண்பொறி  வெள்ளை  அடர்த்தாற்கே  ஆகுமிப்
பெண்கொடி மாதர்தன்தோள்.
பின்னர்  குரவை  ஆடத்தொடங்கினர்.  கூத்த
நூலில்  கூறியுள்ள  விதிமுறை  தவறாது
ஆடினர்.பாடவும் தொடங்கினர்:
"கன்று  குணிலாக்கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம்ஆனுள்வருமேல்  அவன்வாயில்
கொன்றையம்  தீங்குழல்  கேளாமோ தோழீ!

பாம்பு  கயிறாக்  கடல்கடைந்த மாயவன்
ஈங்குநம்  ஆனுள் வருமேல்அவன்வாயில்
ஆம்பலம்தீங்குழல்  கேளாமோ தோழீ!

"மடந்தாழும்  நெஞ்சத்துக்  கஞ்சனார்  வஞ்சம்
நடந்தானை  நூற்றுவர்பால்  நாற்றிசையும்  போற்றப்
படர்ந்தா  ரணம்முழங்கப்  பஞ்சவர்க்குத்  தூது
நடந்தானை  ஏத்தாத  நாவென்ன  நாவே
நாராய  ணாவென்னா  நாவென்ன நாவே."
மாமனாகிய  கம்சன்  செய்த  சூழ்ச்சிகளை
எல்லாம்வென்றவனை;  பாண்டவர்க்காக
கௌரவர்களிடம்தூது சென்றவனை
வாழ்த்தாத நாவும்  ஒரு  நாவா?  நாராயணா
என்று  போற்றிப்  பாடாத நாவும்ஒரு நாவா?

கண்ணகி  கணவன்  கொலைக்கு  நீதி  கேட்ப
தற்காகப்  பாண்டியன்  அரண்மனைக்கு  வந்து
வாதாடும்  காட்சியில்  நாடக நுட்பங்களை
அமைத்துக்  காவியத்தை  இயற்றியுள்ளார்.

"நீர்வார்  கண்ணை  எம்முன் வந்தோய்
யாரை  யோநீ  மடக்கொடி  யோய்என"
பாண்டியன்  கேட்டதும்
"தேரா  மன்னா  செப்புவ  துடையேன்;
................................................................
பெரும்பெயர்ப்   புகாரென்  பதியே; அவ்வூர்
ஏசாச்  சிறப்பின்  இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து  வாணிகன்  மகனை  ஆகி
வாழ்தல்  வேண்டி  ஊழ்வினை  துரப்பச்
சூழ்கழல்  மன்னா  நின்னகர்ப்  புகுந்தீங்
கென்காற்  சிலம்பு  பகர்தல் வேண்டி  நின்பால்
கொலைக்களப்  பட்ட  கோவலன்  மனைவி
கண்ணகி  என்பதென்  பெயரே"
என்று முழங்கினாள்.விவாதம்  முடிந்த  பிறகு
நெடுஞ்செழியன்  தன்  தவற்றை  உணர்ந்து
உயிரை  விடுத்தான்.  அவன்  மனைவி
கோப்பெருந்தேவியும்  உடனே  உயிர்நீத்தாள்.
"காவி  உகுநீரும் கையில்  தனிச்சிலம்பும்
ஆவி  குடிபோன  அவ்வடிவும் -பாவியேன்
காடெல்லாம்  சூழ்ந்த  கருங்குழலும்  கண்டஞ்சிக்
கூடலான்கூடாயி  னான்."
"சிவந்த  விழிகளிலிருந்து  வழியும்  கண்ணீரும்
கையிலே  ஒற்றைச்சிலம்பும்  நடைப்பிணம்
போன்ற  தோற்றமும்  விரிந்த  கருங்குழலும்
கண்ணில்  பட்ட. உடனேயே  ஏதோ  தவறு
நடந்துள்ளது  என்று  அஞ்சிப்  பாண்டியன்  பிணமானான்
என்று  அடிகள்  நவின்றார்.

சிலப்பதிகாரத்தில்  எந்தப்  பாட்டைச்  சொல்வது?
எந்தப்  பாட்டை  விடுவது?  கானல்வரி,  வேட்டுவ
வரி,  ஆய்ச்சியர்  குரவை  போன்ற  இசைப்
பாடலாகட்டும்,  இயற்றமிழ்ப்  பாடலாகட்டும்,
நாடக  அமைப்பாகட்டும்  எல்லாமே  மிக்க
எழில்நயத்தோடு  இயற்றப்பட்டவை.  நெஞ்சை
அள்ளும்  சிலப்பதிகாரம்  என்னும்  கூற்று
உண்மை;  வெறும்  புகழ்ச்சி  அன்று.








.




