Sunday 30 July 2023

முனையதரையன்.

 முனையா! கலவி முயங்கியவாறெல்லாம் நினையாயோ, 

நெஞ்சத்து நீ?


முனையதரையன் திருக்கண்ணபுரத்தில் வாழ்ந்த ஒரு சிற்றரசன்.

விக்கிரம சோழன்(1118-1136) ஆட்சிக்காலத்தில் படைத்தலைவன் ஆகப்

பணியாற்றியவன்.  இவனும் கருணாகரத் தொண்டைமானும் ஒட்டக்

கூத்தர் பாடிய விக்கிரம சோழன் உலாவில் குறிப்பிடப்படுகின்றனர்.

"குலையப் பொருதொருநாட் கொண்ட பரணி

மலையத் தருந்தொண்டை மானும்---பலர்முடிமேல்

ஆர்க்குங் கழற்கால் அனகன் தனதவையுள்

பார்க்கு மதிமந்த்ர பாலகரில்---போர்க்குத்

தொடுக்குங் கமழ்தும்பை தூசினொடுஞ்  சூடிக்

கொடுக்கும் புகழ்முனையர் கோனும்"............(69--71)

முனையர்கோன் என்பவன்தான் இங்கு குறிக்கப்படும் முனையதரையன்.


இம்முனையதரையன் சிலகாலம் திருக்கண்ணபுரத்தில் தண்டத்தலைவனாகப்

பணியாற்றியுள்ளான்(வரிவசூல் செய்பவன்). அக்காலத்தில் நாட்டில் கொடும்

பஞ்சம் உருவாயிற்று. மக்கள் பஞ்சத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

மக்களின் துயரத்தைப் பார்க்கச் சகிக்காமல் அரசுக்குரிய திறைப்பொருளை

மக்களுக்காகச் செலவிட்டு அவர்களது துன்பத்தைக் குறைத்தான். பிற்பாடு நாடு

செழித்து வளம் பெருகத் தொடங்கியது. இருப்பினும் மக்களிடம் திறைபெறுவதற்கு

மனம் ஒப்பாமல் பஞ்சத்தின் பொழுது செலவழித்த பணத்தை அரசுக் கருவூலத்தில்

திரும்பச் செலுத்தாமல் காலம் கடத்தினான். மக்களின் நிதி நிலைமை இன்னும்

மேம்படட்டும் என்று காத்திருந்தான்.


இச்செய்தி விக்கிரம சோழன் செவிகளை எட்டியது. அவன் வெகுண்டு எழுந்தான்.

"பஞ்சகாலத்தில் தன்னைக் கேட்காமல் அரசுப் பணத்தை மக்களுக்காகச் செலவு

செய்ததை மன்னித்து விடலாம். ஆனால் நிலைமை சரியான பின்னரும் அரசுப்

பணத்தைத் திரும்பச் செலுத்தாமல் காலம் தாழ்த்துவதை மன்னிக்க இயலாது"

என்று கூறி முனையதரையனைச் சிறையில் அடைத்துவிட்டான்.


முனையதரையனுக்கும்  அரண்மனைப் பணிப்பெண் ஒருத்திக்கும் ஆழ்ந்த காதல்

அரும்பி நாளும் வளர்ந்து வந்தது. அப்பெண் இச்செய்தியைக் கேட்டுக் கொந்தளித்தாள்.

தானும் முனையதரையனும் நிகழ்த்திய காதல் களியாட்டங்களை நினைத்து மனம்

வெம்பினாள்; குமைந்தாள். உடனே முனையதரையனுக்கு மடல் அனுப்பினாள்.

அதில் கீழ்க்கண்டவாறு கவிதையை வரைந்திருந்தாள்:

"இன்றுவரில் என்னுயிரை நீபெறுவை; இற்றைக்கு

நின்று வரிலதுவும் நீயறிவை; ---வென்றி

முனையா! கலவி முயங்கியவா(று) எல்லாம்

நினையாயோ நெஞ்சத்து நீ?".

(கலவி= சேர்ந்து பழகியமை; முயங்குதல்=தழுவுதல்)


முனையதரையன் காதலி மனம் ஆறவேயில்லை. குறையாத கவலையோடு

திருக்கண்ணபுரக் கோவிலுக்குச் சென்று திருமாலிடம் முறையிட்டாள். "இன்னும் ஐந்து

நாட்களுக்குள் என் காதலன் விடுதலைபெற்று வராவிட்டால் நான் தீப்பாய்ந்து உயிர்நீப்

பேன். திருமாலே! உன் மேல் ஆணை" என்று ஆவேசமாக முழங்கினாள். பிற்பாடு பித்துப்

 பிடித்தவள்போல் தனக்குத்தானே பேசிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தாள்.


விக்கிரம சோழ வேந்தனும்  அன்றிரவு சரியாக உறங்கவில்லை. முனையதரையனையும்

கருணாகரத்தொண்டைமானையும் மிகவும் போற்றியவன். அவர்கள் வீரத்தையும் விசுவா

சத்தையும் மெச்சியவன். தற்பொழுது முனையதரையனைச் சிறையில் அடைத்துவிட்டேனே;

தனது செயல் தவறோ? என்று சிந்தித்துக் குழம்பினான்; ஒருவாறு உறக்கத்தில் ஆழ்ந்தான்.

