Wednesday 17 July 2019

கல்விக்கண் திறந்த காமராசர் புகழ் ஓங்குக!

செயல் வீரர் காமராசர் புகழ் ஓங்குக!

சீர்மிகுந்த விருதுநகர்ப் பதிவாழ்ந்த தம்பதிகள்
குமார  சாமி
ஏர்மிகுந்த சிவகாமி எனுமிவர்கள் பெற்றெடுத்த
         இனிய பிள்ளை;
கார்மிகுந்த வண்ணத்தர்; வெள்ளைநிற உள்ளத்தர்;
          காம ராசர்
பேர்மிகுந்த தமிழினத்தின் பெட்புமிக்க அடையாளம்;
          பீடு தானே!

தீரர்சத்ய மூர்த்திக்குச் சீர்த்திமிகு மாணாக்கர்;
பாரதத்தாய் கைவிலங்கைப் பட்டென்(று) அறுத்தெறிய
வீரமிகப் போராடி வெஞ்சிறையில் வாடியவர்;
ஈரநெஞ்சில் வாஞ்சையுடன் ஏழையர்க்கு நன்மைசெய்தார்.

தீமை  யிலாத  விருதுநகர்ச்
சேர்வில்  தோன்றி  அரசியலில்
ஏமம்  மிக்க  காங்கிரசாம்
இயக்கம்  தனிலே  படிப்படியாய்க்
காம  ராசர்  தொண்டியற்றிக்
கண்ய  மிக்க  முதலமைச்சாய்
பூம  டந்தை  உளங்களிக்கப்
பொறுப்பு  மிக்க  ஆட்சிதந்தார்.

நன்மைமிகு உழவுசெய்ய  அணைகள்பல எடுத்தார்;
 நல்லதொழிற் சாலைபல நிறுவிவளம் கொடுத்தார்;
உன்னதமாம் கல்விகற்கப் பள்ளிபல திறந்தார்;
  ஓயாத தொண்டாற்றி ஊண்,உறக்கம் துறந்தார்;
இன்மைமிகு மாணவர்க்காய் அழுதுகண்ணிர் உகுத்தார்;
  ஏற்றமிகு பகலுணவுத் திட்டந்தான் வகுத்தார்;
பன்னரிய சீருடைத்திட் டந்தனையே கொணர்ந்தார்;
  பாங்கான அவர்தொண்டை மக்களெலாம் உணர்ந்தார்.

கரும வீர! காம ராச! கல்வி கற்க உதவினீர்;
தரும மிக்க ஊழ லற்ற தக்க ஆட்சி தந்ததால்
அருமை யென்று சகல மக்கள் ஆத ரித்து வந்தனர்;
திருமி குந்த நல்ல கால மென்று சொல்லி வாழ்த்தினர்.

நேர்மையாய் எளிமை யாக
நித்தமும் தொண்டு  செய்தார்;
கூர்மையாம் அறிவு  கொண்டே
கொடுமைகள் களைந்து  மக்கள்
ஓர்மையாய்த்  துணிவாய்  வாழ
         ஊழலே இலாமல்  ஆண்டார்;
சீர்மையாய்  நாட்டை  யாண்ட
          செம்மலை  வாழ்த்து  வோமே!

வாழி! பெருந்தலைவர்; வாழி! அவர்திருப்பேர்;
வாழி! அவர்புகழும் மக்கள்தொண்டும்--வாழி!
உலகில்  கதிரும்  ஒளிரும்  மதியும்
நிலவும்  வரையளவும்  நின்று.

அருஞ்சொற் பொருள்:

கார்--கருமை; பெட்பு--பெருமை; பீடு--சிறப்பு; சேர்வு--வாழிடம்; ஏமம்--வலிமை;
பூமடந்தை--நிலமகள்; கண்ணீர் உகுத்தார்--கண்ணீர் சிந்தினார்;
கொணர்ந்தார்--கொண்டுவந்தார்;
திருமிகுந்த காலம்--பொற்காலம்;
ஓர்மை--உறுதி, துணிவு;கதிர்--சூரியன்;
மதி--சந்திரன்.






Sunday 7 July 2019

காடும் செடியும் அவளாகத்

காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.

ஐவேல் அசதி என்னும் வள்ளல் அந்நாளில் கற்றறிந்த
பெரியோர்கள்பால் அன்பும் மரியாதையும் கொண்டவ
னாக விளங்கினான். அவன் வீரத்திலும் சிறந்து விளங்
கியவன். அசதி என்பது அவனது இயற்பெயர் என்றும்
"ஐவேல்" என அழைக்கப்படும் வேலைக் கைவசம் வைத்துக்
கொண்டிருந்த காரணத்தால் 'ஐவேல் அசதி' என்று
அழைக்கப்பட்டான்  என்றும்  சான்றோர் கூறுவர். இந்த
வள்ளலிடம் ஔவையார் தன் புலமையை வெளிப்படுத்திப்
பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஐவேல் அசதி தமிழ்
கற்ற தன்னை மிகுந்த அன்போடும் மதிப்போடும் நடத்து
வதைக் கவனித்த ஔவையார் அவ்வள்ளல் மீது கோவை
எனப்படும் சிற்றிலக்கியம் ஒன்றை இயற்றினார். காலப்
போக்கில் அந்த நூல் நமக்குக் கிடைக்காமல் போயிற்று.
ஆனால் அந்நூலின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.
அப்பாடல்களைப் பார்ப்போம்.

