Monday 13 May 2024

விலங்குகள் வெளிப்படுத்தும் அன்பு/நட்பு.

 விலங்குகள் வெளிப்படுத்தும் அன்பு/நட்பு.


ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்

ஆட்சிக் காலத்தில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திவான்

ரீஜெண்ட்(சமஸ்தானத்தின் மன்னர் பட்டத்துக்கு உரியவர்

ஆட்சி செய்யும் வயது முதிர்ச்சி அடையாதவராக இருப்பின்

உரிய வயது அடையும்வரை அவர் சார்பாகச் சமஸ்தான நடவடிக்

கைகளைப் பொறுப்புடன் கவனித்துக்கொள்ளும் அரசப் பிரதிநிதி)

பதவியில் இருந்து பல நல்ல, அரிய செயல்களைச் செய்தவர் மாட்சிமை

கொண்ட அமராவதி சேஷையா சாஸ்திரிகள் ஆவார். மக்களுடைய

இயல்புகளை நன்றாக அறிந்து அவர்களின் குறைகளைத் தீர்ப்பதில்

வல்லவர். வாயில்லா உயிரினங்கள்மீதும்  அத்தகைய  அருளைப்

பொழிந்தவர்.


ஒருசமயம் பட்டத்து யானைக்கு மதம்  பிடித்துவிட்டதாகவும்  கொடுத்த

உணவை உண்ணாமல் வீசியெறிந்துவிடுவதாதவும் சிலநேரங்களில்

காலின் கீழே போட்டு மிதித்து விடுவதாகவும் அடிக்கடி பிளிறிக்கொண்டே

இருப்பதாகவும் யாரும் அதனை நெருங்குவதற்கு அஞ்சுவதாகவும்  பணி

பாளர்கள் அவரிடம் தெரிவித்தனர். உடனே பாகனை அழைத்து இதுகுறித்து

விசாரித்தார். பாகன்" ஐயா நான் பணியில் சேர்ந்து சில நாட்களே கடந்துள்ளன.

இதற்கு முன்பு பணியில் இருந்த பாகன் உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

அவருக்குப் பதிலாக என்னை நியமித்துள்ளனர். நான் என்னால் இயன்ற

பணிவிடைகளைச்செய்து வருகிறேன்.ஆனாலும் பட்டத்து யானை இயல்பு

நிலையில் இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக யானையின் நான்கு

கால்களிலும் இரும்புச் சங்கிலிகளைச் சுற்றிப்  பிணைத்துள்ளேன்" என்றார்.


திவான் ரீஜெண்ட் உடனே தாமே நேரில் சென்று யானையின் நிலையை ஆய்வு                  

செய்ய எண்ணி யானை கட்டப்பட்டுள்ள கூடாரத்துக்கு வந்து யானையைப் பார்த்தார்.

கரும்பு, அரிசி, வெல்லம் முதலியவைகளைக் கொண்டுவந்து யானைக்குப் படைக்குமாறு

பணியாளர்களை ஏவினார். அவையெல்லாம் யானைமுன்பாகப் படைக்கப் பட்டன. ஆனால்

யானை அவற்றை எடுத்து உண்ணாமல் கீழே போட்டுவிட்டது. திடீரென்று உரத்த குரலில்

பிளிறியது. அதனுடைய கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது. மத்தகத் 

திலிருந்து மதநீர் ஏதும் கசியவில்லை. அதற்கான அறிகுறி ஏதுமில்லை. எனவே திவான்  

யானைக்கு  மதம் பிடிக்கவில்லை என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்து

கொண்டார். வேறு யாது காரணத்தால் யானை இயல்புநிலை தவறி நடக்கிறது? என்று

ஆழ்ந்து சிந்தித்தார்.


பட்டத்து யானையை வேடிக்கை பார்க்கச் சிலர் குழுமியிருந்தனர். ஆனால் எவரும் அதன்

அருகில் செல்ல அஞ்சி ஒதுங்கியே நின்றனர். கூட்டத்தில் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி

யானையைப் பார்த்துக் கதறியழுதுகொண்டிருந்தாள். யானை  அப்பெண்ணை நோக்கித்

துதிக்கையை நீட்டி நீட்டிப்பிளிறியது. இதனைக் கூர்ந்து கவனித்த திவான் அப்பெண்ணை

அருகில் வருமாறு அழைத்து விசாரித்தார். "ஏனம்மா அழுகின்றாய்?  யானையைப் பார்த்துப்

பார்த்துக் கதறியழுவதன் காரணம் என்ன?" என்று வினவினார். உடனே அப்பெண் தன்

முந்தானையால் முகத்தைத் துடைத்துக் கோண்டு " ஐயா! என் கணவர்தான் இந்தப் பட்டத்து

யானையைக் கவனித்து வளர்த்து வந்தார். ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இந்த யானை

என் கணவரிடம் மிகவும் அன்பாகப் பழகி வந்தது. அண்மையில் அவர் நோயுற்று இறந்து

விட்டார். அந்தத் துக்கத்தில் நான் வீட்டுக்குள்ளேயே முடங்கி அழுது கொண்டிருந்தேன்.

இன்று இந்த யானைக்கு மதம் பிடித்துவிட்டதாகவும்  இயல்பை மீறி நடப்பதாகவும் கேள்விப்

பட்டு இங்கு வந்தேன். யானையைக் கண்டவுடன் அதன் வாடிய தோற்றத்தைப் பார்த்துத்

துக்கம் நெஞ்சையடைக்க அழுது கொண்டிருக்கிறேன்" என்றாள். உடனே திவான் அவளிடம்

"நீ இந்தக் கரும்பை யானையிடம் கொடுத்துப் பார்" என்றார். அப்பெண் தயக்கத்தோடும்

அச்சத்தோடும் சற்றுத் தொலைவில் இருந்தபடி கரும்பை யானையிடம் நீட்டினாள். என்ன

வியப்பு! யானை பாகனின் மனைவி தனக்குப் பழக்கப்பட்டவள் என்பதனாலும், எத்தனையோ முறை அவள் கையால் கவளம் முதலிய உணவை வாங்கியுண்டதாலும்

தட்டாமல் அவள் கொடுத்த கரும்பை உண்ணத் தொடங்கியது. உடனே குழுமியிருந்த

மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். திவான் மேலும் சில கரும்புகளையும் அச்சுவெல்லம் அரிசி முதலியவற்றையும் யானைக்குக் கொடுக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறே

அப்பெண் அனைத்தையும் கொடுக்க, யானை எல்லாவற்றையும் வாங்கியுண்டது.

ஓரிரு நாட்களாக உணவேதும் உண்ணாமல் இருந்த யானை தற்பொழுது வயிறார

உண்டவுடன் தெளிவு பெற்றது. 


இவ்வண்ணமே  இன்னும் சிலகாலம் செய்து வருமாறு அப்பெண்ணுக்குத் திவான்

கட்டளையிட்டார். மேலும் புதிய பாகனையும் யானையிடம் பழகச்செய்யுமாறு அப்

பெண்ணுக்கு அறிவுறுத்தினார். இவ்வாறு பட்டத்து யானையால் பழைய பாகனின்

மனைவிக்கு அரண்மனைத் தொடர்பு விட்டுப் போகாமல் தொடர்ந்தது. யானையும்

புதிய பாகனிடம் பழகி அவரை ஏற்றுக்கொண்டது. விலங்குகளும் அன்பையும் நட்பை

யும் வெளிப்படுத்துகின்றன. பழைய பாகன் இறந்தவுடன் அவர் நட்பையிழந்த துயரத்

தால் வாடிய யானை பாகனின் மனைவியின் நட்பாலும் புதிய பாகனின் நட்பாலும்

துன்பம் நீங்கித் தெளிவும் தெம்பும் பெற்று இயல்புநிலை அடைந்தது. அன்பே உலகில்

அனைத்தையும் ஆட்டிப் படைக்கிறது என்பது உண்மை.


பார்வை: 'நல்லுரைக் கோவை'--ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதனார்.

                  (நாலாம் பாகம்).

Saturday 27 April 2024

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி..

 தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி.


அது பதின்மூன்றாம் நூற்றாண்டுக் காலம். தமிழகத்தில் ஒன்பதாம்

நூற்றாண்டு தொடங்கிப் பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை இடைக்

காலச் சோழர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்த காலம். ஏறத்தாழ

நானூறு ஆண்டுகளுக்கு மேல் பேரரசைக் கட்டியாண்ட சோழர்கள்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் வலிமை குறைந்து ஆட்சிப் பரப்பை

இழக்கத் தொடங்கியிருந்த காலம். அதேநேரம் இடைக்காலப் பாண்டி

யர்கள் தலையெடுக்கத் தொடங்கிய காலம். முதலாம் சடையவர்மன்

சுந்தரபாண்டியன் கி.பி.1251இல் அரியணை ஏறி ஆட்சி நடத்திக்

கொண்டிருந்தார். கடந்த இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளாகச்

சோழர்களிடம் அடிமைப் பட்டுக் கிடந்த பாண்டியர்கள் எழுச்சி பெறத்

தொடங்கினர்.


கொங்கு நாடு சங்க காலத்திலிருந்தே குறுநில மன்னர்களால் ஆளப்

பட்டு வந்தது. அவ்வப்பொழுது சேர, சோழ மற்றும் பாண்டிய வேந்தர்கள்

கொங்குப் பகுதியைக் கைப்பற்றித் தம் ஆளுகைக்கீழ்க் கொண்டு வருவர்.

பிறகு அது அவர்களின் பிடியிலிருந்து விலகி ஆங்காங்கே குறுநில மன்னர்களின்

ஆட்சிக்கீழ் சென்றுவிடும். கொங்கு நாட்டில் வீரம் செறிந்த தலைவர்கள்

பலர் தோன்றியுள்ளனர். அவர்கள் தமக்குரிய சிறு படையைத் திரட்டித்

தத்தம் நிலப் பகுதியைப் பாதுகாத்துக் கொள்வர். சேர, சோழ, மற்றும்

பாண்டிய வேந்தர்கள் தேவைப்படும் பொழுது இவர்  போன்ற குறுநில

மன்னர்களின் உதவியை நாடுவர். இவர்களும் அவர்கள் அழைப்புக்கு

இணங்கி உதவி செய்துவிட்டு உரிய ஊதியத்தைப் பெற்றுக் கொள்வர்.


