Thursday, 15 October 2026

மழைவளருஞ் சாரல் இரவுவரின் வாழாள் இழைவளருஞ் சாயல் இனி.

 மழைவளருஞ் சாரல் இரவுவரின் வாழாள்

இழைவளருஞ் சாயல் இனி.


நூல்: திணைமாலை நூற்றைம்பது.

திணை: குறிஞ்சி

துறை: தோழி தலைமகனை நெறி விலக்கி  வரைவு கடாயது.


மலைநாட்டில் ஒரு தலைவனும் தலைவியும்  தம்முள் காதல்கொண்டு

அடிக்கடி சந்தித்துப் பழகிவருகின்றனர். சிலநாட்கள் பகற்குறியிலும்

(பகலில் காதலர் சந்தித்துக் கொள்ளும் இடம்)  சிலநாட்கள் இரவுக்

குறியிலும் சந்திப்பை நிகழ்த்துகின்றனர். பகற்குறியில் காதலர் சந்தித்துக்

கொண்டால்  அக்கம்பக்கத்திலுள்ளோர்  பார்த்து அலர்பேச வாய்ப்புண்டு.

பிறர் அறியாமல் காதலர் சந்திப்பது மிக மிகக் கடினமாகும்.  இரவுக் குறியில்

சந்திக்கலாம் என்றால்  காட்டு யானை, புலி போன்ற கொடிய விலங்குகளின்

நடமாட்டம் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே தலைவியும்

தோழியும் இதுகுறித்து விரிவாக அலசி ஆராய்ந்து உடனடியாக வரைவு மேற்

கொள்வதே சாலச் சிறந்தது என்றும் தோழி  இது தொடர்பாகத் தலைவனிடம் பக்குவமாக

எடுத்துரைத்தல் வேண்டும் என்றும் முடிவெடுக்கின்றனர்.


அவர்கள் முடிவுசெய்தபடியே  அன்றிரவு  வந்த தலைவனிடம் தோழி  உரையாடத்

தொடங்கினாள்:

"ஐயா!  பகற்குறியிலும், இரவுக் குறியிலும் மாறி மாறிச் சந்தித்துப் பழகிக் காலம்

கடத்துவது நல்லதன்று. பகற்குறியில் சந்தித்துக் கொண்டால் பிறர் பாரத்து அலர்

எழுப்பவர். இரவுக்குறியில் சந்தித்துக்கொள்ளுவதில் நிறைய  உயிருக்கு ஊறு

விளைவிக்கும் இடர்கள் நேரிட வாய்ப்பு உண்டு.. தலைவி அணிகின்ற அணிகளால்

ஏற்படும் அழகை இயல்பாகவே உடையவள். கரிய அடிப்பகுதியையுடைய கூட்டமான

வேங்கை மரங்கள் உதிர்த்த மலர்கள் பாறைகள் மீது படிந்து பெரிய கால்களையுடைய

வெற்றியுடைய  புலியைப்போல் விளங்கும் இடங்கள் செறிந்து விளங்கும்,  மழைவிடாது

பெய்யும் மலைச்சாரல் வழியே நீவிர் வருவதைத் தலைவி  விரும்பவில்லை. ஏனெனில்

நீவிர் வரும் வழி அச்சம்தருவதாகவுள்ளது. உயிருக்கு ஊறுவிளைவிக்கும் இடர்கள்

நிறைந்தது. பிடிவாதமாக நீவிர் இரவில் அவ்வழியே வருவதாகத் தீர்மானித்தால் தலைவி

உயிர்தாங்கிக்கொண்டிருக்க மாட்டாள். அதனால் உடனடியாக வரைவு(திருமணம்)

மேற்கொள்ள ஏற்பாடு செய்க. அதுவே சாலச் சிறந்தது."என்றாள். பாடல் பின்வருமாறு:

"கருங்கால் இளவேங்கை கான்றபூக் கல்மேல்

இருங்கால் வயவேங்கை ஏய்க்கும்---அருங்கான்

மழைவளருஞ் சாரல் இரவுவரின் வாழாள்

இழைவளருஞ் சாயல் இனி".

புலவர்:கணிமேதாவியார்--பாடல் எண்:26.

(இளவேங்கை=இளைய வேங்கை  மரம். கான்ற=வெளித் துப்பிய. கல்= பாறை.

இருங்கால்=பெரிய, வலிய கால். இளவேங்கை=இளம் புலி. ஏய்க்கும்=ஒக்கும்.

வேங்கை மரம் உதிர்த்த மலர்கள் பாறை மீது படிந்து புலியைப் போன்று தென்படும்.

சாயல்=அழகு, மென்மையான தோற்றம் உடைய தலைவியைக் குறிக்கும்).

  

இனி, வேறொரு இனிய பாடலைப் பார்ப்போம்.

நூல்: அதே நூல். திணை: குறிஞ்சி. துறை: தோழி படைத்து மொழி கிளவியான்

வரைவு கடாயது. தோழி தானே ஒன்றைக் கற்பித்துக் கொண்டு தலைவன் தலைவியை

மணந்து கொள்ளுமாறு வேண்டியது. படைத்து மொழி= தானே ஒன்றைக் கற்பனையாய்க்

கற்பித்துக் கூறுவது. வரைவு= மணம். கடாதல்=தூண்டுதல்.


"பனிவரைநீள் வேங்கைப் பயமலைநன் னாட!

இனிவரையாய் என்றெண்ணிச் சொல்வேன்--முனிவரையுள்

நின்றாள் வலியாக நீவர யாய்கண்டாள்

ஒன்றாள்காப்(பு) ஈயும் உடன்று.