அகப்பொருள் சுவை ததும்பும் பாடல்களைக் கொண்ட
அசதிக் கோவையில் உடன்போக்கு என்னும் துறையில்
பாடப்பட்ட பாடல் இது:
"அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்
முற்றா  முகிழ்முலை எவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதவர் ஈட்டமும்  கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே".
பொருள்:
காதலனோடு உடன்போக்குச் சென்ற மகளை நினைத்து
ஒரு தாய் புலம்பும் பாடலிது. கதியற்றவரைக் காக்கும்
ஐவேல் அசதியின் அழகிய மலைநாட்டின்மேல் வாழும்
என்மகள் எவ்வாறு கொடிய பாலைநிலத்தின் வழியே
தன் காதலனுடன் சென்றாள்? முத்தமிழ் நூல் கற்ற
பெரியோரைப் பிரிவதும், கல்லாதவர் கூட்டத்தில் சிக்கிய
கற்றவர் நிலையும், இளமைக் காலத்தில் கைப்பொருள்
இல்லாத வறுமைத் துயரும் எவ்வாறு மனக் கொதிப்பைத்
தருமோ அந்த அளவு கொதிப்பும் வெம்மையும் உடைய
பாலைநிலத்தை என்மகள் எவ்வாறு கடந்து சென்றனள்?
என்று அத்தாய் புலம்பியதாகப் பாடல் தெரிவிக்கிறது.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.ஒரு காதலன் பொருள்
தேடுவதற்காகத் தன் காதலியைத் தவிக்கவிட்டுச் சென்று
விட்டான். அவன் பொருள்தேடி வந்தால்தான் திருமணம்
நடைபெறும். ஆனால் காதலியோ அவன் பிரிவால் மிகவும்
வாடி, வதங்கிப் புலம்பத் தொடங்கிவிட்டாள். அப்பாடல்:
"அருஞ்சஞ் சலங்கொண்ட ஐவேல் அசதி அகல்வரையின்
இருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென தன்னைமொழி
தருஞ்சஞ் சலமும் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும்
பெருஞ்சஞ் சலங்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே".
பொருள்:
பிறர்  மனக்கவலை(சஞ்சலம்) யைத் தன்னுடைய துயரமாக
எண்ணி  அதனைத் துடைக்கும் வள்ளல் ஐவேல் அசதி மலை
நாட்டில் வாழும் எனக்குள்ள மனக்கவலை ஏராளம். என் அன்னை
உடன்போக்கு நிகழ்த்திய எனக்குத் தரும் ஏச்சும் பேச்சும், என்னைப்
பிரிந்த காதலனால் ஏற்பட்ட  எப்பொழுது திரும்பி வருவார்?
என்ற ஏக்கமும் ஊரார் என்னவிதமாக அலர்(பழிச்சொல்) தூற்று
வாரோ என்ற கவலையும் என்னைப் படாதபாடு படுத்துகின்றன.
பெண்ணாகப் பிறந்து இந்தப் பாடு படும் நான் சாகாமல் உயிர்
வாழ்வது எதற்கு?

மேலுமொரு பாடலைப் பார்ப்போம்:
"ஆலவட் டப்பிறை ஐவேல் அசதி அணிவரைமேல்
நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி  வட்டமிட்  டோடி. வரவழைத்து
வேலைவிட்  டுக்குத்தி வெட்டுவ  ளாகில்  விலக்கரிதே".
பொருள்:
ஆலவட்டம் போன்ற  முழுநிலவு ஒளிரும் ஐவேல் அசதி என்னும்
தலைவனின் அழகிய மலைநாட்டில் வாழ்பவர்கள் நாங்கள். என்
காதலியின் நீலவட்டக்(கருமைநிறக்) கண்கள் என்னை நேருக்கு
நேராக நோக்கும் போது நான் கிறங்கி, நிலை தடுமாறி, மயங்கி
விட்டேன்.  என்னை ஒரு சுற்றுச்சுற்றிச் சிறிது தொலைவு
ஓடினாள். அங்கிருந்து கொண்டு அவளருகே என்னை வரவழைத்
தாள். நல்ல வேளை, மீண்டும் தன் வேல்போன்ற கண்களால்
என்னை நேருக்கு நேராக நோக்கி வெட்டியிருந்தால் அதனைத்
தடுத்து விலக்க இயலாமற் போயிருக்கும். என்னவொரு கூரிய,
காதற் பார்வை!

