Friday 23 April 2021

புதையல்

 பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைக்கும்......


புதையல் என்பது மனிதர்களால் மண்ணுக்குள் புதைத்துவைக்கப்பட்ட/

இயற்கைப் பேரிடர்களால் மண்ணுக்குள் புதையுண்ட தங்க, வெள்ளி

நகைகள், நாணயங்கள், காசுகள். மற்றும் மதிப்புமிக்க பொருள்கள்

ஆகும். பிறர் அறியா வண்ணம் செல்வத்தைப் புதைத்துவைத்துப்  பிற்பாடு

எடுத்துக்கொள்ளலாம் என எண்ணிப் புதைத்துவிட்டு மறந்த/மறைந்த

மக்களாலும் புதையல் உருவானது. ஔவையாரின் ஒரு பாடலைப்

பார்ப்போம்:

"பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைக்கும்

கேடுகெட்ட மானிடரே! கேளுங்கள்--கூடுவிட்டிங்(கு)

ஆவிதான் போனபின்(பு) ஆரே அனுபவிப்பார்?

பாவிகாள் அந்தப் பணம்".

இப் பாடலின் மூலம் அக்காலத்தில் பணத்தைப் புதைத்துவைக்கும் வழக்கம்

நிலவியதை அறிகிறோம். சங்ககாலத்தில் மகளிர் ஆற்றிலோ குளத்திலோ

நீராடப் போனால், நீராடுவதற்கு முன்பாகத் தத்தம் அணிகலன்களை

ஆற்றங்கரை/குளத்தங் கரை மணலில் புதைத்துவைத்துவிட்டு நீராடும்

வழக்கத்தைப் பின்பற்றியதாக ஐங்குறுநூறு என்னும் சங்க இலக்கியத்தில்

ஒரு பாடல் காணப்படுகிறது.

"புனலாடு மகளிர் இட்ட ஒள்ளிழை

மணலாடு சிமையத்(து) எருமை கிளைக்கும்"

ஆற்றில் நீராடும் மகளிர் புதைத்துவைத்த ஒளிபொருந்திய அணிகலன்களை

அவ்வழியே திரியும் எருமை கிண்டிக் கிளறி வெளியே கொண்டுவரும். சில

சமயங்களில் சில மகளிர் புதைத்துவைத்ததையே  மறந்து சென்றுவிடுவர்.

அந்த நகைகள் பிற்காலத்தில் புதையல் என அழைக்கப்பட்டன.


சீவக சிந்தாமணி இலக்கியத்தில் ஒரு பாடல் உள்ளது. ஒரு செல்வர்

தம் செல்வத்தை அவ்வப்பொழுது மண்ணுக்குள் புதைத்துவந்தார்.

எதிர்பாராமல் உடல்நலம் குன்றி மரணப் படுக்கையில் விழுந்துவிட்டார்.

பேச முடியவில்லை. அந்நேரம் தாம் அவ்வப்பொழுது புதைத்து வைத்த

செல்வத்தை நினைத்து மனைவியிடம் சைகையால் மண்ணுக்குள்

புதைத்துவைக்கப்பட்ட மண்கலயத்தைக் குறிப்பிட்டார். ஆனால் அவர்

மனைவிக்கு இவ்விடயம் தெரியாததால் அவர் ஆசையாக விளாம்பழம்

கேட்பதாக எண்ணி "இப் பருவத்தில் அப்பழம் கிடைக்காது" என்று கூற,

செல்வர் மனம் நொந்து உயிர் நீத்தார். அப்பாடல் பின்வருமாறு:

"கையால் பொதித்துணையே காட்டக் கயற்கண்ணாள் அதனைக் காட்டாள்;

ஐயா! விளாம்பழமே என்கின்றீர், ஆங்கதற்குப் பருவம் அன்(று)என்

செய்கோ? எனச் சிறந்தாள் போல்சிறவாக் கட்டுரையில் குறித்த எல்லாம்

பொய்யே பொருளுரையாம்; கொடுத்துண்டல் புரிமின் கண்டீர்".


முடியுடை மூவேந்தர் பிறநாடுகளின் மீது படையெடுத்துச் சென்றபோதும்,

வேற்றுநாட்டு மன்னர்கள் தமிழ்நாட்டுக்குப் படையெடுத்து வந்த போதும்

அந்த அந்த நாட்டில் வாழும் மக்கள் தம் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து

வைத்துப் பிற்பாடு எடுத்துக்கொண்டிருந்திருக்கலாம். ஒருவேளை,

எடுக்காமல் விடுபட்டிருந்தால் அது புதையலாகியிருக்கும். 


