Sunday 17 July 2022

நாணிக் கண்புதைத்தல்.

 நாணிக்கண் புதைத்தல் (இடையூறு கிளத்தல்).


அகப்பொருள் இலக்கியத்தில் தலைவன் தலைவி சந்தித்துக்

கொள்ளும்  பொழுது தலைவி நாணத்தால் தன் கண்களை

மூடிக் கொள்ளும் நிகழ்வை இடையூறு கிளத்தல் என்று புலவர்கள்

குறிப்பிடுவர். ஏனெனில் தலைவியின் முக அழகை முழுதாகப்

பார்த்து மகிழத் தலைவன் விரும்புவான். ஆனால், பெண்மைக்கே

உரிய இயற்கை நாணத்தினால் தலைவி தன் கண்களை மூடிக்கொண்டால்

(கண் புதைத்தால்) தலைவனுக்குத் துன்பம் ஏற்படுவது இயல்பு அன்றோ?

அதனால்தான் இத்துறைக்கு இடையூறு கிளத்தல் என்று புலவர்கள் பெயர்

சூட்டியுள்ளனர். இது மிகவும் நுணுக்கமான உணர்வு. தலைவியின் முக

அழகைக் கண்டுகளிக்கத்தான் தலைவன் தலைவி பின்னால் சுற்றிச்சுற்றி

வந்தான். தற்பொழுது முகத்துக்கு அழகு தரும் கண்களைத் தலைவி கைகளால்

மூடிக் கொண்டால் தலைவன் திண்டாடித்தான் போவான். அகப்பொருள்

நிகழ்வுகளைத் தொகுத்துக் கூறும் கோவை இலக்கியத்தில்  நாணிக்கண்

புதைக்கும் நிகழ்வை ஒவ்வொரு புலவரும் தம் திறமையை யெல்லாம்

ஒருங்கு திரட்டிக் கற்பனையைச் சிறகடித்துப் பறக்கவிட்டுக் கவி படைப்பர்.

சிறந்த கோவை இலக்கியமான தஞ்சைவாணன் கோவையில் புலவர் பொய்யா

மொழிப்புலவர் இந்நிகழ்வை எவ்வாறு படைத்துள்ளார் என்று பார்ப்போம்.


தலைவன் தலைவியிடம் கூறுகின்றான்:

கேடில்லாத தாமரைத் திருமாளிகை சிறந்ததென்று என் இதயத் தாமரையில்

வீற்றிருப்பவரே! இரண்டு கொம்புகளையும்(தந்தம்) ஒரு நீண்ட தும்பிக்கையையும்

கொண்ட மதயானையின் மீது வீற்றிருந்து தஞ்சையை(சிவகங்கை மாவட்டத்தில்

உள்ள தஞ்சாக்கூர்) வலம்வரும் வாணனின் வையை நாட்டில் வாழ்கின்ற மக்கள்

தாம் உழைத்து ஈட்டும் தனத்தை(பணத்தை)ப் புதைத்துவைக்கமாட்டார் என்று

சொல்லப்படுவது சரிதான் என்று மெய்ப்பிப்பதுபோல் நீர் உம் தனத்தை(முன்னழகை)

மறைக்காமல் மதர்த்த வேல்போன்ற கண்களைப் புதைக்கின்றீர். இச்செயல் எனக்குத்

துன்பம் தருகின்றது. (வையை சூழும் நாட்டு மக்கள் பணத்தைப் புதைத்து வைக்காமல்

தானம், தர்மம் செய்துவிடுவது வழக்கம்). பணத்தைப் புதைத்து வைக்கும் கேடுகெட்ட

மானிடரை ஔவையார் கண்டித்துள்ளார். அது தொடர்பான பாடல் பின்வருமாறு:

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்---கூடுவிட்டிங்(கு)

ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்

பாவிகாள்! அந்தப் பணம்".

தஞ்சைவாணன் கோவைப் பாடல்:

" சிதையா முளரித் திருமா ளிகையிற் சிறந்ததென்றன்

இதயார விந்தத் தினிதிருப் பீரிரு கோட்டொருகை

மதயானை வாணன் வரும் தஞ்சை சூழ்வையை நாட்டுறைவோர்

புதையார் தனமென்ப தோ?மதர் வேற்கண் புதைத்ததுவே".

(தனம்=பணம்; பெண்களின் முன்னழகு; முளரி=தாமரை;

புதைத்தல்=மறைத்தல்)


இனி, இதே துறையில் இயற்றப்பட்ட தனிப்பாடல் ஒன்றைப்

பார்ப்போம்:

"காலையர விந்தம்; கழுநீர் உடன்கலந்தால்

மாலையர விந்தம் மயக்காதோ?---பாலைப்

பழிக்கின்ற மென்மொழியீர், பாண்டியனார் ஊரை

அழிக்கின்ற தென்னோ அது."

தலைவன் கூற்று:

காலை அரவிந்தம்(மலர்ந்த தாமரை) போன்ற உம் கைகளால்

கழுநீர்(குவளை மலர்) போன்ற உம் கண்களை மூடிக்கொள்கிறீர்.

