Friday 31 December 2021

கொடி பறக்கிறது.

 கொடி பறக்கிறது..


அற்றைநாள் தொட்டு இற்றை நாள் வரையும் கொடியின்

பயன்பாட்டையும் பெருமையையும்  குறைத்துச் சொல்ல

இயலாது. ஆளும்  வேந்தரானாலும்(தற்காலத்தில் அமைச்சர்

முதலான அரசியல் தலைவரானாலும்)  சாதாரண எளிய குடிமகன்

ஆனாலும் கொடியின்  இன்றியமையாமையை அறியாதார் இலர்.

தேசியக் கொடிமுதல் தெருக்கோடியில் கடையிலோ, நிறுவனத்திலோ

பறக்கும்  கொடிவரை  அனைவர்க்கும் தெரிந்த செய்தியே. இத்தகைய

கொடியைப் பற்றி இலக்கியம் இயம்பும் செய்திகளையும்  நாட்டு

நடப்பு வாயிலாக அறியும் செய்திகளையும் நோக்குவோம்.


மதுரைக் காஞ்சி தெரிவிக்கும் செய்திகள்:

மதுரை நியமங்கள்(கடைத்தெருக்கள்/வீதிகள்) வரையப்பட்ட ஓவியம்

போல் வடிவமைக்கப்பட்டிருந்தன. விழாக் கொண்டாட்டத்தைக்  குறிக்கும்

பல்வேறு உருவம் பொறித்த கொடிகள் அந்த நியமங்களில் பறந்து கொண்டி

ருந்தன. முருகனுக்குச் சேவற்கொடி, பெருமாளுக்குக் கருடன் கொடி, சிவ

பெருமானுக்குக் காளைக்கொடி, பராசக்திக்குச் சிம்மக்கொடி என்று அந்தந்தக்

கோவில்களில் கொடிகள் பறக்க விடப்பட்டிருந்தன.. வென்ற நாடுகளின்

அடையாளமாக அந்நாடுகளிலிருந்து கொண்டு வரப்படடு ஏற்றப்பட்ட கொடிகள்,

கள்ளுக்கடைகளில்  இங்கு கள் விற்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கும்

கொடிகள், பல்வேறு குடிமக்களின் வாழ்விடங்களை அடையாளம் காட்டும்

கொடிகள்  இன்னும் பலவிதமான கொடிகள் மலையினின்று விழுந்து குதித்

தாடும் அருவி போல ஆடிப் பறந்து கொண்டிருந்தன.

"ஓவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச்

சாறயர்ந் தெடுத்த உருவப் பல்கொடி

வேறுபல் பெயர ஆரெயில் கொளக்கொள

நாள்தோ றெடுத்த நலம்பெறு புனைகொடி

நீர்ஒலித் தன்ன நிலவுவேல் தானையொடு

புலவுப்படக் கொன்று மிடைதோ  லோட்டிப்

புகழ்செய் தெடுத்த விறல்சால் நன்கொடி

கள்ளின் களிநவில் கொடியொடு நன்பல

பல்வேறு குழூஉக்கொடி பதாகை நிலைஇப்

பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க"

(வரிகள் 365 முதல் 374 முடிய)


இனி, பட்டினப்பாலை கூறும் செய்திகளைக் காண்போம்:

தெய்வக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

"மையறு சிறப்பின் தெய்வம் சேர்த்திய

மலரணி வாயில் பலர்தொழு கொடியும்"(வரி 160).

அற-மறச் சாலைகளில் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன.

வெள்ளைவெளேரென்ற வெண்மை நிறத்தில் சோறு படைக்கும்

அறச்சாலை மாடத்தில் கொடி கட்டப்பட்டிருந்தது. கம்பத்தின்

ஓரத்தில் வேல் நடப்பட்டுக் கேடயம் மாட்டப்பட்டிருந்தது.

இங்கும் கொடி பறந்தது. இவை படைவீரர்களுக்கும்  காவல்

தொழில் புரிவோர்க்கும் சோறு வழங்கும் அறச்சாலை

என அடையாளம் காட்டும் கொடிகள்.

பட்டி மன்றக் கொடிகள் பறந்து கொண்டிருந்தன.

"பல்கேள்வித் துறைபோகிய

தொல்லாணை நல்லாசிரியர்

உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்(171ஆம் வரி)

காவிரிப்பூம் பட்டினம் கடற்பகுதியாதலால் அங்கே நிறுத்தப்

பட்டிருந்த நாவாய்களின் உச்சியில் கொடிகள் பறக்கவிடப்

பட்டிருந்தன. மீன் விற்குமிடம், நறவுக்கள் விற்குமிடம் என

அடையாளம் காட்டும் கொடிகளும் பறந்தன. இந்தக் கொடிகள்

மட்டுமன்றிப் பிறபிற கொடிகளும் பல்வேறு உருவங்களில்

பறந்து வெயில் நுழையாத நிழலை உண்டாக்கியது.


இனி சிலப்பதிகாரம் சுட்டும் ஒரு செய்தியைப் பார்ப்போம்:

கோவலனும் கண்ணகியும்  சிலம்புகளை விற்று அதனால்

கிடைக்கும் தொகையைக் கொண்டு வாணிகம் புரிய மதுரைக்

குள் நுழைகின்றனர். போர்வெற்றிக் கொடி பறக்கும் மதுரை

நகரின் நெடிய மதிற்சுவரில் பட்டொளி வீசிப் பறக்கும் நீண்ட

கொடிகள் காற்றில் அசைந்தாடின. இதனை இளங்கோவடிகள்

குறிப்பிடும் பொழுது தற்குறிப்பேற்ற அணியைக் கையாண்டு

அக்கொடிகள் கோவலன் கண்ணகி இருவரையும் மதுரைக்கு

வராதீர்கள் என்று கைநீட்டித் தடுப்பது போல் அசைந்தாடின

என்று  குறித்துள்ளார்.

"போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி

வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட"

(மதுரைக் காண்டம்--புறஞ்சேரி இறுத்த காதை--189&190).

ஒருவேளை, கோவலன் மதுரையில் களவுக் குற்றம் சாட்டப்

பட்டுக் கொலைசெய்யப்படுவான் என்றும். கண்ணகி கணவனைப்

பிரிந்து ஆறாத் துயருறுவாள் என்றும் அக்கொடிகள் அறிந்திருந்

தனவோ?


இதற்கு நேர்மாறான காட்சியைக் கம்பராமாயணத்தில் காண்கிறோம்.

விசுவாமித்திர முனிவரும் இராமனும் இலக்குவனும் நுழைந்தபொழுது மிதிலை நகரம் "யான் செய்த பெருந்தவத்தின்

விளைவாகத் தாயார் இலக்குமிதேவி இங்கு அவதரித்து உறைகின்றாள்.

அவளை மணம்புரிவதற்காகத் திருமால் வருகின்றார். அவரையும்

அவருடன் வருபவர்களையும் அழகிய மணிகள் கட்டப்பட்ட கொடிகளாகிய

கைகளை நீட்டி விரைவினில் வருக என்று வரவேற்று அழைப்பது சாலவும்

நன்று" என்று எண்ணிக் கொடிகளை அசைத்ததாகக் கம்பர் தற்குறிப்பேற்ற

அணியில் குறிப்பிடுகின்றார்.

"மையறு மலரின் நீங்கி, யான்செய்மா தவத்தின் வந்து

செய்யவள் இருந்தாள் என்று  செழுமணிக் கொடிகள் என்னும்

கைகளை நீட்டி அந்தக் கடிநர் கமலச் செங்கண்

ஐயனை ஒல்லை வாவென் றழைப்பது போன்ற தம்மா!"


அந்நாளில் நம் மூவேந்தர்களும் அவரவர்க்குரிய கொடியையும் காவல்மரத்

தையும் முரசுகட்டிலையும் இன்னும் இவைபோன்ற பிற சின்னங்களையும்

பேணிப் பாதுகாத்தனர். ஏனெனில் அவைகளைத் தமது அடையாளங்களாகக்

கருதினர்.சிறப்பாக ஆளுதல் என்பதைக் குறிக்கக் கொடிகட்டி ஆளுதல் என்ற

சொற்றொடரைப் பயன்படுத்துகின்றோம். அதாவது அரசனது ஆட்சியில் எல்லாக்

குடிமக்களும் வளத்தோடும்  மகிழ்வோடும் பாதுகாப்போடும் வாழ்கிறார்கள்

என்னும் செய்தி வெளிப்படும். பாண்டியர்க்குரிய மீனக் கொடியும், சோழர்க்குரிய

புலிக்கொடியும், சேரர்க்குரிய விற்கொடியும் பட்டொளி வீசிப் பறந்தன. தற்பொழுது

இந்தியாவின் மூவர்ணக் கொடி(சிவப்பு, வெள்ளை, பச்சை நடுவில் அசோகச்

சக்கரம்) கம்பீரமாகப் பறக்கின்றது.


கொடிகளுக்கு இவ்வளவு சிறப்பும் கவனிப்பும் ஏன் கொடுக்கப்படுகின்றன?

ஏனெனில் பழங்காலத்திலிருந்தே ஒவ்வொரு மனிதக்குழுவும் தத்தம் அடை

யாளத்தைப் பறைசாற்றவும், தக்கவைக்கவும் பெருமுயற்சி எடுத்துக் கொள்கிறது.

அடையாளச் சின்னங்கள் எத்தனையோ உலவுகின்ற போதிலும் கொடியே முதன்மை

இடத்தைப் பிடித்துக் கொள்கிறது. முத்தொள்ளாயிரம் என்னும் இலக்கியத்தில்

பாண்டிய மன்னனுக்குக் குளியல் சுண்ணம்(நறுமணப் பொடி) இடிக்கும் அந்தப்புர

மகளிர் அவனது கொடிபற்றியும், தேர்பற்றியும், மணிமுடி பற்றியும், முத்தாரம் பற்றியும்

போற்றிப் பாடிக் கொண்டே உலக்கையால் சுண்ணம் இடித்ததாக ஒரு பாடல் இயம்புகிறது.

"கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்தார் மாறன்

முடிபாடி  முத்தாரம்  பாடித்----தொடிஉலக்கை

கைம்மனையில் ஓச்சப் பெறுவேனோ? யானுமோர்

அம்மனைக் காவல் உளேன்."

இதில் கொடிதான் முதன்மையாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.

Thursday 23 December 2021

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!

 நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!


கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் பற்றிய  கதைகள் தமிழ்நாட்டில்

ஏராளமாக உலாவருகின்றன. எது உண்மை? எது கற்பனை?

என்று பிரித்தறிய இயலாதவண்ணம்  உண்மையும் கற்பனையும்

விரவிக் கிடக்கின்றன. இது தொடர்பான பாடல்கள் தனிப்பாடல்

திரட்டு நூல்களில் கிடைக்கின்றன. ஆனால் அவற்றுக்கு ஆதாரம்

ஏதுமில்லை; கல்வெட்டுச் சான்றோ இலக்கியச் சான்றோ வேறு

வரலாற்றுச் சான்றோ இல்லாமல்  மக்களிடையே உலவும் இக்

கதைகளை அவர்கள் இரசிக்கத்தான் செய்கின்றனர். மாபெரும்

புலவர்களான கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்திப் புலவர், இடைக்

கால ஔவையார் முதலான புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டத்தில்

வாழ்ந்தவர்கள் என்று வரலாற்றுத்துறை அறிஞர்கள் கருத்துச்

சொன்னாலும் பொதுமக்கள், நால்வரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததாகக்

கருதியே இக்கதைகளை இரசித்தனர். இக்கட்டுரையில் வரும் ஒரு

நிகழ்வும்  பொதுமக்களால் விரும்பி இரசிக்கப்பட்ட கதையே.


கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும் குலோத்துங்க சோழச் சக்கர

வர்த்திக்கும் ஏதோ ஒரு காரணம் பற்றி மனவருத்தம் உண்டானது.

குலோத்துங்கன் கம்பரைச் சோழநாட்டைவிட்டு வெளியேறுமாறு

பணித்ததாகக் கதை உலவுகிறது. உடனே கம்பர் கீழ்க்கண்ட பாடலைப்

பாடிவிட்டு வெளியேறியதாய்ச் சொல்லப்படுகிறது:

"மன்னவனும் நீயோ? வளநாடும் உன்னதோ?

உன்னையறிந் தோ,தமிழை ஓதினேன்---என்னை

விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ,"

குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?"

"நீ கொடுத்த சிறப்புகள் அனைத்தையும் துறந்துவிட்டு

உன் நாட்டிலிருந்து வெளியேறும் நான் திரும்பிவரும்

பொழுது பல சிறப்புகளோடு உன்போன்ற மன்னன்

அடைப்பைக் காரனாக(வெற்றிலை மடித்துக்கொடுக்கும்

ஊழியனாக) உடன்வர உன் நாட்டுக்குள் நுழைவேன்"

என்று சூளுரைத்துச் சென்றார். சோழநாட்டைவிட்டு

வெளியேறிய கம்பர் பல இடங்களுக்கும் அலைந்து

திரிந்து  ஒரு நகரத்தை அடைந்தார். அந்நகரத்தை

ஆட்சி செய்தவர் அண்மையில் இறந்த காரணத்தால்

அவரின் மனைவி வேலி என்பவள் ஆட்சியைக் கவனித்தாள்.

ஏனென்றால் பிள்ளைகள் உரிய வயதை அடையவில்லை.



வேலி தன் மனையைச் சுற்றி நாற்புறமும் பாதுகாப்புச்

சுவர் எழுப்ப ஏற்பாடு செய்தாள். எல்லாப் பக்கமும் சுவர்

எழுப்பும் பணி நன்கு நிறைவேறியது. ஒரு பக்கச்சுவர்

மட்டும் பணி முழுமை பெறாமல்  குறையாகத் தென்பட்டது.

கட்டிடப் பணியாளர்களை அழைத்து அந்தக் குறிப்பிட்ட

பக்கச்சுவர் முற்றுப் பெறாமல்  குறையாகக் காட்சியளிக்கும்

காரணம் குறித்து வினவினாள்.  "அம்மையே அச்சுவரின்

மூலையில் பத்தடி அளவுச் சுவரை எத்தனைமுறை கட்டினாலும்

நிற்காமல் இடிந்து விழுந்து விடுகிறது. என்ன காரணம் எனத்

தெரியவில்லை" என்றனர். வேலி, உடனடியாகக் கொத்து

வேலையிற் சிறந்த விற்பன்னரை அழைத்து இதுகுறித்து

விசாரித்தாள். அவரும் சுவர் முழுவதும் ஆய்வுசெய்துவிட்டு

அந்த மூலையில் ஏதேனும் பிரம்ம ராட்சசு இருக்கலாம்.

அது அந்தப் பகுதியைக் கட்டவிடாமல் தடுத்திருக்கலாம்"

என்று கருத்துத் தெரிவித்தார்.(அகால மரணமடைந்த

பிராமண அறிஞர் ஆன்மா பிரம்ம ராட்சசு எனக் கருதப்

பட்டது. அது கோவில் உட்பட ஏதாவது ஓரிடத்தை ஆக்கிர

மித்துத் தங்கிவிடும். அது யாருக்கும் கட்டுப்படாது. அதனை

வெளியேற்றுவது எளிதன்று என்பது மக்களிடையே நிலவும்

நம்பிக்கை).


வேலியும்  பல கொத்து வேலை செய்பவரை  அழைத்துவந்து

குறைச் சுவரைக் கட்டி யெழுப்பப் பலப்பல முயற்சி எடுத்தாள். எல்லா

முயற்சியும் தோல்வியிலேயே முடிந்தது. சுவரைக் கட்டி முடித்தால்

குறுணி நெல் தருவதாக அறிவிப்பும் வெளியிட்டனள்.. ஆனால்

விளைவு ஏதும் நிகழவில்லை. சுவரைக் கட்டி முடித்துக் கூலி

வாங்கும் முன் சுவர் இடிந்து விழுந்துவிடும். வேலி சோர்ந்து

போனாள்.


இந்நிலைமையில் கம்பர் அந்நகருள் நுழைந்து வேலை ஏதாவது

கிடைக்குமா என்று மக்களிடம் விசாரித்தார். மக்கள் வேலியின்

அறிவிப்பைப் பற்றி எடுத்துரைத்தார்கள். குறுணிநெல் கிடைக்கும்;

உணவுப் பிரச்சினையைச் சமாளித்து விடலாம் என்றெண்ணிய

கம்பர் வேலியின் வீட்டையடைந்தார். வேலியும் அனைத்து நிகழ்வைப்

பற்றியும்  எடுத்துரைத்தாள். கம்பர் கொத்து வேலையைத் தொடங்கி

முடித்தார். கட்டி முடிக்கப்பட்ட சுவர் ஆடுவது போலத் தோன்றியது.

கம்பர் உடனே சரசுவதி தேவியை வணங்கிப் பாடத் தொடங்கினார்:

"மற்கொண்ட திண்புயத்தான் மாநகர்விட்(டு) இங்கு வந்தேன்;

சொற்கொண்ட பாவின் சுவையறிவார் ஈங்கிலையே;

விற்கொண்ட பிறைநுதலாள் வேலி தருங்கூலி

நெற்கொண்டு போமளவும் நில்லாய் நெடுஞ்சுவரே!"

பாடலைக் கேட்ட பிரம்மராட்சசு "பாடியவர் நம்மைவிடப் பெரிய

அறிஞர் போல் தோன்றுகின்றது என்று அஞ்சி அவ்விடத்தை விட்டு

நீங்கியது. சுவர் இடிந்து விழாமல் நிலைத்து நின்றது. வேலியும்

குறுணி நெல்லை யளந்து கம்பருக்குக் கொடுத்தாள்.

(நம்புகிறோமோ இல்லையோ, பல கோவில்களில் பிரம்ம ராட்சசு

வுக்குத் தனியிடமோ, சந்நிதியோ உள்ளது). பிரம்மராட்சசுவை

நம்பத் தயங்குபவர்கள் ஏதோ காரணத்தால் சுவர் இடிந்து விழுந்தது;

கம்பர் கைராசியால் சுவர் இடியாமல் நிலைத்துநின்றது என்று

எண்ணிக் கொள்ளலாம்.


பிற்பாடு கம்பர் பல இடங்களுக்கு அலைந்து திரிந்து ஓரங்கல்

(ஆந்திரர்கள் வாரங்கல் என அழைக்கின்றனர்) நாட்டை அடைந்து

காகதீய வமிசத்தைச் சேர்ந்த முதலாம்   பிரதாபருத்திரன் நட்பைப்

பெற்றதாகவும், அவ்வேந்தன் கம்பர் புலமையை மதித்து அடைப்பைக்

காரனாகக் கம்பருடன் சோழன் அரண்மனைக்குள் வந்ததாகவும் சிலர்

கூறுகின்றனர். எந்த அளவுக்கு உண்மை? என்பது தெரியவில்லை.


கம்பர் வரலாறும் புகழேந்திப் புலவர் வரலாறும்  ஒட்டக்கூத்தர் வரலாற்

றைப் போன்று ஆதாரத்துடன் அமையவில்லை. இவர்கள் பெரும்

புலவர்கள் என்பதைத்தவிர மற்ற விவரங்கள் ஆதாரங்களின்றிக்

கதைகளாகவே உள்ளன. இதற்குக் காரணம் தனிப்பாடல் திரட்டு

நூல்களில் காணப்படும்  ஏராளமான கவிதைகள். சுமாராகக் கவிதை

புனைவோரும் தங்கள் பாடல்களை இந்நூல்களில் இடம்பெறச் செய்து

விடுகின்றனர். "தூங்கினவன் தொடையில் திரித்தமட்டும் கயிறு" என்னும்

பழமொழிக்கேற்பத்  தம்  பாடல்களைப் பெரும் புலவர்கள் பாடல்களோடு

உலவ விட்டுவிடுகின்றனர். இவ்விதப் பாடல்களும் சுவைபட அமைந்திருப்பதால்

படிப்பவர்களால் எவை பெரும்புலவர் இயற்றியவை எவை அவர்கள் இயற்றாதவை

எனக் கண்டுபிடிக்க இயலாமல் போகிறது. தனிப்பாடல் திரட்டு நூல்களில்

காணப்படும் பாடல்களைப் படித்து இரசிக்கலாம் என்பதைத் தவிர அவற்றில்

சொல்லப்படும் செய்திகள் வரலாற்றுத் தொடர்பு கொண்டவை என்று  உறுதியாக

நம்ப இயலாது. ஏனென்றால் இலக்கண நூலான தொல்காப்பியத்திலும், பெரும்

இலக்கியமான கம்பராமாயணத்திலும் இடைச் செருகல்கள் நுழைந்துள்ளதாகப்

பேரறிஞர்கள் தெரிவிக்கும் பொழுது, தனிப்பாடல் திரட்டு நூல்களைப் பற்றி

என்ன சொல்வது?


