Sunday 29 October 2023

கற்றோர் பரவும் கநகாரி நகாரி காரி

 கற்றோர் பரவும் கநகாரி நகாரி காரி.


நால்வகைக் கவிகளுள் ஒன்றான சித்திரக்கவி என்பது

சித்திரம் எழுதி அதில் அமைப்பதற்கேற்ற கவி இயற்றுவதாகும்.

"கோமூத் திரியே கூட சதுர்க்கம்

மாலை மாற்றே எழுத்து  வருத்தனம்

நாக பந்தம் வினாவுத் தரமே

காதை கரப்பே கரந்துறைச் செய்யுள்

சக்கரம் சுழிகுளம் சருப்பதோ பத்திரம்

அக்கரச் சுதகமும் அவற்றின் பால".

அக்கரச் சுதகமும் என்னும் உம்மையால் இவைபோன்ற  வேறு சில

சித்திரக்கவிகளும் உள்ளன என்று மேற்படி சூத்திரத்தைத் தெரிவித்த

தண்டியலங்காரம் குறிப்பிடுகிறது. அவையாவன:

நிரோட்டம், ஒற்றுப்பெயர்த்தல், மாத்திரைச் சுருக்கம், மாத்திரை

வருத்தனம், முரசபந்தம், இரதபந்தம், திரிபாகி, திரிபங்கி, பிறிதுபடு

பாட்டு முதலியனவாகும். சித்திரக்கவிகள் தற்காலத்தில் பெருமளவில்

பயன்பாட்டில் இல்லை. ஏனென்றால் அவை மிறைக்கவிகள் என அழைக்கப்

படும். அவற்றைப் படித்துப் பொருள் உணர்வது மிக அரிய செயலாகும்.

எனவே, சித்திரக்கவி இயற்றுவோர் எண்ணிக்கை மிக மிகக் குறைவாகும்.


இங்கே அக்கரச் சுதகம் என்ற பிரிவில் பாடப்பட்ட பாடலொன்றைப் பார்ப்போம்.

அக்கரம்=அட்சரம்=எழுத்து; சுதகம்=குறைப்பு. எழுத்துக் குறைப்புப் பாடல். குறிப்பிட்ட

பொருளைத் தரும் ஒரு சொல்லைக் கூறி ஒவ்வொரு எழுத்தாக நீக்கிவர வெவ்வேறு

பொருள்படும் சொற்கள் உருவாகும். பின்வரும் பாடலைப் பார்ப்போம்:

"பொற்றூணில் வந்தசுடர், பொய்கை பயந்த அண்ணல்,

சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்,

மற்றியார் கொல்லென்னின் மலர்தூவி வணங்கி நாளும்

கற்றோர் பரவும் கநகாரி நகாரி காரி".

கநகாரி என்னும் சொல் திருமாலைக் குறிக்கும். இனி

பாடல் சொல்லும் செய்தியைப் பார்ப்போம்:

பொற்றூணில் வந்த சுடர்= பொன் தூணில் வந்த சுடர்=பிரகலாதனிடம்

இரணியன் இந்தத் தூணில் நாராயணன் உள்ளாரா? என்று கேட்டவுடன்

அவன் ஆம் என்று கூறிட, இரணியன் அந்தத் தூணைக் கதாயுதத்தால் பிளக்க,

அத்தூணிலிருந்து தோன்றிய நரசிம்ம மூர்த்தி அவனை அழித்தார் என்கிறது புராணம்.

அந்த நாராயணன் கநகாரி என்று அழைக்கப்படுகிறார்.  

                              

'கநகாரி' என்ற சொல்லிலிருந்து 'க' என்ற எழுத்தை நீக்கினால் 'நகாரி' என்ற சொல்

உருவாகும். நகாரி என்ற சொல் முருகனைக் குறிக்கும். முருகன் சரவணப் பொய்கை

பயந்த(தந்த) அண்ணல் ஆவார். 'நகாரி' யிலிருந்து மேலும் ஒரு எழுத்தை('ந')நீக்க,

'காரி' என்ற சொல் உருவாகும். சிற்றாயனாகிய கிருஷ்ணர் பாற்கடலைக் கடைந்து

அமுதம் எடுத்த காலத்தில் மோகினி அவதாரங்கொண்டு பெற்ற பிள்ளையான

ஐயனாரை(ஐயப்பனை)க் குறிக்கும் சொல் 'காரி' ஆகும். ஆக, 'கநகாரி' என்ற சொல்

எழுத்துக் குறைப்பின் மூலம் 'நகாரி' மற்றும் ' காரி' என்ற வேறு சொற்களை உருவாக்கியது.

