Thursday 31 October 2019

காளமேகத்தின் 'த' மற்றும் 'க' வருக்கப் பாடல்கள்.

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது....
(காளமேகப்  புலவர்  பாடல்)

காளமேகப்  புலவர்பற்றிய  கதைகள் பல உலவுகின்றன.
அவரது பிறந்த ஊரைக் குறித்தும் பல செய்திகள் உள.
பெரும்பாலோர் கருத்துப்படி திருவரங்கப் பெருமாள்
கோவில் மடைப்பள்ளியில் பரிசாரகராகப் பணிபுரிந்த
இவருக்கு இலக்கணப்படி ஆசுகவி  பாடும் கவித்திறம்
வந்தது எப்படி? இது குறித்தும்  சில கதைகள் உள்ளன.
தெய்வச் செயலால் இவர்க்குக் கவித்திறம் வந்துவிட்டது.

தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்து தன் கவித்திறத்தைக்
காட்டிவந்த இவர் திருமலைராயன் பட்டினத்தில் வாழ்ந்து
வந்த அதிமதுர கவிராயர் என்பவரிடம் போட்டி நிகழ்த்த
வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதன்படி அதிமதுர கவி
ராயரும் அவர் சீடர்களும்(மொத்தம்:64 பேர்கள்) சொல்லும்
குறிப்புக் கேற்றவாறு சொற்பிழை, பொருட்பிழை, இலக்
கணப்பிழை இல்லாமல் ஆசுகவிதைகள் பாடுதல் வேண்
டும்.

போட்டி விதிகளின்படி புலவர்கள்  பல்வேறு சிக்கலான
குறிப்புகளைச் சொன்னார்கள். உடனுக்குடன் கவிகாள
மேகம் ஆசுகவிதைகள் சொல்லி அயரவைத்தார்."செருப்பு
என்ற சொல்லில் தொடங்கி விளக்குமாறு என்ற சொல்லில்
முடித்தல் வேண்டும்"; "கரி என்ற சொல்லில் தொடங்கி உமி
என்ற சொல்லில் முடித்தல் வேண்டும்"; வல்லினம், மெல்லினம்
மற்றும் இடையினம் இந்தப் பிரிவு எழுத்துக்களை வைத்துத்
தனித்தனியாகப் பாடல்கள் சொல்லல் வேண்டும்". மேலும்,
'க' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும், 'த'வருக்க
எழுத்துக்களை மட்டும் பயன்படுத்தியும் ஆசுகவிதைகள்
சொல்லல் வேண்டும்.  இப்படி எத்தனையோ நிபந்தனைகள்
விதித்த போதும் கவிகாளமேகம் வெற்றி பெறுவதைத் தடுக்க
முடியவில்லை. அப்படி ஒரு ஆசுகவிதையைத்தான் நாம்
பார்க்கவுள்ளோம்.