பார்வை: விநோத ரச மஞ்சரி - தொகுத்தோர் தமிழறிஞர் வீராசாமிச் செட்டியார்.













Friday 10 December 2021

சிலைத் திருட்டைத் தெரிவித்த கிளிகள்.

 சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.


தமிழ் இலக்கியத்தில் மனிதர்களைப்பற்றி மட்டும்

அல்லாமல் விலங்குகள், பறவைகள், தாவரங்கள்

போன்றவற்றைப் பற்றியும் பாடல்கள் பாடப்பட்டு

வருகின்றன. பறவைகளில் கிளிகள் சிறப்பாகப் 

போற்றப்படுகின்றன. அழகாலும், ஏறத்தாழ மனிதரைப்

போன்ற பேச்சுத்திறத்தாலும், நேர்த்தியான நடத்தை

யாலும் கிளிகள் நம் மனத்தைக் கவர்ந்து விடுகின்றன.


சங்க இலக்கியங்களில் அகப்பொருள் பேசும் காதற்

பாடல்களில் கிளிகள் அடிக்கடி குறிப்பிடப்பட்டுள்ளன.

தலைவி கிளிகளைத் தூது அனுப்புவதும், தலைவன்

பிரிய நேர்ந்தால் கிளிகளிடம் புலம்புவதும் குறிப்பிடப்

பட்டுள்ளன. ஐங்குறுநூறு என்னும் இலக்கியத்தில்

குறிஞ்சித்திணைப் பாடல்களில் 'கிள்ளைப் பத்து'

என்னும் தலைப்பில் பத்துப் பாடல்களைக் கபிலர் பாடி

யுள்ளார். 'அழகர் கிள்ளை விடு தூது' என்னும் நூலைப்

பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் இருநூற்றைம்பது

ஆண்டுகட்கு முன்னர் இயற்றினார். அதில் திருமாலிருஞ்

சோலை அழகர் பெருமான் மீது ஒருதலைக் காதல் கொண்ட

பெண்ணொருத்தி கிளியொன்றை அவர்பால் தூதனுப்பியதாக

இயற்றியுள்ளார்.


மனிதர்களுக்குக் கிளிகள் பால் ஈர்ப்பு ஏற்படக் காரணம்

என்ன? கிளிகளை நன்கு பழக்கினால் கிட்டத்தட்ட மனிதரைப்

போன்றே தெளிவாகப் பேசும் திறமை கிளிகளுக்கு உள்ளது.

அதனால்தான் 'சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை' என்ற

முதுமொழி பழக்கத்தில் உள்ளது.


கலிங்கத்துப் பரணி என்னும் இலக்கியத்தில் 'கடை திறப்பு'

என்னும் தலைப்பில் செயங்கொண்டார் பாடிய கண்ணி(67)

பின்வருமாறு:

"நேயக் கலவி  மயக்கத்தே நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப

வாயைப் புதைக்கு மடநல்லீர்! மணிப்பொற் கபாடம் திறமினோ".

பொருள்: கலிங்கப் போர் முடிந்த பிறகு சோழநாட்டுக்குத் திரும்பும்

வீரன் ஒருவன் தன் வீட்டுக் கதவைத் தட்டும் போது முன்னொரு

நாளில் தானும் தன் மனைவியும் பிறர் அறியாமல் காதல் உரை

யாடல் நிகழ்த்திய பொழுது தான் உளறியவற்றைக் கூர்ந்து கவனித்துக்

கேட்ட வீட்டுக் கிளி அப்படியே எழுத்துப் பிசகாமல் பேசியதையும்

உடனே தன் மனைவி பதறிப்போய் அதன் வாயை மூடியதையும்

நினைத்துக் கொண்டு "பெண்ணே! கதவைத் திற" என நவின்றான்.

கிளிகளை நன்கு பழக்கினால் அவை ஏறத்தாழ நம்மைப் போன்றே

பேசும் என்பதை எடுத்துக் காட்டும் மற்றொரு நிகழ்ச்சி பின்வருமாறு:


பதினாறாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் விசயநகர

ஆட்சி நடந்த பொழுது திருவாரூர்ச் சிவன் கோவிலில் 

நாகராச நம்பி என்பவர் சிறீகாரியம் பார்த்துவந்தார்.

ஒருநாள் பணத்தாசைகொண்டு அறுபத்து மூன்று நாயன்

மார் ஐம்பொன் சிலைகளிலே இரண்டை ஒரு கன்னாருக்கு

விற்று விட்டார். எவ்வளவோ கமுக்கமாக நடைபெற்ற போதி

லும் ஏனைய கோவில் ஊழியர்களுக்கு இந்தச் செய்தி தெரிந்து

விட்டது. அவர்கள் மூலமாக ஊரார்க்கும் இவ்விடயம் தெரிய வர,

எல்லாரும் கூடி ஆலோசனை செய்தனர். இந்தச் செய்தியை

நாடாளும் கிருட்டிண தேவராயருக்குத் தெரிவித்து விடத் தீர்மா

னித்தனர்.


ஆனால், இந்தத் திட்டத்தை எப்படிச் செயல் படுத்துவது? யார்

இராயரிடம் தெரிவிப்பது? என்று சிந்தித்துக் குழம்பிக்கொண்

டிருந்தனர். அவர்களுடைய நல்லகாலம், கிருட்டிண தேவராயர்

திருவாரூர்ச் சிவபெருமானை வணங்க வர இருப்பதாகத் தக

வல் வந்தது. இச் செய்தியைக் கேள்வியுற்ற ஊர்மக்கள் பெரும்

மகிழ்வுற்றனர். யார் அரசரைச் சந்தித்து இந்த விடயத்தைப்

பற்றி அவரிடம் எடுத்துரைப்பது? என விவாதித்தனர். நெடுநேர

ஆலோசனைக்குப்பின் யாரும் அரசரைச் சந்தித்து இது தொடர்

பாகப் பேசவேண்டியதில்லை என்று முடிவுசெய்தனர். மாறாக,

இரண்டு கிளிப்பிள்ளைகளைப் பழக்கி அவை வாயிலாகச் சிலைத்

திருட்டை இராயருக்குத் தெரிவித்துவிடலாம் என்று முடிவுசெய்தனர்.

அதன்படி கீழ்க்கண்ட பாடல் இயற்றப்பட்டது:

"முன்னாள் அறுபத்து மூவரிருந் தாரவரில்

இந்நாள் இரண்டுபேர் ஏகினார்--கன்னான்

நறுக்கின்றான், விற்றுவிட்ட நாகரச நம்பி

இருக்கின்றான்  கிட்டினரா  யா".

பொருள்:

இதற்கு முன்பு அறுபத்து மூன்று நாயன்மார் பஞ்சலோகச் சிலைகளாக

இருந்தனர். அச்சிலைகளில் இரண்டு நாயன்மார் சிலைகள் வெளியே

போய்விட்டன. அதாலது இரண்டு பஞ்ச லோகச் சிலைகளும் விற்கப்பட்டு

விட்டன. வாங்கிய கன்னான் சிலைகளைத் துண்டுதுண்டாக நறுக்கி உரு

மாற்றம் செய்கின்றான். சிலைகளைத் திருடி விற்ற சிறீகாரியம் பார்க்கும்

நாகராச நம்பி என்பவன் இன்னும் அதே பணியில் இருக்கின்றான். விசய

நகர வேந்தராம் கிருட்டிண தேவராயரே! (இதனை யறிந்து தக்க முறையில்

விசாரணை மேற்கொண்டு குற்றம் செய்த நாகராச நம்பிக்குத் தகுந்த தண்

டனை வழங்கிடுதல் வேண்டும் என்பது உட்பொருள்).


குறிப்பிட்ட நாளும் வந்தது.  திட்டமிட்டபடியே கிருட்டிணதேவராயர் தமிழகச்

சுற்றுப் பயணம் மேற்கொண்டு திருவாரூர்ச் சிவபெருமானை வணங்கக்

கோவிலுக்குள் நுழைந்து தியாகராசர் சந்நிதிக்கு வந்தார். அப்பொழுது

இரண்டு கிளிகள் பறந்துவந்து இராயரின் தோள்களில் அமர்ந்து மேலே

குறிப்பிடப்பட்ட பாடலைச் சொல்லின. நல்ல பயிற்சி கொடுத்த காரணத்

தால் ஏறத்தாழ மனிதனைப் போலவே பாடலைக் கூறின. பெரும்பகுதி

இராயருக்குப் புரிந்தது.  உடனடியாக அறுபத்து மூவர் சிலைகளை எண்ண

ஆணையிட்டார். எண்ணிக்கையில் இரண்டு குறைந்தன. வாங்கிய கன்

னானை வரவழைத்து விசாரணை மேற்கொண்டார். நாகராச நம்பியின்

திருட்டுத்தனம் வெளிப்பட்டது. உரிய தண்டனையை வழங்கிவிட்டுத் தன்

சுற்றுப் பயணத்தைத் தொடர்ந்தார். சிலைத் திருட்டை வெளிக்கொணர்ந்த

கிளிப்பிள்ளைகள் பாராட்டுக்கு உரியன என்பதில் ஐயமில்லை.


பார்வை: தமிழ் நாவலர் சரிதை மூலமும் உரையும்:

ஆசிரியர்: பேராசிரியர்/தமிழ் ஆராய்ச்சியாளர்

ஔவை சு.துரைசாமி பிள்ளை.

Wednesday 24 November 2021

பிரிவுத் துன்பம்.

 பிரிவுத் துன்பம் போல் தொல்லைதரும் பிறதுன்பம் ஏதுமுண்டோ?


காதலன்-காதலி இடையே நிகழ்வதாயினும், கணவன்-மனைவி இடையே

நிகழ்வதாயினும் பிரிவு  எல்லையற்ற மனவுளைச்சலை உருவாக்குகிறது.

அகப்பொருள் இலக்கணத்தில் நான்கு விதமான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன.

1.பொருள் ஈட்டுவதற்கான பிரிவு 2.தூது நிமித்தமான பிரிவு 3.போருக்குச்

செல்ல நேர்ந்தமையால் பிரிவு 4. பரத்தையர் உறவால் பிரிவு.


பிரிவால் விளையும் துன்பம் சொல்லொணாதது. திருவள்ளுவர் தம் திருக்குறளில்

,"அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்

பின்னிருந்து வாழ்வார் பலர்."(குறள்:1160)

பிரியும்பொழுது உருவாகும் துன்பத்தால் வருந்துவதையும் தவிர்த்து, பிரிந்தபின்

அப்பிரிவையும் தாங்கிக்கொண்டு அதன்பின்னும்  பற்பல மகளிர் உலகத்தில்

உயிர்தாங்கி வாழ்ந்து வருகின்றனர்.


இலக்கியங்களில் பிரிவுத்துன்பம் எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்று காண்போம்:

குறுந்தொகை ஆறாம் பாடலில் புலவர் கயமனார் கீழ்க்கண்டவாறு பாடியுள்ளார்:

"நள்ளென்(று) அன்றே யாமம், சொல்அவிந்(து)

இனி(து)அடங்  கினரே மாக்கள் முனிவின்று

நனந்தலை உலகமும் துஞ்சும்

ஓர்யான் மன்ற துஞ்சா தேனே".

காதலனைப் பிரிந்து வாடும் தலைவி புலம்பிப் பாடுகின்றாள்:

"பிரிவால் வாடும் காதலர்க்குப் பகையாய் விளங்குவன இரவுப்

பொழுதும் நிலவின் ஒளியும் ஆகும். நள்ளிரவு நேரம்; ஊர் மக்கள்

பேசுதல் நீக்கி(சொல் அவிந்து) அடங்கினர். என் பிரிவுத் துன்பத்

தைப் பற்றிக் கவலை கொள்ளாத மாக்கள்(ஆற்றாமையிலும், சினத்

திலும் தோய்ந்து உழலும் அவள் மக்களை மாக்கள் என்ற சொல்லால்

குறிப்பிடுகின்றாள்) எந்தவிதமான கவலையும் இன்றித் துயில்கின்

றனர். இந்த அகன்ற பெரிய உலகத்தில் நான் ஒருத்திதான் உறக்கம்

கொள்ளாமல் விழித்துக் கொண்டிருக்கின்றேன். ஏனையோர் அனை

வரும் ஆழ்துயிலில் ஈடுபட்டுள்ளனர்."🎂

இதே கருத்து திருக்குறளில் பயின்று வந்துள்ளது.(குறள்:1168):

"மன்னுயிர் எல்லாம் துயிற்றி யளித்திரா

என்னல்ல(து) இல்லை துணை".

"இரவுப் பொழுது பரிதாபமாகக் கழிகின்றது. மற்ற எல்லா உயிர்களையும்வவஒ

உறங்கவைத்துவிட்டதனால், இரவு முழுவதும் துயிலாதிருந்த என்னைத்

தவிர வேறு எந்த  ஒரு துணையும் இல்லாதிருக்கின்றது."


இனி, சிலப்பதிகாரத்தில் பயின்றுவரும் ஒரு பாடலைப் பார்ப்போம்:

"பையுள் நோய்கூரப் பகல்செய்வான் போய்வீழ

வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை!

மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்

ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை."

"பிரிவுத் துன்பமாகிய நோய் மிகுதி ஆகக் கதிரவனும் மேற்கில் மறைய

நாட்டில் உள்ளோரெல்லாம் நல்லுறக்கம் கொள்ள மனத்தை மயக்கும்

மாலைப் பொழுதே நீ தோன்றியுள்ளாய். மாலைப் பொழுது நீதான் என்

பது மெய்யென்றால், என்னைத் திருமணம் செய்து பின் இரக்கமின்றிப்

பிரிந்துசென்றவர் அவர்தான் என்பது உண்மையானால் இந்த உலகம்

துன்பத்தில் துடிக்க வேண்டியதுதான். வேறு ஒன்றும் செய்ய இயலாது.

அத்தகைய துன்பத்துக்குக் காரணமான மாலையே நீ வாழ்க!"


இனி, இடைக் காலப் புலவர் ஒருவர்(பெயர் தெரியவில்லை) இயற்றிய

பாடலை நோக்குவோம்:

பொருள் ஈட்டுவதற்காகச் சென்ற தலைவன் வினை முடிந்து ஊர்க்குத் 

திரும்பும் பொழுது தன் காதலி பிரிவுத் துயரால் வாடி வதங்கி நொந்து

நொம்பலப்பட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருப்பாள் என எண்ணி

வானில் உலவும் மேகங்களை அழைத்துத் தான் வந்து கொண்டிருக்கும்

செய்தியைச் சொல்லிச் செல்லுமாறு தெரிவிக்கின்றான்.பாடல் பின்வருமாறு:

"விண்வழியே ஓடுகின்ற மேகங்காள்! ஒருவார்த்தை

விளம்பிச் சேறீர்,

மண்வழியே புகழ்நிறுத்தும் மகதேச வாணன்தன்

        வரையிற் சென்றால்

கண்வழியே முத்தொழுகக் கைவழியே சங்கொழுகக்

         காமன் எய்த

புண்வழியே உயிரொழுக வரும்வழியே பார்த்திருக்கும்

         பூவை  யார்க்கே."

"விண்வழியே ஓடுகின்ற மேகங்களே! மகதேச வாணனின் மலைவழியே

செல்லும் பொழுது அவ்வூரில் கண்வழியே முத்து முத்தாகக் கண்ணீர்

உகுத்தும், கைவழியே சங்கு வளைகளை நெகிழவிட்டும், காமன் மலர்க்

கணையால் எய்த புண்வழியே தன் உயிரை இழந்தும் வாழ்ந்துவரும்  என்

காதலியைச் சந்தித்து அவளிடம் நான் ஊருக்குத் திரும்பிவரும் செய்தியைச்

சொல்லிவிட்டுச் செல்க."


பிரிவுத் துன்பம் மிகக் கொடுமையானது. ஊண், உறக்கத்தைக் கெடுத்துவிடும்.

மேனியை வாடச்செய்யும். மேனி நிறத்தை மாற்றிப் பசலைநிறம் அடையச் செய்

யும். கண்ணீர் சொரிய வைக்கும். தேம்பித் தேம்பி அழவைக்கும். இத்துயரம்

போக்கும் ஒரே மருந்து மீண்டும் காதலனை/கணவனைச் சந்திப்பது தான்.


 ஆடவர் போர்செய்தற் பொருட்டோ, பொருளீட்டுதல் பொருட்டோ, கல்வி

 கற்றல்  பொருட்டோ  வேறு ஊர்களுக்குச் செல்ல நேரிடும். அப்பொழுது

தலைவன் தலைவியைப் பிரிவது இயற்கை. வேறு ஊருக்குச் சென்ற 

தலைவன் தலைவியை நினைத்து ஏங்கினாலும் ஒருவாறு மனத்தைத்

தேற்றிக்கொண்டு எந்தப் பணிக்காக வந்தானோ அந்தப் பணியில் ஈடுபட்டுப்

பிரிவுத் துயரை ஆற்றிக் கொள்வான்.


 ஆனால் தலைவிக்கோ வேறு பணி

ஏதும் இல்லாததால் தலைவனைப் பற்றியும் அவனொடு கழித்த இன்பமான

பொழுது களைப் பற்றியும் சிந்தித்துச் சிந்தித்து  மென்மேலும் துயர் கொள்வாள்.

பொழுதைக் கழிப்பது மிக மிகத் தொல்லையாக விளங்கும். இதனால்தான்

திருவள்ளுவர் தமது 1269 ஆம் குறளில் கீழ்க்கண்டவாறு பாடினார்:

"ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்

வருநாள்வைத்  தேங்கு  பவர்க்கு."

பொருள்:

நெடுந்தொலைவு சென்ற தம் தலைவர் திரும்பி வருவதாகக் குறித்த நாளை

ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும்  தலைவிக்கு அக்குறிப்பிட்ட நாள்

வரும்வரை ஒவ்வொரு நாள் கழிவதும் பலநாட்கள் கழிவது போலத் தோன்றும்.

சேண்=தொலைவு.


தனிப்பாடல் திரட்டிற் காணப்படும் ஒரு பாடலில் தலைவிக்கு ஒருநாள் கழிவது

ஐந்து உகம்(யுகம்) கழிவது  போலத்தோன்றியதாம். பாடலைப் பார்ப்போம்:

"கொத்தலரும் தாரான் குலசேக ரன்கூடல்

பத்தி இளங்கமுகின் பாளைதொறும்--தத்திவரும்

தாளஞ்  சுகமே!  தலைவர்  தமைப்பிரிந்த

நாளஞ்  சுகமே நமக்கு."

பொருள்:

கொத்துக் கொத்தாகப் பூத்த  மலர்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்திருக்கும்

குலசேகர பாண்டியனின் கூடல் நகரில் சோலையிலுள்ள இளம் பாக்கு

மரப் பாளைகளில் தத்தி விளையாடும்  அழகிய கால்களையுடைய கிளியே!

(தாள் + அஞ்சுகம்= காலையுடைய கிளி). எம் தலைவர் எம்மைப் பிரிந்து

சென்றுள்ள காரணத்தால் ஒவ்வொரு நாள் கழிவதும் ஐந்து யுகம் கழிவது

போல நீண்டு தோன்றுகின்றது.(நாள் + அஞ்சு+ உகம்,). புலவரின் வார்த்தை

விளையாட்டைக் கவனிக்கவும். தாள் அஞ்சுகமே!(கிளியே!) ஒவ்வொரு நாள்

கழிவதும் ஐந்து யுகம் கழிவது போலத் தோன்றுகிறது(நாள் + அஞ்சு ,+ உகம்).

பிரிவுத் துயரம் மிகக் கொடுமையானது; அதைப் புலவர் வருணிப்பது மிகத்

திறமையானது.

Saturday 6 November 2021

தமிழக மீனவரக்கு விடிவு உண்டா?

 தமிழக மீனவரின் தணியாத துயரம்.

"இந்தியத் திருநாடே! ஏன் இந்தப் பராமுகம்?"--மக்கள்.


