Sunday 27 June 2021

செல்வர் மாளிகைக்குத் திருடச்

 செல்வர் மாளிகைக்குத் திருடச் சென்ற புலவர்; இருவரும் இணைந்து 

இயற்றிய பாடல்


பதினெட்டாம் நூற்றாண்டில்   நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர் தலைமலை

கண்ட தேவர் என அழைக்கப்பட்ட புலவர். அவர் போர்க்குடியில் உதித்தமையால்

மலைபோல் தலைகளைக் கண்டவர் என்னும் பொருள்பட தலைமலைகண்டர்

என்று பெயர்சூட்டப் பட்டிருப்பார் போலும். ஆயின், அவரது இயல்பு நேர்மாறாக

இருந்தது. அக்காலக் கட்டத்தில் அவர்தம் உற்றார், உறவினர் பிழைப்புக்காகத்

திருடும் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள். நம் புலவர்க்கோ அடிதடி, சண்டை,

திருட்டு, கொள்ளை, கொலை போன்ற தீச்செயல்கள் அறவே பிடிக்கவில்லை.

எந்நேரமும் சிவசிந்தனையில் மூழ்கியிருந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை

ஓதிக்கொண்டேயிருந்தார். ஈசன் அவருக்குக் கல்விச் செல்வத்தை அள்ளியள்ளி

வழங்கினார். ஆனால், பொருட்செல்வத்தைத் தர மறந்துவிட்டார்.

",பாலியந் தொட்டு நல்லோர் பழக்கமும் தூய பண்பும்

ஆலிலைத் துயின்றோன் காணா அரவிந்தப்  பதத்தில் அன்பும்

நாலியல் புடைய பாவும் நவின்று,நா வலனாம் ஆசை

மேவிடுந் தகவும் தோய்ந்தான்; வெஞ்சமர்த் தொழில்கற் றில்லான்"

என்று புலவர் புராணம் பாடிய முருகதாச சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.


முடியுடை மூவேந்தர்கள் இல்லாத காலம். நம் புலவர்க்குச் சரியான வருமானம்

கிட்டவில்லை. வறுமை நிலையிலும் ஒரு மாதரசியின் கரம் பற்றினார்.

அவர் மனைவிக்கு ஏழு அண்ணன்மார் இருந்தனர். அவர்கள் திருட்டுத்

தொழிலை மேற்கொண்டு ஓரளவு வசதியாகக்  குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்

தனர். புலவர் மனைவி கல்வியறிவு இல்லாதவர். அவர் புலவரிடம் "என்

அண்ணன்மார் ஏழு பேரும் தத்தம் மனைவியரோடு ஓரளவு வசதியாக

வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் செய்யும் தொழிலில் தாங்களும்

பங்கெடுத்துக் கொண்டால் நாமும் வறுமை நிலையிலிருந்து தப்பிப்

பிழைக்கலாம்" எனச் சொன்னார். புலவர் உடனே " உன் அண்ணன்மார்

செய்வது திருட்டுத் தொழில். அது பாவச் செயலாகும்.  கொஞ்ச காலம்

பொறுத்திரு. மருதூர் ஈசன் நம் வறுமையைப் போக்கிடுவார். நம்பு"

என் நவின்றார். அம்மையார் உடனே "திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக்

கொள்ளை நடத்தவில்லையா?" என வினவினார். நம் புலவர் உடனே

"அவர் வழிப்பறிக் கொள்ளை நடத்தி நாராயணனுக்குத் தொண்டு

செய்தார். அப்பணத்தால் பிழைக்கவில்லை." என்று செப்பினார்.

காலம் உருண்டது. ஒவ்வொரு நாளும் வறுமைத் துயரம் கூடிக்கொண்டே

வந்தது.


தலைமலைகண்ட தேவர்  சோர்வடைந்தார். இனி வறுமைப் பிணியைத் தாள

முடியாது. மனைவியை அழைத்து " உன் விருப்பப்படியே உன் அண்ணன்மார்

தொழிலில் பங்கெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். அவர்களிடம்

தெரிவித்துவிடு. ஆனால் இரு நிபந்தனைகள்; எக்காரணத்தை முன்னிட்டும்

கொலைக் குற்றம் மேற்கொள்ளக் கூடாது. மகளிரிடம் தவறாக நடக்கக்

கூடாது." என்று பகர்ந்தார். அம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சி. ஓடிச் சென்று

தன் அண்ணன்மாரிடம் தகவலைத் தெரிவித்தார்.


