Friday 31 August 2018

மூவேந்தர் மீது பாடப்பட்ட முத்தொள்ளாயிரம்

மூவேந்தர் மீது பாடப்பட்ட முத்தொள்ளாயிரம்

முத்தொள்ளாயிரம் நூல் யாரால், எந்தக் காலத்தில்  பாடப்
பட்டது என்பது தெரியவில்லை. மூவேந்தர்களையும் சம
மாகப் போற்றிய புலவரால் பாடப்பட்டது என்னும் செய்தி
நூலைப் படிக்கும் பொழுது தெரிகிறது. எந்தக் காலத்தில்
பாடப்பட்டது என்னும்  செய்தியும் தெளிவாகத் தெரிய
வில்லை.  சிலர் சங்க காலத்தில் பாடப்பட்டதாகவும், வேறு
சிலர் சங்கம் மருவிய காலத்தில் பாடப்பட்டதாகவும் கருது
கின்றனர். சங்க காலத்தில் பாடப்பட்டதாகக் கருதுவதில்
எந்தத் தவறும் இல்லை.  ஏனெனில் சங்க காலத்தில்
வழக்கத்தில் நிலவிய வெண்பா யாப்பால் நூல் இயற்றப்
பட்டுள்ளது. சங்கம் மருவிய காலம் என்றால் விருத்தப்பா
என்னும் பாவினம் பயன்படுத்தப் பட்டிருக்கலாம். சங்கம்
மருவிய காலத்தைச் சேர்ந்த சிலப்பதிகாரத்தில்  கானல்
வரி முதலான பாடல்கள் விருத்தப்பா என்னும் பாவினத்
தைச் சேர்ந்தவை. அதனால் சங்க காலத்தைச் சேர்ந்த
நூல் என்று கொள்வதில் தவறில்லை.  அகத்தைப் பற்றிய
நூலா, புறத்தைப் பற்றிய நூலா என்று வினவினால் அகம்,
புறம் இரண்டும் கலந்து பாடப்பட்ட நூல் எனக் கூறலாம்.

ஒவ்வொரு வேந்தர் மீதும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம்
மொத்தம் 2700(900 ×3) பாடல்கள் இயற்றப்பட்டதாக
அறிகிறோம். ஆனால் நம் கைக்குக் கிடைத்தவை  108
பாடல்கள் மட்டுமே. சேரவேந்தர் மீது 22 பாடல்களும், சோழ
வேந்தர் மீது 29 பாடல்களும் மற்றும் பாண்டிய வேந்தர் மீது
57 பாடல்களும் நம் கைக்குக் கிடைத்துள்ளன.  இதுவும்,
நேரடியாக நமக்குக் கிடைக்கவில்லை. யாரோ ஒரு
புண்ணிய ஆத்மா புறப்பொருளைப் பற்றிய நல்ல
பாடல்களைத் தொகுக்கும் பொழுது இந்த நூலில் இருந்து
108 பாடல்களைப் "புறத் திரட்டு" என்னும் பெயரிலுள்ள
நூலில் இணைத்திருக்கிறார். இதனை நாம் ஆகூழ்
(அதிர்ஷ்டம்) என்பதா? போகூழ்(துரதிர்ஷ்டம்) என்பதா?
சேர்க்கப்பட்ட 108 பாடல்களையும் முத்துக்கள் என்றே
சொல்லலாம்.  இனி இந்த 108 பாடல்களில் சிலவற்றை
நோக்குவோம்.

அந்தக் காலத்தில்  களவியல், கற்பியல் என்னும் இரண்டு
பிரிவுகள் அகவாழ்வில் பின்பற்றப்பட்டன. முன் பின்
பழகியிராத ஆண் ஒருவனும் பெண் ஒருத்தியும் தற்
செயலாகச் சந்திக்கும் போது ஒருவரை ஒருவர் பார்த்து
அதனால் ஏற்படும் ஈர்ப்பால் காதல் அரும்பிப் பின்னர்
இருவரும்  பிறர் அறியாமல் பழகி வாழ்தல் களவியல்
வாழ்வு எனப்படும். பின்னர் இச்செய்தி ஊரிலுள்ள
பிறருக்குத் தெரிந்து அவர்கள் மூலமாகத் தாய்மாருக்
கும் தெரியவர அவர்கள் திருமணம் செய்வித்துக்
கற்பியலில் ஈடுபடுத்துவார்கள். குறிஞ்சி, முல்லை,
மருதம், நெய்தல் மற்றும் பாலை என்னும் ஐந்து நிலத்
திணைகளிலும் இந்த இயற்கைக் காமம்(களவியல்  மற்றும்
கற்பியல்) நடைபெறும். சில நேரங்களில் ஆணோ,
பெண்ணோ ஒருவர் மட்டுமே விரும்புவார். இது ஒருதலைக்
காதல்(கைக்கிளை) என அழைக்கப்படும். பொருந்தாத
காதலும் சில நேரங்களில் நிகழ்வதுண்டு. இது பெருந்
திணை என அழைக்கப் படும். ஆனால் இந்த வாழ்வு
முறைகளால் எந்தக் கேடும்ஏற்பட்டதில்லை. ஏனென்றால்
சிறந்த ஒழுக்கமும், நெறிமுறைகளும் பின்பற்றப்
பட்டன. எந்த விதமான ஒழுக்கச் சீர்கேடும் நிகழ்ந்த
தில்லை. இனி, பாடல்களை நோக்குவோம்:

சேரனைப் பற்றிய பாடல்கள:
"கடல்தானைக் கோதையைக் காண்கொடாள்; வீணில்
அடைத்தாள் தனிக்கதவம் அன்னை--அடைக்குமேல்
ஆயிழையாய்! என்னை அவன்மேல்  எடுத்துரைப்பார்
வாயும் அடைக்குமோ? தான்".
சேரவேந்தன் வீதியில் உலாவரும் பொழுது  பருவ
வயது மகள் பார்த்து ஒருதலைக் காதல் கொண்டால்
தொல்லை எனக் கருதி தாய் வாயிற் கதவை அடைத்து
விட்டு உள்ளே செல்ல, மகள் கதவைத் திறந்து எட்டிப்
பார்க்க, மீண்டும் தாய் வந்து கதவை அடைக்க, மகள்
மீண்டும் திறக்க, இப்படியாக அக்கதவின் அடிப்
பகுதி தேய்ந்து விட்டதாம். இதனால் தலைவி தன்
தோழியிடம்" கடல் போன்ற சேனையை உடைய
சேரவேந்தனைக் காணவொட்டாமல் அன்னை
கதவை அடைக்கின்றாளே! என்னையும் அவனை
யம் வைத்து அலர்(பழிச்சொல், வம்பு) பேசுபவர்
வாய்களை அடைக்க முடியுமா?" எனக் கேட்டாள்.

