Wednesday 24 November 2021

பிரிவுத் துன்பம்.

 பிரிவுத் துன்பம் போல் தொல்லைதரும் பிறதுன்பம் ஏதுமுண்டோ?


காதலன்-காதலி இடையே நிகழ்வதாயினும், கணவன்-மனைவி இடையே

நிகழ்வதாயினும் பிரிவு  எல்லையற்ற மனவுளைச்சலை உருவாக்குகிறது.

அகப்பொருள் இலக்கணத்தில் நான்கு விதமான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

1.பொருள் ஈட்டுவதற்கான பிரிவு 2.தூது நிமித்தமான பிரிவு 3.போருக்குச்

செல்ல நேர்ந்தமையால் பிரிவு 4. பரத்தையர் உறவால் பிரிவு.


பிரிவால் விளையும் துன்பம் சொல்லொணாதது. திருவள்ளுவர் தம் திருக்குறளில்

,"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்."(குறள்:1160)

பிரியும்பொழுது உருவாகும் துன்பத்தால் வருந்துவதையும் தவிர்த்து, பிரிந்தபின்

அப்பிரிவையும் தாங்கிக்கொண்டு அதன்பின்னும்  பற்பல மகளிர் உலகத்தில்

உயிர்தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.


இலக்கியங்களில் பிரிவுத்துன்பம் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்று காண்போம்:

குறுந்தொகை ஆறாம் பாடலில் புலவர் கயமனார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

"நள்ளென்(று) அன்றே யாமம், சொல்அவிந்(து)

இனி(து)அடங்  கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே".

காதலனைப் பிரிந்து வாடும் தலைவி புலம்பிப் பாடுகின்றாள்:

"பிரிவால் வாடும் காதலர்க்குப் பகையாய் விளங்குவன இரவுப்

பொழுதும் நிலவின் ஒளியும் ஆகும். நள்ளிரவு நேரம்; ஊர் மக்கள்

பேசுதல் நீக்கி(சொல் அவிந்து) அடங்கினர். என் பிரிவுத் துன்பத்

தைப் பற்றிக் கவலை கொள்ளாத மாக்கள்(ஆற்றாமையிலும், சினத்

திலும் தோய்ந்து உழலும் அவள் மக்களை மாக்கள் என்ற சொல்லால்

குறிப்பிடுகின்றாள்) எந்தவிதமான கவலையும் இன்றித் துயில்கின்

றனர். இந்த அகன்ற பெரிய உலகத்தில் நான் ஒருத்திதான் உறக்கம்

கொள்ளாமல் விழித்துக் கொண்டிருக்கின்றேன். ஏனையோர் அனை

வரும் ஆழ்துயிலில் ஈடுபட்டுள்ளனர்."🎂

இதே கருத்து திருக்குறளில் பயின்று வந்துள்ளது.(குறள்:1168):

"மன்னுயிர் எல்லாம் துயிற்றி யளித்திரா

என்னல்ல(து) இல்லை துணை".

"இரவுப் பொழுது பரிதாபமாகக் கழிகின்றது. மற்ற எல்லா உயிர்களையும்வவஒ

உறங்கவைத்துவிட்டதனால், இரவு முழுவதும் துயிலாதிருந்த என்னைத்

தவிர வேறு எந்த  ஒரு துணையும் இல்லாதிருக்கின்றது."


இனி, சிலப்பதிகாரத்தில் பயின்றுவரும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

"பையுள் நோய்கூரப் பகல்செய்வான் போய்வீழ

வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை!

மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்

ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை."

"பிரிவுத் துன்பமாகிய நோய் மிகுதி ஆகக் கதிரவனும் மேற்கில் மறைய

நாட்டில் உள்ளோரெல்லாம் நல்லுறக்கம் கொள்ள மனத்தை மயக்கும்

மாலைப் பொழுதே நீ தோன்றியுள்ளாய். மாலைப் பொழுது நீதான் என்

பது மெய்யென்றால், என்னைத் திருமணம் செய்து பின் இரக்கமின்றிப்

பிரிந்துசென்றவர் அவர்தான் என்பது உண்மையானால் இந்த உலகம்

துன்பத்தில் துடிக்க வேண்டியதுதான். வேறு ஒன்றும் செய்ய இயலாது.