அமாவாசை நாள் நெருங்கியது. புலவர் வேண்டா வெறுப்பாகக் கன்னமிடப்

புறப்பட்டார். அவருடன் மைத்துனர்கள் எழுவரும் சென்றனர். திருப்பூவணத்

தில் வாழும் செல்வர் ஒருவர் மாளிகையில் கன்னமிடத் திட்டம் தீற்றியிருந்

தனர். அவ்வாறே அம்மாளிகைக்குள் மைத்துனர் எழுவரும் கன்னமிட

நுழைந்தனர். புலவர் செல்வரது அறைவாசலில் நின்றுகொண்டு நோட்டம்

இட்டுக் கொண்டிருந்தார். உள்ளே சென்ற மைத்துனர் எழுவரும் நகைகள்,

பாத்திரங்கள் போன்றவற்றைத் திருடி மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சில வெண்கலப் பாத்திரங்கள் தரையில் விழுந்து பெருத்த

ஓசையை எழுப்பின. பெரிய மாளிகையாதலால் காவற்காரர்கள் வேற்

கம்புகள், அரிவாள்களோடு அவ்விடத்துக்கு ஓடிவரத் தொடங்கினர். இக்

காட்சியைக் கண்ட மைத்துனர்கள் எழுவரும் மாளிகைக்கு வெளியே

தப்பியோடிவிட்டனர். புலவர் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல்

செல்வர் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார்.


இவ்வளவு கலவரத்துக்கு இடையிலும் செல்வர் நிதானமாக ஏதோ

புலம்பிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நல்ல பழக்கம்

இருந்தது. அன்றாடம் ஈசன் மேல் ஒரு வெண்பாப் பாடி முடித்துவிட்டுத்

தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் பாடத் தொடங்கினார்.

"தலையில் இரந்துண்பான்; தன்னுடலிற் பாதி

மலைமகட்(கு) ஈந்து மகிழ்வான்---உலையில்"

பிட்சாடனராக மண்டை ஓட்டில் பிச்சையெடுத்துண்பான்;

தன்னுடலிற் சரி பாதியை உமையம்மைக்குக் கொடுத்து மகிழ்வான்.

இரண்டு வரிகளுக்கு மேல் அவர் கற்பனை நகர மறுத்தது. சொற்கள்

வரத் தயங்கின. முதலிரண்டு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிப்

புலம்பினார். அறை வாசலில் நின்றுகொண்டிருந்த தலைமலைகண்ட தேவர்

பாடலின் முதலிரண்டு வரிகளையே  ஏன் பாடிக்கொண்டிருக்கின்றார்?

என்று சிந்தித்தார். அடக் கடவுளே! இரண்டு வரிதளுக்குமேல்  அவர்க்குப்

பாட வரவில்லை போலும் என்றெண்ணி உலையில் என்ற தனிச்சொல்லைப்

பாடித் தொடர்ந்து

"இருப்புவண மேனியனார் என்றாலோ ஆமாம்

திரும்புவண நாதன் திறம்".

என்று  நிறைவு செய்தார்.

வெண்பா நிறைவடையக் கேட்ட செல்வர் ஓடோடி வந்து அறை வாசலில்

நின்றுகொண்டிருந்த புலவரைக் கட்டிப் பிடித்து "ஐயா! தாங்கள் யார்? புலவரோ?

நீண்ட நேரமாக வெண்பாவின் முதலிரண்டு அடிகளுக்குமேல் பாடத் தோன்றாமல்

திணறிக் கொண்டிருந்தேன்; நீர் தக்க சமயத்தில் உதவினீர்; மிக்க நன்றி. தாங்கள்

இங்கு நின்றுகொண்டிருக்கக்  காரணம் என்ன?" என்று வினவினார். புலவர்

உள்ளத்தில் கபடம் ஏதுமில்லாததால் மடைதிறந்த வெள்ளம்போல் உள்ளதை

உள்ளபடி உரைத்தார். எதனையும் மறைக்கவில்லை. இறுதியாக "வறுமையின்

கொடுமை தாளாது திருட வந்தேன்; வருந்துகிறேன்; பொறுத்தருள்க" என்றார்.