கடலன்னை வளர்த்தெடுக்கும் கண்ணியம்சேர் பெருமக்கள்

உடலாலும் உளத்தாலும் உரமிகுந்த பரதவர்கள்;


இயற்கைத்தாய் விளைவிக்கும் இடி,மின்னல்,ஆழிஅலை

அயர்வடையச் செய்துவிடும் அடைமழை,சூ றாவளியாம்


இத்தனையும் எதிர்கொள்ளும் எங்கள்தமிழ்த் தொல்குடியர்

நித்தநித்தம் சிறீலங்காக்  கடற்படையால் துயரடைவர்;


அன்றாடம் அன்னவரால் அவதியுறும் மீனவர்க்கு

நன்றாகத் துணைசெய்ய நலம்நாடும் அரசில்லை;


கையகல இலங்கைசெயும் கள்ளமிகு  செயலையெல்லாம்

மையப்பேர் அரசாங்கம் கண்டிப்ப  தேயில்லை;


கண்டும்கா ணாததுபோல் கடமைசெயல் நன்றாமோ?

விண்டுரைப்பார் யாருமிலர்; வேதனைதீர்ப் பாருமிலர்;


இரவுபகல் பாராமல் இருங்கடலில் மீன்பிடிப்போர்

"வரம்பெல்லை தாண்டிவந்தார்; வலை,படகைப் பறித்திடுவோம்;"


எனவுரைத்தே இலங்கையர்கள் எள்ளளவும் இரக்கமின்றி

அனைவரையும் கைதுசெய்வர்; அடிதடியில் இறங்கிடுவர்;


மீன்களையும் பறித்திடுவர்; வலைகளையும் அறுத்தெறிவர்;

ஏனென்று கேட்பவரைத் துப்பாக்கி யால்சுடுவர்;


இன்றைக்கு வரையிலுமே எண்ணூறு நபர்வரையில்

கொன்றழித்த தீமைமிகு குள்ளநரி சிறீலங்கா; 


தமிழகத்து மீனவரைத் தயக்கமின்றிக் கொல்வதற்குத்

திமிர்பிடித்த இலங்கையர்க்குத் துணிவெங்ஙன் வாய்த்ததம்மா?


எக்கொடுமை  நேர்ந்திடினும் இந்தியநல் அரசாங்கம்

தக்கபடி உதவாது; சற்றேனும் வருந்தாது.


பாரதத்தின் புறக்கணிப்பால் பாதகர்கள் சிங்களவர்

கோரமிகு கொடுஞ்செயலைக் குதுகலித்து நிகழ்த்துகின்றார்;


இந்தியராம் செந்தமிழர்  இடர்கண்டும் இரங்காமல்

மந்தமாய் வினையாற்றும் மையத்துப் பேரரசு;


எழுகோடி அபராதம் எனச்சொன்ன சிங்களவர்;

அழுதழுது கெஞ்சிடினும் அதைவிலக்க வேயில்லை;


"படகுகளை நாட்டுடைமை யாக்கிடுவோம்" எனச்சொல்லி

உடனடியாய்ச் சட்டத்தை உருவாக்கி இடர்செய்வர்;


தமிழ்நாட்டுக் குரியகச்சத் தீவுதனைக் கையளித்தோம்;

உமிழ்கின்றார் வெறுப்பினையே; ஒருநாளும் நன்றிசொலார்.



எத்தனையோ ஆண்டுகளாய் இராசேந்தி ரன்போன்றோர்

வித்தைபல புரிந்த,வங்க விரிகுடா தனிலின்று


சிற்றெலியை ஒத்தசிறு சிங்களவர் சுற்றிவந்து

குற்றங்கள் இழைக்கின்ற கொடுமையினை என்னசொல்ல?


பாரதத்துக் கடற்படையார் பராமுகத்தைக் காட்டுவதால்

சீரழியும் மீனவர்க்குச் சிறிதளவும் பயனில்லை;



தெரிந்தபகை நாடான செஞ்சீனா, பாக்கித்தான்

உரிமையுடன் இலங்கையர்க்கே உதவிசெய்து பயமுறுத்தும்;


மற்றவர்கள் துன்பத்தில் வலியவந்து பங்குகொண்டே

உற்றநல்ல உதவிசெயும் உணர்வுடைய பரதவர்கள்


துயரடையும் போதெவரும் துணைசெய்ய வந்திலரே;

அயர்வடையும் போதெவரும் அவர்கண்ணீர் துடைத்திலரே!


பரதவர்க்குக் கைகொடுத்துப் பக்கபல மாகநிற்போம்;

அரவணைத்தே அன்னவர்க்காய் ஆதரவுக் குரல்கொடுப்போம்;

அண்டைநட்பு நாடெனவே ஆதரிக்கும் பாரதமே!

சண்டையிட வேண்டா; நீர் தவறுசுட்டிக் காட்டிடுவீர்.


சேட்டைசெயும் சுண்டைக்காய்த் தேசத்தை எச்சரிப்பீர்!

வாட்டமுறும் மீனவர்கள் வாழ்வாதா ரம்காப்பீர்!


நங்கச்சத் தீவுதனை நயமாக மீட்டெடுப்பீர்!

சிங்களவர் கொட்டத்தைத் திட்டமிட்டே ஒடுக்கிடுவீர்!


ஓயாத துன்பத்தில் உழல்கின்ற மீனவரைத்

தாயாகக் காப்பீரே, சார்ந்து.

(பராமுகம்=பாராமுகம்; கவனிப்பு இல்லாமை)

கரிகால் சோழனைப் புகழந்த வெண்ணிக்குயத்தியார் என்ற

புலவர் புறம். 66ஆம் பாடலில் குறிப்பிட்டது:

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!"

(முந்நீர்=கடல்; நாவாய்= கப்பல்; வளிதொழில்= காற்றின் செயல்பாடு)

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக 'வளிதொழில்' நுட்பத்தை

அறிந்து கடலில் ஆதிக்கம் செலுத்திய இனம் தமிழினம். இராச

ராசனும், இராசேந்திரனும் கடலாதிக்கத்தில் உச்சத்தைத் தொட்டவர்கள்.

இப்படிப்பட்ட நம்மைச் சுண்டைக்காய்த் தேசமான சிறீலங்கா இரண்டு

அல்லது மூன்று கப்பல்களை வைத்துக்கொண்டு மீனவரைத் துன்புறுத்து

வதும், கொலை செய்வதும் மிகப் பெரிய கொடுமைகள். இதுவரையில்,

எண்ணூறு மீனவர்களுக்குமேல் கொன்று குவித்துள்ளனர். இது

தொடர்பாக இந்தியத் திருநாடு எந்தவித எதிர்வினையும் ஆற்றாமல்

மெளனம் கடைப்பிடிப்பது புரியாத புதிராகவுள்ளது. ஏனிந்தப் பாராமுகம்

காட்டுகின்றனர்?  என்பது விளங்கவில்லை.

Monday 1 November 2021

பண்டைத் தமிழகத்தின்

 பண்டைத் தமிழகத்தின் செல்வச் செழிப்பு.


பண்டைய தமிழ்மக்கள் பல்வேறு தொழில்கள் புரிவதிலும்

வாணிகம் செய்வதிலும் தலைசிறந்து விளங்கினார்கள்.

வாணிகம் என்பது உள்நாட்டு வாணிகத்தையும் வெளிநாட்டு

வாணிகத்தையும் குறிக்கும். வெளிநாட்டு வாணிகத்தை

மேற்கொள்வதற்காகக் கடற்பயணத்தை மேற்கொண்டார்கள்.

கடற்பயணத்துக்காக நாவாய் என்னும் கலம் உருவாக்கினார்கள்.

காற்று எந்தத் திசையில் வீசுகிறது? அதன் வேகமென்ன? ஆமை

கைக்கொள்ளும்  வழித்தடங்கள்  எவை?போன்ற சகல நுட்பங்களையும்

சேர, சோழ, பாண்டிய மற்றும் பல்லவ வேந்தர்கள் தெரிந்து வைத்

திருந்தனர். புறம் 66ஆம் எண் பாடல் வெண்ணிக் குயத்தியார்

கரிகாற் பெருவளத்தான் மீது பாடியது. அதில் கரிகாலனின் முன்

னோர் கடற் காற்றின் நுட்பங்களை நன்கு அறிந்தவர்கள் என்று

பாராட்டியுள்ளார். அவ் வரிகள்பின் வருமாறு:

"நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி

வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!"

சோழரைப் போலவே சேர, பாண்டிய மற்றும் பல்லவ மன்னர்களும்

இந்த நுட்பத்தை அறிந்திருந்தனர். எனவே தம் மக்களை ரோமானிய,

கிரேக்க, எகிப்திய, சுமேரிய, பாபிலோனிய, சீன, மற்றும் பிற நாடு

கருடன் வாணிகம் செய்யுமாறு ஊக்கினர். வாணிகர்களுக்குக்

கடற் கொள்ளைக்  காரர்களால் இன்னல்கள் நிகழ்ந்த போது

தம் கடற்படை வீரர்களை அனுப்பிப் பாதுகாப்பு அளித்தனர். இதனால்

வெளிநாட்டு வாணிகம் செழித்தது. தமிழ்நாட்டில் செல்வம் குவிந்தது.


ரோமானிய, கிரேக்க வணிகர்கள் யவனர் எனப்பட்டனர். அரபு

நாட்டைச் சேர்ந்தவர்கள் சோனகர் எனப்பட்டனர். ஏனைய நாட்டினர்

மிலேச்சர் எனப்பட்டனர். ரோமானிய மற்றும் கிரேக்க நாட்டினர்

பொன்னொடு வந்து கறியொடு(மிளகு) சென்றார்கள்.மேலும் முத்து,

மஸ்லின் துணி, ஏலம் கிராம்பு போன்ற நறுமணப் பொருட்கள் தமிழ்

நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. வெளிநாடுகளிலிருந்து

கண்ணாடி, மது வகைகள்,  நறுமணத் திரவியங்கள், சாடிகள், சூது

பவளங்கள், மணிவகைகள் முதலியவை இறக்குமதி செய்யப்பட்டன.

அரபு நாட்டிலிருந்து குதிரைகள் இறக்குமதி செய்யப்பட்டன. ரோமா

னியரும் கிரேக்கரும் பொன்னைக் கொட்டிக் குவித்தார்கள். ரோமானிய

அரசனிடம் பிளினி என்ற வரலாற்று ஆசிரியர் "நமது நாட்டுச் செல்வம்,

குறிப்பாகப் பொன், தமிழ்நாட்டுடனான வாணிகத்தால் பறிபோகிறது;

அரசுக் கருவூலம் காலியாகிறது. தமிழ்நாட்டுடனான வாணிகத்தைக்

குறைத்துக் கொள்க" என்று எச்சரித்ததாகத் தகவல் உண்டு. எனவே தான்,

பெரிய அளவில் தங்கச் சுரங்கங்கள் தமிழ்நாட்டில் இல்லாத  நிலையிலும்

பொன் இங்கே அதிகமாக மக்களிடம் புழங்கியது. முத்தொள்ளாயிரம்

என்னும் இலக்கியத்தில் பாண்டிய நாட்டைப் புகழும் போது

"பார்படுப செம்பொன்; பதிபடுப முத்தமிழ்நால்" என்று விவரிக்கிறது.

அவ்வளவு செம்பொன் வருவதற்குக் காரணம் கொற்கை முத்தாகும்.


கொற்கைப் பட்டினத்தில் கடற்கரையில் கடல் அலை குவிக்கும் முத்துக்கள்

செல்வர் ஏறி வரும் குதிரைகளின் குளம்புகளுக்குள் மாட்டி அவைகளின்

நடமாட்டத்துக்கு இடையூறாக அமைந்துவிடும். பா.எ. அகம்.296--10.:

"இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்

கவர்நடைப் புரவி கால்வடுத் தபுக்கும்

நற்றேர் வழுதி கொற்கையம் முன்றுறை"

மேலும், அங்கு உப்பு விளைவிக்கும் உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்

களைப் போட்டு ஆட்டித்  தங்கள் குழந்தைகட்கு  விளையாட்டுக் காட்டுவர்.

"நளிநீர் முத்தம் வாள்வாய் எருத்தின்

வயிற்றகத்தடக்கி உமட்டியர் புதல்வரொடு

கிலிகிலி ஆடும்..........",சிறுபாணாற்றுப்படை பா.எ.62.

சேர, சோழ, பல்லவர்க்கு மிளகு, ஏலம், கிராம்பு, தேக்கு, அகில், மஸ்லின்

துணி போன்ற பொருட்களால் செல்வம் வந்து குவிந்தது.


சோழ மன்னன் பராக்கிரம பாகு என்பவன் ஆறையெனும் பகுதியை

ஆண்டுவந்தவன். அவனது செல்வச் செழிப்பை ஒரு புலவர் எவ்வாறு

விவரித்துள்ளார் என்று பார்ப்போம்:

"பூழியர் சோரப் பொருப்பினுள் வானவர் போய்மறைய

ஆழி எறிந்த பராக்ரம பாகுவின்  ஆறையிலே

மேழிகொள் மள்ளர் மடைதோ றடைப்பதும் வெண்தரளம்;

கோழிகள் சீய்க்கும் தெருத்தொறும் மாணிக்கக் குப்பைகளே".

பொருள்: பாண்டியர் சோர்ந்து போகவும், சேரர்கள் ஒளிந்து

கொள்ளவும் நன்முறையில் ஆறையெனும் பகுதியில் ஆட்சி

நடத்தும் பராக்கிரம பாகு என்னும் சோழனின் நாட்டிலே கலப்பை

ஏந்தும் மள்ளர்கள் வாய்க்காலை வெண்மையான முத்துக்களால்

அடைப்பார்கள்;  தெருக்கள் தோறும் மாணிக்கங்கள் குப்பையிலே

கொட்டப்பட்டுக் குவிந்து கிடக்கும்  அவற்றைக் கோழிகள் கிளறும்.

(மேழி=கலப்பை; சீய்க்கும்=கிளறும்). பண்டைத் தமிழகத்தில்

செல்வம் கொழித்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

Friday 15 October 2021

நடுவண் அரசுக்கோர் விண்ணப்பம்.

 நடுவண் அரசே! நாசகர நீட் தேர்வை விலக்க உதவுக.


இன்தமிழ் இளைஞர் தங்கள் இலட்சியக் கனவாய் எண்ணும்

மன்பதை காக்கும் தூய மருத்துவர் ஆக வேண்டி

உன்னத மாகக் கற்றே உயர்ந்தநல் மதிப்பெண் பெற்றும்

இன்னல்செய் நீட்டுத் தேர்வால் இடம்கிடைக் காமல் போகும்.


தேர்வினில் தில்லு முல்லு;. தீங்குசெய் ஆள்மா றாட்டம்;

நேர்மையோ சிறிதும் இல்லை; நிறைபொருட் செலவி  ழுக்கும்

சீர்கெட்ட பயிற்சி மையம்; செய்வது தேரா மக்கள்;

யாரிதை விரும்பி ஏற்பார்? யாவர்க்கும் இடைஞ்சல் தானே!


உத்தமர் காந்தி அண்ணல், " ஊரக மக்கள் வாழ்வை

மெத்தவும் உயர்த்தல் வேண்டும்;  வினைசெய்க" என்றார்; நீட்டால்,

எத்தனை முயன்றும் அன்னார் இடம்பெற இயல வில்லை;

சித்தத்தில் சோர்வ டைந்து செத்தார்போல் திரிகின் றாரே.


தமிழக அரசுப் பள்ளி  தன்னிலே கற்ற மக்கள்

தமிழ்வழி கல்வி கற்ற சால்புடை மாண வர்கள்

சமுகத்தில் ஒதுக்கப் பட்டோர்,  தாழ்த்தியே  வைக்கப் பட்டோர்

அமிழ்தன வைத்யக்  கல்வி அடையவே இயல வில்லை.


பெருந்தொகை செலவு செய்வோர், பித்தலாட்  டத்தில்  தேர்ந்தோர்,

திரும்பவும் இந்தத் தேர்வைச் சிலமுறை  எழுதிப் பார்ப்போர்,

வருந்தியே படித்தி டாமல் பிறரைப்பார்த் தெழுது  வோர்கள்

மருத்துவ இடத்தைப் பெற்று வாகையே சூடு  கின்றார்.


செந்தமிழ் நாட்டில் உள்ள மருத்துவ  இடத்தில் எல்லாம்

இந்தியத் திருநாட் டைச்சேர் ஏனைமா நிலத்தில் வாழ்வோர்

விந்தையாய் இந்தத் தேர்வில் வெற்றியைப் பெற்றுக் கற்பார்;

எந்தவோர் நிலையி வேனும் இழைப்பரோ கிராம சேவை?



மாநில அரசின்  கீழே மாபெரும் வளர்ச்சி கண்ட

தேனிகர் கல்வி தன்னைப் பொதுப்பட்டி தனிலே சேர்த்து

வானுயர் அதிகா ரத்தை மையத்தில் குவித்துக் கொண்டீர்;

ஏனிந்த  அநீதி ஐயா! எம்வசம் ஒப்ப டைப்பீர்.


மருத்துவக் கட்ட மைப்பில்  வானுயர் வளர்ச்சி கண்ட

அருந்தமிழ் நாட்டில் வாழும் அறிவுடை மாண வர்க்கு

மருத்துவக் கல்வி கற்கும் வாய்ப்பினைத் தடுக்கும் கல்லாய்

வருத்திடும் நீட்டுத் தேர்வை  வன்மையாய் விலக்கு வோமே!


ஏழைகள் எளிய மக்கள் இத்தமிழ் நாட்டில் நொந்து

கோழை போல் உயிரை மாய்த்தல் கொடிதினும் கொடிது மாதோ!

பாழெனும் இந்தத் தேர்வால் பதினான்கு பேர்கள் மாய்ந்தார்;

ஊழென வந்த நீட்டுக்(கு) உடனடி விலக்குத் தாரீர்.


தமிழகச் சட்ட  மன்றம்  தகவிலா நீட்டை நீக்கிச்

சமத்துவம் பேண வேண்டிச் சட்டமொன் றியற்றி யுள்ளார்;

இமையெனக் காக்கும் மைய இந்திய அரசாங் கத்தார்

தமதுநல் இசைவைச் சொன்னால் தரமிலா நீட்டு நீங்கும்.








Thursday 30 September 2021

தமிழறியும் பெருமாள்.

 தமிழறியும் பெருமாள்.


(பேயொன்று ஔவையாரை அச்சுறுத்த

முயன்று அவரால் நற்கதி அடைந்த கதை)


அளகாபுரி அரசை  அளகேசுவரன் என்ற மன்னன் திறம்பட

ஆட்சி புரிந்து வந்தான். அவனுக்கொரு புதல்வி யிருந்தாள்.

அவள் பெயர் ஏலங்குழலி. பன்னிரண்டு அகவையுடைய

அப்பெண் பேரழகியாக மிளிர்ந்தாள்.அவள் பேரழகு அந்த

நாட்டிலுள்ள மக்கள் யாவரையும் தன்பால் ஈர்த்தது.

ஒருநாள் மாலை நேரத்தில் அரசகுமாரி  தன் உப்பரிகையில்

நின்று தேரோடும் வீதியில் நடமாடும் பொதுமக்களை வேடிக்கை

பார்த்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது அவ்வீதிவழியே

பாடலிபுரம் இளவரசன் ஒருவன் சரிவரக் கல்வி கற்காத காரணத்தால்

தன் தந்தையிடம் கருத்து வேறுபாடு கொண்டு தன் நாட்டைவிட்டு

நீங்கி அளகாபுரி நாட்டில்  சிறிது காலம் கழிக்க எண்ணி நிதானமாக

வலம்வந்து கொண்டிருந்தான். அவன் தோற்றப் பொலிவால் கவரப்பட்ட

ஏலங்குழலி அவன்பால் காதல் கொண்டாள். 


கண்டதும் காதல் என்பது  இதுதான் போலும். உடனே தன் விருப்

பத்தை அவனிடம் தெரிவிக்க எண்ணித் தன் காதோலையில் கைநகத்தால்

"அன்பரே! உம்மைக் கண்டவுடன் காதல் கொண்டுவிட்டேன். பக்கத்

திலுள்ள மண்டபத்தில்  இரவில் முதல் சாமத்தில் உம்மைச் சந்திக்க 

விழைகின்றேன்; தவறாது வருக" என்று எழுதித் தன் கையொப்பம்

இட்டுத் தன் தோழிமூலம் கொடுத்தனுப்பிவிட்டுத் தன் அரண்மனைக்

குள் சென்றுவிட்டாள். தோழியும் அரசகுமாரி கொடுத்தனுப்பிய ஓலை

யை உரிய நபரிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்று விட்டாள்.


ஆனால் என்ன கொடுமை!  அந்தக் கட்டழகு இளைஞனுக்கு எழுதப் படிக்

கத் தெரியாது. அந்த இளைஞன் வீதியில் எவரேனும் உள்ளனரா?