கனவில் திருக்கண்ணபுரத் திருமால் தோன்றி" முனையதரையனைச் சிறையில் இட்டது

தவறு; உடனே விடுதலை செய்" என்று கூறியதாக உணர்ந்தான். காலை எழுந்தவுடன்

தன் ஆசானையும் அமைச்சரையும் அழைத்துவருமாறு அரண்மனைக் காவலர்கட்கு ஆணை

யிட்டான். ஒட்டக்கூத்தரும் அமைச்சரும் வந்து சேர்ந்தனர்.  அவர்களிடம் கனவைப் பற்றிச்

சொல்லி மேற்கொண்டு  என்ன செய்யலாம்? என்று அவர்கள் கருத்தைக் கேட்டான்.

முனையதரையனை விடுவிப்பது நலம் பயக்கும் என்று கூறினர். அதன்படி முனைய

தரையன் விடுதலைசெய்யப்பட்டான்.


முனையதரையன் உடனே விரைந்து சென்று தன் காதலியைச் சந்தித்தான். " பிரிந்தவர்

கூடினால் பேசல் வேண்டுமோ?" மௌனமாகக் காட்சிகள் அரங்கேறின. ஒருவாறு

இருவரும் இயல்புநிலைக்குத் திரும்பினர். பின்னர் முனையதரையன் காதலி சர்க்கரைப்

பொங்கலும் பொரிக்கறியும் சமைத்துத் திருக்கண்ணபுரக் கடவுளுக்குப் படைத்துவிட்டுத்

தன் மனத்துக்கினிய காதலனுக்கு ஊட்டிவிட்டாள். மறுநாள் கோவிலுக்குச் சென்றுவந்த

பொதுமக்கள் தாங்கள் திருமாலின் திருமேனிச்சிலையில் நெய்படிந்திருந்ததைக் கண்ட

தாகவும் அது முனையதரையன் காதலி படைத்த சர்க்கரைப் பொங்கலில் ஊற்றி

 இருந்த நெய்தான் என்றும் கூறிக்கொண்டனர். இதனைக் கேள்விப்பட்ட முனையதரையன்

அன்றுமுதல் திருக்கண்ணபுரத் திருமாலுக்குப் பொங்கலும் பொரிக்கறியும் நாளும்

படைக்க ஏற்பாடு செய்தான். அப் படையலுக்கு 'முனையோதனம்'  என்று பெயர். திருக்

கண்ணபுரத் திருமாலுக்குச் சவுரிப்பெருமாள் என்று பெயர். இதைத்தான் சோழமண்டல

சதகம் கூறுகிறது:

"புனையும் குழலாள் பரிந்தளித்த பொங்கல் அமுதும் பொரிக்கறியும்

அனைய சவுரி ராசருக்கே ஆமென் றருந்தும் ஆதரவின்

முனைய தரையன் பொங்கலென்று முகுந்தற் கேறு முதுகீர்த்தி

வனையும் பெருமை எப்போதும் வழங்கும் சோழ மண்டலமே!"


பார்வை:

தமிழ் நாவலர் சரிதை-மூலமும் உரையும் by

ஔவை சு.துரைசாமிப் பிள்ளை.

Sunday 9 July 2023

சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.

 சேண் நாட்டார் ஆயினும் நெஞ்சிற்கு அணியர்.


வரைவில் வைத்துப் பொருள்வயின் பிரிந்து சென்றுவிட்டான்

ஒரு தலைவன். அதாவது, திருமணத்தை உறுதிசெய்துவிட்டு

அதற்காகப் பொருள் தேடிவரத் தொலைவிலுள்ள நாடுகளுக்குச்

செல்வது சங்ககால வழக்கம். அக்காலத்தில் பிரிவினால் தலைவனும்

துன்பம் கொள்வான்; தலைவியும் துன்பம் கொள்வாள். அவ்வேளையில்

காதலித்த பொழுது நிகழ்ந்த நேர்வுகளை அசைபோட்டு இருவரும்

தம்மைத் தேற்றிக்கொள்வர். இங்கே ஒரு தலைவியிடம் அவள் தோழி

தலைவனைப் பிரிந்ததால் ஏற்பட்ட துயரத்தை ஆற்றியிருந்த விதம்

பற்றி வினவினாள். அதற்குத் தலைவி விடையிறுத்தாள்: " நம்மைப்

பிரிந்து(என்னைப் பிரிந்து) தொலைவிலுள்ள நாட்டுக்குச் சென்று

அங்கே உறைகின்றார்;ஆயினும் என் நெஞ்சிற்கு அருகிலேயே எப்பொழுதும்

வீற்றிருக்கின்றார். அவரது நாட்டுக் கடலில் உருவாகும் அலைகள்,

விழுது தாழ்ந்த தாழையினது முதிர்ந்த கொழுவிய அரும்பு, நாரைகள் கோதுகின்ற

சிறகைப்போல விரிந்து மடல்கள் மலர்கின்ற கடற்கரைச் சோலையை

ஒட்டி அமைந்துள்ள எங்கள் சிற்றூரில் இல்முகப்பில் வந்து மீண்டுசெல்லும்‌.