"ஆய்மணிப்   பைம்பூண்  அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவடைத்தேன்--நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேருமென் நெஞ்சு."
"சேரவேந்தனைக் காண்பதற்காகக்கதவைத்
திறந்தேன். பிறகு அதை அடைத்துவிட்டேன்.
பெரும் செல்வந்தர் வீட்டுக்கு உதவிகேட்டுச்
செல்லும் வறியவர் பிறகு நாணமுற்று உதவி
கேளாது திரும்புவது போல என் நெஞ்சமும்
போவதும் வருவதும் ஆகப் போராடியது."

"அரும்பவிழ் தார்க்கோதை அரசெறிந்த வெள்வேல்
பெரும்புலவும் செஞ்சாந்தும் நாறிச்--சுரும்பொடு
வண்டாடு  பக்கமும் உண்டு; குறுநரி
கொண்டாடு பக்கமும் உண்டு."
சேரவேந்தன் எறிந்த வெள்வேல் தசையை அறுத்
துக் கொல்லும். அதனால்  வேலின்  கொழுவில்புலால்
நாற்றமும் வேலின்பிடியில்  தடவப்பட்ட செஞ்சந்தனத்தின்
நறுமணமும் கலந்து நாறும். இது காரணமாக, ஒரு
புறம் வண்டினங்களும் மற்றொரு புறத்தில் நரி
களும் கொண்டாடும்.

"அயில்கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால்--பனிக்கடலுள்
பாய்ந்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சினவேல் கோதை களிறு".
கோட்டைச் சுவரின்வாயிலுக்குப் பெரிய மரக் கதவம்
பொருத்தியிருப்பார்கள். இதைத்தான் எயில்கதவம்
என்பார்கள்.  இந்தக் கதவுக்கு வெளிப்புறத்தில் ஈட்டி
கள் பொருத்தப்பட்ட இரும்புக் கதவம் அமைத்திருப்
பார்கள்.  இதை அயில்கதவம் என்பார்கள். சேரவேந்தனது
ஆண்யானை  அயில்கதவாகிய இரும்புக் கதவை முட்டி
மோதித் தகர்த்த பின்னர் எயில்கதவாகிய மரக்கதவைத்
தன் தந்தங்களால் கோத்து எடுத்து வீசியெறிய முயற்சி
செய்தது. ஆனால் தந்தங்களில் மாட்டிக் கொண்டதால்
கடலில் பாய்விரித்துக் கடந்து செல்லும் கப்பல் போலத்
தோன்றியது.

இனி சோழவேந்தனைப் பற்றிய பாடல்களை நோக்குவோம:
"திறந்திடுமின்  தீயவை பிற்காண்டும்;  மாதர்
இறந்துபடின் பெரிதாம் ஏதம்--உறந்தையர்கோன்
தண்ணார மார்பின்  தமிழர் பெருமானைக்
கண்ணாரக் காணக் கதவு."
பெண்களிடம் தாய் எவ்வளவோ சொல்லியும்
அவர்கள் தாய்சொல்லைக் கேட்கவில்லை.
மனத்தையும் உடலையும் கெடுத்துக் கொண்டார்
கள்.உடல் மெலியும் அளவுக்கு உணவை வெறுத்து
ஒதுக்கினர். பார்த்த செவிலித்தாய்" கதவை
அடைக்கவேண்டா; உலாவரும் சோழவேந்தனைக்
கண்ணாரக் காணக் கதவைத் திறந்திடுக. ஏனென்
றால் உடல் மெலிந்து மாதர் இறந்து விட்டால் துயர்
உண்டாகும்." என்று நவின்றாள்.

"கண்டன உண்கண்; கலந்தன நன்னெஞ்சம்;
தண்டப் படுவ  தடமென்தோள்--கண்டாய்
உலாஅ  மறுகில் உறையூர் வளவற்(கு)
எலாஅம் முறைகிடந்த ஆறு."
தலைவி கூறுகிறாள்:"  சோழவேந்தனைப்
பார்த்த குற்றம் கண்களைச் சேரும். அவன்
நெஞ்சோடு கலந்தது எனது நன்னெஞ்சம்.
இவ்வாறு கண்களும் நெஞ்சும் குற்றம் செய்
தன. ஆனால் தண்டனை தோள்களுக்குக்
கிடைத்துள்ளது. சோழவேந்தன் ஆட்சியில்
முறைமை இவ்வாறு உள்ளது."  தோள்கள்
மெலிந்தன; ஆதலால் அதனைத் தண்டனை
என்று கூறினாள்.

"சுடரிலைவேற் சோழன்தன் பாடலம் ஏறிப்
படர்தந்தான்; பைந்தொடியார் காண--தொடர்புடைய
நீல அலையிற் கயல்போல் பிறழுமே
சாலேக வாயில்தொறும் கண்".
சோழவேந்தன் தன் குதிரை மீதேறி வருகின்றான்.
கடலில் நீல அலைகளின் ஊடே மீன்கள் பிறழுவ
தைப் போல அவ்வீதியிலுள்ள வீடுகளின் பலகணி
வழியாகப் பெண்களின் கண்கள் தோன்றின.
(பாடலம்--குதிரை; சாலேகம்--பலகணி, சன்னல்).

இனி பாண்டிய வேந்தனைப் பற்றிய பாடல்களைப்
பார்ப்போம்:
"பார்படுப  செம்பொன்; பதிபடுப முத்தமிழ்நூல்;
நீர்படுப  வெண்சங்கும்  நித்திலமும்--சாரல்
மலைபடுப யானை; வயமாறன் கூர்வேல்
தலைபடுப தார்வேந்தர் மார்பு."
பாண்டிய நாட்டில் எங்கும் செம்பொன் கிடைக்
கிறது. ஏனென்றால் வெளிநாட்டவர் தம்மிடம்
உள்ள பொன்னைக் கொடுத்து அதற்குப் பதி
லாகக் கொற்கை முத்துக்களை வாங்கிச் செல்
வதால் செம்பொன் எங்கும் கிடைக்கிறது. இந்த
நாடு சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்ததால் ஊர்
களிலெல்லாம் தமிழ் நூலும் தமிழ் ஆட்சிமுறை
யும் தென்படுகின்றன. கடலில்  வெண்சங்கும்
முத்தும், மலைச்சாரலில் யானைகளும் தென்
படுகின்றன. பகையரசர்கள் மார்பில் அவன் கூர்
வேல் தென்படும்.

