Friday 19 August 2022

திருத்தார்நன்(று) என்றேன் தியேன்.

 யானையின் நெற்றிப் பட்டம் அழகா? யானை அழகா? யானைமேல்

வீற்றிருக்கும் பாண்டியன் மார்பில் இலங்கும் தார் அழகா?


வழக்கப்படி பாண்டிய வேந்தன் உலாவருகின்றான். உடன் அவன்

பரிவாரங்களும் வருகின்றனர். மிடுக்காக யானை மேல் வீற்றிருந்து

உலாவரும் பாண்டிய வேந்தனைக் கண்கொட்டாமல் பார்த்து அவன்

வீரத்தோற்றத்தையும் ஒளிவீசும் முகப் பொலிவையும் கண்டு வீதியின்

இருபுறமும் நிற்கும் பொதுமக்கள் வியந்தும் புகழ்ந்தும் பேசிக் கொள்

கின்றனர்.  மாட மாளிகைகள் செறிந்திருக்கும் மதுரை வீதி. பாண்டிய

வேந்தனின் உலாவைக் கண்டு களிக்கப் பருவப் பெண்கள் மூவர் நின்று

கொண்டிருக்கின்றனர்.


பாண்டியனின் யானை அப்பெண்களின் அருகே வந்துவிட்டது.மூவரில்

ஒருத்தி யானைக்கு அணிவிக்கப்பட்டுள்ள  பொன்னாலான நெற்றிப்பட்டத்

தால் ஈர்க்கப்பட்டாள். "யானையின் நெற்றிப் பட்டம் மிக அழகாயுள்ளது"

என்று வியந்து கூறினாள். உடனே மற்றொருத்தி "இல்லை யில்லை;

யானை மிக அழகாகவும் பொலிவுடனும் தோன்றுகிறது. அதன் அழகு

கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது" எனச் சொன்னாள். மூன்றாவது

பெண் '"யானையின் பிடரி மீது மிடுக்காக வீற்றிருந்து ஒளிரும் வேலைக்

கைக்கொண்டு வீதியின் இருபுறமும் நிற்கும் மக்களைப் பார்த்து முகமலர்ச்சி

யைக் காட்டும் பாண்டியவேந்தனது அகன்ற மணிமார்பில் அசைந்தாடும்

மணம் கமழும் மாலை மிக அழகாயுள்ளது" என்று பகர்ந்தாள். உண்மையில்

மூன்று  கூறுகளும், யானையின் நெற்றிப் பட்டம், யானை, யானை மேல்

வீற்றிருக்கும் பாண்டியனின் மாலை, மிகுந்த அழகுடன் தோற்றம் தருகின்றன.

பெண்கள் மூவரில் ஒவ்வொருத்தியும்  தன் தன் கருத்தைத் தெரிவித்தாள்.

இந்தச் செய்தியைச் சொல்லும் பாடல் பின்வருமாறு:

பன்மாடக்  கூடல்  மதுரை  நெடுந்தெருவில்

என்னோடு  நின்றார்  இருவர்; அவருள்ளும்

பொன்னோடை  நன்றென்றாள் நல்லளே; பொன்னோடைக்(கு)

யானை நன்(று) என்றாளும் அந்நிலையள்; யானை

எருத்தத்(து)  இருந்த  இலங்கிலைவேல்  தென்னன்

திருத்தார்நன்(று)  என்றேன்  தியேன்".

அருஞ்சொற் பொருள்:

பொன்னோடை= பொன்னாலான யானை நெற்றிப் பட்டம்;

எருத்தம்=கழுத்து(பிடரி); இலங்கும்=ஒளிரும்; இலைவேல்=இலைவடிவ வேல்;

தென்னன்=பாண்டியன்; தார்=மாலை; தியேன்=தீயேன் என்னும் சொல் "தியேன்"

என்று குறுகியுள்ளது.


இந்தப் பாடல் தனிப்பாடல் திரட்டொன்றில் காணப்படுகிறது. கவிதை நடை மற்றும்

கருத்து முதலியவற்றைக் கவனிக்கும் பொழுது, 'முத்தொள்ளாயிரம்' நூலிலுள்ள

பாட்டோ? என்று எண்ணத் தோன்றுகின்றது.  பாண்டியனின் மார்பில் தவழும்

மாலை அழகு என்று சொன்ன மூன்றாவது பெண்ணின் கூற்றில்  பாடல் இயற்றப்

பட்டுள்ளது. அவள் தன்னைத் தீயேன்(தியேன்) என்று ஏன் நொந்து கொள்கின்றாள்?

