Saturday 19 December 2020

பனிக்காலம் மிக நன்று.

 பனிக் காலம் மிக நன்று.


இச்சொற்றொடர் பனிக்காலத்தின் கொடுமையை விளக்குகின்றது.

பனிக்கு+ஆலம் எனப் பிரித்தால் பனி, ஆலம்(நஞ்சு) என்ற இரண்டில்,

பனியை விடவும் நஞ்சின் துயரம் குறைவான கொடுமை உடையதே;

அதாவது பனியை விடவும் நஞ்சு நன்று என்று பொருள்படும்.ஏனெனில்,

பனியால் மேனி நடுநடுங்கும். கை, கால் விறைத்துப்போகும். வாய்

உளறும். வார்த்தை குழறும்.எனவே பனியினால் ஏற்படும் பாதிப்பைச்

சொல்லி மாளாது. .பனிக் கொடுமையை வலியுறுத்தப் பனிக்காலம்

மிக நன்று என்று வேடிக்கையாகச் சொன்னார்கள். உண்மையில்

இரண்டுமே மனித குலத்துக்கு ஆபத்தானதே.


.பனிக் கொடுமையைத் தாங்குவதற்கு மேனி முழுவதும் போர்த்துக் கொள்

வது  உடனடி பயன் கொடுக்கும். கைவசம் போர்வை இல்லாவிடில் தத்தம்

கைகளைக் கொண்டு மேனியைப் போர்த்துக் கொண்டால் உடலுக்குக் குளிரைத்

தாங்கும் தெம்பு கிட்டும்; உடல் கதகதப்பை  உணரும். இனி, இலக்கியத்தில் பனி

யைப் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்:


முத்தொள்ளாயிரம் எனும் தெவிட்டாத இலக்கியத்தில் ஒரு பாடல் பயின்று வரு

கிறது. கடும் பனி பொழியும் முன்னிரவு நேரத்தில் சேர 

வேந்தன் உலா வருகின்

றான். அவனைக் காணும்ஆவலுடன் தெருவில் இருமருங்கும் மக்கள் நின்று

கொண்டிருக்கின்றனர். அம்மக்கள் தத்தம் கைகளையே போர்வையாகப் பயன்

படுத்திக் குளிரைத் தாங்கிக் கொள்கின்றனர். அக்கூட்டத்தில் ஒரு பருவப் பெண்

ணும் சேர மன்னனைக் காணும் ஆவலில் தன் கைகளினால் தன் உடலைப் போர்த்

திக் கொண்டு ஆவலினால் நெஞ்சம் படபடக்க, கடும் பனியால் மேனி நடுநடுங்க

நிற்கின்றாள். பாடலைப் பார்ப்போம்:

"கடும் பனித் திங்கள்தன் கைபோர்வை யாக

நெடுங்கடை நின்றதுகொல் தோழி!--நெடும்சினவேல்

ஆய்மணிப் பைம்பொன் அலங்குதார்க் கோதையைக்

காணிய சென்றவென் நெஞ்சு."


சக்திமுற்றப் புலவர் மதுரையில் பாண்டிய வேந்தனைச்

சந்தித்து அவர்முன் பாடிப் பரிசில் பெற எண்ணி வந்தார்.

ஆனால் வேந்தரைச் சந்திக்க இயலவில்லை. அவருக்குத்

தெரிந்தவர்கள் மதுரையில் யாரும் இல்லாததால் ஒரு

வீட்டுத் திண்ணையில் தங்கினார். கடுமையான பனிக்

காலம். அவர் கைவசம் போர்வை ஏதும் இல்லை. தம் பரி

தாப  நிலையைப் பற்றிப் பாடத் தொடங்கினார்:

"நாராய்! நாராய்! செங்கால் நாராய்!

பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்!

நீயும் நின் பெடையும் தென்திசைக் குமரியாடி

வடதிசைக்  கேகு  வீரே யாயின்

எம்மூர்ச் சக்திமுத்த வாவியுள் தங்கி

நனைசுவர்க் கூரை கனைகுரல் பல்லி

பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு

எங்கோன்  மாறன் வழுதி கூடலில்

ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது போர்த்திக்

காலது  கொண்டு மேலது தழீஇப்

பேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

ஏழை யாளனைக் கண்டனம் எனுமே".


சீவக சிந்தாமணி நூலில்திருத்தக்க தேவர் மக்கள்

பனியால் ஏற்படும் நடுக்கத்தைத் தடுக்க எலிமயிரால்

ஆகிய போர்வையை விரும்பிப் போர்த்திக் கொண்டனர்

என்று பாடியுள்ளார். அது பின்வருமாறு:

"கொங்கு விம்முபூங் கோதை மாதரார்

பங்க  யப்பகைப் பருவம் வந்தென

எங்கும் இல்லன  எலிம யிர்த்தொழிற்

பொங்கு பூம்புகைப் போர்வை மேயினார்".


அந்நாளில் முன்பனிக் காலத்தில் குளிரின் கொடுமையை

விலக்க இளநிலா முன்றிலில் அமர்ந்து இளவெயில் நுகர்ந்

தனர் என்று தெரிவிக்கின்றார் இளங்கோவடிகளார். அச்

சிலப்பதிகார வரிகள் பின்வருமாறு:

"வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி

இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர

விரிகதிர் மண்டிலத் தெற்கேர்பு வெண்மழை

அரிதில் தோனறும் அச்சிரக்  காலை'.

பனிக் காலத்துக் குளிரைத் தாங்கிக் கொள்ள மக்கள் இளநிலா

முன்றிலில் இளவெயிலில் குளிர்காய்ந்தனர்.


பனிக் காலத்துக் குளிருக்கு இதமாக‌ இஞ்சி சேர்ந்த நீரும் நன்கு

விளைந்த அரிசிப் பொரியும் மக்கள் அருந்தினர் எனச் சீவகசிந்தா

மணி நூலில் திருத்தக்க தேவர் குறிப்பிடுகின்றார்.

"அளித்த தீம்பழம் இஞ்சி யார்ந்தநீர்

விளைந்த வல்விளை வரிசி வேரியும்

வளைந்த மின்னனார் மகிழ்ந்து சண்பகம்

உளைந்து மல்லிகை பொலியச் சூடினார்".


திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களிலும் பனியின் கொடுமை

விவரிக்கப்பட்டுள்ளது. சங்க இலக்கிய நூல்களிலும் பனியைப்பற்றி

விரிவாகக் கூறப்பட்டுள்ளது. மார்கழி, தை, மாசி, பங்குனி மாதங்களில்

பனியின் கொடுமை  மிக அதிகம்.எனவேதான் பனிக்கு ஆலம்(நஞ்சு)

மிக நன்று என்று வேடிக்கையாகவும் ‌வேதனையாகவும் சொல்லிப்

புலம்பினர்.

Tuesday 1 December 2020

ஒட்டக்கூத்தர் திருவடியைச் சூடும்

 ஒட்டக்கூத்தர் பதாம்புயத்தைச் சூடும் குலோத்துங்கசோழர்,


புலவர் பாதங்களை முடியுடை வேந்தர் சூடிக்கொள்வது இய

லுமா? என்று குழம்பத்  தேவையில்லை. இந்தச் சொற்றொட

ரைச் சொன்னவரே குலோத்துங்க சோழர்தாம்,, என்ன விவ

ரம் என்று பார்ப்போம்


தமிழ்ப்புலவர்களிலேயே ஒட்டக்கூத்தர் மிகவும் பாக்கியம்

செய்தவர். அவர் காலம் வரலாற்றில் தெளிவாகச் சொல்லப்

பட்டுள்ளது, ஏறத்தாழ எண்பது. ஆண்டுகளுக்கு மேல்  உயிர்

வாழ்ந்த அன்னார் தமது ஆயுள் முழுவதும் செல்வாக்கோடும்

மதிப்போடும் ஓரளவு வசதியாகவும் வாழ்ந்தவர், இதற்குக்

காரணம் அவர் வரலாற்றில் முந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக

நிலைத்து நின்ற சோழ வேந்தர்களின் ஆதரவில் வாழ்ந்தது தான்.

விசயாலயச் சோழர் தொடங்கி வைத்த இடைக்காலச் சோழப்

பேரரசு மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் வரை வெற்றி

கரமாக நிலைத்து நின்றது. முதலாம் குலோத்துங்க சோழன் உயிர்

நீத்த பிறகு விக்கிரம சோழர் பட்டத்துக்கு வந்தார்.(1120--1136);

அவருக்குப் பின் அவர் மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன்

அரியணை ஏறினார்(1136---1150);  அவர் மறைவுக்குப் பின்னர்

அன்னாரின் புதல்வர் இரண்டாம் ராசராச சோழர் ஆட்சிக்கு வந்

தார்(1150--1163); ஆக  மூவருக்கும் ஆசானாகவும் அவைக்களப்

புலவராகவும் ஒட்டக்கூத்தர்  பணியாற்றினார். மூன்று வேந்தர்களு

மே ஒட்டக்கூத்தரிடம்  பேரன் போடும் பெருமதிப் போடும் நடந்து

கொண்டனர். கூத்தர் பிரானும். மிகுந்த இராச விசுவாசத்தோடு பணி

செய்தார். தமிழ்மொழி மற்றும் வடமொழி ஆகிய இரு மொழிகளையும்

ஐயம் திரிபறக் கற்று மூன்று வேந்தர்கள் மீதும் பல இலக்கியங்களையும்

தனிப்பாடல்களையும்(மூவருலா முதலானவை) இயற்றியுள்ளார்.


ஒவ்வொரு நாளும் புதுப்பாடல் இயற்றியோ, சோழ வேந்தர்கள் மீது பாடப்பட்ட.

பழைய  பாடல்களைச் சொல்லியோ அவையைத்  தொடங்கி வைப்பது

கூத்தரின் வழக்கம்,  அன்று புதுப் பாடல் ஒன்றைச்் சொல்லத் தொடங்கினார்,

"ஆடும்  கடைமணி  நாவசை யாமல் அகிலமெங்கும்

நீடும் குடையைத் தரித்த பிரான்இந்த. நீணிலத்தில்"

என்று பாடிக் கொண்டிருந்த பொழுது  இரண்டாம் குலோத்துங்க சோழர் இடை

மறித்துப் பாடலைத் தொடர்ந்தார்:

"பாடும் புலவர் புகழ்ஒட்டக் கூத்தர் பதாம்புயத்தைச்

சூடும் குலோத்துங்க சோழனென் றேயென்னைச் சொல்லுவரே".

இவ்வாறாகப் பாடி முடித்தார்,  அவையில் வீற்றிருந்த அனைவரும் திகைத்துப்

போனார்கள்.ஒட்டக்கூத்தரைப்பொறாமைக் கண்களால் நோக்கினர். ஒட்டக்கூத்தர்

ஒருகணம் வாயடைத்துப் போயிருந்தவர் ‌ மெல்லப்பேசத் தொடங்கினார. "வேந்தே!

இந்த ஏழைப் புலவனை மிகவும் உயர்த்திவிட்டீர்கள். எனக்கு வாயடைத்து ப் போய்

விட்டது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்களோ முடியுடை வேந்தர்.

நான்தங்களை அண்டி  வாழும் ஏழைப் புலவர்"" என்று தழுதழுத்த குரலில் கூறி

னார்,  சோழர் கூத்தரின் இருகரங்களையும் பற்றிக் கொண்டு "ஐயா! தாங்கள் எங்

கள்  அவைக்களப்  புலவர் மட்டும் அல்லர்; என் தந்தைக்கும் எனக்கும்  ஆசிரியராக

வும் திகழ்ந்தவர். கவிச்சக்கரவர்த்தி யாக விளங்கும்  தங்களின் பாத கமலங்களைச்

சூடிக்கொள்ளுதல்  நான் பெற்ற பெரும் பேறாகும்; இப்படிப் பாடியமைக்காக அறத்

துன்பம் அடையற்க" என்றார்."

பாடலின் பொருள்:

கடைமணி--- மக்கள் தம் குறைகளைத் தெரிவிக்க அடிக்கும் மணி(ஆராய்ச்சி மணி);

."ஆராய்ச்சி மணியின் நாவசையாமல்(மக்கள் தம் குறைகளைத் தெரிவிப்பதற்காகக்

கடைமணியை அடிக்க வேண்டிய தேவையே எழாமல் நீதியோடும் நேர்மையோடும்

ஆட்சிபுரிந்த, நெடிய வெண்கொற்றக்குடையைத் தாங்கியுள்ளவர் யாரென்றால்"

இவ்வாறு கூத்தர் பாடிக் கொண்டிருந்த பொழுது  சோழ வேந்தர் இடைமறித்து

"பலப்பல பாடல்களை இயற்றியுள்ள புலவர் கவிச்சக்கரவர்த்தி  ஒட்டக் கூத்தர்

திருவடித் தாமரைகளைத் தலைமேல் சூடிக் கொள்ளும் அவரின் மாணாக்கனாகிய

குலோத்துங்க சோழன் என்று என்னைச் சொல்லுவார்கள்" என்று பாடி முடித்தார்.


இப்பாடல் வாயிலாக ஒட்டக் கூத்தரின் இராச விசுவாசமும் குலோத்துங்க சோழ

ரகு குருபக்தியும்  புலப்படுகின்றன.,

Sunday 15 November 2020

விழவு முதலாட்டி

 (குறுந்தொகைப் பாடலின் அடிப்படையில் புனையப்பட்ட சிறுகதை)

விழவு முதலாட்டி


கதிரவன் தன் வெள்ளிக் கம்பி போன்ற ஒளிக்கதிர்களைப் பரப்பிக் கொண்டு கிழக்குத் திசையில் எழுந்த நேரம்,

அக்கீற்றுக்கள் மேலே பட்டவுடன் இளஞ்சூட்டை உணர்ந்த இளங்கீரன் விடிந்துவிட்டதை அறிந்து படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தான். காலையில் படைக்கலப் பயிற்சி மேற்கொண்டால் முல்லை நிலத்து ஆனிரைகளப் பாதுகாக்க இயலும், மேலும் போர்க்காலங்களில் படைக்கு ஆள் திரட்டும் போது படையிற் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்க இயலும், எனவே காலை நேரப் படைக்கலப் பயிற்சியைத் தவற விடுவதே யில்லை. துணைக்குத் தன் பாங்கன் இளங்கண்ணனை அழைத்துச் செல்வது வழக்கம். அன்றும் படைக்கலங்களை எடுத்துக்கொண்டு இளங்கண்ணன் இல்லத்துக்குச் சென்று அவனையும் எழுப்பி அழைத்துக்கொண்டு வழக்கமாகச் செல்லும் வனப்பகுதிக்குச் சென்றான். 

செண்பகத்தோப்பு என்னும் அவ்வனப்பகுதி மரங்கள் நெருங்கி வளர்ந்த அடர்த்தியான காட்டுப்பகுதி, சுள்ளி பொறுக்குபவர்களைத் தவிரப் பிறர் பெரும்பாலும் அங்கு வருவதில்லை. ஏனெனில் காட்டு விலங்குகளான யானை, புலி, கரடி, காட்டெருமை முதலானவை சில சமயங்களில் உலா வரும். கொன்றை, குருந்து, காயா, மா, ஆல் முதலிய மரங்கள் கிளைகளைப் பரப்பி நின்றன. இருவரும் ஒரு பெரிய ஆலமரத்தடியின் கீழ் படைக்கலங்களை வைத்துவிட்டுச் சிறிது நேரம் அமர்ந்தனர். அருகில் யானைச்சாணம் தெரிந்தது. அதை மிதித்துப் பார்த்த இளங்கீரன் “” இளங்கண்ணா ! யானைச் சாணம் சூடாக உள்ளது. அண்மையில்தான் யானை நடமாடிக் கொண்டிருக்கும்” என்றான்.

அவன் சொன்னதுதான் தாமதம் பெண்களின் அலறல் ஓசை அருகில் கேட்டது. ஓசை வந்த திக்கை நோக்கிச் சென்ற இருவரும் அருகிலுள்ள சிறிய பாறையிலிருந்து விழும் அருவியின் கீழ் இரு பெண்கள் நீராடிக்கொண்டிருந்ததைக் கண்டனர். அந்தப் பாறைக்குச் சற்றுத் தொலைவில் ஒரு காட்டுயானை நின்று கொண்டிருந்தது. எவ்வளவு பெரிய கேடு வரவுள்ளது என்றெண்ணிய இருவரும் விரைந்து ஓடிச்சென்று பெண்களைக் கைப்பிடித்து அண்டையில் உள்ள மிகப்பெரிய ஆலமரத்தடி நோக்கி அழைத்துச் சென்றனர். ஒவ்வொருவனும் ஒவ்வொரு பெண்ணைத் தூக்கி ஆலமரத்தில் ஏற்றிவிட்டு மளமளவெனத் தாங்களும் ஏறிக்கொண்டார்கள். இதனைக் கண்ணுற்ற ஒற்றை யானை பெருங்குரலெடுத்துப் பிளிறிய படியே அவர்களை நோக்கி ஓடி வந்தது. இளங்கீரனும், இளங்கண்ணனும் அப்பெண்களை மரத்தில் மேல்நோக்கி ஏறிச் செல்லுமாறு கூறித் தாங்களும் அவ்வாறே உயரே ஏறிச் சென்றனர். இதற்கிடையில் மரத்தடியை அடைந்த யானை சீற்றத்தோடு ஆலமரத்தை முட்டியது. தும்பிக்கைக்கு அகப்பட்ட கிளைகளை ஒடித்துப் போட்டது. உரமாக மரத்தை அசைத்துப் பார்த்தது. ஆலமரத்தின் அடிப்பகுதி பரந்து விரிந்திருந்தது. மேலும் நாட்பட்ட மரமாகும். எனவே யானையால் அதனை வீழ்த்த இயலவில்லை. நெடு நேரம் மோதிப்பார்த்த யானை களைப்படைந்து ஒதுங்கிச்சென்றது. கண்ணிலிருந்து முற்றிலுமாக யானை மறைந்த பிறகு நால்வரும் மரத்திலிருந்து இறங்கத் தொடங்கினர். இளங்கீரன் ஒருத்தியை இறக்கிவிட்டான். இளங்கண்ணன் மற்றொருத்தியை இறக்கிவிட்டான்.

மரத்திலிருந்து நால்வரும் இறங்கிய பிறகு இளங்கீரன் அப்பெண்களை உற்று நோக்கினான். இருவரில் ஒருத்தி மாநிறம் கொண்டவளாக இருந்தாலும் பேரழகியாகத் தோன்றினாள். கருமையான செறிந்த கூந்தல், கயல் போன்ற கண்கள், எடுப்பான நாசி, மாம்பழக் கன்னம், முத்துப்பற்கள், செவ்விய இதழ்கள், கண்ணை உறுத்தும் முன்னழகு, ஆலிலை போல் வயிறு, சிறுத்த இடை, சங்குக் கழுத்து இன்னும் பிற அழகுகளோடு வானத்திலிருந்து வந்த தேவதையைப் போல் தோன்றினாள். இளங்கீரன் அவளைப்பார்த்துத் திகைத்துப் போனான். மற்றொருத்தியும் பேரழகியாக இல்லாவிட்டாலும் களையான தோற்றம் காட்டி நின்றாள்.

இளங்கீரன் அப்பெண்களை நோக்கி “நீவிர் யாவர்?, இவ்வளவு தீங்கு மிகுந்த இடத்துக்கு வரக் காரணம் என்ன?” என்று வினவினான். பேரழகி யாதொன்றும் பேசவில்லை. உடன் வந்தவள் பேசினாள். “ ஐயா, நாங்கள் அருகிலுள்ள ஆயர்பாடியைச் சேர்ந்தவர்கள். இங்குள்ள தீங்குகளைப் பற்றி அறியாமல் அருவியில் நீராட வந்தோம். என் பெயர் நச்செள்ளை ; இவள் பெயர் நன்முல்லை. இவள் தந்தை ஆயர்பாடித் தலைவர். இவளுக்கு நான் பாங்கி. தாங்கள் செய்த பேருதவிக்கு மிக்க நன்றி. வருகிறோம்” என்று கூறிக் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.

