Monday 16 December 2019

திரைப்படப் பாடல்களில் தென்படும் இலக்கியச் சாயல்கள்.

திரையிசைப் பாடல்களில் சில இலக்கியக் கூறுகள்.

கவிஞர் கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல்களில் எனக்குத்
தென்பட்ட சில இலக்கியக் கூறுகளை எடுத்தியம்ப விழைகிறேன்.
இது ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையன்று. மேலும் கவிஞரின் அனைத்துத்
திரைப் பாடல்களையும் நான் படித்திலேன். நான் படித்த மற்றும்
கேட்டு இரசித்த சிற்சில பாடல்களில் எனக்குத் தென்பட்ட இலக்கியத்
தன்மைகளைத் தெரிவித்துள்ளேன்.

தொன்மைமிகு தமிழ்மொழி  மிகப் பெரிய அளவில் இலக்கிய வளம்
படைத்தது. எத்தனையோ புலவர்கள் இலக்கியங்கள் படைத்துள்ளனர்.
அவ்வப்பொழுது தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளனர். எத்தனையோ
விதமான கற்பனைகள், உவமை, உருவகம் ,சொல்லணி,  பொருளணி
நயங்களைக் கையாண்டு இலக்கியம் படைத்துள்ளனர். இவர்களுக்குப் பின்
வரும் அடுத்த தலைமுறையினர் இலக்கியம் படைக்கும் போது முன் தலை
முறையினர் கையாண்ட வழிமுறைகளை ஆங்காங்கே எடுத்தாள்வது மிக
இயல்பானதே. இதைத் தவிர்க்கவே இயலாது. எடுத்துக் காட்டாகக்  கம்பர் தம்
இராமாயணத்தில்  தமக்கு முன்பிருந்த சீவக சிந்தாமணி ஆசிரியர் திருத்
தக்கதேவரின் கற்பனை, சொல்லாடல்கள், உவமை உருவக நயங்கள் முத
லியவைகளில் சிலவற்றை ஆங்காங்கே எடுத்தாண்டுள்ளார். இதைப் போல
வே கம்பருக்குப் பின்வந்த இலக்கியவாதிகள் கம்பரின் வழிமுறைகளை
எடுத்தாண்டுள்ளனர். இதைப் போலவே கவிஞர் கண்ணதாசனின் திரையிசைப்
பாடல்களிலும் முந்திய தலைமுறைப் புலவர்களின் கற்பனைநயம், சொல்நயம்
முதலானவை ஆங்காங்கே தென்படுகின்றன. ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.

தனிப்பாடல் திரட்டு நூலில் இடைக்காலப் புலவர் ஒருவர் பாடிய பாடல் தென்படுகிறது:
"மாவுறங்கின புள்ளுறங்கின வண்டுறங்கின தண்டலைக்
காவுறங்கின இன்னம்என்மகள் கண்ணுறங்கிலள்" என்னும்
வரிகளையும், தாயுமானவர் பாடிய
"மண்ணுறங்கும் விண்ணுறங்கும் மற்றுளவெல் லாமுறங்கும்
கண்ணுறங்கேன் எம்மிறைவர் காதலாற் பைங்கிளியே" என்னும்
வரிகளும், கம்பர் இயற்றிய
"நீரிடை உறங்கும் சங்கம் நிழலிடை உறங்கும் மேதி
தாரிடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்"
பாடலில் பயின்று வரும் வரிகளும் கவிஞர் கண்ணதாசனின்
"காட்டில் மரமுறங்கும் கழனியிலே நெல்லுறங்கும்
பாட்டில் பொருளுறங்கும் பாற்கடலில் மீனுறங்கும்
காதல் இருவருக்கும் கண்ணுறங்காது அதில்
காதலன் பிரிந்துவிட்டால் பெண்ணுறங்காது"
என்னும் பாடலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது நன்கு
தெரிகின்றது.(படம்: மாலையிட்ட மங்கை).

மற்றொரு எடுத்துக்காட்டாகக் கம்பர் இயற்றிய கீழ்க்கண்ட
பாடலைப் பார்ப்போம்:
"இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்; இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உறுவ துண்டோ?
மைவண்ணத் தரக்கி போரில் மழைவண்ணத் தண்ண லேநின்
கைவண்ணம்  அங்குக் கண்டேன்; கால்வண்ணம் இங்குக் கண்டேன் ".
விசுவாமித்திரர் இராமனைப் புகழ்ந்து கூறியவை: "தாடகைக்கு எதி
ரான போரில் இராமா! உன் கைவண்ணத்தைக் கண்டேன். தற்பொழுது
உன் பாதம் பட்டவுடன் கல்லாக உருமாறியிருந்த அகலிகை மீண்டும்
பெண்ணுருவம் அடைந்ததன் வாயிலாக உன் கால்வண்ணத்தைக்
கண்டேன்" என்றார். இப்பாடலில் 'வண்ணம்' என்ற சொல் எட்டுமுறை
பயின்றுவந்துள்ளது. இந்தப் பாடலின் சாயல் கண்ணதாசனின் பாசம்
என்ற திரைப் படத்தில் வரும் கீழ்க்கண்ட பாட்டில் தென்படுகிறது:
"பால்வண்ணம் பருவங்கண்டு வேல்வண்ணம் விழிகள் கண்டு
மால்வண்ணம் நான்கண்டு வாடுகிறேன் " எனக் கதாநாயகன்
பாடக் கதாநாயகி பதிலிறுக்கும் விதமாகக் கீழ்க்கண்டவாறு
பாடுகிறாள்.
"கண்வண்ணம் அங்கே கண்டேன்; கைவண்ணம் இங்கே கண்டேன்;
பெண்வண்ணம் நோய்கொண்டு வாடுகிறேன்". இந்தப் பாடலில்
இன்னும் பல வரிகள் உள்ளன. மொத்தமாகப் பன்னிரண்டு முறை
வண்ணம் என்ற சொல் பயின்றுவந்துள்ளது.

இனி, வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"இருந்தவளைப் போனவளை என்னை அவளைப்
பொருந்த வளைபறித்துப் போனான்--பெருந்தவளை
பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
மாத்தத்தன் வீதியினில் வந்து".
தனிப்பாடல்திரட்டில் காணப்படும் கம்பரின் பாடல்.
பெண் ஒருத்தியின் கூற்று:
மாத்தத்தன் சோழநாட்டில் ஒரு பகுதியை ஆண்ட சிற்றரசன்.
அவன் தன் பகுதியிலுள்ள தெருக்களில் உலா வரும்போது
அவன் சிறப்பையறிந்த மக்கள் அவனை வாழ்த்தி வரவேற்
கின்றனர். அக் கூட்டத்திலேயுள்ள கன்னிப் பெண்கள் அவன்
பால் மனத்தைப் பறிகொடுத்துக்  கைவளையல்களை நெகிழ
விட்டனர். இது மன்னர்களையும் சிற்றரசர்களையும் அகப்
பொருள் துறையில் புகழ்ந்து பாடுவதற்காக உலா என்னும்
சிற்றிலக்கியம் படைக்கப் புலவர்கள் தேர்ந்தெடுத்த வழிமுறை.
வழக்கம் போலக் கம்பனைப் பெரிதும் பின்பற்றும் கவிஞர்
கண்ணதாசன் புதிய பூமி என்ற திரைப்படத்தில்
"சின்னவளை முகம் சிவந்தவளை நான்
சேர்த்துக் கொள்வேன் கரம் தொட்டு;
என்னவளைக் காதல் சொன்னவளை
நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு"
என்ற பாடலில் வளை என்ற சொல் பலமுறை வருமாறு
இயற்றியுள்ளார்.

இனி, அனைவரும் நன்கு அறிந்த பட்டினத்தார் பாடல்:
"அத்தமும் வாழ்வும் அகத்துமட் டேவிழி அம்பொழுக
மெத்திய மாதரும் வீதிமட் டேவிம்மி விம்மியிரு
கைத்தலம் மேல்வைத் தழும்மைந் தரும்சுடு காடுமட்டே;
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே".
இந்தப் பாடலின் சாயல் பாத காணிக்கை என்னும்
படத்தில் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
"வீடுவரை உறவு; வீதிவரை மனைவி;
காடுவரை பிள்ளை; கடைசிவரை யாரோ?"
என்ற திரைப் பாடலில் தென்படுகின்றது.

புறநானூற்றையும் கவிஞர் விட்டுவைக்கவில்லை.
"அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே".
பாரிமகளிர் பாடிய இப்பாட்டில் "கடந்த திங்களில்
வெண்ணிலவு காய்ந்த பொழுது எம் தந்தை எம்
முடன் இருந்தார். எங்கள் குன்றும்(பறம்பு மலை)
எம்வசம் இருந்தது. இந்த மாதத்தில் வெண்ணிலவு
காயும் பொழுது எம் தந்தை எம்முடன் இலர்(மூவேந்
தர்களால் கொல்லப்பட்டார்). எம் குன்றும் எம்வசம்
இல்லை(எம் குன்றைக் கைப்பற்றிக் கொண்டனர்).
இப் பாடலிலுள்ள வரிகளின் சாயல் நாடோடி படத்தில்
கவிஞர் இயற்றிய
"அன்றொருநாள் அதே நிலவில் அவர்இருந்தார் என்
அருகே; நான் அடைக்கலம் தந்தேன் என்னழகை;
நீ அறிவாயே வெண்ணிலவே" என்றதிரையிசைப்
பாடலில்  தென்படுகின்றது.

இராமச்சந்திர கவிராயர் இயற்றிய கீழ்க்கண்ட பாடல்
மிகப் புகழ்பெற்றது:
"கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்
குடிக்கத்தான்  கற்பித் தானா?
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான்
கொடுத்துத்தான்  இரட்சித் தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான்
நோவத்தான்  ஐயோ! எங்கும்
பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்
புவியில்தான்  பண்ணி  னானே."
இந்தப் பாடலால் கவரப்பட்ட கவிஞர் கண்ணதாசன்
பாவமன்னிப்பு என்ற படத்தில் " அத்தான், என்னத்தான்,
அவர் என்னைத்தான் எப்படிச் சொல்வேனடி" என்ற
திரைப்படப் பாடலை இயற்றினார்.

இனி, திருக்குறளில் பயின்றுவரும் கீழ்க்கண்ட பாடல்
எவ்வாறு கவிஞர்க்கு உதவியது என்பதைப் பார்ப்போம்:
"யான்நோக்கும் காலை நிலன்நோக்கும்; நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்".(குறள்:1094). இப்பாடலின்
கருத்தை வாழ்க்கைப் படகு என்னும் திரைப்படத்தில்
அவர் இயற்றிய "நேற்றுவரை நீயாரோ நான்  யாரோ?
இன்றுமுதல் நீ வேறோ நான் வேறோ?
காணும்வரை நீ எங்கே நான் எங்கே?
கண்டவுடன் நீ அங்கே நான் இங்கே
உன்னைநான் பார்க்கும் போது
மண்ணை நீ பார்க்கின்றாயே;
விண்ணை நான் பார்க்கும் போது
என்னை நீ பார்க்கின்றாயே."
என்ற திரையிசைப் பாடலில் திருக்குறள் கருத்து பதியப்
பட்டிருக்கும்.

இன்னும் ஆராய்ந்தால் பாடல்கள் கிடைக்கும். ஏன்
என்றால் நம் இலக்கியம் மிக  மிகச் செழுமையானது.
திரையிசைப் பாடல்  இயற்றும் கவிஞர்கள் அனைவருமே
இலக்கிய ஈடுபாடு கொண்டவர்கள். கவிஞர் கண்ண
தாசன் தமிழ் இலக்கியத்தில் ஊறித் திளைத்தவர்.. அதிலும்
குறிப்பாகக் கம்பர் மீது மிகுந்த  ஈடுபாடுடையவர். எனவே
திரையிசைப் பாடல்களில் இலக்கியக் கூறுகள்தென்
படுவதில் வியப்பேதும் இல்லை. மூவாயிரம் ஆண்டுகளுக்கு
மேலான இலக்கியத் தொன்மை கொண்ட நம் மொழியில் கூறப்
படாத கருத்தோ கற்பனையோ இல்லை. அதனால் எவர் கவிதை
படைத்தாலும் முந்திய இலக்கியக் கூறுபாடுகள் தென்படுவதில்
தவறேதும் இல்லை. எந்தக் கவிஞரையும் குறை சொல்லவே
இயலாது.









Sunday 8 December 2019

கரும்புக்கு வேம்பிலே கண்.

கரும்புக்கு வேம்பிலே கண்.

ஏகம்பவாணன் என்பவன் இடைக்காலத்திலே தமிழ்நாட்டில்
விளங்கிய வாணர்குலத் தலைவர்களுள் ஒருவன். வாணர்கள்
அக்காலத்தில் தமிழகத்தின் பெரும்பகுதிகளில் இருந்திருக்
கின்றனர். தென்பெண்ணை யாற்றங் கரையில் திருக்கோவ
லூர் நாட்டிலுள்ள ஆற்றூரில் இந்த ஏகம்பவாணன் சிறப்புற்
றிருந்தான். இதே காலத்தில் பாண்டிய நாட்டில் சிறீவல்லப
மாறன் ஆட்சிபுரிந்து வந்தான். இவர்கள் காலம் 15ஆம் நூற்றாண்
டின் பிற்பகுதிக் காலமாகும். ஆற்றூர் ஆறையெனவும் அழைக்கப
படும்.

முடியுடை மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டியர்கள் செல்வாக்கு
இழந்து குறுநில மன்னர்களாக வாழ்ந்த காலக்கட்டம். இவர்களைக்
காட்டிலும் ஏகம்பவாணன்  செல்வாக்கோடு திகழ்ந்தான். ஓருமுறை
ஏகம்பவாணன் கழனிகளைப் பார்க்கச் சென்றிருந்த பொழுது சேர,
சோழ, பாண்டிய அரசர்களும் அங்கு வந்து பார்வையிட்டனர். அப்போது
பேச்சுவாக்கில் ஏகம்பவாணனை இழிவாகப் பேசிவிட்டனர். இதனால்
சினமடைந்த ஏகம்பவாணன் தன்னிடமிருக்கும் பூதத்தை ஏவி மூவரை
யும் சிறைப்பிடிக்க ஆணையிட்டான்.(தமிழ் நாவலர் சரிதையில் பூதம்
என்றுதான் குறிப்பிடப் பட்டுள்ளது. நம்பத் தயங்குபவர்கள் முரட்டு
அடியாள் என்று பொருள்கொள்க.) பூதம் சேரனையும், சோழனையும்
சிறைப்பிடித்தது. பாண்டியன் வேப்பம்பூ மாலை அணிந்திருந்த கார
ணத்தால் அவனை நெருங்க அஞ்சிப் பின்வாங்கிவிட்டது.

இதனையறிந்த ஏகம்பவாணன் பாண்டியனின் வேப்பம்பூ மாலை
யைப் பறித்துவிட்டால் அவனையும் சிறைப்படுத்தி விடலாம் என்று
நினைத்து நான்கு தாதியரை(அழகான பணிப் பெண்டிர்) பாண்டிய
னிடம் அனுப்பிவைத்து வேப்பம்பூ மாலையை எப்பாடுபட்டாவது
பறித்துவரக் கட்டளையிட்டான். அவர்கள் பாண்டியனைச் சந்தித்து
வேப்பம்பூ மாலையைப் பரிசாகத் தருமாறு கோரிப் பாடல்களைப்
பாட ஆரம்பித்தார்கள். முதலாவது தாதி கீழ்க்கண்ட பாடலைப்
பாடினாள்:
"தென்னவா! மீனவா! சீவலமா றா!மதுரை
மன்னவா!  பாண்டி வரராமா!--முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த துய்யதமிழ் நாடா!
கரும்புக்கு வேம்பிலே கண்."
சுரும்பு= வண்டு; வண்டு உண்பதற்கு மாலையளித்த (மாலையி
லுள்ள பூக்களில் நிறைந்திருக்கும் தேனையுண்ண) மன்னவா!
கரும்பு போன்ற இனிமையான இப்பெண்ணுக்கு(எனக்கு=தாதிக்கு)
உன் வேப்பம்பூ மாலை மீது கண்ணாக வுள்ளது. ஆகவே, அதனைப்
பரிசாகத்தா என்று பாடினாள். தன் இனத்துக்குரிய அடையாள மாலை
யைக் கொடுக்க மனமில்லாத பாண்டியன் வேறு சில பரிசுகளை ஈந்தான்.

தாங்கள் வந்த நோக்கம் நிறைவேறாததால் இரண்டாவது தாதி பாடத்
தொடங்கினாள்:
"மாப்பைந்தார்க் கல்ல, முத்து  வண்ணத்தார்க்  கல்ல, வஞ்சி
வேப்பந்தார்க்  காசைகொண்டு  விட்டாளே---பூப்பைந்தார்
சேர்ந்திருக்கும் நெல்வேலிச் சீவலமா  றா!தமிழை
ஆய்ந்திருக்கும் வீரமா றா!"
இந்த வஞ்சிக் கொடிபோன்றபெண்(நான்) முத்துமாலை மீதோ வேறு
மரகத மாலை மீதோ ஆசை கொள்ளவில்லை. திருநேல்வேலிப் பதியை
ஆளும் சிறீவல்லப மாறா! சங்கம் வைத்துத் தமிழை ஆய்ந்து வளர்த்த,
வீரத்திலும் குறைவில்லாத மாறனே! நீயணிந்திருக்கும் வேப்பமாலைக்கு
ஆசைகொண்டுளேன் என்று பாட இதற்கும் பாண்டியன் மசியவில்லை.

உடனே மூன்றாமவள் பாட ஆரம்பித்தாள்:
"வேம்பா கிலுமினிய சொல்லிக்கு நீமிலைந்த
வேம்பா கிலுமுதவ வேண்டாவோ?--தேம்பாயும்
வேலையிலே  வேலைவைத்த  மீனவா! நின்புயத்து
மாலையிலே மாலைவைத்தாள் மான்."
கரும்பைச் சாறு பிழிந்து அடுப்பில் பாகாகக் காய்ச்சும் பொழுது இனிய
நறுமணம் கமழும். அத்தகைய சூடான பாகைவிட இனிமையான சொற்களைப்
பேசுபவளுக்கு நீயணிந்த வேம்பாகிலும் பரிசாகத் தர வேண்டாவா? கடலில்
வேலைவைத்த மீனக் கொடியுடைய அரசனே!(சிவபெருமான் கடலிலே நிகழ்த்
திய திருவிளையாடலை மதுரைப் பாண்டியனுக்கு ஏற்றிச் சொல்லிப் புகழ்தல்)
தேன்சொரியும் உன் வேப்பம்பூ மாலையிலே இந்த மான்போன்ற பெண் மயக்
கம் வைத்துவிட்டாள். அதனால் அதைப் பரிசாகத் தந்து இவள் மயக்கத்தைத்
தெளிவிப்பாய் என்று பாடினாள். இதற்கும் பாண்டியன் மனமிளகவில்லை.

உடனே நாலாமவள் பாண்டியனின் தன்மானத்தைச் சீண்டுவதுபோல் பாடல்
பாடி மாலையைப் பறிக்கத் திட்டமிட்டுப் பாடத் தொடங்கினாள்:
"இலகு   புகழாறை. ஏகம்ப  வாணன்
அலகை  வரும்வரும்என்  றஞ்சி--உலகறிய
வானவர்கோன்  சென்னியின்மேல் வண்ண  வளையெறிந்த
மீனவர்கோன்  கைவிடான்  வேம்பு".
அய்யகோ, பரிதாபம்;  ஆற்றூர்(ஆறை) எனும் ஊர்க்குரியவனான ஏகம்ப
வாணனின் பூதத்துக்கு(அலகை) அஞ்சி இந்திரன் முடிமேல் வளையெறிந்த
வீரம்செறிந்த பாண்டிய வழியில் வந்த இவன் வேப்பம்பூ மாலையைக் கை
விடத் தயங்குகிறான். பூதத்துக்கு அஞ்சாவிட்டால் இவன் வேப்பம்பூ
மாலையை இந்நேரம் பரிசாகத் தந்திருப்பானே எனப் பாடிச் சீண்டினாள்.
இவ்வாறு பாண்டியனின் வீரத்தைப் பழித்துப் பாடியவுடன் பாண்டியன்
வெகுசினத்துடன் வேப்பம்பூ மாலையைக் கழற்றித் தாதியிடம்
பரிசளித்தான். வேப்பமாலை நீங்கியதை யறிந்த பூதம் பாண்டியனைச்
சிறைசெய்தது. ஏகம்பவாணன் தான் நினைத்ததைச் சாதித்துவிட்டான்.