(உடன்று=சினந்து).

பொருள்:

குளிர்ந்த மலைகளையும், உயர்ந்த வேங்கை மரங்களையும்

உடைய பயன்மிக்க மலைநாடனே!  இதுவரையில் நீவிர்

தலைவியைத் திருமணம் செய்துகொள்ளாமல் காலம் கடத்தி

விட்டீர். இனியேனும் திருமணம் புரிந்துகொள்ள வேண்டும்

என நினைத்து யான் ஒன்றைக் கூற விழைகிறேன். இந்த

மலையில் உமது கால் வலிமையையே துணையாகக் கொண்டு

நீவிர் வருவதை எம் தாய்(தலைவியின் தாயைத் தன் தாயாகக்

கருதும் உரிமையில் கூறியது) பார்த்தாள். எம்முடன் சினந்து

மாறுபட்டாள். தலைவியின் பாதுகாப்புக்காகவும், கண்காணிக்கவும்

காவலரை நியமித்துவிட்டாள். இனி, தலைவியைப் பார்ப்பது எளிதன்று.

எனவே, தலைவியை விரைவில் வரைவு(திருமணம்) மேற்கொண்டு

இருவரும் களிப்பீர்களாக!

புலவர்: கணிமேதாவியார். பாடல் எண்:27.


ஆதாரம்: பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் 3 ஆம் தொகுதி, வர்த்தமானன் பதிப்பக

வெளியீடு--உரையாசிரியர் பேராசிரியர் அ. மாணிக்கனார்.

Tuesday, 22 September 2026

நுடப அணி(நுணுக்க அணி).

 நுட்ப அணி. (நுணுக்க அணி).


தெரிபுவேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்

அரிதுணர் வினைத்திட்பம் நுட்பம் ஆகும்.

(தண்டி யலங்கார நூற்பா).

பிறர் கருத்தை யறிந்துகொண்டு, வெளிப்படையாகக் கூறாமல்,

குறிப்பினாலோ, செயலாலோ அரிதாக நோக்கி யுணருந் தன்மையை

யுடையது நுட்பம் என்னும் அணியாகும்.


குறிப்பினால் தெரிவித்தல்:

"காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிந்ததால்

பேதையர் ஆயம் பிரியாத---மாதர்

படர்இருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக் 

குடதிசையை நோக்கும் குறிப்பு".

காதலிக்கப்பட்ட தலைவனுடைய உயிரைக் காக்கும் தலைவி அவள்

தோழியர் கூட்டத்துடன் சேர்ந்து அளவளாவிக்கொண்டிருக்கும் பொழுது

தலைவியைச் சந்திக்க வந்த தலைவனிடம் வெளிப்படையாக ஏதும்

சொல்லாமல், உலகுக்குத் துன்பம் நல்கும் இருளை யகற்றும் கதிரவனைப்

பார்த்துப் பிற்பாடு மேற்குத்திசையைப் பார்த்துத் தலைவனுக்குத் தன்

செய்கையையும் அதனுள் பொதிந்துள்ள குறிப்பையும் உணருமாறு சைகை

காட்டுகின்றாள். தலைவி வெளிப்படுத்திய குறிப்பு என்னவென்றால், தற்பொழுது

தோழியர்கள் சூழ்ந்துள்ளதால் இருவரும் சந்திக்கும் வாய்ப்பில்லை யென்றும்

கதிரவன் மேற்கே மறைந்து ஓரளவு இருள் சூழ்ந்த பிற்பாடு சந்திப்பது சாலச்

சிறந்தது என்றும் மிக நுட்பமாகத் தெரிவிக்கின்றாள்.

(காதலன் மெல்லுயிர்க்குக் காவல் புரிதல் = காதல் மிகுதியால் தலைவியைப்

பார்க்கும் அவா மிக அதிகமாகும். பார்க்காவிடில், ஏக்கத்தால் உயிரிழப்பு கூட நேரும்).

எனவே, தலைவன் மெல்லுயிர்க்குக் காவலாயிருக்கின்றாள்.

(சீக்கும்=துடைக்கும், அகற்றும்).


செயலால் தெரிவித்தல்:

"பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்

கூடல் அவாவால் குறிப்புணர்த்தும்---ஆடவற்கு

மென்தீந் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்

இன்(று)ஈங் குறிஞ்சி யிசை".

தலைவி இசையரங்கினில் பாடும் தொழிலைப் பயின்று

வருகின்றாள். அவ்வரங்கினுக்குத் தலைவன் வந்துவிடு

கின்றான். தலைவிக்கோ கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

பலர் சூழ்ந்திருக்கும் அரங்கத்தில் தலைவனொடு பேச இயலாது.

என்ன செய்யலாம்? என்று சிந்திக்கின்றாள். ஏனென்றால் அவளுக்கும்

தலைவனொடு குலவுதற்கு அவாவுளது. உடனே குறிஞ்சிப் பண்ணில்

(இராகத்தில்) பாடுகின்றாள். குறிஞ்சித் திணைக்குச் சிறுபொழுது இடையாமமாகும்.

(நடு இராத்திரி: இரவில் நடுப்பத்து நாழிகை). தலைவன் தலைவி

ஏதோ குறிப்பை உணர்த்துகின்றாள் என்று சிந்தித்தான். ஆகா! அவனுக்கு விளங்கி

விட்டது. தன்னை இரவில் நடுப்பத்து நாழிகையளவில் வருமாறு யாழ்மீட்டும்

செய்கையால் குறிஞ்சிப்பண்ணை மீட்டி உணர்த்துகின்றாள் எனப் புரிந்து உவகை

யடைந்தான்.