"நந்தின் இளஞ்சினையும் புன்னைக் குவிமொட்டும்
பந்தர் இளங்கமுகின் பாளையும்--சிந்தித்
திகழ்முத்தம் போல்தோன்றும் செம்மற்றே தென்னன்
நகைமுத்த வெண்குடையான் நாடு."
சங்குகள் இப்பொழுதுதான் ஈன்ற மிகச் சிறிய முட்டை
களும், புன்னை மரத்தின் குவிந்த மொட்டுக்களும்
பாக்கு மரத்தின் இளம் பாளையிலிருந்து உதிர்கின்ற
முத்துக்களும் எங்கெங்கும் சிந்திக் கடலில் விளைந்த
வெண்முத்துக்கள் போல்தோன்றும் சிறப்புடையது
நகைமுத்த வெண்கொற்றக் குடையை உடைய
பாண்டிய நாடாகும்.

"ஏனைய பெண்டிர் எரிமூழ்கக் கண்டுதன்
தானையால் கண்புதைத்தான் தார்வழுதி--
   யானையெலாம்
புல்லார் பிடிபுலம்பத் தாம்கண் புதைத்தவே
பல்வாயாற் பட்ட களத்து".
ஈற்றடி"பல்யானை அட்ட களத்து." எனவும்
சில சுவடிகளில் காணப்படுவதாகப் புலவர்
கள் கூறிடுவர்.

போரினால் ஏற்படும் கொடுமையான விளை
வுகளை விவரிக்கும் பாடல் இதுவாகும். போரில்
இரு பக்கத்திலும்  கணக்கற்ற வீரர்கள் மாண்டு
விட்டனர். ஏனைய அஃறிணை உயிரினங்களாகிய
குதிரைகளும், யானைகளும் எத்தனை எத்தனை
யோ மாண்டு விட்டன. பகை வீரர்கள்தம் மனைவியர்
தீக்குளிக்கத் தொடங்கி விட்டனர். ஏனென்றால்
வென்றவர் சிறையெடுத்தால் என்னென்ன நிகழ்
வுகள் நடைபெறும் என்று கூற இயலாது. எனவே
வென்றவர் கையில் அகப்படுவதைக் காட்டிலும்
தீக்குளிப்பது எளிதென எண்ணுவது வழக்கம்.
இந்தக் கொடுமையான நிகழ்ச்சியைப் பார்க்கச்
சகியாமல் தன் ஆடையின் முன்தானையால்
கண்களை மூடிக் கொண்டான் பாண்டியன். அவனைப்
போலவே அவனது படையில் இருந்த பெண்யானைகள்
தமது ஆண்யானைகள் போரில் இறந்து பட்
டமைக்காகத் தம் கண்களை மூடிக்கொண்
டனவாம். என்னதான் நமது இலக்கியங்கள்,
நீதி நூல்கள் இரக்கத்தை வலியுறுத்தினாலும்
போர்க்களத்தில்  அவை பேணப்படவில்லை.
இந்த விடயத்தை மேற்கொண்டு விவரித்தால்
முத்தொள்ளாயிரத்தின் பாடல்களை அனுப
விக்க இயலாமற் போய்விடும். போர் என்பதையே
மனித குலம் அறவே வெறுத்து ஒதுக்கிடல்
வேண்டும். நாடுகளுக் கிடையே மண்ணாசை,
பொருளாசை போன்றவை நீங்கட்டும்! எங்கும்
அமைதி நிலவட்டும்!  வாய்ப்புக் கிட்டும் பொழுது
முத்தொள்ளாயிரம் நூல் முழுவதும்  படித்து அதில்
பயின்று வரும் சொல் நயம், பொருள் நயம், கற்பனை
நயம் முதலானவற்றை  அனுபவித்து இன்புறு
மாறு வேண்டுகிறேன்.










Friday 24 August 2018

புலி புலி என்னும் பூசல்.

புலி புலி என்னும் பூசல் தோன்ற.....

அகநானூற்றில் வரும் அழகிய பாடல் ஒன்றைப்
பார்ப்போம். சங்க இலக்கியத்தில் அகப்பொருள்,
புறப்பொருள் என்னும் இரண்டு பெரும் பிரிவுகள்
பேசப்படும்.  அகப்பொருள் என்பது தனி மனிதன்
வாழ்க்கை  மற்றும் அவன் குடும்ப வாழ்க்கையைப்
பற்றிப் பாடுவது. புறப்பொருள் என்பது அத் தனி
மனிதன் மற்றும் அவன்குடும்பத்தினர் சமுதாயத்
தில் மற்றவர்களோடு பழகிய பழக்கம், நிகழ்த்திய
போர்,  ஏற்படுத்திக் கொண்ட நட்பு மற்றும் பகை
போன்ற அனைத்து விடயங்களையும் பற்றிப்
பாடுவது.

அகப்பொருள் களவியல், கற்பியல் என்னும் இரு
பிரிவுகளை உள்ளடக்கியது.  ஆண் ஒருவனும்
பெண் ஒருத்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்
காதல் கொண்டு பிறர் அறியாமல் பழகி வாழ்ந்து
வருதல். இந்தச் செய்தி பிற்பாடு தோழி, செவிலித்
தாய், நற்றாய் முதலானவர்க்குத் தெரியவர, அவர்கள்
மணம் செய்வித்துக் கற்பியலில் ஈடுபடுத்துவார்கள்.
அகப்பொருளில் உள்ள இன்றியமையாத செய்தி
என்னவென்றால் ஆணோ, பெண்ணோ பெயர்
குறிப்பிடப் படாமல் தலைவன், தலைவி என்று சுட்டப்
படுவார்கள். யாருடைய தனிப்பட்ட பெயரும் அகப்பாடல்
களில் சொல்லப்படாது. களவியலில் உடன்போக்கு
(ஓடிப் போதல்) அனுமதிக்கப் பட்டாலும் சீரிய ஒழுக்
கமும், நெறிமுறையும் பின்பற்றப்பட்டன.