செல்வர் உடனே" பத்தாண்டுகளுக்கு மேலாக ஈசன் மேல் நாள்தோறும் ஒரு வெண்பாப்

பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இன்று அந்த வழக்கம் முறிந்து விடுமோ?

என்று கவலையடைந்தேன்.. தாங்கள் என்னைக் காத்தருளுனீர். நான் உமக்குக்

கடப்பாடுடையேன்" என மொழிந்தார். பின்னர் இருவரும் இணைந்து ஒருசில

பாடல்கள் இயற்றினர். பிற்பாடு புலவர்க்கு விருந்து படைத்து மகிழ்ந்தார். அன்றிரவு

புலவர் செல்வர் மாளிகையிலேயே தங்கினார். இடையிடையே, புலவரைப் பற்றிய

சில விவரங்களையும் கேட்டறிந்த செல்வர் புலவர் மனைவிக்கு ஆட்கள் மூலமாகத்

தகவல் தெரிவித்தார். மறுநாள் காலையில் மைத்துனர் எழுவரையும் தம் மாளிகைக்கு

வரச் சொல்லியிருந்தார்.


மறுநாள் காலையில் புலவரின் மைத்துனர் எழுவரும் வந்து சேர்ந்தனர்.

செல்வர் அவர்களைத் தம் பண்ணையில் பணிக்கு அமர்த்திக்கொண்டார்.

திருட்டை விட்டொழிக்கு மாறு அன்புடன் வேண்டுகோள்விடுத்தார்.

புலவர்க்குத் தக்க வெகுமதி கொடுத்து அனுப்பிவைத்தார்.

  

பார்வை:

தலைமலைகண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி நூல்.

தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடு, 1968.











Saturday 12 June 2021

கண்ணீத்தம் தீர்க்கும் மருந்து.

 கண்ணீத்தம்(கண்ணீர் வெள்ளம்) துடைக்கும் மருந்து.


முத்தொள்ளாயிரம் என்னும் சங்கம் மருவிய கால இலக்கியத்தில்

காணப்படும் நெஞ்சை யுருக்கும் காட்சி. பாண்டிய நாட்டின் மீது

பகைவர் படையெடுத்து வந்துள்ளனர். நாட்டைக் காப்பதற்கு ஒவ்

வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்மகன் போர்க்களத்துக்கு வருதல்

வேண்டுமெனப் பாண்டிய வேந்தன் முரசறைந்து செய்தி தெரிவிக்க

ஆணையிட்டுள்ளான். வீட்டுக்கு ஒருவர் போர்க்களம் நோக்கிச் செல்

கின்றனர். ஒரு வீட்டில் கணவனை யிழந்த ஒரு தாய் தன் பாலகனோடு

வாழந்து வருகிறாள். அவன் பாலகன் ஆதலால் தன்வயது ஒத்த சிறுவர்

களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கின்றான். அந்தத் தாய் தன்

பாலகனை யழைத்துப் போர் ஆடை உடுத்திவிட்டுக் கையில் வேலைத்

திணித்து மகனுடன்  போர்க்களம் நோக்கி நடக்கின்றாள்.


போர்க்களம் வந்தடைந்த அத்தாய் தன் பாலகனை முன்னிறுத்தித் தான்

பின்னால் நின்றுகொண்டு மகனுக்கு வேலைக் கையாளக் கற்றுக்கொடுக்

கின்றாள். ஒரு நாழிகை தடுமாறிய பாலகன் ஏனைய வீரர்கள் வீறுகாட்டிப்

போர்செய்வதனைப் பார்த்து வீரமும் வெறியும் கொண்டு வேலைக் கையாளக்

கற்றுக்கொள்கின்றான். தாய் பின்னாலிருந்து "பாண்டிய நாட்டை எப்பாடுபட்டேனும்

காப்போம்" என்றும் "வெற்றிவேல், வீரவேல்" என்றும் முழக்கமிட்டாள். அதனால்

பாலகன் ஓரளவு நன்றாகவே சமர்புரிந்தான். ஆனாலும் அவன் பாலகன் தானே!

நேரம் கழியக் கழிய அவனது கைகள் தளர்ச்சிடையத் தொடங்கின.  அந்தோ, பரிதாபம்

அவனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பகைவீரன் ஒருவன் எறிந்த

வேல் பாலகனின் மார்பைப் பிளந்து அவன் உயிரைக் குடித்தது. மேலும் சில நாழிகை

நேரம் போர் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் பாண்டிய வீரர்கள் பகைவரைத்

துரத்தியடித்து வெற்றிவாகை சூடினர்.