அவர் தற்பொழுது வெகு தொலைவிலுள்ள நாட்டில் உறைகின்ற வேளையிலும்

என் நெஞ்சருகே எப்பொழுதும் வீற்றிருக்கின்றதாகவே உணர்கின்றேன்.

தலைவன் தற்பொழுது தங்கியுள்ள நாட்டின் நீரைக் கண்டு அவனது

பிரிவால் ஏற்பட்ட துயரை ஆற்றியிருந்தேன்". காதலர் பிரிய நேர்ந்தால்,

காதலனை நினைவுபடுத்தும் அவன் தொடர்புடைய எந்தப் பொருளைக்

கண்டாலும் காதலிக்குப் பிரிவுத் துன்பம் குறையும் என்பது இலக்கியச்

செய்தி. இனி, தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:

குறுந்தொகை: பாடல் எண்: 228; புலவர்:வள்ளுவன் பெருஞ்சாத்தன்.

"வீழ்தாள் தாழை யூழுறு கொழுமுகை

குருகுளர் இறகின் விரிபுதோ (டு) அவிழும்

கானல் நண்ணிய சிறுகுடி முன்றில்

திரைவந்து பெயரும் என்பநம் துறந்து

நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்

நெஞ்சிற்(கு) அணியர் தண்கடல் நாட்டே".

அருஞ்சொற் பொருள்:

குருகு= நாரை; தோடு= மடல்; கானல்=கடற்கரைச் சோலை;

நண்ணிய=பொருந்திய; முன்றில்=வீட்டின் முகப்பு;

திரை=அலை; பெயரும்= மீண்டு செல்லும்; சேண்=தொலைவு;

அணியர்=அருகில் உள்ளவர்.


இதே கருத்து குறுந்தொகை 361 ஆம் பாடலிலும் பயின்று

வருகிறது. தலைவனது மலையில் முதல்நாள் மாலை பெய்த மழை

யினால் உண்டாகிய அருவியால் அடித்துவரப்பட்ட காந்தள் மலர்

மறுநாள் காலையில் தலைவியின் ஊர்அருகே வந்தது. தம்

தலைவனோடு  தொடர்புடைய பொருட்களைத் தொட்டுத் தீண்டலும்,

தழுவுதலும், பாராட்டிப் போற்றுதலும் மகளிர் இயல்பு. பார்க்க பா.எ.361.

"அம்ம! வாழி தோழி அன்னைக்(கு)

உயர்நிலை உலகமும் சிறிதால்;; அவர் மலை

மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு

காலை வந்த காந்தள் முழுமுதல்

மெல்லிலை குழைய முயங்கலும்

இல்லுய்த்து நடுதலும் கடியா தோளே".

தலைவனது மலையில் மாலையிற் பெய்த மழையினால் உருவான

அருவியால் அடித்து வரப்பட்ட  காந்தள் மறுநாள் தலைவியின் வீட்டருகே

வர, அதனை எடுத்துத் தலைவி தழுவிக் கொண்டாள்; அதன்கிழங்கை

வீட்டில் நட்டு வைத்தாள். அன்னையும் இச்செயலை விலக்கவில்லை.

(ஏனெனில் வரைவு உறுதிசெய்யப்பட்டுள்ளது). அன்னையின் உதவிக்கு

மேலுலகம் அளித்தாலும் அது சிறிதே ஆகும்.


இதுபோன்ற நிகழ்வுதான் இராமபிரான் கொடுத்தனுப்பிய கணையாழி

யைக் கண்ட சீதையின் நிலைமை.

"மோக்குமுலை  வைத்துற முயங்குமொளிர் நன்னீர்

நீக்கி நிறை கண்ணிணை ததும்பநெடு நீள

நோக்குநுவ லக்கருதும் ஒன்றுநுவல் கில்லாள்

மேக்குநிமிர் விம்மலள் விழுங்கலுறு கின்றாள்".

(கம்பராமாயணம்--உருக்காட்டுப் படலம் எண்:67)

தலைவியின் நிலைமை இதுவென்றால், தலைவனின்

நிலைமை சொல்லவும் கூடுமோ? அவனும் பித்துப்

பிடித்தாற் போலப் பாதையில் தென்படும் மரம், மட்டை

களையும், குயில் கிளிகளையும், மான் குரங்குகளையும்

விளித்துப் புலம்பியிருப்பான். அன்பின் ஆற்றல் அத்

தகையது.அதுவும் காதலன்- காதலி ஆகிய இருவர்க்கும் இடையே

நிலவும் பேரன்பை விவரிக்கவும் கூடுமோ?


பார்வை: குறுந்தொகை மூலமும் உரையும்-ஆக்கியோர்

                  டாக்டர் உ.வே.சா.அவர்கள்.