அகநானூற்றில் தங்கால் முடக் கொற்றனார் பாடிய
குறிஞ்சித் திணைப் பாடல் ஒன்றைப் பார்ப்போம்
(அகம்:48):
"அன்னாய் வாழி! வேண்டன்னை நின்மகள்
பாலும் உண்ணாள்; பழஙகண் கொண்டு
நனிபசந் தனள்என வினவுதி; அதன்திறம்
யானும் தெற்றென உணரேன்; மேல்நாள்
மலிபூஞ் சாரலென்  தோழி மாரோ(டு)
ஒலிசினை வேங்கை கொய்குவம் சென்றுழி
புலிபுலி என்னும் பூசல் தோன்ற
ஒண்செங் கழுநீர்க் கண்போல் ஆய்இதழ்
ஊசி போகிய சூழ்செய் மாலையன்;
பக்கம் சேர்த்திய செச்சைக் கண்ணியன்;
குயம்மண்(டு) ஆகம் செஞ்சாந்து நீவி
வரிபுனை  வில்லனொரு கணைதெரிந்து கொண்டு
யாதோ மற்றம் மாதிறம் படர்என
வினவி நிற்றந் தோனே! அவர்கண்டு
எம்முள்  எம்முள்  மெய்மறை(பு)  ஒடுங்கி
நாணி நின்றெனம் ஆகப்  பேணி
ஐவகை வகுத்த கூந்தல் ஆய்நுதல்
மைஈர்  ஓதி மடவீர் நும்வாய்ப்
பொய்யும் உளவோ ?  என்றனன் பையெனப்
பரிமுடுகு தவிர்த்த தேரன் எதிர்மறுத்து
நின்மகள் உண்கண் பன்மாண்  நோக்கிச்
சென்றோன் மன்றக் குன்றுகிழ வோனே!
பகல்மாய் அந்திப் படுசுடர் அமையத்(து)
அவன்மறை தேஎம் நோக்கி மற்றிவன்
மகனே! தோழி என்றனள்;
அதன்அள  வுண்டுகோள் மதிவல் லோர்க்கே!"

பொருள்: தோழி செவிலித் தாயிடம் கூறியது:
அன்னையே! நீவிர் வாழி! உம்மை வேண்டுகிறேன்.
உம் மகள் பாலும் பருகிலள்; துயரத்தோடு முகம்
வெளுத்துப் போய்விட்டாள். அதன் காரணம் என்ன?
என யான் அறிந்திலேன். அன்றொருநாள் பூக்கள்
நிறைந்த மலைப்பகுதியில் யான் என் தோழியரோடு
வேங்கைப்பூக்கள் பறிக்கச் சென்ற பொழுது "புலி புலி"
என்ற பெரும் கூக்குரல் கேட்டது. பூக்கள் பறிக்க இயலா
த உயரத்தில் இருந்தால் "புலி புலி"என்று கூவி அச்
சுறுத்தினால் வேங்கைமரம் பூக்களைப் பறிப்பதற்கு
வசதியாய்த் தாழ்ந்து கொடுக்கும்  என்ற மூட நம்பிக்
கை மலைவாழ் மக்களிடம் நிலவியது. அந்த மூட
நம்பிக்கையால் யாரோ புலி புலி எனக் கூக்குரலிட,
செங்கழுநீர்ப் பூக்களை மாலையாக அணிந்த, வெட்சி
மாலையைச் சூடிய, வில் ஒன்றைக் கையில் கொண்டு
ள்ள ஒரு மனிதன் வந்து "புலி எதுவும் இங்கு வந்ததா?
என வினவினான். அகன்ற, செஞ்சாந்து பூசிய, அழகிய
மார்புடைய அவனைக் கண்ட பெண்களெல்லாம் நாண
முற்று ஒருவர்க்குப் பின் ஒருவராக மறைந்து கொண்டனர்.
அவர்கள் ஒன்றும் பேசாமல் அமைதியாக மறைந்து
கொண்டிருந்ததால் அவன்" உங்கள் வாயிலிருந்து
பொய்யும் வருமோ? எனக் கூறினான். பிற்பாடு அவன்
அஙகிருந்து கிளம்பிவிட்டான். ஆனால் தேரில் வந்த
அவன் குதிரையை வேகமாக ஓட்டாமல்  உம்மகளது
மைதடவிய கண்களைப் பலமுறை நோக்கிக் கொண்டே
அந்தக் குன்றுக்கு உரியோன் மெல்லவே சென்றான்.
இந்த இடத்தில் பயின்று வரும் "உண்கண்" என்னும்
சொல்லுக்கு மைதடவிய கண்கள் என்றும் அவன்
அழகைப் பருகுகின்ற கண்கள் என்றும் அறிஞர்
பொ.வே.சோமசுந்தரனார்  பொருள் கூறினார். அவன்
சென்று மறைந்த பக்கத்தை நோக்கி உம்மகள்
"இவனே ஆண்மகன்" என்று கூறினாள். அதன் பொருள்
என்ன? என்பது அறிவில் தேர்ந்தவர்களுக்கே
விளங்கும்."

தேரில் வந்த அத்தலைவன் குதிரையை வேகமாக
ஓட்டாமல் தலைவியைத் திரும்பிப் பார்த்துச் சென்ற
தும்  அவன் சென்ற பிற்பாடு தலைவி "இவனே ஆண்
மகன்" என்று உரைத்ததும் நோக்குமிடத்து இருவருக்
குள்ளும் காதல் அரும்பியிருக்க வாய்ப்பண்டு எனத்
தெரிகிறது. ஏனெனில் தலைவனின் தோற்றப் பொலி
வை விவரிக்கும் பொழுது புலவர் "குயம் மண்டு ஆகம்"
என்று குறிப்பிட்டார். இச் சொற்றொடருக்குப் பல அறி
ஞர்கள் பலவிதமாகப் பொருள் கூறுகின்றனர். Dr.V.S.
ராஜம் என்பவர் வளைந்து  நிமிர்ந்த அகன்ற
மார்பு என்று பொருள் உரைக்கின்றார்.
தலைவனது குயம் மண்டு ஆகத்தையும்
கையில்  வில்லையும் கணையையும் பற்றி
நின்ற தோற்றத்தையும் கண்டு கிறங்கிப்
போய் "இவனே ஆண்மகன்" எனக் கூறியது
அரும்பிய காதலின் வெளிப்பாடாகும். இது
காரணமாக, தலைவி பாலும் பருகாமல்
மேனி நிறம் வெளுத்துப்போய்த் தோன்றினள்.
ஒரு அருமையான நாடகக் காட்சி அரங்கே
றியது போல நாம் உணர்கிறோம். சங்க காலப்
பாடல்களில் இயல்பு நவிற்சி தான் பயின்று
வரும். உள்ளதை உள்ளவாறே விவரித்தனர்.
உயர்வு நவிற்சி எனப் படும் மிகைப் படுத்தி
விவரிப்பது  பிற்காலத்தில் தோன்றிய வழக்
கம். குறிஞ்சித் திணைக்குரிய இப்பாடலை
எத்தனைமுறை படித்தாலும் அலுப்புத்
தட்டாது.