இந்தக் கதையை நம்புகிறோமோ இல்லையோ இந்தப் பாடல்களில் மிளி
ரும் இலக்கியச் சுவையைப் புறந்தள்ள இயலாது.



சோற்றுக்கு அரிசிதரச் சொன்னால் களிக்கு மாவைத் தந்தான்.

ஏகம்பவாணன் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குறுநில
மன்னன். அவன் காலக்கட்டத்தில் முடியுடை மூவேந்தர்களும்
குறுநில மன்னர்களாகவே வாழும்படி நேர்ந்துவிட்டது. அடுத்
தடுத்து நிகழ்ந்த அந்நியப் படையெடுப்புகளால் தமிழகத்தைக்
காலம் காலமாக ஆண்டவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டார்கள்.
ஏகம்பவாணன் சிறந்த ஆட்சியாளன் மட்டுமன்று; உயர்ந்த வள்ள
லும் கூட. அவனை நாடிப் புலவர்கள், பாணர்கள் முதலிய கலை
ஞர்கள் அடிக்கடி வருவதும், தத்தம் திறமைக்கு ஏற்பப் பரிசில்
பெற்றுச் செல்வதும் வழக்கம்.

ஒருமுறை வறுமையில் வாடிய புலவர் ஒருவர் அவனைச் சந்தித்
துப் பாடல்களைப் பாடி அவனை மகிழ்வித்தார். புலவரின் திறமை
யைக் கண்டு கழிபேருவகையடைந்த ஏகம்பவாணன் புலவருக்குத்
தக்க பரிசளித்து மரியாதை செய்தான். என்ன பரிசளித்தான் என்று
அவரது பாடல் வாயிலாகக் காண்போம்:
சேற்றுக் கமலவயல் தென்னாறை  வாணனையான்
சோற்றுக்(கு) அரிசிதரச் சொன்னக்கால்----வேற்றுக்
களிக்குமா வைத்தந்தான்; கற்றவர்க்குச் செம்பொன்
அளிக்குமா(று) எவ்வா(று) அவன்?.
பொருள்:
வறுமையில் வாடும் யான் சோறுபொங்க அரிசி தருமாறு கேட்டேன்;
ஆனால் வாணனோ களிக்கிண்ட மாவைத் தந்தான். அரிசிக்குப்
பதிலாகக் களிமாவைத் தருபவன் கற்றவர்க்குப் பரிசாகச் செம்பொன்
அள்ளித் தருதல் எவ்வாறு இயலும?  இவ்வாறு வாணனைப் பழிப்பது
 போலப் புகழ்ந்து பாடியுள்ளமை புலவரின் கவித்திறனை
வெளிப்படுத்துகின்றது. களி என்னும் சொல் களி என்ற உணவை
யும், செருக்கு, மதம் போன்ற உணர்ச்சிகளையும் குறிக்கும். அது
போலவே, மா என்ற சொல்லும் உணவைச் சமைக்கப் பயன்படும்
மாவையும்  யானையையும் குறிக்கும். இவ்வாறாகப் புலவர் பாடலில்
பயின்றுவந்த "களிக்கு மா" என்ற சொல் செருக்கு மிகுந்த யானை
என்ற பொருளைத் தரும். ஏற்கெனவே வறுமையில் உழல்பவருக்கு
யானையைப் பரிசாகத் தருவது நியாயமா? என்று கேட்கத் தோன்றும்
யானையை மட்டுமன்றி அதனைக் கட்டித் தீனிபோடுவதற்குத்  தேவை
யான பொருளையும் சேர்த்துக் கொடுப்பது வழக்கம். சங்க காலத்தில்
இருந்தே புலவர்களும் பாணர்களும் யானைப்  பரிசில் பெற்றுச் செல்
வது வழக்கமான நடைமுறைதான்.

இதே ஏகம்பவாணன் தொடர்பூடைய மற்றொரு பாடலைப் பார்ப்போம்.
அரண்மனையில் பணிபுரிந்துவந்த தாதி ஒருத்தி பிழை செய்தனள்.
ஏகம்பவாணன். அவள்மீது கடுங்கோபங் கொண்டு ஏனைய  பிற தாதி
யரிடம் ' கைவிலங்கு கொண்டு வருக' என்று கட்டளையிட்டான். தவறு
செய்த தாதி என்னாகுமோ, ஏதாகுமோ என்று அஞ்சி நடுங்கினாள்.
அவள் மேனி நடுங்கியது; அச்சத்தில் வியர்த்துக் கொட்டியது. தன் நடுக்
கத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாணனை நோக்கிப் பேசலானாள்.
"ஐயா, விலங்கைக் கொண்டு வருமாறு பணித்துள்ளீர்;  சேர, சோழ, பாண்
டிய மன்னர்களில் யாருக்காக விலங்கைக் கொண்டுவரச் சொன்னீர்?
யாருக்கு விலங்கை மாட்ட எண்ணியுள்ளீர்? இவாவாறு பேசியதன் மூலம்
தான் செய்த பிழையை மன்னித்துவிடுமாறும், தனக்கு விலங்கு மாட்டத்
தேவையில்லையென்றும் மறைமுகமாகக் கோரிக்கை வைத்தனள். அவளின்
திறமையான பேச்சை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவளுக்கிருக்கும்
தமிழ்ப் புலமையைக் கொண்டு அவள்  சொல்லிய  நயமிக்க பாடலைக்
கீழே பார்ப்போம்:
அலங்கல் மணிமார்பன், ஆறையர்கோன்  வாணன்
விலங்கு கொடுவருக வென்றான்---இலங்கிழையீர்!
சேரற்கோ, சோழற்கோ  தென்பாண்டி நாடாளும்
வீரற்கோ  யார்க்கோ விலங்கு.
ஆறை=ஆற்றூர்; சேரற்கோ, சோழற்கோ, வீரற்கோ--சேரனுக்கோ,
சோழனுக்கோ, வீரனுக்கோ.














Thursday 21 November 2019

விச்சுளிப் பாய்ச்சல் கூத்தாடியின் உயிரை வாங்கிய பரிதாபம்.

விச்சுளிப் பாய்ச்சல் கூத்தால் உயிரிழந்த நிகழ்வு.

மாகுன்(று) அனையபொன் தோளான் வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன்; பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனள்என்று  சொல்லீர்  அயன்றைச் சடையனுக்கே.
கழாய்க்(கழை=மூங்கில்) கூத்தாடும் பெண் ஒருத்தி பாண்டியன் அரசவை
யில் அரியபல கூத்துகளை நிகழ்த்திக் கொண்டிருந்தாள். செய்வதற்கு
மிகவும் அரிதான, மிக மிகக் கடினமான விச்சுளிப் பாய்ச்சல் எனப்படும்
கூத்தை நிகழ்த்திக் காட்டி வேந்தனை வியக்கவைத்திடல் அவளது குறிக்
கோளாக இருந்தது.

 விச்சுளிப் பாய்ச்சல் என்பது கூத்தாடுபவள் மூங்கிலை(கழையை) நட்டு
அதன்மீது ஏறி உயரத்தில் இருந்தபடியே பலப்பல வித்தைகளை நிகழ்த்தி
அதிரடியாய்த் தான் அணிந்திருக்கும் மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு
அது கீழ்நோக்கி சற்றுத் தொலைவு வந்தவுடனே, விச்சுளி என்னும் பறவை
போலக் கழைமேலிருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து கையால் தொடாமலேயே
பாய்ச்சலில் இருக்கும்போதே அம்மூக்குத்தியை மூக்கில் கோத்துக்கொண்டு
கீழே குதிக்காமல் அந்தரத்தில் இருந்தபடியே மேல்நோக்கிப் பாய்ந்து கழை
உச்சியை அடைவது. இக்கூத்தைச் செய்யும் போது சிறு கவனப்பிசகு நேர்ந்
தாலும் முயற்சி தோற்றுவிடும். வேந்தன் உள்ளிட்ட அவையோர் முன்னிலை
யில் பெருத்த அவமானத்துக்கு உள்ளாக நேரிடும். மேலும் உயிரழக்கவும் நேரிடலாம்.

இதில் குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால், ஒருமுறை இக்கூத்தை
நிகழ்த்திவிட்டால் அடுத்து இதனை நிகழ்த்த ஆறு மாத கால இடைவெளி
தேவைப்படும். ஏனென்றால் அடுத்து இதனை நிகழ்த்தவதற்கு ஆறு மாதம்
மூச்சடக்கும் பயிற்சியினை மேற்கொள்ளுதல் மிக மிக அவசியம். ஆறு
மாதம் மூச்சடக்கும் பயிற்சி மேற்கொள்ளாமல் இந்தக் கூத்தை நிகழ்த்தி
னால் உயிரிழக்க நேரிடும்.

அநேகமாக, இந்தச் செய்தி அவையிலிருக்கும் அனைவருக்கும் நன்றாகத்
தெரியும். ஆனால், கூத்தாடுபவளின்  போதாத காலம், பாண்டிய வேந்தனுக்கு
இந்த உண்மை தெரியாது. கூத்தாடுபவள் விச்சுளிப்  பாய்ச்சல் செய்யும்
அந்தக் கணப்பொழுதில் வேறோரு பெண்ணைப் பார்த்துவிட்டான். அவள்
அழகால் அவன் கவனம் சிறிது நேரம் சிதறிவிட்டது. பிறகு இயல்பான
நிலைக்குத் திரும்பிவிட்டான். அதற்குள் விச்சுளிப் பாய்ச்சல் முடிந்துவிட
அவையினர் கைகளைத் தட்டி ஆரவாரம் செய்தனர். பாண்டியன் சோர்வும்
ஏமாற்றமும் அடைந்தான். இருந்தாலும், தான் வேந்தன் என்ற ஆணவம்
தலையெடுக்கக் கூத்தாடுபவளை விளித்து மீண்டும் ஒருமுறை வித்தை
யைச் செய்து காட்டச் சொன்னான். விச்சுளிப் பாய்ச்சலைப் பற்றி அறிந்
திருந்த அவையினர் பெருத்த அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். மீண்டும்
முயன்றால் கூத்தாடுபவள் உயிர் இழப்பது உறுதி. ஆனால், வேந்தனிடம்
இந்த உண்மையைச் சொல்ல அச்சமும் தயக்கமும் அவர்களை ஆட்டிப்
படைத்தன. கூத்தாடுபவள் நிலையோ மிக மிகப் பரிதாபமாக இருந்தது.
தான் இன்று உயிரிழப்பது உறுதி என்று நினைத்துக் கொணாடாள்.
அவளாவது வேந்தனிடம் உண்மையைச் சொல்லியிருக்கலாம். அரச
கட்டளையை மீறுவதற்கு அஞ்சினாள். இருதலைக் கொள்ளி எறும்பு
போலத் தவித்தாள். பாதி உயிர் போனவள் போலானாள். என் செய்வது?

உயிரிழக்கத் தன் மனத்தை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். தயங்கித்
தயங்கிக் கழைமீது ஏறினாள். வழக்கம்போலத் தான் அணிந்திருந்த
மூக்குத்தியைக் கழற்றி நழுவவிட்டு அதை நோக்கிக் கழையிலிருந்த
படியே பாயந்தாள். ஐயகோ! பரிதாபம். அவளால் மூக்குத்தியைத் தன்
மூக்கில் கோக்க முடியாமல் போய்விட்டது. தரையில் அவள் தலை
மோதி உயிரையிழந்தாள். பாண்டிய வேந்தன் பதறிவிட்டான். என்ன
நேர்ந்தது என்றே அவனுக்குப் புரிபடவில்லை. அவையிலிருந்தவர்கள்
விச்சுளிப் பாய்ச்சலைப் பற்றி விரிவாக விளக்கிக் கூறினர். ஐயகோ!
அநியாயமாக ஓர் உயிரிழப்பு நேர்ந்துவிட்டதே எனப் புலம்பினான்.

தொடக்கத்தில் காட்டப்பட்ட பாடல் கூத்தாடுபவள் கூற்றாக இயற்றப்
பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் பாண்டிய வேந்தன் யாரென்று
தெரியவில்லை. "பெரிய குன்று போன்ற தோளையுடைய பாண்டிய
வேந்தன் நான் விச்சுளிப் பாய்ச்சல் கூத்தை நிகழ்த்தும் பொழுது
சுவைக் கரும்பின் பாகனைய சொல்லையுடைய பெண்ணொருத்தி
யைப் பார்த்துத் தடுமாறியதால் என் நிகழ்ச்சியைப் பார்க்கத்  தவறி
விட்டான். மீண்டும் ஒருமுறை நிகழ்த்திக்காட்டச்  சொல்லிப் பணித்தான்.
அரச கட்டளையை மீற இயலாததால்  என் உயிர் போவது உறுதியாகி
விட்டது. வலசை(பறவைகளின் இடப் பெயர்ச்சி) போகின்ற பறவைகளே!
நீங்கள் புழற்கோட்டம் வழியாகச் சென்றால்  அயன்றைச் சடையனிடம்
என் நிலையைச் சொல்லிச் சாவை நெருங்கிக்கொண்டிருக்கின்றாள்
எனத் தெரிவித்திடுக" என்பது பொருளாகும். இதில் குறிப்பிடப்படும்
அயன்றைச் சடையனைப் பற்றி வேறு தகவல் தெரியவில்லை. ஞாயிறு,
அம்பத்தூர், ,ஆவடி, எழுமூர் முதலியன அடங்கிய கோட்டம் புழற் கோட்ட
மாகும். அயன்றைச் சடையன் என்பவன் கூத்து நிகழ்த்தும் கலைஞர்களைப்
பேணிப் புரந்திடும் வள்ளலாகத் திகழ்ந்தவன் எனத் தோன்றுகிறது. கழைக்
கூத்தின் சகல இயல்புகளையும், விளைவுகளையும், அருமை பெருமைகளை
யும் நன்கு அறிந்தவனாய் இருந்திருப்பான் எனவே, "அயன்றைச் சடையனுக்
குச் சொல்லீர்" என்று பறவைகளிடம் வேண்டினாள்.

பின்குறிப்பு:
கூத்தாடிய பெண்ணின் அழகு, திறமை முதலிய நலங்களைக் கண்டு பாண்டியன்
அவள்பால் மனத்தைப் பறிகொடுத்துவிடக் கூடாது என்பதற்காகப் பாண்டிமாதேவி
செய்த சூழ்ச்சி என்றும் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர். எப்படியோ, திறமைமிகு
பெண் ஒருத்தியை இழக்கும்படி நேர்ந்துவிட்டது.

பார்வை: தமிழ் நாவலர். சரிதை மூலமும் விளக்கவுரையும் நூலின் ஆசிரியர்:
                 பேராசிரியரும் தமிழ் ஆராய்ச்சியாளரூமான ஔவை சு. துரைசாமி
                 பிள்ளை.


Thursday 31 October 2019

காளமேகத்தின் 'த' மற்றும் 'க' வருக்கப் பாடல்கள்.

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது....
(காளமேகப்  புலவர்  பாடல்)

காளமேகப்  புலவர்பற்றிய  கதைகள் பல உலவுகின்றன.
அவரது பிறந்த ஊரைக் குறித்தும் பல செய்திகள் உள.
பெரும்பாலோர் கருத்துப்படி திருவரங்கப் பெருமாள்
கோவில் மடைப்பள்ளியில் பரிசாரகராகப் பணிபுரிந்த
இவருக்கு இலக்கணப்படி ஆசுகவி  பாடும் கவித்திறம்
வந்தது எப்படி? இது குறித்தும்  சில கதைகள் உள்ளன.
தெய்வச் செயலால் இவர்க்குக் கவித்திறம் வந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தன் கவித்திறத்தைக்
காட்டிவந்த இவர் திருமலைராயன் பட்டினத்தில் வாழ்ந்து
வந்த அதிமதுர கவிராயர் என்பவரிடம் போட்டி நிகழ்த்த
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன்படி அதிமதுர கவி
ராயரும் அவர் சீடர்களும்(மொத்தம்:64 பேர்கள்) சொல்லும்
குறிப்புக் கேற்றவாறு சொற்பிழை, பொருட்பிழை, இலக்
கணப்பிழை இல்லாமல் ஆசுகவிதைகள் பாடுதல் வேண்
டும்.

போட்டி விதிகளின்படி புலவர்கள்  பல்வேறு சிக்கலான
குறிப்புகளைச் சொன்னார்கள். உடனுக்குடன் கவிகாள
மேகம் ஆசுகவிதைகள் சொல்லி அயரவைத்தார்."செருப்பு
என்ற சொல்லில் தொடங்கி விளக்குமாறு என்ற சொல்லில்
முடித்தல் வேண்டும்"; "கரி என்ற சொல்லில் தொடங்கி உமி
என்ற சொல்லில் முடித்தல் வேண்டும்"; வல்லினம், மெல்லினம்
மற்றும் இடையினம் இந்தப் பிரிவு எழுத்துக்களை வைத்துத்
தனித்தனியாகப் பாடல்கள் சொல்லல் வேண்டும்". மேலும்,
'க' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும், 'த'வருக்க
எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும் ஆசுகவிதைகள்
சொல்லல் வேண்டும்.  இப்படி எத்தனையோ நிபந்தனைகள்
விதித்த போதும் கவிகாளமேகம் வெற்றி பெறுவதைத் தடுக்க
முடியவில்லை. அப்படி ஒரு ஆசுகவிதையைத்தான் நாம்
பார்க்கவுள்ளோம்.

'த' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திய கவிதை:
"தாதிதூ  தோதீது; தத்தைதூ  தோதாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே---தாதொத்த
துத்திதத் தாதே, துதித்துத்தே  தொத்தீது;
தித்தித்த  தோதித்  திதி".
விளக்கம்:
தாதிதூ தோதீது--தாதி  தூதோ  தீது--அடிமைப் பெண்மூலம்
அனுப்பும் தூது நன்மையைத் தராது;
தத்தைதூ  தோதாது--தத்தை  தூது  ஓதாது--நான் வளர்க்கும்
கிளியோ தூதுப் பணியைத் திறம்படச் செய்யாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே--தோழியின் மூலமாக அனுப்பும்
தூதோ நாளைக் கடத்தும் தூதாகும்(காரியம் ஆகாது);
தே துதித்துத் தொத்தீது--நான் ஏதோ அணங்கால்(பேய், பிசாசு
போன்ற பயமுறுத்தும் தெய்வம்) அச்சுறுத்தப் பட்டிருக்கலாம்
என்றெண்ணி என் அன்னை முருகனைத் தொழுது அனுப்பும்
தூதும் நன்மை பயக்காது.
தாதொத்த துத்தி தத்தாதே--பூந்தாது போன்ற தேமல்கள்
என் மேனியில் படராமல் இருக்க;
தித்தித்த  தோதித்  திதி--எனக்கு இனிமையான தித்திப்பை
நல்கும்  என் தலைவனின் பெயரை--தித்தித்தது;
ஓதிக்கொண்டிருப்பதே எனக்கு உகந்ததாகும்--ஓதித்திதி.
அருஞ்சொற் பொருள்:
தாதி--அடிமைப் பெண்; தத்தை --கிளி; தூதி--தூது செல்பவள்;
ஒத்தித்தது--நாளைக் கடத்துதல்; தே--தெய்வம்;துதித்து--வழி
பட்டு; தொத்தல்--தொடர்தல்;துத்தி--தேமல்;தத்துதல்--படர்தல்;
திதி--நிலைமை; இருப்பு.
மேல் விளக்கம்:
இது அகப்பொருள் குறித்த பாடல். தலைவன் நினைப்பாகவே
வாழும் தலைவி, யாரைத் தூது அனுப்பலாம் என்று சிந்தித்துப்
பின் யார் தூதாலும் பயனில்லை என்று எண்ணி , அவனது
தித்திக்கும் பெயரைச் சொல்லிக் கொண்டிருத்தலே நல்லதாகும்
என்று முடிவுசெய்கிறாள். கவி காளமேகப்புலவர் புகழ் என்றும்
நிலைத்து நிற்கட்டும்!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை.