(தொடை=நரம்பு. குறிப்பு= கருத்து. தைவந்தாள்= நரம்புகளைக் கைகளால் தடவி

வாசித்தாள்).


ஆதாரம்:

"தண்டியலங்கரம்"--மூலமும் பழையவுரையும்---வை. மு. சடகோப ராமாநுஜாசார்ய

சுவாமிகள் எழுதிய குறிப்புரையுடன்.

Sunday, 6 September 2026

அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்.

 அன்றொருநாள் அவனுடைய பேரைக் கேட்டேன்,

அடுத்தநாள் அவனிருக்கும் ஊரைக் கேட்டேன்.


இவ்வரிகள் 1962ஆம் ஆண்டில் வெளிவந்த 'குடும்பத் தலைவன்'

என்னும் திரைப்படத்தில் கவிஞர் கண்ணதாசனார் எழுதிப் பின்னணிப்

பாடகியார் P. சுசீலா பாடிய திரைப்படப் பாடலில் வருவன. அப்பொழுது

என் வயது பத்து. எனக்கு இந்தப்பாடல் விளங்கவில்லை. ஏன் கதையின்

நாயகி இந்த விவரங்களைக் கேட்கின்றார்? என்று குழம்பினேன். கால

ஓட்டத்தில் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழ் இலக்கியம் படிக்கின்ற

பொழுது அகம், புறம் என்னும் இருபெரும் பிரிவுகள் உள்ளன என்றும்,

அதில் அகம் ஆண், பெண்உறவுகளை விவரிப்பதாகவும், புறம் அறம், வீரம்,

கொடை முதலியவற்றை விவரிப்பதாகவும் அறிந்தேன்.


தொல்காப்பியர் காலத்திலேயே அகப்பொருளைப் பற்றிய இலக்கணம்,

வழிமுறை முதலியன நடைமுறையில் வழக்கத்துக்கு வந்து விட்டன. பிற்பாடு

இறையனர் அகப்பொருள், நம்பி அகப்பொருள் முதலான நூல்கள் வெளிவந்து

அகப்பொருளை விரிவாக அலசி ஆராய்ந்து வழிமுறைகளைக் கூறுகின்றன.

அன்றுதொட்டு இன்றுவரை நம் மரபு வழிமுறைகளில் பெரிய மாறுதல் ஏதுமில்லை.

காதல் தொடங்கும் பொழுது ஆணும், பெண்ணும் சந்தித்துக் கொள்கின்றனர்.

இது காட்சியாகும். பெண் அழகால் ஆண் கவரப்பட்டால்  இவள் "மானிடப் பெண்ணா?

இல்லை தேவருலகப் பெண்ணா? (இதே போல, பெண்ணும் ஆணைப்பற்றி எண்ணலாம்).

இது ஐயமாகும். பின்னால், பெண்ணின் கால் தரையில் பதிந்துள்ளமையாலும், கண்

இமைத்தலாலும், தலையில் சூட்டிய மலர் வாடுவதாலும், பூசிய சந்தனம் உலர்ந்து

போவதாலும்(தெய்வப் பெண்ணுக்கு இவையெல்லாம் நிகழா) ஐயம் நீங்கித் தெளிவு

பிறக்கிறது. அதன்விளைவாக ஒருவர்மேல் ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.

இதனைத் தொடரந்து நயப்பு உருவாகிறது  அதாவது ஆண் பெண்ணின் அழகைப் புகழத்

தொடங்குகிறான். இச் செயலை இலக்கியம் நயப்பு எனக் குறிப்பிடுகிறது.

மேற்கொண்டு காதல் எத்திசை நோக்கிச் செல்லும்? அவர்களுக்குள் ஏதாவது

உரையாடல் நிகழவேண்டும்  அவ்வுரையாடல்தான் பதியும் பெயரும் வினவுதல்.


காதலன் காதலியிடம் கேட்கின்றான்:

"அறையார் கழல்மன்னர் ஆற்றுக் குடியமர் சாய்ந்தழியக்

கறையார் அயில்கொண்ட கோன்கொல்லிக் கார்ப்புனம் காக்கின்றவான்

பிறையார் சிறுநுதல் பெண்ணார் அமிழ்தன்ன பெய்வளையீர்!

மறையா துரைமின், எமக்குநும் பேரொடு வாழ்பதியே.


பொருள்:

பிறைபோன்ற நெற்றியையுடைய பெண்ணே, அமுதம் போன்ற, வளையணிந்த

காதலியே! மறைக்காமல் உம் பெயரையும் நீர் வாழ்கின்ற ஊரையும் உரைப்பீர்.

உரையாடலை நீட்டிப்பதற்காக வேறு பிறவற்றையும் வினவுதலும் உண்டு. யானை

யொன்றை வேட்டையாடத் துரத்திவந்தேன். அதனைக் கண்டீரோ? என வினவுதலும்

உண்டு.

"வருமால் புயல்வண்கை மான்தேர் வரோதயன் மண்ணளந்த

திருமால் அவன்வஞ்சி அன்னவம் சீறடிச் சேயிழையீர்!

கருமால் வரையன்ன தோற்றக் கருங்கைவெண் கோட்டசெங்கண்

பொருமால் களிறொன்று போந்ததுண் டோநும் புனத்தருகே?"

சிலசமயம், பாதை தெரியவில்லை. செல்லும் வழியைத் தெரிவிப்பீர்

என்று உரையாடல் தொடரும். 


முதற் சந்திப்பிலேயே ஆணைப் பொறுத்தவரையிற் பேசிவிடுவார்.