Saturday 18 August 2018

நளவெண்பாவில் பயின்றுவரும் நயமிகு பாடல்கள்

வெண்பாவில் புகழேந்தி மிகத் தேர்ந்த
வர் என்று புலவர் பெருமக்களால் புகழ்ந்
துரைக்கப் பட்டவர்.    இவர் இயற்றிய காவியமே நளவெண்பாவாகும். இந்
நூல் சொற்சுவை, பொருட்சுவை, கற்ப
னைநயம் முதலிய அனைத்து அணிந
லங்களையும் தன்னகத்தே கொண்டது.
தமிழில் புதிதாகப் பாடல் இயற்ற எண்
ணுபவர் வெண்பா என்னும் பாவின்
இலக்கணம், செய்ம்முறைப் பயிற்சி
மேற்கொள்ள நளவெண்பாவைப் பல
முறை படித்துப் பழகுவர். அதேபோல
விருத்தம்  என்னும் பாவினத்தைப்
பாடுவதற்குக் கம்பராமாயணத்தைப்
பலமுறை படித்துப் பழகுவர்.


நளன்--தமையந்தி கதை அனைவரும்
அறிந்த ஒன்றே. இருப்பினும், மிகமிகச்
சுருக்கமாக இங்கே  விவரிக்கப்படுகி
றது.  மகாபாரதக் காப்பியத்தில் வரும்
கிளைக்கதை. சூதாட்டத்தால் நாட்டை
இழந்து  காட்டில் வாழ்ந்துவரும் தருமரு
க்குச் சொல்லப்பட்ட கதை. நளன் நிடத
நாட்டையாண்ட வேந்தன். விதர்ப்ப
நாட்டு வேந்தன் வீமன் தன் மகள் தமை
யந்தி  என்பாளுக்கு நடத்திய சுயம்வர
நிகழ்ச்சியில் பங்கு பெற்ற நளன் அவ
ளை மனைவியாய் அடைந்தான். மிக
மிக மகிழ்ச்சியாய் இல்லறம் நடத்திய
அவர்களுக்குக் கலி(சனி) உருவில் இடர்
வந்தது. கலி நளனைச் சூதாடச் செய்து
நாட்டை இழக்கவைத்தான். நாட்டை இழ
ந்த நளன் மனைவியொடு காட்டுக்கு
வந்தான். கலி நளனது மனத்தைக் குழப்
பி மனைவியைப் பிரியச் செய்தான்.
தமையந்தி தந்தையின் நாட்டுக்கு வந்து
சேர்ந்தாள். நளன் அயோத்தி நகர்க்கு
வந்து இருதுபன்னன் என்னும் அரசனி
டம் பணியாற்றிவந்தான். நளன் இருப்
பிடம்  அறிந்த  தமையந்தி மற்றொரு
சுயம்வரம்  நிகழ்த்த இருப்பதாகச் செய்
தியைப் பரப்பினாள். நளன் தேரோட்ட
இருதுபன்னன் விதர்ப்ப நாட்டுக்கு
வந்தான். அங்கே நளன், தமையந்தி
மீண்டும் இணைகின்றனர். கலியும்
நீங்கினான். சூதாட்டத்தால் நேரும்
தீங்கைத் தெரிவிக்க இந்தக் கதை தரு
மருக்குச் சொல்லப் பட்டது.


நளவெண்பா நூலில் மொத்தம் 427
பாடல்கள் உள்ளன. அத்தனையும்  மிக
மிக அருமையானவை. சிலவற்றை
இங்கே பார்ப்போம்:

காமர்  கயல்புரளக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் தளையவிழப்–-
   பூமடந்தை
தன்னாட்டம் போலும் தகைமைத்தே
   சாகரம்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டம் நாடு.

கடலால் சூழப்பட்ட பூவுலகில் முதன்மை
யாகக் குறிப்பிடப்படும் நிடத நாடானது
அழகிய சேல்மீன்கள் புரளுதலாலும்,
நீலோற்பலங்களின் பேரரும்புகள் மலர்
தலாலும் செந்தேன் சிந்தலாலும் தாம
ரை மலரில் எழுந்தருளியுள்ள திருமக
ளை ஒத்திருக்கும் பெருமையுடையது.
காமர்--அழகு; காவி--நீலோற்பல மலர்;
நாட்டம்--கண்.

சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறம்
   கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான்--
   மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற்  பருந்
    தும்
ஒருகூட்டில் வாழ உலகு.
தாதுக்கள் சிந்துகின்ற மலர்மாலை
யணிந்த நளன் குளிர்ச்சியான சந்திரன்
போன்ற தனது குடைநிழலில் குற்றம்
அற்ற அறங்கள் தங்கவும் மங்கையர்
தமதருகில் வைத்து ஊட்டி வளர்க்கின்ற
பைங்கிளியும் எதிரியான பருந்தும் ஒரு
கூட்டில் வாழவும் உலகை ஆண்டான்.

திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்
     தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள்--
     வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள்
     மென்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.
எட்டுத் திக்கில் உள்ளோரையும் தன்னுள்
அடக்கிய வெண்கொற்றக் குடையையும்
தேர்ச் சேனையையும் உடைய அரசனே!
புகழ் நிரம்பிய உன் தோளுக்கு தமை
யந்தி என்ற பெயருடைய பெண்ணின்
தோள் இசையும்.
அந்தி--பெண்பால் படர்க்கை விகுதி
அணங்கு--மாது.

நளன் சிறப்பு:
செம்மனத்தான் தண்ணளியான் செங்
   கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்கும் தடந்தோளான்--
    மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்
     தும் மிக்கான்
உளனென்பான் வேந்தன் உனக்கு.

தமையந்தி சிறப்பு:
அழகு சுமந்திளைத்த ஆகத்தாள்;வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை--மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம்
     மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.

மாலைப்பொழுதின் வருகை:
மல்லிகையே வெண்சங்கா வண்டூத
   வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப--
   முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல
    நடந்ததே
பொன்மாலை அந்திப் பொழுது.

சுயம்வரத்தில் நளன் வெற்றிபெற,
மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை:
திண்தோள் வயவேந்தர் செந்தா
    மரைமுகம்போய்
வெண்தா  மரையாய் வெளுத்தவே--
    ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை
     வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது.

