Saturday 23 April 2022

ஓரில் பிச்சை பெறுக.

 செந்நெல் அமலை  வெண்மை வெள்ளிழுது ஓரில் பிச்சை பெறுக!


ஒரு தலைவன் பொருளீட்டுவதற்காகத் தலைவியைப் பிரிந்து

சென்றான். அப்பொழுது "நீவிர் எப்பொழுது திரும்பி வருவீர்?"

என்று வினவிய தலைவியிடம் வாடை வீசும் பருவத்தில்  திரும்பி

வருவதாகச் சூள்(உறுதி) உரைத்துச் சென்றான். தலைவனைப்

பிரிந்துள்ள தலைவிக்கு ஒவ்வொரு நாள் கழிவதும் ஒரு யுகம் கழிவது

போலத் தோன்றியது. நெடுந்தொலைவு சென்ற தலைவனைப் 

பிரிந்து ஏங்கும் தலைவிக்கு ஒருநாள் கழிவது  ஒரு வாரம் போல

நீண்டு கழியும் என்று வள்ளுவப் பெருமானும்  பாடியிருக்கிறார்.

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்(து) ஏங்கு பவர்க்கு".(குறள்:1269)

எனவே,  பிரிவுத் துயரைத் தாள இயலாத தலைவி, தலைவன் சென்ற

ஓரிரண்டு நாட்களிலேயே வாடை வீசும் பருவம்(கார்காலம்) எப்பொழுது

வரும் என்று அறிந்து கொள்ளத் துடியாய்த் துடித்தாள். அவளிருக்கும்

பகுதியில் பிச்சை கேட்டுவரும் அறிவரிடம் கேட்கலாம் என்று முடிவெடுத்தாள்.


அறிவர் என்போர் துறவுள்ளமும் முக்காலத்தையும் அறியும் ஆற்றலும் கொண்ட

பெரியோர் எனக் கருதப்பட்டனர். "மறுவில் செய்தி மூவகைக் காலமும்

நெறியின் ஆற்றிய அறிவர்" என்று தொல்காப்பியர் சிறப்பித்துள்ளார்.

பொதுமக்களிடத்தில் அறிவர்க்கு நல்ல செல்வாக்கிருந்தது. அறிவர்கள்

துறவுள்ளம் உடையவராய் இருந்தமையால், துறவியரைப் போலவே பிச்சை

பெற்று வாழ்ந்தனர் என்பது கீழ்வரும் பாடல் மூலம் அறியமுடிகிறது.


தலைவியின் உள்ளக்கிடக்கையை அறிந்த தோழி ஒருநாள் பிச்சை கேட்டு

வந்த அறிவரிடம் தலைவியின் சார்பாகப் பேசினாள்:

"அறிவரே! மின்னலைப் போன்ற இடையையுடைய தலைவி நடுங்குவதற்குக்

காரணமான, இறுதியில் மழையையுடைய வாடைக் காலம் எப்பொழுது வரும்

என்று தெரிவிப்பீர்; அப்பொழுது தலைவியின் தலைவர் வருதல் உறுதி.

எனவே, அந்த நல்ல செய்தியைச் சொல்வீராக. நீர் யாம் கோரியதுபோலத்

தெரிவித்தால் குற்றமற்ற இத்தெருவிலுள்ள நாயில்லாத அகன்ற எம் இல்ல

வாயிலில் செந்நெல் சோற்று உருண்டையும் அதன்மேல் சொரிந்த மிக

வெள்ளிய நெய்யும் கலந்த" ஒரு வீட்டுப் பிச்சையுணவை"ப் பெற்று வயிறு நிரம்ப

உண்டு பசியாறலாம். நீவிர் வேறு இல்லங்களுக்குப் பிச்சை கேட்டு அலையத்

தேவையில்லை. உணவுண்டபின்னர் இக் குளிர் காலத்துக்கேற்ற வெந்நீரைச்

சேமச் செம்பில் பெற்று அருந்தலாம். எனவே வாடைப் பருவம் எப்பொழுது வரும்

என்ற செய்தியைச் சொல்வீராக. பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை:பாடல் எண்:277; புலவர்: ஓரில் பிச்சையார்.