'த' வருக்க எழுத்துக்களை மட்டும் பயன்படுத்திய கவிதை:
"தாதிதூ  தோதீது; தத்தைதூ  தோதாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே---தாதொத்த
துத்திதத் தாதே, துதித்துத்தே  தொத்தீது;
தித்தித்த  தோதித்  திதி".
விளக்கம்:
தாதிதூ தோதீது--தாதி  தூதோ  தீது--அடிமைப் பெண்மூலம்
அனுப்பும் தூது நன்மையைத் தராது;
தத்தைதூ  தோதாது--தத்தை  தூது  ஓதாது--நான் வளர்க்கும்
கிளியோ தூதுப் பணியைத் திறம்படச் செய்யாது;
தூதிதூ  தொத்தித்த  தூததே--தோழியின் மூலமாக அனுப்பும்
தூதோ நாளைக் கடத்தும் தூதாகும்(காரியம் ஆகாது);
தே துதித்துத் தொத்தீது--நான் ஏதோ அணங்கால்(பேய், பிசாசு
போன்ற பயமுறுத்தும் தெய்வம்) அச்சுறுத்தப் பட்டிருக்கலாம்
என்றெண்ணி என் அன்னை முருகனைத் தொழுது அனுப்பும்
தூதும் நன்மை பயக்காது.
தாதொத்த துத்தி தத்தாதே--பூந்தாது போன்ற தேமல்கள்
என் மேனியில் படராமல் இருக்க;
தித்தித்த  தோதித்  திதி--எனக்கு இனிமையான தித்திப்பை
நல்கும்  என் தலைவனின் பெயரை--தித்தித்தது;
ஓதிக்கொண்டிருப்பதே எனக்கு உகந்ததாகும்--ஓதித்திதி.
அருஞ்சொற் பொருள்:
தாதி--அடிமைப் பெண்; தத்தை --கிளி; தூதி--தூது செல்பவள்;
ஒத்தித்தது--நாளைக் கடத்துதல்; தே--தெய்வம்;துதித்து--வழி
பட்டு; தொத்தல்--தொடர்தல்;துத்தி--தேமல்;தத்துதல்--படர்தல்;
திதி--நிலைமை; இருப்பு.
மேல் விளக்கம்:
இது அகப்பொருள் குறித்த பாடல். தலைவன் நினைப்பாகவே
வாழும் தலைவி, யாரைத் தூது அனுப்பலாம் என்று சிந்தித்துப்
பின் யார் தூதாலும் பயனில்லை என்று எண்ணி , அவனது
தித்திக்கும் பெயரைச் சொல்லிக் கொண்டிருத்தலே நல்லதாகும்
என்று முடிவுசெய்கிறாள். கவி காளமேகப்புலவர் புகழ் என்றும்
நிலைத்து நிற்கட்டும்!

பகல்வெல்லும் கூகையைக் காக்கை.

காளமேகப் புலவரிடம்  'க' வருக்க எழுத்தை மட்டும் பயன்
படுத்தி ஆசுகவி ஒன்றைப் பாடுமாறு அதிமதுர கவிராயர்
குழு கேட்டுக் கொண்டதற்கிணங்கச்  சில நொடிகள் கூடத்
தாமதம் செய்யாமல்   அன்னார் பாடிய கவிதை:
"காக்கைக்கா காகூகை; கூகைக்கா காகாக்கை;
கோக்குக்கூக் காக்கைக்குக் கொக்கொக்க--கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா  கா".
திருக்குறளின் 481ஆம் பாடலின் கருத்து இதில் பொதியப்
பட்டுள்ளது.
"பகல்வெல்லும் கூகையைக் காக்கை  இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது". (குறள்: 481)
காகம் தன்னைவிட வலிமையான கோட்டானை(ஒரு
வகை ஆந்தையை) அதற்குக் கண்தெரியாத பகல் வேளை
யில் சண்டையில் வென்றுவிடும். அதுபோலப் பகைவரை
வெல்ல விரும்பும் அரசன் தக்க காலம் கனியும் வரை காத்திருந்து
அந்த நேரத்தில் போரிட்டால் வெல்லலாம் என்ற திருக்குறளின்
கருத்தை உள்வாங்கிக் கவிகாளமேகம் தன் கவிதையைப்
பாடியுள்ளார்.