அவர்கள் சென்ற பிறகும் இளங்கீரன் திகைப்பிலிருந்து நீங்காமல் நின்றான். நன்முல்லையின் பேரழகு அவனை நிலைகுலையச் செய்தது. இப்படிப்பட்ட பேரழகியின் கையைப் பிடிக்க என்ன தவம் செய்தேனோ? என்று எண்ணிக்கொண்டான். தன் குடியிருப்பான ஆயர்பாடியைச் சேர்ந்தவள் என்ற போதிலும் இவள் இதுகாறும் என் கண்ணில் படவில்லையே? என்று நினைத்துக் கொண்டான். அப்பொழுதுதான் அவனுக்குச் சில செய்திகள் நினைவுக்கு வந்தன. கடந்த சில ஆண்டுகளாக அவன் மதுரையிலுள்ள ஆசீவகப் பள்ளியில் தங்கிக் கல்வி கற்றதை நினைவு கூர்ந்தான். அவளை மறுபடியும் பார்க்க ஆவல் கொண்டான்.

நன்முல்லையும் ஏறத்தாழ இதே நிலையில் தான் இருந்தாள். கருமையான சுருண்ட முடியோடும், செருக்கான் மீசையோடும், வீறு கொண்ட தோற்றத்தோடும், நீண்ட கைகளோடும், விம்மிப்புடைத்த தோள்களோடும் ஆண்மையே ஓருருவம் கொண்டு வந்தது போலத் தோன்றினான். அவன் கையால் தன் கையைப் பற்றி இழுத்துச் சென்றது, மரத்தில் தன்னைத் தொட்டு ஏற்றிவிட்டது மரத்திலிருந்து தன்னை இறக்கியது என்று அன்றைய நாளில் நிகழ்ந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் நினைவு கூர்ந்து அசை போட்டுக் கொண்டிருந்தாள். மறுமுறையும் அவனைச் சந்திக்க மிக்க ஆவல் கொண்டிருந்தாள்.

மறுநாள் பொழுது புலர்ந்தது. படுக்கையிலிருந்து எழுந்த இளங்கீரன் மளமளவென்று குளித்துவிட்டுத் தன் பாங்கன் இளங்கண்ணனைச் சந்திக்க எண்ணி அவன் இல்லம் நோக்கி நடந்து சென்றான். இதற்கிடையில் நன்முல்லையும், நற்செள்ளையும் பால், மோர், தயிர், வெண்ணெய் முதலியவற்றை மண் கலயங்களில் ஊற்றி அவற்றை ஒரு கூடையில் வைத்துக்கொண்டு மருதநிலப் பகுதியில் அவற்றை விற்று நெல், காய்கறிகள், கரும்பு முதலானவற்றை வாங்கிவரக் கிளம்பி வந்து கொண்டிருந்தனர். வழியில் இளங்கீரன் அவர்களை எதிர்கொண்டான். நன்முல்லை அவனைக் கண்டவுடன் மேற்கொண்டு நடவாமல் நின்றுவிட்டாள். அவ்விருவரின் செய்கைகளைக் கண்ட பாங்கி ஏதோ உணர்ந்தவளாக விறுவிறு என்று முன்னோக்கி நடந்து ஒரு மரத்தடியில் நின்று கொண்டாள்.

நச்செள்ளை ஒதுங்கிக் கொண்டதால் இளங்கீரனும், நன்முல்லையும் தனித்து விடப்பட்டனர். சிறிது நேரம் யாதொன்றும் பேசாமல் அமைதி காத்தனர். முதலில் இளங்கீரன் பேச்சைத் தொடங்கினான். “நன்முல்லை ! கண்டதும் காதல் என்பது உண்மைதான், உன்னைப் பார்த்த முதல் நொடியிலிருந்தே என் நெஞ்சை உன்பால் ஈர்த்துவிட்டாய் இனிமேல் உன்னை என்றும் பிரியேன். பிரிந்தால் உயிர் தரியேன்” என்றான். நன்முல்லை நாணத்தால் தலை கவிழ்ந்து கால் விரல்களால் தரையைக் கீறிக்கொண்டிருந்தாள். பின்னர் அவனை ஏறிட்டுப்பார்த்து என் நிலைமையும் அதுவே. நீர் என் கையைப் பற்றி இழுத்துச் சென்றது, என் மேனியைத் தொட்டு மரத்தில் ஏற்றிவிட்டது, பிற்பாடு இறக்கி விட்டது போன்ற நிகழ்வுகளால் யான் என்னை இழந்துவிட்டேன். எப்போதும் உம் அருகிலேயே இருத்தல் வேண்டும் என்று விரும்பினேன்” என்றாள். அவன் அவள் கைகளைப் பற்றி மென்மையாகத் தடவினான். அவளைத் தழுவ எண்ணி அருகில் நெருங்கிய பொழுது நச்செள்ளை பெருங்குரலில் நன்முல்லையை அழைத்தாள். உடனே கைகளை உதறிவிட்டு நன்முல்லை ஓடிவிட்டாள்.

அடுத்தடுத்து இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். சிலசமயம் பகலில் நன்முல்லை வரத்தவறிய பொழுது இரவில் சந்தித்துப் பேசினார்கள். ஊரார் சிலர்  இவர்களின் களவியலைப் பார்த்துத் தங்களுக்குள் கமுக்கமாகப் பேசிக்கொண்டார்கள். இதனைக் கேள்விப்பட்ட பாங்கி இருவரையும் நோக்கிப் "பெரிய அளவில் ஊர்மக்கள் பழிச்சொல் கிளப்புமுன்(அலர்,கௌவை) அறத்தொடு நின்று(களவியலை வெளிப்படுத்தி) வதுவை செய்து கொள்வது சாலச் சிறந்தது" என்றாள்.எனவே இளங்கீரன் நன்முல்லையின் தந்தையைச் சந்தித்து மகட்கொடை கேட்டல் வேண்டும் என நினைத்தான்.

அடுத்த நாளே இளங்கீரன் நன்முல்லையின் இல்லத்திற்கு வந்து அவள் தந்தையிடம் பெண் கேட்டான். அவர் அவனிடம் “நீர் உம் பெற்றோருடனும் சுற்றத்தாருடனும் வாரும் பேசிமுடிப்போம் என்றார்.  அதன்படி இளங்கீரன் தன் பெற்றோருடனும் சுற்றத்தாருடனும் மறுநாள் வந்தான். நன்முல்லையின் தந்தையும் அவர் சுற்றத்தாருடன் அமர்ந்திருந்தார். அனைவரும் கலந்து பேசி அன்றிலிருந்து ஏழாம் நாள் வதுவை(திருமணம்) நடைபெறும் என்று அறிவித்தனர். பெண்ணுக்குப் பரியமாக (மணப்பரிசு) ஆறு பொன் வளையல்கள் தரப்படும் என்றான் இளங்கீரன். நன்முல்லையின் இல்லத்தின் முன்பு பெரிய பந்தல் போடப்பட்டு ஆங்காங்கே தோரணங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டன. தரையில் புதுமணல் பரப்பப்பட்டது. வீட்டுச்சுவரில் செம்மண் பூசப்பட்டது. ஏழாம் நாள் அனைவரும் குழுமினர். மணப்பறை முழங்கியது. பெண் எருமைக்கொம்பு வீட்டின் நடுவில் நட்டுவைக்கப்பட்டது. நன்முல்லையின் சிலம்புகள் அகற்றப்பட்டன (சிலம்புகழி நோன்பு). பெரியோர்கள் வாழ்த்தத் திருமணம் நிறைவேறியது. அன்று இரவு இளங்கீரனுக்கும் நன்முல்லைக்கும் முதல் இரவுச் சடங்கு நடந்தது. வெகுநேரம் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தனர். பின்னர் விளக்கை அணைத்தனர். இளங்கீரன் நன்முல்லையை அணைத்தான். இருவரும் காமக்கடலில் நீந்திக் கழிபேருவகை எய்தினர்.

மறுநாள் விடிந்ததும் நன்முல்லை குளித்துமுடித்துக் கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தாள். இளங்கீரனும் படுக்கையிலிருந்து எழுந்து குளித்துமுடித்துப் புத்தாடை அணிந்து கொண்டான். அவன் தந்தை அவனுக்காகச் சிற்றில் கட்டிக் கொடுத்திருந்தார். புதுமணமக்கள் சிற்றிலில் குடிபுகுந்தனர். இள்ங்கீரனின் தாய் காலைச் சிற்றுண்டியைச் சமைத்தாள். அதை உண்டு முடித்த இளங்கீரன் ஒரு பணியின் நிமித்தம் வெளியே சென்றுவிட்டான். நன்முல்லையைச் சிற்றிலில் விட்டுவிட்டு அனைவரும் கிளம்பிச் சென்றனர். நண்பகல் உணவை நன்முல்லைதான் சமைத்தல் வேண்டும். தன் கணவனுக்குப் பிடித்த உணவைச் சமைத்து அவன் மனத்தைக் கொள்ளையடிக்க விரும்பினாள். என்ன உணவைச் சமைப்பது? என்று சிந்தித்தாள். பிற்பாடு தீம்புளிப்பாகர் எனப்படும் மோர்க்குழம்பைச் சமைக்க முடிவு செய்தாள். நன்முல்லை அவள் பெற்றோர்க்குச் செல்லப்பெண். தாய்க்கு உதவியிருக்கிறாளே தவிர அவள் மட்டும் பொறுப்பெடுத்துச் சமைத்ததில்லை. மோர்க்குழம்பு சமைக்க மிகவும் புளிப்பேறிய தயிரைப் பிசைந்தாள். உடுத்தியிருந்த பட்டாடை நழுவியது. கைவிரல்களைக் கழுவாமலே பட்டாடையில் துடைத்து அதனைக் களையாமல் உடுத்திக்கொண்டு அடுப்பைப் பற்றவைத்தாள். தாளிதம் செய்வதற்குரிய எண்ணெய் மற்றும் இதர சேர்மானங்களை ஆயத்தம் செய்தாள். எரிந்து கொண்டிருந்த அடுப்பின்மேல் இருப்புச்சட்டியை வைத்து அதனைச் சூடுபடுத்தினாள். பின்னர் எண்ணெய்யைக் கொட்டி அதனையும் சூடுபடுத்தினாள். பின்னர் அதில் பிசைந்த தயிரையும் இதர சேர்மானங்களையும் சேர்த்துக் கொதிக்கவிட்டாள். சமையல் வேலையில் அதிகப் பழக்கம் இல்லாததால் தாளிதம் செய்யும் பொழுது கிளம்பிய புகை குவளைமலர் போன்ற கண்களைக் கரித்தது. ஒருவாறு தீம்புளிப்பாகர் சமைத்தாகிவிட்டது. பின்னர் மட்பாண்டத்தில் சோற்றைப் பொங்கி இறக்கி வைத்தாள். தன் ஆசைக்கணவனுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள். உச்சி வெயிலில் இளங்கீரன் வந்து சேர்ந்தான். முகம், கை, கால், அலம்பிய பிறகு உணவுண்ண அமர்ந்தான். நன்முல்லை சோற்றைப் பரிமாறி மோர்க்குழம்பை ஊற்றினாள். சோற்றைப் பிசைந்த அவன் ஒரு கவளத்தை வாயிலிட்டுக்கொண்டான். தன்மனைவி சமையலால் அவன் முகம் மலர்ந்தது. கணவனின் மகிழ்ச்சியைக் கண்ட நன்முல்லையின் ஒளிபொருந்திய நெற்றியையுடைய முகமும் மலர்ந்தது. அப்பொழுது நன்முல்லையைக் காணவந்த செவிலித்தாயும் இக்காட்சியைக் கண்டு உவகையுற்றாள். நன்முல்லையின் பெற்றதாயிடம் தெரிவித்தாள். நன்முல்லையும் இளங்கீரனும் இல்லறத்தை இனிமையாக நடத்தி வந்தனர். நன்முல்லை சமையலை நன்கு கற்றுத் தெளிந்து வகைவகையாகக் கணவனுக்குச் சமைத்துக் கொடுத்தாள். இரவில் இருவரும் இன்பக்கடலில் நீந்தித்  திளைத்தார்கள்.

இப்படியாக ஆறு திங்கட்காலம் கடந்து விட்டது.நன்முல்லையின் உடலில் சிலமாற்றங்கள் தெரியத் தொடங்கின. உணவு சுவைக்கவில்லை. உண்ட உணவு கக்கல் மூலம் வெளி வந்தது. செய்தியைக் கேள்விப்பட்ட செவிலித்தாயும் நற்றாயும் வந்தனர். மருத்துவச்சியும் வந்து நாடிபிடித்துப் பார்த்து நன்முல்லை கருவுற்றிருப்பதாகத் தெரிவித்தாள். இச்செய்தியறிந்த இளங்கீரனின் தாய், தந்தையும் வந்து நன்முல்லையை வாழ்த்தினர். இளங்கீரன் குழந்தைச் செல்வம் உட்பட எல்லாச் செல்வமும் பெற்று மகிழ்ந்து குலாவுவதற்குக் காரணமான நன்முல்லையை விழவு முதலாட்டி என்று பாராட்டினர்.



ஆதாரப் பாடல்

வரிசை எண் 12 குறுந்தொகைப் பாடல் எண் : 167

புலவர் : கூடலூர்க் கிழார்.


முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇக்

குவளை உண்கண் குய்ப்புகை கமழத்

தாந்துழந் தட்ட தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவன் உண்டலின்

நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.


Thursday 29 October 2020

குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத்

 குழாஅய்த் தீம்புளி செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்....


பெருமாள் கோவிலில் பிரசாதமாகக் கொடுக்கப்படும் புளியோதரை 

மிகச் சுவையுள்ளதாக  இருக்கும். பெருமாள் கோவில் புளிச்சாதம்

அவ்வளவு புகழ்பெற்றது. புளிச் சாதம்  கட்டுச் சோறு என்றும் அழைக்

கப் படுகிறது. பயணம் மேற்கொள்பவர்கள் வழியில் பசிக்கும் வேளையில்

உண்டு பசியாறப் புளிச் சோற்றினைத் துணியில் கட்டி எடுத்துச் செல்வது

வழக்கம். அதனால் அதனைப் பொதி சோறு என்றும், ஆற்றுணா என்றும்

அழைத்தனர். ஆற்றுணா என்னும் சொல் வழிநடையுணவு (ஆறு=வழி)

என்று பொருள்படும். கட்டுச் சோற்றின் சிறப்பு என்னவென்றால் குறைந்தது

இரண்டு நாட்களாவது கெடாமல், சுவை குறையாமல் இருக்கும். எனவேதான்

பண்டைய காலத்திலிருந்து பயணம் மேற்கொள்வோர் தம்முடன் கட்டுச் சோற்

றினைத் தவறாமல் கொண்டு செல்வர்.


சங்க காலத்தில் வேங்கடநாட்டை ஆண்டுவந்த புல்லி என்னும் மன்னனின்

அரசாட்சியின்கீழ் வாழ்ந்துவந்த ஆயர்கள்(கோவலர்) தம் மாடுகளை மேய்ச்

சலுக்கு ஓட்டிவரும் பொழுது  தம் உணவுக்காகப் புளிச்சோற்றை மூங்கில்

குழாய்களில் அடைத்து எருதுகளின் கழுத்தில் மாட்டிக் கொண்டு வருவது 

வழக்கம். அத்தகைய இனிய புளிச் சோற்றினை அப்பாதை வழியாகவரும் வழிப்

போக்கர்களின் களைப்புத்  தீரவும் பசியாறவும்  தேக்கிலைகளில் வைத்துப்

பகிர்ந்து அளிப்பர் என்று அகநானூறு தெரிவிக்கின்றது.(அகம். பாடல்: 311):

"வருவழி வம்பலர்ப் பேணிக் கோவலர்

மழவிடைப் பூட்டிய குழாஅய்த் தீம்புளி

செவியடை தீரத் தேக்கிலைப் பகுக்கும்

புல்லி நன்னாட் டும்பர் செல்லரும்......"

(வம்பலர்=புதியவரான வழிப்போக்கர்; மழவிடை= இளமையான எருது;

செவியடை=பசியால் காதடைப்பது; தீம்புளி=இனிய புளிச்சோறு)


சீவக சிந்தாமணி என்னும் இலக்கியம் அறத்தை வலியுறுத்தும் பொழுது

எமன் நம் உயிரைக் கவர்ந்து செல்லும் பாதையில் அறமானது பொதி

சோறு போல உதவும் என்றுரைக்கின்றது.

" கூற்றங்கொண் டோடத் தமியே கொடுநெறிக்கண் செல்லும் போழ்தில்

ஆற்றுணாக் கொள்ளீர்". (கூற்றம்: எமன்;  ஆற்றுணா: கட்டுச் சோறு).


நாலடியார் என்னும் நீதிநூலிலும் இக்கருத்து கூறப்பட்டுள்ளது:

"ஆட்பார்த் துழலும் அருளில் கூற் றுண்மையால்

தோட்கோப்புக் காலத்திற் கொண்டுய் மின்"

பொருள்: விதிமுடிந்த ஆளைத் தேடிப் பார்த்து அவர் உயிரைக் கவர்ந்து

செல்லும் எமன் இருக்கின்றார். அச்சமயத்தில் தோளில் சுமந்து செல்லும்

கட்டுச் சோறு(தோட்கோப்பு) போல அறம் உதவும்.


பதின்மூன்றாம் நூற்றாண்டில் பொய்யாமொழிப் புலவர் வாழ்ந்த போது

அவர் அரசூர் என்னும் பகுதிக்கு அரசனான சீனக்கன் என்னும் குறுநில

மன்னருடன் நட்புக் கொண்டிருந்தார். அவர் ஒருமுறை பொய்யாமொழிப்

புலவருக்குப் புளியஞ் சோறு அளித்துப்  பசியாற்றினார். உடனே புலவர்

அதனைப் பாராட்டிப் பாடல் சொன்னார்:

"அளிதொ ளுந்தொடை யானர சைக்குமன்

ஒளிகொள் சீனக்கன் இன்றுவந் திட்டசீர்ப்

புளியஞ் சோறுமென் புந்தியிற் செந்தமிழ்

தெளியும் பொதெலாம் தித்தியா நிற்குமே".

(அளிதொளும் தொடை=வண்டுலவும் மாலை; அரசைக்கு மன்=அரசூர்ப்

பகுதிக்கு அரசன்)

சோழ மண்டல சதகம் என்னும் சிற்றிலக்கியத்திலும் இச் செய்தி சொல்லப்

பட்டுள்ளது.:

"பொய்யா மொழியார் பசிதீரப் புளியஞ் சோறு புகழ்ந்தளித்த

செய்யார் அரசூர்ச் சீனக்கர் செய்த தெவரும் செய்தாரோ?"


வள்ளலார் இராமலிங்க அடிகளும்  தாம் பேரின்ப அமுதை நாடாமல் வாய்க்கு

இன்பம் தரும் சித்திரான்னங்களை நாடியதாக வருந்திப் பாடியுள்ளார்.(பெரிய

ஞானிகள் உலகத்தவர் செய்யும் குற்றச் செயல்களைத் தாம் செய்ததாகக் கூறி

வருந்துதல்  ஆன்மிக மரபு):

"உடம்பொடு வயிறாய்ச் சருக்கரை கலந்த உண்டியே உண்டனன்; பலகால்

கடம்பெறு புளிச்சோ(று) உண்டுளே களித்தேன்; கட்டிநல் தயிரிலே கலந்த

தடம்பெறும் சோற்றில் தருக்கினேன்; எலுமிச் சம்பழச் சோற்றிலே தடித்தேன்;

திடம்பெறு மற்றைச் சித்திரச் சோற்றில் செருக்கினேன்; என்செய்வேன்? எந்தாய்!"

சித்திரான்னங்களில் இனிப்புச் சுவை கலந்த சோறு தலையாயது; என்றாலும்

அதனை வயிறார உண்டு பசி தீர்த்தல் இயலாது; ஏனென்றால் ஓரளவுக்குமேல்

அது திகட்டிவிடும். புளிச் சோறு வயிறார உண்டு பசி தீர்க்கக் தோதானது;

தெவிட்டாதது.











Sunday 11 October 2020

குடம்பிடித்தான் சட்டிகொள்

 'குடம்பிடித்தான் சட்டிகொள்'…


திருமணமாகிச் சில ஆண்டுகள் கடந்த பின்னும் தனக்குக் குழந்தைப்

பேறு கிட்டவில்லையே என்ற ஏக்கத்தில் ஒரு பெண்மணி பல திருத்தலங்

களுக்குச் சென்று இறைவனிடம் வேண்டுதல் வைத்தும், பல வித மருத்துவ

முறைகளைப் பின்பற்றியும் மேலும் என்னென்னவோ முயற்சி செய்தும்

நினைத்த செயல் கைகூடாததால் நொந்து நூலாகிச் சோர்ந்து போயிருந்தார்.