என்று சுற்றுமுற்றும் நோக்கினான்.  வீதியோரத்தில் தொழுநோயாளி

ஒருவர் இருந்ததைக் கண்டு அவரிடம் சென்று "ஐயா! தங்களுக்குப்

படிக்கத் தெரியுமா? தெரிந்தால் இவ்வோலையைப் படித்து அதிலுள்ள

செய்தியைத் தெரிவிக்கவும்" என்றான். அந்த மனிதன்  ஒரு கபடக்காரன். 

பேரழகு மிளிரும் அரசகுமாரி பாடலிபுரத்து இளவரசன் மேல் காதல்கொண்டதை

அறிந்து கொண்டான்; தானே அவளை அடைய எண்ணிக் கட்டழகு இளை

ஞனிடம் உண்மையைக் கூறாமல் "உனக்கு ஒரு எச்சரிக்கை வந்துள்ளது.

'உடனே இந்த ஊரைவிட்டு ஓடிப் போய்விடல் வேண்டும். இல்லாவிட்டால்

நீ கொல்லப் படுவாய்' என்று மிரட்டி யாரோ இந்த ஓலையை அனுப்பியுள்

ளனர். நன்றாகச் சிந்தித்துச் செயல்படு" எனச் சொன்னான். அந்தக் கட்டழகு

இளைஞன் தொழுநோயாளி  சொன்னதை உண்மையென்று நம்பி ஊரை

விட்டே ஓடிப் போனான். தொழுநோயாளி குளித்துமுடித்து நன்கு அலங்கரித்துக்

கொண்டு அரசகுமாரி குறிப்பிட்ட மண்டபத்தை  அடைந்தான். அங்கே

அழகெலாம் ஒருங்கே கொண்ட தேவதை போல நின்று கொண்டிருந்த

அரசகுமாரியைக் கண்டதும் கண்களில் காமம் மிளிர அவளை நெருங்

கினான். தொழுநோயாளியைக்  கண்டதும் அரசகுமாரி துணுக்குற்றாள்.

தான் விரும்பிய கட்டழகு இளைஞன் என்னவானான் என விசாரித்தாள்.

அந்தப் படிப்பறிவற்ற இளவரசன் ஏதோ காரணத்தால் ஊரைவிட்டே

ஓடிப் போனதாகத் தெரிவித்துவிட்டுத் தகாத எண்ணத்துடன் அரசகுமாரி

யருகில் வந்தான். அந்தோ பரிதாபம்; அரசகுமாரி அவனைத் தடுக்கப்

பார்த்தாள். அவன் அவள் கைகளைத் தட்டிவிட்டு அவளைத் தன்னருகே

இழுத்தான். நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த அரசகுமாரி தன்

குறு வாளால் தன் வயிற்றில் குத்திக் கொண்டு மாண்டு போனாள்.

அன்றிலிருந்து அவள் ஆவியாய் அந்த மண்டபத்தில் அலைவதாகவும்

மண்டபத்துக்கு இரவில் வருபவர்களைத் துன்புறுத்துவதாகவும் பேச்சு

அடிபட்டது.


ஒருநாள் அந்தி வேளையில் அவ்வூருக்கு வந்த ஔவையார் அந்த மண்டபம்

இரவில் தங்க வசதியான மண்டபம் என்று எண்ணி அதனுள் நுழைந்தார்.

அவ்வழியே வந்த சில வழிப்போக்கர்கள்  "அம்மையே! இம்மண்டபத்தில்

பேய் நடமாட்டம் உண்டு. இரவில் யாரையும் இங்கே தங்கவிடாது" என்றனர்.

உடனே ஔவையார் "பேயைப் பேய் துன்புறுத்துமா?" என்று வினவித்

தம்மைப்போல் மனவுறுதி கொண்டவர்களைப் பேயால் துன்புறுத்தல் இயலாதென்றார்.

தாம் கொண்டுவந்திருந்த உணவை உண்டுவிட்டு உண்ட களைப்பால்

உடனே உறங்கத் தொடங்கினார். 


தமிழ்நாடு முழுக்கத் தனியாகவே சுற்றிவந்த அவருக்கு அச்சம் என்பதே

துளியும் கிடையாது. எனவே எதைப் பற்றியும் கவலைப் படாமல் ஆழ்ந்த

உறக்கத்தில் திளைத்திருந்தார். முதல் சாம நேரம் வந்தது.(ஒரு சாமம்

ஏழரை நாழிகை நேரத்தைக் குறிக்கும். இரவு முழுவதும் நான்கு சாம நேரம்

உண்டு.) ஆழ்துயிலில் இருந்த ஔவையார் தம்மை யாரோ எழுப்பியது

போல உணர்ந்தார். "சரிதான்; பேய் வந்துவிட்டது போலும்" என்று முணுமுணுத்தார்.

அவர் உடனே பாடத் தொடங்கினார்:

"வெண்பா  இருகாலிற்  கல்லானை, வெள்ளோலை

கண்பார்க்கக் கையால் எழுதானைப்---பெண்பாவி

பெற்றாளே  பெற்றாள்  பிறர்நகைக்கப் பெற்றாளென்(று)

எற்றோமற்(று) எற்றோமற்(று)  எற்று".

பொருள்:வெண்பாவை இரண்டு முறை படித்தவுடனேயே

கற்க முடியாதவனை, வெள்ளோலையில் எழுத முடியாதவனைப்

பெற்றவள், பிறர் நகைக்கும் வண்ணம் கேலிப் பொருளாகி

விட்டாள். அந்தப் பெண்பாவியைப் போய்த் தாக்கு, அடி, உதை;

என்னைத் தொல்லைசெய்யாதே என்பது பொருளாகும்.

அரசகுமாரியால் காதலிக்கப் பட்டவன் எழுதப் படிக்கத் தெரியா

தவன் என்று கேள்விப் பட்டதனால் அதனைப் பற்றியே எடுத்துச்

சொன்னார். உண்மையை உணர்ந்துகொண்ட பேய் அவ்விடத்தை

விட்டு நீங்கியது.


பேய்க்குணம் மாறுமா? பேய் இரண்டாம் சாம நேரத்திலும் வந்து

அம்மையைத் தொல்லைசெய்தது. அவர் மறுபடியும் பாடினார்.

"கருங்குளவி சூரைத்தூற் றீச்சங் கனிபோல்

வருந்தினர்க்கொன் றீயாதான் வாழ்க்கை--அரும்பகலே

இச்சித் திருந்தபொருள் தாயத்தார் கொள்வரே,

எற்றோமற் றெற்றோமற் றெற்று."

பொருள்:

கருங்குளவி சூழ்ந்திருக்கும் இடத்தில் கிடைக்கும் ஈச்சங்கனி

போலச் செல்வம் பயனற்றுப் போகாமல், துன்பப் படுபவர்க்குத்

தரப்படுதல் வேண்டும். இல்லாவிட்டால் எதிர்பாராமல் உயிருக்கு

இடையூறு நேர்ந்து அரும்பாடுபட்டுச் சேர்த்த பணம் பங்காளி

களால் கவரப்படும். அத்தகைய கஞ்சத்தனம் மிக்க மக்களைச்சென்று

தாக்குக.


மூன்றாம் சாமநேரம் வந்தது. பேயும் வந்தது. ஔவையாரைத்

தொல்லைசெய்ய அவர் மீண்டும் ஒரு பாடலைப் பாடினார்:

"வானம் உளதால் மழையுளதால் மண்ணுலகில்

தானம் உளதால் தயையுளதால்---ஆனபொழு

தெய்த்தோம் இளைத்தோமென் றேமாந் திருப்போரை

எற்றோமற் றெற்றோமற் றெற்று."

பொருள்:

உலகத்தில் வானம் உள்ளது. வானத்தின் கருணையினால்

தேவையான மழையுள்ளது. மனிதர்களிடம் உழைப்பு(சிரம

தானம்) உள்ளது. பிறர் மேல் அன்பும் இரக்கமும் உள்ளன.

இவ்வளவும் இருக்கும் போது உழைக்காமல் "யாம் களைத்துப்

போய்விட்டோம்" என்றெண்ணிப் பிறரையும் ஏமாற்றித் தாமும்

ஏமாந்திருப்போரைத் தாக்குக, தாக்குக.


நான்காம் சாம நேரம் வந்தது. பேய் அம்மையைத் துன்புறுத்த

எண்ணி அவர் தூக்கத்தைக் கெடுத்தது. விழித்தெழுந்த அவர்

தம்மை எழுப்பியது பேய்தான் என்று உணர்ந்து பாடலானார்:

"எண்ணா  யிரத்தாண்டு  நீரிற்  கிடந்தாலும்

உண்ணீரம்  பற்றாக்  கிடையேபோல்--பெண்ணாவாய்

பொற்றொடி  மாதர்  புணர்முலைமேற்  சாராரை

எற்றோமற்(று) எற்றோமற்(று)  எற்று".

பொருள்: எண்ணாயிரம் ஆண்டுகள் நீருக்குள் கிடந்தா

லும் உள்ளே ஈரம் பற்றாத கிடைப்பூண்டு(தக்கை) போலப் பற்றில்

லாமல் வாழும் பெண்ணாக உருவாகுவாய்.(இதுவரை

பாடிய மூன்று பாடல்களிலும் ஔவையார் பேயைப்

பார்த்துப் பெண்ணே என அழைக்கவில்லை. ஏனென்றால்

உருவமற்ற ஆவிதான் தொல்லைதந்தது. நான்காம் பாட

லில் பேயைப் பெண்ணே என அழைத்துக் "கற்புடைய

மனைவியுடன் வாழாத அறம் பிறழ்ந்தோரையும் பரத்தை

யரிடம் செல்லும் தகாத ஒழுக்கம் பின்பற்றுவோரையும்

தாக்குக, தாக்குக, தாக்குகவே "என்றார்.  ஔவையார்  பெண்ணே

என்று அழைத்தவுடன் இதுவரை உருவமற்ற ஆவியாக வந்த

பேய் பெண்ணுருவில் அம்மைமுன் தோன்றியது. ஔவையார்

அந்தப் பேயிடம் "உன் கதை முழுதும் எனக்குத் தெரியும். நீ யாருக்கு

ஓலை கொடுத்தனுப்பினாயோ அந்த இளவரசன் படிப்பறிவற்ற

காரணத்தால் தொழுநோயாளியிடம் காட்டினான். அதனைப் படித்த

தொழுநோயாளி சதிவேலை புரிந்து இளவரசனை அச்சுறுத்தி ஊரை

விட்டு ஓடச் செய்தான். அண்மையில் அவன் இவ்வூருக்குத்  திரும்பிவந்து

நீ தற்கொலை செய்து கொண்டதை யறிந்து மனமுடைந்து தானும்

நஞ்சுண்டு மாண்டு போனான். அவனும் பேயாக இம் மண்டபத்தில்

அலைந்து வருகின்றான்." என்று ஔவையார் உரைத்ததும், ஆண்

பேயும் தன் இயல்பான உருவத்துடன் அம்மைமுன் தோன்றியது.

ஔவையார் அவர்களிடம் " ஏலங்குழலி நீ உறையூரில் மரகதவடிவு

என்ற பெண்ணின் மகளாகத் தோன்றி நல்ல தமிழ்ப்புலமையடைந்து

'தமிழறியும் பெருமாள்' என்ற பெயரில் சிறக்க வாழ்ந்துவருவாய்;

இளவரசனும் அதே ஊரில் ஒரு விறகுதலையன் மகனாகத் தோன்றி

வாழ்ந்து வருவான். உரிய பருவத்தில் நக்கீரர் உன் புலமைச் செருக்கை

அடக்கி இளவரசனுக்கு மணம் முடித்து வைப்பார். நீங்கள் இருவீரும்

எல்லையற்ற இன்பம் அனுபவித்து  மகிழ்ச்சியோடு வாழ்வீர்" என்று

வாழ்த்தினார். அவர் வாக்கு பலித்திருக்கும் என்றே தோன்றுகிறது..

ஏனென்றால் ஔவையார் அவ்வூரை விட்டு நீங்கிய பிறகு அந்த

மண்டபத்தில் தங்குபவர்களுக்குப் பேயினால் யாதொரு துன்பமும்

நேரவில்லை.


ஔவையாரின் இந்த நான்கு பாடல்களுக்கு ஆதாரமாக இந்தப்

பேய்க்கதைதான்எல்லாத் தனிப்பாடல் திரட்டு நூல்களிலும்

காணப்படுகிறது. பேய் உள்ளதா? இல்லையா? என்பது பெரிய

விவாதப் பொருள். ஆனால் நம் இலக்கியங்களில் பேய் உண்டு

என்னும் அடிப்படையிலான கவிதைகள் உள்ளன. நம்புவதும்

நம்பாததும் அவரவர் விருப்பம். புறநானூற்றில்  பேய்மகள்

இளவெயினியார் பாடியதாகப் பாடல் உள்ளது. பேயுருவத்

.தோடு நின்று  பாலை பாடிய சேரமான் பெருங்கடுங்கோ

வைப் பாடியதாகப் பாடல் மூலம் அறிய முடிகிறது. ஒருவேளை

பேய் போல உருவத்தோடு  ஒப்பனை ஏதுமின்றி அலைந்தவரைப்

பேயாகத் திரிந்தவர் என்று சொன்னார்களோ, என்னவோ?

நாம் இந்த ஆராய்ச்சிக்குள் செல்ல வேண்டா. பேய் உண்டோ?

இல்லையோ? ஔவையார் எதற்கும் அஞ்சாத நெஞ்சுரம் உடையவர்

என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.


பின்குறிப்பு:

இந்தக்கதை 'தமிழறியும் பெருமாள்' என்ற பெயரிலேயே

1942 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளிவந்தது. ஒரு நாழிகை

காலக் கணக்கில் 24 நிமிட நேரத்தைக் குறிக்கும். ஒரு நாளுக்கு

60 நாழிகை என்பது கணக்கு. 8 சாம நேரம் என்றும் கூறலாம்.

Monday 20 September 2021

சங்க காலத்தில் நிகழ்ந்த போர்க் கொடுமைகள்.

 சங்க காலத்தில் போர்களினால் விளைந்த கொடுமைகள்.


ஆதிமனிதன் காடுகளிலும், மலைக் குகைகளிலும் வாழ்ந்த

பொழுது புலி, சிங்கம், கரடி, யானை முதலான கொடிய விலங்

குகளோடு சண்டை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தது.

ஏனென்றால் குகைகளில்தான் விலங்குகளும் வசித்தன. இருப்

பிடச் சிக்கலால் இரு இனங்களுக்கும் மோதல் உருவாயிற்று.

பின்னாட்களில், மனிதர்கள் ஆற்றுப் படுகைகளில் வசிக்க நேர்ந்த

பொழுது வீடுகளைக் கட்டி அவைகளில் குடியிருந்து வேளாண்மை

செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. இப்படியாகக் காடு, மலை

 போன்றவைகளிலோ அவைகளின் அருகிலேயோ குடியேற்றம்

நிகழ்ந்து பின்னர் ஆற்றுப் படுகைகளிலும் குடியேற்றம் நிகழ்ந்தது.

உணவு, உடை, உறையுள் முதலிய அடிப்படைத் தேவைகள் நிறைவேறிய

பிறகு நாகரிகம் உருவாகி வளர்ந்தது.


என்னதான் நாகரிகத்தில் வளர்ச்சியடைந்தாலும் மனிதனின் ஆதிக்

குணமான சண்டைக் குணம் மறையவேயில்லை. எனவே, புலவர் இடைக்

குன்றூர் கிழார் "ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்

றிவ்வுலகத் தியற்கை" என்று பாடியுள்ளார்(புறம். பாடல் எண்: 76). நாகரிக

வளர்ச்சியை அடுத்து மனிதர்கள் தம்மை ஆள அரசுகளை அமைத்தனர்.

மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசையால் இவ்வரசுகள் தமக்குள்

சண்டையிட்டுக் கொண்டன.


தொடக்கத்தில் மன்னர்கள் அறவழியிலேயே போர்கள் நிகழ்த்தினர்.

பாண்டிய மன்னன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவர்

தாம் போர் தொடங்குவதற்கு முன்னர் தாம் ஒரு குறிப்பிட்ட நாட்டுக்

கெதிராகப் போர் புரியத் திட்டமிட்டுள்ளதாகவும்,  பசுக்கள், பெண்டிர்,

அந்தணர், புதல்வரைப் பெறாதோர் ஆகியோர் போர் நடக்கும் இடத்

தை விட்டு ஒதுங்கி இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும் புலவர்

நெட்டிமையார் பாடியுள்ளார்(புறம். பா.எ.9). ஆனால், நாட்கள் செல்லச்

செல்லப் போர் முறைகளில் வன்முறை, பழிவாங்கும் எண்ணம், மிகக்

கொடூர சிந்தனைகள் தலைகாட்டத் தொடங்கின. 


தாம் தோற்கடித்த நாடுகளில் முதன்மைத் தெருக்களில் கழுதைகளைப்

பூட்டி உழச்செய்ததாக ஒரு மன்னனைப் பற்றிப் புலவர் நெட்டிமையார்

பாடியுள்ளார்(புறம். பா.எ.15). புலவர் பாண்டரங் கண்ணனார் ஒரு மன்னர்

தாம் வென்ற நாட்டை எரியூட்டியதாகப் பாடியுள்ளார்.(புறம். பா.எ.16). புலவர்

மாங்குடி மருதனார் தலையாலங் கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

போரில் தோற்ற பகையரசர் முடித் தலைகளை அடுப்பாக்கி இரத்தத்தை

நீராகப் பெய்து பகைவர் தசையையும் மூளையையும் அதனுள் இட்டு அவரது

தோள்களைத் துடுப்பாக்கித் துழாவிக்  களவேள்வி செய்ததாகக் பாடியுள்ளார்.

(புறம்.பா.எ. 26). அப்பாடல் வரிகள் பின்வருமாறு:

"அரைசுபட அமருழக்கி முடித்தலை அடுப்பாகப்

புனல் குருதி உலைக்கொளீஇக் கொடித்தோள் துடுப்பின்

துழந்த வல்சியின் அடுகளம் வேட்ட அடுபோர்ச் செழிய!"


அக்காலத்தில் மன்னர் ஒருவர் பிற மன்னரிடம் பெண்கேட்டு அவர் பெண்கொடுக்க

மறுப்புத் தெரிவித்தால் அவர்களுக்குள் போர் மூளும்(மகட்பாற் காஞ்சி). பேரரசர்

கேட்கும் திறையை(வரி)த் தர மறுக்கும் குறுநில மன்னர் மீது போர் தொடுப்பது

வழக்கம். இப்படியாகப் போர்நிகழப் பலப்பல காரணங்கள் இருந்தன.


விளைவு யாதெனில், அடிக்கடி நிகழ்ந்த போர்களினால் சமூகத்தில் ஆடவர்

எண்ணிக்கை குறைந்து மகளிர் எண்ணிக்கை கூடியது. இயற்கை உருவாக்

கிய ஆண் பெண் சம நிலை குலைந்தது. மகளிரில் பாதிப்பேர் கைம்பெண்டிர்.

ஆடவர்கள் அடிக்கடி நிகழ்ந்த போர்களில் மாண்டுபோனதால் அவர்தம் மனைவி

யர் கணவருடன் தீப்பாய்ந்து மாய்வர்; உயிரை மாய்க்கத் தயங்கியவர் கொடுமை

யான கைம்மை நோன்பு நோற்று வாழலாம். அதன்படி,  கைம்மை நோன்பு நோற்

பவர்கள் கூந்தலைக் களைதல் வேண்டும்;  அல்லியின் புல்லரிசிச் சோறு உண்ணல்

வேண்டும்; உணவில் நெய் தவிர்த்தல் வேண்டும்;  பரற் கல் பரப்பிய தரையில்

விரிப்பு, தலையணை யின்றித் துயிலுதல் வேண்டும். இவ்விதிமுறைகளுக்கு

அஞ்சியே பல பெண்டிர் கணவரோடு உடன்கட்டை ஏறி உயிரை விடுத்தனர்.

நல்லவேளை, உடன்கட்டை ஏறும் பழக்கம் ஒழிக்கப்பட்டு விட்டது.