காளமேகப் புலவரின் கவிதைக்குப் பொருள்:
காக்கைக்கு ஆகா கூகை--இரவில் காக்கைக்குச்
சரியாகக் கண் தெரிவதில்லை. ஆனால் கூகைக்கு
(கோட்டானுக்கு--ஒருவகை ஆந்தைக்கு) மிகக் கூர்
மையான பார்வை இரவில் உள்ளதால் காக்கையால்
வெல்ல முடியாது. அது போலவே,
கூகைக்கு ஆகா காக்கை-காக்கைக்குப் பகல் நேரத்தில்
நன்கு கண் தெரிவதாலும், கூகைக்குப் பகலில் கண்
தெரிவதில்லை என்பதாலும் பகலில் கூகையால் காக்கை
யை வெல்ல முடியாது. எனவே,
கோக்கு(கோவுக்கு--மன்னனுக்கு)
கூ(பூமி) காக்கைக்கு(காத்தலுக்கு--காப்பதற்கு), அதாவது
குடிமக்களைப் பகைவரிடமிருந்து காப்பது மன்னனின்
கடமை யாகும். அக் கடமையைச் செய்வதற்கு,
கொக்கொக்க--கொக்கைப் போலத் தக்க நேரம்வரும்வரை
காத்திருக்க வேண்டும். இல்லையென்றால்,
கைக்கைக்கு--பகையை எதிர்த்து
காக்கைக்கு--குடிமக்களைக் காப்பாற்றுவதற்கு
கைக்கைக்கா கா--கைக்கு ஐக்கு ஆகா--தக்க நேரத்தில்
போரிடாவிட்டால் எப்படிப்பட்ட திறமையும், வீரமும் பொருந்திய
தலைவனுக்கும்(ஐ க்கு) நினைத்த காரியம் கைகூடாமல் போய்
விடும்.

குறுவிளக்கம்:
காக்கையால் இரவு நேரத்தில் கூகையை வெல்ல இயலாது.
கூகையால் பகல் நேரத்லில் காக்கையை வெல்ல இயலாது.
அதனால் பூமியிலுள்ள குடிகளைக் காக்கும் மன்னன் பகை
வரை வெல்வதற்கும், அதன்மூலம் குடிகளைக் காப்பதற்கும்
கொக்கைப் போலத் தக்க நேரம் வரும் வரை காத்திருத்தல்
வேண்டும்.  தகுந்த நேரம் அமையாவிட்டால் எப்படிப்பட்ட
திறமைசாலிக்கும் பகைவரை எதிர்த்து வெல்ல இயலாமற்
போய்விடும்..

காளமேகப் புலவரின்  தமிழ்மொழிப் புலமையும், ஆசுகவி
பாடும் திறமையும் நமக்குப் பெரு வியப்பை விளைவிக்
கின்றன. கவி காளமேகத்தின் புகழ் ஓங்குக!

Wednesday 2 October 2019

வைகை யாற்றுப் படுகை நாகரிகம்(கீழடி)

வைகை யாற்றுப் படுகை நாகரிகம்

மதுரைக்கு அருகிலுள்ள கீழடி (சிவகங்கை மாவட்ட
நிர்வாகத்துக்கு உட்பட்டது) என்னும் ஊரில் மேற்கொள்ளப்
பட்ட அகழாய்வில் 7800 பொருட்கள் கண்டெடுக்கப் பட்ட
தாகவும், கார்பன் சோதனையின் மூலம் அவை 2600 ஆண்டு
களுக்கும் முந்தைய காலத்தைச் சேர்ந்தவை என்றும் நாளிதழ்
கள் தெரிவிக்கின்றன.அங்கே  சுடுமண் பாத்திரங்கள், சங்கு
வளையல்கள். செங்கற்கள், சுண்ணாம்புச் சாந்து, கூரை ஓடுகள், சுடு
மண்ணால் ஆன உறைகிணறுகள், அகேட் மற்றும் சூது பவளம்,
மணிகள் கிடைத்தன. ரோம் நாட்டு அரிட்டைன் பானை ஓடுகளும்
கிடைத்துள்ளன. சுடுமண்ணால் ஆன கழிவுநீர்க் குழாய்கள்,
இரட்டைச் சுவர் போன்றவையும் கண்டறியப் பட்டுள்ளன.