அத்தகைய துன்பத்துக்குக் காரணமான மாலையே நீ வாழ்க!"


இனி, இடைக் காலப் புலவர் ஒருவர்(பெயர் தெரியவில்லை) இயற்றிய

பாடலை நோக்குவோம்:

பொருள் ஈட்டுவதற்காகச் சென்ற தலைவன் வினை முடிந்து ஊர்க்குத் 

திரும்பும் பொழுது தன் காதலி பிரிவுத் துயரால் வாடி வதங்கி நொந்து

நொம்பலப்பட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பாள் என எண்ணி

வானில் உலவும் மேகங்களை அழைத்துத் தான் வந்து கொண்டிருக்கும்

செய்தியைச் சொல்லிச் செல்லுமாறு தெரிவிக்கின்றான்.பாடல் பின்வருமாறு:

"விண்வழியே ஓடுகின்ற மேகங்காள்! ஒருவார்த்தை

விளம்பிச் சேறீர்,

மண்வழியே புகழ்நிறுத்தும் மகதேச வாணன்தன்

        வரையிற் சென்றால்

கண்வழியே முத்தொழுகக் கைவழியே சங்கொழுகக்

         காமன் எய்த

புண்வழியே உயிரொழுக வரும்வழியே பார்த்திருக்கும்

         பூவை  யார்க்கே."

"விண்வழியே ஓடுகின்ற மேகங்களே! மகதேச வாணனின் மலைவழியே

செல்லும் பொழுது அவ்வூரில் கண்வழியே முத்து முத்தாகக் கண்ணீர்

உகுத்தும், கைவழியே சங்கு வளைகளை நெகிழவிட்டும், காமன் மலர்க்

கணையால் எய்த புண்வழியே தன் உயிரை இழந்தும் வாழ்ந்துவரும்  என்

காதலியைச் சந்தித்து அவளிடம் நான் ஊருக்குத் திரும்பிவரும் செய்தியைச்

சொல்லிவிட்டுச் செல்க."


பிரிவுத் துன்பம் மிகக் கொடுமையானது. ஊண், உறக்கத்தைக் கெடுத்துவிடும்.

மேனியை வாடச்செய்யும். மேனி நிறத்தை மாற்றிப் பசலைநிறம் அடையச் செய்

யும். கண்ணீர் சொரிய வைக்கும். தேம்பித் தேம்பி அழவைக்கும். இத்துயரம்

போக்கும் ஒரே மருந்து மீண்டும் காதலனை/கணவனைச் சந்திப்பது தான்.


 ஆடவர் போர்செய்தற் பொருட்டோ, பொருளீட்டுதல் பொருட்டோ, கல்வி

 கற்றல்  பொருட்டோ  வேறு ஊர்களுக்குச் செல்ல நேரிடும். அப்பொழுது

தலைவன் தலைவியைப் பிரிவது இயற்கை. வேறு ஊருக்குச் சென்ற 

தலைவன் தலைவியை நினைத்து ஏங்கினாலும் ஒருவாறு மனத்தைத்

தேற்றிக்கொண்டு எந்தப் பணிக்காக வந்தானோ அந்தப் பணியில் ஈடுபட்டுப்

பிரிவுத் துயரை ஆற்றிக் கொள்வான்.


 ஆனால் தலைவிக்கோ வேறு பணி

ஏதும் இல்லாததால் தலைவனைப் பற்றியும் அவனொடு கழித்த இன்பமான

பொழுது களைப் பற்றியும் சிந்தித்துச் சிந்தித்து  மென்மேலும் துயர் கொள்வாள்.

பொழுதைக் கழிப்பது மிக மிகத் தொல்லையாக விளங்கும். இதனால்தான்

திருவள்ளுவர் தமது 1269 ஆம் குறளில் கீழ்க்கண்டவாறு பாடினார்:

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்  தேங்கு  பவர்க்கு."