அக்காலக் கட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பழைய கோட்டை

என்ற ஊர் சிறப்போடு விளங்கியது. அங்கு வாழ்ந்த கொங்கு வேளாளர்

தலைவருக்குப் பழைய கோட்டைப் பட்டக்காரர் என்ற பெயர் நிலவியது.

அவர் கொங்கு வேளாளரின் நலம் கருதி நாட்டாண்மை செலுத்துவார்.

அந்த ஊருக்குக் காரை என்ற மற்றொரு பெயரும் இருந்தது. நத்தக்காரையூர்

என்ற பெயரில் அழைக்கப்பட்டது. சுந்தரபாண்டியன் காலத்தில் மேற்படி ஊரில்

சர்க்கரை மன்றாடியார் என்ற தலைவர் வாழ்ந்துவந்தார். சர்க்கரை என்பது

இயற்பெயர். மன்றாடியார் என்பது குலப்பெயர். மன்று என்பது கிராம நீதி

மன்றம் போன்றது. தம் குலத்தினரின் வழக்குகளை விசாரித்து நீதி/தீர்ப்பு

வழங்கியமையால்  மன்றாடியார் என்னும் பெயர் வாய்த்தது.


சர்க்கரை மன்றாடியார் காலத்தில் கொங்குப் பகுதி பாண்டியர் ஆட்சிக் கீழ்

இருந்தது. பாண்டியர் ஒருமுறை கொங்குப் பகுதிக்கு வந்தபோது சர்க்கரை

மன்றாடியார் அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது

பாண்டியர் தமது படையில் கொங்கு வீரர்களைக் கொண்ட ஒரு படைப் பிரிவை

உருவாக்க விரும்புவதாகவும் சர்க்கரையார் அப்பிரிவுக்குச் சேனாபதியாகப்

பணிபுரிதல் வேண்டும் என்றும் கோரினார். ஆழ்ந்த சிந்தனைக்குப்பின் அவர்

சம்மதித்தார்.


பாண்டியர் படையில் கொங்குப்படைப் பிரிவு உருவாக்கப்பட்டதை அறியாத

சோழ வேந்தர் சர்க்கரையாருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.. அதில் "வழக்கம்

போல  நீங்கள் உங்கள் படையை அனுப்பி உதவி புரியவும். தக்க ஊதியம்

வழங்கப்படும்" என்று எழுதப்பட்டிருந்தது. உடனே சர்க்கரையார் " நான் கூலிப்படை

திரட்டி வைத்திருக்கவில்லை. எனவே அனுப்ப இயலாது" என்று மறுமொழி

அனுப்பினார். சோழன் மிக்க சினமடைந்து " தாங்கள் படையை அனுப்பாவிட்டால்

தங்கள் பகுதி மீது போர்தொடுப்பேன்" என்று மிரட்டி ஓலைவிடுத்தார்.. சர்க்கரையார்

ஓலையைத் தூக்கி எறிந்து விட்டார்.

பாண்டிய உளவு வீரர்கள் இச்செய்தியைப் பாண்டிய வேந்தருக்குத் தெரிவித்தனர்.

பாண்டியர் சர்க்கரையாருக்கு அவசரமாக ஓலையை அனுப்பி" படையுதவி தேவையா?"

என்று விசாரித்தார். " படை ஏதும் அனுப்ப வேண்டாம். நாங்களே சமாளித்து விடுவோம்"

என்று பதில் ஓலை அனுப்பினார் சர்க்கரையார். சோழன் சொன்னபடியே படையெடுத்து

வந்து கருவூருக்குள் நுழைந்து விட்டார்.. சர்க்கரையார் தமது கொங்குப் படைவீரர்களோடு

சோழ நாட்டுப் படைகளை எதிர்கொண்டார். கடுமையான போர் நிகழ்ந்தது. குருதி

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சோழப்படைகளுக்குப் பெருத்த இழப்பு நேரிட்டது.

சர்க்கரையாரும் சோழ வேந்தனும் நேருக்குநேர் சந்தித்துக் கொண்டனர். இடையில்

இருபதடித் தொலைவே இருந்தது. சர்க்கரையார் தொடுத்த அம்பு சோழனின் தலைக்

கவசத்தை வீழ்த்தியது. அடுத்து அவர் விடுத்த அம்பு சோழனின் தலைமுடியை உரசிச்

சென்றது. உரசிய வேகத்தில் அவர் தலைமுடியைப் பிய்த்துச் சென்றது. சோழனின்

சுருண்ட முடிக் கற்றை போர்க்களம் எங்கும் பரவலாகச் சிதறியது. தலைக்கு வந்த

தீங்கு தலைக் கேசத்தோடு போனது என்று எண்ணிய சோழன் புறங்காட்டி ஓடினார்..

அவரைத் தொடர்ந்து எஞ்சிய சோழ வீரர்களும் ஓடத் தொடங்கினர். போர்க்களக்

காட்சியை யாரோ ஒரு புலவர் மிக அருமையாக விவரித்துப் பாடியுள்ளார்:

"ஆறெல்லாம் செந்நீர்; அவனியெல்லாம் பல்பிணங்கள்;

தூறெல்லாம் சோழன் சுரிகுஞ்சி---வீறுபெறு

கன்னிக்கோன் ஏவலினால் காரைக்கோன் பின்தொடரப்

பொன்னிக்கோன் போன பொழுது".

(தூறு=புதர்; சுரிகுஞ்சி= சருண்ட தலைமுடி; கன்னிக்கோன்=கன்னியாகுமரிக்குத்

தலைவனான பாண்டியன்; காரைக்கோன்= நத்தக்காரையூர்த் தலைவனான

சர்க்கரை மன்றாடியார்; பொன்னிக்கோன்= காவிரிநாட்டுக்குத் தலைவனான

சோழன்).


வெற்றிக்குப் பிறகு சர்க்கரை மன்றாடியார் சடையவர்மன் சுந்தர பாண்டியனை

மதுரையில் சந்தித்துப் போர்க்களச் செய்திகளை எடுத்துரைத்தார். பாண்டியர்

பெருமகிழ்ச்சியடைந்து பலப்பல பரிசுகளைச் சர்க்கரையாருக்கு அளித்தார்.

மேலும்" இன்றுமுதல் நீங்கள் வெறும் சேனாபதியல்லர்; நல்ல சேனாபதி" என்ற

பட்டத்தையும் நல்கினார். அன்றுமுதல் அவர் பழையகோட்டைப் பட்டக்காரர்

நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் ஆனார். அவரின் வழித் தோன்றல்கள்

மேற்படி பட்டத்தை இன்றும் தம் பெயருக்குப்பின் சூடிக் கொள்கின்றனர்.


பார்வை: 'நல்ல சேனாபதி' நூல்-- ஆசிரியர் தமிழறிஞர் கி.வா.ஜெகந்நாதனார்.

Sunday 7 April 2024

குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்கு நாட்டு மற்போர் வீரர்)

 குதிரையை அடக்கிய குப்பிச்சி(கொங்குநாட்டு மற்போர் வீரர்)


கொங்கு நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பூந்துறை என்னும்

ஊரில் மாட்டையாக் குப்பிச்சி என்ற மற்போர் வீரர் இருந்தார்.கொங்கு

வேளாளரில் காடையென்னும் வமிசத்தில் தோன்றியவர் அவர். மற்போர்

புரிவதில் வல்லுநர். பல நாடுகளுக்குச் சென்று ஆங்காங்கு நிலவும்

சிறப்புக்களையும் பண்பாட்டுப் பாங்குகளையும் தெரிந்துகொள்ள ஆவல் 

கொண்டார். கொங்கு நாட்டில் விசயநகர மன்னர்கள் ஆட்சி செலுத்திய

காலம். குப்பிச்சி தான் திட்டமிட்ட படியே விசய நகரம் சென்றுசேர்ந்தார்.


அங்கே ஒரு ஆஸ்தான மற்போர் வீரர் இருந்தார். வெளிநாட்டிலிருந்து

வரும் மற்போர் வீரர்கள் அவரோடு மற்போர் புரிந்து வெற்றியடைந்தால்

மட்டுமே அரசரைப் பார்க்க முடியும். இல்லாவிட்டால் அந்த ஆஸ்தான

மல்லருக்குப் பணிந்து நடத்தல் வேண்டும். ஒரு நீண்ட சங்கிலியை அரண்மனை

முதல் வாயிலில் மேலே வளைவாகத் தொங்கவிட்டு அதன் ஒரு நுனியைத்

தன் இடக்கால் விரலால் பற்றிக்கொண்டிருப்பார். வெளிநாட்டிலிருந்து

வருபவர்கள் தலைவணங்கி அச்சங்கிலியின் கீழே நுழைந்து வரல் வேண்டும்.

தன் கால் பட்ட சங்கிலிக்கும் வருபவர்கள் பணிவுகாட்டல் வேண்டும் என்ற

இறுமாப்புடன் நடந்து கொண்டது வெளிப்படையாகத் தெரிந்தது. அந்நாட்டு

மன்னர் இதனைக் கவனிக்கவேயில்லை.


போதாக்குறைக்கு அவர் ஒரு அடங்காத முரட்டுக் குதிரையை வேறு வளர்த்து

வந்தார். ஆஸ்தான மல்லரைத் தவிர வேறு யாரையும் தன்மேல் சவாரி செய்ய

அக்குதிரை அனுமதித்ததில்லை. சொல்லப் போனால் வேறு யாரும் அக்குதிரைமீது

ஏறினால் உயிர் பிழைப்பது அரிதாகும். வேறு நபர் ஏறிவிட்டால் அக்குதிரை

குதிக்கும்; சுற்றிச் சுழலும்; வெறித்தனமாக ஓடும். இப்படியெல்லாம் செய்து

ஏறிய நபரைக் கீழே தள்ளிவிடும். இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஏறிய நபர்

இறங்காமல் சமாளித்துவிட்டால்  அருகிலுள்ள அவ்வூரின் பெரிய ஏரிக்குள்

பாய்ந்து செல்லும். மடமடவென்று நீரில் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும்.