Thursday 17 May 2018

தமிழ் இலக்கியத்தில் கையறுநிலைக் காட்சிகள்

கையறுநிலை  என்பது  செயலற்ற  நிலையைக்  குறிப்பதாகும்.  மிக  நெருங்கிய  உறவினர்க்கோ
அறிந்தவர்க்கோ  உயிரிழப்போ  வேறு ஏதேனும்
இழப்போ  ஏற்படும்  பொழுது
என்ன  செய்வது  ஏது  செய்வது  என்று  திகைத்துக்
கைகளைப்  பிசைந்துகொண்டு  நிற்றல்
கையறுநிலை  என்பதாகும்.
சோகக்  காட்சி எனக்  கூறலாம்.  இவ்வகைக்  காட்சி
கள்  இலக்கியத்தில்  எத்தனை
யோ  உள்ளன.  அவற்றில்  சில
வற்றைப்  பற்றிப்  பார்ப்போம்:

புறநானூற்றில்  குடவாயிற்
கீரத்தனார் என்னும்  புலவர்
ஒல்லையூர்  கிழான்மகன்
பெருஞ்சாத்தன்  இறந்தபோது
"இளையோர்  சூடார்  வளை
       யோர்  கொய்யார்;
நல்யாழ்  மருப்பின்  மெல்ல
        வாங்கிப்
பாணன்  சூடான்; பாடினி
        அணியாள்;
ஆண்மை  தோன்ற  ஆடவர்க்
         கடந்த
வல்வேற்  சாத்தன்  மாய்ந்த
        பின்றை
முல்லையும்  பூத்தியோ?  
        ஒல்லையூர்  நாட்டே!"
பெருஞ்சாத்தன்  இறந்த  கார
ணத்தால்  இளையோர்  வளை
யணிந்த  பெண்டிர்  பாணர்
பாடினியர்  என  எவரும்  பூவைச்  சூடப்போவதில்லை;
முல்லைப்  பூவே!  ஒல்லையூரில்  ஏன்  பூத்தாய்?
என்று  பாடினார்.  பிரிவாற்றா
மை  காரணமாக  முல்லை
பேசாது  எனத்  தெரிந்தும்  மன
நெகிழ்ச்சியுடன்  பாடினார்.

அதே புறநானூற்றில்  வேறு  சில  பாடல்களைப்  பார்ப்போம்
"அற்றைத்  திங்கள்  அவ்வெ
         ண்ணிலவில்
எந்தையும்  உடையேம்; எம்
          குன்றும்  பிறர்கொளார்;
இற்றைத்  திங்கள்  இவ்வெண்
           ணிலவில்
வென்றெறி  முரசின்
             வேந்தரெம்
குன்றும்  கொண்டார்;  யாம்
              எந்தையும்  இலமே"
பாரி  இறந்ததையடுத்து  அவர்
பெண்மக்கள்  இருவரும்  மிக்க
சோகத்துடன்  பாடியது.
கடந்த  மாதம்  நிலவொளியில்
எங்கள்  தந்தை  உடனிருந்தார்;
எங்கள்  மலையும்  எம்வசம்
இருந்தது.  இந்த  மாதம்  நில
வொளியில்  தந்தையும்  இலர்;
எங்கள்  மலையும்  இலை.

பாரியின்  மிக  நெருங்கிய
நண்பரான  புலவர்  கபிலர்"
"பாரி  மாய்ந்தெனக்  கலங்கிக்
        கையற்று
நீர்வார்  கண்ணேம்  தொழுது
         நிற்பழிச்சிச்
சேறும்  வாழியோ  பெரும்
          பெயர்ப்  பறம்பே!
கோல்திரள்  முன்கைக்  குறுந்
           தொடி  மகளிர்
நாறிருங்  கூந்தற்  கிழவரைப்
            படர்ந்தே"
பாரி  மறைவு  அவர்  மக்களை
மட்டுமல்லாது  கபிலரையும்
வெகுவாகப்  பாதித்தது.  கைய
று  நெஞ்சினராய்  விழிகளில்
கண்ணீர்  மல்க,  பாரிமகளிர்
உடன்வரப்  பறம்பு  மலையை
நீங்கினார்.  இம்மகளிர்க்
கேற்ற  துணைவரைத்  தேடு
வதற்குப்  பெருமுயற்சி  செய்
தார்.  அவர்  முயற்சி  தோல்வி
யுற்றதால்  வடக்கிருந்து
உயிர்துறந்தார்.  பின்னர்
ஔவையார்  அம்மகளிர்க்கு
மணம்  செய்வித்ததாகத்
தனிப்பாடல்கள்  தெரிவிக்
கின்றன.