ஒரு நாள் வழக்கம் போல ஆலயத்துக்குச் சென்ற அவர் ஒரு சித்தர் யோக நிலை

யில்  ஒதுக்கமான இடத்தில் அமர்ந்திருந்ததைக் கண்டார். அருகில்  இருந்தவர்  

களை விசாரித்ததில் அவர் சக்தி வாய்ந்த சித்தரென்றும், எப்போதாவது இக்கோ

விலுக்கு வருவாரென்றும் கூறினர். அப் பெண்மணிக்கு ஒரு கருத்து உதித்தது.

உடனை சித்தர் அருகில் சென்று அவர் யோக நிலையிலிருந்து  இயல்பு நிலைக்கு

வரும்வரை காத்திருந்து அவர் கண்களைத் திறந்தவுடன் தன் துக்கத்தைச் சொல்

லித்தனக்குப் பிள்ளை வரம் கிட்ட ஒரு வழி கூறுமாறு கோரினார். சித்தர் மெல்ல

நகைத்துவிட்டுக் "குடம் பிடித்தான் சட்டிகொள்" உனக்குப். பிள்ளை பிறக்கும் என்று

சொல்லிவிட்டுப் பழையபடி யோக நிலைக்குச் சென்றுவிட்டார்.


அப்பெண்மணிக்குச் சித்தர் வாக்குக்குப் பொருள் புரியவில்லை.அருகில் இருந்

தோர்க்கும் இதன் விளக்கம் தெரியவில்லை. யாராவது தமிழ்ப் புலவரிடம் கேட்க

லாம் என்று தீர்மானித்து வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதற்குள் சில நாட்கள் கடந்து

விட்டன. ஒரு நாள் அவ்வூர்க் கோவிலுக்குப் பெரும் புலவர் மாம்பழக் கவிச்சி ங்க

நாவலர் வருகை புரியப்போகிறார் என்று கேள்விப் பட்டுக்கோவிலுக்குச் சென்று

காத்திருந்தார்.புலவர் வந்தவுடன் அவரைச் சந்தித்து நடந்த செய்திகளைத் தெரி

 வித்து விட்டுச் சித்தர் கூற்றுக்கு விளக்கம் கோரினார். அவர் உடனே குடம் என்பது

குக்குடம் என்பதைக் குறிக்கும் என்றும் சட்டி என்பது கந்தர் சஷ்டி விரதத்தைக்

குறிக்கும் என்றும்  கூறிச் சித்தரின் சொற்றொடருக்குப் பொருள் சேவற்கொடி 

பிடித்தோனின்(குடம் பிடித்தான் --குக்குடம் பிடித்தான்--சேவற்கொடி பிடித்தான்)

சஷ்டி விரதம் மேற்கொள்(சட்டி கொள்) என்பதாகும். சித்தரின் அறிவுரையைக் கடைப்பிடித்தல் நன்று என்றார்.


மாம்பழக் கவிராயர் பழனி நகரத்தில் 1836ஆம் ஆண்டில் பிறந்தார். மூன்றாம்

வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டு இறையருளால் பிழைத்தெழுந்தார்.

ஆனால் கண்பார்வையைப்  பறிகொடுத்தார். கல்வி கற்றேதீர வேண்டும் என்ற

தணியாத ஆர்வத்தால் தந்தையாரிடம் கோரிக்கைவிடுத்துக் கசடறக் கற்றார்.

அவரது இயற்பெயர் பழனிச்சாமி. குடும்பத்தில் எல்லோருக்கும் மாம்பழம் என்ற

ஒட்டுப் பெயர்இருந்தது. கவிபாடும் திறமை கைகூடியதால் மாம்பழக் கவிராயர்

என்று அழைக்கப்பட்டார். பழனியைச் சுற்றியுள்ள சமீன்தார்கள், மிராசுதார்கள்,

பிரபுக்கள் முதலியோரிடத்தில் பாடித் தன் புலமையை வெளிப்படுத்தினார்.


அந்தக்காலத்தில்(19ஆம் நூற்றாண்டில்) மன்னர் என்ற செல்வாக்கோடு திகழ்ந்த

வர் இராமநாதபுரம் முத்துராமலிங்க சேதுபதி ஆவார். அவர் தமையனார் பொன்

னுச்சாமித் தேவர் நிர்வாகியாகத்  திகழ்ந்தார். இருவரும் தமிழ் மற்றும்

சமக்கிருத மொழிகளில் நல்ல தேர்ச்சி கொண்டவர்கள். அவர்கள் முன் பாடித்

தம் திறமையையும் புலமையையும் புலப்படுத்தும் ஆவல் கொண்டார். பல மாதங்

கள் காத்திருந்த பிறகு அவர்களைச் சந்தித்தார். அவர்கள் சமுத்தி கொடுத்தால் 

பாடுவீர்களா? என்று கவிராயரிடம் வினவினார்கள். சமுத்தி என்பது நாம் வேண்

 டும் குறிப்புகளைக் கொடுத்து வேண்டிய பாவகைகளைப் பாடச் சொல்வது.. கவி

ராயர் தாம் ஆயத்தமாக உள்ளதாகச் சொன்னார். உடனே பொன்னுச்சாமித் தேவர்

"கிரியில் கிரியுருகும் கேட்டு" என்ற ஈற்றடியைச் சொல்லி ஒரு நேரிசை வெண்பா

வைப் பாடப் பணித்தார். உடனே கவிராயர் கீழ்க்கண்ட பாடலைச் சொன்னார்:

"மாலாம்பொன் னுச்சாமி மன்னர்பிரான் தன்னாட்டில்

சேலாம்கண் மங்கையர் வா சிக்குநல்யாழ்---நீலாம்

பரியில் பெரிய கொடும் பாலைகுளி ரும்ஆ

கிரியில் கிரியுருகும் கேட்டு".

பொருள்: திருமாலை ஒத்த பொன்னுச்சாமித் தேவர் நாட்டில் சேல்போன்ற

கண்ணையுடைய மங்கையர் இசைக்கும் நல்ல யாழிலிருந்து பிறக்கும் நீலாம்பரி

இராகப் பாடலால் பெரிய கொடும் பாலை நிலமும் குளிர்ந்து விடும்;  ஆகிரி

இராகப்  பாடலால் மலையும் உருகி விடும் "

கவி காளமேகத்தின் மறு அவதாரம் போல மாம்பழக் கவிராயர் ஆசுகவிகளை

உடனடியாகச் சொல்லக் கேட்டு மன்னர் திகைத்து விட்டார். வேறு பல சமுத்தி

களைக் கொடுத்தார்;  எல்லாவற்றுக்கும் உடனே உடனே பாடி முடித்தார். காசி

என்ற சொல் 4முறை  வரும் வண்ணம் பாடச் சொன்னார்; பாடிய பிற்பாடு, அதே

காசி என்ற சொல் 6 முறையும், 10 முறையும், 14 முறையும்  வரும் பாடல்கள் பாடு

மாறு கேட்க அவற்றையும் அவ்விதமே பாடி நிறைவேற்றினார். இறுதியாக, எலிக்

கும் புலிக்கும் சிலேடை யாகப் பாடச்சொன்னார். அது பின்வருமாறு:

"பாயும் கடிக்கும் பசுகருவா டும்புசிக்கும்

சாயும் குன் றில்தாவிச் சஞ்சரிக்கும்---தூயதமிழ்

தேங்குமுத்து ராமலிங்கச் சேதுபதிப்  பாண்டியனே!

வேங்கையொரு சிற்றெலியா மே".

எலிக்குப் பொருத்தும் முறை:பாயும், கடிக்கும்;

ப்சிய கருவாடும் புசிக்கும்; சாய்வான மலைகளில் தாவிச் சஞ்சரிக்கும்.

வேங்கைக் குப் பொருந்தும் முறை: பாயும், கடிக்கும்;

பசு, காராடு முதலியவைகளைப்  புசிக்கும்;

சாய்வான மலைகளில் தாவிச் சஞ்சரிக்கும்.

மாம்பழக் கவிராயரின் திறமையை மெச்சிக் 'கவிச் சிங்கம்' என்னும் பட்டத்தைச்

சூட்டி மகிழ்ந்தார். அவர் தலைக்கு உருமால் கட்டிவிட்டு  மரியாதை செய்தார்.


மாம்பழக்  கவிச்சிங்கத்தின் பெருமை அளவிடற்கரியது. கம்பர், கவி காளமேகம், 

கூத்தர், புகழேந்தி யார் முதலியோர் வரிசையில் வைத்து எண்ணப்பட வேண்

டியவர். அன்னார் புகழ் என்றும் நின்று நிலவுக!.

Wednesday 23 September 2020

ஆட்டன்அத்தி--ஆதிமந்தி காதல்

 சங்க நூல்கள் இயம்பும் ஆட்டன்அத்தி--ஆதிமந்தி காதல்.


ஆதிமந்தி சங்கப்  பெண்பாற் புலவர்களில் ஒருவர். இவர்

சோழவேந்தன் கரிகாற்  பெருவளத்தான் மகளாவார். இவர்

இயற்றிய சங்கப் பாடல் ஒன்று குறுந்தொகையில் காணப்

படுகிறது.(குறுந்தொகை பாடல் எண்: 31). நீச்சல் நடன விளை

யாட்டு வீரன் ஆட்டன்அத்தி  அக்காலத்தில் இக்கலையில் வல்ல

வனாயிருந்தான். சேரநாட்டு அரசர் குலத்தைச் சேர்ந்தவன் என்று

இவனைப்பற்றி இளங்கோவடிகள் தம் சிலப்பதிகார நூலில் குறிப்

பிட்டுள்ளார். ஆட்டனத்தி  நல்ல தோற்றப்  பொலிவு கொண்டவனாகவும்

விளங்கினான். வேந்தன் கரிகாற் பெருவளத்தான் முன்பு தன் 

கலைத் திறமையைக் காட்டிப் பெயரும் புகழும் பெற விரும்பினான்.

அதற்காக, நீர்நிலைகளில் பயிற்சிமேற்கொண்டுவந்தான். அச்சமயம்

அவனைப் பார்த்த ஆதிமந்தி அவன்பால் காதல்கொண்டாள். 


ஆடிப் பெருக்கு என்றும் பதினெட்டாம் பெருக்கு என்றும்  அக்காலத்தில்

சிறப்பாகப் பாராட்டப்பட்ட ஆடித் திங்கள் பதினெட்டாம் நாளில்  ஆறுகளில்

புதுப்புனல் பொங்கிவரும். தென்மேற்குப் பருவக்காற்றின் விளைவாக

ஆறுகளின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் இந்தப் புதுப்புனல்

பொங்கிவரும். உழவர்கள் இந்நாளில்  வயல்களில் விதைக்கத் தொடங்கி

விடுவர். ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி யன்றோ? இப்பொழுது

விதைத்தால்தான் தைமாதம் அறுவடை செய்தல் இயலும். அந்நாளில் காவிரிக்

கரையோர ஊர்களில் வாழ்ந்த மக்கள் பதினெட்டாம் பெருக்கை வெகு சிறப்

பாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.


ஆட்டனத்தி வேந்தன் கரிகாற் பெருவளத்தான் முன்னிலையில் கழார் என்னும்

காவிரியாற்றுத் துறையில் நீச்சல் நடனம் ஆடிக் காட்ட உரிய ஏற்பாடுகள் செய்யப்

பட்டிருந்தன.அவனோடு போட்டியிட்டவள் காவிரி என்னும் பெயர்கொண்ட நீச்சல்

மகள். இருவரிடையே நிகழ விருந்த போட்டிக்குக்  கரிகாற் பெருவளத்தானே

நடுவராகப் பணிபுரிந்தார். .அகநானூறு பாடல் 376 போட்டி நிகழ்ச்சியை விவரிக்

கிறது. " ஒலிகதிர்க் கழனி கழாஅர் முன்துறை

கலிகொள் சுற்றமொடு கரிகால் காண

தண்பதங் கொண்டு தவிர்ந்த இன்னிசை

ஒண்பொறிப் புனைகழல் சேவடிப் புரள

கருங்கச்சு யாத்த காண்பின் அவ்வயிற்று

இரும்பொலம் பாண்டில் மணியொடு தெளிர்ப்ப

புனல்நயந் தாடும் அத்தி அணிநயந்து

காவிரி கொண்டு ஒளித்தாங்கு.........."

பொருள்:

நீச்சல் நடனம் என்பது நீருக்குள் தலைகீழாக மூழ்கிப் பாதங்களை வெளியே

தெரியும்படி அவைகளை அசைத்துக் காட்டுதல். வயிற்றில் கச்சு இறுக்கக் கட்டப்

பட்டிருக்கும். வயிற்றைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள பொன்னால் ஆன மணிகள்

ஒலிக்கும் படி தன் உடலையே நீளவாக்கில் உருட்டிக் காட்டுதல் போன்ற சாகசங்

களைச் செய்தல் நீச்சல் நடனமாகும்.இவைகளை யெல்லாம் பிசகில்லாமல் முறைப்

படி ஆட்டனத்தியும் நீச்சல் மகளும்(அவள் பெயர் காவிரி) செய்தனர். கரிகாலன்

இக் காட்சியைக் கண்டு வியந்து கொண்டிருந்த வேளையில்  புதுப்புனலின்

நீரோட்டம் வேகமெடுத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளம் ஆட்டனத்தி

யையும் நீச்சல் மகளையும் உருட்டிப் புரட்டி அடித்துச் சென்றது. வெள்ளத்தின்

வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாத நீச்சல் மகள் நீரில் மூழ்கி மாண்டு போனாள்.

உண்மையில் நீச்சல்மகளுக்கு ஆட்டனத்திமேல் காதல் இருந்தது. தன் தாழிருங்

கூந்தலால் அவனை மறைத்து இழுத்துச் சென்று ஏதாவது கரையோரத்தில்

ஒதுங்கி அவனை மணம் செய்துகொள்ள எண்ணியிருந்தாள்.  அந்தோ! பரிதாபம்;

அவள் எண்ணம் தவிடுபொடியாகிவிட்டது. வெள்ளத்தின் வேகம் ஆட்டனத்தியை

வெகு தொலைவு அடித்துச் சென்று ஒரு சிற்றூரின் கரையோரத்தில் தள்ளிவிட்டுச்

சென்றுவிட்டது.


மயக்கத்தில் இருந்த ஆட்டனத்தி ஒரு வழியாகக் கண்விழித்துப் பார்த்தான். ஏதோ

முன்பின் பார்த்திராத ஊருக்கு வெள்ளத்தால் அடித்துவரப் பட்டதை அறிந்து கொண்

டான். உடம்பெல்லாம் வலி, வேதனை. பசித் துன்பம் வேறு வாட்டியது. நல்ல வேளை

யாக ஓரிளம் பெண் வந்தாள். அவனைக் கைத்தாங்கலாக ஒரு குடிசைக்குள் அழைத்துச்

சென்று உணவு பரிமாறினாள். தன் பெயர் மருதியெனத் தெரிவித்தாள். தன் தந்தை

ஒரு மீனவன் என்றும் வயது மூப்பினால் அவன் தவறிவிட்டதாகவும் தற்பொழுது தான்

மட்டுமே இப்பகுதியில் வசித்து வருவதாகவும் தெரிவித்தாள். காளையும் கன்னியும்

ஒருவர் பால் மற்றவர் ஈர்க்கப்பட, இருவர்க்கிடையே காதல் அரும்பித் துளிர்த்தது.

இருவரும் மணம் புரிந்துகொண்டு வாழத் தொடங்கினர்.


இதற்கிடையில், கழார் ஊரில் நீச்சல் நடனப்  போட்டியைக் கண்டுகளித்த  சோழவேந்தரும்

அவர்மகள் ஆதிமந்தியும் ஏனைய பொதுமக்களும். ஆட்டனத்தியும்  நீச்சல் மகளும் வெள்

ளத் தால் அடித்துச்செல்லப் பட்டதைப் பார்த்துச் செய்வதறியாமல் கைபிசைந்து நின்றனர்.

ஆதிமந்தி மயங்கி விழுந்து விட்டாள். கரிகாலர் சில படைவீரர்களை ஆற்றோரமாகச்

சென்று பார்த்து வருமாறு அனுப்பிவைத்தார். ஒரு நாழிகைக்குப் பிறகு ஆதிமந்தி 

மயக்கம் தெளிந்து எழுந்தாள்.


காதலனைக் காவிரியாற்று வெள்ளம் அடித்துச் சென்றதைக் கண்ட ஆதிமந்தி பித்துப்

பிடித்தவள் போலானாள். காவிரியாற்றங் கரையோரமாகவே தானும் சென்று தன்

காதலனைத் தேட முடிவு செய்தாள். மகளின் பேதுற்ற நிலையைக் கண்ட கரிகாலர்

மகளின் துணைக்கும் பாதுகாப்புக்கும் பல படைவீரர்களை மகளுடன் சென்று தேடு

மாறு பணித்தார். ஆதிமந்தியும் படைவீரர்களும் காவிரியாற்றங் கரையோரமாகவே

சென்று கண்ணில் தென்பட்டவர்களிடம் ஆட்டனத்தியைப் பற்றி விசாரித்தனர்.

இப்படியாக ஓரிரு நாட்கள் கழிந்தன. ஒருநாள் காவிரியாற்றங் கரையோரத்தில்

ஒரு சிற்றூரில் ஆட்டனத்தியைக் கண்டனர். அவனுடன் வாழ்ந்துவந்த  மருதியையும்

பார்த்தனர். அவளிடம் ஆதிமந்தி சகல விவரங்களையும் தெரிவித்துவிட்டுத் தன்

காதலனைத் தன்னுடன் அனுப்பிவைக்குமாறு கெஞ்சினாள். ஆதிமந்தி கல்லும்

கரையும் வண்ணம் தன் காதல் கதையைக் கண்களில் நீர் வழிந்தோடச் சொன்னாள்.

அதனால் மருதியால் அவள் கோரிக்கையை மறுக்க இயலவில்லை. ஆட்டனத்தியை

ஆதிமந்தியுடன் அனுப்பி வைத்தாள். அவர்கள் சென்றபிறகு தன் வாழ்க்கை சூனிய

மாகிவிட்டதை எண்ணி வருத்திக் கடலுள் பாய்ந்து உயிர்நீத்தாள். இச்செய்தி அகநா

நூறு பாடல் 222இல் பரணரால் குறிப்பிடப் பட்டுள்ளது.

"முழவு முகம் புலராக் கலிகொள் ஆங்கண்

கழாஅர்ப் பெருந்துறை விழவின் ஆடும்

ஈட்டெழில் பொலிந்த ஏந்துகுவவு மொய்ம்பின்

ஆட்டனத்தி நலன் நயந்துரைஇத்

தாழிரும் கதுப்பின் காவிரி வவ்வலின்

மரதிரம்  துழைஇ மதிமருண்டு அலந்த

ஆதிமந்தி காதலர் காட்டிப்

படுகடல் புக்க பாடல் சால் சிறப்பின்

மருதி யன்ன மாண்புகழ் பெறீஇயர்..."

மருதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும். சங்கப் பாடல்களில்

பல புலவர்கள் ஆதிமந்தி காதலனைப் பிரிந்து பேதுற்று அலைந்த

தையும் பிற்பாடு அவனை மீட்டதையும் குறிப்பிடுகின்றனர்.

Friday 4 September 2020

மக்கள் போகிய அணிலாடு முன்றில்

 அலப்பென் தோழி, அவர் அகன்ற ஞான்றே.


குறுந்தொகையில்  பயின்றுவரும் ஒரு நயமிக்க பாடலைப்

பார்ப்போம். பாடல் எண்:41; புலவர்:அணிலாடு முன்றிலார்;

திணை: பாலைத்திணை.

தலைவி யொருத்தியும் அவள் தோழியும் உரையாடுகின்ற

காட்சி.  சில நாட்களாகத் தலைவி சரிவர உண்ணுவதில்லை;

உறங்குவதில்லை.  மொத்தத்தில் இயல்பாக அவள் நடக்கவில்

லை. அவள் நடவடிக்கையில் ஒருவிதமான சோர்வும், துயரமும்

தென்படுகின்றன.  தோழிக்குக் காரணம் தெரியும். ஏனெனில்,

தலைவியின் வயதொத்தவள் தானே தோழி. பருவப் பெண்

களுக்கு ஏற்படும் காதல் நோய் காரணமாகவே தலைவியான

வள் துயரடைகின்றாள் என்பதனை நன்கு அறிவாள். இருப்

பினும், வழக்கமாக விசாரிப்பது போல ஏன் சோர்வாகத் தென்

படுகின்றாய் என்று தலைவியிடம் வினவுகின்றாள். உடனே

தலைவி கீழ்க்கண்டவாறுவிடையளிக்கின்றாள்;

"காதலர் உழையர் ஆகப்  பெரி(து)உவந்து

சாறுகொள் ஊரின் புகல்வேன் மன்ற

அத்த நண்ணிய அங்குடிச் சீறூர்

மக்கள்  போகிய அணிலாடு முன்றில்

புலம்(பு)இல் போலப் புல்லென்(று)

அலப்பென் தோழி, அவர்,  அகன்ற ஞான்றே!"