காளமேகப் புலவரிடம்  'க' வருக்க எழுத்தை மட்டும் பயன்
படுத்தி ஆசுகவி ஒன்றைப் பாடுமாறு அதிமதுர கவிராயர்
குழு கேட்டுக் கொண்டதற்கிணங்கச்  சில நொடிகள் கூடத்
தாமதம் செய்யாமல்   அன்னார் பாடிய கவிதை:
"காக்கைக்கா காகூகை; கூகைக்கா காகாக்கை;
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க--கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா  கா".
திருக்குறளின் 481ஆம் பாடலின் கருத்து இதில் பொதியப்
பட்டுள்ளது.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை  இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது". (குறள்: 481)
காகம் தன்னைவிட வலிமையான கோட்டானை(ஒரு
வகை ஆந்தையை) அதற்குக் கண்தெரியாத பகல் வேளை
யில் சண்டையில் வென்றுவிடும். அதுபோலப் பகைவரை
வெல்ல விரும்பும் அரசன் தக்க காலம் கனியும் வரை காத்திருந்து
அந்த நேரத்தில் போரிட்டால் வெல்லலாம் என்ற திருக்குறளின்
கருத்தை உள்வாங்கிக் கவிகாளமேகம் தன் கவிதையைப்
பாடியுள்ளார்.

காளமேகப் புலவரின் கவிதைக்குப் பொருள்:
காக்கைக்கு ஆகா கூகை--இரவில் காக்கைக்குச்
சரியாகக் கண் தெரிவதில்லை. ஆனால் கூகைக்கு
(கோட்டானுக்கு--ஒருவகை ஆந்தைக்கு) மிகக் கூர்
மையான பார்வை இரவில் உள்ளதால் காக்கையால்
வெல்ல முடியாது. அது போலவே,
கூகைக்கு ஆகா காக்கை-காக்கைக்குப் பகல் நேரத்தில்
நன்கு கண் தெரிவதாலும், கூகைக்குப் பகலில் கண்
தெரிவதில்லை என்பதாலும் பகலில் கூகையால் காக்கை
யை வெல்ல முடியாது. எனவே,
கோக்கு(கோவுக்கு--மன்னனுக்கு)
கூ(பூமி) காக்கைக்கு(காத்தலுக்கு--காப்பதற்கு), அதாவது
குடிமக்களைப் பகைவரிடமிருந்து காப்பது மன்னனின்
கடமை யாகும். அக் கடமையைச் செய்வதற்கு,
கொக்கொக்க--கொக்கைப் போலத் தக்க நேரம்வரும்வரை
காத்திருக்க வேண்டும். இல்லையென்றால்,
கைக்கைக்கு--பகையை எதிர்த்து
காக்கைக்கு--குடிமக்களைக் காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா--கைக்கு ஐக்கு ஆகா--தக்க நேரத்தில்
போரிடாவிட்டால் எப்படிப்பட்ட திறமையும், வீரமும் பொருந்திய
தலைவனுக்கும்(ஐ க்கு) நினைத்த காரியம் கைகூடாமல் போய்
விடும்.

குறுவிளக்கம்:
காக்கையால் இரவு நேரத்தில் கூகையை வெல்ல இயலாது.
கூகையால் பகல் நேரத்லில் காக்கையை வெல்ல இயலாது.
அதனால் பூமியிலுள்ள குடிகளைக் காக்கும் மன்னன் பகை
வரை வெல்வதற்கும், அதன்மூலம் குடிகளைக் காப்பதற்கும்
கொக்கைப் போலத் தக்க நேரம் வரும் வரை காத்திருத்தல்
வேண்டும்.  தகுந்த நேரம் அமையாவிட்டால் எப்படிப்பட்ட
திறமைசாலிக்கும் பகைவரை எதிர்த்து வெல்ல இயலாமற்
போய்விடும்..

காளமேகப் புலவரின்  தமிழ்மொழிப் புலமையும், ஆசுகவி
பாடும் திறமையும் நமக்குப் பெரு வியப்பை விளைவிக்
கின்றன. கவி காளமேகத்தின் புகழ் ஓங்குக!

Wednesday 2 October 2019

வைகை யாற்றுப் படுகை நாகரிகம்(கீழடி)

வைகை யாற்றுப் படுகை நாகரிகம்

மதுரைக்கு அருகிலுள்ள கீழடி (சிவகங்கை மாவட்ட
நிர்வாகத்துக்கு உட்பட்டது) என்னும் ஊரில் மேற்கொள்ளப்
பட்ட அகழாய்வில் 7800 பொருட்கள் கண்டெடுக்கப் பட்ட
தாகவும், கார்பன் சோதனையின் மூலம் அவை 2600 ஆண்டு
களுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்றும் நாளிதழ்
கள் தெரிவிக்கின்றன.அங்கே  சுடுமண் பாத்திரங்கள், சங்கு
வளையல்கள். செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடு
மண்ணால் ஆன உறைகிணறுகள், அகேட் மற்றும் சூது பவளம்,
மணிகள் கிடைத்தன. ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓடுகளும்
கிடைத்துள்ளன. சுடுமண்ணால் ஆன கழிவுநீர்க் குழாய்கள்,
இரட்டைச் சுவர் போன்றவையும் கண்டறியப் பட்டுள்ளன.

மண்ணால்  ஆன பொருட்களைத்தாம் முதன்முதலாகக் கண்டு
பிடித்துப் பயன்படுத்தியிருப்பார்கள் நம் முன்னோர்கள். அதன்
பிறகு இரும்பு, செம்பு முதலிய உலோகங்களைக் கண்டுபிடித்துப்
பயன்படுத்தியிருப்பார்கள். மண்ணால் கலங்களைச் செய்வோர்
கலம்செய்கோ என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர். கல்
வெட்டுக்கள் பயன்பாட்டுக்கு வருமுன்பே மண் பானைகளில்
எழுத்தைப் பொறிக்கும் வழக்கம் நிலவியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், மண் பானைகளில் தனிநபர்கள் தத்தம் பெயர்களைப்
பொறித்திருப்பர். மன்னர்கள் தாம் பெற்ற வெற்றி, புரிந்த அரிய
சாதனைகள் முதலியவற்றைத் தெரிவிக்கக் கல்லில் பொறித்
திருப்பார்கள்.

இறந்தவர்களைப்  புதைக்க முதுமக்கள் தாழி என்னும் பெரிய
மண்ணால் ஆன பானைகளப் பயன்படுத்தினார்கள்  என்று
அறிகின்றோம். புறநானூறு 256ஆம் பாடலில் ஒரு பெண் கலம்
செய் கோவிடம்  தானும் தன் காதலனும் பாலை நிலத்து வழியே
வந்த பொழுது தன் காதலன் இறந்துவிட்டதாகவும், அவனைப்
புதைக்க ஒரு ஈமத் தாழி தேவைப் படுவதாகவும்  கூறிவிட்டு,
தான் இனிமேல் உயிர்வாழப் போவதில்லை என்றும், தன்னையும்
சேர்த்துப் புதைக்க அகன்ற தாழியாகச் செய்யுமாறும் வேண்டிக்
கொண்டாள். அப்பாடல் பின்வருமாறு:
"கலம்செய் கோவே! கலம்சேய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு  ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி(து) ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!"

புறநானூறு 331உம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும்
புலவர் செங்கற்களை யறுத்துக் கட்டிய உப்புநீர்க் கிணற்றை
யுடைய ஊரைப் பற்றித் தெரிவிக்கின்றார்.
"கல்லறுத்(து) இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச் சீறூர்". உவர்க் கூவல்=உப்புநீர்க் கிணறு.

பட்டினப் பாலை என்னும் சங்க நூலில் புலவர் கடியலூர் உருத்திரங்
கண்ணனார் 75ஆவது வரியில்,
"பறழ்ப்பன்றிப் பல்கோழி உறைக்கிணற்றுப் புறச்சேரி"
என்று பூம்புகார்ப் புறச்சேரியைப் பற்றிப் பாடியுளார்.
உறைக் கிணறு= உறை செருகிய கிணறு.
 

மதுரைக்கு அருகில் உள்ள ஊர் என்ற காரணத்தால்
மதுரை நகர நாகரிகம் கீழடியில் நிலவியிருக்க
வாய்ப்புண்டு. அல்லது, சில ஆராய்ச்சி அறிஞர்கள்
கூறுவது போலக் கீழடி ஊரே சங்க கால மதுரையாக
இருக்கவும் வாய்ப்புள்ளது.

எது எப்படி இருப்பினும் தமிழ்நாட்டில் நகர நாகரிகம்
நிலவியதற்குச் சான்றில்லை என்று கூறிவந்த
வரலாற்று ஆய்வாளர்கள் திகைக்கும் வண்ணம்
மிகச் சிறந்த நகர நாகரிகம்  கீழடியில் நிலவியதற்குத்
தரவுகள் கிடைத்துவிட்டன. சங்க நூல்களிலும் இக்
கூற்றை உண்மையென வலியுறுத்தும் பாடல்கள்
காணக் கிடைக்கின்றன. எனவே, சங்கப் புலவர்கள்
மிகைப்படுத்திப் பாடவில்லை. உண்மையைத்தான்
பாடியுள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மதுரை குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில்
உருவானது. மதுரை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய
இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.77 ஆம் ஆண்டில்
கிரேக்க வரலாற்று ஆய்வாளரான பிளினி என்பவரும்
அவரைத் தொடர்ந்து  கி.பி.140ஆம் ஆண்டில் தாலமி ஏன்பவரும்
மதுரைக்கு வந்துள்ளனர். இதனைப் பற்றித் தமது பயண நூலில்
குறிப்பிட்டுள்ளனர். மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க நாட்டுத் தூதர்
தமது 'இண்டிகா' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கௌடில்யர்
என்ற சாணக்கியர் தமது 'அர்த்த சாஸ்திரம்' என்ற நூலில் மதுரை
யைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மகா
வமிசம் என்ற நூலில் விசயன் என்னும் இலங்கையின் முதல் மன்னன்
மதுரை இளவரசியைத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி நடத்
தினர். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டியர்கள்
தமிழறிஞர்கள் மூலமாகத் தமிழைப் பேணி வளர்த்தனர். இதனால் இம்
மதுரை மூதூர் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்கியது.

சங்க நூல்களில் பல நூல்கள் ஆங்காங்கே மதுரையைப் பற்றிக்
குறிப்பிட்டாலும் மதுரைக் காஞ்சியும் பரிபாடலும் மதுரையை
மிக விரிவாக விவரிக்கின்றன.பரிபாடலில் மதுரை, திருமாலின்
கொப்பூழிலுள்ள(தொப்புள் என்பது பேச்சு வழக்கு) தாமரை மலரைப்
போன்று இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. அந்தத் தாமரைப் பூவின்
இதழ்களைப் போலத் தெருக்கள் தோன்றுவதாகவும், இதழின் நடுவே
இருக்கும் பொகுட்டு போன்று சொக்கநாதர் கோவில் அமைந்துள்ள
தாகவும் கூறப்பட்டுள்ளது.  அங்கு வாழும் தமிழ்க் குடிமக்கள் அப்பூவி
லிருக்கும் மகரந்தத் தாது போன்றவர்கள் என்றும்,  மதுரைக்கு வந்து
பரிசில் பெற்றுச் செல்பவர்கள் அப்பூவிலுள்ள தேனை உண்ணும்
பறவைகள் போன்றவர்கள் என்றும் இயம்புகிறது. அத் தாமரைப்
பூவில் தோன்றியவன் பிரமன்; அவன் நாவில் தோன்றியவை நான்கு
வேதங்கள் என்றும்  இந்த வேதத்தை ஓதும் ஒலியைக் கேட்டு மதுரை
மக்கள் துயில் எழுவர் என்றும்  பகர்கிறது. மதுரை மக்கள் சேரனது
வஞ்சி நகரத்தில் வாழ்வோரைப் போலவும், சோழனது உறையூரில்
வாழ்வோரைப் போலவும் கோழியின் கூவுதல் ஒலி கேட்டுத் துயில்
எழமாட்டார்கள் என்று பறைசாற்றுகின்றது. பாடல் பின்வருமாறு:
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில்வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப,
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழா(து)எம் பேரூர் துயிலே".

இனி, மதுரைக் காஞ்சியில் மதுரையின் செழிப்பும், வளமும்
வலிமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் எவ்வாறு விவரிக்கப்
பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்:
ஆழமாகத் தோண்டப்பட்டுள்ள நீலமணி போன்ற நீரையுடைய
அகழியையும், விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படை
களையுடைய மதிலினையும் கொண்டது மதுரை நதரம். மேலும்,
பண்டைக் காலந் தொட்டு வல்லமை நிலைபெற்றதும் தெய்வத்
தால் பாதுகாக்கப்பட்டதும் ஆகிய நெடிய நிலையினையும், நெய்
பல முறை பூசப்பட்டதால் கருகிய நிறத்தையும் திண்மையையும்
கொண்ட கதவினையும் கொண்டது அந்தக் கோட்டை.. அதனுள்
மேகம் உலாவும் மாடங்களோடும் வைகை போன்ற இடையறாத
மக்கள் போக்கு வரத்துடைய வாயிலோடும் சில்லென வீசும்
காற்று ஒலிக்கும் சாளரங்களோடும் விளங்கிய நல்ல இல்லங்கள்
அமைந்த ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருக்களைக்
கொண்டது  மதுரை நகரம். பாடல் பின்வருமாறு:(வரி:351 --360):
"மண்ணுற ஆழ்ந்த  மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து  வானம் மூழ்கி
சில்காற்(று) இசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
பல்வேறு குழாஅத் திசையெழுந்(து) ஒலிப்ப",

மேலும், வாணிபம் மற்றும் தொழில்கள் செவ்வனே நடைபெற்றன.
பல்வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னை
யும் வாங்கிக் கொண்டு சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை
விற்போர் இருந்தனர். மழை தவறாமல் பெய்ததால் பொய்க்
காத விளைச்சலை யுடைய பழையன் என்னும் மன்னனின்
மோகூரில் அரசவை  நிகழுமாறு நான்மொழிக் கோசர் கம்பீர
மாய் வீற்றிருந்தாற் போன்று  நாற்பெருங் குழுவினர் தோர
ணையாக அமர்ந்திருந்தனர்.  சங்கினை யறுத்துக் கடைவா
ரும், அழகிய அணிகளைத் துளையிடுவாரும், கடுதலுள்ள
நல்ல பொன்னால் விளங்கும் அணிகலன் செய்வாரும், பொன்
னை உறைத்து அதன் மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்
பாரும், செம்பை நிறுத்துக் கொள்வாரும் அங்கே குழுமியிருந்த
னர். பாடல் வரிகள் பின்வருமாறு: (வரிகள்: 503 --514)
"பல்வேறு பண்டமோ(டு) ஊண்மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும். நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழை யொழுக் கறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாம்மேல் தோன்றிய நாற்பெருங் குழுவும்
கோடுபோழ் கடைநரும் திருமணிக் குயினரும்
சூடுறு நற்பொன் சுடரிழை புனைவரும்
பொன்உறை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை  கொண்மரும் வம்புநிரை முடிநரும்"
மதுரை அங்காடிகளில் வலம்வந்தனர். ஓவியம்
எழுதும் வித்தகர் கண்ணுள் வினைஞர் என அழைக்கப்
பட்டனர். பகலில் செயல்படும் கடைகள் நாளங்காடி என்றும்
இரவில் செயல்படும் கடைகள் அல்லங்காடி என்றும் அழைக்
கப் பட்டன. தெருக்களில் என்ன பொருள் விற்கப் படுகிறது
என அறிவிக்கும் கொடிகள் பறக்கவிடப் பட்டிருந்தன.

வைகை நதி வெகுவாகப் புகழப்பட்டுள்ளது. "வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி" என்றும் "ஆற்றுப் பெருக்கற்(று) அடி
சுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை"
என்றும் இலக்கியங்களில் வையை வெகுவாகப் புகழப்பட்டுள்ளது.
பரிபாடலில் வையையில் வெள்ளம் வருவதைப் பற்றி எவ்வாறு
விவரிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம். காற்று சுழன்றடிப்பதாலும்
மின்னல் வெட்டிக் கண்ணைக் குருடாக்குவதாலும் வானமே இருளா
யிற்று. மேலை மலையில் சாரல் மழை பொழிந்தது. நாகம், அகரு
(அகில்), வழை, ஞெமை, ஆரம்(சந்தனம்), தகரம், ஞாழல் முதலான
தார வகைகளை(தரும் கொடைப் பொருட்களை)ச் சுமந்து கொண்டு
வெள்ளமானது வையை ஆற்றில் கடல்போல் பெருக்கு எடுத்து வந்தது.
வையை வெள்ளம் மதுரை மதிலைத் தாக்குகிறது என்று நகரிலுள்ளோர்
பேசுவதை அனைவரும் கேட்டனர். பாடல் பின்வருமாறு:(வரிகள் (1 --10):
"வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவின்று; கிளையடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்;
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
அகரு, வழை ஞெமை, ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளிகடல் முன்னியது போலும் தீம்நீர்
வளிவரல் வையை வரவு;
வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர் தாஅய்
அந்தண் புனல்வையை யாறு".

இவ்வளவு  வளமான, வற்றாத வையை  இற்றை நாளில்  நீரின்றி
வறண்டு காணப்படுவது மனத்துக்கு வேதனையளிக்கிறது. வருச
நாட்டு மலையிலிருந்து உற்பத்தியாகும் வையை ஆறு தன்னோடு
கலக்கும் துணை அல்லது கிளை ஆறுகளின் தொடர்பைத் துண்டித்
திருக்கலாம். அல்லது துணை அல்லது கிளை ஆறுகள் காலப் போக்
கில் வழக்கமான பாதையை மாற்றிக் கொண்டிருக்கலாம். என்ன
சிக்கல் நேர்ந்தது என்று கண்டுபிடித்துச் சரிசெய்து விட்டால் வையை
பழைய வளத்தையும் சிறப்பையும் மீண்டும் பெற்றுவிடும். இதன்
மூலம் மதுரை பண்டைய சிறப்பை மீண்டும் அடையும் என்பதில் எள்
அளவும் ஐயமில்லை.

மதுரைக்கு மிக அருகில் வையை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள
கீழடி என்னும் ஊரில் நடத்தப்பட்ட அகழாய்வில் மதுரைக் காஞ்சியில்
விவரிக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்வது போலக்  கீழடியே சங்க கால
மதுரையாகத் திகழ்ந்திருக்கலாம்.

Thursday 12 September 2019

சீதை நகைகளைக் கண்டெடுத்த குரங்கினம் போல

சீதையின் நகைகளைக் கண்டெடுத்த குரங்கினம்  போல.......