இனி  கம்பராமாயணத்தில்  சில  காட்சிகளைப்  பார்ப்போம்
இராமன்  தந்தைசொற்படி
ஆட்சியைத்  துறந்து  காட்டுக்
குக்  கிளம்பும்  பொழுது  மக்கள்,  விலங்குகள், செடி
கொடிகள்  போன்ற  எல்லா
உயிரினங்களும்  பெருந்துயர்
எய்தினர்.  கம்பர்  பாடிய
பாடல்களைப்  பார்ப்போம்:
"கிள்ளையொடு  பூவை
      கிளர்ந்தழுத;கிளர்மாடத்
துள்ளுறையும்  பூசை  யழுத;
      உருவறியாப்
பிள்ளை  யழுத;  பெரியோரை
      என்சொல்ல?
வள்ளல்வனம்  புகுவானென்
      றுரைத்த  மாற்றத்தால்.

ஆவும்  அழுத;  அதன்கன்
      றழுத;  அன்றலர்ந்த
பூவும்  அழுத; புனற்புள்  ளழுத;
       கள்ளொழுகும்
காவும்  அழுத;  களிறழுத;
       கால்வயப்போர்
மாவும்  அழுத;  அழுதவம்
       மன்னனை  மானவே.

இராமன்  தன்  தாயாரான
கோசலையிடம்  விடைபெறச்
சென்ற. பொழுது  கம்பர்  கவிக்
கூற்றாகப்  பாடியது:
"குழைக்கின்ற  கவரி  யின்றிக்
கொற்றவெண் குடையுமின்றி
இழைக்கின்றவிதிமுன்செல்ல
தருமம்பின்  இரங்கி  யேக
மழைக்குன்றம்அனையான்மௌலி
கவித்தனன்வருமென்றென்று
தழைக்கின்றஉள்ளத்தன்னாள்
முன்னொருதமியன்சென்றார்.

இவை  ஆரண்யகாண்டத்தில்
நிகழ்ந்தவை.  ஏனைய  பிற
காண்டங்களிலும்  பலப்பல
பாடல்கள்  உள்ளன.  இருப்பி
னும்  யுத்த  காண்டத்தில்
 உள்ள  பாடல்களைப்  பற்றி
ஆராய்வோம்.

கும்பகர்ணன்  செருக்களத்தில்
இறந்தான்  என்ற செய்தி
யறிந்து  இராவணன்  புலம்பி
அழுதான்:
"தம்பியோ  வானவர்ஆம்
    தாமரையின்காடுழக்கும்
தும்பியோ  நான்முகத்தோன்
   சேய்மதலைதோன்றலோ
நம்பியோ  இந்திரனை
   நாமப்  பொறிதுடைத்த
எம்பியோ  யானுன்னை
   இவ்வுரையும்  கேட்டேனே!

என் தம்பியோ?  பிரம்மனின்
பேரனோ?  ஆடவரிற்  சிறந்த
வனோ?  இந்திரனை  அவன்
அஞ்சுமாறு  போரிட்டு  வென்
றவனோ?  என்பின்  பிறந்தும்
எனக்கு  முந்தி இறந்த இந்தச்
செய்தியைக்  கேட்டேனே!

இந்திரஜித்தன்  ஏவிய  பிரம்
மாஸ்திரத்தால்  இராமனைத்
தவிர  ஏனைய  இலக்குவன்,
சுக்ரீவன்,அங்கதன்  போன்ற
வீரர்கள்  மரணமடைந்தனர்.
இதனைக்  கண்டு  இராமன்
மயக்கமுற்றான்.  இந்த  நிகழ்
வைச்  சீதைக்குக்  காட்ட எண்ணி  இராவணன்  புஷ்பக
விமானத்தில்  சீதையை  அழைத்துவரச்  செய்தான்.
சீதை  இராமன்  இறந்ததாக
எண்ணி  அழுது  புலம்பினாள்.

"அடித்தாள்முலைமேல்வயிறு
  அலைத்தாள்;அழுதாள்;
  தொழுதாள்;அனல்வீழ்ந்த
கொடித்தான்  என்ன  மெய்
சுருண்டாள்;கொதித்தாள்;
பதைத்தாள்;குலைவுற்றாள்;
துடித்தாள்;மின்போல்  உயிர்
காப்பச்  சோர்ந்தாள்;
சுழன்றாள்;துள்ளினாள்;
குடித்தாள்;துயரை; உயிரோடும்  குழைந்தாள்;
உழைத்தாள்;குயிலன்னாள்.

இந்தக்  காட்சியைக்  கண்ட
வானவரும்  தெய்வங்களும்
மனம்  பதறித் துடித்தனர்.
பின்னர்  அனுமன்  சஞ்சீவி
மலையைக்  கொணர்ந்து
அனைவரையும்  காப்பாற்றி
னான்.

இராமர்,  இலக்குவர்  மற்றும்
அனுமன் ஆகியோரை எப்படி
வீரத்தின்  விளைநிலமாகக்
கருதுகின்றோமோ  அதைப்
போலவே  எதிர்அணியில்
இராவணன்,  கும்பகர்ணன்
மற்றும்  இந்திரஜித்தன் ஆகியோரைக் கருதலாம்.  ஒரே  ஒரு வேறுபாடு  என்னவென்றால்  இராவணன்
அணியில்  அறக்கூறுகள்  சரி
யாகப்  பின்பற்றப்பட்டில.