பொருள்:

நெடுந்தொலைவு சென்ற தம் தலைவர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை

ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்  தலைவிக்கு அக்குறிப்பிட்ட நாள்

வரும்வரை ஒவ்வொரு நாள் கழிவதும் பலநாட்கள் கழிவது போலத் தோன்றும்.

சேண்=தொலைவு.


தனிப்பாடல் திரட்டிற் காணப்படும் ஒரு பாடலில் தலைவிக்கு ஒருநாள் கழிவது

ஐந்து உகம்(யுகம்) கழிவது  போலத்தோன்றியதாம். பாடலைப் பார்ப்போம்:

"கொத்தலரும் தாரான் குலசேக ரன்கூடல்

பத்தி இளங்கமுகின் பாளைதொறும்--தத்திவரும்

தாளஞ்  சுகமே!  தலைவர்  தமைப்பிரிந்த

நாளஞ்  சுகமே நமக்கு."

பொருள்:

கொத்துக் கொத்தாகப் பூத்த  மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்திருக்கும்

குலசேகர பாண்டியனின் கூடல் நகரில் சோலையிலுள்ள இளம் பாக்கு

மரப் பாளைகளில் தத்தி விளையாடும்  அழகிய கால்களையுடைய கிளியே!

(தாள் + அஞ்சுகம்= காலையுடைய கிளி). எம் தலைவர் எம்மைப் பிரிந்து

சென்றுள்ள காரணத்தால் ஒவ்வொரு நாள் கழிவதும் ஐந்து யுகம் கழிவது

போல நீண்டு தோன்றுகின்றது.(நாள் + அஞ்சு+ உகம்,). புலவரின் வார்த்தை

விளையாட்டைக் கவனிக்கவும். தாள் அஞ்சுகமே!(கிளியே!) ஒவ்வொரு நாள்

கழிவதும் ஐந்து யுகம் கழிவது போலத் தோன்றுகிறது(நாள் + அஞ்சு ,+ உகம்).

பிரிவுத் துயரம் மிகக் கொடுமையானது; அதைப் புலவர் வருணிப்பது மிகத்

திறமையானது.

Saturday 6 November 2021

தமிழக மீனவரக்கு விடிவு உண்டா?

 தமிழக மீனவரின் தணியாத துயரம்.

"இந்தியத் திருநாடே! ஏன் இந்தப் பராமுகம்?"--மக்கள்.


கடலன்னை வளர்த்தெடுக்கும் கண்ணியம்சேர் பெருமக்கள்

உடலாலும் உளத்தாலும் உரமிகுந்த பரதவர்கள்;


இயற்கைத்தாய் விளைவிக்கும் இடி,மின்னல்,ஆழிஅலை

அயர்வடையச் செய்துவிடும் அடைமழை,சூ றாவளியாம்


இத்தனையும் எதிர்கொள்ளும் எங்கள்தமிழ்த் தொல்குடியர்

நித்தநித்தம் சிறீலங்காக்  கடற்படையால் துயரடைவர்;


அன்றாடம் அன்னவரால் அவதியுறும் மீனவர்க்கு

நன்றாகத் துணைசெய்ய நலம்நாடும் அரசில்லை;


கையகல இலங்கைசெயும் கள்ளமிகு  செயலையெல்லாம்

மையப்பேர் அரசாங்கம் கண்டிப்ப  தேயில்லை;


கண்டும்கா ணாததுபோல் கடமைசெயல் நன்றாமோ?