புலவரின் உண்மைப் பெயர் கிடைக்கவில்லை. எனவே, இந்தப் பாடலில் பயின்று வரும்

"ஓரில் பிச்சை" என்னும் சொற்றொடரால் அவர் குறிப்பிடப்படுதல் மரபு.

"ஆசில்  தெருவில், நாயில்  வியன்கடைச்

செந்நெல்  அமலை  வெண்மை  வெள்ளிஇழு(து)

ஓரில்  பிச்சை  ஆர  மாந்தி

அற்சிர  வெய்ய  வெப்பத்  தண்ணீர்

சேமச்  செப்பில்  பெறீஇயரோ  நீயே

மின்னிடை  நடுங்கும்  கடைப்பெயல்  வாடை

எக்கால்  வருவ(து)  என்றி

அக்கால்  வருவரெம்  காத  லோரே."


அக்காலக் கட்டத்தில் அறிவர்களுக்குச் சமூகத்தில்  அளவுகடந்த  மதிப்பும் செல்

வாக்கும் போற்றுதலும் பேணுதலும் நிலவின. துறவியரைப் போன்று வாழ்ந்த

காரணத்தால் பொதுமக்களிடம் பிச்சைபெற்றுண்டு வாழ்க்கை நடத்தினர்.

(சமண, புத்தசமயத் துறவிகளும் பிச்சை பெற்று வாழ்வு நடத்தினர்).

ஆனால், அறிவர்கள் குறிப்பிட்ட சமயத்தைச் சேர்ந்தவர் அல்லர். பொதுவான

நன்னெறிகளை மக்களிடம் எடுத்துச்  சொல்லி வந்தனர். காதலர்களுக்குள்

நிகழும் ஊடல் தணிப்பதற்குப் பன்னிரண்டு வகை மனிதர்கள் உதவலாம் எனத்

தொல்காப்பியர் பட்டியலிடும் மனிதர்களுள் அறிவர்கள் ஒரு வகையினர்.

இவர்களை "ஊடல் தணிக்கும் வாயில்கள்" என்று தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார்.

இவர்கள் வீடு வீடாகச் சென்று பிச்சை பெற்று வாழ்ந்துவரும் வழக்கம் உடையவர்கள்.

இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் தலைவிக்காகத் தம் வழக்கத்தை மாற்றி

"ஒருவீட்டுப் பிச்சையுணவு" மட்டும் போதும் என்று நிறுத்திக்கொண்டாரா? என்பது

தெரியவில்லை. இல்லை, வழக்கம்போல் பலவீடுகளுக்கும் சென்று கொஞ்சம் கொஞ்சம்

பிச்சை பெற்று உண்டாரா?  ஒன்று மட்டும் நிச்சயம். தலைவி கோரியது போல் வாடைப்

பருவம் எப்பொழுது வரும் என்பதைத் தெரிவித்திருப்பார்.

அருஞ்சொற் பொருள்:

அமலை=சோற்றுத் திரளை; இழுது=வெண்ணெய், நெய்.

அற்சிரம்=முன்பனிக் காலம்.

Saturday 9 April 2022

காதலுக்கு ஏற்படும் தடைகள்.

 காதலுக்கு ஏற்படும் தடைகள்.


சங்ககாலக் குடும்ப வாழ்வு களவியல், கற்பியல் என்ற

இரு பெரும் பிரிவுகளுக்குள்  அடைக்கப்பட்டிருந்தது.

களவியல் என்ற பெயரைக் கேட்டவுடன் சிலர் இதனைத்

தகாத செயலோ? என்று எண்ணி மனம் குழம்புகின்றனர்.