இந்திரஜித்தன்  வெற்றிபெறப்
பெரும்  முயற்சி  மேற்கொண்ட
போதிலும்  அவன்  தோல்வி
யடைந்தான்.  போரில்  கொல்லப்  பட்டான்.  இந்தச்
செய்தியைக்  கேள்வியுற்று
இராவணன்  எல்லையிலாத்
துன்பமடைந்தான்.  அவன்
மனைவி  மண்டோதரி  மகன்
மறைவுச்  செய்தி கேட்டு  வந்து
அவன்  உடல்மேல்  விழுந்து
அழுது  புலம்புகின்றாள்.
"அஞ்சினேன்  அஞ்சினேன்அச்
  சீதையென் றமிழ்தால்செய்த
நஞ்சினால்  இலங்கைவேந்தர்
நாளையித்  தகையர் அன்றோ

இன்றைக்கு  என்மகனுக்கு
நேர்ந்த  கதிதான்  நாளை என்
கணவனுக்கும்  நேரப்போகி
றது. அதற்குக்  காரணம்  சீதை
யென்ற  அமிர்தத்தால் செய்யப்பட்ட நஞ்சேயாகும்.
என்று  அழுது அரற்றினாள்.

இறுதியாக  இராவணன்
கொல்லப்பட்டான். மண்டோதரி கணவன் உடல்மேல்  விழுந்து  கதறிக்
கதறி அழுது புலம்பித் தவித்தாள். இராவணன் உடல்
முழுவதும்  இராமன் விடுத்த
அம்பு  துளைத்ததனால் உரு
வான  காயங்கள்.  கம்பர் பெரு
மான்  கவிக்கூற்றாகப் பல
பாடல்கள்  பாடினார். அவை
பின்வருமாறு:
"வெம்மடங்கல் வெகுண்ட
னைய சினமடங்கமனமடங்க
வினயம்  வீயத்
தெவ்வடங்கு பொருதடக்கைச்
செயலடங்க மயலடங்க
ஆற்றல் தேயத்
தம்மடங்கு முனிவரையும்
தலையடங்கநிலையடங்கச்
சாய்த்த நாளின்
மும்மடங்கு பொலிந்தனவம்
முறைதுறந்தான்உயிர்துறந்த
முகங்கள்  அம்மா!

வெள்ளெருக்கஞ்சடைமுடியான் வெற்பெடுத்த திருமேனி
மேலும்  கீழும்
எள்ளிருக்கும்  இடமின்றி
உயிரிருக்கும் இடம்நாடி
இழைத்த வாறோ?
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்
சானகியை மனச்சிறையில்
கரந்த காதல்
உள்ளிருக்கும் எனநாடி  உடல்
புகுந்து தடவியதோ
ஒருவன் வாளி?

இராவணனின் உடல்மேல்
விழுந்து அழுது  புலம்பிய
மண்டோதரி உடனடியாக
உயிர்துறந்தாள்.

இராமபிரான்  விபீடணனோடு
செருக்களம் வந்து பார்வையிடும்  பொழுதில்
அண்ணனின்  உயிரற்ற  உட
லைப்  பார்த்து  விபீடணன்
அழுது  புலம்பினான்.
"உண்ணாதே உயிர் உண்ணா
தொருநஞ்சு  சனகியெனும்
பெருநஞ்  சுன்னைக்
கண்ணாலே நோக்கவே
போக்கியதே உயிர் நீயும்
களப்பட்  டாயே;
எண்ணாதேன்எண்ணியசொல் இன்றினித்தான் எண்ணு
தியோ  எண்ணில்ஆற்றல்
அண்ணாவோ!அண்ணாவோ!
அசுரர்கள்தம் பிரளயமே!
அமரர்  கூற்றே!
சானகி  என்னும்  பெருநஞ்சு
உன்னைக்  கண்ணாலே
நோக்கியே  உன்உயிர்  போக்
கியது.  நீ  செருக்களத்தில்
பலியானாய். அசுரர்க்குப்  பிர
ளயம் போன்று விளங்கினாய்.தேவர்கட்கு
யமனாகத் திகழ்ந்தாய். அண்
ணாவோ! அண்ணாவோ!
என்று அரற்றினான். மேலும்
"போர்மகளைக் கலைமகளைப்
புகழ்மகளைத் தழுவியகை
பொறாமை  கூர
சீர்மகளைத் திருமகளைத்
தேவர்க்கும் தெரிவரிய
தெய்வக்  கற்பின்
பேர்மகளைத் தழுவுவான்
உயிர்கொடுத்துப்பழிகொண்ட
பித்தா! உன்னைப்
பார்மகளைத் தழுவினையோ
திசையானை பணையிறுத்த
பணைத்த  மார்பால்.
என்று உள்ளம் நொந்து பாடி
அண்ணனை நினைத்து அழு
தான்.  பின்னர்  இராமன் கேட்
டுக்  கொண்டபடி  அண்ணனுக்
குரிய  ஈமச் சடங்குகளைச்
செய்தான். பின்னர்  இராமன்
உத்தரவுப்படி இலஙகைக்கு
அரசனாக முடிசூடிக் கொண்டான்.