மண்ணால்  ஆன பொருட்களைத்தாம் முதன்முதலாகக் கண்டு
பிடித்துப் பயன்படுத்தியிருப்பார்கள் நம் முன்னோர்கள். அதன்
பிறகு இரும்பு, செம்பு முதலிய உலோகங்களைக் கண்டுபிடித்துப்
பயன்படுத்தியிருப்பார்கள். மண்ணால் கலங்களைச் செய்வோர்
கலம்செய்கோ என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்டனர். கல்
வெட்டுக்கள் பயன்பாட்டுக்கு வருமுன்பே மண் பானைகளில்
எழுத்தைப் பொறிக்கும் வழக்கம் நிலவியிருக்க வாய்ப்புண்டு.
ஆனால், மண் பானைகளில் தனிநபர்கள் தத்தம் பெயர்களைப்
பொறித்திருப்பர். மன்னர்கள் தாம் பெற்ற வெற்றி, புரிந்த அரிய
சாதனைகள் முதலியவற்றைத் தெரிவிக்கக் கல்லில் பொறித்
திருப்பார்கள்.

இறந்தவர்களைப்  புதைக்க முதுமக்கள் தாழி என்னும் பெரிய
மண்ணால் ஆன பானைகளப் பயன்படுத்தினார்கள்  என்று
அறிகின்றோம். புறநானூறு 256ஆம் பாடலில் ஒரு பெண் கலம்
செய் கோவிடம்  தானும் தன் காதலனும் பாலை நிலத்து வழியே
வந்த பொழுது தன் காதலன் இறந்துவிட்டதாகவும், அவனைப்
புதைக்க ஒரு ஈமத் தாழி தேவைப் படுவதாகவும்  கூறிவிட்டு,
தான் இனிமேல் உயிர்வாழப் போவதில்லை என்றும், தன்னையும்
சேர்த்துப் புதைக்க அகன்ற தாழியாகச் செய்யுமாறும் வேண்டிக்
கொண்டாள். அப்பாடல் பின்வருமாறு:
"கலம்செய் கோவே! கலம்சேய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு  ஆரம் பொருந்திய
சிறுவெண் பல்லி போலத் தன்னொடு
சுரம்பல வந்த எமக்கும் அருளி,
வியன்மலர் அகன்பொழில் ஈமத் தாழி
அகலி(து) ஆக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம்செய் கோவே!"

புறநானூறு 331உம் பாடலில் உறையூர் முதுகூத்தனார் என்னும்
புலவர் செங்கற்களை யறுத்துக் கட்டிய உப்புநீர்க் கிணற்றை
யுடைய ஊரைப் பற்றித் தெரிவிக்கின்றார்.
"கல்லறுத்(து) இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்லேர் வாழ்க்கைச் சீறூர்". உவர்க் கூவல்=உப்புநீர்க் கிணறு.

பட்டினப் பாலை என்னும் சங்க நூலில் புலவர் கடியலூர் உருத்திரங்
கண்ணனார் 75ஆவது வரியில்,
"பறழ்ப்பன்றிப் பல்கோழி உறைக்கிணற்றுப் புறச்சேரி"
என்று பூம்புகார்ப் புறச்சேரியைப் பற்றிப் பாடியுளார்.
உறைக் கிணறு= உறை செருகிய கிணறு.
 

மதுரைக்கு அருகில் உள்ள ஊர் என்ற காரணத்தால்
மதுரை நகர நாகரிகம் கீழடியில் நிலவியிருக்க
வாய்ப்புண்டு. அல்லது, சில ஆராய்ச்சி அறிஞர்கள்
கூறுவது போலக் கீழடி ஊரே சங்க கால மதுரையாக
இருக்கவும் வாய்ப்புள்ளது.

எது எப்படி இருப்பினும் தமிழ்நாட்டில் நகர நாகரிகம்
நிலவியதற்குச் சான்றில்லை என்று கூறிவந்த
வரலாற்று ஆய்வாளர்கள் திகைக்கும் வண்ணம்
மிகச் சிறந்த நகர நாகரிகம்  கீழடியில் நிலவியதற்குத்
தரவுகள் கிடைத்துவிட்டன. சங்க நூல்களிலும் இக்
கூற்றை உண்மையென வலியுறுத்தும் பாடல்கள்
காணக் கிடைக்கின்றன. எனவே, சங்கப் புலவர்கள்
மிகைப்படுத்திப் பாடவில்லை. உண்மையைத்தான்
பாடியுள்ளனர் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

