Tuesday 25 June 2019

மாமன்னர் இராசராசர் போற்றுதலுக்கு உரியவரா? அல்லரா?...

மாமன்னர் இராசராசர் வருகை புரிந்தால்..... ...

ஆற்றோரம் சென்றேன்; அசைந்துவரும் தென்றலெனும்
காற்றை  நுகர்ந்தேன்; களித்தேன்; மணல்மீதில்
தன்னந் தனியே தனிமையினில் ஆழ்ந்திருந்தேன்;
என்னருகே ஆங்கொருவர் ஏற்றமுடன்  வந்துநின்றார்;
"ஐயன்மீர் நீவிர் எவரென்று நானறியேன்,
பையவே தாங்கள் பகர்க" என்றுரைத்தேன்.
"பிள்ளாய்!இம் மண்ணிற் பிறந்த தமிழ்வேந்தன்,
தெள்ளு தமிழில் அருண்மொழி வர்மனென்பார்;
பட்டப்பேர் பற்பலவாம்; பாசத்தில் மக்களெலாம்
பெட்புடனே ' ராசராசன்' பேர்கொண்(டு) அழைத்தனரே;

மக்கள்சிலர் என்பெருமை மங்கக் குறைசொல்லி
நக்கல்,நை யாண்டி நவில்கின்றார்" என்றுரைத்தார்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன்நிகழ்ந்த சம்பவத்தைப்
பாயிரம் கூறிப் பகர்தல்  அரிதேயாம்.
வேந்தன் தனக்கு விரிந்த பொறுப்புண்டு,
சாந்துணையும் அப்பொறுப்பைத் தட்டிக் கழித்திடோம்.
எல்லை  தனைக்காத்(து) எதிரிகள் வாராமல்
நல்லவிதம் நாட்டை நடத்திடல் ஓர்கடமை;
மக்களெல் லாரும் சமமாவர் என்றெண்ணி
எக்கணமும் ஆட்சி இயக்கிடுதல் ஓர்கடமை;

கொள்ளை,கொலை இல்லாக் குறையற்ற ஆட்சிதரல்
விள்ளரிய வீரமுடை வேந்தர்க்காம் ஓர்கடமை;
மாக்கடலில் கொள்ளை, வழிப்பறி செய்வோரை
ஊக்கமுடன் போரிட்(டு) ஒடுக்கிடுதல் ஓர்கடமை;
பெண்களைப் பொன்போலப் பேணிடுதல் ஓர்கடமை;
கண்கள்நிகர் கல்வி, கலை கற்பித்தல் ஓர்கடமை;
மக்கள் விரும்பி வணங்கும் கடவுளர்க்கு
நெக்குருகக் கோவில் நிறுவிடுதல் ஓர்கடமை;
இத்தனையும் செய்தேன், இதன்மேலும் செய்கையுண்டு;
முத்தனைய செய்கைகளை மோசமெனக் கூறுகின்றார்;

சாதி,மத பேதத்தைச் சற்றும்,பின் பற்றவில்லை;
வேதியரைப் போற்றியதாய் வீண்குற்றம் சாட்டுகின்றார்;
தேவரடி யாரென்னும் தெய்வ நெறிசெய்தேன்,
கேவலமாய் அன்னவரைக் கேலி புரிகின்றார்;
நீதி,நெறி யோடு நிலத்தைப் பகிர்ந்தளித்தேன்,
சாதிநெறி பார்த்துச் சலுகைசெய்த தாய்ச்சொல்வர்;
மங்கை பலரை மணந்ததனால் பெண்பித்தர்,
பங்கம் உடையவர், பாங்கற்றார் என்றுரைப்பர்;
பேரரசை மேலும் பெரிதும் வலுவாக்க
வீரமுடைச் சிற்றரசர் வேந்தர்க்(கு) உதவிடுவர்;

பெண்ணைக் கொடுக்கும் உறவுமுறை கொண்டவர்கள்
பெண்கொடுத்துத் தத்தம் பிணைப்பை வலுச்செய்வர்;
எப்பொழுது போர்நிகழும்? யார்சாவைச் சந்திப்பார்?
தப்பறவே யாராலும் சாற்ற இயலாதே!
ஆரிறந்த போதும் அரசைத் தொடர்ந்திடவே
பேரரசர் பிள்ளைபலர்  பெற்றிடுவர்; ஈதுண்மை.
பேரரசைக் காத்திடவே பெண்டிர்பல  ரைமணத்தல்
பாரதநன் னாட்டின் பழக்கம்தான், குற்றமிலை.
எத்தனையோ  குற்றங்கள் என்மேற்  சுமத்திடினும்
அத்தனையும் ஆதாரம் அற்றவைதாம் என்றவுண்மை

செந்தமிழ் மக்கள் தெளிவாகத் தேர்ந்திடுவர்;
சிந்தனையை வேறு திசையினில் செல்லவிடார்;
போற்றுவார் போற்றிடினும் பொல்லாப் புழுதியினைத்
தூற்றுவார் தூற்றிடினும்  சோர்ந்திடேன்; மெய்யேயாம்.
எம்மக்கள் என்காலம் ஏற்றமிகு பொற்காலம்,
தம்மினத்தின் தக்க அடையாளச் சின்னமென்பர்;
நஞ்சனைய கூற்று நவில்பவரை நம்பாமல்
நெஞ்சகத்தில் என்னை நிலைநிறுத்தி வாழ்ந்திடுவர்."
என்றெல்லாம் பேசி எனைவிட்டு நீங்கினரே,
அன்றுநமை  ஆண்ட  அவர்.