ஆனால் பெண்ணிடமிருந்து விடை கிடைக்குமா? எல்லாப் பெண்களும்

முதற் சந்திப்பிலேயே எல்லாவற்றையும் சொல்லிவிடுவதில்லை.

அப்பொழுது ஆண் "என் வினாவுக்கு விடையிறுத்தால் உம் வாய்ச்சுடர்மணி

சிந்திவிடுமோ? என்று ஆண் அங்கலாய்ப்பார்.

"தன்னும் புரையும் மழையுரும் ஏறுதன் தானைமுன்னால்

துன்னும் கொடிமிசை ஏந்திய கோன்கொல்லிச் சூழ்பொழில்வாய்

மின்னும் கதிரொளி வாள்முகத் தீர்!என் வினாவுரைத்தால்

மன்னும் சுடர்மணி போந்துரு மோநுங்கள் வாயகத்தே?"


இன்னும் எவ்வளவோ செய்திகள் உள்ளன. அகப்பொருள் அளப்பரிய

கடல்போன்றது. எல்லாவற்றையும் இச்சிறு கட்டுரையில் அடக்க இயலாது.

ஆதாரம்:

இறையனார் அகப்பொருள் நூல், பவானந்தர் கழக வெளியீடு.

Friday, 21 August 2026

மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்.

 மாமழை போற்றுதும், மாமழை போற்றுதும்.


பருவ மழை மிக மிக இன்றியமையாதது. மாதம் மூன்று

முறை மழை பொழிந்தால் அந்ந நாடு செழிப்படையும்

என்பதில்யாதொரு ஐயமும் இல்லை. "மாதம் மும்மாரி மழை

பொழிகிறதா?" என்று வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த இருவர்

சந்தித்துக்கொள்ளும் வேளையில் விசாரித்துத்தெரிந்துகொள்வது

நமது நாட்டில் மரபு. அந்த அளவுக்குப் பருவமழை நமக்குத் தேவையான

வாழ்க்கை வசதி. பருவமழை காலத்தில் பெய்யாவிட்டாலோ, குறைவாகப்

பெய்தாலோ, இயல்பான அளவுக்கு மேல் பெய்தாலோ நமக்கு இடையூறாகும்.

மழையை நம்பி வேளாண்மை யுள்ளது. மக்களின் குடிநீர்த் தேவைக்கும் மழை

இன்றியமையாதது.


பாரத நாட்டைப் பொருத்த வரையில் இரண்டு பருவக்காற்று மழை நடைமுறையில்

உள்ளன. தென்மேற்குப் பருவ மழை: இது பெரும்பாலும் தமிழ்நாட்டைத் தவிர்த்து

ஏனைய பாரதப் பகுதிகளில் பெய்கிறது. ஜூன் முதல்செப்டம்பர் முடிய நீடிக்கும்.

வடகிழக்குப் பருவமழை தமிழ்நாட்டில் மட்டும் கொட்டித் தீர்க்கும். அக்டோபரில் தொடங்கி

டிசம்பர் முடிய மழையிருக்கும். தென்மேற்குப் பருவமழை சரிவரப் பெய்யாவிட்டால்

காவிரியில் தண்ணீர் வராது. குறுவை, சம்பா, தாளடி முதலிய வேளாண்மைப் பயிர்களைப்

பயிரிட முடியாது. குடிப்பதற்கும் நீரில்லாக் கொடுமை நிலவும். வடகிழக்குப் பருவமழை

சரியாகப் பெய்யாவிட்டால் தமிழ்நாட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்துக் குறைந்துவிடும்.

மேட்டூர் அணை நிரம்புவதற்கு வழியேற்படாது.


தமிழ்நாடும் கருநாடகமும் காவேரி ஆற்றுநீரை மிகுதியாகச் சார்ந்துள்ளன. கருநாடகத்து

மக்களுக்கு ஓர் தவறான எண்ணம் அந்நாட்டு அரசியல்வாதிகளால் கற்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது காவேரி கருநாடகத்தில் உற்பத்தியாவதால் காவேரி முழுவதுமாகத் தமக்கே

சொந்தம் என்றும், வேறு எந்த மாநிலத்துக்கும் இதில் பங்கோ, உரிமையோ இல்லை

என்றும் நம்பவைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாகப் பலவிதமான சிக்கல்களும்

போராட்டங்களும் உருவாதல் கண்கூடு.


அனைத்துலகச் சட்ட திட்டப்படி, மலையோ, ஆறோ இரு வேறு பகுதிவழியாகச் செல்லுமே

யானால் இருவருக்கும் அது சொந்தமில்லை. ஆனால் அதன் பயனை இரு பகுதியினரும்

அனுபவித்துக் கொள்ளலாம். நைல் நதி பதினொரு நாடுகள் வழியாகப் பாய்ந்து செல்கிறது.

பதினொரு நாடுகளும் சிக்கலின்றிப் பகிர்ந்துகொள்கின்றனர். ஐரோப்பாவில் டான்யூப்

நதி பத்து நாடுகள் வழியாகப் பாய்கிறது. பத்து நாடுகளும் பாங்காகப் பகிர்ந்துகொள்கின்

றன. ஏன் பாகிஸ்தான் சிந்துநதியை நம்மோடு சிக்கலின்றிப் பகிர்ந்துகொள்கிறது. பங்களா

தேஷ் பத்மா நதியை எந்த வித இடையூறும் இல்லாமல் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஆனால், ஒரே நாட்டிலுள்ள கருநாடகமும் தமிழ்நாடும் பகிர்ந்து கொள்வதில் ஏகப்பட்ட

சிக்கல்கள் உருவாகின்றன. ஏனெனில், காவேரி தமக்கே சொந்தம், அதைப் பகிர்வதற்குத்

தமிழகத்திற்கு உரிமையில்லை என்னும் எண்ணம் கருநாடக அரசியல்வாதிகளால் 

பரப்புரை செய்யப்பட்டுள்ளது.