பிற்காலத்தில் இரண்டாம் சரபோஜி மன்னர் புதையலுக்காக முயற்சிசெய்த

தாகச் செவிவழிச் செய்தியுண்டு. அவர் புதையலைக் கண்டுபிடித்தாரா?

இல்லையா? என்பது தெரியவில்லை. அவர் அடைய முயன்ற புதையல்

இருக்குமிடத்தில் நச்சுக்கருவண்டுகள் (கதண்டுகள்) அவ்விடத்தைப் பாது

காத்ததால் அவரால் புதையலை எடுக்கமுடியவில்லை என்று செவிவழிச்

செய்தியுண்டு.  சில இடங்களில் புதையலைப் பூதம் காப்பதாகவும், தெய்வம்

காப்பதாகவும் பேச்சு உலவும். அண்மைக் காலங்களில்

புதையலை எடுக்க முட்டாள்தனமாக நரபலி கொடுக்க

முயல்கின்றனர். போலி மந்திரவாதிகள் அவர்களைத்

தூண்டிவிடுகின்றனர். நரபலி கொடுத்தல்

முற்றிலும் களையப்படல் வேண்டும்.


எத்தனையோ படையெடுப்புகளால் நம்நாட்டுச் செல்வம்

கொள்ளையடிக்கப்பட்டுவிட்டது. புதையல் எதுவும் இருக்க

வாய்ப்பேயில்லை. ஒருவேளை யாரேனும் புதையலைக்

கண்டுபிடிக்க நேரிட்டால் அதனை அரசிடம் ஒப்படைப்பதே

முறையாகும். சட்டமும் இதையே வலியுறுத்துகிறது.

Sunday 4 April 2021

அருணகிரிநாதரின் 'த' வருக்கப் பாடல்

 திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா......

(அருணகிரிநாதர் பாடிய 'த'வருக்கப் போட்டிப் பாடல்)

அருணகிரிநாதரைப் பற்றிப் பற்பல செவிவழிச் செய்திகள்

உலவிவருகின்றன. ஆனால் அவருடைய பாடலியற்றும்

திறமை பற்றி எந்தவிதமான எதிர்க்கருத்தும் கிடையாது.

எளிமையான பாடல்கள், சந்தப் பாடல்கள், வண்ணப்பாடல்கள்,

ஓரெழுத்து வருக்கப் பாடல்கள் என விதவிதமாகத் தமிழிற்

பாடியுள்ளார். இவைகளில் மிகச் சிறப்பாகப் பாடப்பட்ட ஒரு

வருக்கப் பாடலைப் பார்ப்போம்.


பெரும்புலமை கொண்டவரும்,  அரைகுறைப் புலமையுடையவரைக்

குறடு  என்னும் கருவியால் காதைக் குடைந்து தோண்டும் வழக்கம்

உடையவரும், தமிழில் மகாபாரதம் என்னும் காவியம் படைத்தவரும்

ஆன வில்லிபுத்தூரார் ஒருமுறை திருவண்ணாமலைக்கு வருகை

புரிந்த பொழுது அவருக்கும் அருணகிரிநாதருக்கும்  தருக்கம்(வாதம்)

உண்டாயிற்று. தாம் ஆசுகவியாகப் பாடிவரும் பாடல்களுக்கு வில்லி

புத்தூரார் பொருள் கூறல் வேண்டும் என்றும் பொருள் கூறத் தெரியா

விட்டால் தோற்றதாக ஒப்புக்கொள்ளல் வேண்டும் என்று அருணகிரி

நாதர் வில்லிபுத்தூரார்க்கு நிபந்தனை விதிக்க, அவர் ஏற்க, போட்டி

தொடங்கியது.


ஆசுகவியாகத் தடையின்றி 53  பாடல்கள் வரை அருணகிரிநாதர் பாட,

உடனுக்குடன் வில்லிபுத்தாரார் பொருள் கூறிவந்தார். 54ஆம் பாடல்

தொடங்கப்பட்டது. அதனைத் 'த' வருக்கத்தில் அருணகிரிநாதர் பாடத்

தொடங்கினார். பாடல் பின்வருமாறு:

"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே".