ஆடவன் ஒருவனும் பெண் ஒருத்தியும் ஒருவர் பால் மற்றவர்

இயற்கையால் ஈர்க்கப்பட்டு ஒருவருக்கொருவர் அன்பு செலுத்திப்

பிறர் அறியாமல் அடிக்கடி சந்தித்துப் பழகுதல் களவியல். அன்பு

ஒன்றே இவ்வாழ்வை வழிநடத்தும். நீண்டகாலம் களவியலை நடத்தும்

மரபில்லை. இரண்டு திங்களுக்குள் தங்களின் களவு வாழ்வைத்

தாய், தந்தை, உற்றார், உறவினர்க்குத் தெரியப்படுத்தி அனைவரும்

அறியக் காதலர்கள் இருவரும் வரைவு(திருமணம்) புரிந்து கொள்ளுதல்

வேண்டும். திருமணம் என்ற சடங்குக்குப் பிறகு நடத்தப்படும் வாழ்வு

கற்பியல் ஆகும். பெரியோர்கள் வகுத்த நெறிகளைக் கற்றுக்கொண்டு

அதன்படி வாழ்வது கற்பியல்  நெறியாகும். மக்கட்பேறு அடைதல் போன்ற

இன்றியமையாத நிகழ்வுகளெல்லாம் கற்பியலில்தான் நடைபெறும்.

மிகவும் கட்டுக்கோப்பாக நடைபெற்ற குடும்பவாழ்க்கையே களவியல்

மற்றும் கற்பியல் நெறிகளாகும். விதவிதமான கற்பனைகளை உருவாக்கி

இலக்கியத்தை நடத்திச் செல்லக் களவியல் பகுதி பயன்படும். எனவே,

சங்க நூல்களில் களவியல் நிகழ்வுகள் பெரும்பான்மையாகச் சொல்லப்

பட்டிருக்கும். 


இனி, அகநானூற்றில் பயிலும் ஒரு சுவையான பாடலை நோக்குவோம்.

பாடல் எண்:122; திணை: குறிஞ்சி; புலவர்: பரணர்.

தலைவனும் தலைவியும் இரவுக்குறியில் சந்தித்துக் கொள்கின்றனர்.

இரவுக்குறியில் சந்தித்துக் கொள்வதில் தலைவிக்கு அதிகத் தொல்லை

நேராது. ஏனென்றால் இரவுக்குறி நிகழ்விடம் தலைவியின் வீட்டுக்கு

மிக மிக அண்மையில்  அமைந்திருத்தல் மரபாகும். ஆனால், தலைவனோ 

அவன் வாழ்விடத்திலிருந்து நள்ளிரவில் புறப்பட்டு வழிநெடுகிலும் எதிர்ப்படும்

இடையூறுகளைக் கடந்துவரல்வேண்டும். எனவே, தலைவன் வருதற்குக்

காலதாமதம் ஏற்படும். அன்றும், தலைவி தன் தோழியோடு வந்து தலைவனது

வருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றாள். இருவரும் உரையாடிக் கொண்

டிருக்கும்போது தலைவன் வந்துவிடுகின்றான். தலைவியும், தோழியும்  இருக்கும்

இடம் தலைவி வீட்டுக் கொல்லைப்புறமாகும். தலைவன் சிறைப்புறத்தில்(இரவுக்குறி

நிகழ்விடத்துக்கு அப்பால், அதே நேரம் தலைவியின் பேச்சைக் கேட்கும் தொலைவில்)

இருப்பதைத் தோழி தெரிவித்ததும் தலைவி கூறுகின்றாள்:


இந்த ஊரில் காதலர்கள் சந்தித்துக் கொள்வதற்கு எண்ணிலாத்  தடைகள் ஏற்படுகின்றன.