ஏற்கெனவே, கருநாடகம் கிருட்டிணராஜ சாகர்,  கபினியணை, ஹேமாவதி, ஹாரங்கி

போன்ற அணைகளைக் கட்டியுள்ளது. அவற்றை மீறித் தமிழ்நாட்டுக்குத்

தண்ணீர் விடுவிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் பெருமழைக் காலத்தில் தமிழ்

நட்டுக்குத் தண்ணீர் சென்றுவிடக் கூடாதென்பதற்காக மேகேதாட்டு என்ற இடத்தில்

67 டி. எம். சி. நீரைச் சேமிக்கத் திட்டமிட்டு ஓரணை கட்ட எண்ணுகின்றனர். இது

நிறைவேறிவிட்டால் வெள்ளக் காலத்தில் கூடத் தமிழகத்திற்குத் தண்ணீர் வர

வாய்ப்பேயில்லை. மிகத் துணிச்சலாக அனைத்துலக ஆற்று ஒப்பந்தச் சட்டத்தைக்

கருநாடக அரசியல்வாதிகள் மீறத் துடிக்கின்றனர். மையப் பேரரசும், சுப்ரீம் கோர்ட்டும்

என்ன செய்யப் போகின்றார்கள்?


             (பாடல்கள்:அறுசீர் ஆசிரிய விருத்தம். யாப்பு: 4 காய், மா, தேமா)


"தமிழகத்தின் களஞ்சியமாய்த் தஞ்சைநிலப் 

      பகுதியெலாம்  தழைத்த காலம்.

அமிழ்தமெனும் பொற்காலம், அக்காலம்

       இனிவருமோ?  அம்மா! பொன்னி!

இமிழ்திரைவங் கக்கடலில் கலக்கின்ற

        கழிமுகத்துக்(கு)  ஏற்றம் சேர்த்தாய்.

துமிதமது காணாமல் கழனியெலாம்

         பாலையெனத் தோன்றும் அன்னாய்!

(துமிதம்=மழைத்துளி. கழனி= வயல்)


பருவமழை பொய்த்துநமை வாட்டுவது

          போதாதோ?  பங்கு கேட்கும்

கருநடர்தம் அணைகளிலே நீர்தேக்கிப் 

           பயன்பெறுவர், கபட மாக.

உரிமையுடைத் தமிழகத்தை முற்றாக

            வஞ்சித்தல்  ஊழல் ஆகும்.

தருணமிதில் அவர்செய்யும் அறமற்ற

             செயலினைநாம்  தடுத்தல் வேண்டும்.

(கருநாடர், கருநடர் எனக் குறுகியது இடைக் குறை)


திருக்குவதில் கைதேர்ந்த கருநாட்டின்

               அரசியலார்  திறமை யாக

கிருட்டிணராஜ் சாகரின்னும் கபினியணை

                ஹேமவதி,  ஹரங்கி போன்ற

உருப்படியாம் அணைகட்டித் தமிழ்நாட்டுக்(கு)

                 ஒருசொட்டு  நீர்வி டாமல்

செருக்குடனே மேகேதாட்(டு) எனும்அணையைக் 

                   கட்டுதற்கும்  சிந்திக் கின்றார்.


(வேறு யாப்பு: அரையடிக்கு மா, மா, காய்)


உழுது பிழைக்கும் ஏழையருக்(கு)

        உதவும் எண்ணம்  சிறிதுமிலாப்

பழுது பட்ட மனங்கொண்ட

         கருநாட் டினைஆள் அரசியலார்

தொழுது கெஞ்சிக் கோரிடினும்

         நீரை விடுவித் திடமாட்டார்.

எழுதும் உச்ச நீதிமன்றத்

          தீர்ப்பை மீற வழிகாண்பர்.


உலகம் முழுதும் பலநதிகள்

           ஓடிப் பாய்ந்து வளஞ்செய்யும்.

திலகம் போன்ற நைல்நதியும்

            டான்யூப் நதியும் பதின்நாட்டுள்

உலவி அவற்றைக் கடந்துசெல்லும்.

            பாகிஸ் தானும் வங்கமுமே

கலகம் இன்றி நீர்பகிரும்.

            கருநா டகத்தார் நிலையென்ன?

(பதின் நாட்டுள்=பத்து நாடுகள்)


தண்ணீர் இயற்கைத் தாயளித்த

             தகைசால்  அரிய பொருளாகும்.

மண்ணில் உதித்த அனைவருக்கும்

              வாய்த்த உரிமைப் பொருளாகும்.

திண்ணம் எவர்க்கும் சொந்தமில்லை.

               செகத்தார் எலார்க்கும் பொதுவுடைமை.

கண்ணின் மணிபோல் பயன்படுத்திக்

                கருத்தாய்ப் பேணிக் காப்போமே.


ஞாலம் முழுதும் ஆட்சிசெயும்

                நாடு களிலே நீர்ப்பகிர்வு

சீலம் மிகுந்த நெறிமுறையில்

                சிறப்பாய் ஒழுங்காய் நிறைவேறும்.

காலக் கொடுமை! காவேரி

                தமக்கே முற்றாய் உடையதென

ஓலம் எழுப்பும் கருநாடர்

                துளிநீர் கூட விடமாட்டார்.