இறந்த போர் வீரர்களின் மனைவியர் களைந்த தலைமுடிகளால் கயிறு திரிக்கப்

பட்டுத் தோற்ற அரசனின் வெட்டப்பட்ட காவல் மரத்தைத் தன் நாட்டுக்கு இழுத்துச்

செல்லப் பயன்படுத்துவர் வெற்றிபெற்ற அரசர். தலைமுடியால் உருவாக்கப்படும்

கயிறு 'கூந்தல் முரற்சி' எனப்படும். வெற்றிபெற்ற அரசன் தோற்ற அரசனின்

காவல் மரத்தை வெட்டிச் சாய்த்து அதனைத் துண்டுகளாக்கித் தன்னாட்டுக்கு

எடுத்துச் சென்று  அத்துண்டுகளால் தன்னாட்டுக்கு முரசம் செய்துகொள்வது

வீரமாகக் கருதப்பட்டது. சாதாரணமான கயிறுகள் ,பெரிய மரத்துண்டுகள் யானை

களால் இழுக்கப்படும் பொழுது தேய்ந்து இற்றுப் போகும். ஆனால் கயிறுகளின்மேல்

'கூந்தல் முரற்சி' யைச் சுற்றி மரத்துண்டுகளை  இழுத்துச் சென்றால் கயிறுகளுக்குச்

சேதம் ஏதும் ஏற்படாதென்பர். கூந்தல் முரற்சி  அவ்வளவு வலிமையுடையதென்பர்.

சேரன் செங்குட்டுவன் மோகூரை யாண்ட பழையன் என்னும் சிற்றரசனுடன் போர்

செய்து அவனை வென்று அவன் காவல் மரமான வேம்பை வெட்டி வீழ்த்தியதாகவும்

அம்மரத்துண்டுகளைப் பழையனின் படைவீரர்களின் மனைவியர் களைந்த கூந்தல்

முரற்சியால் தன் தலைநகர்க்கு எடுத்துச்சென்று முரசம் செய்து கொண்டதாகவும்

பதிற்றுப் பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வேறொரு கொடுமையும் நிகழ்ந்தது. ஒரு மன்னன் பகைநாட்டின் மீது படையெடுத்து

அதனை வெற்றிகொண்டால் தோற்றுப்போன நாட்டின் இளம்பெண்டிரை(அரசனின்

மனைவியர் உட்படச் சகல இளம் பெண்டிரையும்) சிறையெடுத்துத் தன் நாட்டுக்கு

அழைத்து வருவது வழக்கம். அழைத்துவரப்பட்ட மகளிரின் இளமை, அழகு முதலிய

வற்றைக் கருத்தில்கொண்டு அரசனின் காமக்கிழத்தியராக்கப் படுவர். மற்றவர்

சேடியராக்கப் படுவர். இப்பெண்டிரைக் 'கொண்டி மகளிர் 'அல்லது 'உரிமை மகளிர்'

என் அழைத்தனர். உரிமை மகளிருக்கு உரிமைகள் ஏதும் அளிக்கப்படவில்லை.

அரசனுக்கு உரிமைப் பட்டவர்கள். அவ்வளவே. தசரதச் சக்கரவரத்திக்கு அறுபதி

னாயிரம் மனைவியர் இருந்தனர் என்று இராமாயணத்தில் சொல்லப்பட்டது இவ்

வுரிமை மகளிரை உள்ளடக்கிய கணக்கே. இந்தக் கொடுமையை உலகம் முழுவதிலும்

உள்ள அரசர்கள் அந்நாட்களில் பின்பற்றினார்கள். அரசனைத் தவிர வேறு யாரும்

இம்மகளிரைத் நீண்ட இயலாது. அரசனைத் தவிர வேறு யாரோடும் தொடர்பு கொண்டதாகக்

கண்டுபிடிக்கப்பட்டால் ஈவிரக்கமின்றிச்  சுண்ணாம்புக் காளவாயில் நீற்றப் படுவர்.

அந்தோ பரிதாபம்! அவர்களின் நிலைமை மிக மிக மிகக் கொடுமையானது. மேலும்

வெற்றி பெற்ற அரசர் தோற்றுப்போன நாட்டின் செல்வங்களையெல்லாம் கொள்ளை

யடிக்க உத்திரவிடுவர்.


மேலும் ஆடவர் எண்ணிக்கை குறைந்ததால் பரத்தையர் என்ற பிரிவினர் உரு

வாகிச் சமூகத்தைச் சிதைத்தனர். ஆடவர்களுக்கும் கொடுமைகள் நடந்தன.

வீரம் என்னும் போதை யேற்றப்பட்டது. மார்பில் புண்பட்டுச் செத்தால் துறக்கம்(சொர்க்கம்)

புகலாம். முதுகில் புண்படக் கூடாது. சிலசமயம் எதிரி எறிந்த வேல் மார்பை

ஊடுருவி முதுகுக்கு வெளியே வரும். அதற்கு வெட்கப் பட்டு வடக்கிருந்து உயிர்

துறந்த மன்னர் பலராவர். மேலும் அரசனுக்காகவும் நாட்டு நன்மைக்காகவும்

தன்னைத் தானே நவகண்டம் (ஒன்பது இடங்களில் உடலைக் கிழித்து இறுதியில்

தன் தலையைத் தானே அரிந்து பலியிட்டுக் கொள்ளுதல்)நிகழ்த்திய வீரர்களும்

இருந்தனர். இப்படியாக, ஆடவர்க்கு வீரம் என்னும் போதையையும் பெண்டிருக்குக்

கற்பு என்னும் போதையையும் ஏற்றிவிட்டது  சமூகம். அதனால்தான் இத்தகைய

கொடிய சுயபலியிடும் நிகழ்வுகள் நடைபெற்றன. நல்லவேளை இக்கொடிய பழக்கங்கள்

ஒழிக்கப்பட்டு விட்டன.


வீரம், கற்பு அவசியமே;  தன்னைத் தானே பலியிடுதல், உடன்கட்டை ஏறுதல் தேவையில்லை.

தற்காப்புக்காக ஒவ்வொரு நாட்டு மக்களும் போர்ப் பயிற்சி மேற்கொண்டு ஆயத்தமாக

இருத்தல் வேண்டும். அதே நேரத்தில் சமாதானத்துக்கான  சகலவித முயற்சிகளையும்

மேற்கொள்ளுதல் வேண்டும். வீரத்திற் சிறந்த நாடு எதுவென்றால், போருக்கான சகல

ஆயத்தங்களும் செய்து அதே நேரம் போரைத் தவிர்த்து அமைதியை நிலைநிறுத்தப்

பாடுபடும் நாடே ஆகும். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மதப்பற்று முதலியவை அவசியமே;

ஆனால் பற்று எல்லை தாண்டி வெறி ஆகிவிடக் கூடாது. மனித நேயம் தலையாய தாகும்.


,

Thursday 2 September 2021

கூடல் இழைத்தல்

 கூடல் இழைத்தல்.


கூடல் இழைத்தல் என்பது சங்ககாலத்தில் மகளிரிடையே

நிலவிய பழக்கம். திருமணமாகாத மகளிர் தாம் விரும்பிய

காதலர் தம்மை அடைவாரோ? மாட்டாரோ?(கூடுவாரோ?

மாட்டாரோ?) என்று அறிந்து கொள்ளச் செய்த ஒரு விநோதப்

பழக்கம். முற்றத்தில் மணலைக் குவித்து அதன்மேல் கண்களை

மூடிக்கொண்டு ஒரு விரலால் வட்டமாகக் கோடிட்டு அதற்குள்

வளையம் வளையமாக வரைவார்கள். அந்த வளையங்களின்

எண்ணிக்கை இரட்டைப்படையாக வந்தால் தம் காதலர் தம்மைக்

கூடுவர். ஒற்றைப் படையில் வந்தால் காதலர் தம்மைக் கூடார்.

மேலும்,  கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரையும் போதில்

தொடங்கிய இடத்தில் சரியாக வட்டத்தை முடித்தல் வேண்டும்.

அதாவது, வட்டத்தின் தொடக்கமும் முடிவும் சரியாகப் பொருந்துதல்

வேண்டும். அவ்வாறானால் தம் காதலர் தம்மைக் கூடுவர். சரி

யாகப் பொருந்தாவிட்டால் காதலர் தம்மைக் கூடார் என்ற

அவநம்பிக்கை அடைவர். இதைத்தான் கூடல் இழைத்தல் என்று

அழைத்தனர். கூடல் இயைதல்,  கோடியைதல், சுழி இடுதல்,

சுழிக்  கணக்கு, மணற்சுழிச் சோதிடம் என்ற பெயர்களும் உள்ளன.

இன்றுவரை இந்தப் பழக்கம் நம்மிடையே  நிலவுதல் கண்கூடு.

ஒற்றையா, இரட்டையா பார்ப்பது கூடல் இழைத்தலின் ஒரு

வடிவம் தானே!


சங்க இலக்கியமான கலித்தொகை ஒரு நிகழ்வை விவரிக்கிறது.

ஒரு தலைவி தன் இல்லத்தில் கூடல் இழைக்கும் பொழுது ஒரு முனை

மற்ற முனையுடன் கூடவில்லை. அதாவது தலைவி வட்டம் வரையும்

பொழுது தொடக்கக் கோடு முடிவுக்கோடோடு பொருந்தவில்லை.

கண்ணை மூடிக்கொண்டு வட்டம் வரைந்ததால் வட்டம் இளம்பிறை

போல வந்து விட்டது. அது முழுநிலவை  நினைவுபடுத்தியதால் அதனைத்

தன் ஆடையினால் மூடுகிறாள். (காதலரைப் பிரிந்திருக்கும் பெண்களுக்கு

முழுநிலவைப் பிடிக்காது.) பின்னர், சிவபெருமான் பிறையைத் தேடு

வாரே என்றெண்ணி மூடுவதை விலக்குகிறாள். பாடல் வரிகள் பின்வருமாறு:

"கோடு வாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று

நாடுவேன் கண்டனென்; சிற்றிலுள் கண்டாங்கே

ஆடையான் மூஉய் அகப்படுப் பேன்;  சூடிய

காணான் திரிதரும் கொல்லோ மணிமிடற்று

மாண்மலர்க் கொன்றை யவன்."

(கலித்தொகைப் பாடல்:142 வரிகள்24--28)

புலவர்: நல்லந்துவனார்--நெய்தற்கலி.


சங்கம் மருவிய காலத்து நூலான முத்தொள்ளாயிரத்திலும், பக்தி

இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல்

குறிப்பிடப் பட்டுள்ளது. அதாவது

இம்முறை தொடர்ந்து பின்பற்றப்பட்டுள்ளது..

இப்பொழுதும் கூடக் கிராமப் புறங்களில் இதன் மருவிய வடிவங்கள்

(ஒற்றையா, இரட்டையா எனப் பார்த்தல்) பழக்கத்தில் உள்ளன.


முத்தொள்ளாயிரம் என்னும் நூலில் சுட்டப் படும் ஒரு காட்சியைக்

காண்போம். பருவப் பெண் ஒருத்தி பாண்டியமன்னன் உலா வரும்

பொழுது அவன் தோற்றப் பொலிவைக் கண்டு ஒருதலைக் காதல்

கொண்டனள். பாண்டிய மன்னன் தன்னைக் கூடுவானோ? மாட்டா

னோ? என்று தெரிந்து கொள்ளக் கூடல் இழைத்துப் பார்க்க விரும்பி

னாள். ஆனால், உள்ளூற அவளுக்கு ஏகப்பட்ட தயக்கம். கூடல் இழைக்

கும் பொழுது தொடங்கிய இடமும் முடிந்த இடமும் பொருந்திக் கூடி

விட்டால் மனத்துக்கு மகிழ்ச்சி; இல்லையென்றால் என்னாவது?

என்று சிந்தித்தாள். கூடல் இழைப்பவள்போல் ஒரு விரலால் காற்றில்

வளையம் வரைந்தாள்; பின்னர் அதனை அழிப்பது போல விரலை

அசைத்தாள். கூடல் இழைப்பதுபோல் விரலால் சைகை செய்து பின்னர்

இம் முயற்சியில் தவறு நேர்ந்திடுமோ? என்று அஞ்சிக் கூடல் இழைப்பதைக்

கைவிட்டாள். பாடல் இதோ:

"கூடல் பெருமாளைக் கூடலார் கோமானைக்

கூடப் பெறுவேனல் கூடென்று---கூடல்

இழைப்பாள்போல் காட்டி இழையா திருக்கும்

பிழைப்பில் பிழைபாக்(கு) அறிந்து."

பொருள்:

மதுரை நகருக்கு அதிபதியும் மதுரைவாழ் மக்கள் போற்றிப் பாராட்டும்

வேந்தனும் ஆன பாண்டியனைக் கூடுவேனோ? கூட மாட்டேனோ?

என்று அறியக் கூடல் இழைத்தல் என்னும்  வழக்கத்தைப் பின்பற்ற

நினைத்த ஒருதலைக் காதல்கொண்ட  ஒரு பருவப் பெண் கூடல்

இழைப்பவள்போல் முனைப்புக் காட்டிப் பின்னர் எதிர்மறையாக முடிவு

வரும் என்று அஞ்சிக் கூடல் இழைத்தலைக் கைவிட்டாள். ஒருதலைக்

காதல் என்றாலும் அவள் அளவில் நேர்மையான காதல் என்று கருதிய

பெண் மற்றப்  பெண்களைப் போலவே கூடல் இழைக்க விரும்பிப் பின்னர்

எதிர்மறை முடிவு வந்தால் மனம் வருந்துமே என்றஞ்சி அம்முயற்சியைத்

துறந்தனள்.

அருஞ்சொற் பொருள்:

கூடல் பெருமாள்--மதுரை நகருக்கு அதிபதி

கூடலார் கோமான்--மதுரை மக்களால் போற்றப்படும் பாண்டிய வேந்தன்

பிழைப்பில்--எதிர்மறை முடிவு வந்தால்

பிழைபாக்கு--தவறுதல்.


பிற்காலத்தில்(ஏழாம் நூற்றாண்டில்) திருநாவுக்கரசர்,  எட்டாம் நூற்றாண்டில்

ஆண்டாள் அம்மையார், ஒன்பதாம் நூற்றாண்டில் மாணிக்கவாசகர் தமது

பக்திப் பாடல்களில்  கூடல் இழைத்தலைக் குறிப்பிட்டுள்ளனர். தம்மை

நாயகியாகக் கருதிக் கொண்டு தாம் நாயகனான இறைவனைக் கூட இயலு

மா? என்று ஏக்கத்துடன் பாடியுள்ளனர். ஆண்டாள் நாச்சியார் இதுகுறித்து

ஒரு பதிகமே (பத்துப் பாடல்கள்) பாடியுள்ளார். ஒரு பாடலைப் பார்ப்போம்:

"தெள்ளியார் பலர் கைதொழும் தேவனார்

வள்ளல் மாலிருஞ் சோலை மணாளனார்

பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிடக்

கொள்ளு  மாகில்நீ  கூடிடு  கூடலே!" 

(நாச்சியார் திருமொழி)


மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த இலக்கியங்களிலும் கூடல் இழைத்தல் குறிப்

பிடப்பட்டுள்ளது.

Tuesday 17 August 2021

இரட்டுற மொழிதல்(சிலேடை)

 இரட்டுற மொழிதல்(சிலேடை)


சிலேடை என்ற சொல்லைச் சொன்னாலே  உடனடியாக நம் நினைவு

காளமேகப் புலவரைச் சுற்றிவரும். ஒப்பாரும் மிக்காரும் இல்லாத

ஆசுகவி வித்தகர். அவர் ஆசுகவியாகப் பாடிய பாடல்களில் சிலேடை,

கடவுள் துதி, நகைச்சுவை, வசை  போன்ற பலப்பல விதமான சுவைகளும்

மிளிர்ந்து  படிப்பவர் மனங்கவரும். அப்படிப் பாடியது தான் கீழ்க்கண்ட

சிலேடைப் பாடல்:

"வண்ணம்  கரியனென்றும்  வாய்வேத  நாறியென்றும்

கண்ணனிவன்  என்றும்  கருதாமல்----மண்ணை

அடிப்பதுமத்  தாலே அளந்தானை ஆய்ச்சி

அடிப்பதுமத் தாலே அழ".

வாமனனாக  வந்து தன் அடிப்பதுமத்தாலே(திருவடியாகிய தாமரையாலே)

உலகளந்தவனை வெண்ணெய் திருடியமைக்காக  யசோதை ஆய்ச்சி

அழ அடிப்பது (வெண்ணெய் கடையும்) மத்தாலே. (அந்தக் கடவுளைப் போற்றித்

தொழாமல் அழ அடித்தாளே அது அவள் அறியாமையைச் சுட்டும்).

அடிப்பதுமத்தால், அடிப்பது  மத்தால் என்று இரண்டு பொருள்பட வந்துள்ளது. 


இது போலவே பாரதியாரும் ஒரு சிலேடைப் பாடல்  பாடியுள்ளார்.  அவரின்

சிறு வயதுத் தோழர் காந்திமதி நாதன் என்பவர் விளையாட்டாக  அவரை

இழிவுபடுத்த நினைத்து  "பாரதி சின்னப் பயல்" என்ற ஈற்றடி கொடுத்து

வெண்பாப் பாடுமாறு கூறினார். பாரதியார் பின்வருமாறு பாடினார்:

"காரதுபோல் நெஞ்சிருண்ட காந்திமதி நாதனைப்

பாரதி சின்னப் பயல்".

பாரதி என்னும் சொல்லைப்  பார்+அதி என்று பிரித்துக் காந்திமதி நாதன்

அதி சின்னப் பயல் என்று பொருள்படுமாறு பாடிவிட்டார்.

காந்திமதி நாதனைப் பார்; அதி சின்னப் பயல் என்று மிகத் திறமையாகப்

பாடியமை மெச்சத்தக்கது.


ஒருமுறை பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலரிடம்  ஒரு புலவர் தான் இயற்றிய

கவிதையைக் காட்டி அவரது பாராட்டைப் பெறலாம் என்ற அவாவுடன் அவரை

அணுகினார். கவிச்சிங்கம் அந்தப் புலவரிடம் "பாடலைப் படியுங்கள்" என்றார்.

"வீதிதொறும் மாடஞ் சிறக்க விளங்கிடுதென் புதுவை வாழும்

நாதியிலை எனவந் தார்க்கு நல்குபொன்னுச் சாமி வேந்தே!

சேதி யொன்று செப்பக் கேளும் செகத்தினிலே பலரைப் பாடிப்

பாதிவலி குன்றி னேற்குப் பரிசுமிக அருளு வாயே."

கவிச்சிங்கம் உடனே கூறினார்:"ஐயா முதலடியில் வரும் 'வீதிதொறும் மாடஞ்

சிறக்க' என்ற தொடர் 'வீதிதொறும் மாடு+அஞ்சு+இறக்க என்று பிரித்துப்

 படிக்க வாய்ப்புள்ளது; அப்படிப் பிரித்தால் 'வீதிதொறும் ஐந்து மாடுகள் இறக்கும்'

என்ற அமங்கலப் பொருள்வர வாய்ப்புள்ளது. எனவே, முதலடியை மங்கலப்

பொருள் வருமாறு திருத்தல் வேண்டும். '"வீதிதொறும் மாட கூடம் விளங்கிடுதென்

புதுவை வாழும்" என்று மாற்றிப் பாடினால் நல்லது" என்று அறிவுறுத்தினார்.

'மாடஞ் சிறக்க' என்னும் தொடர் 'மாடம் சிறக்க' என்றும் ' மாடு அஞ்சு இறக்க'

என்றும் சிலேடையாக வரும்.


சாதாரணமாகப் பேசும் பொழுது கூடச் சிலேடையாகப் பேசுவது சில புலவர்களின்

வழக்கம். கடிகைமுத்துப் புலவர் என்ற சான்றோர் வயது மூப்பின் காரணமாகப்

படுத்த படுக்கையாக இருந்த பொழுது அவர் மனைவியார் பாலில் துணியை முக்கி

நனைத்து அவர் வாயில் பிழிந்தார். ஏனென்றால் அவரால் பாலைக் கூட அருந்த

இயலவில்லை. துணியை வாயில் பிழியும் பொழுது புலவர் முகத்தைச் சுழித்தார்.

மனைவியார் புலவரிடம் கேட்டார்" பால் சுவையாக இல்லாமல் கசக்கிறதோ?" என்றார்.

அந்த நிலையிலும் புலவர் சிலேடையாகப் " பாலும் கசக்கவில்லை; துணியும்

கசக்கவில்லை" என்று விடையிறுத்தார். துணியைச் சரிவரக் கசக்கித் துவைக்காமல்

அதனைப் பாலில் முக்கி நனைத்ததால் பாலின் சுவையை அறிய இயலாமல் போயிற்று

என்பது கருத்து.