ஊன்பொதி பசுங்குடையார் என்னும் புலவர் புறநானூற்றில் சோழன்
செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனின் கொடைக்
குணத்தைப் போற்றிப் பாடிய  பாடல் மிகவும் நல்ல இலக்கியச் சுவையும்,
நகைச்சுவையுணர்வும் ததும்பும் தரமான செய்யுளாகும். அதைப் பற்றி
விரிவாகப் பார்ப்போம்.
புறநானூறு  பாடல் எண: 378; திணை:பாடாண்; துறை:இயன்மொழி.
ஊன்பொதி பசுங்குடையார் வேந்தனைப் புகழ்ந்து பாடிப் பெரும் பரிசில்
பெற்றார். புலவர் இதற்குமுன் கண்ணாலும் பார்த்திராத நிறைய அணி
கலன்களை வேந்தன் புலவர்க்கு நல்கினான். புலவர் திணறிப் போனார்.
வேந்தனுக்கு நன்றி தெரிவித்துவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பிய புலவர்
அந்நகைகளைத் தன் சுற்றத்தாரிடம் காண்பிக்க அவர்கள் பிரமித்துப்
போயினர். விரலில் அணிய வேண்டிய நகையைக் காதிலும், காதில் அணிய
வேண்டிய நகையை விரலிலும், இடையில் அணிய வேண்டிய நகையைக்
கழுத்திலும், கழுத்தில் ஆணிய வேண்டிய நகையை இடையிலும்  இடம்
மாற்றி அணிந்து அழகு பார்த்தனராம். சீதாப் பிராட்டியை இராவணன்
இலந்கைக்குப் புட்பக விமானத்தில் கடத்திச் சென்ற பொழுது அவர் தம் நகை
களக் கழற்றி ஒரு துணியில் சுற்றி அம்மூட்டையை எறிய, அது கிட்கிந்தை
நகரில் விழ, அதனைக் கண்ட குரங்கினம்  இனம் புரியாத ஆர்வத்தொடு
அம் மூட்டையைப் பிரித்து அதிலிருந்த நகைகளைத் தாறுமாறாக இடம்
மாற்றி அணிந்து கொண்டு அழகுபார்த்த நிகழ்வை  ஒத்திருந்தது தம் சுற்றத்
தார் செய்கை என்று புலவர் நகைச்சுவை ததும்பக் குறிப்பிடுகின்றார். இனி,
தொடர்புடைய பாடலைப் பார்ப்போம்:


"தென் பரதவர் மிடல் சாய,
வடவடுகர் வாள் ஓட்டிய
தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
கடுமா கடைஇய விடுபரி வடிம்பின்,
நற்றார்க் கள்ளின், சோழன் கோயில்,
புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்,
பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்(று)என்
அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
எமக்கென வகுத்த அல்ல, மிகப்பல

மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
தாங்காது பொழிதந் தோனே; அதுகண்டு,
இலம்பாடு உழந்தவென் இரும்பேர் ஒக்கல்
விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்,
செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்,
அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்,
மிடற்றமை மரபின அரைக்குயாக் குநரும்,
கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
நிலஞ்சேர் மதர்அணி கண்ட குரங்கின்

செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தாஅங்கு,
அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
இருங்கிளைத் தலைமை  எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே!
பொருளுரை:
தெற்குத் திசையிலுள்ள பரதவரின் வலிமை அடங்கி ஒடுங்கவும்,
வடக்குத் திசையிலுள்ள வடுகரின்  வாள்வன்மையால் தமிழகத்
துக்கு நேர்ந்த கேடுகள் நீங்கவும் முனைப்புடன் வீரங்காட்டி அவற்றைத்
தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டவன் சோழன் செருப்பாழி
எறிந்த இளஞ்சேட் சென்னி என்னும் வேந்தனாவான். இச் சோழனது
அரணமனையின் வெண்சுதை மாடத்திலே முற்றத்திலே நின்று
என்னுடைய கிணையை இயக்கிக் குறையாத வீர மரபையுடைய சோழ
னின் வஞ்சிச் சிறப்பை(பகைவர் நாட்டைக் கைக்கொள்ள வஞ்சிப் பூச்
சூடிச் செல்லுதல) வியந்து போற்றிப் பாடினேன்.

நான் பாடிய பாட்டைக் கேட்ட சோழ வேந்தன், எமக்காகச் செய்யப் படாத
அரசகுலத்தவர்க்கே உரிய நல்ல நல்ல அணிகலன்கள் பலவற்றையும்
ஏராளமாக எனக்கு நல்கினான். அவற்றை எடுத்துக் கொண்டு என் ஊர்க்
குத் திரும்பிய நான் அவற்றை என் கேளிரிடம் காட்டினேன். அவர்கள்
அவற்றைப் பார்த்துத் திகைப்பில் மூழ்கினர். இந் நகைகளை அவர்கள்
இதற்குமுன்னர் கண்டதேயில்லை. எனவே, விரலில் அணிய வேண்டிய
தைக் காதிலும், காதில் அணிய வேண்டியதை விரலிலும், இடுப்பில் அணிய
வேண்டியதைக் கழுத்திலும், கழுத்தில் அணியவேண்டியதை இடுப்பிலுமாக
இடம் மாற்றி அணிந்து பார்த்தனர். இக் காட்சி 'சீதையின் அணிகளைக்
கண்டெடுத்த குரங்கினம் அணிந்து பார்த்த' இராமாயணக் காட்சியினை
ஒத்திருந்தது. என் குடும்பத்தார் மற்றும் சுற்றத்தார் இதுகாறும் அனுபவித்த
கொடிய வறுமையும் தொலைந்து போனது; இதன் விளைவாக அவர்களது
முகங்களிலே இளநகை அரும்பியது.

அருஞ்சொற் பொருள்:
மிடல்: வலிமை
கிணை: ஒருவகைப் பறை
வெறுக்கை: செல்வம்
இலம்பாடு: துன்பம்
ஒக்கல்:சுற்றத்தார்
தெறல்: கோபித்தல்
மதர்:செருக்கு, மகிழ்ச்சி
எவ்வம்:துயரம்.







Wednesday 14 August 2019

ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்.

ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத்
தாழ்ப்பாள்.

நம் நாட்டில் அரசாட்சி செய்த அரசர்களைப் பற்றியே
ஆதாரம் மிக்க வரலாறு இல்லாத பொழுது புலவர்களைப்
பற்றிய வரலாற்றைப் பற்றி என்ன சொல்ல இயலும்?
திருவள்ளுவர், ஔவையார், கம்பர், ஒட்டக் கூத்தர், புக
ழேந்தியார், அருணகிரி நாதர், காளமேகனார் போன்ற
புலவர்களைப் பற்றிய நம்பத் தகுந்த வரலாறுகள் கிடைக்க
வில்லை. சிறிதளவு உண்மையும் பெருமளவு  கற்பனையும்
கலந்த கதைகள் உலவுகின்றன. கல்வெட்டுச் செய்திகள்,
புலவர் பெருமக்கள் படைத்த இலக்கியங்கள், சிற்றிலக்கி
யங்கள், பாடல்கள் முதலியவற்றை ஒருங்கே ஆய்ந்து
ஓரளவு நம்பகமான வரலாற்றை எழுத வேண்டியதாகிறது.

அதன்படி, இடைக்காலத்தில் சோழப்பேரரசு மிகப்பெரும்
புகழோடும் படைவலிமையோடும் ஆட்சி நடத்திக் கொண்
டிருந்த பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்
றாண்டின் இறுதிக் காலக் கட்டம் முடிய செயங்கொண்டார்,
கம்பர், ஒட்டக் கூத்தர், புகழேந்தியார், ஔவையார் போன்ற
பெரும் புலவர்கள்  தமிழுக்குத் தொண்டுசெய்துகொண்டிருந்
தனர். இவர்களில் ஒட்டக் கூத்தருக்கு மட்டுமே ஓரளவு நம்பக
மான வரலாறு கிடைக்கிறது. செயங் கொண்டாரையும், கம்ப
ரையும் ஒட்டக் கூத்தர் மிகவும் புகழ்ந்து பாடியுள்ளமையால்
அவர்கள் கூத்தர் காலத்துக்கு முந்திய காலத்தவர்கள் என்று
தீர்மானிக்கலாம். ஏனென்றால் சம காலத்தில் வாழ்ந்தவர்களுக்
குள்ளேதான் போட்டி, பொறாமை காரணமாகப் பூசல் விளைகிறது.
அந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் கூத்தர், புகழேந்தியார், ஔவை
யார் ஆகியோர் ஒரே காலத்தைச் சேர்ந்தவர்களாக நம்பினால் தவறு
இல்லை.

ஒட்டக் கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்பதாகும். தில்லை நடராசரைக்
குறிக்கும் சொல்லாகும். ஒட்டம்(பந்தயம்) வைத்துப் பாடுவதில் கெட்டிக்
காரராக விளங்கியமையால் ஒட்டக் கூத்தர் என்னும் பெயர் உருவானதாகச்
சிலர் சொல்வர். எதிரில் உள்ளவர் பாடும் கருத்தை ஒட்டிப் பாடுவதில் தேர்ச்சி
பெற்றவர் என்பதனால் இப்பெயர் உருவாகியிருக்கும் என் வேறு சிலர் சொல்வர்.
இவர் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த மூன்று சோழ வேந்தர்களுக்குக் கல்வி
கற்பித்த ஆசான் ஆகவும் அவ்வவர் அவைக்களத்தில் தலைமைப் புலவராகவும்
விளங்கியவர். விக்கிரம சோழன்(1120--1136), அவர் மகன் இரண்டாம் குலோத்துங்
கன்(1136--1150), அவர் மகன் இரண்டாம் இராசராசன்(1150--1163) ஆகிய சோழப்
பேரரசர்கள் மீது மூவருலாப் பாடியவர்.மூன்று பெருவேந்தர்களுக்குக் குருவாக
விளங்கியமையால் அரசியல் செல்வாக்கும் உடையவர். இது காரணமாகச் சற்றே
செருக்கும் உடையவர்.

புகழேந்திப் புலவர் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப் படுகிறது.
தமிழ்ப் புலமையில் கூத்தருக்குச் சற்றும் சளைத்தவர் அல்லர். வரகுண பாண்டிய
வேந்தனின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர். முன்கோபமோ, செருக்கோ
சிறிதும் இல்லாதவர். நளவெண்பா என்னும் இலக்கியத்தை இயற்றியவர். வரகுண
பாண்டியனின் மகளுக்கு ஆசானாக விளங்கியவர். வரகுண பாண்டியன் தன் மகளை
இரண்டாம் குலோத்துங்க சோழனுக்கு மணம்செய்து கொடுத்து அப்பெண்மணியைப்
புகுந்த வீட்டுக்கு அனுப்பிவைத்த பொழுது சீர்வரிசைகளுக்குப் பொறுப்பாளராகவும்
தன் மகளுக்கு நல்ல குடும்ப நெறிகளைக் கற்றுக் கொடுப்பதற்காகவும் புகழேந்தி
யாரையும் மகளுடன் அனுப்பினான்.
 பாண்டிய இளவரசியோடு(தற்பொழுது சோழ அரசி) வந்த புகழேந்தியாருக்கும்  சோழ
மன்னனின் அவைப் புலவர் கூத்தருக்கும் புலமைப் பூசல்கள் அடிக்கடி நடைபெற்றன.
பொதுவாகவே, சமகாலப் புலவர்கள் பிணக்கும் பூசலும் இல்லாமல் ஒற்றுமையாக
வாழ்தல் அரிதாகும். கூத்தரின் செருக்கான குணத்துக்கும் புகழேந்தியாரின் அமைதி
யான குணத்துக்கும் ஒத்துப் போகவில்லை. அவ்வப்போது இருவரும் தத்தம் பேரரசரைப்
புகழ்ந்து பாடிக் கொண்டனர். ஒரு  சமயம்  கூத்தர் பாண்டியனின் பட்டத்து யானை
கனவட்டம் சோழனின் பட்டத்து யானை கோரம் என்பதற்கு நிகராகாது என்றும், பாண்டிய
னின் வைகைநதி சோழனின் காவேரிக்கு ஈடாகாது என்றும், பாண்டியனின் மீன்கொடி
சோழனின் புலிக்கொடிக்குச் சமமாகாதென்றும்,  பாண்டியனின் வேப்பம்பூ மாலை சோழ
னின் ஆத்தி மாலைக்கு நேராகாது என்றும், பாண்டியனின் கொற்கைநகர் சோழனின்
உறையூரைப் போலாகாது என்றும், பாண்டியனின் சந்திரகுலம் சோழனின் சூரிய குலத்
துக்கு ஒப்பாகாது என்றும் பாட, உடனே புகழேந்தியார் பாண்டியனின் சின்னங்களைப்
புகழ்ந்தும் சோழனின் சின்னங்களை இகழ்ந்தும் எதிர்ப்பாட்டுப் பாடினார். விவாதத்
தின் இறுதியில் கூத்தர் கீழ்க்கண்ட பாடலைச் சொல்லத் தொடங்கினார்:
"வென்றி வளவன் விறல்வேந்தர் தம்பிரான்
என்றும்  முதுகுக்(கு) இடான்கவசம்" என்று பாடிக் கொண்டிருக்கையிலேயே இடை
மறித்த புகழேந்தியார் மீதியுள்ள பாதிப் பாட்டைத் தமது சொற்களைக் கொண்டு
கீழ்க்கண்டவாறு நிறைவுசேய்தார்:
..................................................................................----துன்றும்
வெறியார்  தொடைகமழும்  மீனவர்கோன்  கைவேல்
எறியான் புறங்கொடுக்கின்   என்று".
கூத்தர் சொல்ல நினைத்த செய்தி:
எமது சோழ மன்னன் முதுகுக்குக் கவசம் அணிய மாட்டான்.
ஏனென்றால் அவன் வெற்றி நாயகன்; வீர, தீர பராக்கிரமம்
உடையவன். போரில் புறமுதுகு காட்டி ஓடும் கோழையல்லன்.
ஆனால் இடையிலேயே மறித்த புகழேந்தியார் அந்தப் பாட்டைத்
தடம் மாறிச் செல்லும்படியாக மாற்றிப் பாடினார்:
புகழேந்தியார்  சொன்ன செய்தி:
சோழ வேந்தன் முதுகுக்குக் கவசம் அணிய மாட்டான்; ஏனென்றால்
ஒருவேளை போரில் தோற்றுப் புறமுதுகு காட்டி ஓட நேர்ந்தாலும்,
பாண்டிய வேந்தன் தமது வேலைப் புறமுதுகு காட்டி ஓடுவோர் மீது
எறியவே மாட்டான். இது மிக மிக நிச்சயம்.
இந்தப் பாடல் மூலம் சோழ வேந்தனை இழிவு படுத்தியதாகவும்
வேறு பல குற்றச் சாட்டுகளை எடுத்துரைத்தும்  கூத்தர் சோழ
வேந்தனின் சினத்தைத் தூண்டிவிட்டார். இதனைச் செவிமடுத்த
சோழ வேந்தன் புகழேந்தியார்மீது கடும் சினமும் வெறுப்பும் கொண்
டான். தனது வீரர்களை ஏவிப் புகழேந்தியாரைச் சிறையில் அடைக்கச்
செய்தான்.

புகழேந்தியாருக்கு நேர்ந்த அவலத்தைக் கேள்வியுற்ற சோழ அரசி,
தனது கணவனாகிய சோழவேந்தன் மீது சினம் கோண்டாள். தனக்கு
ஆசானாக விளங்கிய புகழேந்தியாரைச் சிறையில் அடைத்த செயல்
தனக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று கருதினாள். சோழ வேந்
தனிடம் ஊடல் கோண்டு அந்தப் புரத்தில் ஒரு அறைக்குள் நுழைந்து
கதவைத் தாழிட்டுக் கொண்டாள். வழக்கம் போல அரசவை  நிகழ்ச்சி
முடிந்ததும் அந்தப்புரத்துக்கு  விரைந்து வந்த சோழன் மெல்லக் கதவைத்
தட்டினான். அண்மையில்தான் திருமணம் நடந்துள்ளது. அதனால் மிக்க
ஆவலுடன்  மனைவியைப் பார்க்க வந்த மன்னன் ஏமாற்றமடைந்தான்.
பலமுறை கதவைத் தட்டியும் திறக்காததால் அரசி தன்னிடம் ஊடல்
கொண்டுள்ளதை யறிந்தான். மிகவும் ஏமாற்றத்தோடு அரசவைக்குத்
திரும்பி வந்து தன் குருநாதர் கூத்தரிடம் நடந்ததை எடுத்துரைத்து
"நீவிர் பக்குவமாக அரசிக்கு அறிவுரை பகர்ந்து அவள் ஊடலைக்
கைவிட உதவல் வேண்டும்" என்று மன்றாடினான். அக்காலத்தில்
மன்னனுக்காக அரசவைப் புலவர்கள் சமரச முயற்சி மேற்கொள்வது
இயல்புதான். அதன்படியே கூத்தரும் அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.
கூத்தர் சற்றே செருக்கும் ஆணவமும் கொண்டவர். புகழேந்தியார்
மீதுள்ள வெறுப்பால் குழைவும் கனிவும் இல்லாமல் அரசியை
நோக்கிப் பாடலானார்:
நானே இனியுனை வேண்டுவ தில்லை, நளினமலர்த்
தேனே! கபாடம் திறந்திடு வாய்;திற  வாவிடிலோ
வானே றனைய  இரவி குலாதிபன் வாயில்வந்தால்
தானே திறக்கும்நின்  கையித  ழாகிய  தாமரையே.
பொருள்: நான் இனி உன்னைக் கெஞ்சி வேண்டத்
தேவையில்லை.  அரசி, கதவைத் திறந்திடுவாயாக.
அப்படித் திறக்காவிட்டால்  சூரியகுல வேந்தனாகிய
சோழ மன்னன் உன்னை நாடிக் கதவருகில் வந்தால்
அவன் மேனியிலிருந்து கிளம்பும் சந்தன மணத்தாலும்
அவனைப் பற்றிய இனிய நினைவுகளாலும் மயங்கி
உன்னை அறியாமல் உன் கையிதழாகிய தாமரை
தானே கநவைத் திறக்கும். எனவே, அதற்கு இடமளிக்
காமல் நீயே கதவைத் திறப்பாய்.
ஏற்கெனவே, அரசி தன் ஆசான் சிறையில் வாடும்
கொடுமையினை எண்ணிக் குமுறிக் கொண்டிருக்கும்
வேளையில் கூத்தர் குழைவும், கனிவும், கெஞ்சுதலும்
இல்லாமல் அதிகாரத் தோரணையில் பாடியது அவளுக்கு
அளவுகடந்த சினத்தை உண்டாக்கியது. உடனை கதவின்
மற்றொரு தாழ்ப்பாளையும் போட்டுக் கொண்டாள். இதன்
காரணமாகவே ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்
பாள் என்ற சொல்லடைவு உருவாயிற்று. அதாவது,
பிடிக்காத ஒருவரின் கருத்துக்கோ/செயலுக்கோ
அல்லது பிடிக்காத ஒரு நிகழ்வுக்கோ இருமடங்கு
எதிர்வினை ஆற்றுவதை இச் சொல்லடைவு குறிக்
கும்.  பொதுவாக, ஊடலை க் கைவிடக் கோரிக்கை விடும்
போது பணிவும், கனிவும், குழைவும், நெகிழ்ச்சியும் குரலில்
வெளிப்படுதல் வேண்டும். இது போர்க்களம் அன்று. குடும்
பக் களம். ஊடலில் தோற்பவர் வெல்வர்; வெல்பவர் தோற்பர்.
ஊடலில் வெற்றி பெற ஆடவர் தோற்றல் வேண்டும். கவிச்
சக்கரவர்த்தி கூத்தருக்கும் இந்த நியதி தெரியும்.  புகழேந்தி
யார் மீதுள்ள புலமைக் காய்ச்சலாலும், சோழமன்னன் மீதுள்ள
அளவுகடந்த அன்பினாலும், அன்றைய காலக் கட்டத்தில் சோழப்
பேரரசின் செல்வாக்கை எண்ணியும்  அதிகாரம் புலப்படக்
கோரிக்கை வைத்தார். கோரிக்கை மறுக்கப்பட்டதும் அல்லாமல்
இருமடங்கு எதிர்வினையும் நிகழ்ந்தது. அதாவது கூத்தரின்
பாட்டுக்குக் கூடுதல் தாழ்ப்பாள் இடப்பட்டது.

இச் செய்தியை அறிந்த சோழமன்னன் அரசியின் ஊடலுக்குக்
காரணம் அவள் குருநாதரின் சிறைவாசமே என்று புரிந்து
கொண்டு புகழேந்தியாரைச் சிறையிலிருந்து விடுதலை
செய்து அந்தப் புரத்துக்கு அனுப்பி வைத்தான். தன் மாணவி
யாகிய சோழ அரசியின் அறைக் கதவருகில் வந்து நின்று
குழைவும் கனிவும் தோன்றுமாறு இதமாகவும் நெகிழ்ச்சி
யாகவும் பாடத் தொடங்கினார்:
இழையொன் றிரண்டு  வகிர்செய்த நுண்ணிடை ஏந்துவள்ளைக்
குழையொன் றிரண்டு விழியணங் கேகொண்ட கோபந்தணி;
மழையொன் றிரண்டுகை மானா பரணன்நின் வாயில்
   வந்தால்
பிழையொன் றிரண்டு பொறாரோ குடியிற் பிறந்தவரே.
பொருள்: நூலை இரண்டாகப் பிளந்தது போன்று நுண்
ணியதும் வள்ளைக் கொடியை ஒத்ததும் ஆகிய இடை
யை உடையவளே! குண்டலங்கள் இரண்டும் ஆடச்
சிவப்பேறிய விழிகளை யுடைய ஆரணங்கே! மழை
போல் வாரி வழங்கும் இரண்டு கைகளையுடைய
மானாபரணனாகிய சோழமன்னன்(மானாபரணன்--
மானத்தை ஆபரணமாக உடையவன்--சோழர்களின்
பட்டப் பெயர்) நின் கதவருகே வரும்போது சிறப்புமிக்க
பாண்டியர் குடியிற் பிறந்த நீ உன் கணவனாகிய
சோழ மன்னன் புரிந்த பிழை ஒன்றிரண்டைப் பொறுத்துக்
கொண்டு சமாதானம் அடைவாய்.(சோழ மன்னன் புரிந்த
பிழைகள் ஒட்டக் கூத்தரின் பேச்சைச் செவிமடுத்ததும்
அவர் வேண்டுகோளை யேற்றுப் புகழேந்தியாரைச் சிறை
யிலடைத்ததும் ஆகும்). பாண்டிய இளவரசி(தற்போது சோழ
அரசி) கதவைத் திறந்து தன் குருவை வணங்கி நின்றாள்
என்பதைச் சொல்லவும் வேண்டுமோ?