உச்ச நீதி மன்றத்தார்,

                ஒன்றி யத்தை ஆட்சிசெய்வோர்

இச்சிக் கலையே தீர்ப்பதற்கு

                 ஏரார் டான்யூப், நைல், சிந்து

மெச்சும் பத்மா, போல்நதிகள்

                 மேற்கொள் சிறந்த நெறிமுறையை

நச்சி விரும்பி மேற்கொண்டால்

                  நல்ல வெற்றி அடைவோமே!

Friday, 31 July 2026

ஒற்றுப் பெயர்த்தல்

 ஒற்றுப் பெயர்த்தல்-சித்திரகவியில் ஒருவகை.


ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒரு மொழியும் தொடர்

மொழியுமாய்ப் பொருள்படும் அவற்றை அப்பொருள் ஒழிய,

வேறுபொருள்பட வைப்பது. வேறுவகையில் சொல்வதானால்

"ஒன்றிநிற்கும் வேறு பொருளைப் பெயர்த்தெடுத்தல்" என்று

பொருள் கொள்ளலாம்.


சோழர்களின் பிற்காலத் தலைநகராக விளங்கிய கங்கைகொண்ட

சோழபுரத்திலுள்ள  தோற்றப்பொலிவுமிக்க மாபெரும் அரண்மனை

யாக வளங்கிய கங்காபுர மாளிகையை விவரிக்கும் ஒரு பாடலில்

ஒற்றுப் பெயர்த்தல் கையாளப் பட்டுள்ளது. பாடலை நோக்குவோம்:

"வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்து

மண்குளிரச் சாயல் வளர்க்குமாம்---தண்கவிகைக்

கொங்கார் அலங்கல் அநபாயன் கொய்பொழில்சூழ்

கங்கா புரமாளி கை".

பொருள்:

வளப்பத்தை யுடைய மேகங்கள் கீழாக, மேலோங்கி வானகத்தின்

கண் உண்டாகிய கற்பகப் பூக்களை உச்சிமீது உடையதாய்,

உலகெலாம் தன்னுருவச் சாயையாகிய நிழலைப் பெருக்கும்

குளிர்ச்சி பொருந்திய குடையினையும், மதுநிறைந்த மாலையையும்

உடைய அநபாயனது(இரண்டாம் குலோத்துங்க சோழனது)

கங்காபுரத்தின் மாளிகை(கங்கைகொண்ட சோழபுரத்தின்) மாளிகை

என்பது ஒருபொருள். ஒற்றுப் பெயர்த்தலைக் கையாண்டால் பொருள்

கீழ்க்கண்டவாறு மாறுபடும்:

கங்காபுரம்+ஆளி+கை=கங்காபுர மாளிகை.

அதாவது, ஒற்றுப் பெயர்த்தலுக்குப் பிறகு, பாடல்

மாளிகையை விவரிப்பதற்குப் பதிலாக, மாளிகையை

(மாநிலத்தையும்) ஆளுகின்ற அநபாயச் சோழனது

அதாவது, இரண்டாம் குலோத்துங்கச் சோழனது வள்ளல்

தன்மைமிக்க கை எனப் பொருள்படுகிறது. பாடலின்

வேறுபொருளாவது:

வளப்பத்தையுடைய மேகத்தைப் பழிக்கும் தன்மையை

யுடையதாய், வானகத்தில் உண்டாகிய கற்பகமரத்தோடு

பகைகொண்டு அதனைவிடவும் மக்களுக்கு அள்ளிக் கொடுத்து

உலகத்தில் வாழும் மக்களுடைய உள்ளமெல்லாம் குளிரும்

வணணம் காவல்புரிந்து மக்களைக் கண்போலக் காக்கும்

கங்கைகொண்ட சோழபுரத்தை(கங்காபுரத்தை) யாண்டுவரும்

குளிர்ந்த வெண்கொற்றக் குடையினையுடைய அநபாயச்

சோழனது கை எனப் பொருள் மாறிவிட்டது.

கங்காபுர மாளிகை என்பது ஒற்றுப் பெயர்த்தலுக்குப் பின்,

கங்காபுரம் ஆளி கை என மாறிப் பொருள் தருகிறது.


இனி, சொல்லணியியலில் மடக்கணிப் பாடலொன்றைப்

பார்ப்போம்:

மடக்கு யமகம் என்றும் அழைக்கப்படும். வந்த சொல்லே

திரும்பவந்து வேறு பொருள் தருவது மடக்கு எனப்படும்.

இதில் பலவகைகள் உள்ளன. முதல்மடக்கு, இடைமடக்கு, 

கடைமடக்கு, முதலடிமடக்கு, இரண்டாமடி மடக்கு, மூன்றாமடி

மடக்கு, நான்காமடி மடக்கு, முற்று மடக்கு போன்றவை அவை.

கீழ்க்கண்ட பாடலில் இரண்டாமடியில் மடக்கு பயின்று

வந்துள்ளது:

"கனிவாய் இவள்புலம்பக் காவலநீ நீங்கில்

இனியார் இனியார் எமக்குப்---பனிநாள்

இருவராத் தாங்கும் உயிரன்றி எங்குண்(டு)

ஒருவராத் தாங்கும் உயிர்?"

பொருள்:

கனிபோன்ற மொழியினையுடைய இவள் புலம்பும்படி

அரசனே! நீ பிரிந்த காலத்து எங்களுக்கு இனியராய்

(இனியவராய்) இனிமையான சொற்களைச் சொல்லிக்

காக்கும் தலைவர் இனியார்? இனியார், இனியார்? 