பொருளுரை(யான் இயற்றிய கவிதைகள்):

"காதலர்  அருகில்  உள்ளார்;

       கண்களால்  நோக்கு  கின்றார்;

தீதிலிந்  நிகழ்வால்  யானே,

திருவிழாக்  கொண்ட  ஊரார்

மேதினி  தனிலே  மிக்க

விருப்பொடு  மகிழ்தல்  போல,

யாதொரு  துயரும்  இன்றி

எல்லையில்  உவகை  கொள்வேன்.


அன்னவர்  என்னை  நீங்கி

அகன்றிடின், பாலை  மண்ணில்,

சின்னதோர்  ஊரில், மக்கள்

சீந்திடா, அணில்கள்  ஆடும்

முன்றிலை  உடைய  வீட்டை

ஒத்திடும்  நிலையில்  உள்ளேன்;

பன்னரும்  என்றன் இன்னல்

பகர்ந்திட  அறியேன், தோழி!


விளக்கவுரை:

ஆள் இல்லாத வீட்டின் முற்றத்தில்  அணில் தாராளமாக

ஊர்ந்தும், குறுக்கும் நெடுக்கும் ஓடியும் குதித்தும் விளை

யாடுவதைக் கவனித்த புலவர் அதனை உவமையாகக்

கையாள்கின்றார். எனவே, அவர் இயற் பெயர் தெரியாத

நிலையில், அவர் கையாண்ட சொற்றொடரால் அவர் குறிப்

பிடப் படுகிறார். பாடலில் தலைவி தோழியிடம் சொல்வதாவது:

என் காதலர் என் பக்கத்தில் இருக்கும் பொழுது, நான் பெரிதும்

உவந்து மகிழ்வேன். அது எப்படியிருக்கும் என்றால், திரு

விழாவை மகிழ்வோடு கொண்டாடும் ஊர்மக்கள் மனநிலை

யை ஒத்திருக்கும்.  என் காதலர் பொருள் நிமித்தமாகவோ, போர்

காரணமாகவோ, வேறு எதனையும்  முன்னிட்டோ என்னைப் பிரிந்து

சென்றால், உடனேயே நான், பாலை நிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில்

மக்கள் வாழாத, அணில் மட்டுமே குறுக்கும் நெடுக்கும் ஆடும், முற்றத்

தையுடைய வீட்டைப் போலத் தனிமையில் உழல்வேன். இவ்வாறு,

பருவ வயதில்  உள்ள பெண்களின் மனநிலையைத் தெளிவாக இயம்பிய

புலவரின் புலமை  மெச்சுதற்குரியது.

Saturday 15 August 2020

திருமாவுண்ணியும் கண்ணகியும் ஒருவரா?

 நற்றிணையில் குறிப்பிடப்படும் திருமாவுண்ணியும்

சிலப்பதிகாரக் கண்ணகியும் ஒருவரா?


சிலப்பதிகாரம் குறிப்பிடும் கண்ணகியை நாம் அறிவோம்.

சிலப்பதிகாரம் சங்க காலத்தில் இயற்றப்பட்ட நூலன்று. கி.பி.

ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

சிலர் கி.பி.எட்டாம் நூற்றாண்டு  என்று கருத்துரைக்கின்றனர்.

ஆனால் சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் நிகழ்வுகள் சங்க காலத்

தில் நடந்தவை என்று எண்ணுகின்றனர். சங்க காலம் என்பது கி.மு.

மூன்றாம் நூற்றாண்டு முதல் கி.பி.இரண்டாம் நூற்றாண்டு வரை

கணக்கிடப்படுகிறது. சிலப்பதிகாரக் கதை அது இயற்றப்பட்ட காலத்

திற்கும் முந்திய காலத்தைச் சேர்ந்தது. ஏனெனில் அதில் குறிப்பிடப்

படும் பாண்டியன் நெடுஞ்செழியன், சேரன் செங்குட்டுவன் முதலான

வர்கள் சங்க காலத்தில் வாழ்ந்தவர்கள். இளங்கோவடிகள் தாம் செங்

குட்டுவன் தம்பி எனக் கூறியுள்ளார். அவர் ஐந்தாம் நூற்றாண்டில்

வாழ்ந்தவராக இருக்க வாய்ப்புண்டு. ஒரே பெயரில் பலவேறு அரசர்கள்,

புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்ளனர் என்பது

தமிழக வரலாறு காட்டும் உண்மை. ஔவையார், நக்கீரர் முதலிய பெயர்

கொண்டவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வாழ்ந்துள்ளனர்.


சிலப்பதிகாரக் கதை சங்க காலத்தில் நிகழ்ந்தது. சஙககால மக்களுட்

பெரும்பாலோர் கண்ணகி கோவலன் கதையைப் பற்றித் தெரிந்து

வைத்திருந்தனர்.நற்றிணை 216ஆம் பாடலில் வரும் வரிகள் வருமாறு:

"எரிமருள் வேங்கைக் கடவுள் காக்கும்

குருகார் கழனியின்   இதணத்(து) ஆங்கண்

ஏதி லாளன் கவலை கவற்ற

ஒருமுலை யறுத்த திருமா வுண்ணிக்

கேட்டோர் அனையர் ஆயினும்

வேட்டோர் அல்லது  பிறர்இன்  னாரே!"

பொருள்:

வேங்கை மரத்தில் உறையும் முருகக் கடவுள் காக்கின்ற கட்டுப்

பரணாகிய இடத்திலே அயலான் ஒருவன் உண்டாக்கிய கவலை

உள்ளத்தை வருத்துதலால் தன் ஒரு முலையை அறுத்துக் கொண்ட

திருமாவுண்ணியின் கதையைக் கேட்டோரும் அத்தன்மையதாகவே

நம்மைக் கைவிட்டனராயினும் நம்மால் விரும்பப்பட்ட தலைவரை

யன்றிப் பிறர்யாவராயினும் நமக்கு இன்னாதாரேயாவர்.

இப் பாடல் மருதத் திணையில்  பரத்தையின் கூற்றாக வரும் பாடல்.

நமக்கு அது முக்கியம் அன்று. பாடலுக்குள் சொல்லப்பட்ட திருமா

வுண்ணியைப் பற்றிய  செய்திதான் நமக்கு வேண்டியது. திருமா

வுண்ணி என்பதற்குப் பொருள் அழகில் திருவை(இலக்குமி) வென்றவள்.

சிலப்பதிகாரம் முதல் காதையில் "போதில் ஆர் திருவினாள் புகழுடைய வடிவு"

என்று போற்றப் பட்டாள். அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் திருவைப்

போன்றவள் என்பது பொருள்.  திருமாவுண்ணி வேங்கை மரத்தின்கீழ்க் கவலை

யுடன் நின்றனள் என்று சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது.

"பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழ் ஓர்

தீத்தொழில் ஆட்டியேன்  யான் என் றேங்கி"

கண்ணகி நின்றதாகச் சிலம்பு குறிப்பிடும். மலைவளம் காண வந்த சேரன்

செங்குட்டுவனிடம் மலைவாழ் மக்கள் கூறியது:

"ஏழ்பிறப்பும் அடியேம்; வாழ்க நின் கொற்றம்;

கான வேங்கைக் கீழோர் காரிகை

தான்முலை யிழந்து தனித்துயர் எய்தி

வானவர் போற்ற மன்னொடும் கூடி

வானவர் போற்ற வானகம் பெற்றனள்"

(வஞ்சிக் காண்டம்; 24. குன்றக் குரவை காதை)

சங்க காலத்தில் ஒரு விநோதமான பழக்கம் பெண்களிடையே நிலவியதாக

அறிகிறோம் அதாவது எல்லையற்ற சினத்துக்கோ, துன்பத்துக்கோ ஆளாகும்

பொழுது ஒரு முலையை அறுத்து எறிவதை மேற்கொண்டனர். புறநானூற்றில்

ஒரு தாய் தன் மகன் போரில் புறமுதுகிட்டுத் தப்பித்தான் என்ற செய்தியைக்

கேட்டவுடன் ஆவேசம் கொண்டு " இந்தச் செய்தி உண்மையானால் அவனுக்குப்

பாலூட்டிய என்முலையை அறுத்தெறிவேன்" என்று கூறியதாகப் பாடல் 278இல்

நச்செள்ளையார் என்ற புலவர் கூறுகிறார்.

"படையழிந்து மாறினன் என்று பலர் கூற

மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்டவென்

முலையறுத் திடுவென் யான் எனச் சினைஇக்

கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்

செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய

படுமகன் கிடக்கை காணூஉ

ஈன்ற ஞான்றினும் பெருதுவந் தனளே!"

இதே போன்று முலையை அறுத்தெறியும் பழக்கம் குஜராத் மாநிலத்தில் வாழ்ந்த

பாட், சாரின் ஆகிய பழங்குடி மக்கள்  வாழ்க்கையில் நிலவியதாகவும் எதிரியை

அழிக்க முலையை அறுத்து வீசிப் பின்னர் பகுச்சாரா என்னும் பெண் தெய்வமாக

அழைக்கப் பட்டதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


எல்லையற்ற ஆத்திரத்தில் ஒருமுலையை அறுத்தெறிந்த செயலும், வேங்கை மரத்

தடியில் தனித்துத் துயரத்துடன் நின்ற செயலும் நற்றிணையிலும் சிலப்பதிகாரத்

திலும் கூறப்படுகின்றன. இந்த ஒற்றுமையை வைத்தே திருமாவுண்ணியும்(நற்றிணை

யில் குறிப்பிடப் படுபவள்) சிலப்பதிகாரக் கண்ணகியும் ஒரே நபர்தான் என்று கூறு

கிறோம்.

ஆனால் சில அறிஞர் பெருமக்கள் நற்றிணை சுட்டும் திருமாவுண்ணி வேறு;

சிலப்பதிகாரம் சுட்டும் கண்ணகி வேறு என உரைக்கின்றனர். அவர்கள்

சொல்லும் காரணம் நற்றிணையில் பயின்றுவரும் கீழ்க்கண்ட வரிகள்

திருமாவுண்ணியின் காதலன் ஏதிலாளன்  போல் நடந்து கொண்டதால் தன்

காதலின் உண்மைத் தன்மையை நிரூபிக்கத் தன் ஒரு முலையை அறுத்து

எறிந்து வழக்காடு மன்றத்தில் உள்ளவர்க்கு மெய்ப்பித்தாள். ஏனெனில்

அந்தக் காலத்தில் ஒரு சில கயவர்கள் பெண்களோடு களவுக் காதல் கொண்டு

விட்டுப் பின்னர் அதனை மறுத்திருப்பர். அம் மாதிரி கயவன் ஒருவன்தான்

திருமாவுண்ணியை  ஏமாற்ற முனைந்திருப்பானோ?. அவள் வழக்காடு மன்றத்தைக்

கூட்டித் தன் காதலை மெய்ப்பித்து விட்டாள். கபிலர் பாடிய குறுந்தொகை 25ஆம்

பாடல் " யாரும் இல்லைத் தானே கள்வன்; தானது  பொய்ப்பின் யானெவன்

செய்கோ?" என்ற பாடல் மூலம் அக்காலத்திலும் கயவர்கள் ஒருசிலர் இருந்தனர்

என்பதை அறிய முடிகிறது. இவ்வாறு, திருமாவுண்ணியும் கண்ணகியும் வெவ்வேறு

நபர்கள் என்று கூறினர்.


ஆனால், ஒரு முலையை அறுத்த செய்தியும், வேங்கை மரத்தடியில் தனித்துச் சோக

மாக நின்றதாகக் குறிப்பிடப்படும் செய்தியும் இருவரும் ஒரே நபர் தான் என்ற

முடிவுக்கு வரத் தூண்டுகின்றன. நற்றிணைப் பாடலில் குறிப்பிடப்படும் "ஏதிலாளன்"

என்ற சொல் பாண்டிய வேந்தன் நெடுஞ்செழியனைக் குறிக்கும் என்பர் அறிஞர்கள்.

அவனைக் கண்ணகி முன்பின் பார்த்ததில்லை. அவளுக்கு அவன் ஏதிலாளன்  தானே.

அதனால்தான் அவளுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு(கோவலன் கொலை) ஏற்பட்டது.

 மலைவாழ் மக்கள் கண்ணகியைக் கோவலன் வானத்துக்கு அழைத்துச் சென்றதாகக்

கூறவே வேந்தன் சேரன் செங்குட்டுவன் பத்தினிக்குக்  கோவில் எழுப்ப முடிவு செய்தான்.

இமயம் வரை படையெடுத்துச் சென்று சிலைவடிக்கத் தேவையான கல்லைக் கொணர்ந்து

கோவில் கட்டி முடித்தான். பதிற்றுப்பத்து நூலின் ஐந்தாம் பத்துக்குரிய பதிகப் பாடலில்

குறிப்பிடப் படுவதாவது:

"வடவர் உட்கும் வான்தோய் வெல்கொடிக்

குடவர் கோமான் நெடுஞ்சேர லாதற்குச்

சோழன் மணக்கிள்ளி ஈன்ற மகன்

கடவுள் பத்தினிக் கற்கோள் வேண்டிக்

கான்நவில் கானம் கணையின் போகி

ஆரிய அண்ணலை வீட்டிப் பேரிசை

இன்பல் அருவிக் கங்கை மண்ணி"

இமயத்திலிருந்து கல்கொண்டுவந்து கண்ணகிக்குக் கோவில் கட்டினான் என்று பரணர்

பாடியுள்ளார்.


இப்படியாகப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்த சேரன் செங்குட்டுவன் கண்ணகி

புகழைத் தன் ஆட்சிப் பகுதி முழுவதும் பரப்பினான். கண்ணகியின் புகழ் தமிழ்நாடு

முழுவதும் பரவியது. பின்னர் அண்டை நாடான இலங்கைக்கும் பரவியது. சேரநாடு

கேரளாவாக மாறியபிறகு கண்ணகி பகவதியானாள். ஆனால் அடிப்படைக் கதைகள்

சிலப்பதிகாரச் செய்திகளை ஒட்டியே அமைந்தன. கொடுங்கோளூர் பகவதியம்மன்

ஒற்றை முலைச்சி என்று அழைக்கப் படுகிறாள். சிலப்பதிகாரக்கதை வில்லுப் பாட்டா

கவும் அம்மானைப் பாட்டாகவும் பாடப்படுகின்றன.ஆற்றுக்கால் பகவதியம்மன் ஆலயத்

தில் ஏறத்தாழ ஐம்பது இலட்சம் பெண்கள் ஒரே நேரத்தில் பொங்கல் வைத்து வழிபடு

கின்றனர். ஆனாலும் சேரநாடு கேரளாவாக மாறியதால் அப்பகுதிமக்கள் கண்ணகி

என்னும் பெயரையே அடியோடு மறந்து விட்டுப் பகவதியம்மன் என்னும் பெயரையே

விரும்பிக் கொண்டாடுகின்றனர்.


இலங்கையிலும் கண்ணகி வழிபாட்டில் சிக்கல் உருவாகிவிட்டது. தொடக்கத்தில்

கண்ணகை  என்று கொண்டாடப்பட்ட கண்ணகி பிற்பாடு பௌத்தமத வெறி

யாளர்களால் புறக்கணிக்கப் பட்டாள். கண்ணகி வழிபாடு பௌத்தம் சார்ந்த பத்தினிக்

கடவுள் வழிபாடாக மாற்றப்பட்டுள்ளது. பௌத்த மதப் பத்தினி வழிபாடு கண்ணகி

வழிபாட்டுக்கும் காலத்தால் முந்தியது என்று கூறிக் கொள்கின்றனர். ஆறுமுக

நாவலர் என்ற பெரும் புலவர் சமணர் போற்றும் கண்ணகிக்குச் சைவர்களாகிய

நாம் வழிபாடியற்றுவதா? என்று கூறித் தடுத்ததாக அறிஞர் கூறுகின்றனர்.


தமிழ்நாட்டில் கண்ணகி கொண்டாடப் பட்டாலும் மக்கள் ஒருவித அச்ச உணர்வுடன்

தான் கொண்டாடுகின்றனர். போட்டிக்குத் திரௌபதியம்மன் வழிபாடு குறுக்கிடு

கிறது. இடையில் அமங்கலமாக இருப்பதாகவும் அபசகுனமாக இருப்பதாகவும்

சென்னை மெரீனாவில் கடற்கரைச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டது. மக்கள்

பெரிய அளவில் எதிர்க்கவில்லை. நல்லவேளை பழையபடி அச்சிலை மெரீனாவில்

கடற்கரையில் நிறுவப் பட்டுள்ளது.


இப்படியாகச் சேரன் செங்குட்டுவன் தொடங்கிய கண்ணகி வழிபாடு ஏதோ நடை

பெறுகிறது என்றுதான் சொல்லல் வேண்டும்.


பார்வை: முனைவர் சிலம்பு நா.செல்வராசு, புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு

ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி அவர்களின் ஆய்வுக் கட்டுரை.















Saturday 25 July 2020

ஔவைப்பிராட்டியின் சில சுவையான பாடல்கள்

பழமுறத்தால் சாடினாள் ஓடோடத் தான்.

ஔவைப் பிராட்டியார் (இடைக்காலத்தவர்--சங்க காலத்தவர் அல்லர்) ஒருநாள் ஒரு ஊர் வழியே சென்று
கொண்டிருந்தார். வெயில் ஏறத் தொடங்கி விட்டது. நடந்த
களைப்பும் அலுப்பும் அம்மையை வாட்டவே ஒரு நிழல் மரத்
தடியில் அமர்ந்து அடிமரத்தில் சாய்ந்து கொண்டார். களைப்பு
நீங்கிய பிறகு நடைப் பயணத்தைத் தொடரலாம் என்று நினைத்
துக் கொண்டார். அச்சமயம் அவ்வழியே சென்ற அவ்வூர்க்காரன்
ஒருவன் ஔவையாரை நோக்கி வந்தான். அவன் இளகிய மனம்
கொண்டவன். பிறருக்குதவும் பெருந்தன்மை கொண்டவன். அவன்
"அம்மையே! தாங்கள் வெயிலாலும் வழி நடந்த களைப்பாலும்
சோர்வடைந்து தென்படுகிறீர்கள். என் இல்லத்துக்கு வந்து உணவுண்டு
களைப்பு நீங்கிய பிறகு செல்க" எனச் சொன்னான். அம்மையும் அன்புப்
பேச்சால் மனம் நெகிழ்ந்து அவனைப் பின்தொடரந்தார்.

வீட்டை நெருங்க நெருங்க உதவி செய்ய எண்ணியவன் மனம் படபட
வென்று அடித்துக் கொண்டது. ஏனெனில் அவனுக்கு வாய்த்த மனைவி
அவன்போலப் பிறர்க்குதவும் எண்ணமுடையவள் அல்லள். கொடுமைக்
காரி என்றுகூடச் சொல்லலாம். அவன் கால்கள் பின்னலிட்டன. அம்மை
யைத் திருப்பி அனுப்பிவிடலாமா  என்று குழம்பிய சிந்தையோடு சிறிது
நேரம் நின்றான். பிறகு "அம்மையே! சிறிது நேரம் பொறுத்திருங்கள்;
வந்து விடுகிறேன்" என்று கூறி வீட்டுக்குள் சென்றான்.