Wednesday 17 July 2019

கல்விக்கண் திறந்த காமராசர் புகழ் ஓங்குக!

செயல் வீரர் காமராசர் புகழ் ஓங்குக!

சீர்மிகுந்த விருதுநகர்ப் பதிவாழ்ந்த தம்பதிகள்
குமார  சாமி
ஏர்மிகுந்த சிவகாமி எனுமிவர்கள் பெற்றெடுத்த
         இனிய பிள்ளை;
கார்மிகுந்த வண்ணத்தர்; வெள்ளைநிற உள்ளத்தர்;
          காம ராசர்
பேர்மிகுந்த தமிழினத்தின் பெட்புமிக்க அடையாளம்;
          பீடு தானே!

தீரர்சத்ய மூர்த்திக்குச் சீர்த்திமிகு மாணாக்கர்;
பாரதத்தாய் கைவிலங்கைப் பட்டென்(று) அறுத்தெறிய
வீரமிகப் போராடி வெஞ்சிறையில் வாடியவர்;
ஈரநெஞ்சில் வாஞ்சையுடன் ஏழையர்க்கு நன்மைசெய்தார்.

தீமை  யிலாத  விருதுநகர்ச்
சேர்வில்  தோன்றி  அரசியலில்
ஏமம்  மிக்க  காங்கிரசாம்
இயக்கம்  தனிலே  படிப்படியாய்க்
காம  ராசர்  தொண்டியற்றிக்
கண்ய  மிக்க  முதலமைச்சாய்
பூம  டந்தை  உளங்களிக்கப்
பொறுப்பு  மிக்க  ஆட்சிதந்தார்.

நன்மைமிகு உழவுசெய்ய  அணைகள்பல எடுத்தார்;
 நல்லதொழிற் சாலைபல நிறுவிவளம் கொடுத்தார்;
உன்னதமாம் கல்விகற்கப் பள்ளிபல திறந்தார்;
  ஓயாத தொண்டாற்றி ஊண்,உறக்கம் துறந்தார்;
இன்மைமிகு மாணவர்க்காய் அழுதுகண்ணிர் உகுத்தார்;
  ஏற்றமிகு பகலுணவுத் திட்டந்தான் வகுத்தார்;
பன்னரிய சீருடைத்திட் டந்தனையே கொணர்ந்தார்;
  பாங்கான அவர்தொண்டை மக்களெலாம் உணர்ந்தார்.

கரும வீர! காம ராச! கல்வி கற்க உதவினீர்;
தரும மிக்க ஊழ லற்ற தக்க ஆட்சி தந்ததால்
அருமை யென்று சகல மக்கள் ஆத ரித்து வந்தனர்;
திருமி குந்த நல்ல கால மென்று சொல்லி வாழ்த்தினர்.

நேர்மையாய் எளிமை யாக
நித்தமும் தொண்டு  செய்தார்;
கூர்மையாம் அறிவு  கொண்டே
கொடுமைகள் களைந்து  மக்கள்
ஓர்மையாய்த்  துணிவாய்  வாழ
         ஊழலே இலாமல்  ஆண்டார்;
சீர்மையாய்  நாட்டை  யாண்ட
          செம்மலை  வாழ்த்து  வோமே!

வாழி! பெருந்தலைவர்; வாழி! அவர்திருப்பேர்;
வாழி! அவர்புகழும் மக்கள்தொண்டும்--வாழி!
உலகில்  கதிரும்  ஒளிரும்  மதியும்
நிலவும்  வரையளவும்  நின்று.

அருஞ்சொற் பொருள்:

கார்--கருமை; பெட்பு--பெருமை; பீடு--சிறப்பு; சேர்வு--வாழிடம்; ஏமம்--வலிமை;
பூமடந்தை--நிலமகள்; கண்ணீர் உகுத்தார்--கண்ணீர் சிந்தினார்;
கொணர்ந்தார்--கொண்டுவந்தார்;
திருமிகுந்த காலம்--பொற்காலம்;
ஓர்மை--உறுதி, துணிவு;கதிர்--சூரியன்;
மதி--சந்திரன்.






Sunday 7 July 2019

காடும் செடியும் அவளாகத்

காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே.

ஐவேல் அசதி என்னும் வள்ளல் அந்நாளில் கற்றறிந்த
பெரியோர்கள்பால் அன்பும் மரியாதையும் கொண்டவ
னாக விளங்கினான். அவன் வீரத்திலும் சிறந்து விளங்
கியவன். அசதி என்பது அவனது இயற்பெயர் என்றும்
"ஐவேல்" என அழைக்கப்படும் வேலைக் கைவசம் வைத்துக்
கொண்டிருந்த காரணத்தால் 'ஐவேல் அசதி' என்று
அழைக்கப்பட்டான்  என்றும்  சான்றோர் கூறுவர். இந்த
வள்ளலிடம் ஔவையார் தன் புலமையை வெளிப்படுத்திப்
பரிசில் பெற்றுச் செல்வது வழக்கம். ஐவேல் அசதி தமிழ்
கற்ற தன்னை மிகுந்த அன்போடும் மதிப்போடும் நடத்து
வதைக் கவனித்த ஔவையார் அவ்வள்ளல் மீது கோவை
எனப்படும் சிற்றிலக்கியம் ஒன்றை இயற்றினார். காலப்
போக்கில் அந்த நூல் நமக்குக் கிடைக்காமல் போயிற்று.
ஆனால் அந்நூலின் சில பாடல்கள் கிடைத்துள்ளன.
அப்பாடல்களைப் பார்ப்போம்.

அகப்பொருள் சுவை ததும்பும் பாடல்களைக் கொண்ட
அசதிக் கோவையில் உடன்போக்கு என்னும் துறையில்
பாடப்பட்ட பாடல் இது:
"அற்றாரைத் தாங்கிய ஐவேல் அசதி அணிவரைமேல்
முற்றா  முகிழ்முலை எவ்வாறு சென்றனள் முத்தமிழ்நூல்
கற்றார் பிரிவுங்கல் லாதவர் ஈட்டமும்  கைப்பொருள்கள்
அற்றார் இளமையும் போலே கொதிக்கும் அருஞ்சுரமே".
பொருள்:
காதலனோடு உடன்போக்குச் சென்ற மகளை நினைத்து
ஒரு தாய் புலம்பும் பாடலிது. கதியற்றவரைக் காக்கும்
ஐவேல் அசதியின் அழகிய மலைநாட்டின்மேல் வாழும்
என்மகள் எவ்வாறு கொடிய பாலைநிலத்தின் வழியே
தன் காதலனுடன் சென்றாள்? முத்தமிழ் நூல் கற்ற
பெரியோரைப் பிரிவதும், கல்லாதவர் கூட்டத்தில் சிக்கிய
கற்றவர் நிலையும், இளமைக் காலத்தில் கைப்பொருள்
இல்லாத வறுமைத் துயரும் எவ்வாறு மனக் கொதிப்பைத்
தருமோ அந்த அளவு கொதிப்பும் வெம்மையும் உடைய
பாலைநிலத்தை என்மகள் எவ்வாறு கடந்து சென்றனள்?
என்று அத்தாய் புலம்பியதாகப் பாடல் தெரிவிக்கிறது.

இன்னொரு பாடலைப் பார்ப்போம்.ஒரு காதலன் பொருள்
தேடுவதற்காகத் தன் காதலியைத் தவிக்கவிட்டுச் சென்று
விட்டான். அவன் பொருள்தேடி வந்தால்தான் திருமணம்
நடைபெறும். ஆனால் காதலியோ அவன் பிரிவால் மிகவும்
வாடி, வதங்கிப் புலம்பத் தொடங்கிவிட்டாள். அப்பாடல்:
"அருஞ்சஞ் சலங்கொண்ட ஐவேல் அசதி அகல்வரையின்
இருஞ்சஞ் சலஞ்சொல்ல வேண்டுங்கொ லோவென தன்னைமொழி
தருஞ்சஞ் சலமும் தனிவைத்துப் போனவர் சஞ்சலமும்
பெருஞ்சஞ் சலங்கொண்டு யானிருந் தேனொரு பெண்பிறந்தே".
பொருள்:
பிறர்  மனக்கவலை(சஞ்சலம்) யைத் தன்னுடைய துயரமாக
எண்ணி  அதனைத் துடைக்கும் வள்ளல் ஐவேல் அசதி மலை
நாட்டில் வாழும் எனக்குள்ள மனக்கவலை ஏராளம். என் அன்னை
உடன்போக்கு நிகழ்த்திய எனக்குத் தரும் ஏச்சும் பேச்சும், என்னைப்
பிரிந்த காதலனால் ஏற்பட்ட  எப்பொழுது திரும்பி வருவார்?
என்ற ஏக்கமும் ஊரார் என்னவிதமாக அலர்(பழிச்சொல்) தூற்று
வாரோ என்ற கவலையும் என்னைப் படாதபாடு படுத்துகின்றன.
பெண்ணாகப் பிறந்து இந்தப் பாடு படும் நான் சாகாமல் உயிர்
வாழ்வது எதற்கு?

மேலுமொரு பாடலைப் பார்ப்போம்:
"ஆலவட் டப்பிறை ஐவேல் அசதி அணிவரைமேல்
நீலவட் டக்கண்கள் நேரொக்கும் போதந்த நேரிழையாள்
மாலைவிட் டுச்சுற்றி  வட்டமிட்  டோடி. வரவழைத்து
வேலைவிட்  டுக்குத்தி வெட்டுவ  ளாகில்  விலக்கரிதே".
பொருள்:
ஆலவட்டம் போன்ற  முழுநிலவு ஒளிரும் ஐவேல் அசதி என்னும்
தலைவனின் அழகிய மலைநாட்டில் வாழ்பவர்கள் நாங்கள். என்
காதலியின் நீலவட்டக்(கருமைநிறக்) கண்கள் என்னை நேருக்கு
நேராக நோக்கும் போது நான் கிறங்கி, நிலை தடுமாறி, மயங்கி
விட்டேன்.  என்னை ஒரு சுற்றுச்சுற்றிச் சிறிது தொலைவு
ஓடினாள். அங்கிருந்து கொண்டு அவளருகே என்னை வரவழைத்
தாள். நல்ல வேளை, மீண்டும் தன் வேல்போன்ற கண்களால்
என்னை நேருக்கு நேராக நோக்கி வெட்டியிருந்தால் அதனைத்
தடுத்து விலக்க இயலாமற் போயிருக்கும். என்னவொரு கூரிய,
காதற் பார்வை!

பிறிதொரு சுவையான பாடலைப்  பார்ப்போம் :
"ஆரா யிரங்கொண்ட  ஐவேல்  அசதி  அகன்கிரியில்
நீராடப்  போகும் நெறிதனி  லேயந்தி  நேரத்திலே
சீரான  குங்குமக் கொங்கையைக் காட்டிச் சிரித்தொருபெண்
போராள் பிடிபிடி யென்றே நிலாவும் புறப்பட்டதே".
பொருள்:
ஆத்தி மரங்கள் ஆயிரக் கணக்கில் வளர்ந்து நிற்கும் ஐவேல்
அசதியின் அகன்ற மலைப்பகுதியில், அந்தி நேரத்திலே,
நீராடப் போகும் பாதைவழியே முகத்திலே புன்முறுவல் தவழ
எடுப்பான தோற்றமுடைய பெண் ஒருத்தி போகின்றாள். அந்த
அழகுச் சிலையை விட்டுவிடாதே, பிடி பிடி என்று சொல்வது
போல வானத்தில் நிலவு உதித்துப்  புறப்பட்டது. காதலன் தன்
காதலியைச் சந்தித்த அந்த நிகழ்வைத்  திருமணத்துக்குப் பிறகு
அவளிடம் நெகிழ்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் நினைவு கூர்ந்து
பரவசமடைகின்றான்; அவளும்தான்.

வேறொரு பாடலைப் பார்ப்போம்:
"அழற்கட்டுக் கட்டிய  ஐவேல் அசதி அணிவரையின்
மழைக்கட்டுக் கட்டிய மாளிகை மேலொரு மங்கைநல்லாள்
உழக்கிட் டுரியிட்டு  முவ்வுழக் கிட்டுரி நாழியிட்டுக்
குழற்கட்  டவிழ்த்துட னங்ஙனின்  றேமயிர் கோதினளே".
பொருள்:
ஐவேல் அசதியின் மலைநாட்டில் கொடிய விலங்குகளான புலி,
கரடி, காட்டு யானை போன்ற உயிரினங்களும் ஆங்காங்கே
வாழ்ந்து வந்தன. இரவில் இரைக்காக வேட்டையாடுவதற்காக
வலம் வருதல் இயல்பு. அவைகளிடமிருந்து மக்களைக் காத்தல்
வேண்டி எல்லாப் புறத்திலும் நெருப்பிட்டுக் காவல் செய்திருப்
பார்கள். இதைத்தான் அழற்கட்டு என்று பாடல் குறிக்கிறது.
இந்த மலைநாட்டிலே மேகங்கள் திரண்டு நிற்கும் ஒரு மாளிகை
மேல்தளத்திலே செப்புச் சிலைபோன்ற பெண் ஒருத்தி தோன்றி
னாள். பொழுது புலர்ந்து மூன்று நாழிகை கடந்திருக்கும்  அந்த
வேளையில் ஒயிலாக நின்ற அந்தப் பெண் தனது கூந்தலை
அவிழ்த்துவிட்டு  முடியைக் கோதத் தொடங்கினாள். அக்காட்சி
மேகத்தைக் கண்ட மயில் தன் தோகையை விரித்து ஆடத் தொடங்
கியதை ஒத்திருந்தது. இத்தகைய அழகிய காட்சியைத்  தெரு வழி
யே சென்ற இளைஞன் ஒருவன் கண்டு சொக்கிப் போனான்.
அவன் சொல்வதாக இப் பாடல் அமைந்துள்ளது. பாடலின் மூன்றாம்
வரியில் வரும் 'உழக்கு' என்னும் சொல் காற்படியையும், 'உரி'
என்னும் சொல் அரைப்படியையும்,  'முவ்வுழக்கு' என்னும் சொல்
முக்காற்படியையும், 'நாழி' என்னும் சொல் ஒருபடியையும் குறிக்கும்.
அனைத்தையும் கூட்டினால் மூன்று படி, அதாவது, மூன்று நாழியைக்
குறிக்கும். நாழி என்னும் சொல் நாழிகையையும் குறிக்கும். எனவே,
விடிந்து மூன்று நாழிகை கடந்த வேளை.

இன்னும் ஒரு பாடலைப் பார்ப்போம்:
"ஆடும் கடைமணி  ஐவேல்  அசதி  அணிவரைமேல்
நீடும் கயற்கண்ணி தந்தவவ் வாசை  நிகழ்த்தரிதால்
கோடும் குளமும்  குளத்தருகே  நிற்கும்  குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத்  தோன்றுமென்  கண்களுக்கே".
பொருள்:
கடைவாயிலில்  விருந்தினர் வருகையை அறிவிக்கும் மணி
ஓசை  இடையறாமல் ஒலிக்கும் கொடைக் குணம் உடையவன்
ஐவேல் அசதி என்னும் மலைநாட்டுத் தலைவன். அம்மலைப்
பகுதியில்  பேரெழில் பாவை ஒருத்தியை ஒரு இளைஞன்
பார்த்துக் கிறங்கிப் போனான். அவள்மேல் அவன் வைத்த
ஆசை அவனைப் பித்துப் பிடித்தவன் போல மாற்றிவிட்டது.
தன்னைச் சுற்றியிருக்கும்  எல்லாப் பொருள்களும் அப்பெண்ணைப்
போலவே அவன் கண்களுக்குத் தோன்றின. எனவேதான்,
'கோடும் குளமும் குளத்தருகே நிற்கும் குன்றுகளும்
காடும் செடியும் அவளாகத் தோன்றுமென் கண்களுக்கே'
என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டு திரிகின்றான்.
காதலின் வேகம் படுத்தும் பாடு.













Tuesday 25 June 2019

மாமன்னர் இராசராசர் போற்றுதலுக்கு உரியவரா? அல்லரா?...

மாமன்னர் இராசராசர் வருகை புரிந்தால்..... ...

ஆற்றோரம் சென்றேன்; அசைந்துவரும் தென்றலெனும்
காற்றை  நுகர்ந்தேன்; களித்தேன்; மணல்மீதில்
தன்னந் தனியே தனிமையினில் ஆழ்ந்திருந்தேன்;
என்னருகே ஆங்கொருவர் ஏற்றமுடன்  வந்துநின்றார்;
"ஐயன்மீர் நீவிர் எவரென்று நானறியேன்,
பையவே தாங்கள் பகர்க" என்றுரைத்தேன்.
"பிள்ளாய்!இம் மண்ணிற் பிறந்த தமிழ்வேந்தன்,
தெள்ளு தமிழில் அருண்மொழி வர்மனென்பார்;
பட்டப்பேர் பற்பலவாம்; பாசத்தில் மக்களெலாம்
பெட்புடனே ' ராசராசன்' பேர்கொண்(டு) அழைத்தனரே;

மக்கள்சிலர் என்பெருமை மங்கக் குறைசொல்லி
நக்கல்,நை யாண்டி நவில்கின்றார்" என்றுரைத்தார்.
"ஆயிரம் ஆண்டுக்கு முன்நிகழ்ந்த சம்பவத்தைப்
பாயிரம் கூறிப் பகர்தல்  அரிதேயாம்.
வேந்தன் தனக்கு விரிந்த பொறுப்புண்டு,
சாந்துணையும் அப்பொறுப்பைத் தட்டிக் கழித்திடோம்.
எல்லை  தனைக்காத்(து) எதிரிகள் வாராமல்
நல்லவிதம் நாட்டை நடத்திடல் ஓர்கடமை;
மக்களெல் லாரும் சமமாவர் என்றெண்ணி
எக்கணமும் ஆட்சி இயக்கிடுதல் ஓர்கடமை;

கொள்ளை,கொலை இல்லாக் குறையற்ற ஆட்சிதரல்
விள்ளரிய வீரமுடை வேந்தர்க்காம் ஓர்கடமை;
மாக்கடலில் கொள்ளை, வழிப்பறி செய்வோரை
ஊக்கமுடன் போரிட்(டு) ஒடுக்கிடுதல் ஓர்கடமை;
பெண்களைப் பொன்போலப் பேணிடுதல் ஓர்கடமை;
கண்கள்நிகர் கல்வி, கலை கற்பித்தல் ஓர்கடமை;
மக்கள் விரும்பி வணங்கும் கடவுளர்க்கு
நெக்குருகக் கோவில் நிறுவிடுதல் ஓர்கடமை;
இத்தனையும் செய்தேன், இதன்மேலும் செய்கையுண்டு;
முத்தனைய செய்கைகளை மோசமெனக் கூறுகின்றார்;

சாதி,மத பேதத்தைச் சற்றும்,பின் பற்றவில்லை;
வேதியரைப் போற்றியதாய் வீண்குற்றம் சாட்டுகின்றார்;
தேவரடி யாரென்னும் தெய்வ நெறிசெய்தேன்,
கேவலமாய் அன்னவரைக் கேலி புரிகின்றார்;
நீதி,நெறி யோடு நிலத்தைப் பகிர்ந்தளித்தேன்,
சாதிநெறி பார்த்துச் சலுகைசெய்த தாய்ச்சொல்வர்;
மங்கை பலரை மணந்ததனால் பெண்பித்தர்,
பங்கம் உடையவர், பாங்கற்றார் என்றுரைப்பர்;
பேரரசை மேலும் பெரிதும் வலுவாக்க
வீரமுடைச் சிற்றரசர் வேந்தர்க்(கு) உதவிடுவர்;

பெண்ணைக் கொடுக்கும் உறவுமுறை கொண்டவர்கள்
பெண்கொடுத்துத் தத்தம் பிணைப்பை வலுச்செய்வர்;
எப்பொழுது போர்நிகழும்? யார்சாவைச் சந்திப்பார்?
தப்பறவே யாராலும் சாற்ற இயலாதே!
ஆரிறந்த போதும் அரசைத் தொடர்ந்திடவே
பேரரசர் பிள்ளைபலர்  பெற்றிடுவர்; ஈதுண்மை.
பேரரசைக் காத்திடவே பெண்டிர்பல  ரைமணத்தல்
பாரதநன் னாட்டின் பழக்கம்தான், குற்றமிலை.
எத்தனையோ  குற்றங்கள் என்மேற்  சுமத்திடினும்
அத்தனையும் ஆதாரம் அற்றவைதாம் என்றவுண்மை

செந்தமிழ் மக்கள் தெளிவாகத் தேர்ந்திடுவர்;
சிந்தனையை வேறு திசையினில் செல்லவிடார்;
போற்றுவார் போற்றிடினும் பொல்லாப் புழுதியினைத்
தூற்றுவார் தூற்றிடினும்  சோர்ந்திடேன்; மெய்யேயாம்.
எம்மக்கள் என்காலம் ஏற்றமிகு பொற்காலம்,
தம்மினத்தின் தக்க அடையாளச் சின்னமென்பர்;
நஞ்சனைய கூற்று நவில்பவரை நம்பாமல்
நெஞ்சகத்தில் என்னை நிலைநிறுத்தி வாழ்ந்திடுவர்."
என்றெல்லாம் பேசி எனைவிட்டு நீங்கினரே,
அன்றுநமை  ஆண்ட  அவர்.