விண்டுரைப்பார் யாருமிலர்; வேதனைதீர்ப் பாருமிலர்;


இரவுபகல் பாராமல் இருங்கடலில் மீன்பிடிப்போர்

"வரம்பெல்லை தாண்டிவந்தார்; வலை,படகைப் பறித்திடுவோம்;"


எனவுரைத்தே இலங்கையர்கள் எள்ளளவும் இரக்கமின்றி

அனைவரையும் கைதுசெய்வர்; அடிதடியில் இறங்கிடுவர்;


மீன்களையும் பறித்திடுவர்; வலைகளையும் அறுத்தெறிவர்;

ஏனென்று கேட்பவரைத் துப்பாக்கி யால்சுடுவர்;


இன்றைக்கு வரையிலுமே எண்ணூறு நபர்வரையில்

கொன்றழித்த தீமைமிகு குள்ளநரி சிறீலங்கா; 


தமிழகத்து மீனவரைத் தயக்கமின்றிக் கொல்வதற்குத்

திமிர்பிடித்த இலங்கையர்க்குத் துணிவெங்ஙன் வாய்த்ததம்மா?


எக்கொடுமை  நேர்ந்திடினும் இந்தியநல் அரசாங்கம்

தக்கபடி உதவாது; சற்றேனும் வருந்தாது.


பாரதத்தின் புறக்கணிப்பால் பாதகர்கள் சிங்களவர்

கோரமிகு கொடுஞ்செயலைக் குதுகலித்து நிகழ்த்துகின்றார்;


இந்தியராம் செந்தமிழர்  இடர்கண்டும் இரங்காமல்

மந்தமாய் வினையாற்றும் மையத்துப் பேரரசு;


எழுகோடி அபராதம் எனச்சொன்ன சிங்களவர்;

அழுதழுது கெஞ்சிடினும் அதைவிலக்க வேயில்லை;


"படகுகளை நாட்டுடைமை யாக்கிடுவோம்" எனச்சொல்லி

உடனடியாய்ச் சட்டத்தை உருவாக்கி இடர்செய்வர்;


தமிழ்நாட்டுக் குரியகச்சத் தீவுதனைக் கையளித்தோம்;

உமிழ்கின்றார் வெறுப்பினையே; ஒருநாளும் நன்றிசொலார்.



எத்தனையோ ஆண்டுகளாய் இராசேந்தி ரன்போன்றோர்

வித்தைபல புரிந்த,வங்க விரிகுடா தனிலின்று


சிற்றெலியை ஒத்தசிறு சிங்களவர் சுற்றிவந்து

குற்றங்கள் இழைக்கின்ற கொடுமையினை என்னசொல்ல?


பாரதத்துக் கடற்படையார் பராமுகத்தைக் காட்டுவதால்

சீரழியும் மீனவர்க்குச் சிறிதளவும் பயனில்லை;



தெரிந்தபகை நாடான செஞ்சீனா, பாக்கித்தான்

உரிமையுடன் இலங்கையர்க்கே உதவிசெய்து பயமுறுத்தும்;


மற்றவர்கள் துன்பத்தில் வலியவந்து பங்குகொண்டே

உற்றநல்ல உதவிசெயும் உணர்வுடைய பரதவர்கள்


துயரடையும் போதெவரும் துணைசெய்ய வந்திலரே;

அயர்வடையும் போதெவரும் அவர்கண்ணீர் துடைத்திலரே!


பரதவர்க்குக் கைகொடுத்துப் பக்கபல மாகநிற்போம்;

அரவணைத்தே அன்னவர்க்காய் ஆதரவுக் குரல்கொடுப்போம்;

அண்டைநட்பு நாடெனவே ஆதரிக்கும் பாரதமே!

சண்டையிட வேண்டா; நீர் தவறுசுட்டிக் காட்டிடுவீர்.


சேட்டைசெயும் சுண்டைக்காய்த் தேசத்தை எச்சரிப்பீர்!

வாட்டமுறும் மீனவர்கள் வாழ்வாதா ரம்காப்பீர்!


நங்கச்சத் தீவுதனை நயமாக மீட்டெடுப்பீர்!

சிங்களவர் கொட்டத்தைத் திட்டமிட்டே ஒடுக்கிடுவீர்!


ஓயாத துன்பத்தில் உழல்கின்ற மீனவரைத்

தாயாகக் காப்பீரே, சார்ந்து.

(பராமுகம்=பாராமுகம்; கவனிப்பு இல்லாமை)

கரிகால் சோழனைப் புகழந்த வெண்ணிக்குயத்தியார் என்ற

புலவர் புறம். 66ஆம் பாடலில் குறிப்பிட்டது:

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!"