மதுரை குறைந்தது 2600 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில்
உருவானது. மதுரை இராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய
இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி.77 ஆம் ஆண்டில்
கிரேக்க வரலாற்று ஆய்வாளரான பிளினி என்பவரும்
அவரைத் தொடர்ந்து  கி.பி.140ஆம் ஆண்டில் தாலமி ஏன்பவரும்
மதுரைக்கு வந்துள்ளனர். இதனைப் பற்றித் தமது பயண நூலில்
குறிப்பிட்டுள்ளனர். மெகஸ்தனிஸ் என்ற கிரேக்க நாட்டுத் தூதர்
தமது 'இண்டிகா' என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார். கௌடில்யர்
என்ற சாணக்கியர் தமது 'அர்த்த சாஸ்திரம்' என்ற நூலில் மதுரை
யைப் பற்றி உயர்வாகக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் மகா
வமிசம் என்ற நூலில் விசயன் என்னும் இலங்கையின் முதல் மன்னன்
மதுரை இளவரசியைத் திருமணம் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு பாண்டியர்கள் ஆட்சி நடத்
தினர். மூன்றாம் தமிழ்ச் சங்கத்தை மதுரையில் நிறுவிய பாண்டியர்கள்
தமிழறிஞர்கள் மூலமாகத் தமிழைப் பேணி வளர்த்தனர். இதனால் இம்
மதுரை மூதூர் தமிழோடு நெருங்கிய தொடர்பு கொண்டு விளங்கியது.

சங்க நூல்களில் பல நூல்கள் ஆங்காங்கே மதுரையைப் பற்றிக்
குறிப்பிட்டாலும் மதுரைக் காஞ்சியும் பரிபாடலும் மதுரையை
மிக விரிவாக விவரிக்கின்றன.பரிபாடலில் மதுரை, திருமாலின்
கொப்பூழிலுள்ள(தொப்புள் என்பது பேச்சு வழக்கு) தாமரை மலரைப்
போன்று இருப்பதாகக் குறிப்பிடப் படுகிறது. அந்தத் தாமரைப் பூவின்
இதழ்களைப் போலத் தெருக்கள் தோன்றுவதாகவும், இதழின் நடுவே
இருக்கும் பொகுட்டு போன்று சொக்கநாதர் கோவில் அமைந்துள்ள
தாகவும் கூறப்பட்டுள்ளது.  அங்கு வாழும் தமிழ்க் குடிமக்கள் அப்பூவி
லிருக்கும் மகரந்தத் தாது போன்றவர்கள் என்றும்,  மதுரைக்கு வந்து
பரிசில் பெற்றுச் செல்பவர்கள் அப்பூவிலுள்ள தேனை உண்ணும்
பறவைகள் போன்றவர்கள் என்றும் இயம்புகிறது. அத் தாமரைப்
பூவில் தோன்றியவன் பிரமன்; அவன் நாவில் தோன்றியவை நான்கு
வேதங்கள் என்றும்  இந்த வேதத்தை ஓதும் ஒலியைக் கேட்டு மதுரை
மக்கள் துயில் எழுவர் என்றும்  பகர்கிறது. மதுரை மக்கள் சேரனது
வஞ்சி நகரத்தில் வாழ்வோரைப் போலவும், சோழனது உறையூரில்
வாழ்வோரைப் போலவும் கோழியின் கூவுதல் ஒலி கேட்டுத் துயில்
எழமாட்டார்கள் என்று பறைசாற்றுகின்றது. பாடல் பின்வருமாறு:
"மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர்; பூவின்
இதழகத்(து) அனைய தெருவம்; இதழகத்(து)
அரும்பொகுட்(டு) அனைத்தே அண்ணல் கோயில்;
தாதின் அனையர் தண்தமிழ்க் குடிகள்;
தாதுண் பறவை அனையர் பரிசில்வாழ்நர்;
பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த
நான்மறைக் கேள்வி நவில்குரல் எடுப்ப,
ஏம இன்துயில் எழுதல் அல்லதை
வாழிய வஞ்சியும் கோழியும் போலக்
கோழியின் எழா(து)எம் பேரூர் துயிலே".