Saturday 8 June 2019

கோதாவரி தமிழர்களின் குறை தீர்க்குமா?+

தென்னிந்திய நதிகள் இணைப்புத் திட்டம்
(கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி)
கங்கையையும் பொன்னியையும் இணைத்திடலாம் என்றபகற்
  கனவு கண்டோம்;
"மங்கலமாம் இப்பணியை நிறைவேற்ற எந்தவொரு
   வழியும் இல்லை;
வெங்கொடுமை; மிகுந்தபொருட் செலவாகும்; மாநிலங்கள்
    விரும்ப வில்லை;"
பங்கமுற இவ்வாறு கூறியதால் கைவிட்டோம்;
    பரிதா பம்தான்.

எப்பொழுதும் பசுமைதவழ் நெற்பயிர்கள் அசைந்தாடி
   இனிய தென்றல்
வெப்பமதை விலக்கிநல்ல குளிர்ச்சிதரும் நன்செய்நிலம்
   மிக்க நாட்டில்
தப்பியது பருவமழை; வறட்சிமிக உருவாகித்
   தண்ணீர்ப் பஞ்சம்
துய்ப்பவரைத்  துன்புறுத்தி வாட்டமுறச்  செய்கிறது;
   சோகம்  தானே!

தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் பகுதியெலாம்
   தழைத்த காலம்;
அமிழ்தமன்ன பொற்காலம்; அக்காலம் இனிவருமோ?
   ஆறே, பொன்னி!
இமிழ்திரைவங்  கக்கடலில் கலந்திடும்நற் கழிமுகத்துக்
    கேற்றம் சேர்த்தாய்;
துமிதமது காணாமல் கழனியெலாம் பாலையெனத்
    தோன்றும் அம்மா!
(துமிதம்--மழைத்துளி; கழனி--வயல்)

பருவமழை பொய்த்துநமை வாட்டுவது போதாதோ?
    பங்கு கேட்கும்
கருநாடர் அணைகளிலே நீர்தேக்கிப் பயனடைவர்;
    கபட மாக
அருமைமிகு காவிரியை அடைத்துவைத்து வஞ்சித்தல்
    அறமோ? சொல்வீர்;
பெருமைமிகு மையத்துப் பேரரசே! தலையிட்டுப்
    பிணக்கைத் தீர்ப்பீர்!

இந்நிலையில் நதிகோதா வரியினையும் பொன்னியையும்
    இணைப்போம் என்னும்
பொன்னிகர்த்த முன்மொழிவைப் பலர்சொல்லி மகிழ்கின்றார்;
    புகல்வோம் நன்றி;
மின்னிகர்த்த வேகத்தில் திட்டத்தை நிறைவேற்ற
    வேண்டிக் கொள்வோம்;
என்னவொரு தடைவரினும் எதிர்கொண்டு முறியடிப்போம்;
    ஏற்றுக் கொள்வோம்.

நிதிநிலையைக் காரணமாய்ச் சொல்லாதீர்; சூழல்கெடும்
    நினைப்பும் வேண்டா;
சதிபுரிந்து தடைசெய்ய எண்ணிடுவோர் தயைகூர்ந்து
    தள்ளி நிற்பீர்;
மதிமிகுந்த தென்னகத்து முதல்வரெலாம் ஒருங்கிணைந்து
   வழியைத் தேடிக்
கதியெனவே நம்புகின்ற இத்திட்டம் நிறைவேறக்
   கைகள் தாரீர்!

மையத்துப் பேரரசை ஆட்சிசெய்வோர் அக்கறையாய்
   மனது வைத்தால்
உய்யும்வகை நதிகோதா வரியினையும் பொன்னியையும்
   ஒருங்கே சேர்த்து
நையவைக்கும் தணீர்ப்பஞ்சம் நீக்கிடலாம்;வறட்சியினை
    நாட்டை விட்டே
ஐயமற விரட்டிடலாம்; வளமனைத்தும் மீட்டிடலாம்;
    அனைத்தும் உண்மை.
(தணீர்ப் பஞ்சம்--தண்ணீர்ப் பஞ்சம்--இடைக்குறை)

தென்னகத்து மக்களெலாம் இப்பெரிய காரியத்தில்
    சேர்ந்து நின்று
தன்னலத்தைத் துறந்து,பொது நலமெண்ணி நன்முறையில்
    தம்மால் ஆன
சின்னவொரு பணியெனினும் சிறப்பாகச் செய்திடுவோம்;
    தீர்க்க  மாகப்
பன்னரிய சாதனையாய் நிறைவேற்றி முடித்திடுவோம்;
   பாங்காய் வெல்வோம்.

சீர்மிகுமித் திட்டத்தை  மையத்தில்  ஆள்வோர்கள்
   செம்மை யாக
நேர்மைமிக  நிறைவேற்றிச் செயல்படுத்தி விட்டாலே
    நீங்கும்  துன்பம்;
நீர்மிகுந்து வளம்மிகுந்து  தென்னகத்து மாநிலங்கள்
    நெருடல் இன்றிப்
பார்புகழப் பிணக்கின்றி ஒற்றுமையாய் வாழ்ந்திடுமே,
    பாசத் தோடு.

ஆண்டவனே! மாபெருமிச் செயலுக்கு நின்கருணை,
    அளவில் ஆசி
வேண்டிடுவோம், தட்டாமல் நல்கிடுவாய்; பருவமழை
    விரைந்து பெய்து
மீண்டுமிந்தத் தென்பகுதி செழிப்படைய வழிசெய்வாய்;
    வேண்டும் நீரை
யாண்டுந்தென்  னகமக்கள் பெற, வரந்தா; பங்கீட்டை
    எளிதாய் ஆக்கே!
(ஆக்கு + ஏ = ஆக்கே; 'ஏ' அசையாகும்)











Monday 27 May 2019

நகைக் கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன்.

கலித்தொகை--குறிஞ்சிக்கலி--பாடல் எண்:51--கபிலர்
"சுடர்த்தொடீஇ  கேளாய், தெருவில்நாம் ஆடும்
மணற்சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய
கோதை  பரிந்து, வரிப்பந்து  கொண்டோடி,
நோதக்க செய்யும் சிறுபட்டி, மேலோர்நாள்,
அன்னையும் யானும் இருந்தேமா, 'இல்லிரே!
உண்ணுநீர் வேட்டேன் எனவந்தாற்(கு) அன்னை
'அடர்பொற் சிரகத்தால் வாக்கி, சுடரிழாய்!
உண்ணுநீர்  ஊட்டிவா' என்றாள்; என, யானும்
தன்னை அறியாது சென்றேன்; மற்றென்னை
வளைமுன்கை பற்றி நலிய, தெருமந்திட்(டு),
'அன்னாய்! இவனொருவன் செய்ததுகாண்' என்றேனா,
அன்னை அலறிப் படர்தர, தன்னையான்,
'உண்ணுநீர் விக்கினான்' என்றேனா, அன்னையும்
தன்னைப் புறம்பழித்து நீவ,மற்(று) என்னைக்
கடைக்கணால் கொல்வான்போல் நோக்கி, நகைக்கூட்டம்
செய்தானக்  கள்வன்  மகன்."
அருஞ்சொற் பொருள்:
சுடரத்தொடீஇ!--சுடரும் வளையல் அணிந்தவளே!; அடைச்
சுதல்--மலர் சூட்டுதல்; பட்டி--பசுக் கொட்டில்; தெருமந்திட்டு--
மனம் தடுமாறி; கோதை பரிந்து--மாலை அறுத்து
கருத்துரை:
மணலினால் சிற்றில் கட்டி  மறுகினில் ஆடும் போதில்
இணக்கமில் குறும்பன் இந்த இல்லத்தைச் சிதைத்தான் முன்னாள்;
வணங்கிடா வம்புக் காரன் மாலையைப் பறித்தான்; நாங்கள்
சிணுங்கிடப் பந்தைக் கௌவித் தெருவினில் ஓடி னானே!
(மறுகு----தெரு).

பட்டியில் வாசம் செய்யும் பகடினை நிகர்த்த அன்னான்
வெட்டியாய்த் தெருவைச் சுற்றும் விடலைபோல் வளர்ந்து விட்டான்;
கட்டிய மனையில் யானும் கனிவுடைத் தாயும் ஓர்நாள்
மட்டிலா ஓய்வில் சற்றே மகிழ்ந்திடும் வேளை வந்தான்.
(பகடு---எருது)

'அளவிலாத் தாகம் 'என்றான்; அருந்திடத் தண்ணீர் கேட்டான்;
தளர்வினைக்  கண்ட அன்னை  தக்கபொற் பாத்தி ரத்தில்
இளகிய மனத்தால் நீரை எடுத்துவந் தனளே; அஃதைக்
"களங்கமில் விருந்தி  னர்க்குக்  கைகளில் தருவாய்" என்றாள்.

பாத்திரம் தனையான்  நீட்டப், பாதகன் வளையல் பூண்ட
பூத்திறம்  போலும் கையைப் பொசுக்கெனப் பற்றி னானே;
ஆத்திரம், மருட்சி பற்ற, அன்னையே  இவனின் செய்கை
பார்த்திடாய் என்றேன்; தாயும் பதற்றமாய் அலறி வந்தாள்

விரைவினில் மருட்சி நீங்கி, "விக்கலால் துன்பம் உற்றான்;
அரைநொடி அச்சம் கொண்டேன்; ஆதலால் அழைத்தேன்" என்றேன்;
உரைத்திடேன் நிகழ்ந்த சேதி; உண்மையை அறியா அன்னை
துரையவன் பிடரி நீவித் "துன்பமே நீங்கிற்(று)" என்றாள்.

இத்தனை நிகழ்வும் நோக்கி எத்தன்தன் ஓரக் கண்ணால்
வித்தக மாகப் பார்த்து மெல்லிய முறுவல் பூத்தான்;
சித்தமே இழந்த நானும் சிறியதோர் நகையைக் காட்டிப்
பித்தனைக் கள்வன் தன்னைப் "பிரிந்துநீ செல்வாய்" என்றேன்.

விளக்கவுரை:
தலைவி தோழியிடம் கூறுகிறாள்:
சிறு வயதில் நாம் தெருவில் விளையாடும் பொழுது, மணலால்
சிற்றில் கட்டி மகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கம் . ஒருநாள்
இதுபோல விளையாடிக் கொண்டிருந்த  பொழுது அங்கு வந்த
ஒருவன் தன் கால்களால் சிற்றிலைச் சிதைத்தான். நாம் சூடி
யிருந்த மலர்களைப் பறித்துப் பிய்த்தெறிந்தான். நாம் விளை
யாடும் பந்துகளை எடுத்துக் கொண்டு தெருவழியே ஓடினான்.
இப்படியாக நம்மை நோகச் செய்தான்  பட்டிக் காளை போன்றவன்.
ஒருநாள், அன்னையும் யானும் எங்கள் இல்லத்தில் இருந்த
பொழுது ஒருவன் வீட்டுக்குள் நுழைந்து "தாகமாக உள்ளது.
அருந்துவதற்குத் தண்ணீர் தருக!" என்றுரைத்தான். அவன்
வேறு யாரும் அல்லன்; நமக்கு ஏற்கெனவே துன்பம் தந்து
நம்மை நோகச் செய்தவன்தான். அன்னை உள்ளே சென்று
பொற்கலத்தில் தண்ணீர் கொண்டுவந்து "நீ இந்த நீரை
அவனுக்குப் பருகக் கொடு" என்று கூறினள். நானும் நீர்
நிரம்பிய பொற்கலத்தை அவனிடம் நீட்டினேன். அவன்
பழைய குறும்புக் காரன் என்று அப்பொழுது அறியேன்.
அவன் வளையல் அணிந்த என் கரங்களைப் பற்றிக்
கொண்டான். அவன் பிடி வலுவாக இருந்தமையாலும்,
மனம் தடுமாறியமையாலும் "அன்னையே! இவன் செய்த
செயலைப் பார்ப்பாய்"  என்றேன். அன்னையவள் மனம்
பதறியபடி அலறிக் கொண்டு வந்தாள். எனக்கு என்ன
நேர்ந்ததோ? உடனேஅவளிடம் உண்மையைக் கூறா
மல், "இவன் நீர் அருந்தும் பொழுது  விக்கினான். என்ன
வோ துயர் இவனை வாட்டுகிறது என்று எண்ணி உனை
அழைத்தேன்" என நவின்றேன்.அன்னை
இவன் பிடரியை நீவிவிட்டுச் சரியாகியது என்றாள். நான் உண்மையைச்
சொல்லாமல் பொய் பேசியதைக் கேட்ட அந்தக் குறும்பன்
என்னை ஓரக் கண்ணால் நோக்கி மெல்ல நகைத்தான்.
இவன் சிறந்த கள்வனின் மகன்; காதல் கள்வன். என்னை
என்னவென்று அழைப்பது? நானும் ஒருவகையில் கள்ளி
யே என நினைத்துப் புன்முறுவல் பூத்தேன்.








;

Friday 17 May 2019

மாதவியின் கானல் பாணி கனகர்--விசயர் முடித்தலை நெரித்தது.

மாதவி மடந்தை கானல் பாணி கனக,விசயர் தம்
முடித்தலை நெரித்தது.
(சிலப்பதிகாரம் வஞ்சிக் காண்டம்; நீர்ப்படைக் காதை)
Ui
சிலப்பதிகாரத்தின் மிகச் சுவையாக வடிவமைக்கப்
பட்ட பகுதி புகார்க் காண்டத்தில் பயின்று வரும் கானல்
வரிப் பகுதி. தித்திக்கும் தீந்தமிழ்ப் பாடல்களைக் கொண்ட
பகுதி. சிலப்பதிகாரக் கதையையே நகர்த்திச் செல்லும்
பகுதி என்று இளங்கோவடிகள் கருதியதால்தான் வஞ்சிக்
காண்டத்தில் மாடலன் என்ற அந்தணன் சேரவேந்தன் செங்
குட்டுவனைச் சந்தித்த பொழுது "மாதவிப் பெண் பாடிய
கானல்வரிப் பாட்டு, வடநாட்டு அரசர்கள் கனகர் மற்றும் விசயர்
பத்தினித் தெய்வம் கண்ணகிக்குச் சிலை வடிப்பதற்குத்
தேவையான கல்லைத்தலையில் சுமக்கும்படி நேரிட்டது"
என்று அம்மறையவன்  கூறியதாக இளங்கோ தெரிவிக்கின்றார்.
அடிகளின் ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டும் என்ற சிந்தனை
கானல்வரிப் பாட்டால் வலுப்பெறுகிறது.

கானல் என்பது கடற்கரைச் சோலையைக் குறிக்கும். வரி என்பது
இசை, இசைப்பாட்டு, கூத்து வடிவம் ஆகியவற்றைக் குறிக்கும்.
கடற்கரைச் சூழலில் பாடப்படும் இசைப் பாடல்  வரிப்பாடல் எனப்
படும். வரிப்பாடல்களில் பலவகைகள் உள்ளன. அவை வருமாறு:
1.ஆற்றை வருணிப்பது---ஆற்றுவரி
2.தலைவனின்  ஊர் மற்றும் பெயர் குறிப்பிட்டு வருணித்துப்
பாடுவது சார்த்துவரி அல்லது சாற்றுவரி.
3.யாப்புப் பாடலால் ஆகிய வரி மயங்கிசை கொச்சகக் கலிப்பா

4.பாடும் முறையால் பெயர் பெற்றவரி---முரிவரி; யாழ்முரிவரி;
வாய்முரிவரி.
5.கானலை வருணிப்பது கானல்வரி.
6.தலைவன் மற்றும் தலைவியின் உள்ள நிலையை(காதல்)
வருணிப்பது திணை நிலைவரி.
இன்னும் பலவகையான வரிப்பாடல்கள் உள்ளன.

கோவலனும் மாதவியும் இந்திரவிழா நிறைவு நாளன்று
காவிரிப்பூம்பட்டினத்து மக்களோடு கடலாடிவிட்டு ஒரு
கடற்கரைச் சோலையில்(கானலில்) இளைப்பாறிக்
கொண்டிருக்கும் பொழுது யாழை மீட்டிக் கோவலன்
கையில் கொடுத்த மாதவி அவனைப் பாடுமாறு குறிப்புக்
காட்டினாள். கோவலன் நல்ல கலையுள்ளம் கொண்டவன்.
வித்தை தெரிந்தவன். எனவே, உற்சாகமாகப் பாடத் தொடங்
கினான்.
"மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச்  செங்கோல் அதுவோச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய்  வாழி!  காவேரி!
கன்னி தன்னைப்  புணர்ந்தாலும்
         புலவா தொழிதல் கயற்கண்ணாய்!
மன்னும் மாதர் பெருங்கற்பென்(று)
         அறிந்தேன் வாழி! காவேரி!
பொருள்:வளையாத செங்கோல் ஆட்சி செலுத்தும்
சோழன் தெற்கே கன்னியாகுமரிவரை படைநடத்திச்
சென்று குமரியோடு சேர்ந்தாலும் அவனைவிட்டு நீங்காத
நினைவுடைய  காவிரியே! நீ வாழ்க! சோழன் குமரியோடு
சேர்ந்தாலும் அவனை விட்டு நீங்காமல் இருப்பதற்குக்
காரணம் உன் கற்புநிலை தவறாமையே ஆகும் என்பதை
அறிந்துகொண்டேன். காவிரியே, நீ வாழ்க.(காவிரியும்
குமரியும் பெண்களாக உருவகப் படுத்தப்பட்டு இப்பாடலில்
வருணிக்கப்பட்டன). இது ஆற்றுவரியாகும். வரிப்பாடல்கள்
ஒருபொருள குறித்து மூன்றடுக்கி வருவன.

புகார் நகரைப் பற்றிய வரிப்பாடல்:
"காதலர் ஆகிக்  கழிக்கானல்
     கையுறைகொண்(டு) எம்பின் வந்தார்;
ஏதிலர் தாமாகி யாமிரப்ப
     நிற்பதை யாங்(கு) அறிகோம் ஐய!
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
     இணைகொண்டு  மலர்ந்த  நீலப்
போதும் அறியாது வண்டூசல்
     ஆடும் புகாரே எம் ஊர்".
பொருள்:எம்மேல் காதல்கொண்டு கானலுக்கு எம்பின்னே
வந்தவர் இன்று அயலார் போலாகிவிட்டார். அவர் அன்பை
இரந்துகேட்கும் நிலைக்கு நாங்கள் வந்துவிட்டோம். இப்படிச்
செய்வார் என்று எப்படி நாங்கள் அறிவோம்? மடந்தையரின்
கண்களையும் நிலவைக் கண்டு மலர்ந்த குவளை மலர்களை
யும் நோக்கும் மக்கள் எது கண்? எது குவளை? எனக் குழம்பும்
பூம்புகார் நகரம் எங்கள் ஊராகும்.