அம்மை  சிறிது நேரம் காத்துக்கொண்டிருந்தார். உள்ளே சென்றவன்
வெளியே வரவில்லை. பொறுமை இழந்த ஔவையார் மெல்ல எட்டிப்
பார்த்தார். உள்ளே சென்றவன் மனைவியருகில் அமர்ந்திருக்கக் கண்
டார். அவன் மனைவி முகத்தைத் தடவி மெல்ல வருடி விட்டான்.அவன்
சென்ற சமயம் அவள் தலைவாரிக் கொண்டிருந்தாள். கணவன் அவள்
கூந்தலில் உள்ள ஈரையும் பேனையும் நீக்கினான். முகத்தைத் துடைத்து
விட்டுப் பொட்டுவைத்து அழகுபடுத்தி விட்டான். பின்னர் மெல்லிய
குரலில் "வாசலில் ஒரு அம்மை காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு
விருந்து படைக்கவேண்டும்" என்றான். அதுவரை சிரித்த முகத்தோடு
கணவன் செய்த பணிவிடைகளை இரசித்து ஏற்றுக் கொண்ட அவள்
முகம் சிவந்தாள். வாய்க்கு வந்தபடியெல்லாம் அவனை ஏசினாள்.
பேயாட்டம் ஆடினாள். வாழ்த்துமடல்(? வசவுமடல்) பாடினாள். இத்தனை
ஏச்சும் பேச்சும் போதாவென்று பழைய சுளகாலே அவனை அடிக்கத்
தொடங்கினாள். விழுந்த அடிதளைத் தாங்க  இயலாத கணவன் வெளியே
ஓடிவந்துவிட்டான். ஔவையார் இக்காட்சியைக் கண்டு வருந்தினார்.
அவன் பரிதாப நிலையை எண்ணிப் பாடலானார்:
இருந்து  முகந்திருத்தி ஈரொடுபேன் வாங்கி
விருந்துவந்த  தென்று  விளம்ப---வருந்திமிக
ஆடினாள்; பாடினாள்; ஆடிப்  பழமுறத்தால்
சாடினாள் ஓடோடத்  தான்.
ஔவையார் குரலைக் கேட்ட மனைவி சற்றே
அச்சம் கொண்டாள். வந்தவர் பெரும் புலவர்;
சாபம் கொடுத்துவிட்டால் என்ன செய்வது?
என்று நினைத்துக் கணவனை அழைத்து
விருந்தினரை உள்ளே அழைத்து வருமாறு
கூறினாள். உடனே கணவன் ஔவையாரைக்
கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். அவர் அவன்
வேண்டுகோளை ஏற்கவில்லை. மேலும் ஒரு
பாடலைப் பாடினார்:
காணக்கண் கூசுதே; கையெடுக்க நாணுதே;
மாணொக்க வாய்திறக்க மாட்டாதே--வீணுக்கென்
என்பெல்லாம் பற்றி எரிகின்ற(து); ஐயையோ
அன்பில்லாள் இட்ட அமுது.
"அன்பினால் உன்மனைவி உணவு படைக்கவில்லை;
புலவராகிய நான் சபித்துவிடுவேனோ என்ற பயத்தில்
வேண்டா வெறுப்பாக உணவு படைக்க முன்வந்தாள்.
அதைக் காணவும் கண்கள் கூசுகின்றன. கையால்
உணவைத் தொடவும் நாணுகின்றேன். தமிழ் பாடும்
என்வாய் இந்த உணவை உண்ண மறுக்கிறது. நடந்த
நிகழ்வையும் உன் மனைவியின் செய்கைகளையும்
எணணி எனது எலும்புகளெல்லாம் ஏரிவது போல
உணர்கிறேன். அவள் அமுதத்தையே படைத்தாலும்
எனக்கு வேண்டா" எனச் சொல்லிவிட்டு அவ்வூரிலி
ருந்து கிளம்பிச் சென்றார். ஔவையார் ஒருபாடலில்
"நடையும் நடைப்பழக்கம்; நட்பும் தயையும்
கொடையும் பிறவிக் குணம்"
என்று நவின்றுள்ளார். எனவே, இது போன்ற பெண்களின்
பிறவிக் குணத்தை மாற்றவே இயலாது எனபதை அறிந்து
மனம் தேறிக்கொள்ளல் வேண்டும்.




உலகில் வருவிருந்தோர் உண்டு.

கும்பகோணம்  என்று இக்காலத்தில் அழைக்கப்படுகின்ற
குடந்தை நகரில் ஔவையார்(பிற்கால ஔவையார்) வாழ்ந்த
காலத்தில் ஒரு தெருவில் இரு செல்வந்தர்கள் வாழ்ந்து வந்த
னர்.  ஒருவர்  பெயர் திருத்தங்கி; மற்றொருவர் பெயர் மருத்தன்.
திருத்தங்கி மகா கஞ்சன். மருத்தனோ வள்ளல் தன்மை யுடையவர்;
பிறர்க்கு உதவும் குணமுடையவர்.

கஞ்சத்தனம் உள்ள செல்வந்தர்கள் இரண்டு வகையினர். ஒரு
வகையினர் எதற்காகவும் யாரையும் நாட மாட்டார்கள். அம்மாதிரி
ஆட்களால்  யாருக்கும் எவ்விதத் தொல்லையும் இல்லை. ஆனால்
இன்னொரு வகையினர் கஞ்சத்தனம் உடையவர்களாகவும், அதே
சமயம் மற்றவர்களைப் போலப்  பாராட்டையும்,  புகழையும் விரும்பு
கின்றவர்களாகவும் இருப்பார்கள். செல்வச் செழிப்பில் திளைக்கும்
திருத்தங்கி இரண்டாம் வகையினர். மருத்தன் வாரி வழங்கிப்
பெயரையும், புகழையும் சேர்ப்பது திருத்தங்கியின் கண்களை
உறுத்தியது. மருத்தன் வீட்டுக்கு வரும் பாணர்கள், புலவர்கள்
முதலானோரைத் தமது வீட்டுக்கும் அழைத்துவந்து தானும் வள்ளல்
தன்மை யுடையவர் போலக் காட்டிக் கொண்டு புகழ்பெறுவார்.
இதில் முக்கிய செய்தி என்னவென்றால், தமது ஏவலாளர் மூலம்
மருத்தன் வீட்டுக்கு வருபவர்களுக்குப்  பரிசு வழங்குவது, விருந்தோம்பு
வது போன்றவை  முடிந்துவிட்டனவா  என்பதை உறுதி செய்துகொண்டு
அதன்பின்னரே மருத்தன்  வீட்டுக்குச் சென்று விருந்தினரைத் தமது
வீட்டுக்கு அழைத்து வருவார். வாய்ச் சொற்களாலேயே விருந்தோம்பி
அனுப்பிவிடுவார். செலவே யில்லாமல் பாராட்டைப் பெற்றுவிடுவார்.

ஒருநாள் ஔவையார் குடந்தை நகருக்கு வந்தார். அவர் வருகையைக்
கேள்விப்பட்ட மருத்தன் ஔவையார் இருக்கும் இடம் தேடிச்சென்று
தமது இல்லத்துக்கு அழைத்துவந்து உணவு பரிமாறி அவரை ஓய்வெ
டுக்கச் செய்தார். பிறகு அவருக்குத் தக்க பரிசுகள் வழங்கிப் பெருமைப்
படுத்தினார். வழக்கம் போல நடந்த நிகழ்ச்சிகளை ஏவலாளர் மூலமாக
அறிந்த திருத்தங்கி பெரிய கூழைக்கும்பிடு போட்டுக்கொண்டு வந்தார்.
"அம்மையே! தாங்கள் எனதில்லத்துக்கும் வருகை புரிதல் வேண்டும்"
என்று கேட்டுக்கொண்டார்.

ஔவையார் மருத்தனையும் அழைத்துக்கொண்டு திருத்தங்கியின்
வீட்டுக்குச்  சென்றார். மூவரும் பல நாட்டு நடப்புக்களைப் பற்றிப்
பேசிக் கொண்டனர். திருத்தங்கி இடையிடையே தமது செல்வாக்கை
யும்வளத்தையும் பற்றிய சுயபுராணத்தைப் படித்தார்,  எல்லாம் முடிந்த
பிறகு ஔவையார் தாம் விடைபெறுவதாகத் தெரிவித்தார். உடனே,
திருத்தங்கி "அம்மையே!  தங்கள் திருவாயால்  எங்கள் இருவரையும்
பாடி மகிழ்விக்குமாறு  வேண்டிக் கொள்கிறோம்" என்றார்.

ஔவையார் பாடத் தொடங்கினார்:
"திருத்தங்கி தன்வாழை தேம்பழுத்து நிற்கும்;
மருத்தன். திருக்குடந்தை வாழை---குருத்தும்
இலையுமிலை; பூவுமிலை; காயுமிலை; என்றும்
உலகில் வருவிருந்தோர் உண்டு."
தமது வாழை  இலைகளோடும் பூக்களோடும் காய்களோடும் செழிப்
பாகவுள்ள செய்தியைத் தெரிவித்த பாடலைக் கேட்டுப் புளகாங்கிதம்
அடைந்தார் திருத்தங்கி. மருத்தன் தோட்டத்து வாழைகளெல்லாம் இலை,
பூ, காய் எதுவுமின்றி வாடிக்கிடக்கும் செய்தியைத் தெரிவிப்பதாக நினைத்துக்
கூடுதல் மகிழ்ச்சியுற்றார் திருத்தங்கி. ஆனால், மருத்தனோ பாடல் தெரிவிக்கும்
 உண்மைச் செய்தியை அறிந்து களிப்படைந்தார். உண்மையிலேயே  மருத்தன்
தோட்டத்து வாழைகள் செழிப்பில்லாமல் வாடி வதங்கி உள்ளன; ஏனென்றால்
அவர் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் அனைவருக்கும் இல்லையென்று சொல்
லாமல்  பூக்கள், காய்கள் அனைத்தையும் சமைத்து இலையில் பரிமாறி உபசரித்து
விட்டார். பெரிய வள்ளல்; பிறர்க்குதவும்  பெருந்தகை. அதாவது எவருக்கும்
எதுவும் தராமல் செல்வச் செழிப்போடிருக்கும் திருத்தங்கியைவிடவும் பிறர்க்குக்
கொடுத்துக் கொடுத்து அதனால் செழிப்புக் குறைந்து காணப்படும் மருத்தன்
புகழால் மிக உயர்ந்தவர். இந்த வஞ்சப் புகழ்ச்சி யணி பயிலும் பாடல் திருத்
தங்கிக்கு விளங்கியிருக்க  வாய்ப்பில்லை. அவர் ஔவையார் வாயால் செலவே
இல்லாமல் பாராட்டுக்கள் கிடைத்துவிட்டன என்று கழிபேருவகையில் ஆழ்ந்தார்.
ஆனால் இந்தப் பாடல் மூலம் மருத்தன் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.




திருமண விருந்தின் சிறப்பு.

பாண்டிய மன்னன் வீட்டில் ஒரு மங்கலமான நிகழ்ச்சி
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மன்னனின் மகனுக்கோ,
மகளுக்கோ நடைபெற்ற திருமண நிகழ்ச்சி. மன்னன் வீட்டு
நிகழ்ச்சி யென்றால் கூட்டம் கூடுதல் இயற்கை தானே!
சிற்றரசர்கள், அவர்களின் பரிவாரங்கள், அண்டை நட்பு நாட்டு
அரசர்கள், அவர்கள் பரிவாரங்கள், புலவர்கள், பாணர்கள்,
சொந்த நாட்டு அரசு அதிகாரிகள், படை வீரர்கள் இன்னும்
அரசோடு தொடர்புடைய வணிகப் பெருமக்கள், குடிமக்கள் என
எல்லாவிதமான மக்களும் குழுமியிருந்தனர். கூட்டத்தில் சிக்கிக்
கொண்ட ஔவையார் திணறிப் போனார். திருமண நிகழ்ச்சி
முடிந்ததும் ஒருவழியாகக் கூட்டத்தைச் சமாளித்துப் பாண்டியனைச்
சந்தித்து வாழ்த்துக் கூறினார். பாண்டியன் அந்தக் கூட்டத்திலும்
ஔவையை வரவேற்றுப் பரிசுகள் வழங்கி அனுப்பிவைத்தார்.
ஆனால், ஔவை உணவு உண்டாரா? என்று விசாரிக்க இயலவில்லை.
அவ்வளவு கூட்டம் இருந்தது.  ஔவையார் ஒருவழியாக மண்டபத்தை
விட்டு வெளியே வந்தார். உணவு உண்ணாததால் ஒருவிதச் சோர்வு
அம்மையை அமுக்கியது. பையப்பைய நடந்தார்.

இனிமேலும் நடக்க இயலாது என்றெண்ணி வீதியிலிருந்த ஒரு வீட்டுத்
திண்ணையில் அமர்ந்து அங்குள்ள தூணில் சாய்ந்துகொண்டார்.
அந்த வீட்டுத் தலைவி அப்பொழுது வெளியே எட்டிப் பார்த்தாள்.
ஔவையார் சோர்வுடன் தூணில் சாய்ந்துகொண்டிருந்ததைக் கண்டு
அவரிடம் வந்து" அம்மையே! தாங்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்
போலக் காணப்படுகிறீர்; விருந்து உண்ணவில்லையா? ஏன் களைப்பாய்
இருக்கிறீர்? என்று வினவினாள். ஔவையார் உடனே பாடல் ஒன்றைச்
சொன்னார்.
"வண்தமிழைத் தேர்ந்த  வழுதி  கலியாணத்(து)
உண்ட  பெருக்கம்  உரைக்கக்கேள்---அண்டி
நெருக்குண்டேன்;  தள்ளுண்டேன்; நீள்பசியி  னாலே
சுருக்குண்டேன்;  சோறுண்டி  லேன்."
"மகளே!  பாண்டியன் வீட்டுக் கலியாணத்தில் நான் உண்ட சிறப்பைச்
சொல்கிறேன், கேட்டுக் கொள்வாயாக. மிகப் பெருங் கூட்டத்தால்
நெருக்கப்பட்டேன். இங்கும் அங்கும் தள்ளப்பட்டேன். வயிற்றிலோ
நெடுநேரமாகப் பசி வாட்டிக்கொண்டிருந்தது. பசியால் உடல் துவண்டு
தளர்ந்து  போயிற்று. ஆனால் இத்தனை களேபரத்திலும் உணவுண்ண
இயலாமற்  போயிற்று. பாண்டியன் மீது தவறேதும் இல்லை. அவர்
வீட்டு நிகழ்ச்சி யாதலால் படைகளை ஏவிக் கடுமையாக நடந்து
கூட்டத்தை ஒழுங்க படுத்த வழியில்லாமற் போயிற்று." என்றுரைத்தார்.
இதைக் கேட்ட அவ்வீட்டுத் தலைவி தான்
சமைத்து வைத்திருந்ததை அம்மைக்குப்
பரிமாறினாள். அம்மையும் அவ்வுணவை
வயிறார உண்டு கொடிய பசியை ஆற்
றிச் சோர்வு நீங்கித் தெளிவடைந்தார்.
'உப்புக்கும் பாடிப் புளிக்கும் ஒருகவிதை
ஒப்பிக்கும் என்றன்  உளம்." எனச் சொன்னவரல்லவா? எளிய உணவே
யானாலும் வயிறார உண்டு அப்பெண்ணை வாழ்த்தி விட்டுத் தன்
வழியே சென்றார்.

Saturday 4 July 2020

பழைய குருடி கதவைத் திறடி

"பழைய குருடி, கதவைத் திறடி".

இந்தச் சொல்லடைவை(முது மொழி) உருவாக்கியவர்
பொய்யா மொழிப் புலவர் ஆவார். இச் சொல் தொடர்
எந்தச் சூழ்நிலையில் சொல்லப்பட்டது? இதன் பொருள்
என்ன? போன்றவற்றை விரிவாகப் பார்ப்போம்.
அதற்குமுன் பொய்யா மொழிப் புலவரின் வரலாற்றை
அறிந்து கொள்வோம்.

காஞ்சிபுரத்தை யடுத்த செங்காட்டுக் கோட்டத்தைச் சேர்ந்த
அதிகத்தூரில் அமண்பாக்கக் கிழார் மரபில் தோன்றியவர்
பொய்யாமொழிப் புலவர். அவரது இயற்பெயர் சாத்தனார்
என்றும் அம்பலத் தரசன் என்றும் சொல்லப்பட்டன. தொண்டை
மண்டலத்தைச் சேர்ந்த வயிரபுரம் என்னும் ஊரில் கல்வி
பயின்றார். கல்வியில் இவரது திறமையைக் கண்ணுற்ற
ஆசான் இவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று அழைத்த
தாகச் சொல்லப்படுகிறது. இவரது வாக்கு சத்திய வாக்காகப்
பலித்ததால் ஆசான் அவரைப் பொய்யா மொழிப் புலவர் என்று
அழைத்தார்  என்று  தோன்றுகிறது.இவரது காலம் பதின்மூன்
றாம் நூற்றாண்டாகும்.

குருகுலத்தில் கல்வி கற்கும் பொழுது ஆசானின் சோளக் கொல்லை
யைக் காவல் காக்கும்  கடமை சுழற்சி  முறையில் ஒவ்வொரு மாணவருக்
கும் வரும். அன்றைய முறை அம்பலத்தரசனுக்குரியது. காவல் காத்துக்
கொண்டிருக்கும் போது அங்கே வீசிய இதமான காற்றால் அயர்ந்து உறங்கி
விட்டார். விழித்த பொழுது சோளக் கொல்லையைச் சில குதிரைகள் மேயக்
கண்டார். அவைகளை விரட்ட முயன்றார். முரட்டுக்  குதிரைகளை  அடக்க
முடியாமல் தவித்தார். அருகிலுள்ள காளிகோவூலுக்குச் சென்று மாகாளி
யிடம் முறையிட்டார். அம்மை அவர்மீது பரிவுகொண்டு அவர் சொல்வது
பலிக்குமாறு ஆசீர்வாதம் செய்ததாகச் சொல்வர். கோவிலிலிருந்து
வெளியே வந்த அம்பலத்தரசன் உடனே பாடினார்.
"வாய்த்த  வயிரபுர  மாகாளி  அம்மையே!
ஆய்த்த  மணலில்  அணிவரையிற்---காய்த்த
கதிரைமா ளத்தின்னும்  காளிங்கன்  ஏறும்
குதிரைமா  ளக்கொண்டு  போ"
என்று பாடியவுடனே மேய்ந்து கொண்டிருந்த குதிரை தடாலென்று கீழே
விழுந்து இறந்ததாகச் சொல்லப்படுகிறது. காளிங்கன் அந்த நாட்டுச்
சேனாபதி. அவர் குதிரை மாண்டதால் ஆசான் முதல் மாணவர்கள் வரை
அனைவரும் அஞ்சி நடுங்கிக் கொண்டிருந்தனர். பின்னர் அனைவரும்
வேண்டிக் கொண்டதால் அம்பலத்தரசன் கடைசி அடியை மாற்றிக்
"குதிரைமீ  ளக்கொண்டு  வா" என்று பாடிக் குதிரையின் உயிரை மீட்டுக்
கொண்டு வந்ததாகச் சொல்லப்படுகிறது. அன்றிலிருந்து  அம்பலத்தரசன்
பொய்யா மொழிப் புலவராக உருமாறினார். காளிங்கன் தன் மகள் அமிர்தத்
தைப் பொய்யா மொழிப் புலவருக்கு மணம் செய்து கொடுத்தார். சிறிது காலம்
அமைதியாக நடந்த இல்லறம் நாள் செல்லச் செல்லப் பிணக்கும் பூசலுமாகத்
தள்ளாடியது.காரணம், புலவர்களுக்கே உரிய வறுமைதான். ஒருநாள் பொய்யா
மொழிப் புலவர் சினங்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிவிட்டார்.

புலவர்களுக்குச் செல்வச் செழிப்பு  வாய்ப்பது அரிதே; ஆனால் சிறப்புக்கும் பெரு
மைக்கும் எப்போதும் குறை வாராது. பொய்யா மொழிப் புலவர் கால் நடையாக
வந்தாலும் வழிநெடுகிலும் உண்ண உணவும் அருந்தக் குடிநீரும் உறங்கத் திண்ணை
யும் கிடைத்தன. அவர் மனத்தில் பேரவா ஒன்று தோன்றியது. மூன்றாம் தமிழ்ச் சங்கம்
மறைந்த பிறகு நான்காம் தமிழ்ச் சங்கத்தை மீண்டும் மதுரையில் தோற்றுவிக்க விரும்பி
னார். அதற்குப் பொருள் தேடல் வேண்டும். இப்படியான சிந்தனைகளோடு காளை
யார்கோவில் வந்தடைந்தார். அங்கு ஒரு வீட்டின் கதவைத் தட்டினார். வெளியே வந்த
பெண் "ஐயா! நான் கண் பார்வையற்றவள். என் தமக்கையும், தாயும், தாய்வழிப் பாட்டி
யும் அரைக்குருடர்கள். எங்களை ஏன் தொந்தரவு செய்கின்றீர்கள்?" என்று கூறினாள்.
புலவர்" பெண்ணே! உன் பெயர் என்ன?" என்று வினவினார்."என் பெயர் கூத்தாள்"
எனப்  பதிலிறுத்தாள். உடனே புலவர் பாடத் தொடங்கினார்.
"கூத்தாள் விழிகளிரு கூர்வேலாம்; கூத்தாள்தன்
மூத்தாள் விழிகள் முழுநீலம்; மூத்தாள்தன்
ஆத்தாள் விழிகள் அரவிந்தம்; ஆத்தாள்தன்
ஆத்தாள் விழிகளிரண்(டு) அம்பு."
அவர் பாடியவுடன் கூத்தாளுக்கும் அவள் தமக்கை,
தாய், தாய்வழிப் பாட்டிக்கும் கண்பார்வை கிடைத்த
தாகச் சொல்லப்படுகிறது. கூத்தாள் முதலியவர்கள்
தேவரடியார் தொண்டு செய்பவர்கள். அவர்களும்
அவர்களைப் போலத் தேவரடியார்களும் நான்காம்
தமிழ்ச்சங்கம்  தோற்றுவிக்கப் பொருள் தந்தார்கள்.
எல்லாப் பொருளையும் ஒன்று சேர்த்துக் கூத்தாளிடமே
ஒப்படைத்து "நான் மதுரைக்குச் சென்றுவரும் வரை
நீயே பத்திரமாக வைத்திரு" என்று சொல்லிவிட்டுச்
சென்றார்.