ஒருவேளை பாண்டியன் மீது கொண்ட ஒருதலைக் காதலால்  அவனருகில் இருக்கும்

பேறு கிட்டவில்லையே என்று புலம்புகின்றாளோ, என்னவோ?

Tuesday 2 August 2022

வெறிவிலக்குதல்.

 வெறிவிலக்குதல்.


வெறி என்பது தெய்வம் ஏறிய/பேய் ஏறிய தன்மை. அகம், புறம்

என்னும் இரண்டு பொருள்களிலும் 'வெறி' பேசப்படும். அகப்

பொருளில் அதிகமாகப் பயின்று வந்துள்ளது. களவியலில்

தலைவனைப் பிரிந்த தலைவி சரியாக உண்ணாமலும் உறங்காமலும்

பித்துப் பிடித்தாற்போல வெறித்த பார்வையுடன் உலவுவதும், உடல்மெலிவதும்,

மேனி நிறம் மாறிப் பசலை கொள்வதும்(உடல் வெளுத்துப் போவதும்)

அன்னைக்கு மன உளைச்சலைத்தரும்.  மகளின் களவியல் காதலை

அறியாத அன்னை மகளின் தோற்றத்திலும் நடத்தையிலும் ஏற்பட்ட

மாற்றத்துக்கு யாது காரணம்? என அறிய எண்ணி வேலனை அழைத்து

வெறியாட்டம் மேற்கொள்ளச் செய்வாள். வெறியாட்டம் என்பது தெய்வத்தை

(முருகனை) வருவித்துத் தன்மேல் ஏறச்செய்து கையில் வேலைப் பிடித்து

ஆவேசத்தோடு ஆடுவது. அச்சமயத்தில் தலைவியின் வீட்டு முற்றத்தில்

புதுமணல் பரப்பி நெற்பொரி தூவினாற் போலப் புன்க மரப்பூக்களைச்

சிதறி மறி(ஆட்டுக்குட்டி) ஒன்றைப் பலியிட்டு அதன் உதிரத்தில் தினையை

விரவி அதனையும் சிதறி முருகனை வேண்டி வெறியுடன் ஆடுவான். முருகனை

நினைத்துத் தலைவியின் நெற்றியைத் தடவிவிட்டு  அவள் பழைய உடல்நலத்தைப்

பெறட்டும் என்று ஆசீர்வதிப்பான். கழற்சிக் காய்களைத்   தரையில் உருட்டி விட்டு

அவை விழுந்து நிற்கும் தன்மையைப் பொருத்தும், எண்ணிக்கையைப் பொருத்தும்

சில கணக்குகளைப் போட்டு "முருகன் அணங்கினான்" (முருகன் தலைவியை

வருத்தினான்) என்றுரைப்பான். இவ்வளவு ஆர்ப்பாட்டங்களையும் அல்லல்களையும்

தவிர்க்க வேண்டுமென்றால் செவிலித்தாயிடம் களவுக் காதலை வெளிப்படுத்தி

இன்னாரைக் காதலிப்பதாகவும் அவர் பிரிவினால் விளைந்த வாட்டமே தன் உடலில்

நிகழ்ந்த மாற்றங்களுக்குக் காரணம் என்பதாகவும் உண்மையை உரைத்தல் வேண்டும்.

இதைத்தான் அறத்தொடு நிற்றல் என்று அகப்பொருள் இலக்கணம் இயம்பும்.


குறுந்தொகைப் பாடல் எண்:362; புலவர் வேம்பற்றூர்க் கண்ணன் கூத்தன்.

"முருகயர்ந்து வந்த முதுவாய் வேல!

சினவல் ஓம்புமதி; வினவுவ(து) உடையேன்;

பல்வே(று) உருவின் சில்லவிழ் மடையொடு

சிறுமறி கொன்றிவள் நறுநுதல் நீவி

வணங்கினை கொடுத்தி ஆயின், அணங்கிய

விண்தோய் மாமலைச் சிலம்பன்

ஒண்தார் அகலமும் உண்ணுமோ பலியே?"

பொருள்: வெறி விலக்கித் தோழி அறத்தொடு நின்றது.