பனிக்காலத்தில் பிரியாதிருந்த இருவரும்  இப்போழுது

பிரிந்து தனியராய் வாழ்ந்தால் உயிர் தாங்குவது எவ்வாறு?

இப் பாடலில் இனியார்(இனிமையுடையவர்) இனியார்?

(இனி யாவர் உளர்?) என்று மடங்கி வந்து சுவையூட்டுகிறது.


ஆதாரம்:

தண்டி யலங்காரம் நூல்- வெளியிட்டவர்=தென்னிந்திய

சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

Tuesday, 21 July 2026

வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.

 வருந்தேன் தோழி. வாய்க்க அவர் செலவே.


பொருள் ஈட்டுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து

வெளி தேசங்களுக்குச் செல்ல எண்ணுகின்றான். போகும் இடம்

கரடு முரடானது. நீண்ட நீரில்லாத பாலை நிலத்து வழியே செல்லல்

வேண்டும். மரங்களின் பின்னே பாலை நிலத்தில் வாழ்ந்துவரும்

வழிப்பறி செய்யும் மறவர்கள் தனியாக ஆள்துணையின்றி எவரேனும்

வருகிறர்களா? என்று உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பர். தனியாக 

வருபவரை அம்பெய்து கொன்றுவிட்டு அவரிடமுள்ள பொருள்களை

வழிப்பறி செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டுத் தக்க தருணத்துக்காகக்

காத்துக்கொண்டிருப்பர். அதனால்தான் அவ்வழியே செல்லநேரும்

வணிகக் குழுக்கள்(சாத்து என்று அழைக்கப்படுவர்) கூட்டமாக வாள்,

கேடகம்(கேடயம்), வில், அம்பு முதலான பாதுகாப்புக்கான ஆயதங்களோடு

பயணம் செய்து கடப்பது வழக்கம். ஏனெனில் பாலை நிலத்து மக்கள்

ஆறலை கள்வர்கள்(வழிப்பறிக் கள்வர்கள்). ஈவிரக்கமற்ற கொடிய கள்வர்கள்.

உண்ண உணவும், பருகுவதற்குரிய நீரும், படுத்துறங்கத் தோதான இடமும்

அப்பாலை நிலத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. தலைவனைப் போலத் தனியாளாகப்

பொருள்தேடி வருபவர்கள் வணிகக் குழுக்களைக் கண்டு அவர்களோடு

இணைந்து பயணம் செய்தால் பாதுகாப்பான பயணமாக அமையும். உணவும் நீரும்

அவர்களின் கருணையால் கிடைத்துவிடும். வணிகக் குழுக்களைச் சந்திக்க வாய்ப்புக்

கிட்டவில்லையென்றால் தனியாளாக வருபவர்கள் மிகுந்த தொல்லைக்கு உள்ளாக

நேரிடும். உண்ணுவதற்குக் கட்டுச்சோறு, பருகுவதற்கு நீர், பாதுகாப்புக்கு உடைவாள்

முதலானவற்றையும் சுமந்துகொண்டு மிகவும் கவனமாகவும் முன்னெச்சரிக்கையோடும்

சுற்றுமுற்றும் கூர்ந்து நோக்கிக்கொண்டும் பயணித்தல் இன்றியமையாதது. ஏனெனில்

அறமற்ற, ஈவிரக்கமற்ற ஆறலை கள்வர்களிடம் அகப்பட்டுக் கொண்டால்  மரணம் உறுதி.

எனவேதான், பெண்கள் இவ்வழியே வருவதேயில்லை.


இங்கே குறிப்பிடப்படும் தலைவனும் தன் உயிரையொத்த தலைவியை உடன்அழைத்து

வராமல் தான் மட்டுமே வந்துள்ளான். உண்மையில் நடந்தது என்னவென்றால் தலைவி

தானும் உடன்வருவதாகப் பிடிவாதம் செய்தாள். அழுது அடம் பிடித்தாள். ஆனால் அவள்

தோழி பாலைநிலத்தின் தன்மையையும்  வழிநெடுகச் சந்திக்க வேண்டிய இடர்களையும்

விரிவாக எடுத்தரைத்தாள். தலைவியிடம் "தோழி! நீ மிக மென்மையானவள். உன் மேனி

தளிர் போன்ற வண்ணம் கொண்டுள்ளது. பாலைவழியே பயணம் மேற்கொணடால் உன்

உடல் வாடிவிடும். மேலும் உனக்குரிய உணவு, நீர், தங்குமிடம் போன்ற இன்றியமையாத

தேவைகளுக்காகத் தலைவன் பெருமுயற்சி மேற்கொள்ளல்வேண்டும். எனவே, நீ 

அவனுடன் பயணம் மேற்கொள்ளாதே. அவன் பொருள் ஈட்டும் உயர்ந்த நோக்கத்தோடு

இப் பயணத்தைத் தொடங்கியுள்ளான். எனக்கு இதில் யாதொரு வருத்தமும் இல்லை.

நீயும் இதுபோலவே மனத்துயரை விலக்கிவிட்டுத் தலைவன் மேற்கொண்ட பெருளீட்டும்

முயற்சி முழு வெற்றிபெற வாழ்த்துவாயாக" என்றுரைத்தாள்.


தொடர்புடைய பாடல்:

நூல்= நற்றிணை. பாடல் எண்: 148. திணை: பாலை. புலவர்:கள்ளம்பாளனார்.