அதனால் மாலையில் கூம்பிய மொட்டுப் போன்ற உம் முன்னழகால்

நான் கிறங்கி மயக்கம் அடைகிறேன். ஏன் இந்தத் துன்பம் தருகிறீர்?

மென்மையிலும் சுவையிலும் பாலைத் தோற்கடிக்கும் பேச்சுடைய

பெண்ணே! உம் செயலால் பாண்டியனார் ஊரை அழிக்கின்றதேனோ?

பாண்டியனார் ஊர் மதுரை என்ற கூடல். நீர் நாணிக் கண் புதைப்பதனால்

நாம் சந்தித்துக் கூடிக் கொள்ளும் வாய்ப்பைக் கெடுக்கிறீர்.. இப்

பாடலில் பாண்டியனார் ஊர் என்று சாமர்த்தியமாகச் சொல்லிக்

கூடல் நிகழ்வு தடைப்படுவதைச் சுட்டிக்காட்டுகிறார் புலவர். மிக மிக

நயமான கற்பனை.

இந்தத் தனிப்பாடல் 'கலைச்செல்வி' என்பவர் தொகுத்து உரையெழுதி

வெளியிட்ட தனிப்பாடல் திரட்டு நூலில் உள்ளது.  புதுக்கோட்டை மீனாட்சி பதிப்பகத்தின் வெளியீடு.


காலை அரவிந்தம்= மலர்ந்த தாமரை= கைகளுக்கு உவமை.

கழுநீர்=குவளை மலர்=கண்களுக்கு உவமை.

மாலை அரவிந்தம்=கூம்பிய தாமரை மொட்டு=முன்னழகுக்கு உவமை.

Sunday 3 July 2022

செலவழுங்குதல்.

 பொன்னொடு வந்து கறியொடு பெயரும் வளங்கெழு முசிறி.


அகப்பொருள் விவரிக்கும் களவொழுக்கத்திலும், கற்பொழுக்

கத்திலும்  தலைவன் தலைவியைப் பிரியும் நிகழ்வு மிக்க

நெகிழ்ச்சி மிக்க காட்சிகளைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தி

நம்மை உருகவைத்துவிடும். களவொழுக்கத்தில் ஏற்படும் பிரிவுகள்

இரண்டுவகை: 1. ஒருவழித் தணத்தல் 2.வரைவிடை வைத்துப்

பொருள்வயிற் பிரிதல். கற்பொழுக்கத்தில் ஏற்படும் பிரிவுகள்

ஆறுவகை:1.ஓதற் பிரிவு 2.காவற்பிரிவு 3.தூதிற் பிரிவு 4.துணைவயிற்

பிரிவு 5. பொருள்வயிற் பிரிவு 6.பரத்தையிற் பிரிவு.


பரத்தையிற் பிரிவு சங்க நூல்களில் விளக்கப்பட்டிருந்தாலும், திருக்குறள்

பரத்தை ஒழுக்கத்தைக் கண்டித்தது. சங்கம் மருவிய நூல்களான பிற

பதினெண்கீழ்க்கணக்கு நூல்களும்(நாலடியார் போன்றவை) எதிர்த்தன.

தலைவன்-தலைவிக்கு இடையே நிகழும் பிரிவை இருவரும் வெறுத்தனர்.

சில சமயங்களில் தலைவியின் புலம்பல் காரணமாகவோ, தலைவனுக்கே

பிரிய மனமில்லாத காரணத்தாலோ பிரிவுப் பயணம் கைவிடப்படும்.

செலவழுங்குதல் என்று இலக்கியத்தில் குறிப்பிடப்படும். (செலவு=பயணம்;

அழுங்குதல்=தவிர்த்தல்). செலவழுங்கும் நிகழ்ச்சி ஒன்று அகநானூறு 

இலக்கியத்தில் காட்சிப் படுத்தப் பட்டுள்ளது. அதனைப் பார்ப்போம்: 

அகநானூறு பாடல்  எண்:149; திணை: பாலைத் திணை;

புலவர்: எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்;

செலவழுங்கிய தலைவன் தன் நெஞ்சிடம்  சொன்னது.

சிறிய, புல்லிய  கறையான் முயற்சி செய்து உயரமாக எழுப்பிய 

சிவந்த புற்றினுள்ளே இருக்கும் புற்றாம் பழஞ்சோறாகிய தம்  இரையைப்

பெரிய கைகளையுடைய  கரடிகள் கூட்டம் தின்னும். அந்த இரை வெறுத்துப்

போனால்  புல்லின் அரையையுடைய இருப்பையின் துளையையுடைய

வெள்ளிய பூவைப் பறித்துத் தின்னும். இத்தகைய தன்மை வாய்ந்த பாலை

நிலத்தில் நெடுந்தொலைவு பயணம் செய்து  அரிதாக ஈட்டத்தக்க பொருளை

எளிதாகப் பெறுவதாக இருந்தாலும்,  மதுரைக்கு மேற்கிலுள்ள திருப்பரங்

குன்றில் அமைந்துள்ள நெடிய ஆழமான சுனையின் கண் பூத்திருக்கும்

குவளையின்  இணையொத்த மலர்களிலான பிணையல் போன்ற என்

தலைவியின் அரிபரந்த மதர்த்த மழைக்கண்கள் கண்ணீர் சொரியும்

வண்ணம் நான் அவளைப் பிரிந்து பொருளீட்ட வரமாட்டேன். நெஞ்சே! 