பாண்டி மண்டல மாறை நாட்டுத் தஞ்சாக்கூரை அடைந்து
அங்கு மாறவர்மன் குலசேகரபாண்டியனிடம் அமைச்சராக
வும் படைத் தலைவராகவும் விளங்கிய மாவலி வாணர்
குலத்தைச் சேர்ந்த சந்திரவாணன் என்பவரின் நட்பைப்
பெற்றார். அவர்மீது தஞ்சை வாணன் கோவை என்ற நூலைப்
பாடி அரங்கேற்றினார். சந்திரவாணன் மனைவி
யார் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு பொன்னாலான தேங்காயைப்
பரிசாகத் தந்தார். ஏனெனில் அந்த அம்மையும் சிறந்த
புலமையும் இரசனையும் உடையவர். சந்திர வாணன்
ஒவ்வொரு தேங்காயின் மூன்று கண்களுக்கும் மூன்று
இரத்தினங்களைப் பொதிந்து புலவர்க்குப் பரிசளித்தார்.
பொய்யா மொழிப் புலவர்க்குக் கிடைத்த அருமையான
அன்பளிப்பு!

இம்மாதிரி தமக்குக் கிடைத்த எல்லா அன்பளிப்பையும்
காளையார் கோவில் கூத்தாளுக்கு அனுப்பி வைத்துப்
பத்திரமாக வைத்திருக்கும்படி கூறினார். இடையில்
மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னரைச் சந்தித்து
நாலாம் தமிழ்ச்சங்கம் தொடங்கப் போதிய உதவிகள்
செய்தல் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்
பொழுது சோழர்கள் படையெடுத்து வரலாம் என்ற
பேச்சு அடிபட்டதால் தமிழ்ச் சங்க வேலை சுணங்கியது.

பொய்யா மொழிப் புலவர் காளையார்கோவிலை
நோக்கிப் பயணப்பட்டார். ஒருநாள் மாலை வேளை
யில் அவ்வூரை வந்தடைந்தார். கூத்தாள் வீட்டை
நெருங்கிக் கதவைத் தட்டினார். இடையில் கூத்தாள்
மற்றும் அவள் தமக்கை, தாய், தாய்வழிப் பாட்டி
ஆகியோரரின்  நல்ல மனம் திரிந்து கபடச் சிந்தனை
குடிபுகுந்தது. பொய்யா மொழிப் புலவர் அனுப்பி
வைத்த பணமும் பொருளும் பலமடங்கு அதிகரித்
திருந்தன.. எப்படியாவது அதை மோசடி செய்யத்
திட்டமிட்டனர். பொய்யா மொழியார் கதவைத் தட்டி
யதும் "இதற்கு முன்பு இவ்வீட்டில் குடியிருந்தவர்கள்
காலி செய்து வெளியேறிவிட்டனர். நாங்கள்  புதிதாகக்
குடிவந்துள்ளோம்" என்று வீட்டுக்குள் இருந்தவாறே
கதவைத் திறக்காமலேயே சொன்னார்கள்.

புலவர் மிகவும் சினமடைந்தார். பேராசையினால்
தமிழ்ச்சங்கத்துக்காகத் திரட்டிய பணத்தையும் பொருளை
யும் அபகரிக்கத் திட்டமிடுவதை உணர்ந்து கொண்டார்.
,கோபத்தோடு "பழைய குருடி, கதவைத் திறடி" என்று  உரத்துக் குரல்
கொடுத்தார். அவர் வாக்குப் பலித்ததோ இல்லை கூத்தாள்
வகையறாக்கள் மிதமிஞ்சிய அச்சத்தில் இருந்ததாலோ
அந்த நாலு நபர்களுக்கும்  கண்பார்வை தெரியாமற் போயிற்று.
நால்வரும் புலவரின் கால்களில் விழுந்து வணங்கி
"பேராசையினால் கபட வேலை செய்தோம். மன்னித்து விடுக"
என்று கண்களில் நீர்வழியக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.
புலவரின் பணத்தையும் பொருளையும் அவரிடமே ஒப்படைத்தனர்.

புலவர் அவர்களை மன்னித்து விட்டுத் தமக்குரிய பணத்தையும்
பொருளையும் எடுத்துக் கொண்டு தமது ஊரான அதிகத்தூர்
வந்தடைந்தார். ஆர்க்காட்டுக் கோட்டம் அரசூரைச் சேர்ந்த சீநக்கன்
என்னும் வள்ளலோடு புலவர் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.
சீநக்கன் இறந்தபொழுது நம் பொய்யாமொழியார் அவர் சிதையில்
பாய்ந்து  உடன்கட்டை ஏறினார் எனச் சொல்லப்படுகிறது. கோப்
பெருஞ் சோழனுக்காகப் பிசிராந்தையார் என்ற புலவர், வேள்
பாரிக்காகப் புலவர் கபிலர் உடன்உயிர் துறந்தது போலவே
சீநக்கன் என்னும் வள்ளலுக்காக நம் பொய்யா மொழியாரும்
உடன் உயிர்துறந்தார்.

Wednesday 10 June 2020

செங்கையில் வண்டு கவின் கவின் என்று செயம்....

செங்கையில் வண்டு கலின்கலின்  என்று செயம்செயம் என்றாட......

தென்காசி மாவட்டம் வடகரைப் பகுதிச் சிற்றரசராக விளங்கிய
சின்னணஞ்சாத்  தேவரது அவைப் புலவராகத் திகழ்ந்த திரிகூட
ராசப்பக் கவிராயர் என்பவர் அப்பகுதிச் சிற்றூரான மேலகரத்தில்
வாழ்ந்து வந்தவர். அவர் அருகிலுள்ள குற்றால நாதர்மீது பாடியது
திருக் குற்றாலக் குறவஞ்சி என்னும்  இசை நாடகச் சிற்றிலக்கியம்.

கதைச் சுருக்கம்:  திருக் குற்றால நாதர் வீதியுலா வருகின்றார். அப்
பொழுது பந்தடித்துக் கொண்டிருந்த பேரழகி வசந்த சுந்தரி வெளியே
வந்து அவரைத் தரிசித்துத் தொழுகின்ற பொழுது அவர் பேரழகால் ஈர்க்
கப்பட்டு அவர்மீது மையல் கொள்கின்றாள். அவர்பால் தன் தோழியைத்
தூதனுப்புகின்றாள். அப்பொழுது வீதியில் குறிசொல்லும் குறத்தி
ஒருத்தி வருகின்றாள்.அவளிடம் வசந்த சுந்தரி  குறிகேட்க அவள்
"நீ குற்றால நாதர் மேல் மையல் கொண்டுள்ளாய்; உன் எண்ணம்
ஈடேறும்" என்று சொல்கின்றாள். அந்த நேரம் குறத்தி சிங்கியைத்
தேடிவந்த சிங்கன் சிங்கியுடன் அளவளாவுகின்றான். பின்னர் அனை
வரும் திருக்குற்றால  நாதரைப் பாடிப் பரவுகின்றனர். இச் சிற்றிலக்
கியம் இசை--நாடகப் பாங்கு இழையோட இயற்றப்பட்டுள்ளது. பாடல்கள்
சொல்லின்பம், பொருளின்பம், இசையின்பம்  மிடைந்து  துள்ளவைக்கின்றன.

வசந்த சுந்தரியின் அழகை விவரிக்கும் பாடல்களில் இரண்டை நோக்குவோம்:
இருண்ட மேகம் சுற்றிச் சுருண்டு சுழியெறியுங்
         கொண்டையாள்; குழை
ஏறியாடி நெஞ்சைச் சூறையாடும் விழிக்
         கெண்டையாள்;
திருத்து பூமுருக்கின் அரும்பு போலிருக்கும்
        இதழினாள; வரிச்
சிலையைப் போல் வளைந்து பிறையைக் போலிலங்கு
         நுதலினாள்.

"அரம்பை தேசவில்லும் விரும்பி யாசைசொல்லும்
புருவத்தாள்; பிறர்
அறிவை மயக்குமொரு கருவும் இருக்குமங்கைப்
பருவத்தாள்;
கரும்பு போலினித்து மருந்துபோல் வடித்த
      சொல்லினாள்; கடல்
கத்தும் திரைகொழித்த முத்து நிரைபதித்த
      பல்லினாள்."

"வித்தகர் திரிகூ டத்தில் வெளிவந்த வசந்த வல்லி
தத்துறு விளையாட் டாலோ தடமுலைப் பிணைப்பி னாலோ
நத்தணி கரங்கள் சேப்ப, நாலடி முன்னே ஓங்கிப்
பத்தடி பின்னே வாங்கிப் பந்தடி பயில்கின் றாளே!"
என்ற பாடலில் சொல்லப்பட்டவாறு வசந்த சுந்தரி  பந்தாடு
கின்றாள்.

"செங்கையில் வண்டு கலின்கலின் என்று
   செயம்செயம் என்றாட--இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு
   தண்டை கலந்தாட--இரு
கொங்கை கொடும்பகை வென்றனம்  என்று
   குழைந்து  குழைந்தாட--மலர்ப்
 பைங்கொடி நங்கை வசந்த சுந்தரி
    பந்து  பயின்றாளே!"
பொருள்:
செங்கையிலுள்ள கருவளையல்கள் கலின்கலின் என்று
ஒலியெழுப்புகின்றன. அது வெற்றி, வெற்றி என்று முழக்கம்
இடுவது போல்  உள்ளது.. கைவளையல்களின் ஓசையோடு
காலில் அணிந்துள்ள சிலம்பு, தண்டை போன்ற அணிகலன்
களின் ஓசையும் கலந்து கொள்கிறது. குதித்துக் குதித்துப்பந்
தடிக்கும் போது நகில்கள் தாம் பந்தை வென்றதாக எண்ணிப்
பெருமையோடு குழைந்து குழைந்து குதித்ததைப் போலத் தோன்று
கிறது.இவ்வாறாக மங்கை வசந்த சுந்தரி பந்தாடினாள்.
இதுபோலவே இன்னும் மூன்று இசை நயம் மிளிரும் பாடல்கள்
பயின்று வருகின்றன. அவை பின்வருமாறு:
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டை புரண்டு புரண்டாடக்--குழல்
மங்குலில் வண்டு கலைத்ததுகண்டு மதன் சிலை வண்டோட--இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை திண்டாட--மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி பந்து பயின்றாளே.

சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப்--
புணை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை கொண்டாட--நய
நாடக மாடிய தோகை மயிலென நன்னகர் வீதியிலே--அணி
ஆடக  வல்ல வசந்தவொய் யாரி அடர்ந்துபந் தாடினளே.

இந்திரை யோயிவள் சுந்தரி யோதெய்வ ரம்பையோ மோகினி
யோ--மன
முந்திய தோவிழி முந்திய தோகர முந்திய தோவெனவே--
உயர்
சந்திர சூடர் குறும்பல  வீசுரர் சங்கணி வீதியிலே--மணிப்
பைந்தொடி நாரி வசந்தவொய் யாரிபொற் பந்துகொண்
டாடினளே."

ஆட்டம் ஈடுபாட்டுடன் நடைபெற்றது. திடீரென்று வேகமெடுக்
கின்றது. பாடல்களிற் பயிலும் தாளக் கட்டு வேகமெடுக்கிறது.
"மந்தர முலைகள் ஏசலாட, மகரக் குழைகள் ஊசலாட,
சுந்தர விழிகள் பூசலாட, தொங்கத் தொங்கத்
தொங்கத் தொம்மெனப் பந்தடித்தனளே வசந்த சுந்தரி
விந்தையாகவே........".

குற்றால மலைவளத்தை விவரிக்கும் பாடல்களும் இந்த இலக்கியத்
தில் பயின்று வருகின்றன. அதில் ஒன்றைப் பார்ப்போம்:
" வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்;
    மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்;
கானவர்கள்  விழியெறிந்து வானவரை அழைப்பார்;
   கமனசித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார்;
தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும்;
   செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்;
கூனலிளம் பிறையணிந்த வேணியலங் காரர்
    குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே".

இவற்றைப் போன்றே நூல் முழுவதும்  சொல்நயம்,
பொருள்நயம், தொடை நயம், நடைநயம், சந்த நயம்,
தாள நயம் விரவிய  பாக்களையும், பாவினங்க
ளையும் காணலாம். படித்து இன்புறுவோம்.


.






Saturday 9 May 2020

இறைவா! கொரோனாத் தொற்றிலிருந்து காத்தருள்க!


வீட்டினுள் இருப்போம்; வெளியே செல்லோம்.

ஊறுசெய் கொரோனா நோயால்
   உலகத்து மாந்தர் வாடித்
தேறுதல் சொல்வார் இன்றிச்
   சீர்செய்யும் மருந்தும் இன்றி
நூறுபல் லாயி ரம்பேர்
   நொய்வுடன் மாளு கின்றார்;
ஆறுதல் சொல்லும் நாடு
    யாங்கணும் இல்லை யம்மா!

ஊரெலாம்  அடங்கும் வண்ணம்
   உத்தர(வு) இட்ட மையச்
சீருறும் அரசின் சொல்லைச்
  சிந்தையில் ஆழத் தாங்கி
யாரொடும் நெருங்கி டாமல்
  இடைவெளி காப்போம்; நோயை
வேரொடும் வீழ்த்தும் வண்ணம்
  வீட்டினில் தங்கு வோமே.

தடுத்திடும் மருந்தும் இல்லை;
  சரிசெய்யும்  மருந்தும் இல்லை;
அடுத்தவர் தம்மை நீங்கி
  ஆறடி விலகல் நன்றாம்;
மிடுக்குடன் கவசம் மாட்டி
  வெளியினில் செல்லல் மேலாம்;
எடுத்திடும் முயற்சி யாலே
  இன்னல்செய் கொரோனா ஓயும்.

அடிக்கடி கையி ரண்டை
  அரசுகள் சொன்ன வண்ணம்
மடியின்றி வழலை கொண்டு
   மறுவறக் கழுவல் நன்றாம்;
இடியினைப் போலும் துன்பம்
   இழைத்திடும் கொரோனா, இல்லப்
படியினை மிதியா  வண்ணம்
   பாங்குறத் தூய்மை காப்போம்.

நோயினை எதிர்க்கும் சக்தி
    நும்முடல் பெற்று விட்டால்
பேயினை ஒத்த நோயைப்
   பிடரியைப் பிடித்துத் தள்ளிப்
'போயின கிருமி' என்று
   புகன்றிடல் எளிதாம்; மேலும்
தாயினைப் போலும் அன்பால்
   சகமக்கள் தம்மைக் காப்போம்.

உயிரினைப் பெரிதென்(று) எண்ணா
    உணர்வுடன் தொண்டு செய்யும்
நயமிகு மருந்து வர்கள்,
    நற்குணச் செவிலி யர்கள்,
தயக்கமே இலாது சட்டம்
   தழைத்திடக் காவல் காப்போர்,
அயர்வுறாத் தூய்மை செய்வோர்
    அத்தனை பேர்க்கும் நன்றி.

வையத்தில் பரவி விட்ட
    மாபெரும் கொடிய நோயாம்
நையச்செய் கொரோனா தன்னை
    நாட்டைவிட்(டு) அகற்ற எண்ணித்
துய்யநல் அறிவு ரையைச்
    சொல்லிடும் அரசு கட்குக்
கைகளைக் கூப்பி நன்றி
    கழறுதல் செய்வோம்; வாழ்க.
(மைய அரசு=மத்திய அரசு; மடியின்றி=
சோம்பல் இன்றி;வழலை=சவர்க்காரக்கட்டி=
சோப்பு; மறுவற=குற்றமற;கழறுதல்=சொல்லுதல்;
அரசுகள்=மத்திய மற்றும் தமிழக அரசுகள்)


தலைவணங்கி நன்றி நவில்வோம்.

உயிர் குடிக்கும் மிகக்கொடிய கொரோனாநோய்த்
  தொற்றாலே உழலு  வோர்க்குத்
தயக்கமின்றித் தம்உயிரைப் பணயம் வைத்து
  மருத்துவம்செய்  சால்பு  மிக்க
உயர்வுமிகு மருத்துவர்கள் அளப்பரிய
 தொண்டாலே உயிரைக் காப்பர்;
துயர் துடைக்கும் அவர்பணியை மெச்சிடுவோம்;
  தாள் பணிந்து சொல்வோம் நன்றி.

இன்னலுறும் பிணியாளர் தமைநெருங்கிச்
  சேவை செய்யும் இனிய சொல்லர்;
தன்னலமே கருதாது சலியாமல்
  உழைக்கின்ற  தகைமை யாளர்;
அன்னைநிகர் அன்புடனே செவிலியர்கள்
  எப்பொழுதும் ஆற்றும் தொண்டை
என்னவிதம் போற்றிடுவோம்; என்னவிதம்
  நன்றி சொல்வோம்;  இனிதே வாழ்க!

மருத்துவநல் மனையதனில் குவிகின்ற
  கழிவுகளை வாரிக் கொட்டிக்
கருத்துடனே தூய்மைசெய்து நோய்த்தொற்று
  நிகழாமல் காத்தல் செய்யும்
பெருந்தொண்டு புரிகின்ற துப்புரவுப்
   பணியாளர் பிறங்கி வாழ்க!
இருகரமும் கூப்பியவர் நற்பணிக்கு
   நன்றி தனை இயம்பு வோமே.

காரணமே இல்லாமல் வீதிவலம்
   வருவோரைக்  கடிந்து தத்தம்
சீரியநல் மனைகளிலே கிடந்திட வே
   வலியுறுத்திச்  சேவை யாற்றும்
தீரமிகு காவலரே! தலைசாய்த்து
   வணங்குகிறோம்; தீய  நோயை
ஊரடங்கை நிலைநாட்டிப் பரவாமல்
   தடுக்கின்ற உமக்கு நன்றி.

இப்பெரிய செயலினிலே இனும்பலபேர்
   ஒன்றாக  இணைந்து கூடித்
தப்பறவே உதவுகின்றார்;  அன்னவர்கள்
   தமக்கு நன்றி  சாற்று வோமே!
இப்புவியில் கொரோனாவை ஒழிப்பதற்கு
   மருந்தில்லை; எனினும் ஏற்ற
ஒப்பிலதாம் ஊரடங்கும் சமுதாய
   இடைவெளியும்  உதவும் மாதோ!


கடவுளே! எங்களைக் காப்பாய்; கொரோனாவைக் கட்டிவிடு.

சீனாவில் தோன்றி யகிலமெல் லாம் சுற்றித் தீக்கொரனா
ஆனாத செல்வ வளநாடு தம்மை  அலறவைத்து
நானா விதத்தில் பொதுமக் களைவாட்டி நாசம்செய்து
தானா எவர்க்கும் அடங்காமல் நாளும் தகிக்கிறதே!

இத்தாலி இஸ்பெயின் செர்மனி நல்பிரான்ஸ் இங்கிலந்து
மெத்தப் புகழ்சேர் கனடா அமெரிக்கா மேன்மைமிகு
இத்தகு நாடெல்லாம் கையற்று நிற்க இயம்பவொணாச்
சித்தம் குலைய மனிதர்கள் சாகச் செயல்செயுமே!

பாரத தேசமும் தப்ப இயலாமல் பாழ்பிணியால்
கோர விளைவினைச் சந்தித்துத் திண்டாட்டம் கொள்கிறது;
சீரழி கின்ற இருநூறு நாடு திகைத்து நிற்கப்
பேரழி வைச்செய்யும் பொல்லாநோய் என்று பிடிவிடுமே?