"நிணம்கொள் புலால் உணங்கல் நின்றுபுள்
ஓப்புதல் தலைக்கீ  டாக
கணம்கொள் வண்டார்த்(து) உலாம்கன்னி
நறு ஞாழல் கையிலேந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னி
        மற்(று) ஆண்டோர்
அணங்குறையும் என்ப தறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ!
பொருள்: கடற்கரையில் காயப்போட்டிருக்கும் கருவாட்டி
னைத் தின்னவரும் பறவைகளை ஓட்டுவதற்காக ஒரு
பூங்கொத்தைக் கையில்கொண்டு பெண் ஒருத்தி நிற்கின்
றாள். இப்படி மணம் வீசும் கானலில் ஆளைக் கொல்லும்
தெய்வ அணங்கு இருக்கும் என்று தெரிந்திருந்தால் அங்கு
போயிருப்பேனா? அவள் காதலில் வீழ்ந்திருப்பேனா?

"ஓடும் திமில்கொண்  டுயிர்கொள்வர்  நின்ஐயர்;
கோடும் புருவத்(து)  உயிர்கொல்வை மன்நீயும்;
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்கு இழவல் கண்டாய்!
பொருள்:உன்னைப் பெற்ற பரதவர் மீன் பிடி படகு
களைக் கொண்டு கடல்மீது உயிர்கொல்வர்.ஆனால்
நீயோ வளைந்த உன் புருவ வில்கொண்டே பார்ப்பவர்
உயிரைக் கவர்கிறாய். இதனால் பிறர்படும் துயரை
நீ எண்ணுவதில்லை.உன் பெருமையையும் உணர்வ
தில்லை.உன் மார்பின் சுமையாலே துன்பப்படும் உன்
சிற்றிடையை இழந்துவிடாதே.
"கயல்எழுதி வில்எழுதிக் காரெழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்;
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அங்கணேர் வானத்(து) அரவஞ்சி வாழ்வதுவே."
பொருள்:கண்ணுக்காக மீனையும், புருவத்துக்காக வில்
லையும்  கூந்தலுக்காக மேகத்தையும் எழுதிய  இவள்
காமனின் (காதலில் ஈடுபட்டோரைக் கொல்லும்) கொலைத்
தொழிலையும் சேர்த்து எழுதிய இவள் முகம் முழு நிலவோ?
வானத்தில் இருந்தால் இராகு, கேது எனும்கோள்களால்
விழுங்கப்படலாம்என்று அஞ்சிப் பூமிக்கு வந்து வாழும் முழு
நிலவு தானோ?

கோவலன் பாடிய பாடல்கள் காதல் சுவை சொட்டச் சொட்ட
தேனில் தோய்த்தெடுத்த பலாச்சுளை போலத் தித்தித்தன.
ஆனால் அவன் வேறு ஒரு பெண்மேல் நாட்டமுடையவன்
போன்ற கருத்துத் தோன்றுமாறு பாடினமையால் அவன்
மீது ஐயம் கொண்ட மாதவி எதிர்வினையாற்ற எண்ணினாள்.
மனம், வாக்கு, காயத்தால் பரிசுத்தமானவள் என்ற போதும்,
ஊழ்வினை பிடர்பிடித்து உந்தியதன் விளைவாகத் தானும்
வேறு ஒரு  ஆடவன்மேல் காதல் கொண்டவள் போன்ற குறிப்புத்
தோன்று மாறு காமம் மிக்க கழிபடர் கிளவி என்னும் துறை
சார்ந்த காமச்சுவை சொட்டும் எதிர்ப்பாடல்களைப் பாடலானாள்.

"மருங்கு வண்டு சிறந்தார்ப்ப
       மணிப்பூ  வாடை அதுபோர்த்துக்
கருங்க யற்கண்  விழித்தொல்கி
       நடந்தாய்  வாழி, காவேரி!
கருங்க யற்கண்  விழித்தொல்கி
நடந்த வெல்லாம்  நின்கணவன்
திருந்து  செங்கோல்  வளையாமை
அறிந்தேன் வாழி, காவேரி!
பொருள்: ஆற்றின் இருகரையிலும்  பூக்களில் மொய்த்
துள்ள வண்டுகள் இன்னிசை பாட அழகிய பூக்களாகிய
ஆடையைப் போர்த்துக்  கொண்டு  மீன்போலும் அழகிய
கண்கள் விழித்தபடி ஓடித்திரிகின்ற  காவிரிப் பெண்ணே!
நீ இப்படி விழித்த விழி திறந்தபடி அசைந்தாடிப் பாய்வது,
உன்தலைவனாகிய சோழ வேந்தனின் நீதிதவறாத செங்
கோல் ஆட்சியினால்தான் என்பதை நான் அறிவேன்.
காவிரிப் பெண்ணே! நீ வாழ்க.  கோவலன்  பாடிய பாட்டில்
காவிரியோடு கங்கை, கன்னியாகுமரி முதலியவற்றையும்
சோழன் சேர்த்துக்  கொண்டாலும்  காவிரிப் பெண்ணே! நீ ஊடல்
கொள்ளமாட்டாய். ஏனென்றால் அதுவே நின் கற்புநிலை
தவறாமைக்குச் சான்றாகும், என்ற கருத்து வெளிப்பட்டது.
இதற்கு நேர்மாறாக மாதவி பாடிய பாட்டில் சோழமன்னன்
நீதி நெறி தவற மாட்டான் என்ற கருத்து வெளிப்பட்டது.
கோவலன் ஆடவர் எத்தனை பெண்டிரை மணந்தாலும்,
பெண்டிர் இச்செய்கையைப் பொறுத்துக்கொள்ளல் வேண்
டும் என்ற கருத்தைவலியுறுத்தினான். மாறாக, மாதவி
சோழமன்னன் நீதி, நெறி தவற மாட்டான் என்று உறுதிபடத்
தெரிவித்தாள்.

"மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம் யாங்(கு)
   அறிகோம் ஐய?
நிறைமதியும்  மீனும் என அன்னம் நீள்புன்னை அரும்பிப்
    பூத்த
பொறைமலி பூங்கொம் பேற வண்(டு) ஆம்பல் ஊதும்
    புகாரே எம்ஊர்."
பொருள்: வலிமைமிகு பரதர்கள் பிறர் அறியாமல் களவு
முறையில் கூடிய, பாக்கத்தில் உள்ள வளமிகு  பெண்டிரின்
அழகியகை வளையல்கள் கழன்று விழுந்து அவர்களின் களவு
ஒழுக்கத்தை ஊர் அறியச் செய்துவிடுவதை ஏழைகளாகிய
நாங்கள் எப்படி அறியாதிருப்போம்? அறிவோம்! அன்னப் பறவை
நீண்ட புன்னை மரக்கிளையிலே ஏறியிருக்க அன்னத்தையும்,
புன்னை மரத்தில் பூத்த பூக்களையும், வெண்மதியும் விண்மீனும்
என நினைத்து ஆம்பல் பூ மலரும்; அதனை வண்டுகள் மொய்க்கும்
புகார் எங்கள் ஊராகும்.

"தம்முடைய  தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ? விட்டகல்க;
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்."
பொருள்: என்னை நினைக்காமல் தனது இயல்பான அன்பு உளத்
தையும் தனது குதிரை பூட்டிய தேரையும் கூட அவர் விட்டுவிட்டுப்
போய்விட்டாரோ? இவைகளை விட்டுவிட்டார் என்றால் அவர் எம்
மையும் விட்டுவிட்டுப்  போகட்டும்!  அழகிய மெல்லிய பூங்கொத்து
களே! அன்னப் பறவைகளே! அவர் நம்மை மறந்தாலும்,  நாம்
அவரை மறக்க மாட்டோமே!
"வாரித் தரள நகைசெய்து வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில் திரை உலாவு கடல்சேர்ப்ப!
மாரிப் பீரத்(து) அலர்வண்ணம் மடவாள் கொள்ளக்
   கடவுள்வரைந்(து)
ஆரிக் கொடுமை செய்தார்என்  றன்னை அறியின்
   என்செய்கோ?
பொருள்: வீடுகளின் முன்பாக வலைகள் காயப் போட்டிருப
பர். கடல்முத்து நகையோடு செம்பவள வாய்திறந்து பேசும்
பரதவர் வாழும் சேரிக் குடியிருப்புகள் மிகவுடைய கடற்
கரையின் நெய்தல் நிலத் தலைவனே! என்மேனியானது
கார்காலத்தில் மலர்கின்ற பீர்க்கம்பூ நிறம் கொண்டால்
(பசலை நிறம்) ஐயோ! யாரால் வந்ததித் தீமை என்று ஊரில்
உள்ள கடவுளரை யெல்லாம் என் அன்னைவேண்டி வருந்து
வாள். என் அன்னைக்குத் தெரிந்தால் ஊர் முழுக்கத் தெரியத்
தொடங்கும். கட்டுவிச்சி மூலம் கட்டுப் பார்ப்பாள்(குறி
சொல்பவளிடம் குறி கேட்பாள்;) முருகனுக்கு ஆட்டையோ
கோழியையோ பலி கொடுப்பாள். என் களவு ஒழுக்கம் தெரிந்து
விட்டால் இற்செறித்து விரைவில் வரைவு கடாவ வழி மேற்
கொள்வாள். நான் என்ன செய்வேன்?

"கதிரவன் மறைந்தனனே; காரிருள் பரந்ததுவே;
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர்  உகுத்தனவே;
புதுமதி புரைமுகத்தாய்! போனார்நாட் டுளதாம்கொல்?
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தவிம் மருள்மாலை"
பொரூள்:பகலவன் மறைந்துவிட்டான். காரிருளும்
வந்து விட்டது. குவளைமலர் போலும் கண்கள் வருந்திக்
கண்ணீர்  சிந்தியபடி யுள்ளன.முழுநிலாப் போலும்
முகமுடைய பெண்ணே!  முழு நிலவை வெளியே
அனுப்பிவிட்டுப் பகலவனை விழுங்கும் இந்த மயக்
கும் மாலைப் பொழுது நமைப் பிரிந்து போன தலை
வர் நாட்டிலும் இருக்கும் அல்லவா?

"அடையல் குருகே! அடையலெம்  கானல்;
அடையல் குருகே! அடையலெம் கானல்;
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்(கு) உறுநோய் உரையாய்;
அடையல் குருகே! அடையலெம் கானல்".
பொருள்: செங்கால் நாராய்! செங்கால் நூராய்! இனி
எங்களது குளிர்மரச்  சோலையில்வந்து தங்காதே.
சிதறிவிழும் அலைகடல் தவழும் நெய்தல்நிலத்
தலைவனாகிய என் காதலனிடம் போய், நான் படும்
துயரம், அவரால் வந்த பிரிவுத் துன்பம் என்னும் நோயை
எடுத்துச் சொல்ல முடியாத நீ இங்கெதற்கு வருகிறாய்?
நாரையே! இங்கு நீ இனி வர வேண்டா."

இப்படியாகக் காமம் மிக்க கழிபடர் கிளவியைப் பாடிய
மாதவி கோவலனுக்குச் சந்தேகத்தைக் கிளப்பும்
வகையில் கானல்வரி எதிர்ப்பாட்டுகளைப் பாடி முடித்
தாள். வினை விளையும் காலம் நெருங்கிய  தாலும்,
ஊழ்வினை உறுத்துவந்து ஊட்டியதாலும், கோவலன்
"கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்" என்று
சொல்லித் தன் பணியாட்களோடு அவ்விடத்தை விட்டு
அகன்றான். இதனைத் தொடர்ந்து பல நிகழ்வுகள்
நடந்தன. கண்ணகியை அடைந்து அவளோடு மது
ரைக்குச் சென்றான். தன் மனைவியின் சிலம்பை
விற்க முயலும்போது களவுக் குற்றம் சுமத்தப்பட்டுத்
தண்டிக்கப்  பட்டான். கணவன் கொலையுண்ட பிறகு
கண்ணகி பாண்டியனோடு வாதாடித்தன் கணவன்
கள்வன் அல்லன் என நிரூபித்தாள். பின்னர் மதுரை
நகரத்தை எரியூட்டினாள். நடைப் பிணம் போல வைகைக்
கரையோரமாக நடந்தே சென்று திருச்செங்குன்றம்
மலையுச்சியை அடைந்தாள். அங்கிருந்து விண்ணுலகம்
சென்றாள் என இளங்கோவடிகள் தெரிவிக்கின்றார்.

சேரவேந்தன் கண்ணகிக்குச் சிலை எழுப்ப முடிவு
செய்து வடதிசை நோக்கிப் படையெடுத்துச் சென்
றான். ஆங்குள்ள ஆரிய மன்னர்களை வென்று
கனகர் மற்றும் விசயர் தலைமீது கண்ணகி சிலைக்
கான கல்லை ஏற்றிக் கொண்டுவந்தான். கண்ணகிக்கு
கோட்டம் எழுப்பி அதனுள்ளே இமயமலையிலிருந்து
எடுத்து வந்த கல்லால் வடித்த கண்ணகி சிலையை
நாட்டினான். இவ்வாறாக மாதவி பாடிய கானல்வரிப்
பாடல் கனக விசயர் முடித்தலை நெரித்தது. வாழ்க
கண்ணகி புகழ்! வளர்க சிலப்பதிகாரப் பெருமை!











"





.




Saturday 4 May 2019

"பத்தினிக் கடவுளைப் பரசல் வேண்டும்".

குன்றக் குரவையும், பத்தினிக் கோட்டமும்.

குற்றமற்ற கோவலன்  அநியாயமாகத் திருட்டுக்
குற்றம் சுமத்தப்பட்டுத் தண்டனையாகக்  கொலை
செய்யப்பட்டதைக் கேள்வியுற்ற கண்ணகி மிகுந்த
சினத்தோடு பாண்டியன்  நெடுஞ்செழியனின் அர
சவைக்குச் சென்று  வேந்தனிடம் வழக்காடித் தன்
கணவன் கோவலன் குற்றமற்றவன்  என நிலைநாட்
டினாள்.  தான் தவறு செய்துவிட்டதை  யுணர்ந்த
பாண்டிய வேந்தன் குற்ற உணர்ச்சியால் உயிர்
துறந்தான். கணவன் இறந்ததை யறிந்த கோப்பெருந்
தேவியும் அவன் காலடியில் உயிர்நீத்தாள். சினத்தின்
உச்சத்தில் இருந்த கண்ணகி, மதுரை நகரை எரியூட்டி
னாள். பின்னர் கால்போன போக்கில்  இரவு பகல் பாராது
கண்ணீர் சிந்தியபடியே வைகையாற்றின் கரையை
அடைந்து மேடென்றும் பள்ளமென்றும் பாராமல் நடந்து
நடந்து திருச்செங்குன்றம் மலையை அடைந்து அதன்
மீது ஏறினாள். மலைமீது பூத்துக் குலுங்கும் ஒரு வேங்கை
மர நிழலின் கீழ்வந்து நின்றாள். கண்ணீர் உகுத்தபடியே
பதினான்கு நாட்களைக் கழித்தாள். பதினான்காம் நாள்
தன் கணவனின் நினைவைப்  போற்றித் தொழுதாள். அப்
பொழுது வான் உலகத்தினர் அங்கு தோன்றிக் கண்ணகி
மீது மலர் மாரி பொழிந்தனர். பின்னர் தங்களுடன் வந்த
கோவலனையும் கண்ணகியையும் ஒருசேர அழைத்துக்
கொண்டு வானுலகுக்குத் திரும்பிச்  சென்றனர்.

இந்த வியத்தகு காட்சியைக் கண்ட மலைவாழ் மக்கள் அப்
பொழுது அப்பகுதிக்கு மலைவளம் காண வந்த சேரவேந்தன்
செங்குட்டுவனிடம்  விரிவாக எடுத்துரைத்தனர். அவ்வமயம்
உடனிருந்து இந்த நிகழ்ச்சியைக் கூர்ந்து கவனித்துக் கொண்
டிருந்த தண்டமிழ்ப் புலவர் சீத்தலைச் சாத்தனார் இது தொடர்
பான எல்லாச்  செய்திகளையும்  விளக்கமாகக் கூறினார்.

உடனே, சேரவேந்தன் செங்குட்டுவன் தன்னுடன் வந்த  தன்
மனைவி இருங்கோ வேண்மாளை நோக்கி
"உயிருடன் சென்ற ஒருமகள் தன்னினும்
செயிருடன் வந்தஇச்  சேயிழை தன்னினும்
நன்னுதல் வியக்கும் நலத்தோர் யார்?"
என வினவ, உடனே இருங்கோ வேண்மாள்
"காதலன் துன்பம் காணாது  கழிந்த
மாதரோ பெருந்திரு  உறுக; வானகத்(து)
அத்திறம் நிற்க;நம்  அகல்நா(டு)  அடைந்தவிப்
பத்தினிக்  கடவுளைப்  பரசல்  வேண்டும்"
என்று மொழிந்தாள். (பரசல்--வணங்கி வழிபடல்).
அரசி இவ்வாறு கூறியவுடன் செங்குட்டுவனும், அமைச்சரும்,
மற்றும் பிற அதிகாரிகளும் கலந்து ஆலோசித்துக் கண்ணகிக்குக்
கோட்டம் எழுப்ப முடிவு செய்தனர். கண்ணகி கோட்டத்துக்குச்
சிலை செய்யத் தோவையான கல்லை  இமயத்திலிருந்து எடுத்து
வரத் தீர்மானித்தனர். அதன்படி செங்குட்டுவன் வடதிசைநோக்கிப்
படையெடுத்துச் சென்றான். வழியில் எதிர்த்துப் போரிட்ட மன்னர்
களைத் தோற்கடித்து இமயமலையிலிருந்து பொருத்தமான கல்லைத்
தேர்ந்தெடுத்து அதனைக் கங்கை நீரில் நீராட்டித் தன்னிடம் தோல்வி
யடைந்த கனக விசயர் என்ற இரு ஆரிய மன்னர்கள் தலையில் ஏற்றிக்
கொண்டுவந்தான். வஞ்சி நகரம் திரும்பிய  செங்குட்டுவன் உடனே
கண்ணகி கோட்டத்தைக் கட்டுவித்தான். அதற்குள்  இமயத்திலிருந்து
கொண்டுவநத கல்லினால்  சிலை வடித்து அதனை நிறுவச்செய்தான்.

இதற்கிடையே, கோவலனுக்கும் கண்ணகிக்கும் நேர்ந்த துயரங்களைக்
கேள்விப்பட்ட கோவலன் தந்தைமாசாத்துவான் தன் சொத்தையெல்லாம்
தான  தர்மம் செய்துவிட்டுத் துறவு மேற்கொண்டான். கோவலனுக்குத்
தாய் அதிர்ச்சியில் உயிர்நீத்தாள்.  இந்த நிகழ்வையெல்லாம் கண்டும்
கேட்டும் வருந்திய கண்ணகியின் செவிலித் தாயும், தோழியும், கடவுட்
சாத்தனை மணந்து வாழ்ந்துவரும் தேவந்தி என்பவளும் ஆகிய மூவரும்
ஒன்று கூடிக் கண்ணகியைக் காண மதுரைக்கு வந்தனர். அங்கே அடைக்
கலம் கொடுத்த ஆயர்குலப் பெண் மாதரி துக்க மிகுதியால்  தீக்குளித்து
இறந்த செய்தியை அறிந்து மாதரி மகள் ஐயை என்பவளை அழைத்துக்
கொண்டு திருச்செங்குன்றம் மலைக்கு வந்தனர்.கண்ணகி கோட்டத்துக்
குள் நுழைந்து செங்குட்டுவனிடம் நிகழ்வனைத்தையும் விவரித்தனர்.
"முடிமன்னர் மூவரும் காத்தோம்பும்  தெய்வ
வடபேர்  இமய  மலையிற்  பிறந்து
கடுவரல் கங்கைப் புனலாடிப் போந்த
தொடிவளைத்  தோளிக்குத்  தோழிநான் கண்டீர்;
  சோணாட்டார்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:சேர, சோழ, பாண்டியர் என்னும் முடியுடை
மூவேந்தரும்  காத்து வளர்த்த கண்ணகிக்குத் தோழி
நான். சோழவளநாட்டில் பிறந்த பெண்பாவை கண்
ணகிக்குத் தோழி ஐயா, நான் தோழி என அறிக.
இவ்வாறு தோழி தன்னை அறிமுகம் செய்துகொண்டாள்.