'கநகாரி' யான திருமாலையும், 'நகாரி' யான  முருகனையும், 'காரி'யான ஐயனாரையும்

(ஐயப்பனையும்) கற்றறிந்தோர் மலர்தூவி வணங்கித் தொழுவதாகப் பாடல் பகர்கிறது.


இனி, திரிபாகி என்ற சித்திரக்கவி வகையைப் பார்ப்போம். திரிபாகி மூன்றெழுத்து சேர

ஒரு சொல்லாகியும், அதில் முதல் எழுத்தும் கடைசி எழுத்தும் சேர வேறொரு சொல்லாகியும்,

இடையெழுத்தும் கடைசி எழுத்தும் சேர மற்றொரு சொல்லாகியும் வருவதாகும். பாடல்

பின்வருமாறு:

"மூன்றெழுத்தும் எங்கோ முதல்ஈ(று) ஒரு வள்ளல்

ஏன்றுலகம் காப்ப(து) இடைகடை---யான்றுரைப்பின்

பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்(து)ஏத்தும்

காமாரி காரிமா ரி".

பொருள்:

இப்பாடலில் மூன்றெழுத்தும் எம்முடைய தலைவனாகிய 'காமாரி'(காமனுக்குப்

பகைவன் ஆகிய சிவபெருமான்) என்று பொருள்தரும். இதன் முதல் எழுத்தையும்

கடைசி எழுத்தையும் கூட்டக் 'காரி' என்ற சொல்லாகிக் கடையெழு வள்ளல்களில்

ஒருவனான காரி என்பவனைக் குறிக்கும்.. இதன் இடையெழுத்தையும் கடைசி

எழுத்தையும் கூட்ட 'மாரி' என்ற சொல்லாகி மழையைக் குறிக்கும். திரிபாகி

என்பதற்கு மூன்று பாகத்தையுடையது என்று பொருள்.


ஏனைய சித்திரக்கவிகளில் பெரும்பாலானவை பொருள் விளங்குவதற்குக்

கடினமான மிறைக்கவிகள். அவற்றை இயற்றுவதும் பொருள் கொள்வதும்

பலராலும் இயலாது. அவை வழக்காற்றிலும் இல்லாது மறைந்து வருகின்றன.


பார்வை:

தண்டியலங்காரம் உரையடன்--திருநெல்வேலித் தென்னிந்திய

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு.

Thursday 12 October 2023

காய் எனத் தொடங்கி இலை என்று முடிக்கும் கவிதை.

 காயென்று தொடங்கி இலையென்று முடிக்கும் பாடல்.


அழகிய சொக்கநாத பிள்ளை என்றழைக்கப்பட்ட புலவர் திருநெல்வேலியில்

வாழந்தவர். இராசவல்லிபுரம் என்ற ஊரில் வாழ்ந்துவந்த முத்துசாமி பிள்ளை

என்ற வள்ளல் புலவரை ஆதரித்துப் புரந்தவர். அவர் மீது பற்பல தனிப்பாடல்களை

இயற்றியுள்ளார். இரட்டுற மொழிதல்(சிலேடை), நடுவெழுத்தலங்காரம், மடக்கு(யமகம்)

முதலான புலமைத்திறம் காட்டும் ஏராளமான பாடல்களைப் பாடியுள்ளார். அவரது

பாடல்களில் அவரை ஆதரித்த வள்ளலைப் பற்றித் தவறாமல் போற்றிப் புகழ்ந்துள்ளார்.

ஒருசமயம் 'காய்' எனத் தொடங்கி 'இலை' என முடிக்குமாறு பாடல் இயற்றச் சொன்ன

பொழுது அவர் பாடியது:

"காய்சினம்இல் லாதான்,  கருணைமுத்து சாமிவள்ளல்

வாய்மையுளான்,; பாடி வருவோர்க்குத்---தாய்நிகர்வான்;

எல்லையில்லா மாண்பொருளை ஈவான்; இவனிடத்தில்

இல்லையென்ற சொல்லே யிலை."