ஆண்டவா! போதும்; அளவற்ற துன்பம் அடைந்துவிட்டோம்;
நீண்ட‌,எண் ணிக்கையில் தொற்றால் மரணம் நிகழ்ந்துளது;
தாண்டவம் ஆடும் வறுமை, பணியின்மை, தாங்கரிய
சீண்டும்  பணமின்மைச் சிக்கல்கள் என்றுதான் தீர்ந்திடுமே?

கொத்துக்கொத் தாகக் கொரானோநோய்த் தொற்றால் குவலயத்தார்
செத்து மடிகின்ற செய்தியைக் கேட்டுத் திகைப்படைந்தோம்;
சித்தம் தடுமாறிச்  செய்வ தறியாது தேம்புகின்றோம்;
அத்தனே! நீயுன் கடைக்கண்ணால் நோக்கின் அகன்றிடுமே!

கடவுளே! எங்களைக் காப்பாய்; கொரோனாவைக் கட்டிவிடு;
அடங்காப் பிணியை அடியோடு மாய்ப்பாய், அவனிதனில்;
திடசித்தம், நோயை எதிர்க்கும் வலிமை திரும்பிடச்செய்;
மடமக்கள் யாமெலாம்  நின்றாள் பணிந்து வணங்குதுமே!

படியோர் புகழும் இறைவா! அருள்செய்க; பாரிலெங்கும்
துடியாய்த் துடித்துக் கொரோனாநோய்த் தொற்றால் துயரடைந்து
மடியும் மனிதரைக் கண்டுளம் நைய  வதங்குகிறோம்;
அடியோம்; உமது திருத்தாள் சரணம் அடைக்கலமே!

Saturday 4 April 2020

நாணின்மை செய்தேன், நறுநுதால்!

"நாணின்மை செய்தேன், நறுநுதால்!"

நூல்:கலித்தொகை; பாடல் எண்:37; புலவர்: கபிலர்;
திணை: குறிஞ்சி.

மலைநாட்டில் ஒரு தலைவி தன் தோழியிடம் கூறினாள்:
"குளத்தில் மலர்ந்திருக்கின்ற குவளை மலர் போன்ற மை
தடவிய கண்ணையுடைய தோழியே! இதனை நோக்குவாய்.
ஒரு நாள் வில்லேந்திய வீரன் ஒருவன் அவனால் விரட்டப்பட்ட
வலிமையான விலங்கின் காலடித்தடத்தை ஆராய்பவன் போல
இங்கும் அங்கும் பார்த்துக் கொண்டு வந்தான். சிறப்புப் பொருந்
திய மாலையை அணிந்திருந்தான். என்னை உற்று நோக்கினான்.
என் எழிலால் கவரப்பட்டான்.அதனைப்பற்றி வெளிப்படையாகத்
தெரிவிக்காமல் நகர்ந்து சென்றுவிட்டான். பலநாட்கள் இதைப்
போலவே என்னை உற்று நோக்கிவிட்டுத் தன் மனக் கிளர்ச்சியைப்
பற்றி யாதொன்றும் சொல்லாமல் சென்றுவிடுவதை வழக்கமாகக்
கொண்டிருந்தான்.

எனக்கும் அவன்பால் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. ஆனால் ஆணாகப்
பிறந்த அவனே தன் உள்ளக் கிளர்ச்சியைத் சொல்லத் தயங்கிய
பொழுது, பெண்ணாகிய நான் சொல்வது முறையாகாது அன்றோ?
இதனால்  என் உறக்கம் பாதிக்கப் பட்டது. அவனின் உள்ளக் கிளர்ச்சிக்
குப் பெயர் காதலா? நான் அறியேன். எனக்கு அவன்பால் ஏற்பட்ட மனக்
கிளர்ச்சி எத்தகையது? அதுவும் புரியவில்லை. இப்படியே வருவதும்,
என்னை நோக்குவதும் பின் யாதொன்றும் சொல்லாமல் நகர்வது மாக
அவன் செய்து கொண்டிருந்தான். ஒருநாள் அவனைக் கண்ணால் காண
இயலாது போய்விடும். இதைப் பற்றியே சிந்தித்துச் சிந்தித்து நான்
சோர்வடைந்துவிட்டேன். என் தோள்கள் இனம் புரியாத துயரால் மெலிந்து
விட்டன.

ஒருநாள் இந்த இனம் புரியாத துயரம் மிகவும் வாட்டியதால்  எங்கிருந்தோ
துணிச்சல் கிளம்பி அதன் விளைவாகப் பெண்களுக்கே உரித்தான நாணத்
தைத் துறந்து ஒரு செயலைச் செய்தேன். நறுமணம் மிக்க நெற்றியை யுடையதோழியே!
தினைக்கதிர்கள் விளைந்து முற்றிச் செழித்திருந்த தினைப்புனத்தில் கிளிகள்
பயிரைக் கொத்திப் பாழாக்காமல் பாதுகாக்கும் பணி செய்யுங் காலத்தில் அருகில்
தொங்கிக் கொண்டிருந்த ஊஞ்சலில் அவ்வப்பொழுது ஆடுவது வழக்கம். அதுபோல
ஒருநாள் ஊஞ்சலில் ஆடிக்கொண்டிருந்த பொழுது அவன் வந்தான். உடனே நான்
அவனிடம் "ஐயா! இந்த ஊஞ்சலைக்  கொஞ்சநேரம் ஆட்டிவிடும்" என்றேன். உடனே
அவன் "பெண்ணே! நன்று, நன்று" என்று கூறி அவன்ஊஞ்சலை ஆட்டிவிடலானான்.
அச்சமயத்தில் ஊஞ்சலைப் பிடித்திருந்த என் கை நெகிழ்ந்தது போல நடித்து அவன்
மார்பில் வீழ்ந்து மயங்கியது போலக் கிடந்தேன். அவன் பதறிப் போய் என்னைப்
பூப்போல எடுத்து அணைத்துக் கொண்டான். நானும் மயக்கத்தில் இருப்பது போல
வே அவன்மேல் விழுந்து கிடந்தேன். மயக்கம் தெளிந்தது போல எழுவேனாயின்,
"ஒளிரும் நகையணிந்த மங்கையே! நீ செல்க" என்று கூறி அவன் அவ்விடத்தை விட்டு
அகல்வான். அத்தகைய பண்பும் இரக்கமும் உடையவன்." என்று இயம்பினாள். இந்த
நிகழ்வுக்குப் பிறகு அவர்கள் இருவருக்கும் காதல அரும்பியிருக்கும். ஏனென்றால்
அவனுக்கு அவள் பால் ஈர்ப்பு இருந்தது. வெளிப்படையாகச் சொல்ல‌ வெட்கப்பட்டான்.
அவளைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. அவர்கள் காதல் விரைவாகத் தழைத்து
மலர்ந்திருக்கும். இனி, பாடலை நோக்குவோம்:
"கயமலர் உண்கண்ணாய்! காணாய், ஒருவன்
வயமான் அடித்தேர்வான் போலத் தொடைமாண்ட
கண்ணியன் வில்லன், வருமென்னை நோக்குபு
முன்னத்தின் காட்டுதல் அல்லது, தானுற்ற
நோய் உரைக்கல்லான் பெயரும்மன், பல்நாளும்;
பாயல் பெறேஎன், படர்கூரந்து, அவன்வயின்
சேயேன்மன் யானும் துயருழப்பேன்; ஆயிடைக்
கண்நின்று கூறுதல் ஆற்றான் அவனாயின்;
பெண்ணன்(று)  உரைத்தல், நமக்காயின்; 'இன்னதூஉம்
காணான் கழிதலும் உண்'(டு)என்(று) ஒருநாளென்
தோள்நெகிழ்(பு) உற்ற துயரால் துணிதந்தோர்
நாணின்மை செய்தேன்; நறுநுதால்! ஏனல்
இனக்கிளி யாம்கடிந்(து) ஓம்பும் புனத்தயல்,
ஊசல் ஊர்ந்தாட, ஒரு ஞான்று வந்தானை,
'ஐய! சிறிதென்னை ஊக்கி' எனக்கூற,
'தையால்! நன்(று)'என்(று) அவன்ஊக்கக் கைநெகிழ்பு
பொய்யாக வீழ்ந்தேன், அவன்மார்பின்; வாயாச்செத்(து)
ஒய்யென ஆங்கே எடுத்தனன் கொண்டான்;மேல்
மெய்யறியா தேன் போல் கிடந்தேன்; மன்; ஆயிடை
மெய்யறிந்(து) ஏற்றெழு வேனாயின், மற்றொய்யென்,
'ஒண்குழாய்! செல்கெனக் கூறி விடும்பண்பின்
அங்கண் உடையன் அவன்.
அருஞ்சொற் பொருள்:
கயமலர்=குளத்து மலர்; உண்கண்ணாய்=மை எழுதிய கண்ணாய்;
வயமான்=வலிமையான விலங்கு; மாண்ட தொடை=சிறந்த மாலை.
நோக்குபு=நோக்கி; பெயரும்=செல்வான்; பாயல் பெறேஎன்=உறக்கம்
கொள்ளேன்; படர்=துயரம்; நாண்இன்மை=வெட்கம் இல்லாமை;
நறு நுதால்=நறுமணம் மிக்க நெற்றியை உடையவள்; ஏனல்=தினைப்
புனம்; வாயாச் செத்து=பதறியடித்துக் கொண்டு;ஒண் குழாய்=ஒளிரும்
அணிகலன் அணிந்தவளே.
 அங்கண்=இரக்கம்.
ஒரு சிறந்த நாடகம் போலப் பாடல் அமைந்துள்ளது. படித்து இன்புறுவோம்.
















Sunday 1 March 2020

கணக்கதிகாரம்--புதிர்க்கணக்குகளும் விடையும்.

கணக்கதிகாரம்.

கணக்கதிகாரம் சோழநாட்டுக் கொறுக்கையூரைச் சேர்ந்த
காரி என்பவர் பதினைந்தாம் நூற்றாண்டில் இயற்றிய
தமிழ்க் கணித நூலாகும். இவர் தந்தையார் புத்தன் என்பவர்
ஆவார். இவர் அரச மரபினர் எனச் சொல்கின்றனர். இந்த
நூலில் மொழியப் பட்டவை பின்ன எண்களின் பெயர்கள்,
முழு எண்களின் பெயர்கள், எப்படிக் கூட்டினாலும் ஒரே விடை
வரும் கட்டக் கணக்குகள், பொழுது போக்கு வினா--விடைக்
கணக்குகள், இவைகளை விவரிக்கும் வெண்பா, கட்டளைக்
கலித்துறை, விருத்தம் முதலான பாடல்கள் ஆகும்.

முதலில் ஒரு வேடிக்கை விநோதக் கணக்கைப் பார்ப்போம்:
"முப்பத்தி ரெண்டு முழம்உள முட்பனையைத்
தப்பாமல் ஓந்தி தவழ்ந்தேறிச்---செப்பமுடன்
சாணேறி நான்கு விரல்கழியும் என்பரே
நாணா(து) ஒருநாள் நகர்ந்து."
ஓந்தி---ஓணான்.
வினா:
32 முழம் உயரமுடைய ஒரு பனை மரத்தில் ஓணான் ஒன்று
ஏறுகிறது. அதன் ஏறும் வேகம் ஒரு நாளைக்கு ஒரு சாண்
ஏறினால் நான்கு விரல் கீழிறங்கும்.(வாய்பாடு: 1 முழம்=2
சாண்; 1 சாண்=12 விரல்; 1 முழம்= 24 விரல்). இந்த வேகத்
தில் பனையேறும் ஓணான் எத்தனை நாளில் உச்சியை
அடையும்?
விடை:ஆசிரியர் தரும் குறிப்பு:
பனையதனை இரட்டித்துப் பன்னிரண்டால் மாறி இருநான்கு
ஈந்துகொள். அதாவது, பனைமரத்தின் உயரத்தை 2ஆல் பெருக்கிப்
பின் மீண்டும் 12 ஆல் பெருக்கி வரும் எண்ணை இருநான்கால்
வகுத்தால்(8 ஆல் வகுத்தால்) விடை கிடைக்கும்.

பனைமர உயரம் 32 முழம். அதாவது 64(32x2) சாண்; அதாவது 768
(64x12) விரல் உயரம்(மேலே கொடுக்கப் பட்ட வாய்பாட்டை நோக்குக).
ஒரு நாளைக்கு ஏறும் உயரம்: 12 விரல் உயரம்
கழிக்க:கீழிறங்கிச் சரிவது: ‌.       4 விரல் உயரம்
முடிவாக ஏறும் உயரம்:.                 8 விரல் உயரம்
8விரல் உயரம் ஏற ஆகும் நாள்.  =1
ஃ768 விரல் உயரம் ஏற ஆகும் நாட்கள்: 768 ஐ 8 ஆல் வகுக்க =96 நாட்கள்.

பலாப் பழத்தைக் கீறாமல் அதனுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கை அறிய:
"பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக்(கு) .எண்ணி---வருவதனை
ஆறாற் பெருக்கியே  ஐந்தினுக்(கு) ஈந்திடவே
வேறெண்ண வேண்டாம் சுளை".
விளக்கம்: பலாப் பழத்தின் காம்புப்  பகுதியின் அருகிலுள்ள  சிறு முட்களின்
எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி 5க்கு ஈந்திடவே(5ஆல்
வகுத்தால்) விடை கிடைக்கும்.
எடுத்துக் காட்டாக: பலாப் பழத்திலுள் முட்களின் எண்ணிக்கை 100 என்று
வைத்துக் கொண்டால், பழத்திலுள்ள சுளைகள்:100x6=600; 600 ஐ 5 ஆல்
வகுத்தால் வரும் விடை 120.
இந்தச் சூத்திரம் இயற்கையாக விளைந்த பலாப் பழங்களுக்குச் சரியாகச்
செயல்படும். செயற்கையாக மரபணு மாற்றம் செய்து விளைவிக்கப்பட்ட
பழங்களுக்குச்  சரியான விடை வராது.

இம்மாதிரி பல வேடிக்கை விநோதக் கணக்குகள் உள்ளன. வட்டத்தின் சுற்றளவு
காண மற்றும் பரப்பளவு காண வழிவகைகள் சொல்லப்பட்டுள்ளன.  மிகமிகப்
பெரிய முழு எண், மிகமிகச் சிறிய பின்ன எண் தமிழ்முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
விடுகதை போன்ற ஒரு வேடிக்கை விநோதக் கணக்கைப் பார்ப்போம்:
பூசணிக்காய் ஒன்றின் விலை 10 பணம்; கத்தரிக்காய் 2இன் விலை  1 பணம்;
பாகற்காய் 3இன் விலை  1 பணம். கையில் 100 பணம் இருப்பு உள்ளது. இந்த 100
பணத்துக்குப் பூசணிக்காய், கத்தரிக்காய் மற்றும் பாகற்காய்  எத்தனை எத்தனை
எண்ணிக்கையில் வாங்கினால் மொத்தம் 100 காய்கள் கிடைக்கும்?(அதாவது 100
பணத்தைச் செலவழித்து 100 காய்கள் வாங்குதல் வேண்டும்).
விடை:
   காய்.                எண்ணிக்கை.             பணம்
பூசணிக்காய்.                6.                           60
கத்தரிக்காய்.               52.                           26
பாகற்காய்.                    42.                          14
மொத்தம்.                     100.                        100

நூலில் காணப்படும் ஒரு புதிர்க் கணக்கு பின்வருமாறு:
ஒரு பழக்கடைக்காரர் விளாம் பழங்களை வழக்கமாக விற்று வந்தார். ஒருநாள் சிலர்
கடையிலிருந்து பழங்களைத் திருடிக் சென்று விட்டனர். கடைக்காரர் அரசரிடம்
சென்று முறையிட்டார். அவரிடம் அரசர்" திருடு நிகழ்ந்த நேரத்தில் கடையில் எத்தனை
பழங்கள் இருந்தன?" என வினவினார். கடைக்காரர் " எத்தனை பழங்கள் இருந்தன
என்று நினைவில் இல்லை. ஆனால் கைவசம் இருந்த பழங்களை இரண்டிரண்டாகப்
பிரித்தால் 1 பழம் மிஞ்சும்; மூன்று மூன்றாகப் பிரித்தால் 2 பழங்கள் மிஞ்சும்; நான்கு
நான்காகப்  பிரித்தால் 3 பழங்கள் மிஞ்சும்;  ஐந்து ஐந்தாம் பிரித்தால் 4 பழங்கள்
மிஞ்சும்; ஆறு ஆறாகப் பிரித்தால் 5 பழங்கள் மிஞ்சும்; ஏழு ஏழாகப் பிரித்தால் எதுவும்
மிஞ்சாது." என்றார். அரசர் அமைச்சரைப் பார்த்து " இது என்ன புதிராகவுள்ளது; என்ன
செய்யலாம்?" என்று வினவினார். அமைச்சர் ஒரு நாழிகை நேரம் ஆழ்ந்த சிந்தனையில்
ஈடுபட்டிருந்தார். பிறகு "அரசே! திருடு போன சமயம் கடையில் 119 பழங்கள் இருந்தன.
இப்பொழுது 100 பழங்கள் உள்ளன. 19 பழங்களைப் பசிக் கொடுமையால் உண்டிருக்
கலாம். அவர்களை மன்னித்து விடலாம். கடைக்காரர் கவனமாகவும் விழிப்போடும் கடை
யை நடத்தல் வேண்டும்" என்று யோசனை கூற, அரசர் அவ்வாறே தீர்ப்புச் சொன்னார்.

இந்த நூல் தமிழர்களின் கணித அறிவைச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றது. படித்து
இன்புறலாம்.











Monday 3 February 2020

தேரோடு நின்று தெருவோடலைகிற செய்தி/பணத்தட்டு எவ்விடம்?

தமிழுக்குத் தொண்டு செய்த ஊற்றுமலை ப் பாளையக்காரர்கள்.

மதுரை மன்னர் விசுவநாத நாயக்கர் காலத்தில் நிருவாக வசதிக்
காகப் பிரிக்கப்பட்ட  72 பாளையங்களில் ஊற்றுமலைப் பாளையம்
மிகப் பெரிதாகத் நிகழ்ந்துள்ளது. இதன் ஆளுகைக்கீழ் 148 சிற்றூர்கள்
இருந்தன. இது போதாதென்று சுரணடை ஜமீனையும் ஏலம் எடுத்துத்
தமது ஜமீனோடு சேர்த்துக் கொண்டது. பாளையம் அல்லது ‌பாளையப்
பட்டு என்பது பண்டைய சிற்றறரசுப் பகுதிக்குச் சமமாகும். ஆங்கிலேயர்
காலத்தில் பாளையப் பட்டு முறை ஒழிக்கப்பட்டு ஜமீன்தாரி முறைமை
நடைமுறைப் படுத்தப்பட்டது.

உருவான காலத்திலிருந்தே ஊற்றுமலைப் பாளையக் காரர்கள் தாமே கவிதை
புனைந்தும், தமிழ்ப்புலவர்களை ஆதரித்து அவர்களைக் கவிதை புனையுச் செய்தும்
அவற்றைப் படித்து இரசித்தும், ஓலைச் சுவடிகளை ச்சேகரித்தும் அளப்பரிய
தமிழ்த் தொண்டு செய்தனர். ஒரு காலக் கட்டத்தில் 38 தமிழ்ப் புலவர்கள் அரசவையில்
தொண்டு செய்தனர்.தமிழ்த் தாத்தா உ.வே.சா.அவர்கள், வேம்பத்தூர்ச் சிலேடைப்புலி
பிச்சுவையர், காவடிச் சிந்து பாடிய சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் முதலான
பெரும் புலவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஊற்று மலைப் பாளையப்பட்டின் தமிழ்த் கொண்டுதான் நிலைகுலைந்து போகவிருந்த,
சின்னாபின்னமாகிச் சீரழியவிருந்த ஊற்றுமலையைக் காப்பாற்றியது. என்றால் அது
நூற்றுக்கு நூறு உண்மை. அதாவது, வடகரை என்னும் சொக்கம்
பட்டியில் பெரியசாமி சின்னணஞ்சாத் தேவர் தலை
மை வகித்த காலத்தில் ஊற்றுமலைப் பாளையக்காரர் தென்மலை என்னும் சிவகிரி யிலி
ருந்தவர்க்கு  உதவி புரிந்துவந்தார். வடகரைப் பாளையக்காரரும் ஊற்றும லைப் பாளையக்
காரரும் உறவினர்கள்.
வடகரைப் பாளையக்காரருக்குச் சேற்றூர்ப் பாளையக்காரர் நண்பர். ஊற்று மலைப் பாளை
யக் காரருக்குத தென்மலைப் பானளையக்காரர் நண்பர். சேற்றூர்ப் பாளையக் காரருக்குத்
தென்மலைப் பாளையக் காரர் ஊற்றுமலையார் உதவியோடு தொல்லை கொடுத்தார். வட
கரைப் பாளையக் காரர் தமது நண்பர் சேற்றூர்ப் பாளையக் காரருக்காகக் களத்தில்
இறங்கித் தமது உறவினரான ஊற்றுமலையாரையும்,  தமது நண்பரின் பகைவரான
தென்மலையாரையும் ஒருங்கே ஒடுக்கப் படைகளை அனுப்பிவைத்தார். வடகரைப் பாளை
யத்தின் தலைமை நிருவாகி பொன்னம்பலம் பிள்ளை தலைமையில் கடும் போர் செய்து
தென்மலையையும்   ஊற்றுமலையையும் ஒடுக்கின. இப்போரில் ஊற்றுமலைப் பாளை
யக்காரர் பகைவர்கையில் அகப்பட்டு உயிரிழந்தார்.