பிறன்மனையை  நயந்த குற்
றத்திற்காக
"முக்கோடி  வாழ்நாளும்
முயன்றுடையபெருந்தவமும்
முதல்வன்  முன்னாள்
எக்கோடி எவராலும்  வெலப்
படாய்  எனக்கொடுத்த வரமும்"
பெற்ற இராவணன் அருமை
பெருமை இழந்து இறந்தது
மிகமிகக்  கொடுமையானது.

Sunday 6 May 2018

சங்க காலத்தில் நிலவிய வீர வாழ்க்கை

இன்றைக்கு  இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு  முன்
உலகம்  முழுவதிலும்  வாழ்ந்த  மக்கள்  யாவரும்
வீரச்  சிந்தனையோடு  திகழ்ந்தார்கள்.  எல்லா  மொழி
களிலும்  உருவான  இலக்கியங்கள்  வீரத்தை  முன்னிலைப்
படுத்தின.  காரணம்  என்னவென்றால்  மலைக்  குகை
களிலும்,  காடுகளிலும்  மனிதர்கள்  வாழ்ந்த  பொழுது
புலி, சிங்கம், கரடி, யானை  முதலான  விலங்குகளோடும்
சில  சமயங்களில்  மனிதர்களோடும்போர்  புரிய  நேர்ந்தது.
பிற்பாடு  நிரந்தரமாக  இருப்பிடங்களை  உருவாக்கி
அதன்  தொடர்ச்சியாக  அரசுகளை  ஏற்படுத்தினர்.
இத்தகைய  அரசுகள்  யாது  காரணத்தாலோ  தமக்குள்
போரிட்டன.  இப்படியாக  உலகம்  முழுவதும்  அடிக்கடி
போர்  நடைபெறுவதும்  அவற்றில்  மக்கள்  தங்களை
மிகவும்  ஈடுபடுத்திக்  கொள்வதும்  இதன்  விளைவாக
ஆண்கள்  மட்டும்  அல்லாமல்  பெண்களும்  வீர  உணர்வு
மிக்கு   வாழ்வதும்  இயற்கையாயிற்று.  எல்லா  மொழிகளிலும்
வீரத்தைப்  புகழ்ந்து  இலக்கியங்கள்  தோன்றலாயின.

தமிழ்நாட்டிலும்  ஆணும்  பெண்ணும்  வீர  உணர்வோடு
வாழ்ந்ததில்  விய்ப்பொன்றும்  இல்லையல்லவா?  சங்க
காலத்தில்  தமிழ்மக்கள்  காதலையும்  வீரத்தையும்  இரு
கண்களாகக்  கருதினர்.  சங்க  இலக்கியங்களான  எட்டுத்
தொகையும்  பத்துப்பாட்டும்  காதலை  அகத்துறையில்
வைத்து  வீரத்தைப்  புறத்துறையில்  சேர்த்துப்  போற்றி
வளர்த்தன.  சங்க  இலக்கியமான  புறநானூற்றில்  வீரம்
எப்படி  கையாளப்  பட்டது  என்று  பார்ப்போம்.
காவற்பெண்டு  என்னும்  பெண்பாற்  புலவர்  பின்வருமாறு
பாடியுள்ளார்:
"சிற்றில்  நற்றூண்  பற்றி  நின்மகன்
யாண்டுள  னோவென  வினவுதி  யாயின்
என்மகன்  யாண்டுளன்  ஆயினும்  அறியேன்;
புலியிருந்து  போகிய  கல்லளை  போல
ஈன்ற  வயிறோ  இதுவே;
தோன்றுவன்  மாதோ  போர்க்களத்  தானே."
"நின்மகன்  எங்கிருக்கிறான்?  எனக்  கேட்பவர்க்கு
அவன்  எங்கிருக்கிறான்  என்பதை  அறியேன்.  அவனை
ஈன்ற  வயிறு  புலியிருந்து  வெளியேறிய  கற்குகை  போல
இதோ  இருக்கிறது.  அவன்  ஏதாவது  போர்க்களத்தில்
தோன்றுவான்"  என்று  பதில்  அளிக்கின்றாள்.