ஆழமான பகுதியில் தன் மேல் ஏறியுள்ள நபரை விழவைக்கும். விழுந்தால்

மூச்சுத்திணறிச் சாகவேண்டியதுதான். இந்த அளவு முரட்டுத்தனம் கொண்ட

குதிரையாகும். இதனால் ஆஸ்தான மல்லரோடு யாரும் வம்பு, வழக்கு வைத்துக்

கொள்வதில்லை. அவருடன் யாதொரு மோதலும் மேற்கொள்ளாமல் மன்னரைப்

பார்த்து வணங்கிப் பரிசு ஏதேனும் கிடைத்தால் பெற்றுக்கொண்டு ஆஸ்தான

மல்லருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு வந்துவிடுவர். இப்படியாக ஆஸ்தான

மல்லர் போட்டி அரசு நிகழ்த்திக் கொண்டிருந்தார்.


இந்தச் சூழ்நிலையில் நம் குப்பிச்சி ஆஸ்தான மல்லருடன் மற்போர் நிகழ்த்தத்

தனக்குச் சம்மதம் என்று பலர் முன்னிலையில் அறிவித்துவிட்டார். ஆஸ்தான

மல்லர் திகைத்துப் போனார். தன்னோடு மற்போர் புரிய யாரும் இதுகாறும்

முன்வந்ததில்லை. அந்த அளவுக்கு அனைவரையும் அரட்டி உருட்டி வைத்திருந்தார்.

தற்பொழுது வெளியூர்க்காரர் தனக்கு அறைகூவல் விடுவதை ஏற்றுக்கொள்ள

இயலவில்லை. வேறுவழியின்றித் தானும் சம்மதிப்பதாகக் கூறினார். மன்னர்

காதுக்கு இந்தச் செய்தி எட்டியது. மளமளவென மற்போருக்கான ஏற்பாடுகள்

செய்யப்பட்டன. அரங்கம் தயார் செய்யப் பட்டது. பொதுமக்கள் ஏராளமாகக்

குழுமிவிட்டனர். மற்போர் தொடங்கியது. ஆஸ்தான மல்லர் வெகுநாட்கள் மற்போர்

புரியாமல் சுகவாசியாக இருந்தமையால் தொடக்கத்திலிருந்தே சுணக்கம்

காட்டினார். நம் குப்பிச்சியோ வெளிநாட்டில் தன் திறமையைக் காட்ட எண்ணி

முனைப்புடன் மற்போர் நிகழ்த்தினார். பிறகென்ன? குப்பிச்சி ஆஸ்தான மல்லரை

வீழ்த்தி வெற்றிக்கொடி நாட்டினார்.


ஆஸ்தான மல்லர் உடனே குப்பிச்சியிடம் அறைகூவல் விடுக்கலானார். "என் முரட்டுக்

குதிரையை அடக்கினால்தான் நான் தோல்வியை ஒப்புக்கொள்வேன்" என்றார்.

குப்பிச்சி அறைகூவலை ஏற்றக்கொண்டார். "நாளை இதே நேரத்தில் குதிரையை

அடக்கும் போட்டியை நடத்தலாம்" என்றார். மன்னர்"அப்படியே ஆகட்டும்" என்றார்.

குப்பிச்சி அன்றைய மாலைப் பொழுதில் சுண்ணாம்புக் கற்களை ஒரு துணியில்

நிரப்பி அதனை நன்கு மடித்துக் கொண்டார். குதிரையின் சேணத்தின்மீது இந்தச்

சுண்ணாம்புக்கல் கொண்ட துணியைத் தோதாகச் சுற்றிக் கொண்டால் குதிரை

ஆற்றுக்குள் இறங்கி ஆழமான பகுதிக்குச் செல்லும் முன்பே சுண்ணாம்புக் கற்கள்

பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தும். சூட்டைத் தாங்க முடியாமல்

குதிரை கரைக்குத் திரும்பும் என்று தந்திரமாகத் திட்டமிட்டார்.


மறுநாள் மன்னர் முன்னிலையில் பொதுமக்கள் கூடினர். ஆஸ்தான மல்லரும்

குப்பிச்சியும் வருகை புரிந்தனர். குதிரை கொண்டுவரப்பட்டது. ஆஸ்தான மல்லர்

குதிரைக்குத் தேவையான போதையூட்டிக் கொண்டு வந்திருந்தார். போட்டி

தொடங்கியது. குப்பிச்சி குதிரையை நெருங்கிச் சேணம், கடிவாளம் போன்றவற்றைச்

சரிசெய்வதுபோல் தான் தயாரித்து வைத்த சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணியைச்

சேணத்தின் மீது சுற்றி வைத்துக் குதிரையின்மீது தாவியேறினார். சுண்ணாம்புக்

கற்கள் நிரம்பிய பகுதி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்தது.

குப்பிச்சி ஏறியவுடன் குதிரை சிலிர்த்துக்கொண்டு குதித்தது; சுழன்றது; தாவியது;

அதிவேகமாக ஓடியது. குப்பிச்சி குதிரையின் மீது படுத்தவண்ணம் அதன் கழுத்தை

இறுகப் பற்றிக் கொண்டார். குதிரையால் அவரைக் கீழே தள்ள இயலவில்லை. எனவே,

ஏரியை நோக்கி ஓடி அதற்குள் இறங்கியது ஆழமான பகுதியை நோக்கிச் செல்ல முயன்றது.

இதற்குள் சேணத்தைச் சுற்றியுள்ள துணியில் இருந்த சுண்ணாம்புக் கற்கள் தண்ணீர்

பட்டவுடன் பொங்கத் தொடங்கி வெப்பத்தை வெளிப்படுத்தியது.


சுண்ணாம்புக் கற்கள் நிரம்பிய துணி குதிரையின் அடிவயிற்றைத் தொட்டுக்கொண்டிருந்

ததால் வெப்பம் அதன் அடிவயிற்றைத் தாக்கியது. சூட்டைத் தாள மாட்டாத குதிரை

மேற்கொண்டு ஆழத்தை நோக்கிச் செல்லாமல் திரும்பிக் கரையை நோக்கி வரத்

தொடங்கியது. சுண்ணாம்புச் சூட்டால் குதிரையின் வெறி, வேகம் எல்லாம் தணிந்து

மெதுவாக நடை பயின்று கரையேறியது. மன்னருக்கும், ஆஸ்தான மல்லருக்கும்,

குழுமியிருந்த பொதுமக்களுக்கும் இந்தத் தந்திரம் தெரியாததால் குதிரையின்

ஆவேசம் தணிந்ததற்குக் காரணம் விளங்காமல் குப்பிச்சிக்குக் கிடைத்த தெய்வ

அருள் அவரைக் காப்பாற்றியதாக நம்பினர். குப்பிச்சி வெற்றி வீரராக அரங்கை

வலம்வந்தார். ஆஸ்தான மல்லர் நிறுவிய சங்கிலியை அகற்ற வேண்டுகோள்

வைத்தார். மன்னரும் பரிசுகள் நல்கி அவர் கோரிக்கையை நிறைவேற்றினார்.

இந்த நிகழ்வைக் கொங்கு மண்டல சதகம் என்ற நூல் விவரிக்கிறது(பா.எ.56):

"தேசுற் றிலகு விசய நகரத் திறலரசன்

வாசற் பணிக்கனை மண்கொளக் குத்தியம் மன்னனைக்கண்

டேசற் படுமய மாவினை யாட்டி யெவருமெச்ச

மாசற்ற நாடுகொள் குப்பிச்சி யுங்கொங்கு மண்டலமே."

விளக்கம்: விசயநகர அரசில் ஆஸ்தான மல்லரை வெற்றி கண்டு அவரது முரட்டுக்

குதிரையை அடக்கி எல்லோரும் மெச்ச அந்நாட்டில் சிறப்படைந்த குப்பிச்சி

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரே.


பார்வை: நினைவு மஞ்சரி 2ஆம் பாகம்(நூல்)

ஆசிரியர்: தமிழ்த்தாத்தா  உ.வே.சாமிநாதையர்

Sunday 24 March 2024

விதி வலியது. விதிப்படியே எல்லாம் நடக்கும் .

 வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி

தொகுத்தார்க்கும்  துய்த்தல் அரிது.(குறள்:377).


தனிப்பாடல்கள் பல்வேறு சூழ்நிலையில் பாடப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பாடலுக்குப் பின்னும் ஒரு கதை/நிகழ்ச்சி இருக்கும்.

பின்வரும் தனிப்பாடலும் ஒரு விந்தையான சூழ்நிலையில் தான்

பாடப்பட்டது. பாடல் பின்வருமாறு:

"நாடெலாம் செந்நெல் விளையினும் நாட்டின்

        நதியெலாம் நவமணி தரினும்

காடெலாம் ஆடை காய்க்கினும் மேகம்

        கனகமே பொழியினும் மடவாய்!

ஆடலே புரியும்  அம்பல வாணர்

       அவரவர்க்(கு) அமைத்ததே யல்லால்

வீடெலாம் கிடந்து புரண்(டு)உருண்(டு) அழினும்

         விதியலால் வேறுமொன்(று) உளதோ?".

பொருள்: நாடெல்லாம் செழிப்பாய்ச் செந்நெல் விளைந்தாலும், நாட்டின்

நதியெல்லாம் நவமணிகளைத் தந்தாலும், காடெல்லாம் ஆடையாய்க்

காய்த்தாலும், மேகம் பொன்னையே பொழிந்தாலும், பெண்ணே!, ஆடல்

நிகழ்த்தும் அம்பல வாணர் அவரவர்க்கு இன்ன இன்ன பொருளை அனு

பவிக்கும் வாய்ப்பை வகுத்துக்கொடுத்ததைத் தவிர வேறு எதனையும்,

வீடெல்லாம் கிடந்து புரண்டு உருண்டு அழுதாலும், அனுபவிக்க வாய்ப்பில்லை.

இதை விதியென்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?

இந்தப் பாடல் எழுந்த சூழ்நிலை என்னவென்று அறிவோம்.