பொருள்:

திதத்தத் தத்தித்த, திதத்தத் தத்தித்த என்னும் தாளமானங்களை;

திதி தாதை= திருநடனத்தாற் காக்கின்ற  பரமசிவனும்;

தாத=பிரமனும்; துத்தி தத்தி=படங்கொண்ட பாம்பினையுடைய;

தா திதி=இடத்தையும் நிலைபெற்று; தத்து அத்தி=ததும்புகின்ற

கடலை(பாற்கடல்)ப் பாயலாகச் கொண்டு;  ததி தித்ததே து=

தயிர் தித்திக்கின்றதென்று உண்ட கண்ணனும்; துதித்து=

துதி செய்து தொழுகின்ற;  இதத்தாதி(இதத்து +ஆதி)= பேரின்ப

சொரூபியான முதல்வனே!; தத்தத்து அத்தி தத்தை= தந்தத்தை

யுடைய அயிராவதம் என்ற யானையால் வளர்க்கப்பட்ட கிளிபோன்ற

தெய்வயானைக்கு; தாத=தொண்டனே! திதே துதை= தீமையே

நெருங்கிய; தாது= ஏழு தாதுக்களால் உருவானதும்; அதத்து உதி=

மரணத்தோடும் பிறப்போடும்; தத்து அத்து= பல தத்துவங்களோடு

பொருந்தியதுமான; அத்தி தித்தி= எலும்புகளால் மூடப்பட்ட இவ்

வுடலாகிய பை(மெய்ப்பை); தீ தீ திதி=தீயினால் தகிக்கப்படுகின்ற

அந்நாளிலே;  துதி தீ தொத்தது= உன்னைத் துதிக்கும் சிந்தனை

உனக்கே அடிமையாக வேண்டும்.

குறு விளக்கம்:

திதத்தத் தத்தித்த என்னும் தாளத்தால் நடிக்கும் பரமசிவனும்,

பிரம்மாவும், தயிரையுண்டு பாற்கடலையும் ஆதிசேடனையும்

பாயலாகச் கொண்ட திருமாலும் வணங்குகின்ற முதல்வனே!

(முருகனே!) தெய்வயானைக்குத் தொண்டனே!! பிறப்பு இறப்பு

இரண்டையும் தவிர்க்க இயலாத,, எலும்பு முதலிய தாதுக்கள்

நிறைந்த பொல்லாத இந்த உடம்பைத்  தீயினால் வேகவைக்கும் அந்த

நாளிலே உன்னைத் தொழும் சிந்தனையை உனது இணையடிக்கு

ஆட்படுத்தல் வேண்டும்.


இப்பாடலுக்குப் பொருள்சொல்லத் தெரியாத வில்லிப்புத்தூரார்

தோல்வியை ஒப்புக்கொண்டார். "என் காதை இந்தக் குறடால்

குடைந்து தோண்டுங்கள்" என்று அருணகிரி நாதரிடம் உரைத்தார்.

கருணையே உருவான அருணகிரிநாதர் அவ்வாறு செய்ய மறுத்து

"நான் அக்கொடுமையைப் புரியமாட்டேன்; நீங்களும் இதுபோல்

இனிப் புரியாதீர்" என்று கேட்டுக்கொண்டார். 


மேற்கொண்டு 46 பாடல்களை ஆசுகவியாகப் பாடி அந்நூலை

அருணகிரியார் நிறைவு செய்தார். நூலுக்கு உரை வகுத்தவர்

வில்லிபுத்தூராரே. அந்நூல் 'கந்தரந்தாதி' எனப் பெயர் பெற்றது.

அருணகிரிநாதர் என்னும் தமிழ்த் திரைப்படத்திலும் இப்பாடல்

இடம்பெற்றுள்ளது. போட்டிக்காக இயற்றப் பட்டதால் இந்நூலின்

பாடல்கள்  பொருள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத கடும்

நடையில் உள்ளன.எனினும் தமிழ் இலக்கியத்தில் அருணகிரிநாதர்

பெயர் என்றென்றும்  நிலைத்து நிற்கும்.


பார்வை:

திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழக

வெளியீடான "கந்தரலங்காரம் & கந்தரந்தாதி" நூல்(டாக்டர்  வ.சு.

செங்கல்வராயபிள்ளை உரையுடன்).