மிக்க தேன்(கள் என்றும் சொல்லலாம்)  உண்டு களிக்கும் மக்கள் நிறைந்துள்ள ஆரவாரம்

மிக்க இந்தப் பழமையான ஊர், விழா ஏதும் நடைபெறாத போதிலும் தூங்காமல் விழித்துக்

கொண்டுள்ளது. வளமிக்க கடை வீதியும் பிற வீதிகளும் ஒருவழியாக உறங்கினாலும்,

கண்டிப்பு மிக்க அன்னை உறங்காமல் விழித்திருக்கிறாள். பிடித்துக் கொள்ளும் கூற்றைப்

போலத் தப்புவதற்கு அரிதாகிய சிறைக்காவலையுடைய அன்னை உறக்கம் கொண்டாலும்,

உறங்காத கண்ணராம் ஊர்க்காவலர்  விரைந்து வருவர்.


விளங்குகின்ற வேலைக் கைக்கொண்ட அவ்விளைஞர் தூங்கினாலும்,  கூரிய பற்களையும்

 வலம் சுரிந்த வாலினையும் உடைய நாய் உற்சாகமாகக் குரைக்கும்.  மிகுந்த குரைப்பொலி

எழுப்பும் நாய் ஒருவேளை மேற்கொண்டு குரைக்காமல் துஞ்சினாலும்,  வானத்தில் உலவும்

நிலவு பகல் போல ஒளியைப் பாய்ச்சிக் காதலர்கள் பிறர் அறியாமல் சந்திக்க இடையூறு

புரிகின்றது. நிலவு மேற்கு மலைப் பக்கமாகச் சென்று மறைந்து அதனால் அடர்இருள்

சூழுமானால், வீட்டெலியை உண்பதற்காகத் தேடும்  வலிய வாயை உடைய கூகைச் சேவல்

பேய் அலையும் இந்த நடுயாமத்தில்  உள்ளம் நடுங்கும் படியாகக் குழறும். மரப்பொந்தில்

வாழும் கூகைச்சேவல் மேன்மேலும் குழறாமல் உறங்கினாலும் ,வீட்டில் வளர்க்கப்படும்

கோழி பொழுது விடிந்ததை அறிவிக்கக் கூவும்.


இவையெல்லாம் ஒருவழியாக உறங்கிய பொழுதில், ஒருநாளும் என்னிடத்திலிருந்து 

பிரிந்து நில்லாத நெஞ்சினரான நம் தலைவர்  வருகை புரிய மாட்டார். அப்பப்பா!

களவு வாழ்வில் தலைவனும் தலைவியும் சந்திப்பதற்கு இத்தனை தடைகளா?

அதனால், நல்ல குதிரைகளையும், காவல் வேலியையும் உடைய தித்தன் என்ற

வேந்தனது உறையூரைச் சூழந்திருக்கும்  கல் முதிர்ந்த புறங்காடு போல, நம்

களவுக் காதல் பல இடையூறுகளைச் சந்திக்க நேர்ந்துள்ளது. இவ்வாறு  தலைவன்

சிறைப்புறத்தானாக, தலைவியும் தோழியும் உரையாடிக் கொண்டிருக்கின்றனர்.

களவுக் காதலில் எதிர்நோக்கும் தடைகளைத் தவிர்ப்பதற்காகத் தலைவனை

வரைவு கடாவுமாறு(திருமணம் புரிந்து கொள்ளுமாறு) தூண்டுவதற்காகத்

தலைவியும் தோழியும் உரையாடியிருக்கலாம். அல்லது அங்கலாய்ப்பான

பேச்சாக இருக்கலாம். இனி பாடலைப் பார்ப்போம்:


"இரும்பிழி   மகாஅர், இவ்   அழுங்கல்   மூதூர்

விழவின்(று)   ஆயினும்   துஞ்சா   தாகும்;

மல்லல்   ஆவணம்   மறுகுடன்   மடியின்

வல்லுரைக்   கடுஞ்சொல்   அன்னை  துஞ்சாள்;