பாண்டிய வேந்தன் வெற்றியடைந்த பின்னர் சில மருத்துவர்கள் புடைசூழப் போர்க்

களத்தைச் சுற்றிவந்து வீரமரணம் அடைந்தவர்களை முறைப்படி அடக்கம் செய்யவும்

காயம் அடைந்தவர்களுக்கு  முறைப்படி மருத்துவம் பார்க்கவும் ஏற்பாடு செய்தான்.

அப்பொழுது ஒருதாய் உயிரிழந்த தன் பாலகனின் உடலைத் தன் மடிமீது கிடத்திக்

கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அவள் அருகில் சென்று நடந்தது  என்ன? 

என்று வினவ, அத்தாய் நடந்த நிதழ்ச்சிகளை விம்மலுடன் சொல்லி முடித்தாள். அவள்

கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது. செய்தியைக்

கேட்ட பாண்டிய வேந்தன் நெக்குருகிப் போனான். தடாலென்று கீழே குனிந்து அத்தாயின்

கால்களைத் தொட்டு வணங்கி "அம்மையே! உம் போன்ற வீரப் பெண்டிர்களால் இந்த

வெற்றி கிட்டியது. இந்த நாட்டை உமக்குத் தருகிறேன். பெற்றுக் கொள்க" என்றான்.

அத்தாய் உடனே  "தாய்நாட்டைக் காப்பது எம் கடமை. அதைத்தான் யாம் செய்தோம்.

பரிசையோ வெகுமதியையோ எதிர்பார்க்கவில்லை"  என்று இயம்பினாள். இச்

செய்தியைக் கூறும் பாடல் பின்வருமாறு:

"தொழில்தேற்றாப்  பாலகனை  முன்னிறீஇப்  பின்னின்

அழலிலைவேல். காய்த்தினார்  பெண்டிர்---கழலடைந்து

மண்ணீத்தல்  என்ப  வயங்குதார்  மாமாறன்

கண்ணீத்தம்  தீர்க்கும்  மருந்து".

அருஞ்சொற் பொருள்:

தொழில்தேற்றா--போர்த்தொழில் பயில்விக்கப் படாத;

முன்னிறீஇ--முன் நிறுத்தி.

அழலிலைவேல்--வெம்மைமிகு இலைவடிவ வேல்;

காய்த்தினார்--சினங் கொண்டார்;

மண்ணீத்தல்--நாட்டைக்  கொடுத்தல்;

வயங்குதார்--ஒளிமிகுந்த மாலை;

மாமாறன்--பாண்டியன்

கண்ணீத்தம்--கண்ணீர் வெள்ளம். பாடலைப் படித்து இன்புறுவோம்.


யானையிடம் கெஞ்சிய மடந்தை.

முடியுடை மூவேந்தராயினும், குறுநில அரசர்களாயினும்  தத்தம் தலை

நகரத்தில் அடிக்கடி வீதியுலா வருவது வழக்கம்.  அப்பொழுதுதான் பொது

மக்களைச் சந்திக்கவும், அவர்களின் நலத்தைப் பற்றிக் கேட்டறியவும்,

அரசாட்சியில் ஏதாவது குறைகள் உள்ளனவா?  என்பது பற்றித் தெரிந்து

கொள்ளவும் வாய்ப்புக் கிட்டும். வழக்கம் போலப் பாண்டிய வேந்தர் தம்

பிடி (பெண்யானை) மீதேறிக் கம்பீரமாக வீற்றிருந்து யானையை நடத்திவருகிறார்.

பாதுகாப்புக்குப் படைவீரர்கள்  இருபுறமும் அணிவகுத்து உலா வருகின்றனர்.