நளனும் தமையந்தியும்  பூமாலை
சூடியிருந்ததைப் பார்த்து மற்ற அரசர்
களது செந்தாமரை போன்ற முகம்
 வெளுத்துப் போய் வெண்தாமரை
போலாயிற்று.

நளன் சூதாட்டத்தில் நாட்டைப் புட்கர
னிடம் இழந்து மாவிந்த நகரை நீங்கி
யது.:
மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த
   நன்மலரைப்
புன்னாகம்  கொள்ளத்தான் போனாற்போல்--தன்கால்
பொடியாடத்  தேவியொடும் போயினான்
    அன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து.

மக்கட்பேறின் மகிமை:
பொன்னுடைய ரேனும் புகழுடைய
     ரேனும்மற்(று)
என்னுடைய ரேனும் உடையரோ--
      இன்னடிசில்
புக்களையும் தாமரைக்கை; பூநாறும்
        செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.

நளன் நண்டை நோக்கிப் புலம்பியது:
காதலியைக் காரிருளிற் கானகத்தே
   கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ--
   நாதம்
அளிக்கின்ற ஆழிவாய் ஆங்கலவ ஓடி
ஒளிக்கின்ற(து) என்னோ உரை.

மறுபடியும் நடக்கவிருப்பதாகச் சொல்லப் பட்ட சுயம்வர நிகழ்வுக்கு
வந்த நளனிடம்  வீமராசன் சொன்னது:
பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று--
மந்தி
தெளியா(து) இருக்கும்  திருநாடா!
உன்னை
ஒளியாது காட்(டு)உன் உரு.
பாக்கு மரத்தின் பாளைதனைப் பார்த்த
மந்தி நாகப் பாம்பின் படமென்று
ஐயுற்று அஞ்சுகின்ற வளமான திரு
நாட்டை உடையவனே! நிறம் கறுத்துப்
போய் உள்ள உன்னை இன்னாரெனக்
கண்டுபிடிக்க இயலவில்லை.ஆகவே
மறைக்காமல் உன் உண்மை உருவைக்
காட்டுவாயாக!

மீண்டும் இணைந்த நளன்--தமையந்தி
யைக் கண்டு மகிழ்ந்த மக்களின் நிலை:
கார்பெற்ற தோகையோ? கண்பெற்ற
  வாண்முகமோ?
நீர்பெற்(று) உயர்ந்த நிறைபுலமோ?--
  பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட
  மாநகருக்(கு)
ஏதோ உரைப்பன் எதிர்.
கருமேகத்தைக் கண்ட மயிலோ? கண்
இல்லாதிருந்து பிறகு பெற்ற ஒளி
பொருந்திய முகமோ? நீர் இல்லாதி
ருந்து பிறகு நீர்பெற்று அதனால் உயர்
வடைந்த நிறைவான வயலோ? இதில்
எதை இணையாகச் சொல்வேன்?
நளனையும் தமையந்தியையும் பார்த்து
அதனால் உண்டான மகிழ்ச்சிக்கு எதை
யும் இணையாகச் சொல்ல முடியாது.

நளவெண்பா நூலில் உள்ள அத்தனை
பாடல்களுமே மிக மிக இனிமையானவை.
 













Saturday 11 August 2018

கம்பன் காட்டிய இராமன்--சீதை திருமணக் காட்சி


கம்ப  இராமாயணத்தில் இராமன்--சீதை
திருமணக் காட்சி

கம்ப   இராமாயணத்தில்  இராமனும்  சீதை
யும் ஏற்கெனவே ஒருவரை  மற்றவர்  பார்த்து
ஒருவரை மற்றவர்  ஓரளவு  தெரிந்து வைத்துள்
ளதாகச்  சொல்லப்பட்டுள்ளது. ஏனெனில்  தொல்
காப்பிய  மரபுப்படி  தமக்குள்  காதல்கொண்டவர்
களே  திருமணம்  செய்துகொள்வது  வழக்கம்.
அதனால்தான்  வில்லை  முறிப்பதற்கு  முன்னரே
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்டதாகவும்
ஒருவர்மீது மற்றவர் காதல் கொண்டதாகவும் கம்பர்
பாடியுள்ளார்.  இராமன்--சீதை திருமணக் காடசி
யில்  பயின்று வரும் சில அருமையான பாடல்
களைப்  பாரபபோம்.

தாடகை வதம்,  அகலிகை  சாபவிமோசனம் முதலான
நிகழ்ச்சிகள்  நிறைவேறியபிறகு  கௌசிக முனிவரும்
இராமனும்  இலக்குவனும்  மிதிலை நகருக்கு  வருகிறார்கள்.
"இழைகளும்  குழைகளும்  இன்ன முன்னமே
மழைபொரு கண்ணிணை மடந்தை மாரொடும்
பழகிய எனினுமிப் பாவை தோன்றலால்
அழகெனும் அவையுமோர் அழகு பெற்றதே".
மற்ற பிற பெண்களுக்கு  அணிகலன்கள் அணிவதால்
அழகு  வரும்.  ஆனால்  சீதையைப் பொருத்தவரையில்
சீதை அணிவதாலேயே அணிகலன்களுக்கு அழகு
வரும்.  அதாவது சீதை அணிவதால் அந்த
அணிகலன்கள்  புதியதோர் அழகினைப் பெறுகின்
றன.  இப்படிப்பட்ட பேரழகியும்  இராமனும்  ஒருவரை
ஒருவர்  பார்த்துக் கொள்கின்றனர்.
"எண்ணரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண்ணிணை கவ்வி ஒன்றையொன்(று)
உண்ணவும் நிலைபெறா(து) உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான்;அவளும் நோக்கினாள்".
அழகுப் பதுமையாம் சீதை மேல்மாடத்தில் நின்ற
பொழுது இராமனும் சீதையும் ஒருவர் கண்களோடு
மற்றவர் கண்கள் கவர்ந்து பற்றிக் கொண்டு ஒன்றையொன்று
கவர்ந்து சுவைக்கவும் இருவரது அறிவும் ஒன்று படவும்
 ஒருவரை ஒருவர் பார்த்துக்  கொண்டார்கள்.
ஒருவரது அழகை மற்றவர் பார்த்து அந்தப்  பார்வை
என்னும் கயிற்றால் கட்டுண்டு ஒருவரது மனம்
மற்றவர் மனத்தை இழுத்துநின்றதால்
இருவரும் ஒருவர் மனத்தில் மற்றவர்
புகுந்துகொண்டார்கள்.  ஆதிசேடனாகிய பாம்புப்
படுக்கையிலே துயில்கொண்ட திருமாலும் இலக்குமி
யும்  பிரிந்து  பூவுலகில் அவதரித்துத் தற்பொழுது
மீண்டும் சந்தித்துக் கொண்டால்  பேசவும்
வேண்டுமோ?