பிறிதொரு சுவையான பாடலைப்  பார்ப்போம் :
"ஆரா யிரங்கொண்ட  ஐவேல்  அசதி  அகன்கிரியில்
நீராடப்  போகும் நெறிதனி  லேயந்தி  நேரத்திலே
சீரான  குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண்
போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே".
பொருள்:
ஆத்தி மரங்கள் ஆயிரக் கணக்கில் வளர்ந்து நிற்கும் ஐவேல்
அசதியின் அகன்ற மலைப்பகுதியில், அந்தி நேரத்திலே,
நீராடப் போகும் பாதைவழியே முகத்திலே புன்முறுவல் தவழ
எடுப்பான தோற்றமுடைய பெண் ஒருத்தி போகின்றாள். அந்த
அழகுச் சிலையை விட்டுவிடாதே, பிடி பிடி என்று சொல்வது
போல வானத்தில் நிலவு உதித்துப்  புறப்பட்டது. காதலன் தன்
காதலியைச் சந்தித்த அந்த நிகழ்வைத்  திருமணத்துக்குப் பிறகு
அவளிடம் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நினைவு கூர்ந்து
பரவசமடைகின்றான்; அவளும்தான்.

வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"அழற்கட்டுக் கட்டிய  ஐவேல் அசதி அணிவரையின்
மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லாள்
உழக்கிட் டுரியிட்டு  முவ்வுழக் கிட்டுரி நாழியிட்டுக்
குழற்கட்  டவிழ்த்துட னங்ஙனின்  றேமயிர் கோதினளே".
பொருள்:
ஐவேல் அசதியின் மலைநாட்டில் கொடிய விலங்குகளான புலி,
கரடி, காட்டு யானை போன்ற உயிரினங்களும் ஆங்காங்கே
வாழ்ந்து வந்தன. இரவில் இரைக்காக வேட்டையாடுவதற்காக
வலம் வருதல் இயல்பு. அவைகளிடமிருந்து மக்களைக் காத்தல்
வேண்டி எல்லாப் புறத்திலும் நெருப்பிட்டுக் காவல் செய்திருப்
பார்கள். இதைத்தான் அழற்கட்டு என்று பாடல் குறிக்கிறது.
இந்த மலைநாட்டிலே மேகங்கள் திரண்டு நிற்கும் ஒரு மாளிகை
மேல்தளத்திலே செப்புச் சிலைபோன்ற பெண் ஒருத்தி தோன்றி
னாள். பொழுது புலர்ந்து மூன்று நாழிகை கடந்திருக்கும்  அந்த
வேளையில் ஒயிலாக நின்ற அந்தப் பெண் தனது கூந்தலை
அவிழ்த்துவிட்டு  முடியைக் கோதத் தொடங்கினாள். அக்காட்சி
மேகத்தைக் கண்ட மயில் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்
கியதை ஒத்திருந்தது. இத்தகைய அழகிய காட்சியைத்  தெரு வழி
யே சென்ற இளைஞன் ஒருவன் கண்டு சொக்கிப் போனான்.
அவன் சொல்வதாக இப் பாடல் அமைந்துள்ளது. பாடலின் மூன்றாம்
வரியில் வரும் 'உழக்கு' என்னும் சொல் காற்படியையும், 'உரி'
என்னும் சொல் அரைப்படியையும்,  'முவ்வுழக்கு' என்னும் சொல்
முக்காற்படியையும், 'நாழி' என்னும் சொல் ஒருபடியையும் குறிக்கும்.
அனைத்தையும் கூட்டினால் மூன்று படி, அதாவது, மூன்று நாழியைக்
குறிக்கும். நாழி என்னும் சொல் நாழிகையையும் குறிக்கும். எனவே,
விடிந்து மூன்று நாழிகை கடந்த வேளை.

இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:
"ஆடும் கடைமணி  ஐவேல்  அசதி  அணிவரைமேல்
நீடும் கயற்கண்ணி தந்தவவ் வாசை  நிகழ்த்தரிதால்
கோடும் குளமும்  குளத்தருகே  நிற்கும்  குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத்  தோன்றுமென்  கண்களுக்கே".
பொருள்:
கடைவாயிலில்  விருந்தினர் வருகையை அறிவிக்கும் மணி
ஓசை  இடையறாமல் ஒலிக்கும் கொடைக் குணம் உடையவன்
ஐவேல் அசதி என்னும் மலைநாட்டுத் தலைவன். அம்மலைப்
பகுதியில்  பேரெழில் பாவை ஒருத்தியை ஒரு இளைஞன்
பார்த்துக் கிறங்கிப் போனான். அவள்மேல் அவன் வைத்த
ஆசை அவனைப் பித்துப் பிடித்தவன் போல மாற்றிவிட்டது.
தன்னைச் சுற்றியிருக்கும்  எல்லாப் பொருள்களும் அப்பெண்ணைப்
போலவே அவன் கண்களுக்குத் தோன்றின. எனவேதான்,
'கோடும் குளமும் குளத்தருகே நிற்கும் குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே'
என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு திரிகின்றான்.
காதலின் வேகம் படுத்தும் பாடு.