இப்பாடலை இயற்றிய புலவர் பெயர் தெரியவில்லை. ஆனால் அவர் வாழ்ந்த

காலம் மழைபொய்த்ததனால் வறட்சி ஏற்பட்டுப் பஞ்சம் நிலவிய கொடுங்

காலம்.புலவரை ஆதரிக்க மூவேந்தர்களோ அவரையொத்த கொடை வள்ளல்

களோ இல்லாத காலம். ஆங்காங்கே சில சமீன்தார்களும், நிலக்

கிழார்களும்  வாழ்ந்துவந்த காலம். கொடுமையான பஞ்சம் நிலவிய காலம்.

புலவர்க்கோ தமிழைத் தவிர வேறு தொழில் தெரியாது. பஞ்ச காலத்தில்

பிழைப்பு நடத்த அவர் இருந்த ஊரில் வழியில்லாத காரணத்தால் வேறு

ஊருக்குச் செல்ல முடிவுசெய்து தம்மிடமிருந்த ஒருசில பொருட்களை எடுத்துக்

கொண்டு மனைவியுடன் காட்டு வழியில் நடந்து சென்றார். வேற்றூரில் எப்படி

பிழைப்பு நடத்தப் போகிறோம் என்ற கவலையுடன் தள்ளாடி நடந்து

சென்றனர். வழியில் கள்வர் சிலர் நின்றுகொண்டிருந்தனர். அவர்கள்

புலவரையும் அவர் மனைவியையும் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் தோற்றம்

கடுமையாக இருந்தது. புலவர் மனைவி அச்சத்துடன் நடுங்கியபடியே "அண்ணன்

மார்களே! நாங்கள் புலவர் குடும்பத்தினர். பஞ்சம் பிழைக்க வெளியூர் செல்கின்

றோம். எங்களுக்குத் துன்பம் இழைத்து விடாதீர்கள். எங்களைக் காப்பாற்றுங்கள்"

என்று கூறினாள். அக்கூட்டத்தில் ஒருவன் இரக்ககுணம் உடையவன் போலும்.

அவன் புலவர் மனைவியிடம்" நீங்கள் எங்களோடு இருக்கலாம். எங்கள் தொழிலில்

எமக்குக் கிடைக்கும் இலாபத்தில் உங்களுக்கும் ஒரு பங்குண்டு. ஆனால், புலவர்

எங்கள் தொழிலில் எங்களுக்கு உதவுதல் வேண்டும்" என்று சொன்னான். புலவர்

" நீவிர் என்ன தொழில்புரிகின்றீர்?" என வினவினார். "நாங்கள் கள்வர்கள். ஆனால்,

ஏழைகளிடமும்  தருமவான்களிடமும் திருட மாட்டோம்;  தாமும் அனுபவியாமல்

பிறருக்கும் ஈயாமல்  வாழ்க்கை நடத்தும் கஞ்சர்களிடம் திருடுவோம்." என் நவின்றான்.

மேலும் "நல்லவர்கள் வீட்டுக்குத் திருடச் சென்றால் அபசகுனங்கள் தோன்றி எங்களை

எச்சரிக்கும். மேலும் கன்னம் வைக்கும் பொழுது தேள் கையில் கொட்டிவிடும். நாங்கள்

அவ்வீட்டில் திருடாமல் திரும்பி விடுவோம்" என்றான்.


நாலைந்து நாட்கள் கடந்து சென்றன. கள்வர்கள் புலவரையும் மனைவியையும் நன்கு

கவனித்துக் கொண்டனர். ஒருநாள் அக்கூட்டத்தின் தலைவன்  புலவரை நெருங்கி

"ஐயா, இன்றிரவு பக்கத்து ஊரிலிருக்கும் சமீன்தார் அரண்மனைக்குச் செல்லத்

திட்டமிட்டுள்ளோம். நீங்களும் எங்களுடன் வந்து தொழிலில் பங்கெடுத்துக் கொள்

ளுங்கள்" என்று தெரிவித்தான். புலவரும் "வேதாளத்துக்கு வாழ்க்கைப்பட்டால்

முருங்கைமரம் ஏறத்தானே வேண்டும்" என்று தமக்குள் சொல்லிக்கொண்டார்.

திட்டமிட்டபடியே அனைவரும் பக்கத்து ஊருக்குச் சென்று சமீன்தார் அரண்மனையை

நெருங்கினர். கள்வர் கூட்டத் தலைவன் அரண்மனையைச் சுற்றிவந்து நோட்டமிட்டான்.

ஓரிடத்தில் கன்னமிட்டு அத்துளை வழியே புலவரை நுழையச் செய்தான். "புலவரே,

உள்ளே போய் நோட்டமிட்டு அரண்மனைப் பொக்கிஷ அறை எங்குள்ளது என்று

அறிந்து எங்களுக்குத் தெரிவியுங்கள்" என்று உரைத்தான்.


புலவருக்கு முதலில் ஒன்றும் பிடிபடவில்லை. கும்மிருட்டாக இருந்தது. சிறிது நேரம்

பழகிய பின்னர் கண்கள் நன்றாகத் தெரிந்தன. அவர் நுழைந்த இடம் அரண்மனை

அந்தப்புரம் ஆகும். அங்கு ஒரு பெரிய அறையில் வேலைப்பாடமைந்த ஒரு மஞ்சத்தில்

சமீன்தார் மனைவியுடன் உறங்கிக் கொண்டிருந்தார். அலங்கார விளக்குகள் வெளிச்சம்

தந்தன. புலவருக்கு ஒன்றும் தோன்றாமல் மஞ்சத்தினடியில் பதுங்கிக்கொண்டு என்ன

செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்.


நான்கு சாமப் பொழுது கடந்த நள்ளிரவு நேரம்.  திடீரென்று சமீன்தாரும் அவர் மனைவியும்

உறக்கத்திலிருந்து விழித்துக் கொண்டனர். எழுந்து மஞ்சத்தில் அமர்ந்துகொண்டே பற்பல

விடயங்கள் குறித்துப் பேசிக் கொண்டனர். பேச்சின் நடுவில் சமீன்தார் மனைவியிடம் "நாம்

ஒரு செய்யுள் இயற்றுவோம்; முதலிரண்டடியை நான் பாடித் தொடங்குவேன்; மீதமுள்ள

இரண்டடியை நீ நிறைவு செய்" என்றார். சொன்னபடியே முதலிரண்டடியைப் பாடிவிட்டு

மீதமுள்ள இரண்டடியைப் பாடுமாறு மனைவியிடம் கூறிவிட்டுக் காத்திருந்தார். இருவரும்

தமிழ்ப் பயிற்சி யுடையவர்களே; இருப்பினும் சமீன்தாரிடம் காணப்பட்ட வேகம் அவர்

மனைவியிடம் இல்லை. அவள் இன்னும் சிந்தித்துக் கொண்டிருந்தாள்.

இதற்கிடையில், மஞ்சத்தின் கீழே படுத்திருந்த புலவர் தாம் திருட்டுக்குத் துணையாக

வந்திருப்பதை மறந்து சமீன்தாரின் பாடலை எப்படி நிறைவு செய்யலாம் என்று

யோசித்து மீதியுள்ள இரண்டடியை உரத்த குரலில் பாடிக்கொண்டே வெளியே வந்தார்.

சமீன்தாரும் அவர் மனைவியும் திடுக்கிட்டுப் போனார்கள். அவர் மனைவி நாணத்துடன்

வேறு அறைக்குச் சென்றுவிட்டாள். சமீன்தார் புலவரைப் பார்த்துச் சினமடைந்தார்.

"யார் நீர்? இங்கு ஏன் வந்தீர்? எப்படி வந்தீர்?" என்று அடுக்கடுக்காய்க் கேள்விகளை எழுப்பி

அதட்டினார். புலவருக்கு உடலெங்கும் நடுக்கம் எடுத்தது; வாய் குழறியது; பேச்சுத்

திக்கியது. பின் ஒருவாறு மனம் தேறி தான் யார் என்பதனையும் திருடுவதற்காக

வந்ததையும் ஒரு வழியாகச் சொல்லி முடித்தார்.


சமீன்தார் புலவர் கூறிய கதையைக் கேட்டு அவர்பால் பரிவுகொண்டார். அவர் கையைப்

பற்றியிழுத்துப் பொக்கிஷ அறைக்குள் நுழைந்தார். பொக்கிஷ அறைக்குள் நுழைந்த

புலவர் பிரமிப்படைந்தார். இவ்வளவு நகைகளையும் பொற்காசுகளையும் பாத்திரபண்டங்

களையும் அவர் தம் வாழ்நாளில் பார்த்ததேயில்லை. ஒருவாறு பிரமிப்பு அகன்று இயல்பு

நிலைக்கு வந்தார். சமீன்தார் புலவரிடம் " உமக்கு எது வேண்டுமோ அதனை எடுத்துக்

கொள்க" என்று கூறினார். புலவர் வெகுநேரம் யோசித்து அங்கே தென்பட்ட ஓரளவு பெரிய

பெட்டியைக் காட்டி அதனை எடுத்துக் கொள்ளலாமா? என்று வினவினார். சமீன்தார் சரி

என்றார். புலவர் அப்பெட்டியைத் தூக்க முடியாமல் திணறித் தூக்கிக் கொண்டார். சமீன்

தாரும் ஒருகை கொடுத்தார். ஒரு வழியாகப் பெட்டியை வெளியே கொண்டுவந்துவிட்டனர்.

கள்வர்கள், வெகுநேரம் புலவர் வராததால் தப்பி ஓடிவிட்டனர். புலவர் சமீன்தாரிடம் விடை

பெற்றுக்கொண்டு மனைவி இருக்குமிடம் வந்து சேர்ந்தார்.


இருவரும் ஆவலுடன் பெட்டியைத் திறந்தனர். புலவரின் பொல்லாத விதி வேலை செய்தது.

பெட்டிக்குள் ஆடை, ஆபரணம், பொற்காசு ஏதுமில்லை. வெறும் உப்புத்தான் இருந்தது.