"பெண்வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண்வழி உணர்வும்நான் எங்கும் காண்கிலேன்.
மண்வழி நடந்தடி வருந்தப் போனவன்
கண்வழி நுழையுமோர் கள்வனே கொலாம்".
இராமனைப் பார்த்ததில் இருந்தே சீதை
அவன் நினைவாகவே இருந்தாள். பெண்களுக்குரிய
நலன், நாணம் மற்றும் அறிவையும் எங்கும் காண்கி
லேன். தன் பாதங்கள் வருந்துமாறு தரையிலே
நடந்து சென்றவன் என் கண்களின் வழியே
மனத்திற்குள் செல்லவல்ல ஒரு கள்வனா
கத்தான் இருப்பான்.

"இந்திர நீலமொத்(து) இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணிவரைத் தோளு மேயல
முந்தியென் உயிரையம் முறுவல் உண்டதே!".
இராமனுடைய இந்திர நீலமணியைப் போன்று
கருத்த முடியழகும், நிலாப் போன்ற முக
அழகும், நீண்டு தாழ்ந்திருக்கும் கையழகும்
தோள்அழகும் என்உயிரைக் கவர்ந்தாலும்
இந்த அழகுகளுக்கெல்லாம் முற்பட்டு
என் உயிரைக் கவர்ந்தது அவன் முகத்தில்
தவழும் புன்முறுவலேயாகும்.

"நீக்கம் இன்றி நிமிர்ந்த நிலாக்கதிர்
தாக்க வெந்து தளர்ந்து சரிந்தனள்;
சேக்கை ஆகி மலர்ந்தசெந் தாமரைப்
பூக்கள் படட(து)அப் பூவையும் பட்டனள்".
முன்பு சீதைக்குத் தங்கும் இடமாகி மலர்ந்த
செந்தாமரை இப்பொழுது பள்ளியணையாய்க்
காம வேதனையால் புரண்ட போது துன்பம்
நல்கியது.

சீதை இராமனை எண்ணித் துயர்க் கடலில்
ஆழ்ந்திருக்கும் வேளையில் , இராமனும்
சீதையை எண்ணித் தூக்கமின்றித் தவித்தான்.
"விண்ணின் நீங்கிய மின்னுரு இம்முறை
பெண்ணின் நன்னலம் பெற்றதுண் டேகொலோ?
எண்ணின் ஈதல(து) என்றறி யேனிரு
கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்".
விண்ணில் தோன்றி மறைந்த மின்னல்  போலச்
சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும்
மறைந்தும் நிகழ்வதற்கு  யாது காரணம் என்றறியேன்.
 அவள் உருவத்தைப்  புறக்கண்ணாலும்  அகக் கண்
ணாலும் காண்கின்றேன்.


"அருளிலாள் எனினும் மனத்தாசையால்
வெருளும் நோய்விடக் கண்ணின் விழுங்கலால்
தெருளிலா உலகில் சென்று நின்றுவாழ்
பொருளெலாம் அவள் பொன்னுரு ஆயவே".
இராமன் உற்ற காதல் நோயைத் தணித்து
அருளாதவள் என்ற போதிலும் என்மனத்து
ஆசையால் நான் பார்க்கின்ற எல்லாப் பொரு
ளும் அவள் பொன்போன்ற உருவமாகவே
தென்படுகின்றது." இவ்வாறு இராமன் புலம்பித்
தவித்தான்.

சிவதனுசை  வளைத்து  நாண் ஏற்றுவார்க்கே
சீதை உரியவள் என்று சனகர் அறிவித்ததால்
கௌசிக முனிவர் இராமனைச்சிவன் வில்
வைக்கப்பட்டுள்ள மண்டபத்துக்கு அழைத்து
வருகின்றார். பல மன்னர்கள் முயன்று
தோல்வி அடைகின்றனர். பிறகு வில்லை
வளைக்க இராமன் எழுந்து வருகின்றான்.
"கரங்கள் குவித்திரு கண்கள் பனிப்ப
இருங்களி(று) இச்சிலை ஏற்றிலன் ஆயின்
நரந்த நறைக்குழல் நங்கையும் நாமும்
முருங்(கு) எரி யிற்புக மூழ்குதும் என்பார்".
இக்குமரன் வில்லை வளைத்து நாண்
ஏற்றாவிட்டால் சீதை கன்னியாகவே
இறக்க வேண்டிவரும்.  அதைவிட நெருப்பில்
பாய்ந்து உயிர் துறத்தலே மேலானது. நம்
அன்பான தோழிக்கு அத்துன்பம் நேர்ந்தால்
நாமும் எரியும் நெருப்பில் மூழ்குவோம் என்று
சொல்வார்கள்.

இராமன் சிவன் வில்  இருக்கும் இடத்துக்கு
 வந்து நின்று அதனை நோக்கினான்.
"ஆடக மால்வரை அன்னது தன்னை
தேடரு மாமணிச் சீதையெனும் பொற்
சூடக வால்வளை சூட்டிட நீட்டும்
ஏடவிழ் மாலையி தென்னவெ டுத்தான்."
பெரிய பொன்மலைபோன்ற சிவவில்லை
சீதைக்குச் சூட்டுதற்குரிய மாலைபோலக்
கையில் எடுத்தான்.
"தடுத்திமை யாமல் இருந்தவர் தாளில்
மடுத்ததும் நாண்நுதி வைத்ததும் நோக்கார்;
கடுப்பினில் யாரும் அறிந்திலர்; கையால்
எடுத்தது கண்டனர்; இற்றது கேட்டார்".
கண் இமை கொட்டினால் இராமன் வில்லை
எடுத்து நாண் ஏற்றுவதைக் காணாமற்
போய்விடும்  என்று கண்கொட்டாது உற்றுப்
பார்த்தவர்களும் அவ்விராமன் வில்லை
எடுத்ததைக் கண்டனர். வில்லைவளைத்து
நாண் ஏற்றியதைக் கண்டிலர்; ஆனால் வில்
இற்று முறிந்த ஓசையைத்தான் கேட்டனர்.