ஊற்று மலைப் பாளையக்காரர் போகூழ் உடையவர்(துரதிர்ஷ்டசாலி) போலும்.அவருக்கும்
வடகரைப் பாளையத்துக்கும் யாதொரு பகையும் இல்லை. மேலும் இரு பாளையக்காரரும்
உறவினர்கள். அப்படியிருந்தும் இந்தத் தகாத நிகழ்வு நேர்ந்து அதன் விளைவாக ஊற்று
மலைப் பாளையம் நிலைதடுமாறிப் போனது. சின்னா பின்னமாகிச் சீர்குலைந்து போனது.
ஊற்றுமலையாரின் துணைவியார் பூசைத்தாயார் பாதுகாப்புக்காகத் தென்காசி நகருக்குள்
வந்து தங்கினார். அவரோடு அவரின் பிள்ளைகள் இருவரும்(மூத்தவர் மருதப்பத் தேவர்,
இளையவர் சீவலவத் தேவர்) தங்கியிருந்தனர்.

பூசைத் தாயார் நல்ல தமிழ்ப் புலமை சான்றவர். நடக்கக் கூடாததெல்லாம் நடந்து விட்டதை
நினைத்து வருந்தினார். பிள்ளைகளுக்குக் கல்வி அவசியம் என்று உறுதி யாக எண்ணி
அவர்களை ஒரு பள்ளிக்கு அனுப்பி வந்தார். ஒருநாள் இளையவர் பள்ளிக்குச் செல்லாமல்
தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததைக் கண்ட மூத்தவர் இளையவரைக் கன்னத்தில்
அறைந்து விட்டார்.  இச்செயலை த்  தன்மானக் குறைவாகக் கருதிய இளையவர் பள்ளி
யிலிருந்து திரும்பியதும் அன்னையிடம் சொல்லி அழுது புலம்பினார். உடனே பூசைத்
தாயார் இருவர் மீதும் தவறில்லை என்று கருதிக் கண்ணீர் உகுத்தார். கீழீக்கண்ட
பாடலைப் பாடினார்:
"தேரோடு நின்று தெருவோ டலைகிற செய்திதனை
ஆரோடு சொல்லி முறையிடு வோமிந்த அம்புவியில்
சீரோடு நாமும் நடந்துகொண் டாலிந்தத் தீவினைகள்
வாராவ டாதம்பி சீவல  ராய மருதப்பனே!".
 என்று பாடி விட்டுக் கேவிக் கேவி அழுதார்.  தாயாரின்
அழுகைக்குத் தான் காரணமாகிவிட்டதை  உணர்ந்த
இளையவர் தாயிடம்" நடந்தது என்ன? விரிவாக எடுத்துச்
சொல்லுக" என்றார். அன்னை ஆதியோடந்தமாக நடந்த
நிகழ்வுகளை விளக்கினார். இளையவர் உடனே" நான்
வடகரைப்  பாளையக் காரைச் சந்தித்து உதவி கோரட்டு
மா?"  என்றார்.

"பாளையக் காரரைப் பார்ப்பது இயலாத செயல். நீ உடனே
பொன்னம்பலம் பிள்ளையைப் போய்ப் பார்.அவர் நல்ல
தமிழறிஞர்; அவர் உதவிசெய்வார்" என்றியம்பினார் பூசைத்
தாயார். அதன்படியே இளையவர் பொன்னம்பலம் பிள்ளை
யைப் பார்த்துக் கல்லும் கரையும் வண்ணம் துன்பங்களை
எடுத்துச் சொன்னார். பொன்னம்பலம் பிள்ளை பூசைத்
தாயாரின் தமிழ்ப் புலமைக்குப் பரம இரசிகர். எனவே,
வடகரைப் பாளையக்காரரைச் சந்தித்து "ஐயா! உங்களுக்கும்
ஊற்றுமலையாருக்கும் யாதொரு நேரடிப் பகையும் இல்லை;
மேலும் உங்களுக்குள் உறவுமுறை யுண்டு.  நாம் அநியாயமாக
ஊற்று மலைப் பாளையக் காரர்களைத் துன்புறுத்தி
விட்டோமோ? என்று என் மனச் சாட்சி என்னைக் குத்துகின்றது.
இப் பிழையைச் சரிசெய்து அவர்களைப் பழை‌ய உயர்நிலைக்
குக் கொண்டுவர அனுமதி தருக" என்றார். பாளையக் காரரும்
அனுமதி அளித்தார்.

மளமளவென்றே பணிகள் நடந்தேறின. ஊற்றுமலை அரண்
மனை செப்பனிடப் பட்டது. பூசைத் தாயார் தென்காசி நகரி
லிருந்து ஊற்று மலைக்குப் பல்லக்கில் அழைத்துவரப்
பட்டார். பழையபடி அவர்கள் வாழ்வில் தென்றல் வீசியது.
இத்தனைக்கும் காரணம் ஊற்றுமலைக் காரர்களின் தமிழ்ப்
புலமையும் தொண்டும் ஆகும்.

பணத்தட்டு எவ்விடம்?

பழனி நகரத்தில் 1836ஆம் ஆண்டு தோன்றியவர் பழனிச்சாமி.
தனது மூன்றாவது வயதில் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுக்
கடவுள் அருளால் உயிர்தப்பினார். இருந்த போதிலும் கண் பார்
வையைப் பறிகொடுத்தார். மனந்தளராமல்  தமிழ், வடமொழி,
இசை முதலானவற்றைத் தகுதிவாய்ந்த ஆசிரியர்களிடம் முறைப்
படி கற்றுச் சீரிய புலமையடைந்தார்.

அவர் காலத்தில் தென் தமிழ் நாட்டில் மன்னர் என்ற பெயருக்
கேற்ற சகல தகுதிகளையும் அதிகாரத்தையும் கொண்டு விளங்
கியவர்கள் இராமநாதபுரத்தை யாண்ட முத்துராமலிங்க சேதுபதி
யும் அவர் தமையனார் பொன்னுச்சாமித் தேவரும் ஆவர். இவர்கள்
அவையில் தம் புலமையைக் காட்டிக் 'கவிச்சிங்கம்' என்ற பட்டம்
பெற்றார்  பழனிச்சாமி என்ற மாம்பழக் கவிச்சிங்க நாவலர்.மாம்பழம்
என்னும் பட்டம் அவர்க்கு முந்திய தலைமுறையினர் திருமலை மன்
னரிடம் பெற்றதாகும்.

ஒருமுறை  பொன்னுச்சாமித்தேவர்  மாம்பழக் கவிச்சிங்கத்துக்குப்
பரிசு அளிக்கும்போதில் ஓர் அழகிய வெள்ளித்தட்டில் வைத்துக்
கொடுத்தார். புலவருக்குத்  துணையாய் வந்த சிறுவன் வெள்ளித்
தட்டின் அழகைப் பற்றி விவரித்துச் சொன்னான். உடனே புலவருக்குத்
தட்டின் மீது பெருவிருப்பம் உண்டாயிற்று. நேரடியாகத் தேவரிடம் தமக்குத்
தேவை என்று சொல்வதற்கும்  கூச்சமாக இருந்தது. எனவே, '"பணத்தட்டு
எவ்விடம்?"  என்று வினவினார். பணத்தட்டு என்பதற்குப் பணத்தையுடைய
தட்டு என்றும் பணத்துக்குத் தட்டு(தட்டுப்பாடு) என்றும் பொருள்படும். இக்
கேள்வியை எதிர்பாராத தேவர் சமஸ்தானத்துக்குப் பணத் தட்டுப்பாடு
வந்தால்(ஏற்பட்டால்) பொதுமக்கள் உட்பட அனைவரும் பாதிக்கப்படுவர்;
புலவருக்குப் பணத்தட்டு வந்தால்  அவர் சமாளித்துக் கொள்வார்(புலமை
யும் வறுமையும் சேர்ந்தே இருப்பது தானே) என்று எண்ணிப் "பணத்தட்டு
அவ்விடத்துக்கே" என்று விடையிறுத்தார். புலவரும்  ஆசைப்பட்ட படியே
வெள்ளித் தட்டையும் பரிசையும்  எடுத்துச் சென்றார்.

ஒருமுறை வாயிற் காவலர் ஒருவர்  வேறு காவல் பணியிலிருந்து  இந்தப்
பணிக்கு மாற்றப் பட்டிருந்தார். மாம்பழக் கவிச்சிங்கம்  பழனியிலிருந்து
வந்தவர் ஆதலாலும் காவலர் இதற்குமுன் அவரைப் பார்த்ததில்லை
ஆதலாலும்  கவிச் சிங்கத்துக்கு அரசவைக்குள்  நுழைய அனுமதி
மறுத்துவிட்டார். இதற்குள் வேறு ஒரு காவலர் வந்து புலவரைப்பற்றி
எடுத்துச் சொல்லி உள்ளே அனுமதிக்கச்  செய்தார்.  கவிச்சிங்கம் சிறிது
தாமதமாக அரசவைக்குள்நுழைந்த காரணம் பற்றிப் பொன்னுச்சாமித்
தேவர் வினவ, அவர் நடந்த நிகழ்வை ஒரு பாடலில் கூறினார். பாடல் வருமாறு:
"தருமகுண மிகுமுனது சமுகமுறார் வறுமையெனச்
   சலிக்கக் காய்ந்து
வருமிரவி வெயிலதனால் மயங்கியின்று யானிங்கு
   வந்த போழ்தில்
அருமை தவிர் பாராச்சே வகர்தமது பெயர்ப்பொருளை
    அறியக் காட்டிக்
கருவமொடு தடு ப்பதென்னே காமர்பொன்னுச் சாமியெனும்
    கருணை மாலே!"
பொருள்:
அழகிய பொன்னுச்சாமி என்னும் பெயருடைய கருணை மிக்க
திருமாலின் அம்சமானவரே!  தருமகுணம் மிகும் உமது சமுகத்தை
அடையார் வறுமையால் சலித்து வாடுவர். நான் தங்களை நாடி
ஏறு வெயிலில் வரும்போது வெயில் கொடுமையால் மயக்க
நிலையை அடைவதுபோல் இருந்தேன். வாயில் காக்கும் பாராச்
சேவகர் என்னை நுழைய விடாமல் தடுத்தார்.(இருந்தாலும் வேறு
காவலர் ஒருவர் வந்து விளக்கிச்  சொல்லியதன் பேரில் என்னை
அனுமதித்தார்.). மன்னர் தவறு செய்த காவலரை அழைத்து வர
உத்தரவிட்டார். உடனே கவிச்சிங்கம்   "ஐயா! அவர் இதற்குமுன்
என்னைப் பாராச் சேவகர்(பார்த்திராத சேவகர்) தானே; எனவே,
பாராச் சேவகர் பணியில் கடுமையாக நடந்து கொண்டார். அவர்
தம் கடமையைச் சரியாகச் செய்தார். எனவே அவர்க்கு யாதொரு
தண்டனையும் தேவையில்லை"என்றார். பாரா என்னும் சொல்
தமிழ்ச் சொல் அன்று. ஆனால் அதன் பொருள் காவல் என்னும்
பொருளில் கையாளப் பட்டுள்ளது. பாராச் சேவகன்=என்னை
இதற்குமுன் பார்த்திராத சேவகர்;  பாராச்  சேவகன்=காவல் காக்கும்
சேவகன் என்று இருபொருள்படப் புலவர் கையாண்டுள்ளார்.

Tuesday 7 January 2020

மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல்,

நாட்டுப் புறப்பாடலின் தொன்மை.

சங்க இலக்கியங்களுக்கு முன்னோடியாக மக்கள் நாவில்
நாட்டுப் புறப் பாடல்கள் தவழ்ந்திருத்தல் வேண்டும். அப் பாடல்
க்ளே மேலும் மேலும் திருத்தமடைந்து இலக்கியங்களாக மலர்ந்
திருக்க வேண்டும். இலக்கியம் செம்மையுற்ற பிறகு இலக்கணம்
உருவாக்கப் பட்டிருத்தல் வேண்டும்.

மதுரையின் வளத்தை விவரிக்கும் அழகிய நாட்டுப்புறப்பாடல்
பின்வருமாறு:
"கட்டுக் கலங்காணும்; கதிர்உழக்கு நெற்காணும்;
அரிதாள் அரிந்து வர மறுதாள் பயிராகும்;
அரிதாளின் கீழாக ஐங்கலத்தேன் கூடுகட்டும்;
மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெலென்று
ஆனைகட்டிப் போரடிக்கும் அழகான தென்மதுரை".
இந்த அழகிய நாட்டுப்புறப் பாடலில் ஏதோ சில வரிகள் விடு
பட்டுப் போனதாக நினைவு. என் சின்ன வயதில் இதைவிடப்
பெரியதாக இருந்த பாடல் காலப் போக்கில் நினைவாற்றல்
குறைவால் சுருங்கிக் போய்விட்டதாகத் தோன்றுகிறது.இந்த
வயல் வளம் அல்லி அரசாணி மாலை என்னும் இலக்கியத்தில்
எவ்வாறு விவரிக்கப் பட்டுள்ளது என்று பார்ப்போம்:
"வண்ணலும் இஞ்சியும் மஞ்சளும் மாமரமும்
கன்னலும் செந்நெலும் கதித்து விளைவாகிக்
கருத்த பயிர்தனிலே களையெடுக்கும் பள்ளிகளும்
அறுப்பு விடுவாரும்  அரிகூட்டி நிற்பாரும்
ஆனை அடிமறைய அடிராசி நெல்விடுவார்
ஆனவிரு மூன்றுபங்கில் அரண்மனைக்குப் பங்கொன்றுபோம்
கட்டுக் கலங்காணும் கதிர்உழக்கு நெற்காணும் ......
(அல்லி அரசாணி மாலை வரிகள்:525--531)
கொடைச் சிறப்பைச் சொல்லும் வரிகள் (535, 536):
"கொடுப்பாரே யல்லாமல் கொள்வார் ஒருவரில்லை;
எடுப்பார்கள் தானம் ஏற்பார் ஒருவரில்லை"

காதலன் காதலியிடம் தன் காதல் ஆழத்தை விவரிக்கும் பாடல்:
"செத்து மடிந்தாலும் செலவழிந்து போனாலும்
செத்த இடத்தனிலே செங்கழுநீர்ப் பூபூப்பேன்;
மாண்டு மடிந்தாலும் வைகுந்தம் சேர்ந்தாலும்
மாண்ட இடந்தனிலே மல்லிகைப் பூபூப்பேன்;
பஞ்சணை மெத்தையிலே படுக்கைமலர் ஆவேன்யான்;
கொண்டைக்குப் பூவாவேன்; கொசவத்திற் பையாவேன்;
நெற்றிக்குப் பொட்டாவேன்; நீலவிழி மையாவேன்;
முந்தானைத் தொங்கலிலே முள்ளாகி ஓட்டுவேன் யான்,;
காலுக்கு மெட்டியாவேன்; கைவளையல் தானாவேன்".

கல்யாணப் பந்தல் பற்றிக் காதலி விவரிக்கும் பாடல்:
"முத்தைப் பிளந்தார்கள்; மூன்றாங்கால் இட்டார்கள்;
பவளம் பிளந்தார்கள்; பந்தற்கால் நட்டார்கள்;
வெள்ளியால் கால்நிறுத்தி வெற்றிலையாற் பந்தலிட்டார்;
கரும்பாலே கால்நிறுத்தி அரும்பாலே பந்தலிட்டார்;
ஈர்க்குப் பிளந்தார்கள் இருகாதம் பந்தலிட்டார்;
மூங்கில் பிளந்தார்கள், முக்காதம் பந்தலிட்டார்;
நாணல் பிளந்தார்கள், நாற்காதம் பந்தலிட்டார்".
நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் அம்மையார் பாடும்
பாடலைப் பார்ப்போம்:
"வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம்வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்".

மத்தளம் கொட்ட வரிச்சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தல்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக்
கைத்தலம் பற்றிக் கனாக்கண்டேன் தோழீநான்".

இனி உணவைப் பற்றியொரு நாட்டுப்புறப் பாடலை
நோக்குவோம்:
"பாண்டத்தைக் கழுவிப் பனிநீர் உலைவார்த்து
முத்துப்போற் சோறு வடித்தாள் இளங்கொடியாள்;
அத்தி விறகொடித்துத் தித்திக்கும் பால்காய்ச்சிப்
புத்துருக்கு நல்லநெய்யும் பொன்போல் பருப்புகளும்
அதிரசமும் தேன்குழலும் அறுசுவைப் பண்டங்களும்
பத்துவிதக் கறியும் பதினெட்டுப் பச்சடியும்
எட்டு விதக் கறியும் இயல்பான பலகுழம்பும்
முப்பழமும் சர்க்கரையும் அப்பளமும் தான்படைத்து
ஆயாசந் தீரவே பாயாசந் தான் கொடுத்தாள்".

விருந்தைப் பற்றிப் புலவர் ஒருவர் படைத்த இலக்கியம்:
"பொன்னம் பருப்பனமேல் போடுபருப் பைக்கணடு
இன்னும் பருப்போமென் றெண்ணிநிற்க--உன்னதமாய்
வைத்த ரசம்உண்டோர் வானத் தமுதரசம்
கைத்தரசம் என்றே கருதுவர்--சத்தியமாய்
பாயாசம் கொஞ்சம் பருகினா லும்போதும்
ஆயாசம் எல்லாம் அகன்றோடும்---காயாம்,மா
ஊறுகாய் ஒன்றே உலகை விலைகொள்ளும்,
வேறுகாய் வர்க்கங்கள் வேண்டாவே....

நாட்டுப்புறப்பாடல் நாடோடிகள் பாடல்,  வாய்மொழி இலக்கியம்,
ஏட்டில் எழுதாக் கவிதைகள் காற்றில் வந்த கவிதைகள், மக்கள்
பாடல்கள், மரபுவழிப்பாடல்கள், பாமரர் பாடல்கள், பரம்பரைப்
பாடல்கள், நாட்டார் பாடல்கள் எனப் பல்வகைப் பெயர்களால்
அழைக்கப்படுகின்றன. கவிச்சக்கரவர்த்தி கம்பர் ஒருமுறை
வயல் வழியே நடந்து சென்றபோது மூன்று மனிதர்கள் ஏற்றம்
இறைத்துக் கொண்டு ஏற்றப் பாடலை இனிமையாகப் பாடிக்
கொண்டிருந்தனர். முதல் மனிதர் "மூங்கில் இலை மேலே"
என்று தொடங்கினார். இவர் மாட்டை ஓட்டுபவர். இரண்டாமவர்
ஏற்றத்தில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கிணற்றிலிருந்து நீரை
இறைப்பவர். இவர் "தூங்கும் பனிநீரே" என்று பாடினார். அதற்குள்
அவர்கள் தாயார் "பொழுது சாய்ந்து விட்டது; நீர் பாய்ச்சியது
போதும் "என்று கூறவும் மாட்டை அவிழ்த்து வீட்டை நோக்கி
விர்ட்டிவிட்டுத் தாங்களும் இல்லத்துக்கு ஏகினர். கம்பர் அடுத்த
அடி என்ன என்று அறிய ஆவலாயிருந்தார். மறுநாள் அதிகாலை
யிலேயே வந்து காத்திருந்தார்.ஏற்றம் இறைக்கத் தொடங்கினர்.
முதலிரண்டு அடிகள் பாடிய பிற்பாடு மூன்றாவது அடியைப்
பாடுபவர் "தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோனே" என்று முடித்
தார். கம்பர் பெருமானையே கவர்ந்திழுத்த நாட்டுப்புறப் பாடல்
நம்மை ஈர்க்காமல் விட்டுவிடுமா?







..