புலவரின் மனைவி "கீரைக் கறிக்கு உப்பு உதவும்" என்று கூறிவிட்டு அதனைத் தடவிப்

பார்த்தாள். அது சமையல் உப்பு அல்ல; வாண(வெடி) உப்பு. புலவர் பொல்லாத விதியை

நொந்து கொண்டு முதலில் கூறிய பாடலைப் பாடி மனந் தேறினார்.


ஆதாரம்: 'நான் கண்டதும் கேட்டதும்' நூல்--ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Friday 8 March 2024

பரிவட்டம்--விடாக் கண்டரும் கொடாக்கண்டரும்.

 பரிவட்டம்--விடாக்கண்டரும் கொடாக்கண்டரும்.


பொருநை(தாமிரவருணி)யாறு பாயும் திருநெல்வேலிச் சீமை

சங்க காலத்திலிருந்தே சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. பொருநை

யாறு இந்த மாவட்டத்துக்கு மட்டுமே உரித்தான ஆறாகும். ஆண்டு

முழுவதும் நீர் வற்றாமல் ஓடும் இந்த ஆறு கடலோடு கலக்குமிடத்தில்

முத்து விளைகிறது. பொருநையாற்றில் பல துறைகள் அமைந்துள்ளன.

இவ்வாற்றின் மேல் கரையில் குறுக்குத்துறையமைந்துள்ளது.  இதற்கு

வடபால் உள்ள மற்றொரு துறை சிந்துபூந்துறை யாகும். இத்துறையில்

ஆற்றின் இடையில் திருவுருமா என்ற முருகன்  தலம் அமைந்துள்ளது.

அங்கே உயரமான பாறையொன்றில் முருகக் கடவுளின் திருவுருவம்

உள்ளது. அப்பாறையே திருவுருமாமலை யாகும். அவ்வாலயத்தைச்

சார்ந்து ஒரு பெரிய மண்டபம் உள்ளது. நாடோறும் உள்ளூர் மக்களும்

வெளியூர் மக்களும் அங்கு வந்து ஆற்றில் நீராடி அம்மண்டபத்தில்

பார்த்திப பூசை, உடையவர் பூசை, ஏட்டருச்சனை முதலியன  நிகழ்த்தி

விட்டுத் தத்தம் இடங்களுக்குத் திரும்பிச் செல்வது வழக்கம்.


ஏறத்தாழ நூறு/நூற்றிருபது ஆண்டுகளுக்கு முன்பு  சைவப்பிரபுவாகிய

செட்டியார் ஒருவர் குறுக்குத்துறைக்குவந்து நீராடிவிட்டு  மண்டபத்தில்

பூசை நிகழ்த்தத் தொடங்கினார். வேலைப்பாடமைந்த ஒரு பெட்டியிலிருந்து

மூர்த்திகளையும் வெள்ளியினால் உருவாக்கப்பட்ட பூசைப் பாத்திரங்களையும்

சரிகைக்கரையிட்ட பட்டுப் பரிவட்டங்களையும் வெளியே எடுத்து வைத்தார்.

வேறொரு பிரம்புக் கூடையிலிருந்து பலவிதமான பழவகைகள், தேன், பன்னீர்,

பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கலவைச் சந்தனம், மலர்மாலைகள் முதலானவற்றை 

எடுத்து வைத்தார். அவர் பரப்பிவைத்த பொருட்களெல்லாம் அருகிலிருந்தோர் 

கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. நறுமணம் அவர்கள் மூக்கைத் துளைத்தது.


சற்று நேரத்தில் சைவகுரு ஒருவரும் அங்கே வந்து சேர்ந்தார். அவர் ஏழ்மை நிலை

யில்உள்ளவர் போலும். அவர் தம்முடைய பழைய பிரப்பம் பெட்டியைத் திறந்து சில மூர்த்தி

களையும்  கந்தல் பரிவட்டங்களையும் சில பூசைப் பாத்திரங்களையும் வெளியே எடுத்து

வைத்தார். கந்தல் பரிவட்டத்தை நீரில் நனைத்துப் பிழிந்து உலர்த்தினார். அவரும்

பூசையைத் தொடங்கினார். அவர் மனத்தில் தாழ்வு மனப்பான்மை பீறிட்டெழுந்தது.

அருகிலிருந்த செல்வந்தரான செட்டியார்பால்  காரணமில்லாமல் பொறாமை உருவானது.

செட்டியார் தம் பரிவட்டம் ஒன்றை நமக்குத்தந்தால் குறைந்தா போய்விடுவார்?  நாமும்

கடவுளுக்குச் சாத்தி மகிழலாமே என்று எண்ணினார். நேரடியாக அவரிடம் கேட்பதற்கு

வெட்கப்பட்டுத்  தயங்கினார். அவர் நல்ல தமிழ்ப் புலமை கொண்டவராதலால் உடனடியாகப்

பாடல் ஒன்றை இயற்றினார். வழக்கம்போல் தேவாரம், திருவாசகம் போன்ற பழமையான

பாடல்களைப் பாடிய பின்னர் உரத்த குரலில் தாம் புதிதாக இயற்றிய பரிவட்டம்  வேண்டும்

பாடலைப் பாடத் தொடங்கினார். அப்பாடல் பின்வருமாறு:

"நரிவட்டம் இருங்களத்தில் அந்தகா சுரனைவென்ற

      நம்பா! செம்பொற்

கிரிவட்டத் தனத்(து)உமையாள் பங்காளா! எளியன்மொழி

      கேளா(து) ஏனோ?

கரிவட்டத்(து) உரிபுனைந்த குறையோ?நம் செட்டியார்

       கையில் மேவும்

பரிவட்டம் தனில்நினைவோ? வேண்டுமென்றால் அவரதனைப்

பாலிப் பாரே."

பொருள்: நரி வட்டமிடும் போர்க்களத்தில் அந்தகாசுரனை வென்ற

சிவபெருமானே! உமையம்மையை இடப்பக்கத்தில் உடையவனே!

எளியேனின் சொல் கேளாதது ஏனோ?  யானையின் தோலைப்

போர்த்தியிருக்கும் மனக்குறையோ?(தாருகாவனத்து முனிவர்கள்

ஏவிவிட்ட யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்திக்

கொண்டதாகப் புராணம் கூறும்.) அருகிலிருக்கும் செல்வந்தரான

செட்டியார் கையிலுள்ள பரிவட்டம் பற்றிய நினைவா? வேண்டுமென்று

நீ தெரிவித்தால் செட்டியார் பரிவட்டம் ஒன்றைக் கொடுப்பாரே.

சைவகுரு தமது உள்ளக்கிடக்கையைச் சிவபெருமான் கோரிக்கையாக

எடுத்துரைத்த தந்திரத்தை மெச்சத்தான் வேண்டும்.


செல்வச் செட்டியார் சைவகுருவைவிடவும் கெட்டிக்காரர். பரிவட்டம்

வேண்டுமென்று தம்மிடம் நேரடியாகக் கேட்கத் தயங்கிச் சிவபெரு

மான் வேண்டுவது போலப் பாடுகின்றாரோ?  என்று

சிந்தித்துத் தாமும் சைவகுருவைப் போலவே பாட்டால் விடையளித்து

விடுதலே நன்று என்ற முடிவெடுத்துப் பாடல் இயற்றத் தொடங்கினார்.

சைவகுருவைப் போலச் செட்டியார் பெரும் புலவர் அல்லர். ஓரளவே

புலமையுடையவர். எனவே தியானத்தில் இருப்பதுபோல் கண்களை

மூடிக்கொண்டு வெகுநேரம் சிந்தித்து இறுதியில் பாடலை இயற்றி

முடித்தார். உடனே கண்களைத் திறந்து சைவகுருவைவிடவும் உரத்த

குரலில் பாடத் தொடங்கினார்:

"கொத்தாரும் குழலுமையாள் வாழும் பங்கிற்

        கோமானே! எளியன்மொழி கொள்ளா        தேனோ?

அத்தார்கள் ஆணை;யென(து) ஐயன் ஆணை;

         அம்மைமேல் ஆணை;யுயர் அண்டர்    ஆணை;

பத்தார்கள் ஆணை; யுன்றன் பாத‌த்(து) ஆணை;

         பண்டாரம் தொண்டைகட்டப் பாடிப் பாடிச்

செத்தாலும் எலும்பெலும்பாய்த் தேய்ந்திட்  டாலும்

          தேவரீர் உடைமையொன்றும் செலவி டேனே".

பொருள்:

உமையம்மையை இடப் பக்கத்தில் கொண்ட கோமானே!

எளியேனின் பேச்சைக் கேளாதது ஏனோ? பெரிய சமயத்

தலைவர்கள்மேல் ஆணை; என் ஐயன் சிவபெருமான்மேல் ஆணை;

உமையம்மைமேல் ஆணை; முப்பத்து முக்கோடி தேவர்கள்மேல்

ஆணை; பக்தகோடிகள்மேல் ஆணை; ஈசனே! உன் பாதத்தின்மேல்

ஆணை; சைவகுரு தொண்டைகட்டும்படி பாடிப் பாடிச் செத்தாலும்

எலும்புகள் வெளியே தெரியும்படி உடல் தேய்ந்திட்டாலும்

தேவரீர்! உமக்காக நான் வைத்துள்ள பொருள் எதனையும் செலவு

செய்யமாட்டேன், அதாவது, உமக்குரிய பொருளை நான் பிறருக்குத் தரமாட்டேன்."

சைவகுரு விடாக்கண்டர்;  செல்வந்தரான செட்டியார் கொடாக்கண்டர்.


பார்வை:

'நான் கண்டதும் கேட்டதும்' நூல் ஆசிரியர் டாக்டர் உ.வே.சாமிநாதையர்.

Tuesday 20 February 2024

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல் நீயுரைத்தி வையை நதி.

 "தாயருகா நின்று தவத்தைந்நீர் ஆடுதல்   நீ உரைத்தி வையை நதி".


நாடு செழிப்பாக இருப்பதற்குக் காரணம் மழையும் ஆறும் ஆகும்.

கடவுள் வாழ்த்தாகத் திங்களையும், ஞாயிறையும் போற்றிய

சிலப்பதிகாரம் அடுத்ததாக மாமழை போற்றுதும் என்று பகர்கிறது.