உடனடியாகச் சீதையின் உற்ற தோழி அவளிடம்
சென்று நடந்தது அனைத்தையும் கூறினாள்.
"மராமரம் இவையென வளர்ந்த தோளினான்;
அராவணை அமலனென்(று) அயிர்க்கும் ஆற்றலான்;
இராமனென்பது பெயர்; இளைய கோவொடும்
பராவரும் முனியொடும் பதிவந்(து) எய்தினான்".
உடனே சீதை மறுமொழி கூறலானாள்.
"இல்லையே நுசுப்பென்பார் உண்டுஉண்(டு) என்னவும்
மெல்லியல் முலைகளும் விம்ம விம்முவாள்;
சொல்லிய குறியினத் தோன்ற லேயவன்;
அல்லனேல் இறப்பென் என்(று)அகத்துள் உன்னினாள்".

இராமன் சிவன்வில்லை வளைத்த செய்தி
தயரதனுக்குத் தெரிவிக்கப் பட்டது. உடனே
தயரதன் தன் பட்டத்தரசிகளொடும் குலகுரு
வசிட்டமுனியொடும் ஏனைய உற்றார், உறவினர்
பரிவாரங்களொடும் மிதிலைக்குப் புறப்பட்டான்.
எல்லோரும் மிதிலை வந்தடைந்தனர். இராமன்
மிதிலை வீதியில் உலாவருகின்றான்.
"தோள்கண்டார் தோளே கண்டார்;
   தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்;
    தடக்கைகண் டாரும் அஃதே;
வாள்கொண்ட கண்ணார் யாரே
    வடிவினை முடியக் கண்டார்?
ஊழ்கொண்ட சமயத் தன்னான்
    உருவுகண் டாரை ஒத்தார்".
இராமன் திருமண மண்டபத்துக்கு வந்து
சேர்ந்துவிட்டான். சீதை வருகின்றாள்.
"பொன்னினொளி பூவின்வெறி சாந்துபொதி
     சீதம்
மின்னினெழில் அன்னவள்தன் மேனியொளி
மான
அன்னமும்அ ரம்பையரும் ஆரமிழ்தும் நாண
மன்னன்அவன்  இ ருந்தமணி மண்டபம டைந்தாள்".
பாடலில் வரும் சந்தம்(ஓசைநயம்)அழகோ அழகு!
இராமன் சீதையின் கரம் பற்றினான்.
"வெய்ய கனல்தலை வீரனும் அந்நாள்
மையறு மந்திரம் மும்மை வழங்கா
நெய்யமை ஆவுதி யாவையும் நேர்ந்தே
தையல் தளிர்க்கை தடக்கை பிடித்தான்".
பின்னர் இருவரும் தீயை வலம்வந்து வணங்கி
னர். அம்மி மிதித்து அருந்ததி பார்த்தனர்.
பின்னர் மனைக்குச் சென்றனர். திருமணம்
இனிதே முடிந்தது.









Sunday 5 August 2018

தென்மேற்குப் பருவக் காற்றின் கருணையினால்.....

தென்மேற்குப் பருவக் காற்றின்
                       கருணையினால்.......

காவிரியை மீட்டெடுக்கக் கணக்கற்றோர்
    தமிழ்நாட்டில்
தீவிரமாய்ப்  போராடித் திகைக்கவைத்துச்
   சாதித்தார்;

வாரியத்தை வேண்டினோம், வாய்ப்பில்லை
   எனமறுத்துச்
சீரியதாம் அதிகாரம் செறிந்ததாம் என்றுரைத்தே

ஆணையத்தை அமைத்திட்டார்; அக்குழுவின்
    உறுப்பினர்கள்
நாணயமாய் நடந்துகரு நாட்டினர்க்கே
   ஆணையிட்டார்;

உச்சநீதி மன்றத்தின் உத்திரவை மதியாதார்
நிச்சயமாய் ஆணையத்தை அவமதிப்பர்
    எனநினைத்தோம்;

இயற்கையன்னை  தலையிட்டே
    இந்தமுறை  காத்துவிட்டாள்;
புயல்மழையைப்  பொழிவித்துப்
   பொன்னியினைக் கொண்டுவந்தாள்;

கன்னடத்து மக்கள்தம்மின் கண்ணசைவு
     தேவையின்றி
அன்னைநம் காவிரியை அமைதியாய்ப்
     பெற்றிட்டோம்;

ஆடிப்  பெருக்கில்  அனைவருமே
     உளமகிழ்வோ(டு)
ஓடிப்  பிடித்து விளையாடி
     ஆர்ப்பரித்தோம்;

இத்தனையும் இயற்கைத்தாய் இளகியநன்
     மனத்தாலே
உத்தமமாய் நிறைவேறி ஒப்பில்லாக்
    களிப்படைந்தோம;

மேட்டூரின் அணைநிரம்பி வேளாண்மை
   செழித்திடவே
பாட்டுகளைப் பாடிடுவோம் பாங்காக
   உழைத்திடுவோம்;

மிகைத்தண்ணீர் வீணாக விரிகடலில்
    கலக்காமல்
வகையாகச் சேமிக்க வழிசெய்வோம்
   பெருமக்காள்!

ஏரி,குளம் தூர்வாரி இயன்றளவு
   சேமிப்போம;
மாரிபெய்யின் ஒருசொட்டும் மாக்கடலில்
   கலக்காமல்

சேகரித்து  வைத்திடுவோம்; சிற்றணைகள்
   கட்டிடுவோம்;
போகம்மூன்(று) அடைந்திடவே பொறுப்பாய்ப்
   பணிசெய்வோம்;

சிக்கனமாய் நீர்புழங்கிச் சேமித்தால்
   என்றென்றும்
தக்கபடி வேளாண்மை  தழைத்திடுமே
   ஐயமிலை;

ஆண்டாண்டும் இதுபோல ஆதரவாய்
    மழைபெய்யும்,
வேண்டியநீர் கிடைக்குமென
    மெத்தனமாய் இருக்காதீர்;

வறட்சியினை எதிர்பார்த்து மழைநீரை
    மிகைநீரைத்
திறமையுடன் சேமிக்கத் திட்டங்கள்
   தீட்டிடுவோம்;

தென்னாட்டை வளஞ்செய்யும் தெய்வப்பொன்
    னித்தாயால்
எந்நாளும் நீர்கிடைக்க எமதிறைவா!
    வரம்தாராய்!

தென்மேற்குக் காற்றாலே செழிப்பான
    மழைபொழியும்;
உன்மேலே நமபிக்கை யுண்டு.