"மடம்படு  சாயலாள் மாதவி  தன்னைக்
கடம்படாள் காதல் கணவன்  கைப்பற்றிக்
குடம்புகாக் கூவல்  கொடும்கானம்  போந்த
தடம்பெரும் கண்ணிக்குத்  தாயார்நான் கண்டீர்;
  தண்புகார்ப் பாவைக்குத் தாயார்நான் கண்டீர்". 
பொருள்: மாதவிமேல் பொறாமை, சினம் எதுவும்
கொள்ளாமல் கொண்ட கணவனோடு குடம் நுழை
யாத(நீர் எடுப்பார் இன்றிப் பாழடைந்த) கிணறு
கள் இருக்கும் காட்டு வழியில் நடந்து வந்த கண்
ணகிக்குச் செவிலித் தாய் நான் கண்டீர்; செவிலித்
தாய் ஐயா, இதை அறிவீர்.

"தற்பயந்தாட்(கு) இல்லை; தன்னைப் புறங்காத்த
எற்பயந்தாட்கும்  எனக்கும் ஓர்சொல் இல்லை;
கற்புக் கடம்பூண்டு  காதலன் பின்போந்த
பொற்றொடி  நங்கைக்குத் தோழிநான் கண்டீர்;
   பூம்புகார்ப்  பாவைக்குத்  தோழிநான்  கண்டீர்".
பொருள்:தன்னைப் பெற்ற தாய்க்கும் எதுவும்
கூறாமல், தன்னை வளர்த்துக் காத்த என்தாய்க்கும்
எனக்கும்  எதுவும் கூறாமல், கற்பையே அணிகலன்
என மதித்துக் கணவன் பின்னே புறப்பட்டு வந்த
கண்ணகிக்குத் தோழி நான்; பூம்புகார்ப் பாவைக்
குத் தோழி ஐயா, இதனை யறிக.

இவ்வாறாகச் செவிலித் தாயும், அவள் மகளும்(கண்
ணகிக்குத் தோழி) புலம்பி அரற்றினர். உடனே,
தேவந்தி என்பவள் உரைக்கலானாள்.
"செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
எய்த  உணரா(து)  இருந்தேன்;மற் றென்செய்தேன்?
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர்வீவும் கேட்டாயோ? தோழி,
    அம்மாமி  தன்வீவும் கேட்டாயோ? தோழி".
பொருள்: நற்றவம் புரியாத பாவி நான். அன்றொரு
நாள் தீக்கனாக் கண்டதாக நீ சொன்ன பொழுதே
அதனைப் பற்றி மேற்கொண்டு விசாரிக்காமல் விட்டு
விட்டேனே. துயர் மிகுதியாலும் சினத்தாலும்  நீ
உன் ஒரு முலையைத்  திருகி எறிந்து மதுரையை எரி
யூட்டிய செய்தி கேட்டவுடன்  உனக்குத் தாயும்,
பிற்பாடு மாமியாரும் இறந்த செய்தியையும் நீ கேள்விப்
பட்டாயோ? தோழி, கேள்விப் பட்டாயோ? மேலும்,
"மாசாத்து வான்துறவும் கேட்டாயோ? அன்னை,
மாநாய்கன் தன்துறவும் கேட்டாயோ? அன்னை".
"மாதவி தன்துறவும் கேட்டாயோ?  தோழீ,
மணிமே  கலைதுறவும்  கேட்டாயோ? தோழீ".
"வையெயிற்(று) ஐயையைக் கண்டாயோ? தோழீ,
மாமி மடமகளைக் கண்டாயோ? தோழீ".

இவ்வாறெல்லாம் பாடிப் புலம்பி அரற்றித் தீர்த்த
வுடன் வானிலே ஒரு பெண் உருவம் தோன்றியது.
சேர வேந்தன் செங்குட்டுவன் உடனே அதிசயப்
பட்டான்."பொன்னாலான சிலம்பையும் இன்னும் பல
அணிகலன்களையும் சூடிய மின்னல் கொடி போல
ஒரு பெண்ணுருவம் விண்ணில் தெரிகிறதே என்று
வியந்து கூறினான். கண்ணகித் தெய்வம் பேசினாள்:
"தென்னவன் தீதிலன்; தேவர்கோன் தன்கோவில்
நல்விருந்(து) ஆயினான்; நானவன் தன்மகள்;
வெல்வேலான் குன்றில் விளையாட்டு யானகலேன்;
என்னோடும் தோழிமீர் எல்லீரும் வம்மெல்லாம்".
கண்ணகி தன்னைப் பாண்டியன் மகளென்று கூறிக்
கொண்டதால் பாண்டியன் மீதிருந்த அவளது சினம்
தணிந்து விட்டதை யறிந்த செங்குட்டுவன் உடபட
அங்கேயிருந்த அனைவரும் கண்ணகியையும் பாண்
டியனையும் வாழ்த்திப் பாடினார்கள். பின்னர் சோழ
வேந்தனையும் சேர வேந்தனையும் ஏற்ற முறையில்
வாழ்த்திப் பாடினர்.
"வீங்குநீர் உலகாண்ட விண்ணவர் கோன்தன்
ஓங்கரணம் காத்த உரவோன்யார் அம்மானை;
ஓங்கரணம் காத்த உரவோன் உயர்விசும்பில்
தூங்கெயில் மூன்றெறிந்த  சோழன்காண் அம்மானை;
 சோழன் புகார்நகரம் பாடேலோர் அம்மானை".
பொருள்:கடலே எல்லையாக உடைய இந்த நிலவுலகை
ஆட்சிசெய்த, வானவர் தலைவன் இந்திரனது கோட்டை
மதிலைக்காத்த கொற்றவன் யார்?  வானில் வலம்
வந்த மூன்று கோட்டைகளையும் அழித்த(தூங்கெயில்
எறிந்த தொடித்தோள் செம்பியன் என்னும்) சோழமன்
னன் அவன். அவனது புகார் நகரை வாழ்த்திப் பாடி
அம்மானை விளையாட்டை ஆடுவாய் பெண்ணே!
"பொன்னி லங்கு பூங்கொடி பொலம்செய் கோதை
வில்லிட
மன்னி லங்கு மேகலை கள்ஆர்ப்ப  ஆர்ப்ப  எங்கணும்
தென்னன் வாழ்க வாழ்க வென்று சென்று பந்த
டித்துமே;
தேவர் ஆர  மார்பன் வாழ்க வென்று  பந்த
     டித்துமே".
பொருள்:பொற்கொடி போன்ற அழகுடையவளே! பொன்
னாலான மாலைகள் ஒளிவீச, மேகலைகள் ஒலியெழுப்ப,
ஞாலமெங்கும் தென்னவன் பாண்டியன் வாழ்க என்று
வாழ்த்திப் பந்தடிப்போம். இந்திரன் அளித்த பூணாரம்
தவழும் மார்பன் வாழ்க என்று பந்தடிப்போம், வா.

"ஓரைவர் ஈரைம்  பதின்மர் உடன்றெழுந்த
போரில் பெருஞ்சோறு  போற்றாது தானளித்த
சேரன் பொறையன் மலையன் திறம்பாடிக்
கார்செய் குழலாட ஆடாமோ ஊசல்;
 கடம்பெறிந்த  வாபாடி  ஆடாமோ  ஊசல்."
பொருள்: பாண்டவர் ஐவரும்  கௌரவர் நூற்று
வரும்  உக்கிரமாகப் போர்புரிந்த பொழுது இரண்டு
பக்கத்துப் படைகளுக்கும் அளவின்றிப் பெருஞ்சோறு
படைத்த சேரன்-பொறையன்-மலையன் புகழ்பாடிக்
கருங்கூந்தல் விரிந்தாட ஊஞ்சல் ஆடுவோம்; கடலிற்
கடம்பை அழிந்த கொற்றவன் புகழ்பாடி ஊஞ்சல் ஆடு
வோம்.

கண்ணகிக்குக் கோவில் கட்டுவித்த செங்குட்டுவன்,
கோவிலில் அன்றாடம் பூசை மற்றும் விழா நடக்க
இறையிலியாக நிலம் வழங்கி நாடோறும் விழாச்
சிறப்பு விளங்கல் வேண்டும் என்ற ஆணை பிறப்
பித்தான். பூவும் அகில் புகையும் நறுமணப் பொருள்
களும் கொண்டு கண்ணகி தெய்வத்துக்குப் பூசை
செய்க என்று தேவந்திகைக்குக் கட்டளையிட்டான்.
கண்ணகி கோட்டத்தை வலமாக மூன்று முறை சுற்றி
வந்து தேவியை வணங்கிப் பணிந்து நின்றான். அங்கு
குழுமியிருந்த சிறையிலிருந்து விழாவை முன்னிட்டு
விடுவிக்கப்பட்ட மன்னர்களும், குடகு நாட்டவரும்,மாளுவ
மன்னனும், இலங்கையரசன் கயவாகுவும் "எங்கள் நாட்
டில் செங்குட்டுவன் பிறந்தநாள் விழா எடுக்கும் போது,
கண்ணகித் தெய்வமே! நீ தவறாமல் காட்சி தந்து அருளல்
வேண்டும்" என்று வணங்கி வேண்டினர். அப்பொழுது,
"நீங்கள் கேட்ட வரம் தந்தேன்" என்று வானில் ஒரு குரல்
ஒலித்தது. இப்படியாகக் கண்ணகி வழிபாடு பல இடங்
களுக்கும் பரவியது. மதுரையை எரியூட்டிய கண்ணகி
கோபத்தின் உச்சத்தில் இருந்தாள். பிற்பாடு கணவனுடன்
விண்ணுலகம் சென்ற நாளிலிருந்து சினந்தணிந்து அன்பும்,
அமைதியும் கொண்டவளாக மாறினாள். தன்னை நாடிவரும்
பக்தர்களுக்கு வேண்டியவரம் நல்கும் தெய்வமாக மாறிவிட்
டாள். கண்ணகி தெய்வத்தின் புகழ் ஓங்குக! பத்தினிக்
கோட்டத்தைப்  போற்றிடுவோம்.






























Monday 22 April 2019

புகையிலை வரமா? சாபமா?--சாபமே!

புகையிலை வரமா? சாபமா?--சாபமே!

புகையிலை நமது நாட்டில் பழங்காலத்திலிருந்தே
பயன்படுத்தப்பட்டு வந்த பொருள். சுருட்டு, பொடி,
பீடி, சிகரெட்டு, ஊது குழாய்(சிகரெட் பைப்), ஹூக்கா,
வெற்றிலையோடு சேர்த்தோ, சேர்க்காமலோ வாயில்
போட்டு மெல்லுவது முதலான பலவகைகளில் புகை
யிலை  பயன்படுத்தப்பட்டு வந்தது.இருபதாம் நூற்றாண்
டின் பிற்பகுதியிலிருந்து மருத்துவர்கள் புகையிலை
புற்று நோய் உருவாக வழி வகுக்கும் என்று கூறி அரசு
மூலமாக அதன் பயன்பாட்டைக் குறைக்க முயற்சி மேற்
கொண்டு வருகிறார்கள். புகையிலைக்கு எதிராகப் பெரிய
அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. புகையிலை
முற்றிலும் ஒழிக்கப்படா விட்டாலும், அதன் பயன்பாடு மிகவும்
குறைந்துவிட்டது.

கடந்த பதினெட்டு, பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டு
களில் புகையிலைப் பொருள்களில் சுருட்டு, பொடி மிகவும் புகழ்
பெற்று விளங்கின. கிராம தேவதைகளுக்குச் சுருட்டு படைத்து
வழிபடுவது வழக்கமாயிற்று. கிராமங்களில் அனைவருமே (சில
பெண்கள் உட்பட) சுருட்டுப் பிடித்தல் இயல்பாக நடந்தது. நகரங்
களில் பொடிப் போடும் வழக்கம் இயல்பாக நடைபெற்றது. சில
புலவர்கள் பொடிப் போடுவதை மிகவும் இரசித்துப் பாடியுள்ளனர்.
"ஊசிக்  கழகு  முனைமழுங் காமை; உயர்ந்தபர
தேசிக்  கழகிந் திரியம்  அடக்கல்  தெரிகலன்சேர்
வேசிக்  கழகின்  னிசை;பல  நூல்கற்ற  வித்வசனர்
நாசிக் கழகு  பொடியெனக்  கூறுவர் நாவலரே".
இந்தப் பாடலில் கூறியவாறு, கல்வி கற்ற அறிஞர்
பெருமக்களும், கல்வி கற்றுக் கொண்டிருக்கும்
மாணாக்கர்களும் பொடி போடுவதை விரும்பினர்.
மகாவித்துவான் மீனாட்சிசுந்தரனாரின் மாணவர்
தியாகராசனார் திருவானைக்காவில் இருந்த ஒரு
பொடிக் கடையைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
"கொடியணி மாடம் ஓங்கிக் குலவுசீர் ஆனைக் காவில்
படியினில் உள்ளார் செய்த பாக்கியம் அனையான் செங்கைத்
தொடியினர் மதனன் சோம சேந்தரன் கடையிற் செய்த
பொடியினைப் போடா மூக்கு புண்ணியம் செய்யா மூக்கே".

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் பத்தொன்பதாம்
நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்த சீனிசர்க்கரைப்புலவர்
என்ற புலவர் 'புகையிலை விடு தூது' என்னும் சிற்றிலக்கியத்தை
இயற்றியுள்ளார். பழனி முருகனிடம் மனத்தைப் பறிகொடுத்த
ஒரு பெண் புகையிலையை அவர்பால் தூது அனுப்பியதாகப்
பாடப்பட்டுள்ளது. 59 கண்ணிகள்  கொண்ட அந்த நூலில் 53
கண்ணிகள் புகையிலையின் மகத்துவத்தை எடுத்துரைப்பதாகவும்
ஏனைய 6 கண்ணிகள்  முருகன் பெருமையைப் பேசுவதாகவும்
இயற்றப்பட்டுள்ளது. அதில் நூலாசிரியர் 'புகையிலை' என்ற பெயர்க்
காரணத்தைச் சுவைபட எடுத்தியம்புகின்றார்.

புகையிலை வரலாறு(நூலாசிரியர் கருத்துப்படி):
"வந்த  புகையிலையுன் மாமகத்து  வங்களைநான்
எந்த விதமென் றியம்புவேன்?--விந்தையதாய்
மூவரொரு வர்க்கொருவர் முன்னொருகால் வாதாகித்
தேவ  சபையகத்துச் செல்லவே--மேவிவிண்ணோர்
உங்கள்விவ  காரம்  உரைப்போம்பின்  னாகவென்று
தங்குமொவ்வோர்  பத்திரம  தாகவே--அங்கவர்பாற்
கூவிளமும்  பைந்துளவுங்  கொள்ளும்  புகையிலையும்
தாவளமாய்க்  கைகொடுத்துத் தாமனுப்ப--ஆவலுடன்
பின்மூவர்  அந்தப்  பெரும்சபையில்  வந்தவுடன்
முன்கொடுத்த பத்ர முறைப்படியே--அன்பினுடன்
தாருமென்ற போதிற்  சதாசிவனார்  பத்திரமும்
கார்வண்ணர்  பத்திரமும்  காணாமல்--நேரான
கஙகை யிடத்தும்  கவின்பாற்  கடலிடத்தும்
பொங்கும்அலை  தான்கொண்டு  போகவே--இங்கிதம்சேர்
ஓகையுட  னேபிரமன்  உற்ற  நமதுபத்ரம்
போகையிலை  யென்று  புகன்றுடனே--வாகுகலை
வாணிதிருக்  கையினின்றும் வாங்கிஇந்தா என்றுரைக்க
நாணியிரு  வோரும்  நயவாமல்--பூணும்
வழக்கிழக்கச்  செய்தந்த  வானோர்முன்  வெற்றி
விளக்கவுன்  னாமம்  விளக்கத்--துளக்கமொடு
ப்ரம்மபத்ரம்  என்றெவரும் பேசவே  வந்துதித்த
தன்மப்  புகையிலையே  சாற்றக்கேள்--............"

பொருள்:
விண்ணுலகில் மும்மூர்த்திகளுக்குள்ளே ஒரு விவாதம்
கிளம்பியது.  தமக்குள் உயர்ந்தவர் யார்? என்னும் வழக்கைத்
தீர்க்கத் தேவருலகம் சென்று தேவர்களிடம் முறையிட்டனர்.
"விவாதத்தைப் பிற்பாடு கவனித்துக் கொள்ளலாம்" எனக்
கூறிய தேவர்கள் மும்மூர்த்திகளிடம் தலைக்கு ஒரு
மூலிகை என்ற கணக்கில் சிவனிடம் வில்வமும்,
நாராயணனிடம் துளசியும், பிரம்மனிடம் பெயரிடப்
படாத மூலிகையும் கொடுத்துவிட்டு. மறுநாள் வரு
மாறு தெரிவித்தனர்.  மறுநாள் தேவருலகம் சென்ற
மும்மூர்த்திகளிடம்  முந்திய நாளில் கொடுக்கப்பட்ட
மூலிகையைப் பற்றிக் கேட்டனர். சிவன் தனது வில்வத்
தைக் கங்கை நதியின் அலை கொண்டுபோய்விட்டதாக
வும், நாராயணன் தனது துளசியைப் பாற்கடலின் அலை
கொண்டுபோய்விட்டதாகவும் கைவிரித்தனர். பிரம்மன்
தனது மூலிகையைத் தன் நாவில் வசிக்கும் வாணியிடம்
கொடுத்து வைத்திருந்ததால் அவரிடம் கேட்டு வாங்கித்
தேவர்களிடம் ஒப்படைத்து "எமது மூலிகை எங்கும்
போகையிலை; எம் கைவசமேயுள்ளது" என்று நெஞ்சை
நிமிர்த்திக் கொண்டு சொன்னார். சிவனும்,  நாராயண
னும் நாணி நின்றனர். பிரம்மனின் மூலிகை போகையிலை,
மருவிப் 'போயிலை' என்றாகிப் பின்னர் 'புகையிலை' என்று
பெயர் பெற்றது. பிரம்மபத்ரம் என்ற பெயரும் பெற்றது.
இவ்வாறாகப் 'புகையிலை'  என்னும் பெயர் தோன்றக் காரண
மான புராணக்கதை ஒன்றைப் புலவர் எடுத்தியம்பி  அதன்
பெருமையைப் பறைசாற்றியுள்ளார். என்னே அவரது புகை
யிலை மீதான பக்தி!

ஆனால், மருத்துவ  உலகம் தொடக்க காலத்திலிருந்தே புகை
யிலையின்  தீய விளைவுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கை செய்து
வந்துள்ளது. சித்த மருத்துவத்தில் ஒரு பாடல் உண்டு.
"மருந்தை  முறித்துவிடும்; வாய்வறளச் செய்யும்;
திருந்து  பலவீனம்  சேர்க்கும்--பொருந்துபித்தம்
உண்டாக்கும்; விந்தழிக்கும் ; ஓது  புகையிலையைக்
கண்டார்க்கும்  ஆகாது  காண்."

புகையிலை மற்றும் பீடி, சிகரெட்டு, பொடி முதலான புகை
யிலையிலிருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் புற்று
நோய் உருவாக வழிவகுக்கின்றன என்று மருத்துவர்
கள் எச்சரிக்கின்றனர். புகையிலையைத் தொடர்ந்து
வாயில் போட்டு மெல்லுபவர்கள் கன்னப்புற்றுநோயால்
அவதியுறுவதாக மருத்துவர்கள் கவலைப்  படுகின்றனர்.

புகையிலையால் உருவாகும் தீய விளைவுகளை உணர்ந்த
அரசு மிகப் பெரிய அளவில் அதனை எதிர்த்து விளம்பரம்
செய்து அதன் பயன்பாட்டை அறவே தவிர்க்குமாறு அறிவு
றுத்தி வருகின்றது.  இவற்றையெல்லாம் உற்றுநோக்கும்
போது, புகையிலை  மனித குலத்துக்குக்  கிடைத்த  வரமன்று;
சாபமே  என்னும் உண்மை தெளிவாகின்றது. எனவே, நாம்
அனைவரும் புகையிலையையும், அதனால் உருவாக்கப்படும்
பொருள்களையும் அறவே விலக்கி உடல்நலத்தைப் பேணுதல்
மிக மிக அவசியமானது.

அருஞ்சொற்  பொருள்:
தாவளம்==பற்றுக்கோடு

பார்வை: தமிழ்த் தாத்தா உ..வே.சாமிநாதையர் பதிப்பித்த
புகையிலை விடு தூது(இயற்றியவர்:சீனிசர்க்கரைப்புலவர்)