வேறொரு  பெண்  நடந்துகொள்ளும்  விதத்தைப்
பார்ப்போம்.  நேற்றைக்கு  முந்திய  நாளில்  இவள்  தந்தை
போர்க்களம்  சென்று  யானையோடு  போரிட்டு  மடிந்தனன்.
நேற்று  நிகழ்ந்த  போரில்  இவள்  கணவன்  பகைவரோடு
போரிட்டு  இறந்தான்.  இன்றும்  போர்ப்பறைச்  சத்தம்
கேட்டுத்  தனக்கு  ஒரே  மகன்தான்  இருக்கிறான்
என்பதையும்  புறந்தள்ளி  அவனுக்கு  வெள்ளாடை
உடுத்திவிட்டுத்  தலையில்  எண்ணெய்  தடவிச்  சீவி
அவன்கையில்  வேலைக்  கொடுத்துப்  போர்க்களம்
நோக்கிச்  செல்க"  என்று  அனுப்பி  வைத்த  மனவுறுதி
யை  என்னவென்று  இயம்புவது?  பாடல்  பின்வருமாறு:
"கெடுக  சிந்தை;  கடிதிவள்  துணிவே;
மூதிற்  பெண்டிர்  ஆதல்  தகுமே;
மேனாள்  உற்ற  செருவில்  இவள்தன்னை
யானை  எறிந்து  களத்தொழிந்  தனனே;
நெருநல்  உற்ற  செருவிற்  கிவள்கொழுநன்
பொருநரை  விலங்கி  ஆண்டுப்பட்  டனனே;
இன்றும்  செருப்பறை  கேட்டு  விருப்புற்று
வேல்கைக்   கொடுத்த  வெளிதுவிர்த்த  உடீஇ
பாறுமயிர்க்  குடுமி  எண்ணெய்  நீவி
ஒருமகன்  அல்லது  இல்லோள்
செருமுக  நோக்கிச்  செல்கென  விடுமே!
இந்தப்  பெண்  புரிந்த  செயல்  மிகவும்  அதிர்ச்சியை
உண்டாக்குவது.  ஏனென்றால்  தந்தையை
இழந்து,  கணவனை  இழந்து,  கொள்ளிவைக்க
இருக்கின்ற  ஒரே  மகனையும்  இழக்கத்  துணி
கின்றாள்  என்றால்  வீர  உணர்வு  இந்தப்  பெண்ணை
எவ்வளவு  அழுத்தமாக  ஆட்கொண்டிருப்பது
புலப்படும்.

வேறு  ஒரு  பெண்  எந்த  வகை  உணர்வைக்
கொண்டிருந்தாள்  என்று  பார்ப்போம்.  இந்தப்
பெண்ணின்  மகன்  பகைவரிடம்  புறமுதுகு
காட்டிப்  போர்க்களத்திலிருந்து  திரும்பியதாகக்
கேள்வியுற்றாள்.  உடனே  வெகுண்டெழுந்து  அவ்வாறு
என்மகன்  புறமுதுகு  காட்டித்  திரும்பியிருந்தால்
அவன்  குழந்தையாயிருந்த  போது  அவனுக்குப்
பாலூட்டிய  என்  முலையை  அறுத்தெறிவேன்
என்று  வஞ்சினம்  கூறி  வாளொடு  செருக்களம்
சென்று  அங்கே  கிடந்த  பிணங்களைப்  புரட்டிப்
பார்த்துத்  தன்மகன்  பிணத்தைக்  கண்டுபிடித்து
அது  சிதைந்து  கிடந்தமைகண்டு  தன்மகன்
புறமுதுகு  காட்டித்  திரும்பிலன்;  போரில்  வீர
மரணம்  அடைந்தான்  என்று  உறுதிசெய்து
கொண்டு  அவனைப்  பெற்ற  பொழுதைக்
காட்டிலும்  மிகமிக  மகிழ்ந்தனள்.  இவளது  வீர
உணர்வு  மெய்சிலிர்க்க  வைக்கிறது.  இனி
பாடலைப்  பார்ப்போம்:
நரம்பெழுந்  துலறிய  நிரம்பா  மொன்தோள்
முளரி  மருங்கின்  முதியோள்  சிறுவன்
படையழிந்து  மாறினன்  என்றுபலர்  கூற
மண்டமர்க்  குடைந்தனன்  ஆயின்  உண்டவென்
முலையறுத்  திடுவென்  யானெனச்  சினைஇக்
கொண்ட  வாளொடு  படுபிணம்  பெயராச்
செங்களம்  துழவுவோள்  சிதைந்துவே  றாகிய
படுமகன்  கிடக்கை  காணூஉ
ஈன்ற  ஞான்றினும்  பெரிதுவந்  தனளே.
அப்பப்பா!  இந்த  வீர  உணர்வை  என்னவென்று
சொல்வது.  சங்க  காலத்தில்  ஆணும்  பெண்ணும்
மெய்சிலிர்த்து  மயிர்க்கூச்செறியும்  வண்ணம்
வீர  உணர்வை  வெளிப்படுத்தினர்  என்பதில்
எள்ளளவேனும்  ஐயமில்லை.