முருகனுக்காக வெறியாட்டு அயர்ந்த முதிய வேலனே!  நான் உன்னிடம்

ஒன்று கேட்கவேண்டும்; நீ சினமடையாதே. பலவாகிய வேறுபட்ட

நிறத்தையுடைய, சில சோற்றையுடைய பலியோடு, சின்னஞ்சிறிய

ஆடு ஒன்றைக் கொன்று அதன் உதிரத்தை அதில் விரவித் தலைவியின்

நெற்றியைத் தடவிவிட்டு வணங்கி முருகனுக்குப் படைத்தனை ஆயின்

இவளது மெலிவுக்கும் துன்பத்துக்கும் காரணமான தலைவனது  ஒளி மிகுந்த

மாலையணிந்த மார்பு இப்பலியை உண்ணுமோ? உண்ணாது. இதன்மூலம்

தலைவனுக்கும் தலைவிக்கும்  இடையே நிலவும் களவியல் காதலும் அவனைப்

பிரிந்ததால் தலைவிக்கு நேர்ந்த மெலிவு, பசலை முதலான துயரங்களும்

வெளிப்படையாக எடுத்துரைக்கப் பட்டன.


இந்த வெறிவிலக்கல் துறையிலே மறைந்த பெருந்தமிழறிஞர் கி.வா.ஜ. அவர்கள்

இயற்றிய ஓரிரு பாடல்களைப் பார்ப்போம்:

"ஒப்பரி தாய ஒருவன் திருக்காந்த ஓங்கலிலே

துப்புள னாகிய  சுந்தரன் தன்னைத் துருவியறிந்(து)

இப்பெண் ணுடன்மனச் சம்பந்த னாக்கியிங்(கு) ஈதலன்றி

அப்பரைக் கொல்லத் துணிந்தனள்  அன்னை அவலமிதே".

இந்தப் பாடலில் சுந்தரர், சம்பந்தர், அப்பர் என்ற சைவசமய நாயன்மார் பெயர்களைக்

கையாண்டுள்ளார். ஆனால் அவர்களுக்கும் இந்தப் பாடலில் சொல்லப்படும் நிகழ்ச்சிக்கும்

யாதொரு தொடர்பும் இல்லை.  இலக்கியத் திறமையால் இவ்விதம் இயற்றியுள்ளார்.

பொருள்:

தன்மகள் உடல் மெலிவுக்கும்  பசலை நோய்க்கும்  அவளது களவியல் காதல்தான்

காரணம் என்றறியாத அவள் அன்னை முருகன் அணங்கியிருப்பானோ? என்ற

எண்ணத்தில் வெறியாடலுக்குக் களம் அமைத்து  அப்பரை( ஆட்டுக்கடா)ப் பலி கொடுக்கத்

திட்டமிடுகிறாள். அவள் மனங்கவர்ந்த சுந்தரன்(தலைவன்) யாரென்று  அவள் தோழியிடம்

துருவியறிந்து அச்சுந்தரனொடு  சம்பந்தம்(திருமணம்) செய்வித்தால் சிக்கல் தீருமே.

இதைச் செய்யாமல் அப்பரை(ஆண் ஆடு --கடா)ப் பலியிட எண்ணுதல் அவலமல்லவா?


",வெஞ்சமர் தன்னிற் கொடுஞ்சூ ரனைக்கொன்ற வேல்முருகன்

தஞ்சம் அருள்காந்தக் குன்றினி லேராசிச் சக்கரத்தில்

அஞ்சையும் ஆறையும் மூன்றாக் குதலன்றி ஆதியொன்றை

எஞ்சிடச் செய்ய நினைத்தனள் அன்னை எவன் செய்வதே".

பொருள்:

இப்பாடலில் இராசிக் கட்டத்தைக் கையிலெடுத்து இராசிகளின் பெயர்களைப் பயன்

படுத்திச் சொல்விளையாட்டு நிகழ்த்தியுள்ளார்.  மகளின் களவியல் காதலை அறியாத

அன்னை அஞ்சாவது இராசியான சிம்மத்தையும்(தலைவனையும்) ஆறாவது இராசி

யான கன்னியையும்(தலைவியையும்)  மூன்றாவது இராசியான மிதுனம் (மைதுனம்--

திருமணம்) செய்வித்தால் சிக்கல் தீரும். ஆனால், அவ்வாறு செய்வதை விடுத்து, 

ஒன்றாவது இராசியான மேடம்( மேஷம்-ஆடு) தனை முருகனுக்காகப் பலி என்ற முறையில்

எஞ்சிடச் செய்யத் திட்டமிட்டனள். எஞ்சிடச் செய்ய---சாகடிக்க. இப்பாடலில் இராசிப்

பெயர்களைக் கொண்டு சொல் விளையாட்டு மூலம் அருமையான பாடல் தந்துள்ளார் 

கி.வா.ஜ. என்னே அவர்தம் புலமை! என்று வியக்கத் தோன்றுகிறது.

பார்வை: கி வா ஜ.சிலேடைகள் என்னும் நூல்.

                  தொகுத்தவர்: கி.இராமசுப்பிரமணியன்..