எனவே இவற்றைத் தெய்வமாகக் கருதித் தொழுதனர் பண்டைய

தமிழ்மக்கள். மாதம் மும்மாரி பொழிந்தால் அந்நாடு செழிப்படைதல்

திண்ணம். நல்ல மழைப்பொழிவு கிட்டினால் நல்ல ஆறும் நிச்சயம்

உருவாகும். தமிழ்நாட்டில் காவிரி, தென்பெண்ணை, பாலாறு, வையை,

பொருநை(தாமிரவருணி) முதலிய ஆறுகள் இருந்தாலும் பரிபாடல்

இலக்கியத்தில் பேசப்படுவது வையை மட்டுமே. அதுவும் வையைநதிக்கு

அடைமொழி கொடுத்துத் 'தமிழ்வையை' என்று புகழப்பட்டுள்ளது.

பரிபாடலில் நமக்குக் கிடைத்த பாடல்கள் இருபத்திரண்டு மட்டுமே. அதில்,

திருமாலைப் பற்றி ஏழு, செவ்வேளைப் பற்றி எட்டு, வையையைப் பற்றி

எட்டுப் பாடல்கள் கிடைத்துள்ளன. திருமால், செவ்வேள்(முருகன்) முதலிய

தெய்வங்களை வழிபட்டு அவர்களிடம் வரம் கேட்டது போலவே வையை

ஆற்றையும் வழிபட்டு வரம் கேட்டனர் என்று பரிபாடல் தெரிவிக்கிறது.


ஆறுகள்  உழவுக்கு இன்றியமையாதது போலவே புனலாடுதலுக்கும்

இன்றியமையாதது. பண்டைய தமிழ் மக்கள் ஆறு, குளம் போன்றவற்றில்

நீராடி மகிழ்ந்தனர் என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. (நூற்பா1138)

"யாறும் குளனும் காவும் ஆடிப் பதியிகந்து நுகர்தலும் உரிய என்ப".

கன்னிப் பெண்கள் தைந்நீராடுதல் தவச் செயலாகக் கருதப்பட்டது.

'ஐங்குறுநூறு' என்ற சங்க இலக்கியத்தில் ' புனலாட்டுப் பத்து' என்ற தலைப்பில்

பத்துப் பாடல்கள் உள்ளன. இக்கட்டுரை வையைப் புனல் பற்றியும், தைந்நீராடல்

பற்றியும் எடுத்துரைக்கும்.


வையை ஆறு வருச நாட்டுப் பகுதியில் உருவாகிறது. சைய மலையில் பொழியும்

மழையின் மிகுதியே வையையாற்றின் வெள்ளப்பெருக்குக் காரணமாகும். மலையிலுள்ள

புன்னை மலர்களையும், கரையிலுள்ள சுரபுன்னை மலர்களையும், வண்டுகள் ஒலிக்கும்

செண்பக மலர்களையும், குளிர்ந்த இயல்புடைய தேற்றாமரப் பூக்களையும், கூவிளைப்

பூக்களையும், கிளைகளைக் கொண்ட வேங்கைமலர்களையும், செவ்வலரி, செங்காந்தள்,

தீயென மலரும் தழைத்த தோன்றிமலர், ஊதைக் காற்றால் கட்டவிழ்க்கப்பெற்ற இதழ்களை

உடைய நீல மலர் ஆகியவற்றையும் மூங்கில் அடர்ந்த சோலைக்கு அருவி அடித்திழுத்து

வந்தது. அலைகளையுடைய நீர் அம்மலர்களைத் தள்ளி வந்து மருதந்துறையில் சேர்த்தது.

அதனால் அத்துறையின் அழகை விவரித்தல் எளிதன்று. முதலில் வளர்பிறைபோல் நீர்ப்

பெருக்கு கூடிக் கொண்டு வந்தது. பின்னர் தேய்பிறை போல் நீர்ப் பெருக்கு சுருங்கத்

தொடங்கியது. ஆனால் முற்றிலும் வற்றியதில்லை.


வையையாற்றில் மக்கள் நீர் விளையாட்டு விளையாடுவர். ஆற்றிலே அணியாக நின்று

நெட்டியாலான வாளைச் சுழற்றுவார் சிலர். குந்தம்(வேல்) ஏந்துவார் சிலர். மகளிர் தேர்க்கு

மகளிரும் மைந்தர் தேர்க்குப்பாகரும் கோல் கொள்ளக் கொடிகட்டி வலிய தேரில்

ஏறுவார் சிலர். பறவை போல் பறக்கும் குதிரை மீதும் பொன்னால் ஆன  நெற்றிப் பட்டத்தை

அணிந்த யானை மீதும் ஏறி,  ஆற்றின் ஆழமான பகுதியில் அவற்றைச் செலுத்தித் திரிவார்

சிலர். மூங்கிற் குழாயால் நீரைப் பீய்ச்சுவார் சிலர். மணமிக்க மாலையைச் சுழற்றிஎறிவார்

சிலர். கொம்பென்னும் கருவியால் நீரை வீசுவார் சிலர். பெண்கள் நீராடுதற்கேற்ற அணி

களையும் தேன் நிறைந்த மலர்களால் ஆன மாலைகளையும் அணிந்திருந்தனர். அழகிய

நகைகளோடு நுண்ணிய வேலைப்பாடமைந்த பிற அணிகளையும் பொன்னரி மாலை

யினையும் மகளிர் பூண்டிருந்தனர். வையை நீர் கார்காலத்தில் கலங்கி வேனிற் காலத்தில்

தெளிந்து வருதலால் எப்போதும் ஒரேமாதிரியாக இருப்பதில்லை.


கார்காலம் நீங்கியது. குளிர் மிகுந்த பின் பனிக்காலம் தொடங்கியது. கன்னிப் பெண்கள்

தம் தாயர் அருகே நின்று நீராடுதலால் தைந்நீராடல் அம்பாவாடல் எனவும் பெயர் பெற்றது.

"வெம்பா தாக, வியன்நில வரைப்பென

அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்

முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்

பனிப்புலர் பாடிப் பருமணல் அருவியின்

ஊதை ஊர்தர"............ (இந்நில உலகம் வெயிற் கொடுமையால் வெம்பாது  மழையால் 

குளிர்வதாகுக என வாழ்த்தி உடலை நடுங்கச் செய்யும்  பனியில் மனந்துணிந்து

தைந்நீராடினர். அப்போது சடங்குகள் அறிந்த முதுபெண்டிர், நோற்கும் முறையினைச்

சொல்லிக் கொடுத்தனர். பனியோடு கூடிய விடியற் காலத்தில் பெருமணலை அரித்தோ

டும் நீரில் மூழ்கி எழுவர். அப்போது வாடைக் காற்று வீசி நடுங்க வைக்கும்.

தைந்நீராடல் பெண்களால் தைமாதத்தில் விடியற் காலத்தில் மேற்கொள்ளப்பட்டது.

இது தவச்செயல் எனவும் கருதப்பட்டது. எனவேதான் 90,91,92ஆம் வரிகளில்

"தீயெரிப் பாலும் செறிதவமுன் பற்றியோ?

தாயருகா நின்று தவத்தைந்நீ ராடுதல்

நீயுரைத்தி வையை நதி"

என்று பாடப்பட்டுள்ளது. தைந்நீராடல் பிற்காலத்தில் சமயச் சார்புடையதாக

மாறி மார்கழி நீராடல்--பாவை நோன்பு எனப் பெயர் பெற்றது. நாட்டு நலன்

கருதி மழைவேண்டியும் நல்ல கணவன்மார் வேண்டியும் கன்னியர்

தைந்நீராடியதைப் பரிபாடல் கூறுகிறது. ஆனால், திருப்பாவை, திருவெம்பாவை

ஆண், பெண் இரு பாலாரும் வீடுபேறு(,மோட்சம்) கருதிச் சமயச் சார்புடன்

வழிபடுவதைக் கூறும்.


"தைந்நீரே! நீ நிறம் தெளிந்திருத்தலால் யாம் புனலாடுவதற்கேற்ற தகுதி

உடையாய்! எம் கழுத்தில் போட்ட கைகளை எடுக்காமல் காதலர் எம்மைத்

தழுவ, யாம் சிறந்த பேற்றினைப் பெறுவோமாக என வேண்டுவோம் என

மகளிர் வையையிடம் வரங்கேட்டு மொழிந்தனர். சிலர் எம்மால் விரும்பப்

படும் தலைவர் எம்மை விட்டுப் பிரிந்து செல்லாமல் எம்முடன் இருத்தல்

வேண்டும் என்று வரம் கேட்டனர். வேறு சிலர் எம் கணவரும் யாமும் 

பேரிளம்பெண் பருவம் அடையும்வரை இளமையுடன் இருந்து நிறைந்த

செல்வமும் கேளிரும் பொருந்த வாழ்வோமாக என வரங்கேட்டனர்..


வையையே! இத்தைந்நீராடலை முற்பிறப்பில் செய்த தவத்தால் இப்பிறப்பில்

பெற்றோம். யாவரும் விரும்பத்தக்க நிறைந்த நீர்(வெள்ளம்,) உன்னிடம்

வரும்போது மறுபிறப்பிலும் இத்தைந்நீராடல் எமக்கு வாய்ப்பதாகுக!

பரிபாடல் பதினொன்றாம் பாடல்--புலவர் நல்லந்துவனார்.


பார்வை: பரிபாடல்--வர்த்தமானன் பதிப்பக வெளியீடு.

உரையாசிரியர்: முனைவர் இரா.சாரங்கபாணி.

Monday 5 February 2024

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

 இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று தெருமந்து சாய்த்தார் தலை.


கலித்தொகையில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு காட்சியைக் காண்போம்:

தோழி கூற்று: (செவிலித் தாயிடம் உரைத்தது).