Saturday 8 June 2019

கோதாவரி தமிழர்களின் குறை தீர்க்குமா?+

தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டம்
(கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி)
கங்கையையும் பொன்னியையும் இணைத்திடலாம் என்றபகற்
  கனவு கண்டோம்;
"மங்கலமாம் இப்பணியை நிறைவேற்ற எந்தவொரு
   வழியும் இல்லை;
வெங்கொடுமை; மிகுந்தபொருட் செலவாகும்; மாநிலங்கள்
    விரும்ப வில்லை;"
பங்கமுற இவ்வாறு கூறியதால் கைவிட்டோம்;
    பரிதா பம்தான்.

எப்பொழுதும் பசுமைதவழ் நெற்பயிர்கள் அசைந்தாடி
   இனிய தென்றல்
வெப்பமதை விலக்கிநல்ல குளிர்ச்சிதரும் நன்செய்நிலம்
   மிக்க நாட்டில்
தப்பியது பருவமழை; வறட்சிமிக உருவாகித்
   தண்ணீர்ப் பஞ்சம்
துய்ப்பவரைத்  துன்புறுத்தி வாட்டமுறச்  செய்கிறது;
   சோகம்  தானே!

தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் பகுதியெலாம்
   தழைத்த காலம்;
அமிழ்தமன்ன பொற்காலம்; அக்காலம் இனிவருமோ?
   ஆறே, பொன்னி!
இமிழ்திரைவங்  கக்கடலில் கலந்திடும்நற் கழிமுகத்துக்
    கேற்றம் சேர்த்தாய்;
துமிதமது காணாமல் கழனியெலாம் பாலையெனத்
    தோன்றும் அம்மா!
(துமிதம்--மழைத்துளி; கழனி--வயல்)

பருவமழை பொய்த்துநமை வாட்டுவது போதாதோ?
    பங்கு கேட்கும்
கருநாடர் அணைகளிலே நீர்தேக்கிப் பயனடைவர்;
    கபட மாக
அருமைமிகு காவிரியை அடைத்துவைத்து வஞ்சித்தல்
    அறமோ? சொல்வீர்;
பெருமைமிகு மையத்துப் பேரரசே! தலையிட்டுப்
    பிணக்கைத் தீர்ப்பீர்!

இந்நிலையில் நதிகோதா வரியினையும் பொன்னியையும்
    இணைப்போம் என்னும்
பொன்னிகர்த்த முன்மொழிவைப் பலர்சொல்லி மகிழ்கின்றார்;
    புகல்வோம் நன்றி;
மின்னிகர்த்த வேகத்தில் திட்டத்தை நிறைவேற்ற
    வேண்டிக் கொள்வோம்;
என்னவொரு தடைவரினும் எதிர்கொண்டு முறியடிப்போம்;
    ஏற்றுக் கொள்வோம்.

நிதிநிலையைக் காரணமாய்ச் சொல்லாதீர்; சூழல்கெடும்
    நினைப்பும் வேண்டா;
சதிபுரிந்து தடைசெய்ய எண்ணிடுவோர் தயைகூர்ந்து
    தள்ளி நிற்பீர்;
மதிமிகுந்த தென்னகத்து முதல்வரெலாம் ஒருங்கிணைந்து
   வழியைத் தேடிக்
கதியெனவே நம்புகின்ற இத்திட்டம் நிறைவேறக்
   கைகள் தாரீர்!

மையத்துப் பேரரசை ஆட்சிசெய்வோர் அக்கறையாய்
   மனது வைத்தால்
உய்யும்வகை நதிகோதா வரியினையும் பொன்னியையும்
   ஒருங்கே சேர்த்து
நையவைக்கும் தணீர்ப்பஞ்சம் நீக்கிடலாம்;வறட்சியினை
    நாட்டை விட்டே
ஐயமற விரட்டிடலாம்; வளமனைத்தும் மீட்டிடலாம்;
    அனைத்தும் உண்மை.
(தணீர்ப் பஞ்சம்--தண்ணீர்ப் பஞ்சம்--இடைக்குறை)

தென்னகத்து மக்களெலாம் இப்பெரிய காரியத்தில்
    சேர்ந்து நின்று
தன்னலத்தைத் துறந்து,பொது நலமெண்ணி நன்முறையில்
    தம்மால் ஆன
சின்னவொரு பணியெனினும் சிறப்பாகச் செய்திடுவோம்;
    தீர்க்க  மாகப்
பன்னரிய சாதனையாய் நிறைவேற்றி முடித்திடுவோம்;
   பாங்காய் வெல்வோம்.

சீர்மிகுமித் திட்டத்தை  மையத்தில்  ஆள்வோர்கள்
   செம்மை யாக
நேர்மைமிக  நிறைவேற்றிச் செயல்படுத்தி விட்டாலே
    நீங்கும்  துன்பம்;
நீர்மிகுந்து வளம்மிகுந்து  தென்னகத்து மாநிலங்கள்
    நெருடல் இன்றிப்
பார்புகழப் பிணக்கின்றி ஒற்றுமையாய் வாழ்ந்திடுமே,
    பாசத் தோடு.

ஆண்டவனே! மாபெருமிச் செயலுக்கு நின்கருணை,
    அளவில் ஆசி
வேண்டிடுவோம், தட்டாமல் நல்கிடுவாய்; பருவமழை
    விரைந்து பெய்து
மீண்டுமிந்தத் தென்பகுதி செழிப்படைய வழிசெய்வாய்;
    வேண்டும் நீரை
யாண்டுந்தென்  னகமக்கள் பெற, வரந்தா; பங்கீட்டை
    எளிதாய் ஆக்கே!
(ஆக்கு + ஏ = ஆக்கே; 'ஏ' அசையாகும்)