Friday 15 March 2019

கண்படை ஈயா(கண்ணுறக்கம் கொள்ளவிடா) வேல்வீரன்

கண்ட மனையோள்

புறநானூற்றில்  குறிப்பிடப்படும் இரண்டு  உள்ளங்கவரும்
காட்சிகளைப் பார்ப்போம்.  முதலாவது காட்சி:
"முன்றில்  முஞ்ஞையொடு  முசுண்டை  பம்பிப்,
பந்தர் வேண்டாப்  பலர்தூங்கு  நீழல்,
கைம்மான்  வேட்டுவன்  கனைதுயில் மடிந்தெனப்,
பார்வை  மடப்பிணை  தழீஇப், பிறிதோர்
தீர்தொழில்  தனிக்கலை  திளைத்துவிளை  யாட,

இன்புறு  புணர்நிலை  கண்ட  மனையோள்
கணவன்  எழுதலும் அஞ்சிக், கலையே
பிணைவயின்  தீர்தலும்  அஞ்சி, யாவதும்
இல்வழங்  காமையின், கல்லென  ஒலித்து,
மான்அதட்  பெய்த  உணங்குதினை  வல்சி

கானக்  கோழியொடு  இதல்கவர்ந்(து)  உண்டென
ஆர  நெருப்பின், ஆரல்  நாறத்,
தடி(வு)ஆர்ந்  திட்ட  முழுவள்  ளூரம்
இரும்பேர்  ஒக்கலொ(டு) ஒருங்கினி(து)  அருந்தித்,
தங்கினை  சென்மோ,  பாண! தங்காது

வேந்துதரு  விழுக்கூழ் பரிசிலர்க்(கு)  என்றும்
அருகா(து)  ஈயும்  வண்மை
உரைசால்  நெடுந்தகை  ஓம்பும்  ஊரே."
புறநானூற்றுப்  பாடல்  எண்:320.
பாடியவர்: வீரை  வெளியனார்.
திணை: வாகை; துறை: வல்லாண்  முல்லை
வாகைத் திணை: வாகைப் பூவைத் தலையிலே சூடிக்
கொண்டு பகைவருடன் போர்புரிந்து அவரைக் கொன்று
ஆரவாரம் செய்தலைக் குறிப்பதாகும்.
வல்லாண் முல்லைத் துறை: வீரன் ஒருவனது ஊரையும்
வீட்டையும் இயல்பையும் சொல்லி அவனது ஆண்மையையும்
வீரத்தையும் விவரித்துச் சொல்லுதலைக் குறிப்பதாகும்.

பாடலின்  பொருள்:
யானைகளை  வேட்டையாடும் தொழில்செய்துவரும் வீரன்
ஒருவனுடைய  வீட்டின் முற்றத்திலே பெரிய முஞ்ஞை மரம்
ஒன்று நின்றுகொண்டிருந்தது. அது மிகப் பெரிய மரமாக
விளங்கியமையாலும்  அதன்மேல் முசுண்டைக் கொடி அடர்ந்து
படர்ந்திருந்ததாலும்  பலரும் படுத்து உறங்கும் அளவுக்கு
நிழல் பரவி தண்ணென்று  இதமான சூழல் நிலவியது. 
முஞ்ஞை மரமும் முசுண்டைக் கொடியும்  நிழல் தந்து
கொண்டிருந்தமையால் நிழலுக்காக வேறு பந்தல் போட
வேண்டிய தேவையில்லாமல் போயிற்று. அந்நிழலிலே அவ்
வீட்டின் தலைவனான, யானைகளை வேட்டையாடும்  வீரன்
அயர்ந்து உறங்கிக் கொணாடிருந்தான். அவ்விடத்தருகே,
பகல் வேளையிலும் தன் பிணை(பெண்மான்)மேல் காதல்
கொண்டிருந்து அதே நினைவாக  வருந்தும் கலைமான்
(ஆண்மான்)  அதனோடு கூடி விளையாடிக் கொஞ்சிக் களித்துக்
கொண்டிருந்தது.

அந்த  நேரத்தில்  தன் கணவனை  எழுப்புவதற்கு வந்த அவ்
வீரனுக்கு மனைவியானவள், அம்மான்களின்  களியாட்டத்
தைக்  கண்டு தன்  தலைவன்  அம்மான்களின் விளையாட்
டுச் சத்தத்தால்  உறக்கம் கலைந்து எழுந்து விடுவானோ
என்று அஞ்சினாள்.  அதே சமயம் அம்மான்களின் களியாட்
டமும் கலைந்துவிடக் கூடாதே என்றும் பதறினாள். என்ன
செய்வது எனத் தீர்மானிக்க முடியாமல்  ஒருபுறம் ஒதுங்கி
நின்றாள்.அத்தகைய அருளுடைய இல்லத் தலைவியவள்.