பிணிகோள்   அருஞ்சிறை   அன்னை   துஞ்சின்

துஞ்சாக்  கண்ணர்   காவலர்  கடுகுவர்;

இலங்குவேல்  இளையர்   துஞ்சின்   வைஎயிற்று

வலம்சுரித்   தோகை   ஞாளி   மகிழும்;

அரவவாய்   ஞமலி   மகிழாது   மடியின்

பகலுரு   உறழ,நில   வுக்கான்று   விசும்பின்


அகல்வாய்   மண்டிலம்   நின்றுவிரி  யும்மே;

திங்கள்   கல்சேர்வு   கனையிருள்   மடியின்,

இல்லெலி   வல்சி   வல்வாய்க்  கூகை

கழுது, வழங்   கியாமத்(து)   அழிதகக்   குழறும்;

வளைக்கண்   சேவல்   வாளாது   மடியின்

மனைச்செறி   கோழி   மாண்குரல்   இயம்பும்;

எல்லாம்  மடிந்த  காலை   ஒருநாள்

நில்லாநெஞ்   சத்(து)அவர்   வாரலரே;   அதனால்

அரிபெய்  புட்டில்   ஆர்ப்பப் பரிசிறந்(து)

ஆதி  போகிய  பாய்பரி   நன்மா


நொச்சி   வேலித்   தித்தன்   உறந்தைக்

கல்முதிர்   புறங்காட்(டு)   அன்ன

பல்முட்(டு)   இன்றால்   தோழி!நம்   களவே.


அருஞ்சொற் பொருள்:

இரும்பிழி=மிக்க தேன்(கள்); அழுங்கல்=ஆரவாரம்; மல்லல்=வளமை;

ஆவணம்= கடைத்தெரு; மறுகு=குறுந்தெரு; பிணிகோள்= பிணித்துக்

கொள்ளும்; கடுகுவர்=விரைவர்;  சுரிந்த=சுருண்ட; தோகை= வால்;

ஞாளி=நாய்; அரவம்=ஒலி; பகலுறு உறழ=பகலைப் போன்ற; கனை

இருள்=அடர் இருள்; கழுது=பேய்; அழிதக=அழியும் படியாக; அரி=பரல்;

புட்டில்=கெச்சை; ஆதி= நேரான ஓட்டம்; நொச்சி=காவல்; முட்டு

இன்றால்= தடை உள்ளது; வல்சி=உணவு.


திருவிழா ஏதும் நடைபெறாத போதிலும் ஊர்மக்கள் உறங்கவில்லை;

ஒருவழியாக அவர்கள் தூங்கினாலும் கண்டிப்பான அன்னை துஞ்ச

வில்லை; ஒருவழியாக அன்னை உறங்கினாலும் இரவுக் காவலர்

உறங்காமல் திரிகின்றனர்; சோர்வடைந்து அவர்கள் துஞ்சினாலும்

நாய்கள் உற்சாகமாகக் குரைக்கின்றன; நாய்கள் ஓய்ந்து படுத்தாலும்

வீட்டெலியைத் தேடி உண்ணும் கோட்டான் குழறுகின்றது; மரப்

பொந்துக் கோட்டான் அயர்ந்து போய்த் தூங்கினாலும் வீட்டில்

வளர்க்கப்படும் கோழி கொக்கரக்கோ எனக் கூவுகிறது. அப்பாடா!

ஊரே அடங்கிவிட்டது என்று நினைத்தால் தலைவர் வரவில்லை.

எத்தனை, எத்தனை தடைகள் சேர்கின்றன என்று தலைவி அங்க

லாய்ப்பது இலக்கியச் சுவையைக் கூட்டுகிறது.


பார்வை:

அகநானூறு(மணிமிடைப் பவளம்) மூலமும் உரையும் எழுதியவர்

புலியூர்க் கேசிகனார்.