"வண்ணம் நோக்கியும் மென்மொழி கூறியும்

நீஅவண் வருதல் ஆற்றாய் எனத்தாம்

தொடங்கி ஆள்வினைப் பிரிந்தோர் இன்றே

நெடுங்கயம் புரிந்த நீரில் நீளிடைச்

செங்கால் மாஅத்து அம்புடைப் பொருந்தி

வாங்குசிலை மறவர் வீங்குநிலை அஞ்சாது

கல்அளைச் செறிந்த வள்உகிர்ப் பிணவின்

இன்புனிற்று இடும்பை தீரச் சினம்சிறந்து

செங்கண் இரும்புலிக் கோள்வல் ஏற்றை

உயர்மருப்பு ஒருத்தல் புகர்முகம் பாயும்

அருஞ்சுரம் இறப்ப என்ப

வருந்தேன் தோழி, வாய்க்கஅவர் செலவே.


அருஞ்சொற் பொருள்:

கயம்=ஆழம். ஆள்வினை=முயற்சி. அளை=குகை.

உகிர்=நகம். பிணவு=பெண். புனிறு,= ஈன்றணிமை.

ஏற்றை= ஆண் விலங்கு. மருப்பு= தந்தம். ஒருத்தல்=ஆண்.

புகர்=புள்ளி, கறை. இறப்ப=கடந்த.


இப்பாடலில் ஒரு காட்சி விவரிக்கப்பட்டுள்ளது.

அதாவது, ஒரு கற்குகையில் பெண்புலி ஒன்று அண்மையில்

குட்டிகளை ஈன்று பசிக் கொடுமையால் தவிக்கின்றது. பெண்

புலியின் பசிப்பிணி தீர்க்கவேண்டும் என்று எண்ணிய ஆண்புலி

உயர்ந்த கோடுகளை(தந்தங்கள்) யுடைய ஆண்யானையின்

புள்ளிகள் பொருந்திய முகத்தில் பாய்ந்து அதனைக் கொன்று

பெண்புலிக்குப் படைத்தது. இந்த உவமைமூலமாகத் தலைவனும்

தலைவியும் இல்லறம் நடத்தத் தேவைப்படும் பொருளை ஈட்டுவதற்

காக அச்சம் கொள்ளத்தக்க பாலைவழியே பிற தேசங்களுக்குச்

செல்கின்றான் என்று குறிப்பாகப் புலவர் உணர்த்துகிறார்.


ஆதாரம்:

சங்க இலக்கியம்-- நற்றிணை மூலமும் உரையும்- வர்த்தமானன்

பதிப்பகம். உரையாசிரியர்: முனைவர் கதிர் மகாதேவன்.

Sunday, 5 July 2026

புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.

 புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே.


தலைவன் தான் ஒருத்தியைக் கண்டு அவள் நெற்றியழகால்

புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானை

போலக் கட்டுண்ட நிலையைத் தன் பாங்கனிடம் உரைத்தது.

நூல்: குறுந்தொகை--பாடல் எண்: 129-- திணை:குறிஞ்சி--

இயற்றியவர்:கோப்பெருஞ்சோழன்.


தலைவன் கூற்று:

எலுவ(தோழ!) இளையோர்களுக்கு ஆதரவான நண்பனே! 

அறிவுடையோர்க்கு(புலவர்க்கு) உற்றவனாக விளங்கும்

தோழனே! நான் என் மனத்தை வருடிக்கொண்டிருக்கும்

ஒரு செய்தியை நவில்கின்றேன். நீ கவனித்துக் கேட்பாயாக.

அன்றொருநாளில் மனத்துக்கு உகந்த ஒரு காட்சியைக் கண்டேன்.

பரந்த கடலின் நடுவே வளர்பிறையில் எட்டாம்நாள் பக்கத்தில்

பசுமையான வெள்ளிய நிலவொளியை வீசும் பிறைமதி தோன்றிய

தைப் போலத் தலைவியின் கூந்தலுக்கு அணுக்கத்தில் விளங்கிய

அவளது சிறிய நெற்றி(நுதல்) என் கண்களில் பட்டது. அதனால் நான்

புதிதாகப் பிடிக்கப்பட்டுத் தளையால் பிணிக்கப்பட்ட காட்டுயானையைப்

போலக் கட்டுண்டேன். உறுப்பு இலக்கணப்படி(அங்க சாத்திரப்படி) பெண்

களுக்கு நெற்றியின் அகலமும் வளைவும் ஒளிவீசும் எட்டாம்நாள் பிறை

போல இருப்பது சாலச் சிறந்ததாம்.


இனி பாடலை நோக்குவோம்:(நேரிசை ஆசிரியப்பா)

"எலுவ! சிறாஅர் ஏமுறு  நண்ப!

புலவர் தோழ! கேளாய் அத்தை.

மாக்கடல் நடுவண் எண்ணாள் பக்கத்துப்

பசுவெண் திங்கள் தோன்றி யாங்குக்

கதுப்(பு)அயல் விளங்கும் சிறுநுதல்

புதுக்கோள் யானையின் பிணித்தற்றால் எம்மே!

அருஞ்சொற் பொருள்:

எலுவ=தோழ. ஏம், ஏமம்=பாதுகாப்பு, ஆதரவு.

அத்தை=பொருளற்ற ஒலிக்குறிப்பு-அசை.

எண்ணாள் பக்கம்=எட்டாம் நாள்(அட்டமி)

பக்கம்=பட்சம்.


பார்வை:

சங்க இலக்கியம்-குறுந்தொகை மூலமும் உரையும்

வர்த்தமானன் பதிப்பக வெளியீடு. உரை:முனைவர் 

தமிழண்ணல்.