பரிதிமாற் கலைஞர்(சூரிய நாராயண சாஸ்திரியார்) என்ற தமிழறிஞர்(தமிழைச்

செம்மொழி என்று அறிவிக்க முதன் முதலில் கோரிக்கை எழுப்பியவர்) சென்னைக்

கிறித்தவக் கல்லூரியில்  இலக்கண வகுப்பை நடத்திக் கொண்டிருந்த பொழுது

" தமிழ்ப் பெண்ணுக்கு எழுத்து, அசை, சீர், தளை,அடி,தொடை முதலான உறுப்புகள்

உள்ளன." என்று கூறிப் பாடத்தைத் தொடர்ந்தார். வம்புக்கார மாணவன் ஒருவன்

"ஐயா! எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை முதலானவற்றைச் சொன்னீர்கள்.

தொடைக்குப் பிறகு என்ன  வரும்?" என்று ஏளனக் குரலில் வினவினான்.

புலவர் உடனே "நீர் மாலையில் எம் அறைக்கு வம்மின்; யாம் உமக்கு விளக்குமாற்றால்

விளக்குதும்" என்றார். மேற்கொண்டு ஏதும் பேசாமல் அந்த வம்பன் அமர்ந்துவிட்டான்.

விளக்குமாறு என்னும் சொல் குப்பை கூட்டும் கருவியைக் குறிக்கும். விளக்கும்+ ஆறு

என்று பிரித்தால் விளக்கும் வழி(முறை) என்று பொருள்படும்.  


சோழவந்தானூர்ப் பெரும்புலவர் அரசஞ்சண்முகனார் ஒரு மாநாட்டிற்காகச் சென்னை

சென்றிருந்தபொழுது அவர் அருகில் அமர்ந்திருந்தவர்"ஐயா! தங்கள் ஊர் எது?" என்று

வினவினார். உடனே சண்முகனார் "யாமதுரையோம்"  என்று  பதிலிறுத்தார். 

"யாமதுரையோம்" என்பது  "யாம் மதுரைக்காரர்" என்ற பொருள்படும். ஆனால் கேட்டுக்

கொண்டிருந்த  புலவர் "யாம் அது உரையோம்", அதாவது, "யாம் அதைச் சொல்லமாட்டோம்"

என்ற  தவறான பொருளாக விளங்கிக் கொண்டு "ஏன் ஐயா! ஊரைச் சொன்னால்

குறைந்தா போவீர்?" என்று உரைத்தார். பிறகு சண்முகனார் தமது  விடையை விளக்கிச்

சொன்னார். கேட்டுக் கொண்டிருந்தவர் "சிலேடை மிகவும் அருமை" என்று மெச்சினார்.


வேம்பத்தூர் என்னும் ஊரில் தமிழ்ப் புலவர்கள் பலர் இருந்தனர். ஒரு சமயம் வயதில்

மூத்த புலவர் ஒருவர் சிறு மூட்டையைத் தன் தோளில் சுமந்து சென்று கொண்டிருந்தார்.

எதிரில் வந்த மற்றொரு புலவர் "ஐயா! இந்த வெயிலில் ஏன் இந்த மூட்டையைச்

சுமக்கமாட்டாமல் சுமந்து செல்கின்றீர்?" என்று வினவினார். உடனே முதியவர் "எல்லாம்

தலைவிதி வசம்" என்று விடையிறுத்தார்.  கேட்டுக் கொண்டிருந்த புலவர்க்கு ஒன்றும்

விளங்கவில்லை. முதியவரே பேசினார்" என் மனைவி இறந்த திதி இன்று. வேண்டிய

பொருட்களைக் கடையில் வாங்கியுள்ளேன். ஆனால் சுமந்து செல்ல மகன், மகள் யாரும்

இவ்வூரில் இல்லை. பணிநிமித்தம் வெளியூர்களுக்குச் சென்றுவிட்டனர். ஆகவே

நானே சுமந்து செல்கின்றேன். அதனால்தான் தலைவிதிவசம் என்று கூறினேன்.

இன்று என் தலைவி திவசம்; உதவி செய்ய ஆள் இல்லாதது என் தலைவிதிவசம்" என்று

முடித்தார்.


இன்னும் இதுபோல் ஏராளமான சிலேடைகள் உள்ளன. வாரியார் சுவாமிகள், கி.வா.ஜ.

போன்றோர் பேசிய சிலேடைகள் பலப்பல. அவற்றையெல்லாம் படித்துச் சுவைப்போம்.

.

Friday 30 July 2021

குறிஞ்சி நிலத்தாரின் மாப்பிள்ளை முருகன்....

 "எங்கள்(குறிஞ்சி நிலப் பெண்டிர்) மாப்பிள்ளை முருகன். அவர் தந்தை

சிவபெருமான் அணியும் பொருளை நாங்கள் அணிவது குற்றமாகும்."


 காசு, பணம் புழங்காமல் பண்டமாற்று வாணிகம் வழக்கத்தில் இருந்த காலம்.

நெய்தல் நிலப் பெண்டிர்(கடலும் கடல்சார்ந்த பகுதியும்) தாம் உருவாக்கிய

முத்துவடங்களைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக யானைக் கொம்புகளைப்

பெறுவதற்காகக் குறிஞ்சி நிலத்தவரை அணுகுகின்றனர். குறிஞ்சி

நிலத்தவர் அப்பொழுது இருந்த சூழ்நிலையில் யானைக் கொம்புகளை

விடவும் நெல், கரும்பு முதலான உணவுப் பொருட்களை வாங்க எண்ணினர்.

அதனால் நெய்தல் நிலத்தவர் மனம் வருந்தா வண்ணம்  மறுப்புரை சொல்வது

எங்ஙனம்? என்று சிந்திக்கின்றனர். பின்னர் கீழ்க்கண்டவாறு பாடுகின்றனர்:

"பூங்கோதை மாதர் புனைகின்ற  முத்துவடம்

வாங்கோம் குடிக்கு வடுவென்று---யாங்கள்

முலைக்கோ(டு)  அணியிலது  முக்கணனார் சென்னித்

தலைக்கோடு பட்ட  தழும்பு".

பொருள் விளக்கம்:

பூமாலைகளை அணிகின்ற குறிஞ்சிநில மாதராகிய நாங்கள் நீங்கள் உருவாக்கியுள்ள

முத்து வடம்  வாங்கி எங்கள் மார்பில் ஒளிரும் படி அணிந்து கொண்டோமானால்

அதனை எங்கள் மாப்பிள்ளை(முருகன்)க்குத் தந்தையாராகிய சிவபெருமான் தலை

உச்சியில் மிளிரும் பிறைச்சந்திரன் என்று உலகத்தார் சொல்லமாட்டாரோ? அச்சொல்

எங்கள் குடிக்கு வடுவாகாதோ?(குற்றமாகாதோ?). எங்கள் மாப்பிள்ளை(முருகன்)யின்

தந்தையாகிய சிவபெருமான் அணிந்த பொருளை(முத்துவடம்) நாங்கள் அணிவது

பெரும் குற்றமாகும். எனவே, எங்கள் யானைக் கொம்புகளுக்குப் பண்டமாற்றாக

உங்கள் முத்துவடங்களை வாங்க மாட்டோம்.

மேல் விளக்கம்:

வடு=குற்றம்; கோடு=குவடு=உச்சி; முக்கணனார்=சிவன்;  சென்னி=தலை

சிவபெருமான் தலையுச்சியில் காணப்படும் பிறைச்சந்திரன் வெண்மை நிறத்தாலும்

வளைந்த தன்மையாலும் ஒளிர்கின்ற இயல்பாலும் முத்துவடங்களை ஒத்திருக்கும்

என்பதால் உலகத்தவர் அவற்றைச் சிவபெருமான் அணிகின்ற பொருள் என்றே

கூறுவர். அதனால் எங்கள் மாப்பிள்ளையின் தந்தையார்க்கு நாங்கள் அவமதிப்பு

இழைத்ததாகக் குற்றம் சாட்டப்படுவோம். அதனால் முத்துவடங்களை வாங்கோம்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

தேர்செய்த கன்னான் எல்லாம் சரியாக உள்ளதா என்று பார்க்கவில்லையோ?


மன்னர்கள் வழக்கப்படி சோழமன்னன் வீரோதயன் தலைநகரில் உலா வந்து மக்களைச்

சந்தித்து நலம் விசாரித்தும் ஆட்சியில் ஏதேனும் குறை உள்ளதா? என்று விசாரித்தும்

அரண்மனைக்குத் திரும்பி ஒரு நாழிகை நேரம் கடந்து விட்டது.  மன்னன் உலாவந்த

தெருவிலுள்ள ஒரு வீட்டில் வாழும் மங்கையொருத்தி "மன்னன் உலா வந்த செய்தி

எனக்குத் தெரியாமல் போயிற்றே" என்று புலம்பிக் கொண்டிருந்தாள். "மன்னனின்

தேர்மணியின் ஓசை கேட்கவில்லையே;  தேரைச் செய்த கன்னான் தேர் ஊரும் பொழுது

ஒலியெழுப்ப உரிய ஏற்பாடு செய்யவில்லையா? தேரைச் செய்தபின்னர் அதன் முன்னும்

பின்னும் நன்றாகப் பாரத்து எல்லாம் செவ்வனே உள்ளனவா? என்று உறுதிப்படுத்திக்

கொள்ளத் தவறிவிட்டானோ? தேர்மணியின் ஓசையைக் கேட்டால்தான் மன்னர் உலா

வருகின்ற செய்தியை அறிந்து மக்கள் குழுமி மன்னனை வரவேற்கவும் ஆட்சியிலுள்ள

குறைகளைச் சுட்டிக்காட்டவும் இயலும்". இவ்வாறெல்லாம் அப்பெண் புலம்ப என்ன காரணம்?

அம் மடந்தை சோழ மன்னனை நேரில் காணப் பலகாலமாகக் கனவு கண்டு

கொண்டிருந்தாள். அக்கனவு சிதைந்துபோன ஆதங்கத்தால் அவள் புலம்பித்தள்ளிவிட்டாள்.

உண்மையில் நிகழ்ந்தது என்னவென்றால் தேரின் மணியோசை கேட்டுத் தெருவிலுள்ள

அனைவரும் மன்னனைப் பார்த்துச் சென்றுவிட்டனர். இவள் ஒருத்திதான் கவனக் குறை

வாக இருந்து நல்ல வாய்ப்பைத் தவறவிட்டவள். தன் தவறை மறைக்கத் தேரைச் செய்த

கன்னான் சரியாகச் செய்யவில்லை என்று அவன்மேல் பழிசுமத்தினாள். பாடல் வருமாறு:

"வீரோ  தயன்,அபயன்  மேவும்  கடைமணியின்

தேரோதை  கேட்கப்  பெறுகிலோம்---சீரோத

வார்த்தான்  ஒருவன்  வலமுமிட  மும்பிரித்துப்

பார்த்தான்  இல்லையோ  பண்டு?"

அருஞ்சொற் பொருள்:

வீரோதயன்= வீர+உதயன்(வடமொழி இலக்கணப்படி

குணசந்தி என்பர்); அபயன்= சோழமன்னன்;

தேரோதை= தேரோசை; சீரோத=வருகையை எடுத்துக் கூற;

ஒருவன்=கன்னான்(உலோகப் பாத்திர வேலை செய்பவன்)


பார்வை:

இவ்விரு பாடல்களும் 'தனிப்பாடல் திரட்டு,

முதல் பாகம்' , சரசுவதி மகால், தஞ்சை

வெளியிட்ட நூலில் உள்ளன. உரையாசிரியர்:

வித்துவான் ச.பாலசுந்தரம், பேராசிரியர்.





வெல்லமும் சர்க்கரையும்போல் இருந்தவள் பத்திரி(காளி)

போல் ஆனதேன்?


திருக்குறளில் காமத்துப்பாலில் கற்பியலில் இறுதியாக

அமைந்துள்ள மூன்று அதிகாரங்கள்: புலவி, புலவி நுணுக்கம்,

ஊடல் உவகை ஆகியன. புலத்தல் என்பது ஊடுதல், பிணங்குதல்

என்பவற்றைக் குறிக்கும். அதாவது கணவன்-மனைவிக்கிடையே

நிகழும் செல்லச் சண்டை எனச் சொல்லலாம். திருவள்ளுவர்

"துனியும்  புலவியும்  இல்லாயின்  காமம்

கனியும் கருக்காயும் அற்று".  (குறள் 1306) என்று நவின்றுள்ளார்.

துனி பெரும்பிணக்கைக் குறிக்கும். புலவி அளவான பிணக்கைச்

சுட்டும்.  துனி மிகக் கனிந்து பதனழிந்து சுவைகெட்ட பழம் போல்வது.

இது  தேவையற்றது. புலவியின்மை(செல்லப் பிணக்கு இல்லாதது)

கருக்காய் போல்வது. இதுவும் தேவையில்லை. புலவி(அளவான

பிணக்கு) பக்குவமான கனிபோல் சுவையானது. இது இல்லறத்துக்கு

மிக மிகத் தேவையானது.


ஆனால் நாம் காணவிருக்கும் பாடலில் தலைவி புலவியை வெளிப்படுத்

தாமல் துனியை(பெரும் பிணக்கை) வெளிப்படுத்துகின்றாள். தலைவன்

குழம்பிப்போகின்றான். நேற்றுவரை வெல்லமும் சர்க்கரையும் போல மிக

மென்மையாகவும் இனிமையாகவும் இருந்த தலைவி இன்றிரவில் காளி

போலச் சினத்தோடிருப்பதன் காரணம் என்ன? என்று அவள் வளர்க்கும்

கிளியிடம் வினவுகின்றான். பாடல் பின்வருமாறு:

"வில்வமும் கொன்றையும் சூழ்நெல்லை நாதர் வியன்சிலம்பில்

செல்வமும் பாலன மும்பெறும் கிள்ளாய்! தினந்தினமும்

வெல்லமும் சர்க்கரை யும்போல் இருந்த, இம் மெல்லியலாள்

எல்லமண் பத்திரி யும்போல் இருந்ததென்? என்னளவே."

பொருள்:

இறைவனுக்குரிய வில்வ மரமும் கொன்றை மரமும் சூழ்ந்தோங்கும்

நெல்வேலி நாதரின் அகன்ற  மலையிடத்தில் விளங்கும் செல்வமும்

வீட்டில் தலைவி தரும் பாலன்னமும் நாடொறும் பெற்று வளரும்

கிளியே!  அன்றாடம் எனக்கு வெல்லமும் சர்க்கரையும் போல மென்

மையும் இனிமையும் கொடுத்துப் பேணிய  இம் மெல்லியலாள் இன்றைய

இரவில் சமண முனியைப் போலவும்  பத்திரி(காளி)யைப் போலவும்

வெகுண்ட தோற்றம் காட்டி இருப்பதற்குக் காரணம் என்ன? அறிந்து

தெரிவிப்பாயாக.


யாது காரணத்தாலோ தலைவி ஊடியிருக்கின்றாள். அவள் ஊடலுக்குக்

காரணம் தெரிந்தால்தான் அவ்வூடலைத் தணிக்க இயலும். வழக்கமான

ஊடல் சிறிது நேரமே  நீடிக்கும்.  அந்தச் சிறிது நேரப்பொழுதே அவனுக்கு

ஒரு யுகம் போலத் தோன்றும். இன்றைய இரவில் சமண முனிவரைப் போலக்

கூந்தலை விரித்துப் போட்டுப் பத்திரி(காளி) யைப் போல வெகுண்ட 

தோற்றம்  காட்டி இருக்கின்றாள்.  இவள் ஊடலைத் தணிப்பது எவ்வாறு?

என்று  தீவிரமாகச் சிந்திக்கின்றான்.  கணவன் எந்தவிதக் குற்றமும்

செய்யாதபோதும்  அவன்  குற்றம் இழைத்ததாக மனைவி தானே மனத்தில் 

கற்பித்துக்கொண்டு செல்லச்சினம் காட்டுவதுதான் ஊடல்.  வழக்கமான

ஊடலில் கணவன்  மனைவியின் கை,காலைப் பிடித்துச்  சமாதானம்

செய்துவிடுவான்.  "பாகு கனிமொழி மாது குறமகள் பாதம் வருடிய

மணவாளா" என்று திருப்புகழில்  முருகப் பெருமானைப் போற்றியுள்ளார்

அருணகிரிநாதர்.


பழங்காலத்தில் கணவன்-மனைவிக்கிடையே நிகழும் ஊடலைத் தணிப்பதற்குச்

சிலர்  உதவி புரிந்துள்ளனர்.  அவர்களை  ஊடல் தணிக்கும் வாயில்கள்

என்று தொல்காப்பியர்  குறிப்பிட்டுள்ளார். அந்நூற்பா பின்வருமாறு:

"தோழி, தாயே, பார்ப்பான், பாங்கன்

பாணன்,  பாடினி,  இளைஞர்,  விருந்தினர்,

கூத்தர்,  விறலியர், அறிவர், கண்டோர்

யாத்த  சிறப்பின் வாயில்கள்  என்ப"

 ஏதோ ஒரு வழியில் கணவன் ஊடலைத் தணித்துச் சமாதானத்தை நிலை

நாட்டியிருப்பான். அன்றாட நிகழ்வு தானே!


கணவன் மனைவி இருவருக்கும்  ஊடலை எப்பொழுது நிறுத்திக்கொள்வது

என்னும்  நுட்பம் தெரிந்திருத்தல் மிக மிக இன்றியமையாதது. ஏனெனில்

ஊடல் என்பது  உப்புப்  போன்றது.  அளவாகவும் கச்சிதமாகவும் பயன்படுத்தல்

வேண்டும். திருவள்ளுவர் இதைத்தான் அறிவுறுத்துகின்றார். குறள்:

"உப்பமைந்  தற்றால் புலவி; அதுசிறிது 

மிக்கற்றால் நீள விடல்". (குறள:1302)


பார்வை:

தனிப்பாடல் திரட்டு,  முதல் பாகம், தஞ்சை சரசுவதி மகால் வெளியீடு

உரையாசிரியர்: வித்துவான் ச.பாலசுந்தரம், பேராசிரியர்.

Wednesday 14 July 2021

கொரனாவுக்குத் தடுப்பூசி மட்டுமே தீர்வு

 கொரனாவுக்குத் தடுப்பூசி மட்டுமே தீர்வாகும்.


1)சீனத்து  மண்ணில்  தோன்றித்

திக்கெட்டும்  பரவி  நிற்கும்

ஈனக்கொ  ரானா  நோயால்

        ஏற்பட்ட  துயரம்  கண்டும்

வானத்துத்  தெய்வ  மே!உன்

மனம் சற்றும்  இரங்கி  டாதோ?

ஏனிந்தப்  புறக்க  ணிப்பு,

        எங்கள் மேல்  கோபம்  ஏனோ?


2)ஈராண்டாய்ப்  பட்ட  பாட்டை

       இயம்பிடல்  இயலா(து)  அய்யா!

பாராண்ட  மன்னர்  தொட்டுப்

பாமர  மக்கள்  ஈறாச்

சூராதி  சூரர்  எல்லாம்

தொற்றுக்குத்  தோற்றே  போனார்;

சீரான வாழ்வி  ழந்து

         சிந்தையும்  உடலும்  நொந்தார்.


3)காய்ச்சலால்,  இருமல்  தன்னால்,

         கம்மிடும்  தொண்டைக்  கட்டால்,

பாய்ச்சிடும்  மூக்கு  நீரால்,

         பம்மிடும்  இரைப்பு  நோயால்,

பீய்ச்சிடும்  கழிச்சல்  நோயால்,

         பிழிந்திடும்  மேனி  நோவால்,

வாய்த்திடும்  உயிர்ப்புக்  காற்று

        குறைவதால்  அறிய லாமே.


4)பள்ளிகள்  திறக்க  வில்லை;

         படிப்பினில்  தேக்கம்;  மக்கள்

அள்ளிடும்  பொருளை  விற்கும்

         அத்தனை  கடையும்  மூடல்;

துள்ளியே  சுறுசு  றுப்பாய்த்

         தொழில்புரி  வாரும்  இல்லை;

விள்ளுதல்  இயலா  தய்யா,

          வீழ்ந்ததே  பொருளா  தாரம்.


5)முதல் அலைத்  தாக்கத்  நாலே

          முற்றிலும்  உருக்கு  லைந்தோம்;

இதமுறும்  இடைக்கா  லத்தில்

          மெத்தனம்  காட்டி  விட்டோம்;

மதங்கொண்ட  யானை  போல

          வந்ததே  இரண்டாம்  தாக்கம்;

சிதைந்ததே  அமைதி  வாழ்வு;

          சீர்செய்தல்  அரிதே  ஆகும்.


6)ஆதர  வற்ற  மாந்தர்,

          அன்றாடம்  காய்ச்சும்  ஏழை,

நாதியில்  மனிதர்,  மாற்றுத்

          திறனுடை  மக்கள்  போன்றோர்

சோதனைக்(கு)  ஆளா  கின்றார்;

         சுத்தமாய்  வாழ்வா  தாரம்

ஏதுமே  இலாமல்  வாழும்

         இன்னலைச்  சந்திக்  கின்றார்.