எனவே, பாணனே! நீ  வருத்தம் ஏதுமின்றி அவன் வீட்டுக்
குச் செல்வாயாக. அங்குச்  சென்றால், மான்தோலின்மேல்
பரப்பி வைத்திருக்கும் தினையரிசியைக் கானக் கோழி
களும்  இதலும் ஆரவாரம் எழுப்பித் தின்பதைக் காண்பாய்.
அவைகளைப் போல நீயும் நின் உறவினருடன் அங்கே
கூடியிருந்து  சுட்ட இறைச்சியும் ஆரல்மீனும்  தின்று களித்து
இன்புறலாம். அங்கேயே தங்கிச் செல்வாயாக. மேலும்,
வேந்தன் அவ்வீரன் செயலுக்கு மகிழ்ந்து பரிசிலாகத் தரும்
பெருஞ்செல்வத்தை  உன்போன்ற பாணர்க்குக் குறையாது
கொடுக்கும்  வள்ளல் தன்மை உடையவன் அவன். புகழ்பெற்ற
அந்நெடுந்தகை  ஆட்சி நடத்தும் ஊர் அதுவேயாகும். அங்குச்
செல்க. நின் பசியும் வறுமையும்  தொலைக. இந்தப் பாடலில்
விவரிக்கப் பட்ட காட்சி,  நிகழ்ச்சியை நேரிலே கண்டது போல
உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றது. இனி, மற்றொரு
பாடலைப் பார்ப்போம்.

"உழுதூர்  காளை  ஊழ்கோ(டு)  அன்ன
கவைமுள்  கள்ளிப்  பொரிஅரைப்  பொருந்திப்
புதுவர(கு)  அரிகால்  கருப்பை  பார்க்கும்
புன்தலைச்  சிறாஅர்  வில்லெடுத்(து)  ஆர்ப்பின்
பெருங்கண்  குறுமுயல்  கருங்கலன்  உடைய

மன்றிற்  பாயும்  வன்புலத்  ததுவே;
கரும்பின்  எந்திரம்  சிலைப்பின், அயலது,
இருஞ்சுவல்  வாளை  பிறழும்  ஆங்கண்,
தண்பணை  யாளும்  வேந்தர்க்குக்
கண்படை  ஈயா  வேலோன்  ஊரே!"

புறம் பாடல் எண:322; பாடியவர்: ஆவூர் கிழார்
திணை: வாகை; துறை: வல்லாண் முல்லை

பொருள்:
குளிர்ச்சி பொருந்திய  மருதநில  ஊர்களை  ஆட்சி
செய்யும்  வேந்தர்க்குக் கண்ணுறக்கம் கொள்ளவிடாது
(கண்படை  ஈயாது) கவலைமிகும் அச்சத்தைத் தரும் வேல்
வீரனின் ஊர் அது.(இவ் வீரனுக்கு மருதநில வேந்தர் அஞ்சிக்
கண்ணுறங்கார்.) வன்புல ஊரின் சிற்றரசன் ஆளும் அங்கே
உழவுசெய்யும் காளையின்  கொம்பு போன்ற கவறுபட்ட
முள்ளுடைய கள்ளியின் பொரிந்த அடிப்பாகத்தில் இருந்து
கொண்டே விளையும் புதுவரகினை அரியும் வயல் எலி
களைப் பிடிக்கக் கருதி அவற்றின் வருகையைச் சிறுவர்
எதிர்பார்த்துக் காத்திருப்பர்; அவற்றைக் கண்ட உவகை
யால் வில்லினை எடுத்து ஒலிப்பர். அவ் வில்லொலி கேட்டு,
வேலிப் புறத்திலே வாழும் குறுமுயல்கள், கருமையான
வெளிப்பக்கத்தையுடைய  மட்கலங்கள் உடைந்து போகு
மாறு மன்றிலே பாய்ந்து ஓடும். அத்தகைய வன்புலத்தின்
கண்ணே யுள்ளது அவ்வூர். மேலும்,  கரும்பினைப் பிழியும்
எந்திரம் ஒலியெழுப்ப, அவ்வொலி கேட்டு அதன் பக்கத்
தில் உள்ள நீர்நிலைகளிலே துள்ளிக் குதிக்கும் வாளை
மீன்கள் பிறழும், செழிப்புமிகு  குளிர்ந்த மருத நில ஊர்களை
யாளும் வேந்தர்க்கு  நடுக்கம்தரும்  வேல் வீரனின் ஊர்
அது.(சிறுவர் வில்லொலிக்கு முயல்கள் நடுங்குவது போல,
அவ் வேல் வீரனுக்குப் பகைவர் நடுங்கிக் கண்ணுறக்கம்
கொள்ளாதார் ஆவர் என்பது உட்கருத்து.) இந்தப் பாடலில்
கரும்பு பிழியும் எந்திரம் பற்றிக் கூறப்படுகிறது. எனவே
புறநானூற்றுக் காலத்திலேயே இக்காலத்தில் காணப்படும்
எந்திரங்கள் பயன்பாட்டில் இருந்ததை அறிய முடிகிறது. வன்
புலத்தை யாளும் சிற்றரசன்  செழிப்பான மருதநிலத்தை
யாட்சிசெய்யும் வேந்தர்க்குக்  கண்படை ஈயா(கண்ணுறக்கம்
கொள்ள விடாத) வேல் வீரனாக விளங்குவது வல்லாண்மை
யாகும்.

இவ்வாறு மேற்கண்ட இரண்டு பாடல்களிலும்  இரண்டு வீரர்
களின் வல்லாண்மையினை  அறிந்து இன்புற்றோம். இவை
போல, இன்னும் ஏராளமான பாடல்கள் உள்ளன. நேரம்
வாய்க்கும் பொழுது அவைகளையும் படித்துச் சுவைத்தால்
நல்லது.