Friday 15 October 2021

நடுவண் அரசுக்கோர் விண்ணப்பம்.

 நடுவண் அரசே! நாசகர நீட் தேர்வை விலக்க உதவுக.


இன்தமிழ் இளைஞர் தங்கள் இலட்சியக் கனவாய் எண்ணும்

மன்பதை காக்கும் தூய மருத்துவர் ஆக வேண்டி

உன்னத மாகக் கற்றே உயர்ந்தநல் மதிப்பெண் பெற்றும்

இன்னல்செய் நீட்டுத் தேர்வால் இடம்கிடைக் காமல் போகும்.


தேர்வினில் தில்லு முல்லு;. தீங்குசெய் ஆள்மா றாட்டம்;

நேர்மையோ சிறிதும் இல்லை; நிறைபொருட் செலவி  ழுக்கும்

சீர்கெட்ட பயிற்சி மையம்; செய்வது தேரா மக்கள்;

யாரிதை விரும்பி ஏற்பார்? யாவர்க்கும் இடைஞ்சல் தானே!


உத்தமர் காந்தி அண்ணல், " ஊரக மக்கள் வாழ்வை

மெத்தவும் உயர்த்தல் வேண்டும்;  வினைசெய்க" என்றார்; நீட்டால்,

எத்தனை முயன்றும் அன்னார் இடம்பெற இயல வில்லை;

சித்தத்தில் சோர்வ டைந்து செத்தார்போல் திரிகின் றாரே.


தமிழக அரசுப் பள்ளி  தன்னிலே கற்ற மக்கள்

தமிழ்வழி கல்வி கற்ற சால்புடை மாண வர்கள்

சமுகத்தில் ஒதுக்கப் பட்டோர்,  தாழ்த்தியே  வைக்கப் பட்டோர்

அமிழ்தன வைத்யக்  கல்வி அடையவே இயல வில்லை.


பெருந்தொகை செலவு செய்வோர், பித்தலாட்  டத்தில்  தேர்ந்தோர்,

திரும்பவும் இந்தத் தேர்வைச் சிலமுறை  எழுதிப் பார்ப்போர்,

வருந்தியே படித்தி டாமல் பிறரைப்பார்த் தெழுது  வோர்கள்

மருத்துவ இடத்தைப் பெற்று வாகையே சூடு  கின்றார்.


செந்தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ  இடத்தில் எல்லாம்

இந்தியத் திருநாட் டைச்சேர் ஏனைமா நிலத்தில் வாழ்வோர்

விந்தையாய் இந்தத் தேர்வில் வெற்றியைப் பெற்றுக் கற்பார்;

எந்தவோர் நிலையி வேனும் இழைப்பரோ கிராம சேவை?



மாநில அரசின்  கீழே மாபெரும் வளர்ச்சி கண்ட

தேனிகர் கல்வி தன்னைப் பொதுப்பட்டி தனிலே சேர்த்து

வானுயர் அதிகா ரத்தை மையத்தில் குவித்துக் கொண்டீர்;

ஏனிந்த  அநீதி ஐயா! எம்வசம் ஒப்ப டைப்பீர்.


மருத்துவக் கட்ட மைப்பில்  வானுயர் வளர்ச்சி கண்ட

அருந்தமிழ் நாட்டில் வாழும் அறிவுடை மாண வர்க்கு

மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்பினைத் தடுக்கும் கல்லாய்

வருத்திடும் நீட்டுத் தேர்வை  வன்மையாய் விலக்கு வோமே!


ஏழைகள் எளிய மக்கள் இத்தமிழ் நாட்டில் நொந்து

கோழை போல் உயிரை மாய்த்தல் கொடிதினும் கொடிது மாதோ!

பாழெனும் இந்தத் தேர்வால் பதினான்கு பேர்கள் மாய்ந்தார்;

ஊழென வந்த நீட்டுக்(கு) உடனடி விலக்குத் தாரீர்.


தமிழகச் சட்ட  மன்றம்  தகவிலா நீட்டை நீக்கிச்

சமத்துவம் பேண வேண்டிச் சட்டமொன் றியற்றி யுள்ளார்;

இமையெனக் காக்கும் மைய இந்திய அரசாங் கத்தார்

தமதுநல் இசைவைச் சொன்னால் தரமிலா நீட்டு நீங்கும்.