7)அரசுகள்  வருவாய்  இன்றி

          அரும்பொருள்  தட்டுப்  பாட்டால்

"தருகவே  நிதியை"  என்று

          தமதுமக்  களையே  வேண்டி

அருநிதி  திரட்டி, நல்லோர்,

          ஆன்றவர், கற்றோர் தங்கள்

புரையிலாக்  கருத்தை  ஏற்றுப்

          பொருத்தமாய்ச்  சேவை  செய்யும்.


8)ஊரடங்  கிடத்தான்  ஆணை

          உறுதியாய்  விடுத்துள்  ளாரே;

சீருறும்  அரசின்  சொல்லைச்

          சிந்தையில்  இருத்தி  வைத்து

யாரொடும்  நெருங்கி  டாமல்

          இடைவெளி  காப்போம்;  நோயை

வேரொடும்  வீழ்த்தும்  வண்ணம்

          வீட்டினில்  தங்கு  வோமே.


9)அடிக்கடி  கையி  ரண்டை

           அரசுகள்  நவின்ற  வாறே

மடியின்றி  வழலை  கொண்டு

            மறுவறக்  கழுவல்  நன்றாம்;

இடியினைப்  போலும்  துன்பம்

             இழைத்திடும்  கொரனா,  இல்லப்

படியினை  மிதியா  வண்ணம்

              பாங்குறத்  தூய்மை  காப்போம்.


10)மண்ணுக்குள்  கொத்துக்  கொத்தாய்

              மாண்டவர்  உடல்பு  தைத்தல்

கண்ணுக்குள்  கண்ணீர்  சிந்தக்

              காரணம்  ஆகும்  அய்யா!

விண்ணுக்குள்  ஆளும்  தெய்வம்

              மீட்டிட  அனுப்பி  வைத்த

தண்மைகொள்  தடுக்கும்  ஊசி

             தவறாமல்  போட்டுக்  கொள்க.


11)தடுத்திடும்  ஊசி  தன்னைத்

             தாமதம்  இன்றிப்  போட்டு

மிடுக்குடன்  கவசம்  மாட்டி

             வெளியினிற்  செல்ல  நேர்ந்தால்

அடுத்தவர்  தம்மை  நீங்கி

              ஆறடி  கடந்து  நிற்பீர்;

எடுத்திடும்  முயற்சி  யாலே

               இன்னல் செய்  கொரனா  ஓயும்.

அருஞ்சொற் பொருள்:

உயிர்ப்புக்  காற்று=ஆக்சிஜன்.

மடியின்றி=சோம்பலின்றி

வழலை=சோப்புக் கட்டி

Sunday 27 June 2021

செல்வர் மாளிகைக்குத் திருடச்

 செல்வர் மாளிகைக்குத் திருடச் சென்ற புலவர்; இருவரும் இணைந்து 

இயற்றிய பாடல்


பதினெட்டாம் நூற்றாண்டில்   நம் தமிழ்நாட்டில் வாழ்ந்தவர் தலைமலை

கண்ட தேவர் என அழைக்கப்பட்ட புலவர். அவர் போர்க்குடியில் உதித்தமையால்

மலைபோல் தலைகளைக் கண்டவர் என்னும் பொருள்பட தலைமலைகண்டர்

என்று பெயர்சூட்டப் பட்டிருப்பார் போலும். ஆயின், அவரது இயல்பு நேர்மாறாக

இருந்தது. அக்காலக் கட்டத்தில் அவர்தம் உற்றார், உறவினர் பிழைப்புக்காகத்

திருடும் தொழிலை மேற்கொண்டிருந்தார்கள். நம் புலவர்க்கோ அடிதடி, சண்டை,

திருட்டு, கொள்ளை, கொலை போன்ற தீச்செயல்கள் அறவே பிடிக்கவில்லை.

எந்நேரமும் சிவசிந்தனையில் மூழ்கியிருந்தார். ஐந்தெழுத்து மந்திரத்தை

ஓதிக்கொண்டேயிருந்தார். ஈசன் அவருக்குக் கல்விச் செல்வத்தை அள்ளியள்ளி

வழங்கினார். ஆனால், பொருட்செல்வத்தைத் தர மறந்துவிட்டார்.

",பாலியந் தொட்டு நல்லோர் பழக்கமும் தூய பண்பும்

ஆலிலைத் துயின்றோன் காணா அரவிந்தப்  பதத்தில் அன்பும்

நாலியல் புடைய பாவும் நவின்று,நா வலனாம் ஆசை

மேவிடுந் தகவும் தோய்ந்தான்; வெஞ்சமர்த் தொழில்கற் றில்லான்"

என்று புலவர் புராணம் பாடிய முருகதாச சுவாமிகள் குறிப்பிட்டுள்ளார்.


முடியுடை மூவேந்தர்கள் இல்லாத காலம். நம் புலவர்க்குச் சரியான வருமானம்

கிட்டவில்லை. வறுமை நிலையிலும் ஒரு மாதரசியின் கரம் பற்றினார்.

அவர் மனைவிக்கு ஏழு அண்ணன்மார் இருந்தனர். அவர்கள் திருட்டுத்

தொழிலை மேற்கொண்டு ஓரளவு வசதியாகக்  குடும்பத்தை நடத்திக் கொண்டிருந்

தனர். புலவர் மனைவி கல்வியறிவு இல்லாதவர். அவர் புலவரிடம் "என்

அண்ணன்மார் ஏழு பேரும் தத்தம் மனைவியரோடு ஓரளவு வசதியாக

வாழ்ந்துவருகின்றனர். அவர்கள் செய்யும் தொழிலில் தாங்களும்

பங்கெடுத்துக் கொண்டால் நாமும் வறுமை நிலையிலிருந்து தப்பிப்

பிழைக்கலாம்" எனச் சொன்னார். புலவர் உடனே " உன் அண்ணன்மார்

செய்வது திருட்டுத் தொழில். அது பாவச் செயலாகும்.  கொஞ்ச காலம்

பொறுத்திரு. மருதூர் ஈசன் நம் வறுமையைப் போக்கிடுவார். நம்பு"

என் நவின்றார். அம்மையார் உடனே "திருமங்கை ஆழ்வார் வழிப்பறிக்

கொள்ளை நடத்தவில்லையா?" என வினவினார். நம் புலவர் உடனே

"அவர் வழிப்பறிக் கொள்ளை நடத்தி நாராயணனுக்குத் தொண்டு

செய்தார். அப்பணத்தால் பிழைக்கவில்லை." என்று செப்பினார்.

காலம் உருண்டது. ஒவ்வொரு நாளும் வறுமைத் துயரம் கூடிக்கொண்டே

வந்தது.


தலைமலைகண்ட தேவர்  சோர்வடைந்தார். இனி வறுமைப் பிணியைத் தாள

முடியாது. மனைவியை அழைத்து " உன் விருப்பப்படியே உன் அண்ணன்மார்

தொழிலில் பங்கெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளேன். அவர்களிடம்

தெரிவித்துவிடு. ஆனால் இரு நிபந்தனைகள்; எக்காரணத்தை முன்னிட்டும்

கொலைக் குற்றம் மேற்கொள்ளக் கூடாது. மகளிரிடம் தவறாக நடக்கக்

கூடாது." என்று பகர்ந்தார். அம்மையாருக்கு மிக்க மகிழ்ச்சி. ஓடிச் சென்று

தன் அண்ணன்மாரிடம் தகவலைத் தெரிவித்தார்.


அமாவாசை நாள் நெருங்கியது. புலவர் வேண்டா வெறுப்பாகக் கன்னமிடப்

புறப்பட்டார். அவருடன் மைத்துனர்கள் எழுவரும் சென்றனர். திருப்பூவணத்

தில் வாழும் செல்வர் ஒருவர் மாளிகையில் கன்னமிடத் திட்டம் தீற்றியிருந்

தனர். அவ்வாறே அம்மாளிகைக்குள் மைத்துனர் எழுவரும் கன்னமிட

நுழைந்தனர். புலவர் செல்வரது அறைவாசலில் நின்றுகொண்டு நோட்டம்

இட்டுக் கொண்டிருந்தார். உள்ளே சென்ற மைத்துனர் எழுவரும் நகைகள்,

பாத்திரங்கள் போன்றவற்றைத் திருடி மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது சில வெண்கலப் பாத்திரங்கள் தரையில் விழுந்து பெருத்த

ஓசையை எழுப்பின. பெரிய மாளிகையாதலால் காவற்காரர்கள் வேற்

கம்புகள், அரிவாள்களோடு அவ்விடத்துக்கு ஓடிவரத் தொடங்கினர். இக்

காட்சியைக் கண்ட மைத்துனர்கள் எழுவரும் மாளிகைக்கு வெளியே

தப்பியோடிவிட்டனர். புலவர் மட்டும் என்ன செய்வது என்று தெரியாமல்

செல்வர் அறை வாசலில் நின்றுகொண்டிருந்தார்.


இவ்வளவு கலவரத்துக்கு இடையிலும் செல்வர் நிதானமாக ஏதோ

புலம்பிக் கொண்டிருந்தார். அவருக்கு ஒரு நல்ல பழக்கம்

இருந்தது. அன்றாடம் ஈசன் மேல் ஒரு வெண்பாப் பாடி முடித்துவிட்டுத்

தூங்கச் செல்வது வழக்கம். அன்றும் பாடத் தொடங்கினார்.

"தலையில் இரந்துண்பான்; தன்னுடலிற் பாதி

மலைமகட்(கு) ஈந்து மகிழ்வான்---உலையில்"

பிட்சாடனராக மண்டை ஓட்டில் பிச்சையெடுத்துண்பான்;

தன்னுடலிற் சரி பாதியை உமையம்மைக்குக் கொடுத்து மகிழ்வான்.

இரண்டு வரிகளுக்கு மேல் அவர் கற்பனை நகர மறுத்தது. சொற்கள்

வரத் தயங்கின. முதலிரண்டு வரிகளையே திரும்பத் திரும்பப் பாடிப்

புலம்பினார். அறை வாசலில் நின்றுகொண்டிருந்த தலைமலைகண்ட தேவர்

பாடலின் முதலிரண்டு வரிகளையே  ஏன் பாடிக்கொண்டிருக்கின்றார்?

என்று சிந்தித்தார். அடக் கடவுளே! இரண்டு வரிதளுக்குமேல்  அவர்க்குப்

பாட வரவில்லை போலும் என்றெண்ணி உலையில் என்ற தனிச்சொல்லைப்

பாடித் தொடர்ந்து

"இருப்புவண மேனியனார் என்றாலோ ஆமாம்

திரும்புவண நாதன் திறம்".

என்று  நிறைவு செய்தார்.

வெண்பா நிறைவடையக் கேட்ட செல்வர் ஓடோடி வந்து அறை வாசலில்

நின்றுகொண்டிருந்த புலவரைக் கட்டிப் பிடித்து "ஐயா! தாங்கள் யார்? புலவரோ?

நீண்ட நேரமாக வெண்பாவின் முதலிரண்டு அடிகளுக்குமேல் பாடத் தோன்றாமல்

திணறிக் கொண்டிருந்தேன்; நீர் தக்க சமயத்தில் உதவினீர்; மிக்க நன்றி. தாங்கள்

இங்கு நின்றுகொண்டிருக்கக்  காரணம் என்ன?" என்று வினவினார். புலவர்

உள்ளத்தில் கபடம் ஏதுமில்லாததால் மடைதிறந்த வெள்ளம்போல் உள்ளதை

உள்ளபடி உரைத்தார். எதனையும் மறைக்கவில்லை. இறுதியாக "வறுமையின்

கொடுமை தாளாது திருட வந்தேன்; வருந்துகிறேன்; பொறுத்தருள்க" என்றார்.

செல்வர் உடனே" பத்தாண்டுகளுக்கு மேலாக ஈசன் மேல் நாள்தோறும் ஒரு வெண்பாப்

பாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இன்று அந்த வழக்கம் முறிந்து விடுமோ?

என்று கவலையடைந்தேன்.. தாங்கள் என்னைக் காத்தருளுனீர். நான் உமக்குக்

கடப்பாடுடையேன்" என மொழிந்தார். பின்னர் இருவரும் இணைந்து ஒருசில

பாடல்கள் இயற்றினர். பிற்பாடு புலவர்க்கு விருந்து படைத்து மகிழ்ந்தார். அன்றிரவு

புலவர் செல்வர் மாளிகையிலேயே தங்கினார். இடையிடையே, புலவரைப் பற்றிய

சில விவரங்களையும் கேட்டறிந்த செல்வர் புலவர் மனைவிக்கு ஆட்கள் மூலமாகத்

தகவல் தெரிவித்தார். மறுநாள் காலையில் மைத்துனர் எழுவரையும் தம் மாளிகைக்கு

வரச் சொல்லியிருந்தார்.


மறுநாள் காலையில் புலவரின் மைத்துனர் எழுவரும் வந்து சேர்ந்தனர்.

செல்வர் அவர்களைத் தம் பண்ணையில் பணிக்கு அமர்த்திக்கொண்டார்.

திருட்டை விட்டொழிக்கு மாறு அன்புடன் வேண்டுகோள்விடுத்தார்.

புலவர்க்குத் தக்க வெகுமதி கொடுத்து அனுப்பிவைத்தார்.

  

பார்வை:

தலைமலைகண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி நூல்.

தஞ்சை சரசுவதி மகால் நூலக வெளியீடு, 1968.











Saturday 12 June 2021

கண்ணீத்தம் தீர்க்கும் மருந்து.

 கண்ணீத்தம்(கண்ணீர் வெள்ளம்) துடைக்கும் மருந்து.


முத்தொள்ளாயிரம் என்னும் சங்கம் மருவிய கால இலக்கியத்தில்

காணப்படும் நெஞ்சை யுருக்கும் காட்சி. பாண்டிய நாட்டின் மீது

பகைவர் படையெடுத்து வந்துள்ளனர். நாட்டைக் காப்பதற்கு ஒவ்

வொரு வீட்டிலிருந்தும் ஒரு ஆண்மகன் போர்க்களத்துக்கு வருதல்

வேண்டுமெனப் பாண்டிய வேந்தன் முரசறைந்து செய்தி தெரிவிக்க

ஆணையிட்டுள்ளான். வீட்டுக்கு ஒருவர் போர்க்களம் நோக்கிச் செல்

கின்றனர். ஒரு வீட்டில் கணவனை யிழந்த ஒரு தாய் தன் பாலகனோடு

வாழந்து வருகிறாள். அவன் பாலகன் ஆதலால் தன்வயது ஒத்த சிறுவர்

களோடு தெருவில் விளையாடிக்கொண்டிருக்கின்றான். அந்தத் தாய் தன்

பாலகனை யழைத்துப் போர் ஆடை உடுத்திவிட்டுக் கையில் வேலைத்

திணித்து மகனுடன்  போர்க்களம் நோக்கி நடக்கின்றாள்.


போர்க்களம் வந்தடைந்த அத்தாய் தன் பாலகனை முன்னிறுத்தித் தான்

பின்னால் நின்றுகொண்டு மகனுக்கு வேலைக் கையாளக் கற்றுக்கொடுக்

கின்றாள். ஒரு நாழிகை தடுமாறிய பாலகன் ஏனைய வீரர்கள் வீறுகாட்டிப்

போர்செய்வதனைப் பார்த்து வீரமும் வெறியும் கொண்டு வேலைக் கையாளக்

கற்றுக்கொள்கின்றான். தாய் பின்னாலிருந்து "பாண்டிய நாட்டை எப்பாடுபட்டேனும்

காப்போம்" என்றும் "வெற்றிவேல், வீரவேல்" என்றும் முழக்கமிட்டாள். அதனால்

பாலகன் ஓரளவு நன்றாகவே சமர்புரிந்தான். ஆனாலும் அவன் பாலகன் தானே!

நேரம் கழியக் கழிய அவனது கைகள் தளர்ச்சிடையத் தொடங்கின.  அந்தோ, பரிதாபம்

அவனால் அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பகைவீரன் ஒருவன் எறிந்த

வேல் பாலகனின் மார்பைப் பிளந்து அவன் உயிரைக் குடித்தது. மேலும் சில நாழிகை

நேரம் போர் தொடர்ந்து நடைபெற்றது. இறுதியில் பாண்டிய வீரர்கள் பகைவரைத்

துரத்தியடித்து வெற்றிவாகை சூடினர்.

பாண்டிய வேந்தன் வெற்றியடைந்த பின்னர் சில மருத்துவர்கள் புடைசூழப் போர்க்

களத்தைச் சுற்றிவந்து வீரமரணம் அடைந்தவர்களை முறைப்படி அடக்கம் செய்யவும்

காயம் அடைந்தவர்களுக்கு  முறைப்படி மருத்துவம் பார்க்கவும் ஏற்பாடு செய்தான்.

அப்பொழுது ஒருதாய் உயிரிழந்த தன் பாலகனின் உடலைத் தன் மடிமீது கிடத்திக்

கதறி அழுதுகொண்டிருப்பதைக் கண்டு அவள் அருகில் சென்று நடந்தது  என்ன? 

என்று வினவ, அத்தாய் நடந்த நிதழ்ச்சிகளை விம்மலுடன் சொல்லி முடித்தாள். அவள்

கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தது. செய்தியைக்

கேட்ட பாண்டிய வேந்தன் நெக்குருகிப் போனான். தடாலென்று கீழே குனிந்து அத்தாயின்

கால்களைத் தொட்டு வணங்கி "அம்மையே! உம் போன்ற வீரப் பெண்டிர்களால் இந்த

வெற்றி கிட்டியது. இந்த நாட்டை உமக்குத் தருகிறேன். பெற்றுக் கொள்க" என்றான்.

அத்தாய் உடனே  "தாய்நாட்டைக் காப்பது எம் கடமை. அதைத்தான் யாம் செய்தோம்.

பரிசையோ வெகுமதியையோ எதிர்பார்க்கவில்லை"  என்று இயம்பினாள். இச்

செய்தியைக் கூறும் பாடல் பின்வருமாறு:

"தொழில்தேற்றாப்  பாலகனை  முன்னிறீஇப்  பின்னின்

அழலிலைவேல். காய்த்தினார்  பெண்டிர்---கழலடைந்து

மண்ணீத்தல்  என்ப  வயங்குதார்  மாமாறன்

கண்ணீத்தம்  தீர்க்கும்  மருந்து".

அருஞ்சொற் பொருள்:

தொழில்தேற்றா--போர்த்தொழில் பயில்விக்கப் படாத;

முன்னிறீஇ--முன் நிறுத்தி.

அழலிலைவேல்--வெம்மைமிகு இலைவடிவ வேல்;

காய்த்தினார்--சினங் கொண்டார்;

மண்ணீத்தல்--நாட்டைக்  கொடுத்தல்;

வயங்குதார்--ஒளிமிகுந்த மாலை;

மாமாறன்--பாண்டியன்

கண்ணீத்தம்--கண்ணீர் வெள்ளம். பாடலைப் படித்து இன்புறுவோம்.


யானையிடம் கெஞ்சிய மடந்தை.

முடியுடை மூவேந்தராயினும், குறுநில அரசர்களாயினும்  தத்தம் தலை

நகரத்தில் அடிக்கடி வீதியுலா வருவது வழக்கம்.  அப்பொழுதுதான் பொது

மக்களைச் சந்திக்கவும், அவர்களின் நலத்தைப் பற்றிக் கேட்டறியவும்,

அரசாட்சியில் ஏதாவது குறைகள் உள்ளனவா?  என்பது பற்றித் தெரிந்து

கொள்ளவும் வாய்ப்புக் கிட்டும். வழக்கம் போலப் பாண்டிய வேந்தர் தம்

பிடி (பெண்யானை) மீதேறிக் கம்பீரமாக வீற்றிருந்து யானையை நடத்திவருகிறார்.

பாதுகாப்புக்குப் படைவீரர்கள்  இருபுறமும் அணிவகுத்து உலா வருகின்றனர்.