Tuesday 1 May 2018

சங்க இலக்கியத்தில் ஒரு சொல்லோவியம்

சங்க  காலத்தில்  நிலவிய  உண்வுப்  பழக்கம்  ஒன்றையும்   அந்த  உணவைப்
புதிதாகத்   திருமணமான  பெண்  தன்  கணவனுக்காக  எவ்வளவு  ஆர்வமாகச்
சமைத்தாள்  என்பதையும்  சங்கப்பாடல்  ஒன்றின்  வாயிலாக  அறிவோம்.
தன்  கணவனுக்காக  எவ்வளவு  மெனக்கெட்டுச்  சமைக்கின்றாள்  என்பதைப்
படிக்கும்  போது  அப்பெண்ணை   மெச்சிப்   பாராட்ட   வேண்டும்   என்று
தோன்றுகின்றது.  அருமையான  சொல்லோவியம்..  அந்த   நிகழ்வைப்
பற்றிப்   பார்ப்போம்.  சங்க  இலக்கியமான  குறுந்தொகையில்
ஒரு  அருமையான  கவிதை  காணப்படுகிறது.  இந்தக்  கவிதை
அடிப்படையில்   அகத்துறைப்   பாடலாகும்.   அதாவது   கணவன்
மனைவிக்  கிடையே   நிகழும்   அன்பு. நிகழ்வாகும்..  புதிதாகத்
திருமணமான  ஒரு  பெண்  தன்   கணவனை   எவ்வாறு   உபசரிக்
கின்றாள்  என்பதைச்  சொல்லோவியமாகக்  காட்டுகின்றார்.  தன்
வீட்டுக்கு  வந்த  கணவனுக்கு   உணவு  ஆயத்தம்  செய்தல்  வேண்டும்.
அதையும்  அவர்க்குப்  பிடித்த  வகையில்  விரும்பும்  உணவை  மிக
விரைவில்  செய்து  முடித்தல்  வேண்டும்.  கவிதை  பின்வருமாறு:
"முளிதயிர்  பிசைந்த  காந்தள்  மெல்விரல்
தழுவுறு  கலிங்கம்  கழாஅது  உடீஇக்
குவளை  உண்கண்  குய்ப்புகை  கமழத்
தான்துழந்  தட்ட  தீம்புளிப்  பாகர்
இனிதெனக்  கணவன்  உண்டலின்
நுண்ணிதின்  மகிழ்ந்தன்று  ஒண்ணுதல்  முகனே".
தன்கணவனின்  பசியை  ஆற்றவேண்டி  அவர்க்குப்  பிடித்தமான
தயிர்க்குழம்பைச்  சமைத்துக்கொண்டிருக்  கின்றாள்.  அவசரமாக
முற்றிய  தயிருள்ள  பாத்திரத்தில்   தன்  காந்தள்  போன்ற  மெல்லிய
விரல்களை  விட்டுப்  பிசைந்து   விரல்களில்   ஒட்டியிருக்கும்  தயிரைத்
தன்  பட்டாடையில்  துடைத்துக்  கொண்டு   அந்த  ஆடையைக்  களைந்து
துவைக்காமல்  அப்படியே  உடுத்திக்கொண்டு  தனது  குவளை  மலர்
போன்ற  மைதீட்டிய  கண்களில்  தாளிக்கும்  புகை  கமழத்  தானே  துழாவிச்
சமைத்த  இனிய  புளிப்பை  உடைய  குழம்பைத்  தன். காதல். கணவன்
உண்பதைக்  கண்டு  காதல்  மனைவியின்   அழகிய  நெற்றியை   உடைய
முகம்  நுட்பமாக  மலர்ந்தது.  சங்க  நூல்களில்  உள்ள
சிறப்பு  என்னவென்றால்  எதையும்  மிகைப்படுத்தாமல்
உள்ளதை  உள்ளபடி  சொல்லோவியமாக  வரைவதுதான்.

அடுத்து  வேறொரு  காட்சியைப்  பார்ப்போம்.  ஆசுகவி
பாடுவதில்  காளமேகப்  புலவர்  மிகவும்  புகழ்
பெற்றவர்.  அவரிடம்  கரி  என்ற  சொல்லை  முதலாகக்
கொண்டு  உமி  என்ற  சொல்லில்  முடியுமாறு  ஒரு
வெண்பாப்  பாடுமாறு  கோரிக்கை  விடப்பட்டது.
"கரிக்காய்  பொரித்தாள்கன்  னிக்காயைத்  தீய்த்தாள்;
பரிக்காயைப்  பச்சடியாய்ப்  பண்ணாள்--உருக்கமுள்ள
அப்பைக்காய்  நெய்துவட்டல்  ஆனாள்அத்  தைமகள்
உப்புக்காண்  சீச்சி  உமி".
அத்தைமகள்  அத்திக்காயைப்  பொரித்தாள்;(கரிக்காய்=
அத்திக்காய்)  கன்னிக்காய்(வாழைக்காய்)  தன்னைத்
தீய்த்தாள்;  பரிக்காய்(மாங்காய்)  தன்னைப்  பச்சடி யாய்ப்
பண்ணினாள்;  அப்பைக்காய்(கத்திரிக்காய்)  தன்னை
நெய்துவட்டல்  செய்தாள்.  ஆனால்  உப்பு  கூடிவிட்டது.
அதனால்  சீச்சி  அனைத்தையும்  உமிழ்ந்துவிடு.
உமிழ்  என்ற  சொல்லில்  உள்ள  கடைசி  எழுத்தான
'ழ்'  என்பது  கெட்டு  மறைந்தது  கடைக்குறை.
ஆக,"கரி"  என்று  எடுத்து  "உமி"  என்று  முடித்தார்.