அன்னையே!  ஆற்று வெள்ள அழகால் கவரப்பட்ட தலைவி எங்களுடன்

நீராடினாள். எதிர்பாராமல் உடல் தளர்ந்து தனது தாமரை போன்ற

கண்களை மூடிக்கொண்டு  நீந்தாமல் கைசோர்ந்து நின்றவளை ஆற்று

வெள்ளம் அடித்துச் சென்றது. தீடீரென்று அவ்விடத்துக்கு வந்த ஒருவன்

தான் சூடி யிருந்த சுரபுன்னை மாலை அசைய அவ்வெள்ளத்தில் பாய்ந்து

நகையணிந்த தலைவியை மார்போடு அணைத்துக் கரைசேர்த்தான்.

கரையில் குழுமியிருந்தவர் "அவன் அவளைத் தழுவினான்" என்று அலர்

(பழி) தூற்றினர். இதில் யாரையும் குறை சொல்ல வாய்ப்பில்லை. தேவைப்

பட்டால் தன் கற்பின் திண்மையை அவள் மழையை வரவழைப்பதன் மூலம்

நிரூபிக்க இயலும். (கற்புடைப் பெண்டிர் பெய்யென்று சொன்னால் மழை

பெய்யும் என்பது மக்களிடையே நிலவிய நம்பிக்கை. "தெய்வம் தொழாள்,

கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை--திருக்குறள்)


அவளைக் காப்பாற்றிய தலைவன் அந்த மலைநாட்டுக்குத் தலைவன்.

தினைப்புனத்தைக் காவல்காப்போர் எழுப்பும் அகிற் புகையினால் நிலவு

மறைக்கப்பட்டுத் தேன்கூடு போலத் தோன்றும். அதிலிருக்கும் தேனை

எடுப்பதற்கு ஏணி அமைப்பர். ( புலவரின் மிகையான கற்பனை). அத்தகைய

வளமான குறிஞ்சி மலைக்குத் தலைவனவன். சிறுகுடியில் வாழும் மக்களே!

அவள் உயிரைக் காத்த தலைவனுக்குத் தலைவியைப் பெண்கொடுக்காமல்

அயலானுக்குக் கொடுக்க எண்ணுதல் தவறு அன்றோ?  இம்மலையில்

உள்ளோர் இத்தகைய அறம் இல்லாத செயல் செய்தால் இனி நிலத்தில்

வள்ளிக்கிழங்கு விளையாது; மலைச்சாரலில் தேன்கூடு கட்டப்படாது; புனத்தில்

தினைப்பயிர் கதிர்விடாது.


காந்தள் மலர் மணம் வீசும் இந்த மலையில், மூங்கில் போன்ற தோள்களை

உடைய குன்றவர் மகளிர் நாளும் தவறாமல் தம் கணவரைத் தொழுது

எழுவதால் அந்த ஆடவர்கள் அம்பு எய்தால் அது குறிதப்புவதில்லை. தற்போது

தலைவியைப் பற்றி அலர் தூற்றினால் விளைச்சல் பொய்க்கும்; வேட்டைக்குச்

செல்வோர் எய்யும் அம்பு குறிதவறும்.(,அக்காலத்தில் நிலவிய நம்பிக்கை)."


இவ்வாறெல்லாம் கூறித் தோழி செவிலித் தாய்க்கு அறத்தொடு நின்றாள். அவள்

தோழியின் கருத்தை உணர்ந்துகொண்டு நற்றாய்க்கு(தலைவியைப் பெற்ற

தாய்க்கு) அறத்தொடு நின்றாள். நற்றாய், தலைவியின் தந்தைக்கும் தமையனுக்கும்

அவர்கள் உண்மையை உணரும் வகையிலும் சினம் கொள்ளாத வகையிலும் கூறி

அறத்தொடு நின்றாள். (அறத்தொடு நிற்பது என்பது தலைவிக்கும்  தோழிக்கும் மட்டும்

தெரிந்த உண்மையை/களவுக்காதலை வெளிப்படுத்துவது). இதனைக் கேட்ட தலைவியின்

தந்தையும் தமையனும் சினமடைந்து அம்பையும் வில்லையும் கையிலெடுத்து வெளியே

கிளம்ப எழுவதும் பின்னர்ச் சினமடங்கி அமர்வதுமாக நிலைகொள்ளாமல் தவித்தனர்.

இவ்வாறு அன்றைய பகற்பொழுது முழுவதும் புரியாத மனநிலையில் இருந்தனர்.

மனம் குழம்பிச் சுழன்று கொதித்த அவர்கள் ஒருவாறு முற்றாகச் சினமடங்கி "இருவர் மீதும்

யாதொரு தவறும் இல்லை" என்று கூறிச் சமாதானம் அடைந்தனர்.  "தெருமந்து தலைசாய்த்

தார்" என்று பாடலில் கூறப்பட்டுள்ளது. அவர்கள் தலையைச் சாய்த்துத் திருமணத்துக்கு

ஒப்புதல் தெரிவித்ததாகக் கொள்ளலாம். தொடர்புடைய பாடற்பகுதி பின்வருமாறு:

"அறத்தொடு நின்றேனைக் கண்டு திறம்பட

என்னையர்க்(கு) உய்த்துரைத்தாள் யாய். 

அவரும் தெரிகணை நோக்கிச் சிலைநோக்கிக் கண்சேந்து

ஒரு பகல் எல்லாம் உருத்தெழுந்(து) ஆறி

இருவர்கண் குற்றமும் இல்லையால் என்று

தெருமந்து சாய்த்தார் தலை".

தெருமரல்=மனச் சுழற்சி; சந்தேகப்படுதல்.

முதலில் மனங்குழம்பிப் பின்னர்த் தெளிவடைந்து திருமணத்துக்கு உடன்பட்டனர்.

(பாடல் நெடியது--51அடிகளையுடையது).பாடல் எண்: 39; திணை: குறிஞ்சி;புலவர்: கபிலர்.)


தோழி தலைவியிடம் கூறியது:" உனக்கும் தலைவனுக்கும்  இனிதே திருமணம்

நடக்கும் பொருட்டு மலைத்தெய்வம்(முருகன்) மனம் மகிழ நாம் குரவை ஆடுவோம்.

கொண்டு நிலைப் பாடலைப் பாடு(,ஒருவகைப் பாட்டு)".

தலைவி: "தினைப் புனத்தின் அருகில், இங்குள்ள வேங்கைப் பூவின் மகரந்தப்

பொடி உதிர்ந்து பொன்னால் இழைக்கப்பட்ட மணவறையாகப் பொலியும் பாறையில்

அனைவரும் காண மணமக்களாக நாங்கள் ஒன்றாக அமர்வோமன்றோ? உடனே

தலைவனுடன் இணைவதாகக் கனவு காண்பதை விட்டுவிடுவேன்(நனவாகப்

போவதால் கனவு தேவையில்லை).

தலைவியும் தோழியும் உவகையுடன் மென்மேலும் உரையாடி மகிழ்ந்தனர். பின்னர்த்

தலைவன் திருமணச் சடங்கைப் பற்றி நன்கு தெரிந்த அறிவனை(நல்ல நேரம்

கணிப்போன்) முதலில் அனுப்பி வாழ்வின் தகுதிமிக்க பொதுக் குறிக்கோளையும்

அதனை அடையும் வகையில் வாழும் முறையையும் அறிந்த இல்லறம் சான்றோர்

புடைசூழத் திருமணம் புரிந்துகொள்ள வருகின்றான். இப்பொழுது மையுண்ட

பூப்போன்ற உன்கண் பொலிவு பெறுவதாகுக!


பார்வை:சங்க இலக்கியம்(கலித்தொகை)--வர்த்தமானன் பதிப்பகம்; உரையாசிரியர்:

பெருந்தமிழறிஞர் சுப.அண்ணாமலை.

Saturday 20 January 2024

பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.

 பரிபாடல் கூறும் யானை வழிபாடும் கவழ மிச்சிலும்.


நிலத்தில் வாழும் உயிரினங்களில் மிகப் பெரியது யானை ஆகும். முற்

காலத்தில் டைனோசர் என்னும் மிகப் பெரிய உயிரினம் வாழ்ந்ததாகச்

சொல்லப்படுகிறது. ஆனால், இன்று அத்தகைய விலங்கினம் உயிர் வாழவில்லை.

யானையின் உயர்ந்த மற்றும் பருத்த உடலமைப்பு ஓரளவு அச்சமூட்டினாலும்

அனைவர்க்கும் யானையின் மீது ஈர்ப்பு ஏற்படுவது மறுக்க இயலாத

உண்மை.


யானைக்கும் நமக்கும் உள்ள தொடர்பு மிகமிகத் தொன்மையானது. மனித

இனம் உலகில் தோன்றிய காலத்திலேயே அல்லது அதற்கும் முற்பட்ட காலத்தி

லேயே யானை தோன்றியிருக்கக் கூடும். யானை காட்டு விலங்காக இருப்பினும்

இன்றுவரை யானைகள் வீட்டு விலங்குகள் போலவே வளர்க்கப்படுகின்றன.

கோவில்களிலும், பரம்பரை பரம்பரையாக யானை வளர்ப்போர் வீடுகளிலும் அரசு

அனுமதி பெற்று வளர்க்கப் படுகின்றன. 


நம் இலக்கியங்களில் யானையைப் பற்றிய செய்திகள் பரவலாகக் காணப்படும்.

சங்க இலக்கியம் முதல் இன்றைய கால இலக்கியம் வரை யானையைப் பற்றிய

செய்தி/தகவல் நிச்சயமாக இடம்பெற்றிருக்கும். சிறுவர் முதல் பெரியோர் ஈறாக

அனைவருமே யானையைப் பற்றிய செய்தியைப் படித்து இரசிப்பர்.. ஏனெனில்

குழந்தைப் பருவத்திலிருந்தே யானை நம்மைக் கவர்ந்திழுக்கத் தொடங்கிவிடுகிறது.

யானையின் செம்மாந்த தோற்றமும் நடையும் நம் கண்களை விட்டு அகலா. சிறு

வயதில் பெற்றோருடன் கோவிலுக்குச் சென்றால் தவறாமல் யானையைக் கண்டு 

குதுகலம்அடைந்து சற்று அச்சத்துடன் அதன் தும்பிக்கையினால் ஆசீர்வாதம் பெற்றுப் 

பரவசம்அடைந்த நிகழ்வு  பசுமையாக இருக்கிறது.