வீதியின் இருபுறமும் பொதுமக்கள் வேந்தரைக் காணும் ஆர்வத்துடன்

நின்று கைகளை அசைத்து வரவேற்கின்றனர். பருவப் பெண்கள் பலகணி (சன்னல்)

வழியாகப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சில அன்னையர் தம் பெண்கள்

உலாவைக் காண இயலாதபடி  வாயிற் கதவையும் சாளரத்தையும் அடைத்து

விட்டுத் தாம் வெளியே நின்று உலாவைப் பார்க்கின்றனர். வேந்தரின் கம்பீரத்

தையும் அழகையும் கண்டு பருவப் பெண்கள் தேவையில்லாத ஆசையை

மனத்தில் வளர்த்துக்கொள்ளக் கூடாது என்ற எண்ணத்துடனேயே  அன்னை

யர் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். ஆனால் இந்தக் கண்டிப்பையும் மீறி

மடந்தையர் அன்னையர் அறியாமல் சாளரத்தைத்  திறந்தோ கதவைத் திறந்தோ

உலாவரும் வேந்தரையும் உடன்வருபவரையும் பார்க்கத்தான் செய்கின்றனர்.

அப்படி ஒரு மடந்தை  வேந்தரைப் பார்த்துத் திகைக்கின்றாள். வேந்தரின் பெருமிதத்

தையும் அழகையும் மனத்தில் ஆழமாகப் பதித்துக் கொள்கிறாள். பிடியானை

யின் தோற்றமும் அவளை வெகுவாகக் கவர்கின்றது. உடுக்கை போன்ற நான்கு

கால்களும், கேடயம் போன்ற தோற்செவிகளும்,  அசைகின்ற  தும்பிக்கையும்

தொங்குகின்ற வாயும் கொண்டு செம்மாந்து நடந்துவரும் அப் பிடியின் தோற்றம்

அவள் உள்ளத்தில் பசுமரத்து ஆணிபோலப் பதிகின்றது. உலா முடிந்து அனைவரும்

அரண்மனைக்குச் சென்றுவிட்டனர்.


அந்த மடந்தைக்கு  வேந்தரையும் அவரது பிடியையும்  மீண்டும் ஒருமுறை பார்க்கும்

ஆவல் எழுந்தது. இந்த நினைவுடனே சில நாட்களைக் கழித்தாள். ஒருநாள் வேந்தர்

நீராட  அவர் பாதுகாவலர்கள் புடைசூழ  ஆற்றை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

ஆற்றுக்கு அருகில் அவளது சேரி இருந்தது. அவளது சேரி வழியாக அனைவரும்

வந்தனர். வேந்தர் தனது பிடியானையின்மேல் வீற்றிருந்தார். அப்போழுது அந்தப்பெண்

பிடியிடம் கெஞ்சிச் சொன்னாள்:" பிடியே! உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

வேந்தர் ஆற்றில் நீராடிய பிறகு  மார்பில் சந்தனத்தைப் பூசிக் கொண்டு  அரண்மனைக்குத்

திரும்பும் பொழுது  என் சிற்றிலின் சாளரம் வழியாக நடந்து செல்" என்றாள். இந்தச்

சொல் ஓவியத்தை முத்தொள்ளாயிரம் அழகாகக் காட்டுகின்றது. அது பின்வருமாறு:

"துடியடி; தோற்செவி; தூங்குகை; நால்வாய்ப்

பிடியே!யான் நின்னை இரப்பன்--கடிகமழ்தார்ச்

சேலேக வண்ணனொடு சேரி புகுதலும் எம்

சாலேகம் சார நட."

(துடி=உடுக்கை; தோற் செவி=தோற்  கேடயம் போன்ற செவி; தூங்குகை=அசைகின்ற 

தும்பிக்கை; நாலு வாய்= தொங்குகின்ற வாய்; கடி=மிக்க;  கமழ்தார்=மணக்கும் மாலை;

சேலேகம்= சந்தனம்; சாலேகம்=சாளரம், சன்னல், பலகணி, காலதர்).

நீராட்டம் முடிந்து வேந்தர் உட்பட அனைவரும் அரண்மனைக்குப்  புறப்பட்டனர்.

இயல்பாகவே அந்தப் பிடி அவள் சிற்றிலின் சன்னல் வழியாகச் சென்றது.  அவள் தனது

எண்ணப்படியே  வேந்தரைக்  கண்ணாரக் கண்டு உவகையடைந்தாள்.


கடுமையான நெறிமுறைகள்  சமுதாயத்தில் நிலவிய போதிலும்,  அன்னையர் இற்செறிப்பு,

கடிகாவல் முதலிய ஏற்பாடுகளைச் செய்தாலும்  பருவ வயதுப் பெண்களிற் சிலர் அந்த

வயதுக்குரிய குறும்புகளோடு நடந்துகொள்ளுதலைத் தவிர்த்தல் இயலாது போலும். முத்

தொள்ளாயிரம் காட்டும் இந்தச் சொல் ஓவியம்  சுவைத்தின்புறத் தக்கது.





Tuesday 25 May 2021

வருந்தாதோ திருமேனி?

 வருந்தாதோ திருமேனி? இடை நோகாதோ? மணிச் சிலம்பு புலம்பாதோ?

                                   வளை ஏங்காதோ?


ஒரு மலைநாட்டில் காதலனும் காதலியும்  இரவு நேரத்தில் சந்தித்துக்

கொள்ளத் திட்டம் வகுத்து அதன்படி முன்கூட்டியே காதலன் வந்து தன்

காதலிக்காகக் காத்திருக்கின்றான். ஒரு நொடி ஒரு யுகம் போலக் கழி

கின்றது. ஒருவாறு நள்ளிரவு நேரம் நெருங்கிவிட்டது. மெதுவாகக்

காதலி நடந்துவரும் அரவம் கேட்கிறது. காதலி வருவாளோ? வரமாட்டாளோ?

என்ற ஏக்கத்தில் காத்திருந்த காதலனுக்குத் தெம்பும் மனவெழுச்சியும்

பீறிடுகின்றன. தன் காதலியை நோக்கி மெல்லிய குரலில் பாடத் தொடங்கு

கின்றான். " கொள்பவர் உள்ளம் நிறையும் வண்ணம் பொருளைச் சொரிந்து

நல்கும் வள்ளல் இராமராசத் துன்முகிராசனுக்கு உரித்தான இம்மலையில்

வாழ்ந்துவரும்  மயில் போன்றவளே! நின்னைக் கண்ணை இமைகாப்பதுபோல்

காத்துப்  புரந்துவரும் நற்றாயும் செவிலித்தாயும் அறியாவண்ணம் இந்த

நள்ளிரவு வேளையில் நினது தாமரை போன்ற இல்லக் கதவைத் திறந்து

தன்னந் தனியாக வந்துள்ளாய். உன்னை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்

கொண்டிருந்தேன் என்பது மெய்தான். ஆனால் ஊரெல்லாம் உறங்குகின்ற

இவ்வேளையில் துயில் துறந்து வந்த நின் திருமேனி வருத்தம் அடையாதோ?

உன் சிற்றிடை நோவு கொள்ளாதோ? மாணிக்கப் பரல்கள் பதிக்கப்பட்ட

காற்சிலம்புகள் ஒலியெழுப்பாவோ? கைவளையல்கள் ஓசைசெய்யாவோ?

மழைபோலும் நின் கருங்கூந்தலிற் சூடியுள்ள மணம்பரப்பும்  முல்லை

மலர்கள் கீழே சிந்தாவோ? ஏனென்றால்,  இவையெல்லாம் நீ இங்கு வந்த

தையும் நாம் சந்தித்துக் கொண்டதையும்  காட்டிக் கொடுக்கும் வாய்ப்புள்ளது.

எல்லாவற்றுக்கும் மேலாக, நின் தாமரைப் பாதங்கள்  பரற்கற்கள் நிரம்பிய

பாதையில் நடந்துவந்தமையால் கன்றிப் போயுள்ளனவா? என் மனம் நிலை

கொள்ளாமல் தவிக்கின்றது. இச் செய்தியை நவிலும் பாட்டைப் பார்ப்போம்:

சங்கப் பாடல் அன்று; பிற்காலப் பாடல்; திணை: குறிஞ்சி;

துறை: இரவுக்குறிச் சந்திப்பு.

காதலன் கூற்று:

"சொரிந்தாரப் பொருள்வழங்கும்  இராம ராசத்

துன்முகிரா சன்வரையில் தோகை யன்னீர்!

தருந்தாயர்  அறியாமல் பாதி நேரம்

         தாமரைக்கோ யிலைத்திறந்து தனியே வந்தீர்;

வருந்தாதோ திருமேனி? இடைநோ காதோ?

         மணிச்சிலம்பு புலம்பாதோ? வளையேங் காதோ?

கருந்தாரை அளகநறு மலர்சிந் தாதோ?

          கன்றாதோ நும்பாத கமலந் தாமே?"

அருஞ்சொற் பொருள்:

சொரிதல்=கொடை கொடுத்தல்;

இராசராசத் துன்முகிராசன்=ஒரு சிற்றரசன்.

தருந்தாயர் =பெற்ற தாய் மற்றும் செவலித் தாய்.

பாதி நேரம்=நள்ளிரவு நேரம்; தாரை=மழை;அளகம்=கூந்தல்;


இப்பாடல் தஞ்சை சரசுவதி மகால் வெளியீடான தனிப்பாடல் திரட்டு(முதற்

பாகம்) நூலில் உள்ளது. இயற்றியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை.



நாணிக் கவிழ்ந்து நகைத்தநகை நானோ மறக்க வல்லேனே!


களவியலில் பழகிவரும் தலைவனும் தலைவியும் திருமணம்

புரிந்து கற்பியல் வாழ்வைத் தொடங்க முடிவு செய்கின்றனர்.

திருமணத்துக்கு வேண்டிய பொருளீட்டுவதற்காகத் தலைவன்

தலைவியைப் பிரிய நேரிடுகிறது. இதனை 'வரைவிடை வைத்துப்

பொருள்வயின் பிரிதல்' என்று அகப்பொருள் இலக்கணம்

இயம்பும். இப்பிரிவு இரண்டு மாதங்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது

என்பது அகப்பொருள் மரபு.


தலைவன் பொருளீட்டுவதற்காக வேற்றூர் செல்லக் கிளம்புகின்றான்.

அப்பொழுது தோழி தலைவனை நோக்கி "நீர் எம் தலைவியை மறவேல்"

என்று நவிலுகின்றாள்.  உடனே தலைவன் விடையிறுக்கின்றான்:

"பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடைய சிவபெருமான் தன் சடைமுடியை

விரித்தாடும் புலியூர் போன்ற வளத்தையுடைய எழில் மங்கையரே!

(மரியாதை நிமித்தமாகப் பெண்ணைப் பன்மை விளியில் அழைப்பது

சங்ககால மரபு.) உம்  தலைவி இயற்கைப் புணர்ச்சிக்கண் நாணத்தால் கண்

புதைத்த பொழுது அவரின் நகையணிந்த மார்புகளும் வில்போன்று வளைந்து

தோன்றிய புருவங்களும் என்னைக் கிறங்கடித்தன. அவைகளை யான்

மறவேன். ஒருவேளை அவைகளை மறக்க நேரிட்டாலும், எங்கள் களியாட்டத்

தின் போது குலைந்திருந்த ஆணிப்பொன் பொதிந்த மெல்லிய எழில்மிக்க

ஆடையினை நெகிழ்த்து மீண்டும் சரியாக உடுத்த முனையும் வேளையில்

அவர் நாணத்தினால்  தலையைக் கவிழ்த்து நகைத்த முறுவலை மறக்க

வல்லேன் அல்லேன்.(என்னதான் யான் அவரை மணக்கவிருக்கும் தலைவன்

என்றாலும் ஆடையை நெகிழ்த்தி மீண்டும் உடுத்துதல்  அவர்க்குக் கூச்சத்தை

உருவாக்குதல் இயல்பு தானே.) இந்தச் செய்தி பயின்று வரும் தனிப்பாடல்

பின்வருமாறு:

"வேணிப்  பவளம்  விரித்தாடும் விமலர் புலிசைத் திருவனையீர்!

பூணிற் சிறந்த வண்முலையும் புருவச் சிலையும் மறந்தாலும்

ஆணிக் கனகம் அழுந்தியபூ ஆடை நெகிழ்க்கும் வேளைதனில்

நாணிக் கவிழ்ந்து நகைத்தநகை நானோ மறக்க வல்லேனே!"

அருஞ்சொற் போருள்:

வேணி=சடைமுடி; விமலர்=சிவபெருமான்; புலிசை=புலியூர்;

புருவச் சிலை=புருவமாகிய வில்; ஆணிக் கனகம்=ஆணிப்பொன்;


இத்தருணத்தில் கம்பராமாயணத்தில் பயின்று வரும் பாடலை

நினைவுகூர்தல் தகும்.

"இந்திர  நீலமொத்(து) இருண்ட குஞ்சியும்

சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்

சுந்தர மணிவரைத்  தோளு மேயல

முந்தியென் உயிரையம் முறுவல் உண்டதே!"

என்று சீதைப் பிராட்டி இராமனைப் புகழ்ந்து கூறியது நினைக்கற்

பாலது. இராமனின் மற்ற அழகுக் கூறுகளை விடவும் அவன் முறுவல்

தன்னைக் கிறங்கடித்ததாகச் சீதைப் பிராட்டி நவில்கின்றாள்.


சரசுவதி மகால் வெளியீடான தனிப்பாடல் திரட்டு(முதல் பாகம்) நூலில்

இந்தத் தனிப்பாடல் உள்ளது.

Sunday 9 May 2021

கலிங்கத்துப் பரணி

 வருவார் கொழுநர் எனத்திறந்தும், வாரார் கொழுநர் என அடைத்தும்...‌‌

                                      (கலிங்கத்துப் பரணி)


பரணி ஒரு விண்மீன்(நட்சத்திரம்). பரணி விண்மீன் போர்க்கடவுளான

கொற்றவைக்குரியது. பரணி நாளில் பேய்கள் கூடி நிணச்சோறு

(இரத்தமும் தசையும் கலந்த உணவு) சமைத்து உண்டு மகிழ்ந்து ஆடிப்

பாடிக் களித்துப் போரில் வென்ற மன்னரது புகழைக் காளிக்குக் கூளிகள்

கூறுவதாக இலக்கியம் படைப்பது பரணி இலக்கியம் என அழைக்கப்படும்.

ஏதோ ஒரு காரணத்தால் போரில் தோற்ற நாட்டின் பெயரைத் தாங்கிப்

பரணி இலக்கியம் படைக்கப் படுவது மரபாகும்.


பரணி இலக்கியம் போரைப் பற்றிப் பாடுவதால் படிப்பவர்க்கு ஒருவித அச்ச

உணர்வும் அருவருப்பும் தோன்றுவது இயல்பே. ஆனால் அதையெல்லாம் மீறி

இலக்கியத்தில் மிளிரும் சந்தநயம், கற்பனை, காதல் காட்சிகள், வீரத்தைப்

பற்றிய விவரிப்பு, பேய்களைப் பற்றிய நகைச்சுவை இழையோடும் காட்சிகள்,

வரலாற்றுச் செய்திகள் எல்லாம் படிப்பவர் மனத்தை ஈர்த்து விடும் என்பது

மறுக்கமுடியாத உண்மை.


சாதாரண அரசர்கள் மீது பரணி இலக்கியம் படைக்கப் படுவதில்லை.

"ஆனை ஆயிரம் அமரிடை வென்ற

மானவ னுக்கு வகுப்பது பரணி"  (இலக்கண விளக்கம்)

என்ற இலக்கணப்படி மிகப் பெரிய பேரரசர் மீது பரணி பாடப்படுவது மரபு. இது

போலவே ,எல்லாப்  புலவர்களாலேயும்  பரணிபாட முடியாது. மிகப் பெரும்  புலவர்

களாலேயே இந்தஇலக்கியத்தைப் படைக்கமுடியும்.  கம்பருக்குச் சமமான தமிழ்ஆளுமை

கொண்ட செயங்கொண்டார் என்னும் புலவர் ஈரடித்  தாழிசை என்னும் யாப்பில் 54 விதமான

சந்த வேறுபாடுகளோடு 599  கண்ணிகள் பயின்று வருமாறு  இக் 'கலிங்கத்துப்

பரணி' என்னும் நூலை வடிவமைத்தார்.


முதலாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்தில் அனந்தவர்மன்

என்னும் வடகலிங்க மன்னன்(இந்நாளைய ஒடிசாவின் பெரும்பகுதி

யும் ஆந்திராவின் சிறு பகுதியும் இணைந்தது கலிங்கம்) முறையாகக்

கப்பம் கட்டாததால் குலோத்துங்கன் தன் படைத்தலைவனும் அமைச்சனும்

ஆன  பல்லவர் வழிவந்த கருணாகரத் தொண்டைமான் என்பவனை

ஏவி வடகலிங்கத்தை அடிமைப்படுத்தினான் என்பது வரலாறு‌. இப் படை

யெடுப்பு 1112 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக வரலாறு பேசுகிறது. இப்பரணி

நூலில் நாட்டுடைத் தலைவன் குலோத்துங்கனின் பெருமையும் பாட்டுடைத்

தலைவன் கருணாகரத் தொண்டைமானின் பெருமையும் பேசப்படுகிறது.


இந்நூலில் கடைதிறப்பு, காடு பாடியது, களம் பாடியது, இந்திரசாலம், குலமுறை

கிளத்துதல், வாழ்த்து முதலிய பல பிரிவுகள் இயற்றப்பட்டிருந்தாலும் 'கடை திறப்பு'

என்னும் பகுதிதான் சுவையான பகுதியாகும். போருக்குச் சென்ற படைவீரர்கள்

தாய்நாட்டுக்குத் திரும்ப வெகு நாட்கள் ஆனமையால் அவ்வீரர்களின் மனைவிமார்கள்

தம் கணவர் வருவர் எனக் கடை(கதவு) திறந்து வைத்தும், வாரார் என எண்ணி மனம்

சோர்வுற்றுக் கடையடைத்தும் நிலைகொள்ளாமல் தவித்ததை அழகாகப் பாடியுள்ளார்.

"வருவார் கொழுநர் எனத்திறந்தும்

வாரார் கொழுநர் எனவடைத்தும்

திருகும் குடுமி விடியளவுந்

          தேயுங் கபாடந் திறமினோ!"

(குடுமி=கதவிலுள்ள குமிழ்; கபாடம்=கதவு) கண்ணி 69.


ஒரு குறும்புக்கார வீரன் முன்னொருநாளில் தானும் தன் மனைவியும் இணைந்திருந்த

காலத்தில் தான் உளறிய மொழிகளை வீட்டுக்கிளி பேசிக்காட்டியதையும் உடனே மனைவி

கிளியின் வாயைப் பொத்தியதையும் தன் மனைவிக்கு நினைவுறுத்திக்

கதவைத் திறக்க வேண்டினான்.

"நேயக் கலவி மயக்கத்தே

நிகழ்ந்த மொழியைக் கிளியுரைப்ப

வாயைப் புதைக்கு மடநல்லீர்!

         மணிப்பொற் கபாடந் திறமினோ!'"  (கண்ணி 67.)


காஞ்சி என்பது பெண்கள் இடையில் அணியும் அணிகலன். கலிங்கம் என்பது அவர்கள்

 உடுத்திக் கொள்ளும் ஆடையாகும்.  கணவன் மனைவி இணையும் நேரங்களில் காஞ்சி

யைக் கழற்றாமல் கலிங்கத்தை(ஆடையை)மட்டும் நெகிழ்த்திவிட்டு நலந்துய்ப்பர். இதனை

எடுத்தாண்டுள்ள புலவர், குலோத்துங்கன் காஞ்சி அரண்மனையில் அலுங்காதிருக்க,

அவன் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமானால் கலிங்க நாடு சீர்குலைந்தது

என்று திறமையாகப் பாடியுள்ளார்.

"காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த

      கலவி மடவீர்!  கழற்சென்னி

காஞ்சி யிருக்கக் கலிங்கம் குலைந்த

      களப்போர் பாடத் திறமினோ!"  (கண்ணி எண்63)


"செக்கச் சிவந்த கழுநீரும்

       செகத்தில் இளைஞர் ஆருயிரும்

ஒக்கச் செருகும் குழல்மடவீர்!

        உம்பொன் கபாடந் திறமினோ!"  (கண்ணி எண்74)


போர்க்களக் காட்சியைக் காட்டும் ஒரு பாடல்:

"பொருதடக்கை வாளெங்கே?  மணிமார் பெங்கே?

        போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத

பருவயிரத் தோளெங்கே? எங்கே யென்று

பயிரவியைக் கேட்பாளைக் காண்மின், காண்மின்!"


"கொற்றக் குடையினைப் பாடீரே!

குலோத்துங்க சோழனைப் பாடீரே!". (கண்ணி 533)


"பண்டை மயிலையைப் பாடீரே!

பல்லவர் தோன்றலைப் பாடீரே!"  (கண்ணி 534)


கலிங்கத்துப் பரணியைப்  படித்தின்புறுவோம்.