அண்மைக்  காலங்களில்  நடைபெற்ற  சுவையான
நிகழ்ச்சிகளைப்  பார்ப்போம்.  ஒரு  திருமண விழாவில்
கவிஞர்  ஒருவர்  நீண்ட  பாடலைப்  படித்தார்.  அதில்
உள்ள  முக்கியமான  அம்சங்கள்  வருமாறு:
"ஊறுகாய்  ஒன்றே  உலகை  விலைகொள்ளும்;
வேறுகாய்  வர்க்கங்கள்  வேண்டாவே".
"பாயாசம்  கொஞ்சம்  பருகினா  லும்போதும்
ஆயாசம்  எல்லாம்  அகன்றோடும்."
"வைத்தரசம்  உண்டோர்  வானத்  தமுதரசம்
 கைத்தரசம்  என்றே  கருதுவர்"
இப்படியாகப்  பாடினார்.
மற்றும்   ஒரு  புலவர்  நண்பர்  ஒருவரின்   வீட்டில்  நிகழ்ந்த
விருந்தோம்பலைப்  பற்றிப்  பின்வருமாறு   பாடியுள்ளார்:
"காரமின்றி  உப்பின்  கடுப்பு  புளிப்பின்றிச்
சாரமுள்ள  தாயுண்ணத்  தக்கதாய்--ஆரமுதம்
போலும்  சுவையடிசில்  போதுதவ  றாதளித்தான்
சீல  இசையரசு  தேர்ந்து."
இன்னும்  எத்தனையோ  பெரியோர்கள்  எத்தனையோ
சூழ்நிலைகளில்  எத்தனை  எத்தனையோ  பாடல்
களைப்  பாடியுள்ளனர்.  அவற்றையெல்லாம்  எழுதப்
புகின்  இக்கட்டுரை  விரிந்து  மிகப்பெரிதாகிவிடும்.

மேலும்   ஒரே  ஒரு  பாடலைச்  சொல்லி  முடிக்கின்றேன்:
சைவ  மடங்களிலே  தமிழ்  வகுப்புகள்  நடத்தப்படுவதுண்டு.
ஒரு. நாள்  மட்த்துச்  சமையல்கார்ர்  இன்றைக்கு   என்ன   சமையல்
சமைத்தல்   வேண்டும்?   என்று   ஆதீனத்தலைவரைக்  கேட்டார்.
அவர்  தமிழ்  வகுப்பு  நடத்திக்  கொண்டிருந்தார்.   எனவே  இடையிடையே
உத்தரவு   இட்டுக்கொண்டிருந்தார்..  சற்றே   துவையல்   அரை   என்பார்.
பிறகு  பாடம்  நடத்துவார்.  தம்பி!   ஒரு  பச்சடிவை   என்பார்.  பிறகு
பாடத்தைத்   தொடருவார்.  சமையல்  செய்பவருக்கும்   ஓரளவு  தமிழ்
ஞானம்  இருந்ததால்  இடையிடையே  வந்த  உத்தரவுகளை   மனதளவில்
தொகுத்துக்  கவனித்த  பொழுது   கீழ்வரும்   பாடல்   புலப்பட்டது:

"சற்றே  துவையலரை ;  தம்பியொரு   பச்சடிவை;
வற்றலே   தேனும்  வறுத்துவை;--குற்றமிலை;
காயமிட்டுக்  கீரைகடை;  கம்மென  வேமிள
காயரைத்து  வைப்பாய்  கறி."

தமிழ்வகுப்பும்  நன்றாகவே  நடந்து  முடிந்தது.  தேவையான  சமையல்
பட்டியலும்  தரப்பட்டது.   இதுபோல  இன்னும்   எத்தனையோ   சுவையான
நிகழ்ச்சிகள்  நடந்தேறியுள்ளன.  அவற்றையெல்லாம்   எழுதப்புகின்
மிகப்  பெரிதாகிவிடும் .  இத்தோடு   முடித்துக்  கொள்ளலாம்.