சங்க காலத்தில் மன்னர்கள் ஆட்சி செய்தனர். அதனால் மன்னர்களுக்குள் அடிக்கடி

போர் நடைபெற்றது. அப்போது  போர்களில் யானைகளைப் பயன்படுத்தினர்.

இளைஞர்கள் யானையுடன் போர்செய்து பழகுதல் வேண்டும். புறநானூற்றில்

புலவர் பொன்முடியார் பாடிய பாடலில்(பாடல் எண்:312) பின்வருமாறு பாடியுள்ளார்:

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே;

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே;

ஒளிருவாள் அருஞ்சமம் முருக்கிக்

களி(று)எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே".

தனியொருவனாக யானையுடன் போர்புரிந்து அதனைக் கொல்லுதல் இயலாத செயல்.

வேல்கொண்டோ வாள்கொண்டோ அதனைத் தடுக்க முயற்சி செய்யலாம். அதனைக்

காயப்படுத்தி அச்சுறுத்தி விரட்டலாம். அதனை வெல்ல முடியாது.

எனவேதான் வள்ளுவர் பின்வருமாறு பாடினார்:

"கான முயலெய்த அம்பினில் யானை

பிழைத்தவேல் ஏந்தல் இனிது.'


நற்றிணை ஒரு காட்சியைச் சொல் ஓவியமாகக் காட்டுகிறது:

"புலிபொரச் சிவந்த புலாவஞ் செங்கோட்(டு)

ஒலிபன் முத்தம் ஆர்ப்ப வலிசிறந்து

வன்சுவல் பராரை முருக்கிக் கன்றொடு

மடப்பிடி தழீஇய தடக்கை வேழம்

தேன்செய் பெருங்கிளை இரிய வேங்கைப்

பொன்புரை கவழம் புறந்தருபு ஊட்டும்"

யானை கூட்டமாக வாழும் விலங்கு. பிடி(பெண் யானை)

மற்றும் கன்று மீது அதிகமாகப் பாசத்தை வெளிக்காட்டும்.

இப் பாடல் அதனை விளக்குகிறது. புலியுடன் போரிட்ட யானையின்

கோடுகள்(தந்தங்கள்) இரத்தத்தால் சிவந்து காணப்படுகின்றன.

அவற்றில் முத்துக்கள் பதிந்திருப்பது போலத் தோன்றும். அதிலிருந்து

புலவு நாற்றம் வருகிறது. அந்த வேழம்(ஆண் யானை) வேங்கை

மரத்தின் பருத்த அடியை முறித்துத் தன் கன்றுடனே பிடியை(பெண்யானையை)

அணைத்துக்கொண்டு வேங்கை மரத்தின் பூக்களை அவை உண்ணுமாறு

ஊட்டும். அவ்வளவு பாசம் உடையது யானை.


இனி, கலிங்கத்துப் பரணியில் போர்க்களக் காட்சியைக் காண்போம்.

சோழநாட்டுக் களிறும் கலிங்க தேசத்துக் களிறும் மோதிக் கொண்டன.

"மருப்பொடு மருப்பெதிர் பொருப்பிவை எனப்பொரு

மதக்கரி மருப்பினிடையே

நெருப்போடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி தெறித்தெழ

நிழற்கொடி தழற்கதுவவே"

(பாடல் எண்:411)

இரு மலைகளைப்போல மதங்கொண்ட களிறுகள் தம் தந்தங்களால்

ஆவேசமாக மோதிக் கொள்ள அவைகளின் தந்தங்களுக்கிடையே

தீப்பொறி எழுந்து நிழலுக்கு ஏற்றியிருந்த துகிற்கொடிகளைப் பற்றியது.


பரிபாடலில் செவ்வேளைப் பற்றிய(முருகனைப் பற்றிய) பத்தொன்பதாம்

பாடலில் யானைவழிபாடு குறிப்பிடப்படுகிறது. முருகனுக்குரிய யானை

யின் நெற்றியில் குங்குமத்தால் அழகுபடுத்திப் பூவோடு கூடிய நீரைத்

தெளித்துச் செவிக் கவரியைச் சார்த்திப் பொலிந்த பவழத்தாற் செய்த

நல்ல காம்பினை உடைய பொற்குடையை மேலே எடுத்து மனமகிழ்வுடன்

பூசனை புரிவர். அப்பொழுது அந்த யானைக்கு அளிக்கப்படும் கவழ மிச்சிலை

(யானை உண்டு மிச்சமிருக்கும்  உணவை)  உண்ணாவிட்டால் பெண்டிர்  தம் காதலரின்

அன்பை அடைய மாட்டார். கன்னிப் பெண்கள் நல்ல கணவரை அடையமாட்டார்.

இது அந்தக் காலத்தில் நிலவிய நம்பிக்கை. பாடல் வருமாறு:

"கன்னிமை கனிந்த காலத் தார்நின்

கொடியேற்று வாரணம் கொள்கவழ மிச்சில்

மறுவற்ற மைந்தர்தோள் எய்தார்;; மணந்தார்

முறுவல் தலையளி எய்தார்;நின் குன்றம்

குறுகிச் சிறப்புணாக் கால்".


யானை நம் நாட்டுக்குக் கிடைத்த அரும் பெரும் சொத்து. அதனைத் துன்புறுத்

தாமல் பேணிப் பாதுகாப்பது நமது கடமை.


பார்வை:

சங்க இலக்கிய வெளியீடு, வர்த்தமானன் பதிப்பகம்.


"

Friday 5 January 2024

தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புதல் எக்காலம்?

 தென்மாவட்ட மக்களின் இயல்பு வாழக்கை திரும்புதல் எக்காலம்?


செம்மாந்து  திகழ்கின்ற   தமிழ்நாட்டின்  தென்பகுதி

       சிதைந்து வீழ

அம்மா!எம்  இயற்கையன்னாய்!  அடைமழையைப் பொழிவித்தாய்,

       அரண்டு  போனோம்;

விம்மாத்தல் செய்துநெஞ்சம் துடிதுடித்தோம்; கணீருகுத்தோம்;

       வெந்தோம், நொந்தோம்;

இம்,மாதுன் பத்தைவெல்ல வழியின்றித் தவிக்கின்றோம்,

        என்செய் வோமே?


முத்துக்  குளிப்பதிலே  முன்னின்றோம்; வான்பரப்பில்

பொத்துக்கொண்  டாற்போல்  பொழிந்த  பெருமழையால்

எத்திக்கும் வெள்ளம்;  இடுப்பு,  கழுத்துமட்டம்

சொத்து பொருளையெல்லாம் சூழ்ந்திழுத்து வந்ததுவே;

கத்தும் உயிரினங்கள் கண்ணிமைக்கும் நேரத்தில்

செத்து மிதந்தனவே; சிற்றில்லம் அத்தனையும்

பொத்துப்பொத் தென்று பொருத்துவிட்டு வீழ்ந்தனவே;

மொத்த இழப்பை மொழிந்தால்  மனம்நோகும்.


நன்செய் நிலமெல்லாம் நாசமுற்றுப் போயினவே;

அன்பாய் வளர்த்தபயிர் அய்யோ,வீண் ஆனதுவே;

தென்பாய் நடந்த சிறுகுறு வாணிகமும்

பொன்போற்  பொலிந்த பெருங்கொண்ட வாணிகமும்

தின்பண்ட வாணிகமும் சேதாரம் உற்றனவே;

தன்னம்பிக்  கைகெட்டுத் தள்ளாட நேர்ந்ததுவே;

மன்னவர்போல்  வாழ்ந்த  வளமான  வாழ்விழந்(து)

இன்னலுக்கா  ளானோரின்  எண்ணிக்கை  ஏராளம்.


வெள்ளமது  சிதைத்துவிட்ட. தென்மா வட்டம்

        மீண்டுவர  வெகுகாலம்  தேவை  யாகும்;

கள்ளமற்ற  பொதுமக்கள்  வாழ்வா  தாரம்

        கடும்வேக  வெள்ளத்தால்  பறிபோ யிற்றே;

உள்ளபடி மாந்தர்களின்  உள்ளச்  சோர்வை

        உடனடியாய் நீக்குதற்கும், வாழ்வா  தாரம்

விள்ளரிய  முறையினிலே  உயர்த்து  தற்கும்

       விரைவாக  நிதிதேவை;  திரட்டு  வோமே.


பொருள்நிறைந்தார் மனதார அள்ளித் தந்தார்;

        பொருள்குறைந்தார் உவகையுடன் கிள்ளித் தந்தார்;

இருள்நிறைந்த மழைவெள்ளச்  சேதந்  தன்னை

         எப்படியும்  முறியடித்துத்  துயருற்  றோரின்

மருள்நிறைந்த வாழ்வினிலே தெளிவுண்  டாக்கி

         வருங்கால வாழ்வையெதிர்  கொள்ளச்  செய்ய

அருள்நிறைந்த மையப்பே  ரரசில்  உள்ளோர்

         அரசுநிதி சாலவுமே  கொட்டித் தாரீர்.

(மையப் பேரரசு=நடுவண் அரசு)


மாநில  அரசும்  சீரார்  மையப்பே  ரரசும்  கூடி

ஊனெலாம் ஒடுங்கி யுள்ளம்  உருக்குலை வுற்று வாடும்

நானில மக்க ளெல்லாம் நலம்பெறத் திட்டம் தீட்டி

மேனிலை அடையும் வண்ணம் விரைவினில் சேவை செய்க.

(நானில மக்கள்=தூத்துக்குடி,திருநெல்வேலி,கன்னியாகுமரி,

தென்காசி முதலிய நான்கு மாவட்ட மக்கள்)


இருகரம் கூப்பி இந்த இரண்டுபே ரரசு தம்மை

உரிமையாய்க் கேட்டுக் கொள்வோம், உடனடிச் செய்கை வேண்டும்

தருணமி தனைநீர் ஓர்ந்து  தள்ளுக பயனில் வாதம்;

ஒருமையாம் கருத்தைப் பற்றி ஓம்புக மக்கள் தம்மை.

(ஒருமை=ஒற்றுமை; ஓம்புவோம்=பாதுகாப்போம்)