இனி, மதுரைக் காஞ்சியில் மதுரையின் செழிப்பும், வளமும்
வலிமையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் எவ்வாறு விவரிக்கப்
பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்:
ஆழமாகத் தோண்டப்பட்டுள்ள நீலமணி போன்ற நீரையுடைய
அகழியையும், விண்ணைத் தொடுமளவு உயர்ந்த பல படை
களையுடைய மதிலினையும் கொண்டது மதுரை நதரம். மேலும்,
பண்டைக் காலந் தொட்டு வல்லமை நிலைபெற்றதும் தெய்வத்
தால் பாதுகாக்கப்பட்டதும் ஆகிய நெடிய நிலையினையும், நெய்
பல முறை பூசப்பட்டதால் கருகிய நிறத்தையும் திண்மையையும்
கொண்ட கதவினையும் கொண்டது அந்தக் கோட்டை.. அதனுள்
மேகம் உலாவும் மாடங்களோடும் வைகை போன்ற இடையறாத
மக்கள் போக்கு வரத்துடைய வாயிலோடும் சில்லென வீசும்
காற்று ஒலிக்கும் சாளரங்களோடும் விளங்கிய நல்ல இல்லங்கள்
அமைந்த ஆறு கிடந்தாற் போன்று அகன்ற நெடிய தெருக்களைக்
கொண்டது  மதுரை நகரம். பாடல் பின்வருமாறு:(வரி:351 --360):
"மண்ணுற ஆழ்ந்த  மணிநீர்க் கிடங்கின்
விண்ணுற வோங்கிய பல்படைப் புரிசைத்
தொல்வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை
நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்
மழையாடு மலையின் நிவந்த மாடமொடு
வையை யன்ன வழக்குடை வாயில்
வகைபெற எழுந்து  வானம் மூழ்கி
சில்காற்(று) இசைக்கும் பல்புழை நல்லில்
யாறுகிடந் தன்ன அகனெடுந் தெருவிற்
பல்வேறு குழாஅத் திசையெழுந்(து) ஒலிப்ப",

மேலும், வாணிபம் மற்றும் தொழில்கள் செவ்வனே நடைபெற்றன.
பல்வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னை
யும் வாங்கிக் கொண்டு சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை
விற்போர் இருந்தனர். மழை தவறாமல் பெய்ததால் பொய்க்
காத விளைச்சலை யுடைய பழையன் என்னும் மன்னனின்
மோகூரில் அரசவை  நிகழுமாறு நான்மொழிக் கோசர் கம்பீர
மாய் வீற்றிருந்தாற் போன்று  நாற்பெருங் குழுவினர் தோர
ணையாக அமர்ந்திருந்தனர்.  சங்கினை யறுத்துக் கடைவா
ரும், அழகிய அணிகளைத் துளையிடுவாரும், கடுதலுள்ள
நல்ல பொன்னால் விளங்கும் அணிகலன் செய்வாரும், பொன்
னை உறைத்து அதன் மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்
பாரும், செம்பை நிறுத்துக் கொள்வாரும் அங்கே குழுமியிருந்த
னர். பாடல் வரிகள் பின்வருமாறு: (வரிகள்: 503 --514)
"பல்வேறு பண்டமோ(டு) ஊண்மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும். நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு
சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழை யொழுக் கறாஅப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றி யன்ன
தாம்மேல் தோன்றிய நாற்பெருங் குழுவும்
கோடுபோழ் கடைநரும் திருமணிக் குயினரும்
சூடுறு நற்பொன் சுடரிழை புனைவரும்
பொன்உறை காண்மரும் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை  கொண்மரும் வம்புநிரை முடிநரும்"
மதுரை அங்காடிகளில் வலம்வந்தனர். ஓவியம்
எழுதும் வித்தகர் கண்ணுள் வினைஞர் என அழைக்கப்
பட்டனர். பகலில் செயல்படும் கடைகள் நாளங்காடி என்றும்
இரவில் செயல்படும் கடைகள் அல்லங்காடி என்றும் அழைக்
கப் பட்டன. தெருக்களில் என்ன பொருள் விற்கப் படுகிறது
என அறிவிக்கும் கொடிகள் பறக்கவிடப் பட்டிருந்தன.