வீதியின் இருபுறமும் பொதுமக்கள் வேந்தரைக் காணும் ஆர்வத்துடன்

நின்று கைகளை அசைத்து வரவேற்கின்றனர். பருவப் பெண்கள் பலகணி (சன்னல்)

வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில அன்னையர் தம் பெண்கள்

உலாவைக் காண இயலாதபடி  வாயிற் கதவையும் சாளரத்தையும் அடைத்து

விட்டுத் தாம் வெளியே நின்று உலாவைப் பார்க்கின்றனர். வேந்தரின் கம்பீரத்

தையும் அழகையும் கண்டு பருவப் பெண்கள் தேவையில்லாத ஆசையை

மனத்தில் வளர்த்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடனேயே  அன்னை

யர் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் இந்தக் கண்டிப்பையும் மீறி

மடந்தையர் அன்னையர் அறியாமல் சாளரத்தைத்  திறந்தோ கதவைத் திறந்தோ

உலாவரும் வேந்தரையும் உடன்வருபவரையும் பார்க்கத்தான் செய்கின்றனர்.

அப்படி ஒரு மடந்தை  வேந்தரைப் பார்த்துத் திகைக்கின்றாள். வேந்தரின் பெருமிதத்

தையும் அழகையும் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்கிறாள். பிடியானை

யின் தோற்றமும் அவளை வெகுவாகக் கவர்கின்றது. உடுக்கை போன்ற நான்கு

கால்களும், கேடயம் போன்ற தோற்செவிகளும்,  அசைகின்ற  தும்பிக்கையும்

தொங்குகின்ற வாயும் கொண்டு செம்மாந்து நடந்துவரும் அப் பிடியின் தோற்றம்

அவள் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோலப் பதிகின்றது. உலா முடிந்து அனைவரும்

அரண்மனைக்குச் சென்றுவிட்டனர்.


அந்த மடந்தைக்கு  வேந்தரையும் அவரது பிடியையும்  மீண்டும் ஒருமுறை பார்க்கும்

ஆவல் எழுந்தது. இந்த நினைவுடனே சில நாட்களைக் கழித்தாள். ஒருநாள் வேந்தர்

நீராட  அவர் பாதுகாவலர்கள் புடைசூழ  ஆற்றை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆற்றுக்கு அருகில் அவளது சேரி இருந்தது. அவளது சேரி வழியாக அனைவரும்

வந்தனர். வேந்தர் தனது பிடியானையின்மேல் வீற்றிருந்தார். அப்போழுது அந்தப்பெண்

பிடியிடம் கெஞ்சிச் சொன்னாள்:" பிடியே! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

வேந்தர் ஆற்றில் நீராடிய பிறகு  மார்பில் சந்தனத்தைப் பூசிக் கொண்டு  அரண்மனைக்குத்

திரும்பும் பொழுது  என் சிற்றிலின் சாளரம் வழியாக நடந்து செல்" என்றாள். இந்தச்

சொல் ஓவியத்தை முத்தொள்ளாயிரம் அழகாகக் காட்டுகின்றது. அது பின்வருமாறு:

"துடியடி; தோற்செவி; தூங்குகை; நால்வாய்ப்

பிடியே!யான் நின்னை இரப்பன்--கடிகமழ்தார்ச்

சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம்

சாலேகம் சார நட."

(துடி=உடுக்கை; தோற் செவி=தோற்  கேடயம் போன்ற செவி; தூங்குகை=அசைகின்ற 

தும்பிக்கை; நாலு வாய்= தொங்குகின்ற வாய்; கடி=மிக்க;  கமழ்தார்=மணக்கும் மாலை;

சேலேகம்= சந்தனம்; சாலேகம்=சாளரம், சன்னல், பலகணி, காலதர்).

நீராட்டம் முடிந்து வேந்தர் உட்பட அனைவரும் அரண்மனைக்குப்  புறப்பட்டனர்.

இயல்பாகவே அந்தப் பிடி அவள் சிற்றிலின் சன்னல் வழியாகச் சென்றது.  அவள் தனது

எண்ணப்படியே  வேந்தரைக்  கண்ணாரக் கண்டு உவகையடைந்தாள்.


கடுமையான நெறிமுறைகள்  சமுதாயத்தில் நிலவிய போதிலும்,  அன்னையர் இற்செறிப்பு,

கடிகாவல் முதலிய ஏற்பாடுகளைச் செய்தாலும்  பருவ வயதுப் பெண்களிற் சிலர் அந்த

வயதுக்குரிய குறும்புகளோடு நடந்துகொள்ளுதலைத் தவிர்த்தல் இயலாது போலும். முத்

தொள்ளாயிரம் காட்டும் இந்தச் சொல் ஓவியம்  சுவைத்தின்புறத் தக்கது.