பொருள்:

தன்னை நாடி வருவோரிடம் தகிக்கும் கோபத்தைக் காட்டாது கருணை ததும்பும் இனிய

முகத்தோடு விளங்குபவன். உண்மையாக இருப்பவன்(போலியாக நடிப்பவன் அல்லன்);

தாய்போல் அன்பு காட்டுபவன்; தன்னிடத்தில் உதவி கேட்டு வருபவர்களுக்கு எல்லையற்ற

சிறப்புடைய பொருட்களைக் கொடுப்பவன்; இவனிடத்தில் உதவி கேட்பவர்களுக்கு இல்லை

என்ற சொல்லைச் சொல்லியதே இல்லை. ( உதவி கேட்போர் எல்லார்க்கும்  இல்லையென்று

சொல்லாமல் உதவுவான்).


இன்னொருமுறை 'படித்துறை' என்று தொடங்கி 'குளக்கரை' என்று முடிக்குமாறு பாடக் 

கேட்டபொழுது பாடியது:

"படித்துறையும் வாணரைக்காப் பாற்றிடவும் பொல்லா

மிடித்துயரால் ஏழையரை மேன்மேல்---துடித்துநிதம்

கையவிடா(து) ஆண்டிடவும் நாட்டன்முத்து சாமியெனும்

ஐயவுன்போல் யார்க்குளக்க ரை".

பொருள்:

படித்து வாழ்கின்ற மேதாவிகளைக் காப்பாற்றிடவும், பொல்லாத

வறுமைத்துயரால் ஏழைமக்கள் மேன்மேலும் நித்தம் துடிதுடித்து

வாழ்ந்திடா வண்ணம் அவர்களைக் கைவிடாமல் உதவிசெய்து

கரையேற்றவும் நாட்டமுடைய முத்துசாமியெனும் ஐயனே!

உன்போல் யாருக்கு உள்ளது அக்கரை?

யார்க்குளக்கரை---யார்க்கு+உளது+ அக்கரை= 'து' கெட்டது விகாரம்.


இனி அவரியற்றிய விடுகதைப் பாடலைப் பார்ப்போம்:

"முற்பாதி போய்விட்டால் இருட்டே யாகும்;

        முன்னெழுத்தில் லாவிட்டால் பெண்ணே யாகும்;

பிற்பாதி போய்விட்டால் ஏவற் சொல்லாம்;

         பிற்பாதி யுடன்முனெழுத் திருந்தால் மேகம்;

சொற்பாகக் கடைதலைசின் மிருகத் தீனி!;

          தொடரிரண்டாம் எழுத்துமா தத்தில் ஒன்றாம்;

பொற்பார்திண் புயமுத்து சாமி மன்னா!

           புகலுவாய் இக்கவியின் புதையல் கண்டே!"

பொருள்:

பாடலிலேயே விடையும் உள்ளது. 'புதையல்' என்பதே அச்சொல்.

'புதையல்' சொல்லின் முற்பாதி போய்விட்டால் இருட்டேயாகும்;

'புதையல்' இல் முற்பாதி--'புதை' போய்விட்டால் 'அல்' இருட்டைக் குறிக்கும். 

முன்னெழுத்து இல்லாவிட்டால்--'புதையல்'  --'பு' இல்லாவிட்டால்-- தையல்--பெண்.

பிற்பாதி போய்விட்டால்-- 'புதை' என்னும் ஏவற் சொல் உருவாகும்.

பிற்பாதியுடன் முன்னெழுத்து இருந்தால்--' யல்' லோடு முன்னெழுத்து சேர்ந்தால்

பு+யல்=புயல்= மேகம்.

சொற்பாகக் கடைதலை(சின் அசையாகும்--அர்த்தமில்லாதது)--'பு' வும் 'ல்'உம்

சேர்ந்தால் 'புல்'=மிருகத்தீனி.

தொடரிரண்டாம் எழுத்து 'தை' ---ஒரு மாதம்.

ஆக, புலவர் விடுகதைப் பாட்டுப்பாடி இறுதியில்  'புதையல்' என்ற விடையையும்

தெரிவித்துவிட்டார்.