(முந்நீர்=கடல்; நாவாய்= கப்பல்; வளிதொழில்= காற்றின் செயல்பாடு)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 'வளிதொழில்' நுட்பத்தை

அறிந்து கடலில் ஆதிக்கம் செலுத்திய இனம் தமிழினம். இராச

ராசனும், இராசேந்திரனும் கடலாதிக்கத்தில் உச்சத்தைத் தொட்டவர்கள்.

இப்படிப்பட்ட நம்மைச் சுண்டைக்காய்த் தேசமான சிறீலங்கா இரண்டு

அல்லது மூன்று கப்பல்களை வைத்துக்கொண்டு மீனவரைத் துன்புறுத்து

வதும், கொலை செய்வதும் மிகப் பெரிய கொடுமைகள். இதுவரையில்,

எண்ணூறு மீனவர்களுக்குமேல் கொன்று குவித்துள்ளனர். இது

தொடர்பாக இந்தியத் திருநாடு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல்

மெளனம் கடைப்பிடிப்பது புரியாத புதிராகவுள்ளது. ஏனிந்தப் பாராமுகம்

காட்டுகின்றனர்?  என்பது விளங்கவில்லை.

Monday 1 November 2021

பண்டைத் தமிழகத்தின்

 பண்டைத் தமிழகத்தின் செல்வச் செழிப்பு.


பண்டைய தமிழ்மக்கள் பல்வேறு தொழில்கள் புரிவதிலும்

வாணிகம் செய்வதிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.

வாணிகம் என்பது உள்நாட்டு வாணிகத்தையும் வெளிநாட்டு

வாணிகத்தையும் குறிக்கும். வெளிநாட்டு வாணிகத்தை

மேற்கொள்வதற்காகக் கடற்பயணத்தை மேற்கொண்டார்கள்.

கடற்பயணத்துக்காக நாவாய் என்னும் கலம் உருவாக்கினார்கள்.

காற்று எந்தத் திசையில் வீசுகிறது? அதன் வேகமென்ன? ஆமை

கைக்கொள்ளும்  வழித்தடங்கள்  எவை?போன்ற சகல நுட்பங்களையும்

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ வேந்தர்கள் தெரிந்து வைத்

திருந்தனர். புறம் 66ஆம் எண் பாடல் வெண்ணிக் குயத்தியார்

கரிகாற் பெருவளத்தான் மீது பாடியது. அதில் கரிகாலனின் முன்

னோர் கடற் காற்றின் நுட்பங்களை நன்கு அறிந்தவர்கள் என்று

பாராட்டியுள்ளார். அவ் வரிகள்பின் வருமாறு:

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!"

சோழரைப் போலவே சேர, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களும்

இந்த நுட்பத்தை அறிந்திருந்தனர். எனவே தம் மக்களை ரோமானிய,

கிரேக்க, எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சீன, மற்றும் பிற நாடு

கருடன் வாணிகம் செய்யுமாறு ஊக்கினர். வாணிகர்களுக்குக்

கடற் கொள்ளைக்  காரர்களால் இன்னல்கள் நிகழ்ந்த போது

தம் கடற்படை வீரர்களை அனுப்பிப் பாதுகாப்பு அளித்தனர். இதனால்

வெளிநாட்டு வாணிகம் செழித்தது. தமிழ்நாட்டில் செல்வம் குவிந்தது.


ரோமானிய, கிரேக்க வணிகர்கள் யவனர் எனப்பட்டனர். அரபு

நாட்டைச் சேர்ந்தவர்கள் சோனகர் எனப்பட்டனர். ஏனைய நாட்டினர்

மிலேச்சர் எனப்பட்டனர். ரோமானிய மற்றும் கிரேக்க நாட்டினர்

பொன்னொடு வந்து கறியொடு(மிளகு) சென்றார்கள்.மேலும் முத்து,

மஸ்லின் துணி, ஏலம் கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள் தமிழ்

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து

கண்ணாடி, மது வகைகள்,  நறுமணத் திரவியங்கள், சாடிகள், சூது

பவளங்கள், மணிவகைகள் முதலியவை இறக்குமதி செய்யப்பட்டன.

அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ரோமா

னியரும் கிரேக்கரும் பொன்னைக் கொட்டிக் குவித்தார்கள். ரோமானிய

அரசனிடம் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் "நமது நாட்டுச் செல்வம்,

குறிப்பாகப் பொன், தமிழ்நாட்டுடனான வாணிகத்தால் பறிபோகிறது;

அரசுக் கருவூலம் காலியாகிறது. தமிழ்நாட்டுடனான வாணிகத்தைக்

குறைத்துக் கொள்க" என்று எச்சரித்ததாகத் தகவல் உண்டு. எனவே தான்,

பெரிய அளவில் தங்கச் சுரங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத  நிலையிலும்

பொன் இங்கே அதிகமாக மக்களிடம் புழங்கியது. முத்தொள்ளாயிரம்

என்னும் இலக்கியத்தில் பாண்டிய நாட்டைப் புகழும் போது

"பார்படுப செம்பொன்; பதிபடுப முத்தமிழ்நால்" என்று விவரிக்கிறது.

அவ்வளவு செம்பொன் வருவதற்குக் காரணம் கொற்கை முத்தாகும்.


கொற்கைப் பட்டினத்தில் கடற்கரையில் கடல் அலை குவிக்கும் முத்துக்கள்

செல்வர் ஏறி வரும் குதிரைகளின் குளம்புகளுக்குள் மாட்டி அவைகளின்

நடமாட்டத்துக்கு இடையூறாக அமைந்துவிடும். பா.எ. அகம்.296--10.:

"இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்

கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்

நற்றேர் வழுதி கொற்கையம் முன்றுறை"

மேலும், அங்கு உப்பு விளைவிக்கும் உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்

களைப் போட்டு ஆட்டித்  தங்கள் குழந்தைகட்கு  விளையாட்டுக் காட்டுவர்.

"நளிநீர் முத்தம் வாள்வாய் எருத்தின்

வயிற்றகத்தடக்கி உமட்டியர் புதல்வரொடு

கிலிகிலி ஆடும்..........",சிறுபாணாற்றுப்படை பா.எ.62.

சேர, சோழ, பல்லவர்க்கு மிளகு, ஏலம், கிராம்பு, தேக்கு, அகில், மஸ்லின்

துணி போன்ற பொருட்களால் செல்வம் வந்து குவிந்தது.


சோழ மன்னன் பராக்கிரம பாகு என்பவன் ஆறையெனும் பகுதியை

ஆண்டுவந்தவன். அவனது செல்வச் செழிப்பை ஒரு புலவர் எவ்வாறு

விவரித்துள்ளார் என்று பார்ப்போம்:

"பூழியர் சோரப் பொருப்பினுள் வானவர் போய்மறைய

ஆழி எறிந்த பராக்ரம பாகுவின்  ஆறையிலே

மேழிகொள் மள்ளர் மடைதோ றடைப்பதும் வெண்தரளம்;

கோழிகள் சீய்க்கும் தெருத்தொறும் மாணிக்கக் குப்பைகளே".

பொருள்: பாண்டியர் சோர்ந்து போகவும், சேரர்கள் ஒளிந்து

கொள்ளவும் நன்முறையில் ஆறையெனும் பகுதியில் ஆட்சி

நடத்தும் பராக்கிரம பாகு என்னும் சோழனின் நாட்டிலே கலப்பை

ஏந்தும் மள்ளர்கள் வாய்க்காலை வெண்மையான முத்துக்களால்

அடைப்பார்கள்;  தெருக்கள் தோறும் மாணிக்கங்கள் குப்பையிலே

கொட்டப்பட்டுக் குவிந்து கிடக்கும்  அவற்றைக் கோழிகள் கிளறும்.

(மேழி=கலப்பை; சீய்க்கும்=கிளறும்). பண்டைத் தமிழகத்தில்

செல்வம் கொழித்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.