வைகை நதி வெகுவாகப் புகழப்பட்டுள்ளது. "வையை என்னும்
பொய்யாக் குலக்கொடி" என்றும் "ஆற்றுப் பெருக்கற்(று) அடி
சுடும் நாட்களிலும் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் வையை"
என்றும் இலக்கியங்களில் வையை வெகுவாகப் புகழப்பட்டுள்ளது.
பரிபாடலில் வையையில் வெள்ளம் வருவதைப் பற்றி எவ்வாறு
விவரிக்கப்பட்டுள்ளது என்று பார்ப்போம். காற்று சுழன்றடிப்பதாலும்
மின்னல் வெட்டிக் கண்ணைக் குருடாக்குவதாலும் வானமே இருளா
யிற்று. மேலை மலையில் சாரல் மழை பொழிந்தது. நாகம், அகரு
(அகில்), வழை, ஞெமை, ஆரம்(சந்தனம்), தகரம், ஞாழல் முதலான
தார வகைகளை(தரும் கொடைப் பொருட்களை)ச் சுமந்து கொண்டு
வெள்ளமானது வையை ஆற்றில் கடல்போல் பெருக்கு எடுத்து வந்தது.
வையை வெள்ளம் மதுரை மதிலைத் தாக்குகிறது என்று நகரிலுள்ளோர்
பேசுவதை அனைவரும் கேட்டனர். பாடல் பின்வருமாறு:(வரிகள் (1 --10):
"வளிபொரு மின்னொடு வானிருள் பரப்பி
விளிவின்று; கிளையடு மேல்மலை முற்றி
தளிபொழி சாரல் ததர்மலர் தாஅய்;
ஒளிதிகழ் உத்தி உருகெழு நாகம்
அகரு, வழை ஞெமை, ஆரம் இனைய
தகரமும் ஞாழலும் தாரமும் தாங்கி
நளிகடல் முன்னியது போலும் தீம்நீர்
வளிவரல் வையை வரவு;
வந்து மதுரை மதில்பொரூஉம் வான்மலர் தாஅய்
அந்தண் புனல்வையை யாறு".

இவ்வளவு  வளமான, வற்றாத வையை  இற்றை நாளில்  நீரின்றி
வறண்டு காணப்படுவது மனத்துக்கு வேதனையளிக்கிறது. வருச
நாட்டு மலையிலிருந்து உற்பத்தியாகும் வையை ஆறு தன்னோடு
கலக்கும் துணை அல்லது கிளை ஆறுகளின் தொடர்பைத் துண்டித்
திருக்கலாம். அல்லது துணை அல்லது கிளை ஆறுகள் காலப் போக்
கில் வழக்கமான பாதையை மாற்றிக் கொண்டிருக்கலாம். என்ன
சிக்கல் நேர்ந்தது என்று கண்டுபிடித்துச் சரிசெய்து விட்டால் வையை
பழைய வளத்தையும் சிறப்பையும் மீண்டும் பெற்றுவிடும். இதன்
மூலம் மதுரை பண்டைய சிறப்பை மீண்டும் அடையும் என்பதில் எள்
அளவும் ஐயமில்லை.

மதுரைக்கு மிக அருகில் வையை ஆற்றங்கரையை ஒட்டி அமைந்துள்ள
கீழடி என்னும் ஊரில் நடத்தப்பட்ட அகழாய்வில் மதுரைக் காஞ்சியில்
விவரிக்கப்பட்ட அனைத்து அம்சங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சில தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்வது போலக்  கீழடியே சங்க கால
மதுரையாகத் திகழ்ந்திருக்கலாம்.