தேவையானால் நீ போய் உன் வினையை முடித்து வாழ்வாயாக!

இவ்வாறாகத் தலைவன் தன் நெஞ்சுக்குக்  கூறிப் பயணத்தைக்

கைவிட்டான்(செலவு அழுங்கினான்).


மதுரையைப் பற்றிச் சொல்லும் பொழுது,  சேரர்களுக்குச் சொந்தமான

சுள்ளியென்னும் பேரியாற்றின் வெண்மையான நுரை கலங்கும் வண்ணம்

யவனர்கள்(கிரேக்கர்கள்) சிறந்த நல்ல மரக்கலங்களில் முசிறியென்னும்

பட்டினத்துக்கு வணிகம் புரிய வந்ததையும்,  தங்களோடு  உயர்ந்ததரப்

பொன்னைக் கொண்டுவந்து  மிளகை வாங்கிச் சென்றதையும் புலவர்

குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த முசிறியைப் பாண்டிய மன்னன் செழியன்

தன் படைவலிமையால் வெற்றிகொண்டதையும், படிமம் ஒன்றைக்

கைப்பற்றியதையும்,  யானைப்படையைப் பயன்படுத்தியதையும்

குறிப்பிட்டுள்ளார்.


அகப்பொருள் பற்றிய இலக்கியங்களில் சிற்சில போர் குறித்த வரலாற்றுச்

செய்திகளையும்  அக்காலப் புலவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பயின்று

வரும் "பொன்னொடு வந்து கறி(மிளகு)யொடு பெயரும் வளங்கெழு

முசிறி"  என்ற சொற்றொடர் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தொடர்புடைய

பாடல் பின்வருமாறு:

"சிறுபுன்  சிதலை  சேண்முயன்(று)  எடுத்த

 நெடுஞ்செம் புற்றத்(து)  ஒடுங்கிரை  முனையின்,

புல்லரை  இருப்பைத்  தொள்ளை வான்பூப்

பெருங்கை  எண்கின்  இருங்கிளை  கவரும்

அத்த  நீளிடைப்  போகி,  நன்றும்

அரிதுசெய்  விழுப்பொருள்  எளிதினின்  பெறினும்

வாரேன், வாழியென்  நெஞ்சே,  சேரலர்

சுள்ளியம்  பேரியாற்று  வெண்நுரை  கலங்க

யவனர்  தந்த  வினைமாண்  நன்கலம்

பொன்னொடு  வந்து  கறியொடு  பெயரும்

வளங்கெழு  முசிறி  ஆர்ப்பெழ  வளைஇ

அருஞ்சமம்  கடந்து  படிமம்  வௌவிய

நெடுநல்  யானை  அடுபோர்ச்  செழியன்

கொடிநுடங்கு  மறுகின்  கூடல்  குடாஅது

பல்பொறி  மஞ்ஞை  வெல்கொடி  உயரிய

ஒடியா  விழவின்  நெடியோன்  குன்றத்து.

வண்டுபட  நீடிய  குண்டுசுனை  நீலத்து

எதிர்மலர்ப்  பிணையல் அன்னஇவள்

அரிமதர் மழைக்கண்  தெண்பனி  கொளவே.'"

அருஞ்சொற் பொருள்:

சிதலை=கறையான்; எண்கு=கரடி; சமம்=போர்; படிமம்=சிலை;

குடா அது=மேற்கில் உள்ள; மஞ்ஞை=மயில்; தெண்பனி=தெளிந்த கண்ணீர்.


மேலே  கூறப்பட்டது  சங்ககாலப் பாடல். இடைக்காலத்தில் இயற்றப்பட்ட பாடல் பின்வருமாறு:.

"மாதர்  துவரிதழ்வாய்  வந்தென்  உயிர்கவரும்;

சீத  முறுவல்  அறிவழிக்கும்;----மீதுலவி

நீண்ட  மதர்விழியென்  நெஞ்சம்  கிழித்துலவும்;

யாண்டையதோ  மென்மை  யிவர்க்கு".

பொருள்:

இவளுடைய அழகிய பவளம் போன்ற வாயானது  என்னுடைய உயிரைக்

கவர்கின்றது;  குளிர்ந்த சிரிப்பானது அறிவை அழிக்கின்றது;  காதின்

மீது உலாவி நீண்ட விழியானது என்னுடைய நெஞ்சத்தைக் கிழித்து

உலாவருகின்றது; ஆதலால் இவளுக்கு  மென்மை எங்குளதோ?

ஆதலால் இவளைப் பிரிய மனம் மறுக்கின்றது. நான் இவளைப்

பிரிந்து செல்லேன்.